Loading

      இருள் கவ்விய அந்த நள்ளிரவு வேளையில் ஆஜான பாகுவான ஒரு உருவம், கரிய மைப்பூசிய தேகத்தோடு, மோகினி பள்ளத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது.

   அந்த உருவத்தின் உதடுகள் விடாது மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருக்க, கழுத்தில் மண்டை ஓடுகளால் ஆன மாலையும், வலது கையில் இருக்கும் கம்பின் கைப்பிடியில் மண்டை ஓட்டையும் தாங்கி நடந்து வந்து கொண்டிருந்தது.

  அதன் இடது கையில் வைத்திருந்த குடுவைக்குள், மூலிகையால் ஆன ரத்த நிற திரவத்தை வைத்திருந்தது.

    குருந்த மரத்தை வெறித்து கொண்டே பள்ளத்தை சுற்றியுள்ள அதன் வேரினை நோக்கி, தான் கொண்டு வந்த திரவத்தினை அது ஊற்ற முயன்ற போது, ஒரு அம்பு பறந்து வந்து அக்குடுவையை துளைத்து எடுத்து சென்று, தூர எரிந்தது.

   கணப்பொழுதில் ஏற்பட்ட இந்த நிகழ்வை சுதாரித்துக் கொண்டு, அவ்வுருவம் அம்பு வந்த திசையை நோக்கி தனது கண்களை திருப்ப, அங்கு வானில் இருந்த நிலவு மகள் கீழே இறங்கி வந்ததை போல, ஜொலிப்புடன் அலங்கார ரூபிணியாக கழுத்தினில் பொன்மஞ்சள் கயிறு மின்ன, நீல நயனங்களில் அனல் தெறிக்க  நின்றிருந்தாள், இந்த ஊர் மக்களின் குலதேவி அவள்.

       “அடியே காட்டுப் பிச்சி, நீ எவ்வளவு முயன்றாலும், எனது மகள் உயிர்த்தெழுவதை உன்னால் தடுக்க முடியாது.

    நிச்சயம் அவள் காதலனுடன் இந்த ஜென்மத்திலாவது, நான் அவளது காதலை சேர்த்து வைப்பேன்.

   அவர்கள் இணையப் போவது உறுதி, இது நான் வணங்கும் அந்தக் காலக்கோடனின் மீது ஆணை.”

  “முட்டாளே விதியை யாராலும் மாற்ற முடியாது, எமது அன்னை கொற்றவையும், இவ்வூர் காவல் தெய்வம் நாச்சியம்மனின் அருளும் உள்ளவரை, உன் மகள் உயிர்த்தெழ நான் விட மாட்டேன்.

    அவள் சாபத்திற்குரியவள், தன் சுயநலத்திற்காக ஒரு ஊரையே அழிக்கத் துணிந்தவள். “

      “போதும் நிறுத்து, அவள் அப்படி செய்ததற்கு காரணமானவளே நீ தான், உன்னால் தான் என் மகள் வாழ்க்கையை இழந்து, இப்படி சாபம் பெற்று நிற்கிறாள்.”

     “ஹா ஹா… அப்படியா, நானா உன் மகளுக்கு துர்ப்போதனைகளை அளித்தேன்? நானா உன் மகளை தீய சக்திகளின் வழியில் திசை திருப்பினேன்?

     ஒரு தந்தையாக உன் கடமையிலிருந்து நீ தவறி விட்டாய், பூ மணம் வீச வேண்டிய பிஞ்சு நெஞ்சில், கொடும் நஞ்சை கலந்து விட்டவன் நீ.

     அது வளர்ந்து ஊருக்கு கெடுதல் செய்ய நினைத்தால், அதை வெட்டி தான் வீச வேண்டும்.

    அகிலம் ஆளும் அன்னையவள், திருந்துவதற்குகான வாய்ப்பினை இவளுக்கு அளித்தாள். ஆனால் இவள் தான் காலக்கோடனின் பிடியில் முழுதாக ராட்சசியாக மாறிவிட்டாளே, விதி பயன் யாரை விட்டது. “

   “வாயை மூடு, என் மகள் ராட்சச உலகின் சக்கரவர்த்தினி. “

    “அப்படி என்றால் இந்த ஜென்மத்திலும் நீ திருந்துவதாக இல்லை அப்படித்தானே? இம்முறையும் என் மன்னவரது கைகளில் உள்ள வாளால் தான், உனக்கு மோட்சம்கிட்ட போகின்றது.”

