
அத்தியாயம் 8
எங்கே தெய்வா தன்னுடைய சகோதரிகளைப் பார்த்துவிடுவானோ என்ற பயத்தில், அதுநாள் வரை செய்யாத ஒரு செயலை செய்தாள் ருக்கு, அதுதான் திருட்டுத்தனம்.
“அம்மா” லேசான அலறலுடன் தன் காலைத் தரையில் இருந்து உயர்த்தியவள், ஓடுமீன் ஓட உறுமீன் வருமென காத்திருந்த கொக்கைப் போல், தெய்வா தன்னிடம் வந்துவிட வேண்டும் என்ற தவிப்புடன் அவனையே பார்த்திருந்தாள்.
ஊசி முனையின் மீது ஒற்றைக்காலில் தவம் செய்து சிவனை கணவனாய் பெற்றார் பார்வதி. அதே போல் இங்கே ஒற்றைக்கால் தவத்தில் தெய்வா என்னும் கொடுவா மீசைக்காரனை தனக்கே தெரியாமல் மொத்தமாய் தன்னுள் சுருட்டிக் கொண்டிருந்தாள் பெண்.
“என்னாச்சு என்னாச்சுங்க” இவன் பதறியபடி அவளை நோக்கி வந்த இடைவெளியில் உள்ளிருந்த தேவகி கார் கதவை சாத்திவிட்டாள். அதன் பிறகே நிம்மதிப் பெருமூச்சு வந்தது சகோதரிகளிடம்.
“அக்கா பாரேன். ருக்கு அக்காவுக்குள்ள இவ்வளவு திறமை இருக்கா என்ன. எவ்வளவு நேக்கா மாமாகிட்ட இருந்து நம்மைக் காப்பாத்திட்டா.” ஆச்சர்யத்துடன் சொன்னாள் தேவகி.
“ருக்கு திறமைசாலி, என்ன கொஞ்சம் பயம் தான் அதிகம். இவரோட வாழப் போற வாழ்க்கையால அவளோட பயம் தெளிந்து என் பழைய ருக்குவா கிடைச்சா நல்லா இருக்கும்.” சொன்ன லீலாவிடம் இருந்து லேசான பெருமூச்சு. ஊர்மி, தேவகி இருவரும் அவள் தோளில் கை வைக்க சின்னதாய் புன்னகைத்து நான் நலம் என சைகையால் வெளிப்படுத்தினாள் மூத்தவள்.
பதறிப்போய் தன்னிடம் ஓடிவந்த தெய்வாவிடம், “எறும்பு கடிச்சிடுச்சி” என்றாள் குழந்தையைப் போல். அவளின் குழந்தைத்தனத்தை இரசிக்காமல் இருக்க முடியவில்லை தெய்வாவால். அதுநாள் வரை அவனைப் போன்ற முரடர்களுடன் மட்டுமே பழகி வந்தவனுக்கு பூனைக்குட்டியைப் போல் எதற்கெடுத்தாலும் மிரளும் பெண்ணை பிடித்திருந்தது. அவனின் முரட்டுக் குணத்திற்கும், இவளின் பருத்திப் பூ மென்மைக்கும் நன்றாக ஒத்துப்போகும் என்று தோன்றியது அவனுக்கு.
அவளை இரசித்ததில் தண்ணீர் குடிக்காமலே தாகம் தீர்ந்தது போல் தோன்ற அமைதியாய் அவளையே பார்த்தவண்ணம் நின்றான். அவளோ நிலத்தைப் பார்த்தவண்ணம் நின்றிருந்தாள்.
