Loading

காதலொன்று கண்டேன்!

 

தேடல் 01

 

“மாப்ள வீட்டுக்காரங்க வந்துட்டாங்க..சீக்கிரமா ரெடியாகி வாம்மா..” மகளுக்கு கட்டளையிட்டவாறு,வெளியே வந்த பார்வதிக்கு மனமெல்லாம் அப்படி ஒரு நெகிழ்வு.முகத்தில் மகிழ்வின் பூக்காடு விகசித்து விரிந்து நின்றிருந்தது.

 

அப்படி ஒரு மகிழ்ச்சி அவரில்!மகள் மீது அளவற்ற பாசமும் கூட,அவருக்கு.

 

தன் அலங்காரங்களை முடித்துக் கொண்டு திரும்பி ஒரு முறை கண்ணாடியில் சரிபார்த்துக் கொண்ட,சங்கவியின் முகத்தில் திருப்திகரமான புன்னகை.

 

இயல்பாகவே அழகானவள்,இன்னும் அழகாகித் தெரிய,முகம் மினுமினுத்தது.

 

“கல்யாணப் பொண்ணுக்கு வெக்கத்தப் பாரேன்..பொண்ணு பாக்க வர்ரதுக்கே இவ்ளோ வெக்கம்..” உறவுப் பெண்கள் கேலி பேசிட,அவளுக்கு வெட்கத்தில் கன்னங்கள் சிவந்து போயிற்று.

 

“பொண்ணு மாப்ளயோட ஃபோட்டோ பாத்தே ஃப்ளாட் போல..அதான் இப்டி வெக்கப்பட்றா..” அவளின் வெட்கத்தை வைத்து இன்னும் சீண்டிட ஐயோவென்றானது,சங்கவிக்கு.

 

“சும்மா இருங்கடி..” அதட்டி விட்டாலும் குரல் என்னவோ,தழைந்து குழைந்து தான் வெளியே வந்தது.

 

“சரஸ்..சங்கவிய கூட்டிட்டு வா..” பார்வதி அழைத்திட,புன்னகையுடன் அவளை அழைத்து வந்திட,மாப்பிள்ளை வீட்டினருக்கும் அவளை பார்த்தவுடன் பிடித்துப் போயிற்று.

 

அனைவரின் முகத்திலும் நிறைவு தெரிய,அடுத்தடுத்த பேச்சு வார்த்தைகள் துரிதமாய் இடம் பெற,சுற்றி இருந்த அனைவரின் முகத்திலும் பூரிப்பு.

 

தட்டு மாற்றிக் கொள்ளும் வரை பேச்சு வார்த்தை நீண்டிருக்க,திடீரென இடையிட்டார்,மாப்பிள்ளை வீட்டினரின் உறவுக்கார பெண்மணி ஒருவர்.

 

“ஆமா..பொண்ணு சரி..ஆனா பொண்ணோட அக்கா ஒன்னு கல்யாணம் ஆகாம இருக்குன்னு சொன்னாங்க..அதுக்கு என்ன பண்றது..? அக்காவுக்கு கல்யாணம் ஆகாம தங்கச்சிய கல்யாணம் பண்ணா ஊர் உலகம் என்ன பேசும்..?” அவர் போட்டுடைத்திட,அவ்விடத்தில் அசாத்திய அமைதி.

 

சங்கவியின் முகம் விழுந்தே விட,பார்வதியும் சரி அவரின் கணவர் மருதநாயகமும் சரி பதில் சொல்ல முடியாமல் ஒரு கணம் திணறித் தான் போனார்கள்.

 

“ஆமால்ல..அப்டி அக்காவ வச்சிட்டு தங்கச்சிக்கு கல்யாணம் பண்ண முடியாதுல..” இன்னொரு பெண்மணியும் ஒத்து ஊதிட,அவ்விடத்தில் கன மேகங்கள் சூழ்ந்தன.

 

“இப்போ கல்யாணத்த நிச்சயம் பண்ணிக்கலாம்..அதுக்கு அப்றம் மத்தத யோசிக்கலாம்..” மாப்பிள்ளையின் தந்தை கறாராய் பேசிட,அதை மறுத்துப் பேச எவருமில்லை,அவ்விடத்தில்.

