Loading

அத்தியாயம் 16

 

ஜீவநந்தினி அடர்நீல நிற புடவையிலும், உதயகீதன் அதே அடர்நீல வண்ண பிளேஸரும் அணிந்து கொண்டு, ஜோடியாக உள்ளே நுழையும் காட்சியை வெறுப்புடன் கண்டாள் ராகவர்ஷினி.

 

எனினும், சபை நாகரிகம் கருதி, முகத்தை உடனே மாற்றியபடி, இருவரையும் வரவேற்க சென்றாள்.

 

ஆனால், அவளின் முக மாற்றத்தை கண்ட உதயகீதனுக்கு தான், இங்கு வந்திருக்க கூடாதோ என்ற எண்ணம் அப்போதே உதித்தது.

 

இனிமேல், வெளியேறினால் நன்றாக இருக்காது என்று அவன் மனசாட்சி கூற, அமைதியாக நின்று கொண்டான்.

 

அப்போது அவர்களை சமீபித்திருந்த ராகவர்ஷினி, “ஹே உதய், வெல்கம் வெல்கம்…” என்று அவனை லேசாக அணைத்து உற்சாகமாக வரவேற்றவள், அவனருகே இருந்த ஜீவநந்தினியை கண்டு கொள்ளவில்லை.

 

அவள் திடீரென்று அணைப்பாள் என்று எதிர்பாராத உதயகீதன் திகைத்து அவளை விலக்க, “ஓஹ் சாரி சாரி, நான் பழைய நினைப்புல ஹக் பண்ணிட்டேன்.” என்று வேண்டுமென்றே விளக்கம் அளிக்கும் சாக்கில் குத்திப் பேசினாள்.

 

அதில், ஜீவநந்தினியின் முகம் லேசாக சுருங்க, உதயகீதனோ எதிரிலிருந்தவளை முறைத்தான்.

 

அதை அசட்டை செய்த ராகவர்ஷினி அப்போது தான் ஜீவநந்தினியை கவனிப்பது போல, “அச்சோ சாரி உங்களை வெல்கம் பண்ண மறந்துட்டேன். உதய் பக்கத்துல இருந்தா, எல்லாத்தையும் மறந்துடுறேன்.” என்றவள், பின் நாக்கை கடித்து, “ச்சு, இன்னைக்கு என்னாச்சுன்னு தெரியல, ராங்காவே பேசிட்டு இருக்கேன்.” என்றும் கூற, ஜீவநந்தினிக்கு புரிந்து போனது, இந்த பார்ட்டி எதற்காக என்று!

 

அவள் உதயகீதனை பார்க்க, அவனோ ராகவர்ஷினியை தான் முறைத்துக் கொண்டிருந்தான்.

 

இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட வாய்ப்பிருப்பதை உணர்ந்த ஜீவநந்தினி தான் அவனின் கரம் பற்றி, “தயா…” என்று அழைத்தாள்.

 

அதில் அவன் திரும்பினானோ என்னவோ, ராகவர்ஷினி உடனே திரும்பி அவளை பார்த்தாள்.

 

‘நானே உதய்னு தான் கூப்பிடுவேன், எனக்கு இல்லாத உரிமை உனக்கா?’ என்று தான் எண்ணத் தோன்றியது ராகவர்ஷினிக்கு.

 

மேலும், ஜீவநந்தினியின் ஒற்றை வார்த்தைக்கு கட்டுப்படும் உதயகீதன் மீதும் கோபம் வந்தது. அவர்கள் காதலித்த காலத்தில், அவள் பேச்சுக்கும் அவன் மதிப்பு கொடுத்தான் என்பதை வசதியாக மறந்து போனாள் ராகவர்ஷினி.

 

அந்த கடுப்பில், அவள் இருவரையும் முறைத்து விட்டு சென்று விட, உதயகீதனை அறிந்த வேறு சில நண்பர்கள் அவனை சுற்றி வளைத்துக் கொண்டனர்.

 

அதில், ஜீவநந்தினி தான் தனித்து விடப்பட்டாள். தான் இங்கு அதிகப்படியோ என்று அவள் எண்ணும் வேளையிலேயே, அவளை கைவளைவில் கொண்டு வந்த உதயகீதன், “திஸ் இஸ் மை ஒய்ஃப் ஜீவநந்தினி.” என்று அவர்களுக்கு அறிமுகப்படுத்தினான்.