“ஆச்சு” என்ற ஊர்மிளா திரும்பி தன் சகோதரிகள் இருவரையும் பார்த்து கண்ணடித்தாள். “என்ன ஆச்சு” லீலா கேட்க, “இரண்டு பேரும் சிலை மாதிரி நின்னு ஐந்து நிமிஷம் ஆச்சு. இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே இருந்தாங்கன்னா புதுசா இரண்டு சிலை நிப்பாட்டி இருக்காங்க. நமக்கு ரொம்ப வசதியா இருக்கும் னு காக்கா, குருவி எல்லாம் குடும்பத்தோட இந்தப்பக்கம் வந்திடும்.” சொல்லிவிட்டு சன்னமாய் சிரித்தாள்.
“என்னங்க” தயக்கத்தை விடுத்து ருக்கு தான் முதலில் அவனை அழைத்தாள். “சொல்லுங்க” ஹஸ்கி வாய்ஸ்ஸில் அவளைப் போலவே சொன்னவன் லேசாக செருமி நிதானத்துக்கு வந்தான்.
ருக்கு தன் வருங்கால மனைவி என வடிவேல் சொன்ன நேரத்தில் இருந்து தன்னுள் எழுந்த மாற்றங்களை நம்ப முடியாமல் ஒரு மாதிரி பூரிப்புடன் இருந்தான் தெய்வா. புவிஈர்ப்புவிசையை எதிர்த்து, உடல் இறகை விடவும் லேசாகி காற்றில் மிதப்பது போல் தோன்றவும், பிடறி முடியை கலைத்துவிட்டு வானத்தில் இருந்து கீழிறங்கி வந்தான். இம்மாதிரியான அனுபவங்கள் புதிதாகவும் இருந்தது பிடித்திருக்கவும் செய்தது.
“மாமா எங்க” அவள் கேட்ட ஒற்றைக் கேள்வியில், பஞ்சர் ஆன டயரைப் போல பெருமூச்சுவிட்டவன், “நீங்க என்னை மாப்பிள்ளை பார்க்க வந்திருக்கீங்க. நமக்குள்ள பேசிக்கிறதுக்கு நிறைய இருக்கு. அப்படி இருக்கத் தேவையில்லாம அவரை ஏன் தேடுறீங்க.
வயசானவரு, உடம்பு சரியில்லாதவரு, சுகர் பேஷண்ட் வேற. எங்கேயாவது உட்கார்ந்து ரெஸ்ட் எடுத்துக்கிட்டு இருப்பாரு. அவர் அப்படியே இருக்கட்டும். நாம நம்மைப் பத்தி கொஞ்சம் பேசிக்கலாமே.” தன் ஒட்டுமொத்த ஆசையை ஒன்று திரட்டிக் கேட்டான் தெய்வா.
ருக்குவிற்கு இவன் புதிதாய் தெரிந்தான். உண்மையில் கோபத்தில் உள்ளே ஒருவனை மிதி மிதியென்று மிதித்த அவன் தான் இவனா. உள்ளே காட்டிய முகம் உண்மையா? இல்லை இந்த முகம் உண்மையா? யோசனையுடன் அவள் அவனையே பார்க்கவும், லேசாக வெட்கத்துடன் புன்னகைத்தவன்,
“நான் அழகுன்னு எனக்குத் தெரியும். ஆனா நீங்க இப்படி என் முகத்தையே பார்த்துக்கிட்டு இருக்கிறதைப் பார்த்தா நான் பேரழகன் என்ற நினைப்பு வருது.” என்றபடி கலைந்திருந்த தலைமுடியைக் கலைத்து மீண்டும் சரிசெய்தான்.
“அது தான் உண்மையும் கூட.” தனக்குள் நினைத்துக்கொண்டாள் ருக்மணி. அவளுடைய அந்த நினைப்பு அவளுக்குள் வெட்கத்தை பூக்கச் செய்ய அவள் கன்னங்கள் இரண்டும் ரோஸ் பவுடர் பூசியது போல் சிவப்பாகியது.
