
அத்தியாயம் – 4
மங்கல கீதங்கள் முழங்க, நாதஸ்வரங்கள் இன்னிசைக்க, மந்திரங்கள் உச்சரிக்க, அவன் சிவந்த தேகத்திற்கு பொருத்தமாய் பட்டு வேஷ்டியில், கம்பீரம் சிறிதும் குறையாமல் ஆண்மைக்குக்குறிய இலக்கணத்துடன் கழுத்தில் மாலையோடு மணமேடையில் அமர்ந்திருந்தான் விக்ராந்த்,… அவன் முகம் கோபம், வெறுப்பு, இயலாமை போன்ற எந்த ஒரு உணர்வுகளையும் காட்டாமல் சாதாரணமாக தான் இருந்தது….
அரக்கு நிறத்தில், தங்க நிற ஜரிகையிலான அவளின் மேனிக்கு பொருத்தமாய் இருந்த புடவை அணிந்து, இயற்கை அழகுடன் சேர்ந்து செயற்கை அலங்கரிப்புடன் தேவதை போல் காட்சியளித்தாள் நித்திலா, வானுலக மங்கையர்களின் மொத்தழகையும் சேர்த்து வடித்த சிலை போல் காட்சியளித்தவள் விக்ராத்தின் அருகில் புதுமண பெண்களுக்குரிய வெட்கமா இல்லை பயமா என்று விவரிக்க முடியாத நிலையில் தலை குனியலுடன் அமர்ந்திருந்தாள்…..
“கெட்டி மேளம் கெட்டிமேளம்” என்ற அர்ச்சகரின் குரல் ஒலிக்க, அக்னியை சாட்சியாக வைத்து அவளது சங்கு கழுத்தில் தன் கரம் கொண்டு மங்களநானை பூட்டினான் விக்ராந்த், தன் மகனின் திருமணம் நல்லபடியாக முடிந்து விட்டதை எண்ணி மனம்குளிர அர்ச்சதை தூவினார் லட்சுமண மூர்த்தி,….
கல்யாணம் முடிந்த கையோடு மற்ற சடங்குகளும் நடந்தேறியது, பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்க வேண்டிய நேரமும் வந்தது,
தன் பேத்தி தீர்க்க சுமங்கலியுடன் ஆயுசுக்கும் நல்ல படியாக இருக்க வேண்டும் என வாழ்த்தினர் ஜெயமோகனும் வைத்தீஸ்வரியும், அவர்களை தொடர்ந்து மற்ற பெரியவர்களிடமும் ஆசீர்வாதம் பெற்றனர் புதுமண தம்பதிகள்,….
திருமணமணத்திற்கு வந்திருந்த பெரிய பெரிய தொழிலதிபர்களை உணவருந்த அழைத்து சென்றார்கள் வித்தார்த்தும், சாந்தமூர்த்தியும்,….
இப்போது கொஞ்சம் நாயகனின் படிப்பு மற்றும் தொழில் சம்மந்தபட்டவைகளை பார்த்து விடலாம் வாசகர்களே..
விக்ராந்த் தனது ஆரம்பக் கல்வியை தான் பிறந்த மண்ணிலேயே முடித்தாலும், உயர் கல்விக்காக அமெரிக்காவை நாடினான். பள்ளிப்படிப்பு முடிந்ததும், விக்ராந்த்தும் அவனது அண்ணன் வித்தார்த்தும் இணைந்து தொழில்நுட்ப சம்பந்தமான பாடப்பிரிவுகளைத் தேர்ந்தெடுத்தனர்.
அமெரிக்காவில் புகழ் பெற்ற ஒரு பல்கலைக்கழகத்தில் இருவரும் தங்கள் ஆறு வருடப் படிப்பை நிறைவு செய்தனர். படிப்பை முடித்த கையோடு, அவர்கள் தங்கள் கல்வியறிவையும், கூர்மையான புத்தியையும் முதலீடாகக் கொண்டு வணிக உலகில் கால் பதித்தனர்.
சென்னை அடையார் கிளையில், கே.எம். க்ரூப்ஸின் பிரான்சைப் புதிதாகத் துவக்கிய விக்ராந்த் மற்றும் வித்தார்த், ஒரே ஒரு வருடத்திலேயே அபாரமான வளர்ச்சியை அடைந்தனர்.
