Loading

அத்தியாயம் 15

 

உறங்கும் நேரம் வந்துவிட, தந்தை மற்றும் மாமனாரிடம் வளவளத்து விட்டு, அப்போது தான் அறைக்குள் நுழைந்தாள் ஜீவநந்தினி.

 

உறங்காமல் இருந்த உதயகீதனிடம் பார்வையாலேயே என்னவென்று வினவ, “உன் குழப்பத்தை இன்னும் தீர்க்கவே இல்லையே!” என்று அவன் கூற, “அடக்கடவுளே, பேசி பேசியே என்னை டையர்ட்டாகிடுவீங்க போல. எனக்கு இப்போ குழப்பமே இல்ல போதுமா?” என்று பின்வாங்கினாள் அவள்.

 

“வேண்டாம்மா. இப்போ இப்படி சொல்லுவ, அப்பறம் திடீர்னு சொல்லாம கொள்ளாம மூஞ்சியை தூக்குவ. அதுக்கு இன்னைக்கே பேசி முடிச்சுடலாம்.” என்று அவன் பிடிவாதம் பிடிக்க, சலிப்புடன் அவளும் அமர்ந்தாள்.

 

“ராகவர்ஷினி பத்தி… நாங்க லவ் பண்ணது…” என்று அவன் ஆரம்பிக்க, “ஹலோ முசோ, உங்க எக்ஸ்-லவரை எப்படி லவ் பண்ணீங்கன்னு சொல்ல தான் தூங்க வந்த என்னை பிடிச்சு வச்சுருக்கீங்களா?” என்று இடைவெட்டினாள் அவன் மனைவி.

 

அவளை முறைத்தவனோ, “ப்ச், முழுசா கேளு.” என்று அதட்டியவன், “மேரேஜ் முடிஞ்ச அன்னைக்கு நைட் ராகவர்ஷினி சூசைட் அட்டெம்ப்ட் பண்ணிட்டான்னு கால் வந்தது. சோ, அவளைப் பார்க்க தான் அன்னைக்கு ஹாஸ்பிடல் போனேன்.” என்று கூற, ராகவர்ஷினியின் தற்கொலை முயற்சி சிறு திடுக்கிடலை கொடுத்தாலும், அதைக் கூறினால், அவன் மனம் மீண்டும் வருந்துமோ என்ற எண்ணத்தில், “ஆக, ஃபர்ஸ்ட் நைட்டப்போ, பொண்டாட்டியை விட்டுட்டு எக்ஸ்-லவரை பார்க்க போயிருக்கீங்க?” என்று கேலி செய்தவளின் வாயிலேயே மெல்ல அடித்தவன், “இந்த வாய் சும்மாவே இருக்காதுல. நான் எவ்ளோ சீரியஸான விஷயம் சொல்லிட்டு இருக்கேன்? இதுல, உன் ஹ்யூமர் அவசியமா? நான் என்ன அவளை… ப்ச், வேற மாதிரி பேசிடப் போறேன்.” என்று படபடத்தான்.

 

அவனின் பதற்றம் அவளுக்கு சிரிப்பை தர, “ப்ச், விடுங்க முசோ… குற்றமுள்ள நெஞ்சு இப்படி தான் குறுகுறுக்கும். இல்லன்னா, இன்னமும் அவங்க பேரை உங்க மொபைல்ல அப்படி சேவ் பண்ணியிருப்பீங்களா?” என்று அவள் முதலில் கேலியாக ஆரம்பித்து, இறுதியில் அவள் மனக்குழப்பத்தின் ஆணிவேரை பற்றிக் கூறினாள்.

 

“அது… அதை அப்போ நான் பெருசா கண்டுக்கல ஜீவி.” என்று அவன் தயக்கத்துடனும், ‘என்னை நம்பேன்’ என்ற பார்வையுடனும் கூற, “எனக்கு தெரியாம வேற மொபைல்ல இப்படி சேவ் பண்ணா தான் தப்பு. யூ என்ஜாய்!” என்று ஆறுதல் சொல்வது போல, வேண்டுமென்றே அவனை வம்பிழுத்தாள்.