“ஐயோ, ஐயோ இவ்வளவு அழகா நீங்க.” சொக்கியே போய்விட்டான் தெய்வா. பெண்களே பேரழகு தான், அதிலும் தன்னவனிடம் வெட்கம் கொண்டு நிற்கும் பெண்கள் தேவலோக அரம்பையர்களை விட அழகு, என என்றோ ஒருநாள் படித்த கவிதை நினைவு வந்து, அது உண்மை தான் போல என நினைக்க வைத்தது தெய்வாவை.
“நா.. நான் போகணும் மாமா மாமாவை வரச் சொல்லுங்க.” திக்கித்திணறி சொன்னாள் ருக்கு.
“சொல்லிடுறேன், சொல்லிடுறேன். சீக்கிரமே கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ண நீங்க சொன்னதா சொல்லிடுறேன்.” என்றான் தெய்வா.
“நான் ஒன்னும் அப்படி சொல்லவே இல்லையே.” வேகமாய் ருக்கு இடையில் வரவும், வார்த்தையால சொன்னா தான் ஆச்சா. நீங்க வாய்திறந்து சொல்லல தான், ஆனா உங்க கன்னம் இரண்டும் பதில் சொல்லிடுச்சு.” என்றான் அவள் வெட்கத்தை இரசிக்கும் கலாரசிகனாய்.
அவன் முகம் பார்க்க நாணி அவள் திரும்பி நின்று கொள்ள அவள் நீண்ட கூந்தலும் பின்னழகும் அவனை இம்சிக்கவே செய்தது. காதல் பைத்தியம் பிடித்தால் இணையின் வெட்டிப்போட்ட நகக்கண் கூட பொக்கிஷமாய் தெரியுமாம்.
இவ்வளவு நாள் காதல் என்னும் புதைகுழியில் இருந்து தப்பித்துக்கொண்டிருந்த தெய்வா ருக்குவைப் பார்த்த சில நிமிடங்களில், அவள் தன் மனைவியாகப் போகிறவள் என்கிற அறிமுகம் கிடைத்த சில நொடிகளில், அதனுள் தலைகுப்புற விழுந்திருக்க, அதுவோ அவனை இன்னும் இன்னும் ஆழமாய் தனக்குள் உள்ளிழுக்கும் வேலையைச் சிறப்பாகச் செய்தது.
“இங்க பாருங்க ருக்கு, உண்மையைச் சொல்றேன் எனக்கு உங்களை அப்படியே ஹக் பண்ணிக்கனும் னு தோணுது. இந்த மாதிரி நினைப்பு எல்லாம் எந்தப் பொண்ணு மேலும் இதுவரைக்கும் வந்ததே இல்லை. என்னை ரொம்பவே சோதிக்கிறீங்க. பெட்டர் நான் இப்ப போய் அப்பாவை வரச் சொல்றேன்.” என்றுவிட்டு புதுவித துள்ளலுடன் ஸ்டேஷனுக்குள் நுழைந்தான் தெய்வா.
அங்கே ஆர்வமாய் பப்ஜி ஆடிக் கொண்டிருந்தார் வடிவேலு. மருமகளால் மகனைச் சமாளிக்க முடியுமோ இல்லையோ, ஆனால் மகன் கண்டிப்பாக மருமகளைச் சமாளிப்பான் என்பதை அவர் அறிவார். மகன் மீது கொண்டிருக்கும் நம்பிக்கை அவரை நிதானமாக இருக்க வைத்தது.
நேரே தந்தையின் அருகே வந்து அவரை எழுப்பி நிற்க வைத்தவன், “அப்பா அப்பா… எனக்கான வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை உங்ககிட்ட கொடுத்ததை நினைச்சு நான் ரொம்ப பெருமைப்படுறேன். தேவதை மாதிரி ஒரு பொண்ணை எனக்காக செலக்ட் பண்ணி இருக்கீங்க, தேங்க் யூ சோ மச்.
எனக்கு அவங்களை ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு. அவங்க அப்பா, அம்மாகிட்ட சொல்லி சீக்கிரம் கல்யாணம் ஏற்பாடு பண்ணுங்க.” உற்றாகமாய் சொன்னான்.