 

●●●●●●●

 

வேலையை முடித்துக் கொண்டு களைப்புடன் உள்ளே நுழைந்தாள்,தென்றல்.தேகத்தின் களைப்பு முகத்தில் தெள்ளத் தெளிவாய்த் தெரிந்தது.

 

வீட்டில் நிலவிய இயல்பின்றிய அமைதி,அவளுக்குள் பல குழப்பங்களை விதைத்தாலும்,அதை விழிகளில் வெளிப்படுத்தி நிற்கவில்லை,அவள்.

 

உள்ளே நுழைந்தவளோ,கூடத்தில் அமர்ந்திருந்த பெற்றோரை கண்டு கொள்ளாது அறைக்குள் நுழைந்து கொள்ள,பெரியவர்களுக்கு அப்படியொரு கோபம்.

 

தொலைக்காட்சியின் முன்னே அமர்ந்து இருந்த சங்கவியின் மனம் தான் பதபதைத்தவாறு தவித்திருந்தது.களேபரம் ஏதும் நிகழ்ந்து விடக் கூடாது என்று மௌனமாய் வேண்டவும் செய்திருந்தாள்,கடவுளிடம்.

 

குளித்து உடைமாற்றி விட்டு உணவு மேசைக்கு வந்தாள்,தென்றல்.முகத்தில் அப்படியொரு நிர்மலம்.

 

அவள் உணவுக்கவளங்களை விழுங்கி முடித்திடும் வரை அமைதியாகத் தான் இருந்தனர்,பெற்றவர்கள்.

 

அதற்குள் ஏதாவது பேசி விட்டால் உணவை மறுத்து விட்டு எழுந்து சென்று விடுவது அவளின் வாடிக்கையான பழக்கமாய் இருந்ததே.

 

உணவை முடித்துக் கொண்டு தட்டை அலம்பி முடியும் முன்னமே,தந்தையின் குரல் அவள் செவியில் அலைமோதிற்று.”தென்றல் ஹாலுக்கு வா..” அதட்டலாய் வந்த வார்த்தைகளை மறுக்கும் தைரியம் மட்டும் அவளுக்கு இதுவரை இருந்தது இல்லை;இனியும் இருக்கப் போவதுமில்லை.

 

“என்னப்பா..?” புரிந்தும் புரியாதது போன்ற முகபாவத்துடன் வந்து முன்னே அமர்ந்தவளை திட்டக் கூட முடியவில்லை,பெற்றவர்களால்.அவள் மீது தவறொன்றை காணாதிருக்க எங்கனம் அவர்களை அதைச் செய்திட இயலும்..?

 

“இன்னிக்கி சங்கவிய பொண்ணு பாக்க வந்தாங்களே..அது உனக்கு தெரியும் தான..? தெரியாம இல்லயே..?”

 

“தெரியும்பா..அம்மா சொல்லி தான் இருந்தாங்க..”

 

“ம்ம்..வந்தவங்க என்ன கேட்டாங்கன்னு தெரியுமா..? அக்காவ கல்யாணம் பண்ணி கொடுக்காம எப்டி தங்கச்சிக்கு கல்யாணம் பண்றதுன்னு..?” என்கவும் அவள் முகம் சட்டென இறுகிப் போயிற்று.

 

அவளின் முகமாறுதல் பெற்றவர்களின் விழிகளில் இருந்து துளியும் தப்பாதிருக்க,வலித்தாலும் அவள் மீது கோபமும்.

 

“உன்னத் தான் கேக்கறேன் மா..அவங்க இப்டி தான் கேட்டாங்க..நா என்ன பதில் சொல்றதுன்னு நீயே சொல்லு..வர்ரவன் போறவன் எல்லாம் என் கிட்ட இந்த கேள்விய தான் கேக்கறாங்க..”

 

அனல் சுமந்த அவரின் வார்த்தைகளுக்கு பதில் கூறத் தெரியாது அவள் தலை கவிழ்ந்திருக்க,விழிகளில் நீர் கட்டிக் கொள்ள,இமை சிமிட்டி அடக்கிக் கொண்டாள்.