 

இம்முறை அவளின் காதை பற்றி திருகியவன், “இனிமே, ஓவரா பேசுன… பேசுன வாயை இழுத்து…” என்று இடைவெளி விட்டு அவளின் உதட்டை பார்க்க, அவன் பார்வையில் பதற்றம் கொண்ட பாவையின் விரல்கள் தாமாக உதட்டை மூடிக் கொண்டன.

 

“ஹ்ம்ம், அது… இதே போஸ்ல, நான் பேசி முடிக்கிற வரை இரு.” என்று நமுட்டுச் சிரிப்புடன் கூறியவன், மீண்டும் நடந்தவைகளை எல்லாம் சொன்னான்.

 

அவன் கூறியதில், ராகவர்ஷினியின் பிடிவாத குணமும், உதயகீதனை இழக்க முடியாத மனநிலையும் நன்றாகவே புரிந்தது ஜீவநந்தினிக்கு. அது பயத்தை அவள் மனதிற்குள் விதைத்தாலும், அதை பற்றி வெளியே சொல்லவில்லை அவள்.

 

“அவ ஜெர்மனி கிளம்புறாளாம். அதுக்கு முன்னாடி, இங்க அவளுக்கு தெரிஞ்சவங்க எல்லாரையும் ஒரு பார்ட்டிக்கு இன்வைட் பண்ணியிருக்காளாம். இந்த வீகெண்ட், அந்த பார்ட்டிக்கு நம்மளையும் இன்வைட் பண்ணியிருக்கா.” என்று தயக்கத்துடன் அவன் கூற, முதலில் அதற்கு செல்ல வேண்டுமா என்று அவளுக்கும் தயக்கம் இருந்தது.

 

‘ப்ச், அவங்களே எல்லாம் மறந்து ஜெர்மனி போகப் போறாங்க. அதுக்கு முன்னாடி, ஒரு பார்ட்டி தான? அதுக்கு அவரை மட்டுமில்லாம என்னையும் தான இன்வைட் பண்ணியிருக்காங்க.’ என்று எண்ணியவள், “அதுகென்ன, போலாமே!” என்று அவனிடமும் கூறினாள்.

 

அப்படி அவள் சொன்னபோதும் கூட, பலமுறை அவளுக்கு ஏதேனும் அசௌகரியமாக இருக்கிறதா என்பதை பல்வேறு விதமாக கேட்டு உறுதி செய்து கொண்டான்.

 

ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல், “ஹப்பா, எக்ஸ்-லவர் வைக்கிற பார்ட்டிக்கு சொல்லாம கொள்ளாம போய் என்ஜாய் பண்ணாம, இப்படி ஒய்ஃப் கிட்ட கேள்வி கேட்டு தொங்குற ஹஸ்பண்ட் நீங்களா தான் இருப்பீங்க.” என்று கேலியாக கூற, அவள் உதட்டை இரு விரல்களால் பிடித்து இழுத்தவன், “இப்போ தான சொன்னேன், இப்படி பேசாதன்னு…” என்று அவளருகே செல்ல, தேகத்தில் ஓடும் குருதி முழுக்க அவள் முகத்தில் பாயும் உணர்வில் திகைத்து போனவள், திடீரென்று, “முசோ…” என்று கத்த முடியாமல் வாயை மட்டும் அசைக்க, என்னவோ ஏதோ என்று பதறி அவளின் உதட்டை விட்டான்.

 

“என்னாச்சு ஜீவி?” என்று அவன் பதற்றத்துடன் கேட்க, “நானும் தான இப்போ சொன்னேன், உங்களுக்கு சிடுசிடுப்பு தான் செட்டாகுதுன்னு. இந்த ஃபீல்ல உங்களை பார்க்க முசுட்டு முசோ மாதிரியே இல்ல. வேற யாரோ மாதிரி இருக்கு. அதான், பேரை கூப்பிட்டு அதுக்கு நீங்க ரியாக்ட் பண்றீங்களான்னு செக் பண்ணிக்கிட்டேன்.” என்று கூறி, ஒரு செல்ல ஊடலுக்கான ஆரம்ப புள்ளியை வைக்க, அதில் அவனும் சிக்க, சில நிமிடங்கள் அவர்களின் ஊடலுக்கு சாட்சியாக இருவரும் ஒருவரையொருவர் துரத்தி ஓடினர்.