அவர்களின் சாதூரியமும் அறிவுக்கூர்மையும், அசாத்திய உழைப்பும் ஒரே வருடத்தில் பல கம்பெனிகள் போட்டியில் முன்னணியில் இருக்க, அவர்களால் எளிதாக வெற்றிபெற முடிந்தது, அத்தனை கம்பெனிகளையும் புள்ளி விகிதத்தில் அடித்து வீழ்த்தினர்,
ஆகவே அவர்களின் அசாத்திய திறனைக் கண்டு தொழில் நுட்ப குழுமம் அனைவரும் ஒருங்கிணைந்து அவர்கள் இருவரையும் கௌரவிக்கும் வகையில் 2024 போன வருடத்திற்கான சிறந்த விருதான அவார்டை தட்டிச் சென்றது கே.எம் க்ரூப்ஸ் ஆப் கம்பெனி…
இந்த அசுர வளர்ச்சிக்கு முழுக்காரணமும் விக்ராந்த் தான் என்று வித்தார்த் அடிக்கடி கூறுவதுண்டு. வித்தார்த் சில சமயங்களில், “இது நம்மால் முடியாது,” என்று பின்வாங்கும் போதும், விக்ராந்த் தான் தனது அண்ணனை ஊக்கப்படுத்தி, “இது நம்மால் முடியும்” என்ற உறுதியான நம்பிக்கையுடன் தைரியமாகத் தொழிலில் இறங்குவான்.
அவனுடைய இந்த அசட்டு தைரியமும், அசைக்க முடியாத நம்பிக்கையும் வீண் போகவில்லை. இன்று அவர்களின் நிறுவனம் இந்தியாவிலேயே பெயர் போன கம்பெனியாகத் திகழ்ந்தது.
விக்ராந்த் மற்றும் வித்தார்த்துக்கு இடையே வெறும் இரண்டு ஆண்டுகளே வயது வித்தியாசம். இதனால், அவர்கள் அண்ணன் தம்பி என்ற உறவையும் தாண்டி, ஒரு அழகான நட்புறவைப் பேணி வந்தனர்.
வித்தார்த், தன் தம்பியின் படிப்பு முடியும் வரை, தன் தந்தையின் வணிகத்தைப் பொறுப்புடன் கவனித்து வந்தான், விக்ராந்தின் படிப்பு முடிந்த பிறகே, அவனுடன் இணைந்து புதிய நிறுவனத்தைத் துவக்கி, இருவரும் இணைந்து இந்த வெற்றியைப் பெற்றனர்.
நித்திலாவை விக்ராந்தின் வீட்டிற்கு அழைத்து செல்ல வேண்டிய நேரமும் வந்தது,… இத்தனை நாட்களாய் வேறொரு நினைப்பில் இருந்த நித்திலாவிற்கு, தன் பாட்டி தாத்தாவை பிரிய போகும் தருணம் அப்போது தான் புரிய வந்தது, அவர்களை பிரிய போவதை எண்ணி கண்ணீர் ஆறாய் ஓடியது, ஜெயமோகனும் வைத்தீஸ்வரியும் அவளுக்கு தங்களால் இயன்ற வரை ஆறுதல் கூறினர்,…
அதேநேரம் சரியாக அவ்விடத்திற்கு வந்தார் லட்சுமண மூர்த்தி,….
“பொண்ணா பொறந்த அனைவருக்கும் இந்த தருணம் அத்தனை கவலையை கொடுக்கும்னு எனக்கு தெரியும் மா, ஆனா நீ கவலை பட கூடாது, நீ எங்கே வர போற, உன்னோட அப்பா வீட்டுக்கு தானே வர போற” என்றவரை கண்கள் கலங்க பார்த்தாள் நித்திலா,….
“நான் அன்னைக்கு சொன்ன மாதிரி நீ என் வீட்டு மருமக இல்லம்மா மக, எந்த ஒரு பொண்ணும் தன் தந்தையோட போறதுக்கு இப்படி கண்ணை கசக்கிக்கிட்டு நிற்க மாட்டா, என்ன நான் சொல்றது சரி தானே” அவர் கேட்க,… அவள் உணர்ச்சி பெருக்கில் அவர் மார்பில் சாய்ந்து விம்மினாள்,….