 

கணவனின் செயல் ரணப்பட்ட மனதை தென்றலாக வருடியது போலிருக்க, தொலைந்த சிரிப்பு மீண்டிருந்தது அவள் வதனத்தில்.

 

அங்கிருந்த அனைவருக்கும், உதயகீதன் – ராகவர்ஷினியின் காதல் தெரியும் என்பதாலும், திருமணம் எதனால் நின்றது என்பது தெரியவில்லை என்பதாலும், உதயகீதன் ஜீவநந்தினியை அறிமுகப்படுத்தியதும், அவர்களுக்குள்ளாகவே பேசினர்.

 

ஒரு சிலர், அவனிடமே வந்து, “ஏன் இந்த அவசரம்?” என்று துக்கம் விசாரிப்பதை போல கேட்டும், அதற்கு வாங்கி கட்டிக்கொண்டும் சென்றனர்.

 

அதை தூரத்தில் இருந்து பார்த்த ராகவர்ஷினிக்கு சந்தோஷமாக இருந்தது. இது கூட அவள் திட்டம் தானே!

 

சுற்றத்தாரின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அவன் திணற வேண்டும் என்று நினைத்து தானே, இத்தனை பெரிய பார்ட்டியை ஏற்பாடு செய்து, அதற்கு அனைவரையும் வலிய சென்று அழைத்திருந்தாள்.

 

‘இது பத்தாது உங்களுக்கு! லாஸ்ட்ல இருக்கு பாரு ஷாக்கு! இந்த நாளை ரெண்டு பேருமே, உங்க வாழ்நாள் முழுக்க மறக்க கூடாது!’ என்று உள்ளுக்குள் கறுவினாள் ராகவர்ஷினி.

 

ஜீவநந்தினிக்கோ, ‘என்னடா இது?’ என்று தோன்றினாலும், அதற்கு உடைந்தெல்லாம் போகவில்லை அவள். அடுத்தவர்களின் காயத்தை கீறி, அதில் மகிழும் சிலரை அவள் என்றுமே கண்டு கொண்டதில்லை. இப்போதும் அப்படியே அவர்களையும் அவர்களின் பேச்சையும் ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை.

 

உதயகீதன் தான், “ஜீவி, நாம கிளம்பலாம்.” என்று கூற, “பாதில கிளம்புறது நல்லா இருக்காது தயா. இன்னும் கொஞ்ச நேரம் தான, அட்ஜஸ்ட் பண்ணிப்போம்.” என்று அவனை சமாதானப்படுத்தினாள்.

 

ஆட்டம் பாட்டத்துடன் பார்ட்டி களைகட்ட, அதில் பங்கு கொள்ளாமல், அவ்வபோது வந்த பழரசத்தை மட்டும் பருகியபடி, ஒரு ஓரமாக அமர்ந்து விட்டனர் உதயகீதனும் ஜீவநந்தினியும்.

 

ஒன்றரை மணி நேரம் கழித்து, அனைவரும் சாப்பிட ஆரம்பித்தனர். பஃபே வகை உணவு என்பதால் தேவையானவற்றை எடுத்துக் கொண்டு இருவரும் ஒரு மேஜையில் வந்து அமர்ந்து சாப்பிட ஆரம்பிக்க, சரியாக அதே சமயம் உதயகீதனுக்கு வாடிக்கையாளரிடமிருந்து அழைப்பு வந்தது.

 

இரைச்சலாக இருந்ததால், அவ்விடத்தில் அழைப்பை ஏற்கவும் முடியாது, அதே சமயம், அழைப்பை ஏற்காமலும் இருக்க முடியாது என்ற அவனின் சூழ்நிலையை புரிந்து கொண்ட ஜீவநந்தினி, “வெளிய போய் பேசிட்டு வாங்க தயா.” என்று அனுப்பி வைத்தாள்.

 

“நீ இங்க தனியா இருந்துப்பியா?” என்று அவன் தயங்க, அதைக் கேட்டு சிரித்தவள், “என்னை என்ன யாருமே இல்லாத இடத்துலயா விட்டுட்டு போறீங்க? இதோ, இத்தனை பேர் சுத்தி இருக்குறப்போ, என்னவாக போகுது? அதோட நான் என்ன சின்ன குழந்தையா? போய் பேசிட்டு வாங்க தயா.” என்று அவள் பேசியே அனுப்பி வைத்தாள்.

