Loading

பிறை -36

 

காலை விரைவாக எழுந்து பணிக்கு சென்றிருந்தான் ஆதிதேவ். அவனது அறையில் சுகமான நித்திரையில் இருந்தாள் பிறை.

 

” மாப்பிள்ளை எந்திருச்சு வேலைக்கு போயிட்டாரு.. ஆனால் பாருங்க இன்னும் உங்க மக அங்க நல்லா தூங்கிட்டு இருக்கா.. புகுந்த வீட்ல இப்படி தூங்குனா நல்லாவா இருக்கு ” சிவகாமி மகளை பொரிந்து தள்ள.. சிவானந்தம் அமைதியாக அமர்ந்திருந்தார்.

 

” பேசிகிட்டே இருக்கேன் கல்லு மாதிரி உட்கார்ந்திருந்தா எப்படி.. உங்க மக வரவும் ஒழுங்கா அவ கிட்ட பேசுங்க.. இன்னும் நம்ம வீட்ல இருக்குற மாதிரி இங்கேயும் வந்து படுத்து தூங்கலாம்னு நினைச்சாளா”

 

” அட இரு சிவகாமி.. பிறை வந்ததும் பேசிக்கலாம் ” என இருவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே பார்கவி கிளம்பி கீழே வந்திருந்தாள்.

 

” என்ன மா நீயும் அதுக்குள்ள கிளம்பிட்ட” சிவகாமி கேட்டதும்..

 

” ப்ராஜெக்ட் ஒர்க் போயிட்டு இருக்கு ஆண்டி.. அண்ணி இன்னும் வரலையா ” என அவளது வருகையை உறுதிப் படுத்திக் கொள்ள கேட்டாள்.

 

” நல்லா கேட்ட போ.. சின்ன பொண்ணு நீயே அவளுக்கு முன்னாடி எந்திருச்சு கிளம்பி வந்துட்ட.. ஆனால் அவ இன்னும் தூங்கிட்டு இருக்கா போல.. நீ மாப்பிள்ளை ரூமுக்கு போயிட்டு அவளை கூட்டிட்டு வரியா கண்ணு. நான் கூப்பிட்டேன்னு சொல்லு” சிவகாமி மகளை வறுத்தெடுப்பதற்கு தயாராக..

 

” அட என்ன ஆண்டி நீங்க.. தூங்கிட்டு போகட்டுமே. அதுனால என்ன இருக்கு. எனக்கு காலேஜ் இல்லைன்னா நான் நேரா மதிய சாப்பாட்டுக்கு தான் எந்திருப்பேன் ” அதையும் பெருமையாக பேசும் பார்கவியை அதிசயத்து பார்த்தனர் இருவரும்.

 

வேகமாக காலை உணவை உண்டு விட்டு அவள் கிளம்ப.. இவர்களும் காலை உணவை முடித்து விட்டு கூடத்தில் அமர்ந்திருந்தார்கள்.

 

” நேத்து நைட்டு வந்தவன் யாருன்னு கண்டு பிடிச்சாச்சா சம்மந்தி ” சிவானந்தம் கேட்டதில் பேப்பரை விலக்கி அவரை பார்த்தவர்.. ” அதுக்காக தானே காலையிலேயே கிளம்பி போயிருக்கான்.. வந்துடுவான்.. வந்து சொல்லுவான் ” திவாகர் மீண்டும் பேப்பரில் மூழ்க..

 

” அப்படி இந்த பேப்பர்ல என்னதான் இருக்கோ.. கொடுத்த காசுக்கு வஞ்சகம் பண்ணாம விளம்பரத்தை கூட விடாம படிக்கிறீங்க ” மீனாட்சி கதறியது எல்லாம் அவரது காதில் விழவில்லை.

 

” பாருங்க அண்ணி.. உங்க அண்ணனை.. இப்படிதான் வீட்ல நேரம் போகுது. என் கிட்ட பேச கூட ஆள் இல்ல இந்த வீட்ல.. இனிமே என் மருமகள் வந்திடுவா அதுனால எனக்கு எந்த கவலையும் இல்ல ” முகம் பிரகாசமானது மீனாட்சிக்கு.

 

” அதுக்கு முதல்ல உங்க மருமகள் எந்திருக்கனும் ” சலித்து கொண்டார் சிவகாமி.

 

” அட சின்ன பிள்ளைங்க தூங்கட்டும்.. நாளைக்கு நமக்கு ஏதாவதுன்னு வந்தா அவங்க தானே நமக்கு பார்க்க போறாங்க.. இருக்குற வரைக்கும் உழைப்போம் ” என வேலையை முடித்து விட்டு வந்தமர்ந்தார் மீனாட்சி.

