
நதி 4
இன்று
காவல் நிலையத்தின் முன் காவல் உடையின்றி வெள்ளை நிற சட்டையும் காக்கி நிற பேண்டும் அணிந்தபடி நின்றிருந்தான் தீரேந்திரன்.
“சார் சார்..!”
“சொல்லுங்க கஜேந்திரன், என்ன விசயம்”
“அந்தப் பையன் செல்லுலையே தற்கொலை பண்ணிக்க முயற்சி பண்ணுறனாம் சார்” கஜேந்திரன் சொன்னார்.
“எந்தப் பையனை சொல்றீங்க கஜேந்திரன்”
“அதான் சார் அந்தப் பொண்ணு அகரநதி ரேப் கேஸ்” எனத் தீராவின் செவிகளில் கேட்ட நொடியில் தீவிரமானான்.
“இப்போ யாரை பத்தி பேசிட்டு இருக்கீங்க கார்த்தியா.?” மேலும் தீவிரமாய்க் கேட்டான் தீரா.
“ஆமா சார், இந்தக் கேஸ் இப்போ நம்ம கன்ட்ரோல்ல இல்லை, இருந்தாலும் உங்களுக்குத் தெரியபடுத்தணும் தோணுச்சு சார்” கஜேந்திரன் சொல்லி விட்டு நகர்ந்து விட, சில மணி நேரங்களில் சிறப்பு அனுமதி வாங்கி, கார்த்தியின் முன் அமரந்திருந்தான் தீரா.
“சொல்லு கார்த்தி, எவ்ளோ நேரம் அமைதியா இருப்ப, நீ தற்கொலைக்கு முயற்சி செய்ய என்ன காரணம்.?” அவன் கண்களைப் பார்த்து கேட்டான் தீரா, கார்த்தியின் கருவிழிகள் எந்தச் சலனமும் இல்லாமல் பதில் சொல்ல தயாரானதை உறுதி படுத்திக்கொண்டான்.
“எனக்கு நீங்க தண்டனை இன்னும் கொடுக்கலையே அதான், நானே கொடுத்துக்கலாம்ன்னு” அவன் இடைநிறுத்த,
“உனக்குத் தான் தண்டனை கொடுத்து ஜெயில்ல போட்டுருக்காங்களே, அப்பறம் என்னடா உனக்கு வேணும்.?” கார்த்தியின் தாடையை உயர்த்தித் தீரா கேட்டான்.
“நீங்க கொடுத்த இரண்டு வருசம் சிறை தண்டைனையா.? வெளிய வந்ததும் இன்னொரு பொண்ணோட வாழ்க்கையைச் சிதைப்பேன், மறுபடியும் இரண்டு வருசம் தண்டனை கொடுப்பீங்க, இது தொடர்ந்துகிட்டே இருக்கும் தீரேந்திரன் நிக்காது” கண்கள் சிவக்க அவன் பேசினான், அவன் விழிகள் எதையோ மறைப்பதை நன்கு உணர்ந்தான் தீரா
“நீ போய்ச் சொல்ற கார்த்தி” எனத் தீரா சொன்ன ஒற்றை வாக்கியத்தில் பதிலளிக்க முடியாமல் தவித்துப் போனான் கார்த்தி.
“அகரநதி.!” என்ற பெயரை தீரா உச்சரிக்க, சில நொடிகளில் பித்தாகி கதறிய கார்த்தியை பார்த்து மிரண்டு போனான் தீரா.
“அவ பேரை என்கிட்ட சொல்லாதீங்க நோ” எனக் கதறியவன் தீராவின் துப்பாக்கியை எடுத்து தன் நெற்றி பொட்டில் வைத்துக்கொண்டான் கார்த்தி,
“ஹே கார்த்தி நோ..!”
“கிட்ட வராதீங்க சார் துப்பாக்கியை அழுத்திருவேன்” என அவன் அலற,
“கார்த்தி சொன்ன கேளு, ரிஸ்க் எடுக்காத, அகரநதி கண் முழிச்சிட்டா இந்தக் கேஸ் மாறும், என்னை நம்பு, என்ன நடந்துச்சு உண்மையைச் சொல்லு” எனத் தீரா கேட்க,
“அதி சாரிடி..!” என உரக்க கத்தியபடி டிரிக்கரை படபடவென அழுத்த, துப்பாக்கி முனையில் தோட்டா வராததைப் பார்த்து ஏமாந்து போனவன்,
“நோ..!” என மீண்டும் அலற,
“கார்த்தி ரிலாக்ஸ், அதுல புல்லட்ஸ் லோட் பண்ணலை” எனப் பேசியபடி துப்பாக்கியை தன் கையில் வாங்கியவன், கார்த்தியின் விழிகளை ஆராய்ந்தான் அமைதியற்று, இருந்த அவனின் விழிகளே எதோ ஒன்றை நிச்சயமாக மறைப்பதை உறுதி செய்துக்கொண்டான் தீரா.