 

சில நொடிகளில், மூச்சு வாங்க அமர்ந்த உதயகீதனோ, “இந்த முசோவை விடவே மாட்டியா? நான் எவ்ளோ அழகா ஜீவின்னு கூப்பிடுறேன்?” என்று அவன் முகத்தை சுருக்க, “பேரெல்லாம் கேட்டு வாங்க கூடாது முசோ!” என்றாள் நாக்கை துருத்தியபடி.

 

அதில் அவன் முறைக்க, “சரி சரி… இப்போ என்ன பேரு தான… சுருக்கிட்டா போச்சு! உ…த…ய…கீ…த…ன்… உதய் எல்லாரும் கூப்பிடுறது. நானும் அப்படி கூப்பிட்டா நல்லா இருக்காது. கீதன்… கீதா… கீது… அட இந்த ரெண்டு பேரு அழகா இருக்குல?” என்று நமுட்டுச் சிரிப்பு சிரிக்க, மீண்டும் ஒரு சண்டை, இம்முறை கட்டிலிலேயே உருண்டு பிரண்டனர்.

 

“ஹையோ, மூச்சு வாங்குது, போதும் தயா…” என்று திணறியபடி அவள் கூற, “ஒரு பேருக்கு, எவ்ளோ அழிச்சாட்டியம் பண்ற? உன்னை எல்லாம் எப்படி தான் வாழ்நாள் முழுக்க சமாளிக்க போறேனோ!” என்று அவன் செல்லமாக சலித்துக் கொள்ள, அவன் மனைவியோ உதட்டை சுழித்தாள்.

 

*****

 

மறுநாள் முதலில் கண்விழித்தது உதயகீதன் தான். கண்முன் அவனின் மனையாள் அயர்ந்து உறங்குவதை கண்டவனின் இதழ்கள் காரணமின்றி புன்னகையில் விரிந்தன.

 

அவன் மனமோ, ‘அதுக்குள்ள இப்படி ஒரு மாற்றமா? அது எப்படி சாத்தியம்?’ என்று வினவ, ‘இவளோட இருந்தா எப்படி வேணும்னாலும் மாறலாம்.’ என்று பதில் கொடுத்தவன், கலைந்திருந்த அவளின் முடியை கோதினான்.

 

“ப்ச், டிஸ்டர்ப் பண்ணாதீங்க முசோ.” என்று முனகிவிட்டு, மறுபுறம் திரும்பி படுத்துக் கொண்டாள்.

 

“கும்பகர்ணி! நேத்து அவ்ளோ நேரம் தூங்கியும், இப்போ எப்படி தான் தூக்கம் வருதோ?” என்று அலுத்துக் கொண்டவனை அரைக்கண்ணை விரித்து பார்த்தவள், “சும்மா சும்மா என்னை சொல்லாதீங்க, நீங்க எங்க நேத்து என்னை தூங்க விட்டீங்க?” என்று வினவினாள்.

 

அதில் ஒருநொடி திகைத்து விட்டவன், “நானா? நான் உன்னை என்ன பண்ணேன்? அப்படி எதுவும் நடக்கலையே!” என்று அவன் யோசிக்க, கலகலத்து சிரித்த பெண்ணவளோ, “நீங்க அதுக்கு சரிபட்டு வர மாட்டீங்க முசோ!” என்று கேலி செய்தவள், “நேத்து உட்கார வச்சு கதை கேட்டு, கதை சொல்லின்னு பேசி பேசியே என்னை தூங்கி விடாம செஞ்சீங்களே, அதை சொன்னேன்.” என்றாள் சிரிப்புடன்.

 

“ஒரு நிமிஷம் என்னையே பதற வச்சுட்டேல! என்ன சொன்ன, நான் அதுக்கு சரிபட்டு வர மாட்டேனா? இங்க வா, யாரு எதுக்கு சரிபட்டு வர மாட்டாங்கன்னு விளக்கமா சொல்றேன்.” என்று அவன் அவளை கைக்குள் அடக்க முற்பட, அவள் வேகமாக ஓடிச்சென்று குளியலறைக்குள் மறைய என்று ஆர்ப்பாட்டமாக ஆரம்பித்தது அவர்களுக்கான காலை பொழுது.