 

” அது இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு தெரிஞ்சா நாங்க ஊருக்கு கிளம்பலாம்னு இருக்கோம் சம்மந்தி. அப்படியே போட்டது போட்ட படியே கிடக்கு. என் அம்மா வேற எங்க வீட்ல இல்ல.. என் தங்கச்சி வீட்ல இருக்காங்க.. அதனால நாங்க சீக்கிரமா போகனும்.. ” கவலை பட்டார் சிவானந்தம்.

 

” அட என்ன அவசரம் இருந்துட்டு போக வேண்டியது தானே ..  ” திவாகர் கேட்டதும்..

 

” இல்லைங்க.. எங்களை நம்பி வாயில்லா ஜீவனெல்லாம் இருக்கு.. அதுங்களுக்கு வயித்துக்கு போடனும். ரொம்ப நாள் வரலைன்னா ஏங்கி போயிடுங்க.. ” என இரக்கம் குணம் கொண்டவராக சிவானந்தம் பேசியதில் மனம் நெகிழ்ந்து போனவர்கள்..

 

” இன்னைக்கு ஆதி வரட்டும்.. வந்ததும் பேசி ஒரு முடிவு பண்ணலாம் சம்மந்தி ” திவாகர் கூறியதும்.. சரியென்பதாக தலை அசைத்தார் சிவானந்தம்.

 

” நீங்க நம்ம ஊர்ல என்ன என்ன எல்லாம் வளர்க்குறீங்க அண்ணி ” மீனாட்சி ஆர்வமாக கேட்டார்.

 

” பசுமாடு , கோழி, ஆடு, சேவல், எருமைமாடு.. இப்படி எல்லாம் இருக்குதுங்க அண்ணி.. ”

 

” இதெல்லாம் பார்க்க ஆள் போட்டீங்களா.. ஏன்னா இதுக்கெல்லாம் வேலை அதிகமா இருக்குமே.. வீட்டையும் பார்த்துட்டு இதையும் பார்க்குறது கஷ்டமே அண்ணி ” என்றதும் சிவகாமியின் பார்வை மெதுவாக தனது கணவனை நோக்க.. அவரோ தலையை நிமிர்த்தவே இல்லை.

 

பட்டணத்தில் இருக்கும் அவர்களுக்கு தெரிந்த விஷயங்கள் கூட, தனக்கு தெரியவில்லையே என வெட்கிப் போனவர்.. இத்தனை வருடமும் தனது மனைவி எப்படி எல்லாம் கஷ்டத்தை அனுபவித்து இருப்பாள் என நினைத்து பார்த்தவருக்கு மனம் கனத்து போனது.

 

” அதெல்லாம் ஆள் இருக்காங்க அண்ணி.. நான் மேற்பார்வை மட்டும் தான்.. வீட்ல சமைக்கிற வேலை மட்டும் தானே.. இவங்க காலையிலேயே வயலுக்கு போயிடுவாங்க. நானும் எங்க மாமியாரும் தான்.. அவங்க என் சமையலுக்கு உதவுவாங்க.. காலையலையே எல்லா வேலையும் முடிஞ்சிரும் அண்ணி.. ” என வீட்டையும், மாமியாரையும் விட்டுக் கொடுக்க முடியாமல் பேசிய மனைவியை பார்த்தவருக்கு மேலும் குற்ற உணர்வாகிப் போனது.

 

மெதுவாக தூக்கம் கலைந்து எழுந்தாள் பிறை. நல்ல வெளிச்சமாக இருக்க.. கண்ணை கசக்கி கொண்டு மணியை பார்த்தவளுக்கு தூக்கி வாரிப் போட்டது.

 

” ஐயோ மணி பதினொன்னா … அம்மாட்ட செத்தேன் ” என அடித்து பிடித்து எழுந்தவள்.. வேகமாக பல்லை தேய்த்து, காலை கடன்களை முடித்து கொண்டு வெளியே பார்த்தவளுக்கு மாற்றுடை இல்லாமல் போக.. அவனுடைய ஆடையை கலைந்தவள், முதல் நாள் அணிந்த புடவையை மாற்றிக் கொண்டே கீழே வந்தாள்.

 

” குட் மார்னிங் மா பிறை ” திவாகர் சத்தத்தில் அனைவரும் மாடியை பார்க்க.. சங்கடமாக இறங்கி வந்தவள்.. ” குட் மார்னிங் மாமா ” என்றாள்.