“கார்த்தி நீ எதோ தப்பு பண்ணிட்ட, குற்ற உணர்ச்சியா ஃபீல் பண்ணுற எல்லாமே ஓகே, அதை இங்க நீ சரி பண்ணிக்கலாமே, எதுக்காகச் சாகணும்னு நினைக்குற.?” கேள்வியாய் அவன் முகம் பார்க்க, உணர்வுகள் துடைக்கபட்ட முகத்துடன் அமர்ந்திருந்தான் கார்த்தி.
அதே சமயம் தீரேந்திரன் கைப்பேசி இசைந்து தன் இருப்பைக் காட்ட, அழைப்பை ஏற்றான் காவலன் தீரா.
“சொல்லுங்க தீரேந்திரன் தான் பேசுறேன்”
“சார் நான் தர்மா பேசுறேன், கார்த்தியோட அப்பா” எனச் சொன்னவுடன் கார்த்தியை விட்டு விலகி சென்று மெதுவாகப் பேசினான்.
“ம்ம் சொல்லுங்க சார், என்ன விசயமா பேசணும்”
“உங்களை நேர்ல பார்த்து பேசணும் சார்” என அவர் பதில் தர,
“ஸ்டேசன் வாங்க பேசிக்கலாம்” எனத் தீரா பதிலுறைத்தான்.
“சார் தப்ப எடுத்துகாதீங்க, வேற எதாவது இடத்துல பார்த்து பேசலாமா, போலீஸ் யூனிஃபார்ம் இல்லாம” என அவர் சொல்ல,
“இப்ப நீங்க எங்க இருக்கீங்க” தீரன் கேட்டான்.
“சார் நான் தாம்பரத்துல இருக்கேன்”
“சரி தாம்பரம் பஸ் ஸ்டாண்ட் வந்திருங்க” எனச் சொன்ன தீரா அழைப்பை துண்டித்து விட,
கார்த்தியின் தற்கொலை எண்ணத்தை மாற்ற, அவனுக்காக ஒரு மனநல மருத்துவரை நியமித்துவிட்டு, தாம்பரம் வந்திருந்தான் தீரா.
“சொல்லுங்க தர்மா என்ன சொல்லணும், ஆமா என்னோட நம்பர் உங்களுக்கு யார் கொடுத்தது” டீயை ஒரு மிடறு மடறியபடி கேட்டான் தீரா.
“கஜேந்திரன் சார்கிட்ட வாங்கினேன் சார்”
“உடனே கொடுத்துட்டாரா.?”
“இல்லை ஐநூறு வாங்கிட்டு கொடுத்தாரு சார்”
“சரி வந்த விசயத்தை சொல்லுங்க”
“எனக்குக் கார்த்தி இதைப் பண்ணலைன்னு தோணுது சார்”
“அப்படினா கோர்ட்ல கேஸ் போடுங்க சார், என்கிட்ட எதுக்கு சார் கேக்குறீங்க” எனப் பதில் கொடுத்தான் தீரா.
“சார் எனக்குக் கோர்ட் கேஸ்ன்னு அலைய முடியாது சார், நாங்களே அன்னாடங்காட்சி, ஆட்டோ ஓட்டினா தான் ஒரு நேரம் வயித்தக் கழுவ முடியும்” என அவர் சொல்ல,
“உங்க பையனே குற்றத்தை ஒத்துக்கிட்டு தண்டைனையும் வாங்கிகிட்டான் சார், நேர்ல போய் விசாரிச்சாலும் பதில் சொல்ல மாட்றானே” எனக் கோபமாய்ப் பேசினான் தீரா.
“நீங்க ஏன் சார் அந்தப் பொண்ண விசாரிக்கக் கூடாது, ஏன் சொல்றேன்னா, இரண்டு பேரும் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ், இந்த மாதிரி நடக்க வாய்ப்பே இல்லை சார்” எனப் பேசியவரின் கண்களில் நீர் வழிய,
“சார் இப்போ என்னால எதுவும் பண்ண முடியாது, ஆதாரம் இல்லாம கேஸை ரீஓப்பன் செய்ய முடியாது சார்” எனத் தீரா சொல்ல,
“உங்களுக்கு ஒரு தம்பி இருந்து, அவன் செய்யாத குற்றத்துக்குப் போய் ஜெயில்ல உட்கார்ந்துகிட்ட இப்படித் தான் பேசுவிங்களா சார்.?” என அவர் சொல்ல எதுவும் பேசாமல் தன் புல்லட்டை எடுத்துக்கொண்டு கிளம்பிய தீராவின் விழிகளிலும் கண்ணீரின் சாயல்.