 

அந்த நாள் மட்டுமல்ல, அந்த வாரம் முழுக்கவே புத்துணர்வுடனும் புரிந்துணர்வுடனும் அழகாகவும் வேகமாவும் கழிந்தது.

 

உதயகீதனின் இல்லத்தில், பல வருடங்கள் கழித்து மகிழ்ச்சி அலைகள் அடிக்க, அதை கெடுக்கவென்றே வந்தது வாரயிறுதி நாள், ராகவர்ஷினியின் பார்ட்டிக்கு செல்ல வேண்டிய நாள்!

 

அன்றைய நாள், கணவன் மனைவி இருவருக்குமே ஏதோ நெருடலாகவே துவங்கியது. ஆனால், அதைப் பற்றி இருவருமே வெளியே சொல்லிக் கொள்ளவில்லை. சொல்லியிருந்தால், நடைபெறவிருக்கும் விபரீதத்தை தடுத்திருக்கலாமோ என்னவோ?

 

*****

 

ராகவர்ஷினி எதிர்பார்த்த வாரயிறுதி நாளும் வந்தது. தன்னை அவமானப்படுத்தியவர்களை பழி தீர்க்கப்போகும் நாள் என கருதி குதூகலத்துடன் இருந்தவளை கலைத்தது அலைபேசி ஒலி.

 

அழைப்பது அவளின் அன்னை தான்.

 

அவர் பெயரை பார்த்தும், குற்றவுணர்வு மனதோரம் ஒட்டிக் கொண்டது. இதுவரை அவருக்கு தெரியாமல் எதையும் செய்ததில்லை அல்லவா?

 

அவள் காதலில் விழுந்த போது கூட, அதை அன்னையிடம் பகிர்ந்து ஆலோசனை கேட்டவளாகிற்றே. அவள் ‘உதய்’ என்றே கூறியதால், கீதாஞ்சலியால் புரிந்து கொள்ள இயலவில்லை. இல்லையென்றால், இத்தனை தூரம் அவர்களின் காதலை வளரவிட்டு, பலரின் நிம்மதியை கெட விட்டிருக்க மாட்டாரே!

 

அழைப்பை ஏற்ற ராகவர்ஷினி அன்னையிடமும் தந்தையிடமும் அவர்களின் நலனை குறித்து விசாரித்தாள்.

 

மகளின் குரலிலிருந்த படபடப்பே, அவள் தங்களிடம் ஏதோ மறைக்கிறாள் என்பதை கட்டியம் கூற, நேராக அதைப் பற்றி விசாரித்தார் கீதாஞ்சலி.

 

“வர்ஷி, அங்க நீ என்ன பண்ணிட்டு இருக்க?” என்று கீதாஞ்சலி வினவ, அவர் இப்படி கேட்பார் என்று எதிர்பார்க்காத ராகவர்ஷினி முதலில் தயங்கியவள், “மாம், இதென்ன கேள்வி? எப்பவும் போல தான் ஃபிரெண்ட்ஸோட ஊர் சுத்திட்டு இருக்கேன். உங்களுக்கும் டேடிக்கும் கூட நிறைய வாங்கியிருக்கேன். யூ போத் வில் லவ் தெம்.” என்று சாதாரணமாக பேச முயற்சித்தாள்.

 

ஆனால், அவளின் முயற்சி எல்லாம் வீணானது கீதாஞ்சலியின் அடுத்த கேள்வியில்.