    “ஹா ஹா ஹா அந்த வாள் அவன் கைகளில் கிடைத்தால் தானே இது சாத்தியம், அது எப்போதும் நிகழப்போவதே இல்லை.

    இந்த ஜென்மத்தில் உன் கண்களின் முன்னே தான், அவன் என் மகளின் ஆன்மாவை தாங்கிய உடற்கூடுடன் வாழ போகிறான். இதுதான் நடக்கும், நடத்திக் காட்டுகிறேன் பாரடி.”

   ” நீ என்ன முயன்றாலும் தெய்வ சக்திக்கு முன், தீய சக்தி என்றுமே ஜெயிக்காது.

   இயற்கை அன்னை கொற்றவையின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. உன்னை போன்ற விஷச் செடிகளை, களை எடுக்க வீறு கொண்டு வருவாள் எம் அன்னை.”

     “அதையும் பார்க்கலாம், ஜெயிக்க போவது எமது தெய்வம் காலக்கோடனா, இல்லை அந்த கொற்றவையா என்று.”

   இவ்வாறு கூறியபடியே அக்கரிய உருவம் அங்கிருந்து சென்று விட்டது. குலதேவி அவள் காட்டினை நோக்கி கை கூப்பி நிற்கிறாள்.

     “தாயே எப்போதும் போல இம்முறையும் எனக்கு உறுதுணையாக  இருக்க வேண்டும்.”

     வேந்தன் கூறியபடி அன்யூனிபார்மில், மூர்த்தியின் அச்சு ஆபீசுக்கு, சாதாரணமாக வருவது போல் வந்து சேர்ந்தான் தீபன்.

    “என்னடா இந்த வேந்தனை இன்னும் காணோம், இவன் பார்க்கணும்னு சொன்னதால தானே, டியூட்டி டைம்னு கூட பாக்காம வந்து, இங்க உட்கார்ந்திருக்கேன்.

  ப்ச்சு, போன் பண்ணாலும் எடுக்க மாட்டேங்கறான் என்ன தான் பண்றது.

   டேய் நான் இங்க புலம்பிக்கிட்டு இருக்கேன் நீ என்னடா அங்க போன்ல நோண்டிட்டு இருக்கே.”

  “ப்ச்சு,என்னடா  இப்ப உம்பிரச்சனை, இதே கேள்வியை எத்தனை தடவை தான் என்கிட்ட கேட்ப?

அவ எனக்கு மட்டும் என்ன, ஸ்பெஷல் இன்ஃபர்மேஷனா கொடுத்துட்டு இருக்கான்?

   அவன் தங்கச்சிக்காக மட்டும் எத்தனை நேரம் காத்திருக்க? உன் மச்சானுக்காகவும் கொஞ்ச நேரம் காத்திரு.

    அடேய்யப்பா இப்படி மூஞ்சியை வச்சுக்கிட்டா நாங்க நம்பிருவோமா? நீ பதினோரு வயசிலேயே அந்த கவிப்புள்ளகிட்ட என்ன கட்டிக்கிறியான்னு கேட்கும் போது, கூட நின்னவன்டா நான். உன்ன பத்தி எனக்கு தெரியாது.”

அதன் பிறகு எங்கே தீபன் பேசுவது, வேந்தனுக்கு போனில் அழைப்புவிடுவதை திரும்பவும் ஆரம்பித்தான்.
  
    சிறிது நேரத்திற்கு முன் வேந்தன் மூர்த்தியின் அச்சு ஆபிசை நோக்கி வந்து கொண்டிருக்கும்போது, தனக்கு முன்னால் தீபன் சென்று கொண்டிருப்பதை கண்டான்.

    அவனை கூப்பிட முனையும்போது, அவனுக்கு பின்னால் இரண்டு  இருசக்கர வாகனத்தில், இருவர் தீபனை பின் தொடர்வது போல் தோன்றியது.

   வேந்தனும் தனது காரில் சிறிது இடைவெளி விட்டு அவர்களை கண்காணிக்க தொடங்கினான்.