 

” வா வா பல்லு தேய்ச்சியா.. சாப்பாடு ரெடியா இருக்கு.. காலையில இப்படி லேட்டா சாப்பிட்டா என்ன ஆகுறது உடம்பு… வா ” என கையோடு மருமகளை அழைத்து கொண்டு சாப்பிட வைத்தே அழைத்து வந்தார் மீனாட்சி.

 

” இதான் எந்திரிச்சு வர நேரமா டி ” சிவகாமி ஆரம்பிக்க..

 

” அது மா.. நைட்டு தூக்கம் இல்லையா.. ” என பிறை சிறுபிள்ளை போல ஆரம்பிக்க….

 

” சரி சரி நாளையில இருந்து விடிகாலையில எந்திருச்சு பழகு” என கூறியவருக்கு மகளின் பதிலில் சிறிது வெட்கம் கூட வந்தது.

 

‘ அப்பா, மாமனார், மாமியார் எல்லாரும் இருக்காங்க.. எப்படி கோட்டி மாதிரி பேசுறா பாரு.. நைட்டு தூங்கலையாம்.. ‘ என மனதிற்குள் மகளை வறுத்து எடுத்தார்.

 

எங்கே அவருக்கு புரிய போகிறது. அக்காலத்தில் குறித்த தேதியில் அனைத்தும் நடந்ததை போல இப்போது எல்லாம் அரங்கேறுவது இல்லையே..

 

வீட்டை முழுக்க கண்களால் அலசியவள்.. கணவன் வீட்டில் இல்லை என்பதை கண்டு கொண்டாள்.

 

அப்போது மீனாட்சியின் போன் அடிக்க.. ” சொல்லு பா ஆதி ”

 

” ம்ம் சரி பா ” என ஏதோ பேசிவிட்டு போனை வைத்திருந்தார் மீனாட்சி.

 

” பிறை மா.. கிளம்பி இருப்பியாம்.. ஆதி வந்து உன்ன வெளிய கூட்டிட்டு போறானாம் ” என்றதும் தலையை ஆட்டியவள்.. கீழே இருந்த அறைக்கு சென்று குளித்து அழகான மைசூர் சில்க் புடவையை அணிந்து கொண்டாள்.

 

சாண்டல் நிறத்தில் சிவப்பு வண்ண பார்டர் வைத்த மைசூர் சில்க் புடவையை அணிந்தவள், கழுத்தில் அவன் கட்டிய மஞ்சள் கயிறும்.. அதோடு கழுத்தை ஒட்டிய சின்ன சங்கிலியும்.. காதில் நடுத்தரமான ஜிமிக்கியும்.. கைகளில் கண்ணாடி வளையல் குலுங்க.. தளர பின்னிய கூந்தலுடன், பாண்ட்ஸ் பவுடர் போட்டு.. நெற்றியின் நடுவே வட்ட வடிவ பொட்டும் வைத்தவள்.. பின் ஆசையாக கை விரல் நுனியில் குங்குமத்தை எடுத்து  நெற்றியில் வைத்துக் கொண்டு கண்ணாடியை பார்த்தவளுக்கு அத்தனை நிறைவாக இருந்தது.

 

கூறியது போலவே அரை மணி நேரத்தில் வீட்டை அடைந்திருந்தான் ஆதிதேவ்.

 

” கீழே ரூம்ல தான் இருக்கா பா ” என மீனாட்சி கூறி விட்டு, சற்றே பயந்து போனார்.

 

” ஆதி.. ” என மகனை அழைத்துப் பார்க்க.. என்னவென்று திரும்பி பார்த்தவன், தாயின் எண்ணவோட்டத்தை அறிந்து கொண்டு.. ” இனிமே என் அனுமதி இல்லாம யாரும் வீட்டுக்குள்ள வர முடியாது மா.. நீங்க பயப்பட வேணாம்..” என தாய்க்கு தைரியத்தை கொடுத்து விட்டு அறைக்குள் சென்றிருந்தான்.

 

வெளியே போறதோடு.. அவளுக்கு வேண்டிய சில பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்ற எண்ணத்தில்.. தந்தை கொடுத்த பணத்தை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

 

அறையில் ஏதோ சத்தம் கேட்டு திரும்பியவள்.. வாசலில் நின்ற கணவனை பார்த்து வேகமாக எடுத்து வைத்து கிளம்பினான்.

 

” ரெடியா மூன் ” கேட்டுக்கொண்டே அவளை நெருங்கினான்.

 

” ஹான் ரெடி தான் போகலாம் ” என்றாள் மெல்லிய குரலில்.

 

பின் இருவருமாக வீட்டில் சொல்லிக் கொண்டு கிளம்பி இருந்தார்கள்.