அவனின் இந்தக் கண்ணீருக்கு காராணமானவன் சத்தியன், தீராவின் தம்பி, புற்று நோயால் அவதிபட்டு இறந்து போனான், தம்பியை காப்பாற்ற முடியாமல் போன குற்ற உணர்ச்சி அவனுள் இன்னும் இருந்தது.தர்மா சொன்ன வார்த்தைகள், அவனின் ஆழ்மனதில் தேங்கி கிடந்த சத்தியனின் நினைவுகளைக் கொண்டு வர, அந்த நினைவில் இருந்து வெளியே வர போராடியபடி தன் புல்லட்டில் பயணித்துக்கொண்டிருந்தான் தீரா.
அப்போது தான் அந்த முடிவையும் எடுத்தான் தீரா, இந்தக் குற்றத்திற்குப் பின்னால் இருக்கும் உண்மையைக் கண்டறிய வேண்டும் என்பதை,
கார்த்தியை பார்த்தால் எப்போதும் அவன் குற்றவாளியாய் நினைக்கவில்லை, யாரை காப்பாற்ற இவன் பொய் சொல்கிறான், என்ற கேள்வி மீண்டும் மீண்டும் எழ, அது அவனை அந்த நதியிடமே இழுத்துச் சென்றது, அவனுடைய நதி, அகரநதி.
அவள் கண் விழித்து என்ன நடந்தது என்று சொன்னால் தான், அனைத்து குழப்பங்களும் தெளிவாகும், என மனதில் முடிவு செய்தவன் அகரநதியின் வீட்டின் வாயிலில் நின்றிருந்தான்.
அணிந்திருந்த ஷூவை கழற்றி விட்டு வாயில் கதவை தட்டிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான், வீட்டின் வரவேற்பரையில் யாரும் இல்லாததை உறுதி செய்தவன்.
“யாரவது இருக்கிங்களா.?” எனக் குரல் கொடுக்க, அடுக்களையில் இருந்து கோபாலன் வெளியே வந்தார்.
“நான் அகரநதியை பார்க்கணும், எங்க அவங்க” எனக் கேட்க,
“ரூம்ல இருக்கா, அவளோட அம்மா அவளுக்கு ட்ரெஸ் மாத்தி விடுறாங்க சார், நீங்க எதுக்கு சார் இங்க வந்தீங்க.? கேஸ் தான் முடிஞ்சிருச்சே” எனக் கோபாலன் பேசிக்கொண்டிருந்த போதே வசந்தி அங்கு வந்திருந்தார்.
“சார் என் பொண்ணு கோமா ஸ்டேஜ்ல இருக்கா அவளை ஏன் தொந்தரவு பண்ணுறீங்க, ப்ளீஸ் சார், அவளை விட்டுருங்க” என வசந்தி சொல்ல,
“அவளை விட்றாத தீரா, போ அவளைப் போய்ப் பாரு” என அவன் ஆழ்மனதில் எதோ குரல் கேட்க, தாமதிக்காமல் அவளறைக்குள் புகுந்திருந்தான் தீரா.
முதலில் அவளைப் பார்த்தான், அவனுக்குப் பார்க்க அவள் உறங்கிகொண்டிருப்பது போல் தான் தோன்றியது, அவளின் மூடிய விழிகள், எங்கோ பார்த்த நினைவு அவன் மூளையை உரசி செல்ல,
அவளுடைய பொருள்களை ஆராய ஆரம்பித்தான்.
அவளின் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அலமாரியில் கேஸ்க்குச் சம்பந்தபட்ட எதாவது கிடைக்குமா எனத் தேடிக்கொண்டிருந்த போதே,
“இதெல்லாம் அத்துமீறல் சார், போலீஸ்னா என்ன வேணும்னாலும் பண்ணலாமா” எனத் திட்டினார் கோபாலன்.