 

“வர்ஷி, உதய் கிட்ட இன்னும் என்ன பேச்சு உனக்கு? இதுக்கு தான் எங்க கூட ஜெர்மனி வரலையா நீ?” என்று சரமாரியாக கேள்விகளை அடுக்க, முதலில் திகைத்தவள், பின்பு சமாளித்துக் கொண்டு, “அம்மா, ஜெர்மனி வரதுக்கு முன்னாடி, இங்க ஒரு கெட்-டூகேதர் மாதிரி பண்ணலாம்னு நினைச்சேன். அதுக்கு, இங்க எனக்கு தெரிஞ்ச எல்லாரையும் இன்வைட் பண்ணேன். அப்படி தான் உதயையும் அவன் ஒய்ஃபோட வரணும்னு இன்வைட் பண்ணேன். இது தப்பா? இன்னும் ரெண்டு நாள்ல ஜெர்மனி வரப்போறேன். அதுக்கப்பறம், இங்க இருக்குறவங்களை கான்டேக்ட் பண்ண கூட டைம் இருக்குமான்னு தெரியல.” என்றாள்.

 

அதை நம்பவும் முடியாமல், நம்பாமல் இருக்கவும் முடியாமல், “வர்ஷி, இனி உதய்யை டிஸ்டர்ப் பண்றது நல்லா இருக்காதுடா. புரிஞ்சுப்பன்னு நினைக்குறேன்.” என்று கீதாஞ்சலி கூற, “இப்போ என்ன நான் இன்வைட் பண்ணது கூட தப்புன்னு சொல்றீங்களா? ஒரு குட் வில்ல தான் இதை செஞ்சேன். ப்ச், நான் எது செஞ்சாலும் தப்பா? முன்னாடி எல்லாம் இப்படி இல்லையே நீங்க! இப்போ மட்டும் ஏன் இப்படி?” என்று எரிச்சலுடன் கேட்டாள் ராகவர்ஷினி.

 

“ஹ்ம்ம், முன்னாடி நான் தான் தப்பு பண்ணிட்டேன்னு நினைக்குறேன் வர்ஷி. உன்னை வளர்க்க தெரியாம வளர்த்துட்டேன். அவங்க சொன்னது சரிதான் போல. எனக்கு தான் குழந்தையை எப்படி பார்த்துக்கணும், வளர்க்கணும்னு தெரியல.” என்று பழைய நினைவில் கீதாஞ்சலி புலம்ப ஆரம்பிக்க, முதல் இரண்டு வரிகளை மட்டும் கவனித்த ராகவர்ஷினியோ கடுப்புடன் அழைப்பை துண்டித்து விட்டாள்.

 

‘ப்ச், எல்லாம் இந்த உதய்யால தான்!’ என்று அதற்கும் அவனின் மீதே பழி போட்டது பாவையின் உள்ளம்.

 

சில நிமிடங்களுக்கு பின்னர் மீண்டும் அழைப்பு வந்தது அவளுக்கு. இம்முறை தந்தை அழைத்திருந்தார்.

 

முதலில், அதை ஏற்கப் பிடிக்காதவள், அமைதியாக இருக்க, தொடர்ந்து ஒலித்த சத்தம் அவளின் கோபத்தை மேலும் உயர்த்த, வேகமாக அழைப்பை ஏற்றவள், கோபமாக ஏதோ சொல்லப் போக, அதற்குள் மறுமுனையிலிருந்து அவளின் தந்தை கிரிதரன் கோபமாக கத்தினார்.

 

“அம்மா பேசிட்டு இருக்கும்போதே இப்படி காலை கட் பண்ணுவியா ராகவர்ஷினி. இது தான் மேனர்ஸா? இதை தான் நாங்க உனக்கு சொல்லிக் கொடுத்தோமா?” என்று கிரிதரன் படபடவென்று பேச, “டேடி, அவங்க பேசுறது எனக்கு சுத்தமா பிடிக்கல. அதான், காலை கட்  பண்ணேன். இதுல என்ன தப்பிருக்கு?” என்று அப்போதும் அலட்சியமாக வினவினாள் ராகவர்ஷினி.

 

அதோடு, கிரிதரன் அவளை முழுப்பெயர் கொண்டு அழைத்தது வேறு அவளுக்கு எரிச்சலை கொடுத்தது.