“நான் ரொம்ப கொடுத்து வச்சவ, எத்தனை பேருக்கு இப்படி ஒரு மாமனார் கிடைக்கும், இதுவே போதும், எத்தனை பெரிய கஷ்டம் வந்தாலும் அதை நான் தாங்கிப்பேன்” என்றவளின் தலை கோதினார் லட்சுமணன்,…
‘எங்களுக்கு இது போதும், எங்க பேத்தியை நினைத்து இனி கவலையில்லை’ என்ற பார்வையுடன் தங்கள் கண்ணீரை துடைத்துக் கொண்ட பாட்டியும் தாத்தாவும் நித்திலாவை அவளின் புகுந்த வீட்டிற்கு இன்முகமாக அனுப்பி வைத்தனர்,….
அண்ணாநகரில் பணக்காரர்கள் வசிக்கும் ஒரு பகுதி அது, அங்கு ஒவ்வொன்றும் கலைநயத்துடன் கட்டப்பட்ட அழகிய பங்களாக்கள் அணிவகுத்து நின்றன. அந்தப் பங்களாக்களின் மத்தியில், கண்கவர் பச்சை தோட்டத்திற்கு நடுவில், கம்பீரமான ஒரு சாம்ராஜ்யம் போலக் காட்சியளித்தது விக்ராந்தின் இல்லம்.
அதன் பிரமாண்டம் பார்ப்பவர்களை ஒரு கணம் பிரமிக்க வைக்கும் ஆற்றல் கொண்டது. அந்த பிரமாண்டத்தைப் பார்த்து நித்திலாவுமே விழி விரித்தாள்.
உண்மையில், அவள் வளர்ந்த வீடுமே ஒரு மாளிகையைப் போன்றதுதான். வசதிக்கும் அழகுக்கும் அங்கு குறைவில்லை. இருப்பினும், விக்ராந்தின் வீடு அதைவிடப் பலமடங்கு பிரம்மாண்டமாக, ஒரு நவீன அரண்மனை போல, அமைந்திருந்ததைக் கண்டு அவள் ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றாள்.
புதிய மணமக்களை வரவேற்க, உறவினர்கள் கூட்டம் வீட்டைச் சுற்றி நெருங்கி நின்றது. அனைவரும் வீட்டு வாசலில் கூடி நின்றபோது, ஊர்மிளா மணமக்களாகிய விக்ராந்தையும் நித்திலாவையும் வாசலில் நிற்க வைத்து ஆரத்தி சுற்றினார்.
மஞ்சள் கலந்த நீரை வட்டமாகச் சுழற்றி, தனது மகனையும் மருமகளையும் பாரம்பரியப்படி வீட்டிற்குள் வரவேற்க ஆயத்தமானார். ஆனால், அந்த ஆரத்தியின் மங்களகரமான ஒளியிலும், நித்திலாவின் மனதின் கனம் மட்டும் குறையவில்லை.
“வலது காலை எடுத்து வச்சு உள்ள வாமா” அவர் புன்னகையுடன் சொல்ல,… வரவழைக்கப்பட்ட சிறு தலையசைப்புடன் அவளும் அவரை பார்த்து புன்னகைத்து, வலது காலை எடுத்து வைத்து உள்ளே சென்றாள்,…
வீட்டினை பிரம்மிப்புடன் பார்த்தபடி நடந்தவளை பூஜை அறைக்கு அழைத்து சென்று விளக்கேற்ற சொல்லினர், பூஜை சடங்குகள் முடிந்த பிறகு அங்கிருந்து வெளியே வந்தவள், அந்த வீட்டையும் அதன் கலைநயத்தையும் மெய்மறந்து ரசிக்க ஆரம்பித்தாள்.
சரியாக அந்த நேரம், அவளருகில் வந்த சுமித்ரா. “நான் உனக்கு அப்புறம் வீட்டை சுத்தி காட்டுறேன். இப்போ என் கொழுந்தனாரோட சேர்ந்து நீ பால் பழம் சாப்பிட வேண்டிய நேரம் இல்லையா, உட்காரு!” சுமித்ரா அந்தப் பிரம்மாண்டமான முற்றம் நடுவில் இருந்த ஆடம்பரமான சோபாவைக் கண்காட்டினாள். நித்திலா எந்தப் பதிலும் பேசாமல், தலை குனிந்தபடி அமர்ந்தாள்.