 

“ஏன்மா இப்டி இருக்க..? இன்னும் எவ்ளோ நாள் தான் உன்னோட சம்மதத்துக்காக நாங்களுக்கும் காத்துகிட்டு இருக்குறது..உனக்கு அப்றம் இன்னும் ரெண்டு பொண்ணுங்க இருக்காங்கங்குறது உனக்கு புரிலியா..? இல்ல புரிஞ்சும் புரியாத மாதிரி நடிக்கிறியா..?”

 

அவரின் கேள்விகள் எதற்கும் அவளிடம் பதில் இல்லை.பதில் இருந்தாலும் அதை உரைத்திடும் நிலையிலும் அவள் இல்லை.

 

“இவ நம்ம பேச்ச கேட்டுக்க மாட்டாங்க..அழுத்தம்னா அவ்ளோ அழுத்தம்..இந்தளவு அழுத்தம் ஆகாதுடி மா..” நொந்து கொண்டு கடிந்தவாறு தாயார் நகர்ந்திட,அவளுக்கு இன்னும் பாரமேறிற்று.

 

அவளுக்கு புரியாமல் இல்லை.ஆனால்,அவனைத் தவிர வேறு யாரையும் மனம் ஏற்றுக் கொள்ள மறுப்பதை என்னவென்று சொல்லிட..?

அவன் மீதிருக்கும் உணர்வுகளை தூக்கி எறிந்திட அவளுக்குத் தெரிந்து இருந்தால் இந்நேரம் இத்தனை வலி அவளுக்கு இருந்திருக்க மாட்டாதே.

 

தந்தையானவருக்கு அவளின் தாழ்ந்த முகம் வருத்தத்தை தந்திட,அவரும் எழுந்து உள்ளே சென்று விட,கூடத்தின் தனித்து விடப்பட்டவளின் தோளின் மீது பதிந்தது,கரமொன்று.

 

விழி நிமிர்த்திப் பார்த்திட,ஆதுரமான புன்னகையுடன் நின்று இருந்தாள்,சங்கவி.அவளின் வலியை உணர்ந்து கொண்ட பாவம்,அவள் விழிகளில்.

 

“உனக்கு மாப்ளய புடிச்சி இருக்கா சங்கவி..?” என்க,ஆமோதிப்பாய் தலையசைத்தவளின் விழிகளின் மொழியே போதும்,அவளுக்குள் உருப்பெற்றிருக்கும் பிடித்தத்தை எடுத்துக் காட்டிட.

 

தங்கையின் பரிவிலும் ஆதுரத்திலும் பேதையவளுக்கு குற்றவுணர்வு ஏகத்துக்கும் ஏறி நிற்க,எதிர் கொள்ள முடியவில்லை,யாரையும்.

 

அறைக்குள் அடைந்து அழுது தீர்த்தாலும்,மனதின் பாரம் கொஞ்சமும் தீர்ந்தபாடில்லை.நில்லாமல் அழுகை வந்திட,விம்மி விம்மி அழுதாள்.

 

முழங்காலைக் கட்டிக் கொண்டு முகம் புதைத்து அழுதவளின் விழிகளோ,சிவந்து போயிருந்தன.விழிகளில் அசதி அப்பட்டமாய் தெரிந்தது.

 

கன்னத்தில் வாழ்ந்த கண்ணீர்த் துளிகள் மௌனமாய் சாட்சியம் கூறும்,அவன் மீதான அளவு கடந்த காதலுக்கு.

 

●●●●●●●●

 

“இந்த டானிக்க மறந்துராம டெய்லி மூணு வாட்டி கொடுங்க..பயப்பட்றதுக்கு எதுவும் இல்ல..” குழந்தையின் தலையை தடவி மென்மையாய் அதன் தாயாரிடம் கூற,அவரும் புன்னகையுடன் நன்றி உரைத்து விட்டு வெளியே வந்தார்.

 

“நெக்ஸ்ட்..” என்று அவன் அருகே இருந்த பெல்லை அழுத்திட,அடுத்த நோயாளியும் உள்ளே வந்திட,அவரை விசாரித்தவனின் குரலில் அத்தனை கரிசனம்.

 

“இந்த டாக்டர் எதுக்கு இவ்ளோ சாஃப்டா நல்லவரா இருக்காரோ தெரிலியே..” சின்னப் புன்னகையுடன் கூறிக் கொண்டே,அவன் கேட்ட ஸ்ரிஞ்சை எடுத்துக் கொடுத்தார்,லக்ஷ்மி.