 

“உன்னை சொல்லி தப்பில்ல. உன் அம்மா சொன்ன மாதிரி, சின்ன வயசுல இருந்தே செல்லம் கொடுத்து உன்னை கெடுத்து வச்சுருக்க எங்களை சொல்லணும்!” என்று விரக்தியாக பேசிய கிரிதரன், “ஒன்னு மட்டும் ஞாபகம் வச்சுக்கோ, இப்போ பேசுறது பிடிக்கலன்னு சொல்ற நீ, ஒருநாள் அப்படி பேச அவங்க இல்லையேன்னு தவிப்ப!” என்றும் கூற, மனது பிசைந்தது அவளுக்கு.

 

“டேடி!” என்று ராகவர்ஷினி கத்த, “இதையும் கேட்டுக்கோ… உன் அம்மாக்கு பிரெஸ்ட் கேன்சர். சீக்கிரமா ஆப்பரேஷன் செய்யணும். உன்னை பார்த்துட்டு தான் ஆப்பரேஷன் செய்யணும்னு பிடிவாதமா இருக்கா. அதை சொல்ல தான் கால் பண்ணா.” என்று பெரிய குண்டை தூக்கி போட்டார் கிரிதரன்.

 

“டேடி, என்ன சொல்றீங்க?”என்று ராகவர்ஷினி பதற, “உண்மையை சொல்றேன்… அவளுக்கு பழைய ஞாபகம் வந்து ரொம்ப டவுன்னா ஃபீல் பண்றா. இது கூட அவளுக்கான தண்டனைன்னு நினைக்குறா. இதுல நீயும் ஏதாவது செஞ்சு அவளை நோகடிக்காத பிளீஸ்.” என்றவர், மகள் எதுவும் சொல்லும் முன்னே அழைப்பை துண்டித்து விட்டார்.

 

அன்னையின் உடல்நிலையை பற்றி கேள்விபட்டதில் இடிந்து தான் போனாள் ராகவர்ஷினி. அவள் எப்படி பெற்றோருக்கு முக்கியமோ, அதை விட அவர்கள் இருவரும் அவளுக்கு முக்கியமானவர்கள் ஆகிற்றே!

 

அவளின் ஒரு மனமோ, இப்போதே ஜெர்மனி சென்று அன்னையை காண வேண்டும் என்று கூற, மறுமனமோ, ‘நல்ல சான்ஸை மிஸ் பண்ண போறியா? இதோ, ஈவினிங் வர இன்னும் கொஞ்ச நேரம் தான் இருக்கு. இன்னைக்கு பார்ட்டியை பிளான் பண்ண மாதிரி முடிச்சுட்டு, நாளைக்கே கிளம்பி போ.’ என்று அவளை தூண்டியது.

 

தந்தை கூறிய இறுதி வரியை மறந்து போன ராகவர்ஷினி முடிவு செய்து விட்டாள், இன்றைய தினத்தை இங்கு கழித்து விட்டு தான் ஜெர்மனி போவது என்று!

 

*****

 

அதே சமயம், வேறொரு இடத்தில்…

 

“ஹே, நாம தூக்கப் போறது இவளை தானா? எப்பா, என்ன ஃபிகரு? நச்சுன்னு இருக்கால? ஆமா, பொண்ணை தூக்க மட்டும் தான் சொன்னாங்களா? நல்லா கேட்டியா?” என்று ஒருவன் அந்த புகைப்படத்தை ஒரு மாதிரியாக பார்த்துக் கொண்டே கேட்க, “டேய், அலையாதடா. பொண்ணை தூக்க மட்டும் தான் செய்யணும். அதோட, அவங்க சொல்றப்போ ரிலீஸ் பண்ணனும். சோ, நீ மூடிட்டு சொன்னதை மட்டும் செய்.” என்று கட்டளையிட்டான் மற்றொருவன்.

 

அதற்கு முதலாமவனோ எதுவும் சொல்லாமல் மீண்டும் அந்த புகைப்படத்திலேயே பார்வையை பதித்திருக்க, “ஹே, நான் சொன்னது கேட்டுச்சா?” என்று எரிச்சலாக கேட்டான் அவன்.