   மூர்த்தியின் ஆபீசை நெருங்கியதும், தீபன் இறங்கி உள்ளே சென்றதை உறுதி செய்து கொண்டு,  இரு சக்கர வாகனத்தில் வந்த ஆசாமிகள் சற்று இடைவெளிவிட்டு மறைவான ஒரு இடத்தில் நின்று கொண்டனர் .

  வேந்தனுக்கு தீபன் பிறரால் பின் தொடரப்படுகின்றானோ, என்ற சந்தேகம்  ஊர்ஜிதமானது. அவனும் அந்த ஆசாமிகளுக்கு தெரியா வண்ணம், மறைவாக இருந்து, அவர்களை கவனிக்க தொடங்கினான்.

     சிறிது நேரத்தில் அவர்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வரவே, ஒருவன் மட்டும் அங்கிருந்த பைக்கில் அவசரமாக கிளம்பினான்.

    உடனே வேந்தனும் அவனை பின் தொடர்ந்து சென்றான்.

    அந்த ஆசாமி இருசக்கர வாகனத்தில் சென்றதால், சந்து பொந்துகளில் நுழைந்தும், நடைபாதையின் மீது ஏறியும், சிக்னலில் நிக்காமலும் சென்று கொண்டிருந்தான்.

     வேந்தன் காரில் பயணித்ததால் அவனை பின் தொடர்ந்து செல்ல, சற்று கடினமாக இருந்தது.

  இதனிடையே தீபனின் தொலைபேசி அழைப்பு வேறு, அவனுக்கு வந்து கொண்டே இருந்தது.

       “பக்கிப்பைய எப்படி போறான் பாரு, ஒரு சிக்னல்ல கூட நிக்கல, அங்க பாரு எப்படி நடப்பாத மேல ஏறி போறான் பாரு.

     ஏற்கனவே ஒரு சிக்னல்ல மிஸ் பண்ணி புடிக்கிறதுக்குள்ளேயே, ஒரு வழி ஆயிட்டேன். அடுத்த சிக்னல் வேற போட்டுட்டான், எப்படி அவனை பிடிப்பேன்னு தெரியவில்லையே? சிக்னல் வேற விழ மாட்டேங்குது, இதுல இவன் வேற நொய் நொய்னு கால் பண்ணிட்டு இருக்கான்.”

   வேந்தன் சிக்னலில் நிற்கும் போது அந்த பைக்காரன், ஒரு பாதையில் நுழைவதை கண்டான்.

  சிக்னல் விழுந்ததும் வேகமாக அதே வழியில் சென்று தேட முற்பட்டான், அவசரத்தில் அது ஒரு வழிப்பாதை என்பதை கவனிக்க தவறினான்.

தீபனிடமிருந்து அழைப்பு வந்து கொண்டே இருந்ததால், அதனை எடுக்க முற்பட்டான்,  அப்போது எதிரில் ஒரு டூவீலர் வந்ததை கவனித்து, சற்று தூரத்திற்கு முன்பே சடனாக பிரேக் போட்டு வண்டியை நிறுத்தி விட்டான்.

    ஆனால் டூவீலரானது நேராக வந்து, பலமாக காரின் முன்பக்கத்தின் மீது  மோதி நின்றது.

  அந்த டூவீலரை ஓட்டி வந்த மது ஒரு பக்கம் சரிந்து விழுந்து கிடந்தாள்.

        மதுரயாழினி தற்போது தான், தனது தோழி வினுவின் ஸ்கூட்டியில் வண்டி ஓட்ட கற்றுக் கொண்டிருக்கிறாள்.  

    இது ஒரு வழிப்பாதை என்பதாலும், இந்த வழியில் போக்குவரத்து அதிகம் இல்லாத காரணத்தாலும், இந்த பாதையில் மட்டும் வினுவின் ஸ்கூட்டியை, சில நாட்களாக தான் ஓட்டிப் பார்த்து கொண்டிருக்கிறாள். அப்படி இருக்க, திடீரென்று எதிரே வந்த வாகனத்தால், சற்று மிரண்டு தான் போனாள் மது.

  அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை மறந்து, அது நின்று விட்டதை கூட உணராமல் நேராக சென்று, நின்று கொண்டிருந்த காரின் மீது மோதினாள்.