 

அவனுக்கு கீழே பணிபுரியும் தாதி அவர்.

 

சில மணி நேரங்கள் கழிந்திட,மதிய உணவுக்கான இடைவேளை நேரம் அது.

 

கழுத்தில் மாட்டியிருந்த ஸ்டெத்தை கழற்றி,கரங்களை பின்னே நீட்டி சோம்பல் முறித்து,இருக்கையில் சாய்ந்து விழிகளை மூடிக் கொண்டவனின் தேகம் ஓய்வை நாடினாலும்,அதை எடுத்துக் கொள்ள இயலாதே.

 

“என்னடா ரொம்ப வேல போல..” கையில் வெள்ளைக் கோட்டுடன் உள்ளே வந்தான்,பிரதீப்.

 

“ம்ம் கொஞ்சம் வேல தான்..” இதழ் குவித்து ஊதிக் கொண்டே உரைத்தான்,அவன்.

 

“இன்னிக்கி உனக்கு நாலு மணிக்கி அப்றம் ஆஃப் தான..?”

 

“ம்ம்ம்ம்..ஆமா என்ன விஷயம்..? எங்கயாச்சும் வெளிய போக ப்ளேன் பண்ணி இருக்கியா என்ன..?”

 

“ம்ஹும்..உன் கிட்ட கொஞ்சம் பேசனும்..எனக்கும் நாலு மணிக்கு அப்றம் ஆஃப் தான்..நா பார்க்கிங்கல இருக்கேன்..வந்துரு..” புதிராய் பேசி விட்டுப் போன தோழனை,புரியாத பார்த்தவனுக்கு அடுத்து யோசிக்க நேரம் இருக்கவில்லை.

 

சாப்பிட்டு விட்டு வந்த பின்னர்,அடுத்தடுத்த வேலைகள் இழுத்துக் கொள்ள,நான்கு மணி கடந்ததே தெரியவில்லை.

 

நேரத்தை பார்த்து வேலையை முடித்து விட்டு,கழுத்தில் ஸ்டெத் சகிதம் வெளியே வந்தவனின் இதழ்களோ, காண்போரிடம் மென் புன்னகையை சிந்தின.

 

“வாடா வாடா சீக்கிரம்..” அவனை அவசரப் படுத்தினான்,பிரதீப்.”என்னடா என்ன அவசரம்னு இவ்ளோ குதிக்கற..?” சாவகாசமாய் கேட்டவாறு வண்டியில் ஏறி அமர்ந்திட,பிரதீப்பின் கைகளோ ஸ்டியரிங்கில் தவழ்ந்தது.

 

அடுத்த பத்து நிமிடங்களில் வண்டி,சிறு உணவகத்தின் முன்னே நிற்க,எதுவும் புரியாமல் இறங்கிக் கொண்டான்,அவன்.

 

“என்னடா ஏதோ பேசனும்னு சொல்லிட்டு இப்டி யோசிச்சிகிட்டு இருக்க..? என்னன்னு சொல்லு..” கையில் இருந்த காஃபியை சுவைத்தவாறு வினவிட,முதலில் தன்னை நிலைப்படுத்திக் கொண்டான்,பிரதீப்.

 

“நா ஒரு விஷயம் சொல்றேன் டென்ஷன் ஆகாம கேளு..”

 

“ம்ம்ம்ம்ம்..”

 

“உங்க அத்த பொண்ணு சங்கவிய நேத்து பொண்ணு பாக்க வந்தாங்களே அது யாருன்னு தெரியுமா..?”

 

“ம்ம்..உன்னோட பெரிப்பா பையன் தான..அத எதுக்கு இப்போ கேக்கற..?”

 

“அவங்க லவ் மேரேஜ்..அவன் வீட்லயும் சங்கவி வீட்லயும் விஷயத்த சொன்னா ஒத்துக்க மாட்டாங்கன்னு எப்டியோ தரகர புடிச்சி அரேஞ்ச் மேரேஜ் மாதிரி விஷயத்த கொண்டு வந்து இருக்கானுங்க..” என்றிட,பெரிதாய் அதிர்வெதுவும் இல்லை,அவனிடம் இருந்து.