 

“ப்ச், கேட்டுச்சு கேட்டுச்சு.” என்று முதலாமாவன் சலித்துக் கொள்ள, “பிளான் எல்லாம் ஞாபகம் இருக்குல. சரியா எக்சிக்யூட் பண்ணிடுவேல. ஹோட்டல் ரோஸ் பெட்டல்ஸுக்கு சரியா நாலரை மணிக்கு வந்துடு…” என்று மற்றொருவன் ஆரம்பிக்க, “அடேய் திரும்ப திரும்ப சொல்லாத. அதெல்லாம் சரியா வந்துடுவேன். இப்போ நீ இடத்தை காலி பண்ணு. நான் பார்த்தாவது என்ஜாய் பண்ணிக்குறேன்.” என்றான் அவன்.

 

‘இதெல்லாம் திருந்துற கேஸ் இல்ல.’ என்று எண்ணிய மற்றொருவனுக்கு பயம் தான், அவன் சரியாக செய்து விடுவானா என்று. எனினும், மீண்டும் கேட்டால், கோபத்தில் காது கூசும் அளவுக்கு  கெட்ட வார்த்தைகளை பேசுவான் என்பதால் அமைதியாக அங்கிருந்து சென்றான்.

 

*****

 

நான்கரை மணி…

 

வேண்டாவெறுப்பாக கிளம்பிக் கொண்டிருந்தனர் உதயகீதன் – ஜீவநந்தினி தம்பதியினர். எனினும், வெளியே சொல்லிக் கொள்ளவில்லை.

 

அவன் மனதிலோ குழப்பம், அவள் மனதிலோ கலக்கம்!

 

‘போலாம்னு நான் எடுத்த முடிவு சரியா? ஏன் என் மனசு இப்படி தவிக்குது?’ என்று எண்ணிய ஜீவநந்தினி, பின்பு தலையை இருபுறமும் அசைத்து அதிலிருந்து வெளியே வந்தவள், கணவனை பார்க்க, அவன் முகமும் குழப்பத்தை அப்பட்டமாக படம் போட்டு காட்டியது.

 

அவனையும் நிகழ்விற்கு அழைத்து வரவேண்டி, “தயா, மாமாக்கு நாம ராகவர்ஷினியோட பார்ட்டிக்கு தான் போறோம்னு தெரிய வேண்டாம்.” என்று கூற, தலையை மட்டும் அசைத்தான் உதயகீதன்.

 

அவனை தன்னை நோக்குமாறு நிற்க செய்தவள், “என்னவாம்? முசுட்டு முசோ திரும்ப வராரு.” என்று கேட்க, “உன் வாய் அடங்கவே செய்யாதுல?” என்று அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், அவளை கேலி செய்தபடியே கீழே அழைத்து வந்தான்.

 

நடுகூடத்தில் இருந்த கேசவமூர்த்தியிடமும் சுதாகரிடமும் பொதுவாக, “நாங்க வெளிய போயிட்டு வரோம்.” என்று கூற, இருவரும் ஒன்றாக வெளியே செல்வதை மகிழ்ச்சியுடன் பார்த்தவர்கள், வேறு எதுவும் கேட்கவில்லை.

 

வாகனத்தில் அமைதியே ஆட்கொண்டிருக்க, அது பிடிக்காத ஜீவநந்தினியோ, “ஃபர்ஸ்ட் டைம் ரெண்டு பேரும் சேர்ந்து வெளிய போறோம்னு அழகா கிளம்பி வந்தா, அதை பார்த்து பாராட்டாம, இப்படி சோக கீதம் வாசிச்சுட்டு வரீங்களே கீது, இது உங்களுக்கே நியாயமா இருக்கா?” என்று அவளின் பேச்சை துவங்கினாள்.

 

அவள் வேண்டுமென்றே அவனை வெறுப்பேற்ற ‘கீது’ என்று அழைத்ததை கேட்டவன், வலிக்காதவாறு அவளின் தலையில் கொட்டி, “ஃப்ளோல ‘அழகு’ன்னு ஏதாவது சொல்லிட்டியோ?” என்று அவளை வாறினான்.

 

“மிஸ்டர். முசோ, என் அழகுக்கு என்ன குறைச்சல்?” என்று அவன் கன்னத்தை பற்றி தன்னை நோக்கி திருப்பி அவள் கேட்க, அந்த ஒருநொடி அவன் கவனம் சிதறித்தான் போனது, அவளின் நேர்த்தியான அழகில்!