“என் மருமக சொக்கத்தங்கம் டா தெய்வா.” சொன்ன தந்தையின் கூற்றை சின்னத் தயக்கம் கூட இல்லாமல் ஏற்றுக்கொண்டான் போலீஸ்காரன்.
“அவளை மாதிரி ஒரு பொண்ணை யாருக்குத் தான் பிடிக்காது. அவளுக்கு அம்மா, அப்பான்னு யாரும் கிடையாது. தவறிப்போய் ரொம்ப வருஷமாகுது. இனிமே நீயும் நானும் தான் அவளுக்கு எல்லாமே.” என்ற வடிவேலு, அடுத்து ஏதோ சொல்ல வர அதைக் கேட்பதற்கு அவன் அங்கே இல்லை.
மீண்டும் ருக்குவைத் தேடி ஓடி வந்தவன், காரில் ஏறுவதற்கு தயாராக நின்ற பெண்ணைப் பிடித்து இழுத்து தன்னோடு அணைத்தான். பட்டப் பகலில், பொறுப்புள்ள பதவியில் இருக்கும் தான், வேலை செய்யும் ஸ்டேஷன் வாசலில் இப்படி செய்கிறோம் என்ற நினைப்பு துளியும் இல்லாமல் அவளை தன்னோடு மேலும் மேலும் இறுக்கினான்.
இதுவரை பழக்கமில்லாத ஒன்று என்பதால் ருக்குவின் மேனி நடுங்கத் துவங்கியது. தன்னை அணைத்திருந்தவன் பிடியில் இருந்து வெளிவர துடித்தாள். அதை உணர்ந்து அவளை தன்னை விட்டு விலக்கியவன், “உங்களுக்கு யாரும் இல்லைன்னு கவலைப்படாதீங்க. இனி உங்களுக்கு எல்லாமே நான் தான். உங்களை எனக்கு மனைவியா தேர்ந்தெடுத்ததுக்காக கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அப்பாவைப் பாராட்டினேன்.
ஆனா இப்ப எனக்கு அவரைத் திட்டணும் போல இருக்கு. ரொம்ப ரொம்ப திட்டணும் போல இருக்கு. உங்களை ரொம்ப நாளுக்கு முன்னாடியே என்னோட வாழ்க்கையில் கொண்டு வந்து இருக்கணும், தப்புப் பண்ணிட்டாரு.
சரி இனியும் ஒன்னும் கெட்டுப் போகல. இந்த உலகத்தில் எந்த ஒரு பொண்ணும் உங்க அளவுக்கு சந்தோஷத்தை அனுபவிக்க மாட்டா. அந்த அளவுக்கு நான் உங்களைப் பார்த்துப்பேன். என்னை நீங்க நம்பணும்.” என்றுவிட்டு அவள் எதிர்பாரா நேரம் அவள் உள்ளங்கையில் மென்முத்தம் பதிக்க, அனிச்சையாய் கரத்தை இழுத்துக்கொண்டவள் சிலையாய் சமைந்துவிட்டாள்.
“உங்களோட அனுமதி இல்லாம நடந்திடுச்சேன்னு தப்பா நினைக்க வேண்டாம். என் மனசில் நான், நீங்க என்ற ஒருமை நிலை மாறி நாமங்கிற பன்மை வந்ததற்கான அடையாளம் இது. அதனால இதில் தப்பில்லை.” என அவள் கன்னத்தில் மென்மையாகத் தட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றான்.
அவன் கொடுத்த அந்த ஒற்றை முத்தம் ருக்குவை மட்டும் அல்ல, அவளுடைய மூன்று சகோதரிகளை, அவளுடைய வருங்கால மாமனாரை, தெய்வாவுடன் வேலை பார்க்கும், அவனை முற்றிலும் தெரிந்த சிலர் என அனைவருக்குமே அதிர்ச்சியாய் தான் இருந்தது.