 

ஏற்கனவே அவன் செவிகளில் அரசல் புரசலாய் நுழைந்திருந்த விடயம் இப்போது ஊர்ஜிதமாகியிருக்க,அந்த உணர்வு தான் அவனுக்குள்.

 

“ம்ம்..ஏற்கனவே கேள்விப் பட்டுச்சு..நா எதுவும் பெரிசா மைன்ட் பண்ணிக்கல..” அலட்டலின்றி உரைத்தான்,அவன்.

 

“இப்போ என்ன ப்ரச்சனன்னா உன்னோட அத்த பொண்ணு..அதான் சங்கவியோட அக்கா..அது கல்யாணம் பண்ணிக்காம இருக்குல..அதனால சஞ்சீவ்வோட தாத்தா பாட்டி யாரும் கல்யாணத்துக்கு பெருசா விருப்பம் காட்ட மாட்டேங்குறாங்க..”

 

“……………………”

 

“ஒன்னு அந்த பொண்ண கன்வின்ஸ் பண்ணி கல்யாணத்திக்கு ஒத்துக்க வக்கனும்..இல்லன்னா இவனுங்கள கன்வின்ஸ் பண்ணனும்..எதுவுமே பண்ண முடியாத சிட்டுவேஷன்ல அவன் இருக்கான்..சங்கவி கிட்ட கேட்டாலும் அவளோட அக்காவுக்கு என்ன ப்ரச்சனன்னு சொல்ல மாட்டேங்குறாளாம்..அதான் உன் கிட்ட கேட்டு கிட்டு வர சொன்னான்..”

 

“ம்ம்..நா தென்றல் கூட அவ்ளவா பேசறது இல்ல..எனக்கு எதுவும் தெரியாது..நீ வேணுன்னா தென்றல் கிட்டவே சஞ்சீவ பேசி பாக்க சொல்லேன்..”

 

“இல்ல மச்சான்..”

 

“நெஜமாலுமே சரியா என்ன விஷயம்னு எனக்கு தெரியாதுடா..நா அடுத்தவங்க விஷயத்துல பெருசா இன்ட்ரஸ்ட் காட்ட மாட்டேன்னு உனக்கு தெரியும் தான..”என்க,அதை மறுத்திட இயலவில்லை,தோழனால்.

 

உண்மை தானே,அவன் கூறுவதும்.அடுத்தவரின் விடயத்தில் தலை போடும் ரகம் இல்லையே,அவன்.ஒதுங்கித் தானே நிற்பான்,தன்னுடன் சம்பந்தம் இல்லாவிடின்.

 

பிரதீப் மேற் கொண்டு எதுவும் கேட்கவில்லை,அவனிடம்.தலையசைப்புடன் விடைபெற,யோசனையில் ஆழ்ந்து போனான்,அவன்.

 

அவளுக்கு ஒருமுறை திருமணம் பேசி தடைப்பட்ட விடயம் அவனுக்குத் தெரியும்.அதன் பின்னர் எந்த வரனுக்கும் அவள் சம்மதம் தெரிவித்திடவில்லை,என்பதும் அவன் அறிந்ததே.

 

அவளுக்கு காதல் இருக்கலாம் என்கின்ற ஊகமும் அவனுக்குள் உண்டாயினும்,அதை தோழனிடம் தெரியப்படுத்திட விரும்பவில்லை,அவன்.

 

அவளுக்கு காதல் ஒன்று இல்லாவிடின் அது அபத்தமாகிப் போய் விடும்.அப்படியே இருந்தாலும்,அது வெளியில் பரவினாலும் அவளின் வாழ்க்கைக்கு சிக்கலைத் தந்திடும் என்கின்ற நினைப்பும் அவனுக்குள் இருக்கத் தான் செய்தது.

 

அவளைப் பற்றிய எண்ணங்கள் மனதில் சுழன்றடிக்க,நடையிட்டவனின் அலைபேசி ஒலித்திட,திரையில் தெரிந்த எண்ணைக் கண்டதும் அவனுக்குள் ஏதேதோ எண்ணங்கள்.

 

காதல் தேடும்.

 

2025.03.31

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. அருமையான தொடக்கம் … பார்க்கலாம் அடுத்து என்ன நடக்கும்னு …