 

அவன் பாராட்டை ஆர்வத்துடன் எதிர்நோக்கும் விழிகள், அவனை முறைக்க முயலும் கூர்மூக்கு, அவன் அலட்சியத்தால் அலட்சியமாக சுழித்த இதழ்கள் என அனைத்தையும் கண நேரத்தில் அளவெடுத்தவனின் உதடுகள் தாமாகவே அசைந்து, “கார்ஜியஸ்!” என்று கூற, அதை ஏற்கும் வண்ணம் தாராளமாக விரிந்தன பாவையின் உதடுகளும்.

 

“ஹ்ம்ம், ஒரு காம்ப்ளிமெண்ட்டை கூட கேட்டு வாங்க வேண்டியதா இருக்கு!” என்று அவள் சலித்துக் கொள்ள, நொடியினில், தன் கவனத்தை திருப்பிய காரிகையை முறைத்தபடி, வாகனத்தை சரியாக செலுத்திக் கொண்டே, “நீ மட்டும் என்னவாம்? எனக்கு காம்ப்ளிமெண்ட் கொடுத்தியா?” என்று வினவினான்.

 

அதில், அவனை நோக்கி திரும்பி அமர்ந்தவளோ, “கொடுத்துட்டா போச்சு!” என்றவள், அவனை மேலிருந்து கீழ் வரை நன்றாக பார்க்க, அவள் பார்வையே அவனுக்கு ஒரு மாதிரி இருந்தது.

 

நிமிடம் கடந்தும், அவள் பார்வையை திருப்பும் எண்ணம் இல்லாததை போல பார்த்து வைக்க, “ஹே, என்ன பண்ற நீ?” என்று உதயகீதன் கேட்க, “காம்ப்ளிமெண்ட் கொடுக்கணும்னா, நல்லா அனலைஸ் பண்ணனும்ல, அதை தான் பண்ணிட்டு இருக்கேன்.” என்றாள் சாதாரணமாக.

 

“எம்மா தாயே, நீ ஆணியே பிடுங்க வேண்டாம்.” என்றவன், “சும்மா இருக்க என்னை, பார்த்தே ஒரு வழியாக்கிடுவா போல!” என்று லேசாக எட்டிப் பார்த்த வெட்கத்துடன் முனகினான்.

 

அதைக் கேட்டவளுக்கும் வெட்கம் வர, அதிலிருந்து வெளிவர வேண்டி, “சும்மா சொல்லக் கூடாது, அப்போ இருந்து இப்போ வரை பாடியை நல்லா மெயின்டெயின் பண்றீங்க கீ…த்…து…” என்று மீண்டும் கிண்டலை ஆயுதமாக எடுக்க, “அப்போ நீ வேலை பார்க்காம, என்னை தான் சைட்டடிச்சுட்டு இருந்துருக்க?” என்று அவனும் களத்தில் குதித்தான்.

 

“பின்ன, சிடுசிடுன்னு இருக்க உங்க முகத்தையா பார்க்க முடியும்? பார்க்குறது மாதிரியா இருந்துச்சு?” என்று அவளும் விடாமல் வம்பிழுக்க, “அடிப்பாவி!” என்று அவளின் பேச்சில் அவன் தான் பின்வாங்க வேண்டியதாகிற்று!

 

இப்படி ஒருவரையொருவர் வாரியபடியே அவர்கள் வந்து சேர வேண்டிய இடத்தை அடைந்தனர்.

 

‘ஹோட்டல் ரோஸ் பெட்டல்ஸ்’ என்று இளஞ்சிவப்பு நிறத்தில் ரோஜா இதழ்களின் வடிவத்தில் வடிவமைக்கப்பட்டிருந்த வளாகத்திற்குள், அத்தனை நேரமிருந்த சிரிப்பும் மொத்தமாக தொலைந்து போகப் போகும் இடம் என்று தெரியாமலேயே நுழைந்தனர்.

 

தொடரும்…

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 41

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
33
+1
2
+1
3

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. Interesting 😍😍😍
    என்ன நடக்கப் போகுதோ 😧😧😨😨😨