ருக்கு எப்படி காரில் வந்து அமர்ந்தாள், கார் எப்போது கிளம்பியது என எதுவுமே அவளுடைய மனதில் பதியவில்லை. பிரம்மை பிடித்தவள் போல் மூச்சுவிடும் பொம்மையாய் அமர்ந்திருந்தாள்.
“என் பையனைத் தப்பா நினைக்காத லீலா. எனக்குத் தெரிஞ்சு அவன் எந்தப் பொண்ணுகிட்டேயும் இப்படி நடந்துக்கிட்டது இல்ல. ஏன் அப்படி செஞ்சான்னு தெரியாது, ஆனா அவன் செஞ்சதில் தப்பான நோக்கம் இருக்காது.” மகனுக்கு பரிந்துகொண்டு வந்தார் வடிவேலு.
“எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல மாமா. நடக்கிறது எல்லாம் சரியா தப்பா, இதனால என் தங்கச்சிங்க சந்தோஷமா இருப்பாங்களா மாட்டாங்களா? ஒன்னுமே புரியல.” முற்றிலும் குழப்பிப் போய் இருந்தாள் லீலா.
“அவரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா நான் சந்தோஷமா இருப்பேன்னு தோணுது அக்கா.” இதுவரை பொம்மையாய் இருந்த ருக்மணி வாயைத் திறந்தாள்.
“ருக்கு அக்கா நீ சுயநினைவோட தானே இதைச் சொல்ற.” கிண்டலாய் கேட்டாள் ஊர்மிளா. பிறப்பில் இருந்தே சற்று பயந்த சுபாவம் கொண்டவளான அவள், நடுவில் நடந்த ஒரு சிறிய பிரச்சனையால் தொட்டால் சுருங்கும் தொட்டாச்சிணுங்கியைப் போல தொட்டதற்கெல்லாம் பயம்கொள்ளத் துவங்கி இருந்தாள். அப்படிப்பட்டவள் இன்று தைரியமாகப் பேசவும் சந்தோஷமாக கிண்டல் அடிக்கத் தோன்றியது அவளுக்கு.
“எனக்கு அவர் தான் சரியா இருப்பாருன்னு தோணுது. அவர் என்னைக் கட்டிப்பிடிச்சப்ப, உடனே ஏத்துக்க முடியாம இருந்தாக் கூட தப்பாத் தோணல. உண்மையைச் சொல்லப் போனா ஒரு பாதுகாப்பான உணர்வு வந்துச்சு. என் அக்காவுக்கு அப்புறம் ஒருத்தர்கிட்ட எனக்கு அப்படி ஒருஉணர்வு வந்ததுன்னா அது இவர்கிட்ட தான். அவரோட தொடுகை தப்பான நோக்கத்தில் இல்லை. எனக்கு அவரைக் கல்யாணம் பண்ணிக்கிறதில் முழு சம்மதம்.” என்றாள் ருக்கு.
“அப்ப சரி, இரண்டாவது ஜோடி சேர்ந்தாச்சு. அடுத்து நம்ம சிவகாசிப் பட்டாசு ஊர்மிளா அக்கா தான். மாமா என் மூணாவது மாமா பேரு என்ன. அவரை நாம எப்ப பார்க்கப் போறோம்.” ஆசையாய் கேட்டாள் தேவகி.
“அவன் இப்போதைக்கு ஊரில் இல்லம்மா, அதனால நாலாவது ஆளைத் தான் நாம அடுத்து பார்க்கப் போறோம். அதாவது உன்னோட வருங்காலப் புருஷனை.” வடிவேலு சொல்ல தேவகி கப்சிப்பென்று ஆகிவிட்டாள்.