 

எத்தனை நபர்கள் இருந்தாலும், விதியை மாற்றிட முடியுமா என்ன?

 

அப்போதும் தயக்கத்துடனே அவளை பார்த்தபடி வெளியேறினான் உதயகீதன்.

 

அதற்காகவே காத்திருந்ததை போல அங்கு வந்து அமர்ந்தாள் ராகவர்ஷினி.

 

“ஹாய், சாரி உங்களை சரியா கவனிக்க முடியல.” என்று போலியாக அவள் வருத்தப்பட, அது தெரிந்தாலும், எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், “அது பரவாயில்ல. இவ்ளோ பெரிய பார்ட்டியை ஆர்கனைஸ் பண்றது சாதரண விஷயம் இல்ல.” என்று அவளை ஒட்டியே பேசினாள் ஜீவநந்தினி.

 

“ஹ்ம்ம், எல்லாம் ஈவெண்ட் மேனேஜர் கிட்ட கொடுத்தாச்சு. சோ, பெருசா வேலை எதுவும் இல்ல. பணம் இருந்தா எல்லாமே ஈஸி தான.”என்று திமிருடன் கூறிய ராகவர்ஷினி, அடுத்த நொடியே, “சாரி, நான் உங்களை எதுவும் மீன் பண்ணல.” என்றாள் வேண்டுமென்றே.

 

அத்தனை நேரம் பொறுமையாக இருந்த ஜீவநந்தினிக்கே கோபம் வந்துவிட, “அப்படியே மீன் பண்ணாலும், நான் அதை பெருசா எடுத்துக்க மாட்டேன்.” என்று திருப்பிக் கொடுத்தாள்.

 

அதில் மூக்கறுப்பட்டாலும், சமாளித்து கொண்ட ராகவர்ஷினி, “அப்பறம், உங்க மேரேஜ் லைஃப் எப்படி போகுது?” என்று போட்டு வாங்க முற்பட, “எல்லாருக்கும் எப்படி போகுதோ, அப்படி தான் போகுது.” என்று அந்த பேச்சிலிருந்து நழுவ முயன்றாள் ஜீவநந்தினி.

 

“ஓஹ், நான் ஏன் அப்படி கேட்டேனா, உங்க மேரேஜ் எல்லாருக்கும் நடந்த மேரேஜ் மாதிரி இல்லையே. உதய்க்கு என்மேல லவ் இருந்துச்சு. அதையும் மீறி, நீங்க இந்தளவுக்கு ஒற்றுமையா இருக்கீங்கன்னா… சோ ஹாப்பி ஃபார் யூ போத்.” என்ற ராகவர்ஷினியின் குரலில் சற்றும் மகிழ்வில்லை.

 

மாறாக, வன்மம் மட்டுமே நிறைந்திருந்தது!

 

அப்போதும் கூட, ராகவர்ஷினி ஏமாற்றத்தின் விளைவாகவே அப்படி பேசுகிறாள் என்று எண்ணி, “வாழ்க்கை யாருக்காகவும் நிக்கப் போறது இல்ல ராகவர்ஷினி. நாமளும், காலத்தோட ஓடி வாழ்க்கையை வாழத்தான் செய்யணும். சந்தர்ப்ப சூழ்நிலையால நடந்த விபத்தால, ஒரே இடத்துல தேங்கி நின்னுடக் கூடாது.” என்று அறிவுரை வழங்க, “விபத்தா? எது விபத்து?  யாரோ செஞ்ச தப்பால, நாங்க பிரிஞ்சது விபத்தா?” என்று எகிறினாள் ராகவர்ஷினி.

 

அதில் ஒன்றிரெண்டு நபர்கள் ராகவர்ஷினியை திரும்பி பார்க்க, நிகழ்விற்கு வந்தவள், அவளின் காரியம் கெடக்கூடாது என்பதால், “சாரி, கொஞ்சம் எமோஷனலாகிட்டேன்.” என்று மன்னிப்பு வேண்ட, வேறு வழியின்றி தலையசைத்தாள் ஜீவநந்தினி.

 

இத்தனை நேரம் தெளிவாக இருந்த அவளின் மனது மீண்டும் குழப்பத்திற்கு உண்டானது. காரணம் ராகவர்ஷினியின் பிடிவாதம், உதயகீதனிடம் காட்டும் நெருக்கமும் உரிமையும்!