பால் பழத்துக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்க, விக்ராந்த் அதோடு தன் வேலை முடிந்துவிட்டதென நினைத்து நழுவ முற்பட.. ”எங்க போறீங்க? இன்னும் சடங்கெல்லாம் முடியல!” சுமித்ரா அன்புடன் சொல்ல, விக்ராந்தின் முகம் லேசாகச் சுருங்கியது…
”பண்ண வரைக்கும் போதும் அண்ணி. எனக்கு டையர்டா இருக்கு. ஐ ஹேவ் டு கோ,” எனச் சலிப்புடன் சொல்லியபடி அவன் நகரத் தொடங்கிட.. ”உன் அண்ணி தான் சொல்றால்ல, இன்னும் சடங்கெல்லாம் பண்ண வேண்டியத்திருக்குனு, முடிச்சிட்டுப் போடா!” வித்தார்த்தின் குரல் உறுதியாக ஒலித்தது…
அண்ணனின் கண்டிப்பான குரலில் வேறு வழியில்லாமல் நின்றான் அவன், அப்போது விக்ராந்தின் தங்கை இனியா, துள்ளலுடன் அருகே ஓடி வந்து… ”ஆமா அண்ணா! இன்னும் பால் பழம் சாப்பிட வேண்டியதிருக்கு! அப்புறம், பால் குடத்துக்குள்ள உள்ள மோதிரத்தை அண்ணியோட சேர்ந்து எடுக்க வேண்டிய சடங்கு இருக்கு! சூப்பரா இருக்கப் போகுது!” என மிகுந்த சந்தோஷத்துடன் சொன்னாள்…
”நீ நிறைய ஹிந்தி சீரியல் பார்த்து கெட்டுப் போயிட்ட இனியா!” சுமித்ரா சிரிப்புடன் கூறினாள்.
”பச்… கெட்டுலாம் போகல அண்ணி! அதெல்லாம் டிவியில தான் பார்த்திருக்கேன். உங்க மேரேஜ் அப்போ கூட இதெல்லாம் பண்ணல. விக்கி அண்ணா கல்யாணத்துலயாச்சும் பார்க்கலாம்னு தான்!” என்று ஆசையுடன் சொன்னவள்,.. “என்ன அண்ணா, நான் சொல்றது கரெக்ட் தானே?” என்று விக்ராந்தை நோக்கி உற்சாகமாகக் கேட்டாள்…
விக்ராந்த், தனது நெற்றியை விரல்களால் அழுத்தமாகத் தடவிவிட்டு, தங்கையை ஏறிட்டவன், “உனக்கு இழிச்சவாயன் ஒருத்தன் புருஷனா கிடைப்பான்ல, அவனை வச்சு இந்த சடங்கைலாம் பண்ணிக்கோ. என்னை விட்டுடு ம்ம்ம்!” எனச் சற்றுக் காட்டமாக சொல்லிவிட்டு திரும்பி நடக்கப் போகையில்… “விக்ராந்த்!” தந்தையின் கம்பீரமான குரல் அந்த இடத்தை நிறைத்தது. அந்தக் குரலில் இருந்த அதிகாரம், அவன் காலை மீண்டும் தரையில் ஆழமாகப் பதிய வைத்து, நிற்க வைத்தது.
மூச்சை இழுத்து விட்டு திரும்பினான் விக்ராந்த்….
“நீ இப்படி பாதிலேயே போயிட்டா வீட்டுக்கு வந்திருக்க சொந்தக்காரங்க எல்லாம் என்ன நினைப்பாங்க, இரு அப்புறம் போயிக்கலாம்” லட்சுமணன் அழுத்தமான பார்வையுடன் சொல்ல,… பதில் எதுவும் பேசாமல் நித்திலாவின் அருகில் வந்து அமர்ந்து கொண்டான்,….
ஊர்மிளா கையில் பால்பழம் நிறைந்த கண்ணாடி டம்ளரை கொண்டு வந்து, விக்ராந்திடம் நீட்டி,…”குடிச்சிட்டு மீதியை நித்திலா கிட்ட கொடுப்பா” என்றார்,….
“ஏன் சித்தி,… இப்படி ஓரவஞ்சனை காட்டுறீங்க, நானே ஃபுல்லா குடிச்சிட்டா தான் என்ன, பசில வயிறுலாம் சத்தம் போடுது, மார்னிங் ஒரு காஃபி குடிச்சதோட சரி, அதுக்கு அப்புறம் எதுவும் சாப்பிடல” விக்ராந்த் பாவமாக முகத்தை வைத்து கொண்டு சொல்ல, அவனை சுற்றி நின்றவர்கள் கேலியாக சிரித்தனர்,….