“சந்தோஷம்” என்றாள் ஊர்மிளை சற்று கடுப்புடன். “என்ன என் மூணாவது மருமகளே என் பையனைப் பார்க்க முடியலையேன்னு வருத்தமா இருக்கா. அவன் அவனோட ப்ரண்டு கல்யாணத்துக்காக திருநெல்வேலி வரைக்கும் போய் இருக்கான் சீக்கிரம் வந்திடுவான்.” சொல்லிவிட்டு சிரித்தார் வடிவேலு.
கார் ஒரு தனியார் கலைக்கல்லூரி முன் நிற்க, “மாமா உங்க பையனைப் பார்க்கப் போறோம் னு சொல்லிட்டு காலேஜிக்கு கூட்டிட்டு வந்து இருக்கீங்க.” குழப்பத்துடன் கேட்டாள் லீலா.
“அப்ப அவர் இங்க தான் படிக்கிறாரா? இன்னும் படிச்சு முடிக்கலையா? ஒருவேளை ஒவ்வொரு செமஸ்டரும் இரண்டு இரண்டு தடவை படிக்கிறாரோ. தேவகி கல்யாணத்துக்கு அப்புறம் நீ தான் அவருக்கு எல்லாத்தையும் சொல்லிக்கொடுத்து பாஸ் பண்ண வைக்கணும் போல. உனக்கு ஏத்த ஆளு தான்.” கிண்டலடித்தாள் ஊர்மிளை.
வடிவேலு சற்று சிரிப்புடன், “அவன் படிப்பை முடிச்சிட்டான் மா, இங்க வேலை செய்யுறான்.” என்றார் சற்றே பெருமையாக. பிள்ளைகளிடத்தில் ஒற்றுமை இல்லை என்பதைத் தவிர்த்து வேறு எந்தக் குறையும் இல்லை என்கிற கர்வம் அவரிடம் எப்பொழுதும் உண்டு. ஒருவன் டாக்டர், இரண்டாமவன் போலீஸ், நான்காமவன் வாத்தீ, பெருமைப்படாமல் இருந்தால் தான் அதிசயம்.
“ஓகோ, வாத்தியாரா. அப்ப தினமும் நம்ம தேவகிக்கு டியூசன் தான். அப்படி பண்ணாத, இப்படிப் பண்ணாத, அங்க போகாத, இங்க போகாத, அப்படி இருக்காதே, இப்படி ட்ரஸ் பண்ணாத, எக்ஸ்ட்க்ட்ரா எக்ஸ்ட்க்ட்ரா அப்படித்தானே மாமா.” ஊர்மிளா சிரிக்க லீலாவும், ருக்குவும் சேர்ந்து சிரித்தனர்.
“இந்த வார்த்தைகளை மத்த மூன்று பசங்க சொல்வதற்கு கூட நூற்றில் ஐம்பது சதவீதம் வாய்ப்பு இருக்கு. ஆனா என் கடைக்குட்டி கண்டிப்பா சொல்ல மாட்டான். தேவகி உனக்கு கஷ்டமே இருக்காது, அவனை சமாளிக்கிறது ரொம்ப சுலபம்.
உன் அக்கா தங்கச்சிகளோடு சேர்த்துப் பார்த்தா, நீ தான் அதிகம் கொடுத்து வைச்சவ.” தன் இளைய மகனைப் பாராட்டி பேசும் அதே வேளையில் மற்ற மூன்று மகன்களையும் அவர் கைவிடவில்லை. இது தான் வடிவேல். காலேஜ் கேண்டினிற்கு மகனை வரச்சொல்லிவிட்டு ஒரு டேபிளில் தேவகியுடன் அமர்ந்திருந்தார் வடிவேலு.
அவர்களைப் பார்க்கும் தூரத்தில் சந்தேகம் வராத வகையில் அமர்ந்திருந்தனர் மற்ற மூவரும். தாங்கள் அமர்ந்திருக்கும் திசையை நோக்கி யார் வந்தாலும் சற்று படபடப்பாகவே உணர்ந்தாள் தேவகி.