 

‘இதென்ன, இந்த பொண்ணு என்ன சொன்னாலும், அதை எதிர்த்து பேசிட்டு இருக்கு!  மூவ்வான் ஆகுன்னு சொன்னா, அதுக்கும் முடியாதுன்னு நின்னா எப்படி? இதனால, எங்களுக்குள்ள பிராப்ளம் வருமா?’ என்றெல்லாம் சிந்தனையில் ஆழ்ந்தது.

 

பெண்ணவளின் குழப்பத்தை அவளின் முகம் அப்படி எடுத்துக் காட்ட, அதற்காகவே பேச்சை துவங்கிய ராகவர்ஷினி, உள்ளுக்குள் உண்டான சந்தோஷத்துடன், “நீங்க சாப்பிடுங்க. நான் மத்தவங்களை பார்த்துட்டு வரேன்.” என்று மர்மமாக சிரித்தபடி அங்கிருந்து நகர்ந்தாள்.

 

*****

 

அலைபேசியில் பேச வெளியே வந்த உதயகீதன் மீண்டும் உள்ளே வர கால் மணி நேரமானது. அதுவும், மனைவி ராகவர்ஷினியுடன் பேசுவதையும், அவள் முகம் சரியில்லாததையும் பார்த்தவன் விரைவாக பேசி முடித்து வந்திருந்தான்.

 

அவர்கள் முன்பிருந்த மேஜையில் அவளும் அவளின் தட்டும் இல்லாமல் போக, கைகழுவ சென்றிருப்பாள் என்று தான் முதலில் எண்ணினான் உதயகீதன்.

 

ஆனால், சில நிமிடங்கள் கரைந்து சென்ற பின்பும் அவள் வராததால், அவனே தேடி சென்று விட்டான். பெண்கள் கழிப்பறைக்குள் செல்ல முடியாததால், அங்கிருந்த பெண்ணிடம் உதவி கேட்க, அவரோ உள்ளே யாருமில்லை என்று கூறி உதயகீதனின் பதற்றத்தை உயர்த்தினார்.

 

நேரம் தாழ்த்தாமல் உடனே ராகவர்ஷினயிடம் சென்றவன், “ஜீவி எங்க?” என்று பரபரப்புடன் வினவினான்.

 

‘அதுகுள்ள தெரிஞ்சுடுச்சா? அதென்ன அவளுக்குன்னா மட்டும் இவ்ளோ டென்ஷன்? கொஞ்ச நேரம் அனுபவி!’ என்று எண்ணியவள், “அது யாரு ஜீவி?” என்று தெரியாததை போன்றே வினவினாள்.

 

அதில் பல்லைக் கடித்த உதயகீதனோ, “இதுவரை என் கோபத்தை பார்க்காத நீ, இனிமேலும், பார்க்காம இருக்குறது தான் உனக்கு நல்லது. என் ஒய்ஃப் ஜீவநந்தினி உன்கூட தான் கடைசியா பேசுனா. இப்போ அவளைக் காணோம். நீயா சொல்லிடுறியா, இல்ல போலீஸை கூப்பிடவா?” என்று மிரட்ட, பயந்து தான் போனாள் ராகவர்ஷினி.

 

அவன் காவல்துறை உதவியை நாடுவான் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லையே. அதோடு, மறுநாள் ஜெர்மனி செல்ல வேண்டும் என்று இருக்கையில், காவல் நிலையத்திற்கு எல்லாம் அலைய முடியாது. போததற்கு, இந்த விஷயம் பெற்றவர்களுக்கு தெரிய வந்தால், தன்னை வெறுத்து ஒதுக்குவது நிச்சயம்.

 

இவை அனைத்தும் மனதிற்குள் ஓட, வெளியே அவனை சமாளிக்கும் பொருட்டு, “உன் ஒய்ஃப் காணோம்னா, போய் தேடுறதை விட்டுட்டு, என்கிட்ட ஏன் கேட்குற? அவ கூட பேசுனதுக்கு எல்லாம் என்னை சந்தேகப்படுவியா?” என்று கூற, அதற்கு மேல் அவளுடன் பேசி நேரத்தை விரயம் செய்ய வேண்டாம் என்று எண்ணியவனாக, அலைபேசியில் யாருக்கோ அழைத்தான்.

 

அவன் செயல்களை எல்லாம் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. தேவையில்லாமல் பிரச்சனையை இழுத்து விட்டுக் கொண்டோமோ என்பதை தாமதமாக உணர்ந்து வருந்தினாள்.