   ஸ்கூட்டி காருடன் மோதுவதற்கு முந்தைய நிமிட இடைவேளையில், வண்டியிலிருந்து எதிர்ப்புறம் குதித்து விட்டாள்.

    மது விழுந்ததை தூரத்திலிருந்து பார்த்த வினு பதறிக் கொண்டு ஓடி வர, கைகளில் உண்டான சாருக்காயத்தின் வலியாலும், எங்கே இது பெற்றோருக்கு தெரிந்து விடுமோ என்ற பயத்திலும், கோபமாக வேந்தனை நோக்கி வந்தாள் மது.

      “யோவ் கண்ணு என்ன பொடனீலயா வச்சிருக்கே? கார் ஓட்டுனா கண்ணு மண்ணு தெரியாதா உனக்கு.

   இது என்ன உங்க அப்பன் வீட்டு ரோடுன்னு நெனச்சியா இல்ல, கவர்மெண்ட் உனக்கு இந்த ரோட்டை பட்டா போட்டு கொடுத்துட்டாங்களா?

       அதான் கொட்ட எழுத்துல நோ என்ட்ரி போர்டு வச்சிருக்காங்களே கண்ணு தெரியல?”

    முதலில் அவள் கோப விழி பேசும் மொழிதனில், தன்னை தொலைத்துக் கொண்டிருந்தவன், அவள் இதழ் பேசும் மொழிதனில் நிதர்சனத்திற்கு வந்தான்.

      “அடிங்க ஏ அர டிக்கெட்டு, நின்னுட்டு இருக்க வண்டி மேல, நீ வந்து மோதிட்டு,  என்னையவா கொற சொல்ற?

   ஏதோ தவறுதலா ஒன்வேல வந்துட்டேன்னு, அமைதியா போனா ஓவராவா பேசுற?

     உன்ன சொல்லி குத்தமில்ல, கால் கூட எட்டாத உன்கிட்ட போய் வண்டிய கொடுத்து அனுப்பி இருக்க, உங்க அப்பன சொல்லணும்.”

   அவ்வளவு தான் நம்ம மதுரயாழினி மகாகாளி அவதாரம் எடுத்துட்டா.

   வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு கிளம்பியவளை, வினு அமைதி படுத்த முற்பட்டாள்.

   “விடுடி என்ன, அந்த மலை குரங்க ஒரு வழி பண்ணாம விட மாட்டேன், எவ்வளவு திமிர் இருந்தா இப்படி பேசுவான்.”

  இவர்களின் நேரமோ என்னவோ, ரவுண்ட்சில் இருந்த போலீசார், அங்கு வந்து சேர்ந்தனர்.

  “என்னம்மா பிரச்சனை இங்க, ஓ…ஆக்சிடன்ட்டா. ரெண்டு பேரும் சாவிய குடுங்க மொத. ம்ம்ம் எங்க பின்னாடியே ஸ்டேஷனுக்கு வந்து சேருங்க.”

  பிடுங்காத குறையாக இருவரின் வண்டி சாவியும் அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டது.

     இவர்கள் என்ன கூறியும் கேளாமல் போலீசார் இரு வண்டிகளையும் ஸ்டேஷனுக்கு எடுத்துச் செல்ல முனைந்தனர்.

    மதுவிற்கு தான் அதிக வருத்தம், தன்னால் தனது தோழியின் வாகனம் சேதமடைந்ததோடு, அவளையும் ஸ்டேஷனுக்கு வரவழைத்து விட்டோமே என்று கண்களில் கண்ணீர் நிரம்பி விட்டது.

  ஏனோ இதைக் கண்ட வேந்தனுக்கு மனது பொறுக்கவில்லை.

  அவள் விழி நீரினை துடைத்து, தன் நெஞ்சினில் அவள் முகந்தனை தாங்கி, ஆறுதல் படுத்த நினைத்த தனது மனதை, எண்ணி வியப்பாக இருந்தது.

  அவள் பேசிய பேச்சுக்கு அவனுக்கு கோபம் தான் வர வேண்டும், ஆனால் ஏனோ அவள் விழிகளில் நீரைக் கண்டதும், இவன் உயிர்தனில் வலி தோன்றியது போன்று ஓர் உணர்வு.