“விக்ராந்த் கண்ணா,… மாப்பிளை பாலை குடிச்சிட்டு பொண்ணுக்கு மீதியை கொடுக்கணும், அது தான் சம்பிரதாயம்” மரகத பாட்டி சிரித்தவாறு சொல்ல,….”என்ன சம்பிரதாயமோ” சலித்துக் கொண்டவன்,.. “சரி கொடுங்க” என்றவன், பாதி டம்ளர் பாலை குடித்து விட்டு, தன் அருகில் அமர்ந்திருந்த நித்திலாவின் முகம் பார்க்காமலேயே டம்ளரை அவளிடம் நீட்டினான்,….
சற்று தயங்கியவள், மறுக்க முடியாமல் அதனை வாங்கி குடித்தாள்…..
“ம்ம்ம்… முடிஞ்சதுல சித்தி, நான் இப்போ போலாமா” விக்ராந்த் கேட்க,….”அண்ணா அந்த மோதிரம் எடுக்கிற சம்பிரதாயம்” இனியா இழுக்க,….”நீ என்கிட்ட உதை வாங்காம போக மாட்ட போலயே” என்றவாறு அவன் முறைக்க,….”சரிண்ணா,… நீங்க போங்க, உங்களுக்கு நானே என் கையாலேயே சாப்பாடு எடுத்துட்டு வரேன்” என்றாள் நல்லபிள்ளை போல்…
அதற்கு மேல் அங்கு இருக்காமல் விக்ராந்த் தன் அறைக்கு சென்றுவிட்டான், அன்றைய மதிய உணவை நித்திலா தன் புது உறவுகளுடன் சேர்ந்து சாப்பிட்டாள்,…..
சிறிது ஓய்வெடுக்க சுமித்ராவும் இனியாவும், நித்திலாவை அழைத்துக் கொண்டு இனியாவின் அறைக்கு வந்துவிட்டனர்,…. சுமித்ரா கொடுத்த சாதாரண காட்டன் புடவைக்கு மாறியிருந்தாள் நித்திலா,….
“எப்படியோ என்னோட இன்னொரு அண்ணியும் வீட்டுக்கு வந்துட்டாங்க, இனி சூப்பரா அரட்டை அடிக்கலாம்” இனியா பூரிப்புடன் சொல்ல,….”ம்ம்ம்…. இதை உன் பெரிம்மா கிட்ட வச்சி சொல்லிப்பாரு, நாக்கை ஒட்ட அறுத்துடுவாங்க” என்றாள் சுமித்ரா….
“ஏன் அண்ணி ஹேப்பி மூட்ல இருக்கும் போது, அந்த டைனோசரை நியாபகம் படுத்துறீங்க” இனியா சோகமான முகத்துடன் சொல்ல,…”ஏய் இது மட்டும் அத்தை காதுல விழுந்தது, அவ்ளோ தான்” என்றாள் சுமித்ரா அவளை அதட்டிக்கொண்டு…
“ம்ம்ம்… மாமியாருக்கு ரொம்ப தான் சப்போர்ட்டு, டெய்லியும் அவங்களோட அர்ச்சனையை வாங்கிக்கிட்டு எப்படி தான் உங்களால இப்படி பேச முடியுதோ” என்றாள் இனியா சலித்துக்கொண்டு…
“பெரியவங்க என்ன சொன்னாலும் அது சின்னவங்களோட நல்லதுக்காக மட்டும் தான் இருக்கும்” சுமித்ரா சொல்ல,… “ம்ம்ம்… பெரிம்மா உங்களுக்கு நல்லது சொல்லி நான் கேட்டதில்லையே,” தாடையில் கைவைத்து யோசித்தவாறு சொன்னாள் இனியா….