 

அதற்குள் இணைப்பு கிடைத்ததும், “ஹலோ மிஸ்டர். பிரகாஷ், ஒரு பெர்சனல் எமர்ஜென்சி. நானும் என் ஒய்ஃபும் ஒரு பார்ட்டிக்கு வந்திருந்தோம். இப்போ, என் ஒய்ஃபை காணோம். எனக்கு அந்த பார்ட்டியை ஆர்கனைஸ் பண்ணவங்க மேல தான் சந்தேகமா இருக்கு.” என்று பேச, வேகமாக அவனை தடுத்த ராகவர்ஷினி, “உதய் பிளீஸ், போலீஸ் எல்லாம் வேண்டாம்.” என்று சிறுகுரலில் கெஞ்சினாள்.

 

அவளின் கரத்தை தட்டி விட்டவன், “ச்சீ, லாஸ்ட்ல நீயே தான் காரணமா? உன்கிட்ட கேட்க வந்தப்போ கூட, நீயா இருக்க மாட்டன்னு தான் நம்புனேன். எப்போ இருந்து இவ்ளோ சீப்பா பிஹேவ் பண்ண ஆரம்பிச்ச? அவ உனக்கு என்ன தப்பு பண்ணிட்டான்னு அவளை கடத்திருக்க? தப்பு பண்ணது எல்லாம் உன் ‘அம்மா’!” என்றவன் பேச்சு வேறு திசையில் செல்வதை உணர்ந்து சிறிது இடைவெளி விட்டான்.

 

நடந்த களேபரத்தில், அந்த பார்ட்டிக்கு வந்திருந்த அனைவரின் பார்வையும் அவர்கள் மீதே இருக்க, அவமானத்தில் கூனிக்குறுகி நின்றிருந்தாள் ராகவர்ஷினி.

 

அவளுக்கு ஆசுவாசப்பட கூட அவகாசம் கொடுக்காமல், “லுக், இன்னும் பத்து நிமிஷத்துல என் பொண்டாட்டி என்கிட்ட வந்துருக்கணும். இல்ல, போலீஸ் வருவாங்க.” என்று மிரட்ட, அழுத முகத்துடன் அவளின் பெரியப்பா மகனுக்கு அழைப்பு விடுத்தாள்.

 

ஆம், இந்த காரியத்திற்கு அவளின் பெரியப்பா மகனின் உதவியை தான் நாடியிருந்தாள் அவள்.

 

அழைப்பு சென்று கொண்டிருந்ததே தவிர, மறுமுனையில் யாரும் ஏற்பது போலில்லை. நேரம் கடக்க, உதயகீதனின் மிரட்டல் பார்வையும் மற்றவர்களின் துச்சப் பார்வையும் பெண்ணவளை துவண்டு போகச் செய்தது.

 

அவளின் உதடுகள் விடாமல், ‘அட்டெண்ட் பண்ணு’ என்பதையே பாராயணம் செய்ய, பல நொடிகளுக்கு பின்னர், அதற்கு பலன் இருந்தது.

 

அழைப்பு ஏற்கப்பட்டதும், “இடியட்! இவ்ளோ நேரம் என்ன பண்ணிட்டு இருந்த? அந்த பொண்ணை இங்க கூட்டிட்டு வா. சீக்கிரம் வா.” என்று அவனை பேச விடாமல் அவளே பேசி முடிக்க, மறுமுனையில் இருந்து மூச்சிரைக்கும் சத்தம் தான் கேட்டது.

 

“ரஞ்சித்… என்னடா பதிலே சொல்ல மாட்டிங்குற?” என்று ராகவர்ஷினி கடுப்பில் கத்த, “வர்ஷி… அந்த பொண்ணு… அவன்… போயிட்டான்… என்னை அடிச்சுட்டு…” என்று ரஞ்சித் எனப்பட்டவன் பிச்சு பிச்சு சொல்ல, அதைக் கேட்டவளுக்கோ பயத்தில் மயக்கமே வந்தது.

 

அதே பயத்துடன் எதிரே பார்க்க, அங்கு அவள் இதுவரை கண்டிராத  ருத்ரமூர்த்தியாக நின்றிருந்தான் உதயகீதன்.

 

தொடரும்…

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 43

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
34
+1
3
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. வர்ஷினி 😡 போலீஸ்ல பிடிச்சு குடு உதய்….