“இங்க பாருங்க கோபாலன், உண்மையான குற்றவாளி யாருன்னு கண்டுபிடிக்க வேண்டாமா.? கார்த்தி யாரையோ காப்பத்த முயற்சிக்குறேன், இப்ப சொல்லுங்க, நான் எதையும் இங்க தேடக் கூடாதா.?” இதைக் கேட்டவுடன் கோபாலன் தீராவை தடுக்கவில்லை, கோபாலனுக்கும் உண்மையான குற்றவாளியை தெரிந்துக்கொள்ள வேண்டும்,அதனால் தீராவை எதுவும் கேட்காமல் விலகி நின்றார்.
“வசந்தி சார்க்கு ஹெல்ப் பண்ணு போ” எனத் தன் மனைவியை அழைத்தார்.
“உங்க பொண்ணோட செல்போன் எடுத்து கொடுங்க” எனத் தீரா கேட்க, உடனே எடுத்துக்கொடுத்தார் வசந்தி.
“உங்க பொண்ணோட க்ளோஸ் ப்ரெண்டஸ் யாரு.?”
“கார்த்தி, மலர்விழி,நிஹாரிகா”
“வீட்ல சும்மா இருக்கும் போது உங்க பொண்ணு என்ன பண்ணுவாங்க.?”
“அவளுக்கு டைரி எழுதுற பழக்கம் இருக்கு, அந்த டைரிய தான் எப்போதும் தூக்கிட்டு அலையுவா, அத எழுதும் போது கதவை லாக் பண்ணிப்பா” வசந்தி சொல்ல,
“அந்த டைரி எனக்கு வேணும்” தீரா கேட்டான்.
“எங்க வச்சிருக்கான்னு தெரியலை சார்”
“ஓகே., கிடைச்சா போன் பண்ணுங்க. அப்பறம் கேஸ் அஃப்ஷியலா ஓப்பன் பண்ணலை நான் வந்து விசாரிச்சிட்டு போறதை யாரிடமும் தெரியப்படுத்த வேண்டாம். இது தான் என்னோட நம்பர் ” என அவன் கைப்பேசி எண்ணை கொடுத்துவிட்டு விறுவிறுவென விரைந்து சென்றான் தீரா.
விடையறியா கேள்விக்கு விடையறியும் நோக்கில், அவன் செய்யும் செயல்கள் அவனுக்கு வாகை சூடுமா, குழப்பம் ஒரு பக்கம், இந்த வழக்கை சரியாக விசாரிக்காமல் விட்டுவிட்டோமோ என்ற குற்ற உணர்வு அவனை வாட்டி வதைத்தது, குற்றத்தை ஒப்புக்கொண்டான் என்ற ஓரே காரணத்திற்காக விசாரிக்காமல் விட்டது தவறாகிவிட்டதே, தான் செய்த தவறை தானே சரி செய்ய வேண்டும் என்ற முனைப்பும் அவனிடம் இருக்கத் தான் செய்தது. அதை விட அகரநதியை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் அவனுக்குள் ஏற்படும் உணர்வு தான் என்ன? என்ற தேடலில் அவன்.
தீரா தேடலில் நீ..!
நதியாய் நான்..!
கடல் சேரும் முன்
மீட்பாயா தீரா..!
தீராநதியாவோமா..?
உன் நதியாய் நான்..!
தீராநதி..!
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


தவறை செய்துவிட்டதாக அல்லாமல் தவறு நடைபெற தானே காரணம் ஆனதை போல் ஏதோ ஒரு குற்றவுணர்வு கார்த்தியிடம். தனக்கு அளிக்கப்பட்ட தண்டனை போதாமல் தன்னையே மாய்த்து கொள்ள துடிக்கும் ஒருவனாக.
கார்த்தியின் நடவடிக்கையினில் அவன் எதையோ மறைப்பதாக எழுந்த சந்தேகம், அவனது தந்தையின் பேச்சினில் மீண்டும் கிளர்ந்த தம்பி சார்ந்த ஆழ்மன குற்றவுணர்வு, அகரநதி மீது எழும் இனம் புரியாதொரு ஈர்ப்பு என எல்லாம் சேர்ந்து இந்த வழக்கினில் அவனை தீவிரமாக இறங்கவைக்கிறது.
அகரநதி மீதான தனது எண்ணத்திற்கு பெயர் மற்றும் வழக்கை சரியாக விசாரிக்க வேண்டி விடையறியா வினாவிற்கு விடை தேட விழையும் ஒருவனாக தீரேந்திரன் .
விறுவிறுன்னு போகுது கதை … அடுத்து என்ன நடக்கும்னு தெரிஞ்சுக்க ஆவலா இருக்கு … அந்த உண்மையை தெரிஞ்சுக்க வெயிட் பண்ணி தான ஆகணும்… 👏🏻👏🏻👏🏻👏🏻