     உடனே அவசரமாக அவன் போனிலிருந்து யாருக்கோ அழைப்பு விடுத்தான்.

   சிறிது நேரத்திலேயே அவர்களிடம் இருந்து வண்டி சாவியினை பறித்துச் சென்ற போலீசார் திரும்ப வந்தனர்.

“உங்கள பார்க்கவும் பாவமா தான் இருக்கு. பொம்பள பிள்ளைகளை ஸ்டேஷனுக்கு தனியா வர சொல்லவும் மனசு கேட்கல. சரி உங்க லைசென்ஸ் குடுங்க.”

        திடீரென்று லைசென்ஸ் பற்றி கேட்டதும் திருத்திருவென முழித்த மது, சட்டென சுதாரித்து வினுவின் கைப் பையில் இருந்து அவளின் லைசென்ஸ்சை எடுத்துக் கொடுத்தாள்.

  வினு கையில் ஹெல்மெட்டுடன் இருந்ததால், அவர்களும் வினு தான் வண்டியை ஓட்டி வந்ததாக எண்ணினர்.

   ஆனால் சிறிது நேரத்திலேயே அவள் விழிமொழிதனை கற்றுக் கொண்ட வேந்தனுக்கு, அவள் ஏதோ தில்லுமுல்லு செய்கிறாள் என்று தோன்றியது.

   “சரிம்மா இந்தாங்க சாவி. நாளைக்கு உங்க பேரன்ட்ஸ்சோட வந்து ஒரு  கம்ப்ளைன்ட் மட்டும் குடுத்திடுங்க, பயப்படாதீங்க ஒரு பார்மாலிட்டிக்கு தான்.

      வண்டி இன்சூர் பண்ணி இருக்கீங்களா? இப்போதைக்கு அதை வச்சு க்ளைம் பண்ணிக்கோங்க. இவர்கிட்ட அப்பறம் காம்பன்செட் வாங்கி தர்றோம்.”

    “அதெல்லாம் எதுவும் வேண்டாம் சார், எங்களை இத்தோட விட்டாலே போதும். யார் பணமும் எங்களுக்கு வேண்டாம்.”

   “அது உங்க இஷ்டம் தான், சரி நீங்க கிளம்புங்க.”

   போலீசார் வேந்தனை நோக்கிச் செல்ல, வினு ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்ய முயன்று கொண்டிருந்தாள்.

   வினுவின் ஸ்கூட்டிக்கு பெரிதாக ஒன்றும் பாதிப்பு இல்லை, முன்பக்க ஹேண்டில் சற்று வளைந்து இருந்தது அவ்வளவுதான்.

   வினுவின் ஸ்கூட்டி அவள் ஓட்டி பழகுவதற்காக செகண்ட்ஹண்டில் வாங்கியது தான்.

  ஓட்டுவதற்கு சுலபமாக இருந்ததால் இதையே இரண்டு வருடமாக உபயோகித்து வருகிறாள்

    மது சற்று தள்ளி நின்று கொண்டு வேந்தனை முறைத்துக் கொண்டிருந்தாள்

    வேந்தனும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான், இல்லை இல்லை அவளின் முறைப்பை ரசித்துக் கொண்டிருந்தான்.
 
     சரியாக அந்த நேரம் மூர்த்தியும் தீபனும் அங்கு வந்து சேர்ந்தனர்.

   அங்கிருந்த போலீசர்களிடம் நன்றி கூறி, அவர்களை அனுப்பிவிட்டு, வேந்தனின் முன்பு வந்து நின்றனர்.

   இவன் பார்வையையும் இவன் பார்வை போன திசையையும் நோக்கி விட்டு, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்

  “ஏண்டா தீபா நான் காண்றது என்ன கனவா இல்ல நெனவா ?, ஸ்ஸ்ஆஆஆ ஏண்டா கிள்ளுன?”

  “ம்ம்ம் நடக்கிறது நிஜமான்னு கன்ஃபார்ம் பண்ணிக்க தான்.”

             “அதுக்கு உன்னைய நீயே கிள்ளிக்கணும் பரதேசி, என்னை எதுக்கு டா கிள்ளுன?”