 

பைக்கை எடுத்து வந்து வாசலில் நிறுத்த.. பைக்கையும் அவனையும் மாறி மாறி பார்த்தவள்.. சற்றே தயக்கத்துடன் பின்னால் ஏறிக் கொள்ள.. வண்டி ஜெட் வேகத்தில் பறந்தது.

 

முதலில் தடுமாறியவள்.. பின் கம்பியை இறுக்கப் பற்றிக் கொண்டு அமர்ந்து பார்த்தவள்.. அவனது வேகத்தை உணர்த்து, இதற்கு மேல் தாங்காது என வயிற்றோடு கட்டிக் கொண்டாள்.

 

அவள் கட்டிக் கொண்ட அடுத்த நொடி, அவனது அழுத்தமான இதழ்கள் சற்றே விரிந்து கொடுத்தது.

 

கால் மணி நேரத்தில் அவளை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு வந்திருந்தான். கோவிலைப் பார்த்ததும் சற்றே மனம் நிம்மதியடைய.. வெளியே இருந்த கடையில் அர்ச்சனை செய்ய பொருட்களை வாங்கிக் கொண்டு உள்ளே சென்றனர்.

 

சாமியை தரிசித்து விட்டு அங்கிருந்த தூண் ஓரத்தில் இருவரும் அமர்ந்து கொள்ள.. போவோர் வருவோர் எல்லாம் அவர்களது ஜோடியை ஒரு முறை திரும்பிப் பார்க்காமல் செல்லவில்லை.

 

” வீட்ல எல்லா விஷயமும் பேச முடியாது மூன்.. அதான் வெளிய கூட்டிட்டு வந்தேன் ” என்றவனை கேள்வியாக பார்த்தாள்.

 

” நாளைக்கு நீ உன் அப்பா அம்மா கூட உன் ஊருக்கு கிளம்பு.. நான் கேஸ் விஷயமா வர சொன்னா மட்டும் வா.. அதுவரைக்கும் அங்கேயே இரு.. அப்பறம் காலேஜ் கம்ப்ளீட் பண்ணிடு” என்றவனை அதிர்ந்து பார்த்தாள். அனைத்தையும் சாதாரணமாகவே கூறி இருந்தான்.

 

” என்ன பார்க்குற ”

 

” அது.. இப்போ எதுக்கு.. ”

 

” ஏன் என்ன விட்டு போக மனசு இல்லையா மூன் ” ஒரு மாதிரி குரலில் கேட்டவனை முறைத்தவள் ..

 

” இல்ல கல்யாணம் ஆகி நான் மட்டும் எப்படி ஊருக்கு போறது ”

 

” ட்ரெயின்ல தான் ”

 

” ப்ச் அது இல்லைங்க.. நான் தனியா போனா ஊர்ல எல்லாரும் ஒரு மாதிரி பேசுவாங்க ”

 

” என்ன பேசுவாங்க ”

 

” அதெல்லாம் எனக்கு தெரியல.. நான் வெயிட் பண்ணுறேன்.. சேர்ந்தே போகலாம்.. அதுவரைக்கும் நான் இங்கேயே இருக்கேன்.. வேணும்னா அம்மா அப்பாவை போக சொல்லட்டா ” தவிப்புடன் கேட்க மனைவியை ரசித்தவன்..

 

” ம்ம் இருக்கலாம் தான்.. ஆனால் இங்க உன்ன சுத்தி நிறையா ஆபத்து இருக்கு மூன். எந்நேரமும் உன்னையே நான் கண்காணிச்சுட்டு இருக்க முடியாதுல.. உன் ஊர்ல இருந்தாலும் நான் வாட்ச் பண்ணுவேன் தான். ஆனால் எனக்கு இந்த அளவுக்கு ஸ்ட்ரெஸ் இருக்காது”

 

” இல்ல என்ன சொன்னாலும்.. இந்த விஷயத்துல நான் சம்மதிக்க மாட்டேன்.. நான் மட்டும் ஊருக்கு போக மாட்டேன்.. ஊர்ல எல்லாரும் ஒரு மாதிரி பேசுவாங்க ”

 

” சொன்னா கேளு மூன்.. ஊருக்குக்காக நம்ம ஏன் வாழனும்.. நீ போய் அங்க எப்பவும் போல இரு.. மத்ததை நான் பார்த்துக்கிறேன் ”

 

” அது.. இல்ல.. ” என மறுக்க போனவளை தடுத்தவன்.. ” சொன்னா கேளு டி.. ஊருக்கு கிளம்புற வழியை பாரு.. மனுஷனை சாவடிக்காம ” என கத்தியவனை அரண்டு பார்த்தவள்.. அதன் பிறகு ஒரு வார்த்தையும் அவனிடம் பேசவில்லை.