“ஏய் வாலு, போதும் போதும்,” என்றவள் நித்திலாவின் புறம் திரும்ப, அவளோ சாய்ந்த நிலையில் அமர்ந்தவாறே துயில் கொண்டிருந்தாள்,…. பல நாட்கள் சரியாக உறங்காத உறக்கமும், கல்யாண சோர்வும் சேர்ந்து இப்போது அவள் அசதியில் உறங்கிவிட, அவளை பார்த்து சுமித்ராவும் இனியாவும் மெலிதாய் சிரித்தனர்,…
“பாவம் அண்ணி, செம டையர்ட்ல இருந்திருப்பாங்க போல” இனியா சொல்ல,….”ம்ம்ம்… அது தெரியாம நாம தான் இந்த பக்கம் கடலை போட ஆரம்பிச்சுட்டோம்,” என்றவள், மெல்லமாக அவளை தலைகாணியில் படுக்க வைத்தாள்,….
“நித்திலா கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுகட்டும், நீ அவ கூட இரு, நான் வெளியே மத்த வேலையை பார்க்கிறேன்” என வெளியேறினாள் சுமித்ரா,….
“மகாராணி வேலையெல்லாம் விட்டுட்டு எங்க போனீங்க, வீட்டுக்கு விருந்தாளிங்க வந்திருக்காங்கன்னு தெரிஞ்சும் ரூம்குள்ள ஒதுங்கிட்டீங்க போல” சமையலறை நோக்கி சென்று கொண்டிருந்த சுமித்ராவை வழிமறைத்து நின்றபடி சிடுசிடுப்புடன் வினவினார் அன்னலட்சுமி,….
“இல்ல அத்தை,… பாட்டி தான் நித்திலாவை இனியா ரூம்க்கு கூட்டிட்டு போக சொன்னாங்க, அதான்” என அவள் சொல்லி கொண்டிருக்கும் போதே இடைவெட்டியவர்,….”இது தான் சான்ஸ்னு நீயும் போய் உட்கார்ந்து கும்மி அடிச்சிருக்க அப்படி தானே” என கடுகடுவென்று கேட்டார் அன்னம்,…
“அது… இல்ல அத்தை” அவள் தடுமாற,…”உள்ளே போய் மத்த வேலையை பாரு, என் கண்ணுல படுற மாதிரி தான் இருக்கணும், என்னை கேட்காம எங்கேயும் போக கூடாது” அவர் அதட்டலுடன் சொல்ல… தலையை மட்டும் ஆட்டினாள் சுமித்ரா,….
“போ… போயி பாத்திரங்களை எல்லாம் விலக்கி வை” அவர் அதட்ட, அவளும் ஒரு வார்த்தை பேசாமல் சமயலறை நோக்கி சென்றாள்,….
தன் மூத்த மகளை அதட்டிவிட்டு இளைய மருமகள் என்ன செய்கிறாள் என பார்ப்பதற்காக இனியாவின் அறை நோக்கி வந்தார் அன்னம்,… அங்கு அவரின் இளைய மருமகளோ ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள்,…
அதனை கண்டவரின் புருவம் இடுங்க…”இவ என்ன இந்த நேரத்துல தூங்குறா” வாய்விட்டே தன்னிடம் கேட்டு கொள்ள, அது அங்கு தன் போனில் மூழ்கிருந்த இனியாவின் காதில் விழுந்து,…”அண்ணி டையர்டா இருந்தாங்க, அதான் தூங்கிடாங்க பெரிம்மா” என்றாள் போனிலிருந்து கண்ணை விலக்காமலே….
“ம்ம்ம்…. சரி சரி…. இப்போ தானே புதுசா வந்திருக்கா, போக போக கண்ட நேரத்துலைலாம் தூங்க கூடாதுனு புரிஞ்சிப்பா” என்றவர்,… “அரை மணி நேரத்துல எழுப்பி விட்டுடு,” என்ற கண்டிப்புடன் வெளியேறிவிட்டார்….
தன் பெரியம்மா கூறியதை சிறிது கூட காதில் வாங்காத இனியா, போனை அணைத்து விட்டு அவளும் ஒரு தூக்கம் போட நினைத்து, நித்திலாவின் மறுபக்கத்தில் படுத்து உறங்கி போனாள்,… அதற்கு பிறகு நித்திலா உறக்கத்திகிருந்து விடுபட்ட நேரம் மாலை ஆறு மணிக்கு தான், வெகு நாட்களுக்கு பிறகு இன்று தான் அசந்து தூங்கிருந்தாள்….