             “ஈஈஈஈஈஈ.”

             “தயவு செஞ்சு வாய மூடு டா, இப்படி நீ பல்ல காட்டி பயமுறுத்துறதுக்கு பதிலா இன்னும் ரெண்டு  கிள்ளுவேனா கிள்ளிக்கோ.

  டேய்…ஒரு பேச்சுக்கு சொன்னா திரும்பவுமா கிள்ள வர, தள்ளிப் போடா அங்குட்டு.

     காலேஜ்ல எத்தனை பொண்ணுங்க இவன் பின்னாடி சுத்துச்சு, ஒருத்தியை கூட மதிக்கலையே டா இவன்.

     நம்ம சுமதி சித்தி புள்ள நிரஞ்சனா கூட, இவன பார்க்கும்போதெல்லாம் அவ்வளவு ஆசையா வந்து பேச வருமே டா, அத இவன் திரும்பி கூட பார்த்ததில்லையே?

     ஆனா பாரு இந்த புள்ளைய வச்ச கண்ணு வாங்காம பாக்கறதை, நம்ம கேங்குலயே இவன் தானடா முரட்டு சிங்கிள்னு சொல்லிட்டு திரிஞ்சான்.”

    வேந்தனின் பார்வை தன்னை ஏதோ செய்ய வேந்தனிடமிருந்து தனது பார்வையை திருப்பிக் கொண்டாள் மது.

    இருந்தும் அவனது பார்வை தன்னைத் தொடர்வதை உணர்ந்து, கோபமாக அவனை நோக்கி திரும்பினால், கண்களாலேயே அவனை மிரட்டி முழியை நோண்டி விடுவேன் என்று செய்கையில் காட்டினாள்.

   அவன் அதற்கும் ம்ம்ம் என்ற ராகத்தோடு தலை சாய்த்து, புருவ வில்தனை உயர்த்தி, ரசனையான பாவனையில் அவளை நோக்கி விழிமொழிதனில் கதை பேசிட, இவள் தான் மறுபடியும் முகத்தை திருப்பிக் கொள்ள வேண்டி இருந்தது.

  இவன் குறுஞ்சிரிப்போடு நிமிர்ந்து பார்க்கையில் தான் கவனிக்கின்றான், அருகில் நின்று தன்னை அதிர்ந்து நோக்கும் தன் நண்பர்களை.

       “டேய் நீங்க எப்ப வந்தீங்க?”

       “நாங்க வந்து 30 வருஷம் ஆச்சு”

       “மச்சான் இப்ப எனக்கு டைம் இல்ல, நாளைக்கு ஞாபகப்படுத்து, மறக்காம சிரிக்கறேன்.”

       “எதே, கொழுப்ப பார்த்தியாடா அவனுக்கு.” 
      
       “நீ சொன்ன பதில் எனக்கே காண்டாச்சு, இன்னுமாடா இதெல்லாம் ஜோக்குன்னு சொல்லி சுத்திக்கிட்டு இருக்க.”

      இவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் போதே கண்ணாடி உடையும் சத்தம் கேட்டது.

    இவர்கள் ஒரு சேர அதிர்ந்து, திரும்பிப் பார்க்க, அங்கு வேந்தனின் ஜாக்குவார் காரில் உள்ள ஹெட்லைட் கண்ணாடி, மதுவின் கை பட்ட கல்லால் உடைந்து நொறுங்கியது.

    “இனி ஒரு தரம் என்கிட்ட இந்த மாதிரி நடந்துக்கிட்ட, அடுத்து உடையறது உன் தல தான்.”

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
6
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. இந்த அத்தியாயம் மிக அருமை … தொடக்கத்தில் வந்த அந்த போர்ஷன் ரொம்ப தத்ரூபமா இருந்தது … நிறைய சஸ்பென்ஸ் இருக்கும் போல … ஹீரோ ஹீரோயின் மீட்டிங் சூப்பர் … முன் ஜென்ம கதை பயங்கரமா இருக்கும் போல … எதிர்பார்ப்பை அதிகமாக்குது …

    1. Author

      நன்றி சிஸ். உங்களது எதிர்பார்ப்பை நிச்சயமாக பூர்த்தி செய்வேன்🙂🙂