 

வழியில் ஹோட்டலில் நிறுத்தியிருந்தான். பெயருக்கும் உண்டு விட்டு வெளியேறி இருந்தாள் பிறை. அவனை விட்டு செல்வது வேதனையாக இருந்தாலும்.. மற்றொரு பக்கம் ஊர் ஆட்களை நினைத்து மனம் பதறியது.

 

வீட்டிற்கு அழைத்து வந்தவன், அவன் எடுத்திருந்த முடிவையும் கூற.. பிறை கூறியதையே அவளது பெற்றோர்களும் கூற.. பின் மகளின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்பதை உணர்ந்து ஒத்துக் கொண்டார்கள்.

 

அறைக்குள் வந்த பிறைக்கு தான் அழுகை முட்டிக் கொண்டு வந்தது. அவள் பின்னோடு வந்தவன்.. கதவை காலால் எட்டி உதைத்து சாற்றியவன்..

 

” சரி ஓகே.. நாளைக்கு ஊருக்கு போக போற.. திரும்ப எப்போன்னு தெரியல.. அதுவரைக்கும் தாங்குற மாதிரி ஏதாவது கொடுத்துட்டு போ மூன் ” கைக்கடிகாரத்தை கழற்றி வைத்தவன்.. சட்டையை மடித்துக் கொண்டே அவள் பக்கம் முன்னேறி இருக்க.. அவளுக்கு தான் திக்கென்று இருந்தது.

 

” விலகுங்க.. முதல்ல ”

 

” இல்லைனா ”

 

” நான் ஊருக்கு போறேன்”

 

” அதான் முடிவு பண்ணியாச்சே.. இப்போ நீ என்ன புதுசா சொல்லுற ”

 

” கிளம்புறேன் போதுமா ”

 

” போதாது ..  கொடுத்துட்டு போ ”

 

” என்ன கொடுக்கனும்”

 

” புருஷனுக்கு பொண்டாட்டி என்ன கொடுக்கனுமோ அதை கொடுத்துட்டு போ ”

 

சட்டென அவனை நிமிர்ந்து பார்த்தாள்.. அவளது பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்டவன்.. ” மொத்தமா கொடுத்துட்டா உன்ன அனுப்ப மனசு வராது டி.. அதுனால தான் .. கொஞ்சமா கேட்கிறேன்”

 

” என்ன இப்படி பேசுறீங்க ” அவனை பார்க்க முடியாமல் தலையை தரையில் புதைத்தாள்.

 

” வேற எப்டி பேசனும்”

 

” நீங்க போலீஸ்”

 

” அது ஊருக்கு.. உனக்கில்லை ” என்றவன் அவளை நெருங்க.. மூச்சு முட்டியது அவளுக்கு.

 

சுவற்றோடு சாய்ந்து நின்றவளை நெருங்கியவன்.. ” சேலை காட்டாதன்னு சொன்னேன்ல .. ” என கேட்டுக் கொண்டே அவனது வலக் கரத்தை எடுத்து அவளது இடையில் வைக்க.. அவளது கண்களோ பீதியானது.

 

“உன் ஆபிஸ் டிரெசிங் ரூம்ல என்ன பத்தி என்ன பேசுன ” சம்மந்தம் இல்லாத நேரத்தில் சம்மந்தம் இல்லாத கேள்வியை கேட்டு தொலைத்தான்.

 

சட்டென ஏதோ ஞாபகம் வந்தவளாக.. விழிகளை விரிக்க.. அவளது இடையை இறுக்கிப் பிடித்தவன்.. மேலும் அவளை நெருக்கி.. முகத்தோடு முகம் உரச.. சிறிது நாளே வளர்ந்திருந்த தாடி அவளது கன்னத்தை மெலிதாக தீண்ட.. அந்த தீண்டலை தாங்க முடியாமல் கண்களை மூடிக் கொண்டாள்.

 

” என் வருங்கால பொண்டாட்டியை பத்தி நீ ரொம்ப கவலை பட்டியே மூன்.. இந்த அளவு ரொமான்ஸ்  போதுமா.. இல்ல இன்னும் வேணுமா.. ” அவளது உடலோடு அவனும் சாய்ந்து கொள்ள.. அவளது இதயத்துடிப்பு அவனுக்கு நன்றாக கேட்டது.

 

சனா💖

 

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 39

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
31
+1
1
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்