உறக்கத்திலிருந்து விடுபட்டவளுக்கு தான் எங்கு இருக்கிறோம் என்பதை உணரவே சில நொடிகள் தேவை பட்டது…. “என்ன அண்ணி எழுந்துடீங்களா, செம தூக்கம் போல” இனியாவின் முகத்தை பார்த்த பிறகு தான், இன்று தனக்கு திருமணம் ஆன நிகழ்வே நினைவில் வந்தது…
அவளை பார்த்து மெலிதாய் புன்னகைத்தவள்….”ம்ம்ம்… டையர்டா இருந்துச்சு, எப்போ எப்படி தூங்கினேன்னே தெரியல,” என்றவள் சுவரில் மாட்டிருந்த கடிகாரத்தை அப்போது தான் பார்த்தாள்…..
“மணி ஆறாச்சா, ஐயோ இவ்ளோ நேரம் தூங்கிட்டேனா,” அவள் பதறி கொண்டு கேட்க… “இதுக்கு எதுக்காக அண்ணி இவ்வளவு டென்ஷன் ஆகறீங்க, ஒன்னும் பிரட்சனை இல்ல, இதுவும் உங்க வீடு தானே, நீங்க உங்க வீட்ல இருக்க மாதிரி இங்க இருக்கலாம்” என்றாள் இனியா,….
“நித்திலா எழுந்துட்டியா, உனக்காக நான் காஃபி கொண்டு வந்திருக்கேன்” என்றவாறு வந்தாள் சுமித்ரா….
“நீங்க எதுக்காக இதெல்லாம் பண்ணுறீங்க,” அவள் சங்கடமாக பார்க்க,…”என் தங்கச்சிக்கு நான் இது கூட பண்ண மாட்டேனா, சரி நீ போய் முகம் கழுவிட்டு வா,” சுமித்ரா சொல்ல, சிறு தலையசைப்புடன் அறையினுள்ளேயே இருந்த அட்டாச்டு பாத்ரூமிற்கு சென்று முகம் கழுவி வந்தாள் நித்திலா,….
சுமித்ரா தந்த காபியை பருகியபடியே, சுமித்ராவும் இனியாவும் அடித்த கலாட்டாவை பார்த்துக் கொண்டிருந்தாள் நித்திலா, அந்த நேரம் அன்னலட்சுமி அறையினுள் நுழைந்தார்….
“என்னம்மா என் புது மருமகளே, தூங்குனது போதுமா” அவர் முகத்தில் சிரிப்பை காட்டியபடி கேட்டாலும், ஒரு வித உள் அர்த்தத்துடன் கேட்பது நித்திலாவிற்கு புரிந்தது,…
அவள் என்ன பேசுவதென்று தெரியாமல், கையை பிசைந்தபடி நிற்க, அதை கண்டுகொள்ளாத அன்னலட்சுமி, இனியாவை வெளியேற சொல்லிவிட்டு, தன் மூத்த மருமகளை நோக்கி,…”உன் தங்கச்சியை ரெடி பண்ணு, சாந்தி முகூர்த்துக்கு எட்டுல இருந்து பத்து நல்ல நேரம் குறிச்சு தந்திருக்காரு ஜோசியரு, சரியான நேரத்துக்கு அவளை விக்ராந்த் ரூம்க்கு அனுப்பனும்” அன்னலட்சுமி சொல்ல, அத்தனை நேரம் இருந்த நிம்மதி கலைந்து, பயமும் பதற்றமும் வந்து தொற்றிக் கொண்டது நித்திலாவிற்க்கு….
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


நித்திலா தனியா மாட்ட போறா … போச்சு இனி விக்ராந்த் என்ன சொல்ல போறானோ …
Thanks for your comments ma 😍😍
அசட்டு துணிச்சல் கொண்ட ஒருவனுக்கும் அன்பிற்கு அடிபணியும் ஒருத்திக்கும் திருமணம் இனிதே நடந்து முடிந்தது.
சடங்குகள் செய்ய விருப்பம் இல்லாபோதிலும் தந்தை சொல்லும் வார்த்தைக்காக கேட்கின்றானே பரவாயில்லை.
அனைவரும் நட்புணர்வுடனும், அன்புடனும் பழகுகையில் அன்னலட்சுமி மட்டும் அதிகாரம் அலட்சியம் காட்டுகிறார்.
தனியே சந்திக்கையில் என்ன சொல்ல போகின்றானோ விக்ராந்த் பொருத்திருந்து பார்ப்போம்.