கடைசியில் யாரோ ஒரு பெண்ணுடன் சிரித்து பேசியபடி கேண்டினிற்குள் வந்தான் அவன், வடிவேலுவின் கடைக்குட்டி சிங்கம். தர்மா என்றழைக்கப்படும் தர்மராஜ்.
“தர்மா” வடிவேல் கைகாட்டி அவனை தன் அருகே வரவழைத்தார். “அப்பா” என்றவண்ணம் தன்னுடன் இருந்த பெண்ணையும் உடன் அழைத்துக்கொண்டே வந்து அமர்ந்தான் அவர் மகன்.
வடிவேலுவிற்கு சற்றுச் சங்கடமாக இருந்தது. “தேவகி தன் மகனை தவறாக நினைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதே. மகனுக்கு காதல் என்ற ஒன்று இருந்தால் அதை நிச்சயம் என்னிடம் சொல்லி விடுவான். அதற்கு நான் மறுக்கப் போவதும் இல்லை.
இதுவரை அப்படி எதுவும் நடக்காத காரணத்தால் இந்தப் பெண் அவன் காதலியாக இருக்க வாய்ப்பு குறைவு தான்,
இருந்தாலும் இந்தப் பேச்சுவார்த்தைகள் தேவகியின் முன்னாலே நடக்க வேண்டுமா?” என மனதிற்குள் பலவிதமான போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார் அவர்.
“அப்பா” இதோடு மூன்றாம் முறையாய் அழைத்துவிட்டான் தர்மா. “ஆங் சொல்லுடா” தன் சிந்தனையில் இருந்து மீண்டவராக பேசினார் வடிவேலு.
“இல்லப்பா ஏதோ பேசனும் னு அவசரமா வரச் சொன்னீங்களே, என்னன்னு கேட்டேன்.” பேச்சு வார்த்தையை ஆரம்பித்து வைத்தான்.
“உன் அண்ணனுங்க மூணு பேருக்கும் கல்யாணத்துக்கு பொண்ணு பார்த்து இருந்தேன். அவங்களும் நான் காட்டின பொண்ணைப் பிடிச்சிருக்கு கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டாங்க.
அடுத்து நீ தான், உனக்குப் பொண்ணு பார்க்கிறதுக்கு முன்னாடி உன் மனசில் ஏதாவது இருக்கான்னு தெரிஞ்சிக்கலாம் னு நினைச்சேன். அதனால் தான் உன்கிட்ட பேச வந்தேன்.” மெதுவாகத் தூண்டில் போட்டார்.
அப்பா சொன்ன விஷயத்தையும், அவருக்கு அருகில் கொஞ்ச கொஞ்சமாக பதற்றம் அடைந்தவாறு, தன்னை நிமிர்ந்து பார்க்க மாட்டேன் எனப் பிடிவாதமாய் அமர்ந்திருக்கும் அழகான இளம் பெண்ணையும் பார்த்தவன் விஷயத்தை ஓரளவு யூகித்தனவாக சற்று விளையாட எண்ணினான்.
“அப்பா நீங்க கேட்கிறதால் சொல்றேன். என்னோட ஸ்டூடண்ட் ஒரு பொண்ணு நேத்து எனக்கு ப்ரப்போஸ் பண்ணா. அழகி தான், ஆனா சின்னப்பொண்ணு இல்ல அதனால வேண்டாம் னு சொல்லிட்டேன்.
ஆனாப் பாருங்க, மழை விட்ட பின்பும் தூவானம் விடாத கதையா, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இதோ இவங்க என் ஸ்டூடண்ட்டோட அக்கா என்னைப் பிடிச்சிருக்குன்னு சொல்றாங்க. இப்படி நான் எங்க போனாலும் ஒரே அன்புத் தொல்லைகள் அப்பா.” கண்டதையும் பேசி, தேவகியின் பதற்றத்தை நன்றாக ஏற்றிவிட்டு, தான் யூகித்தது சரி தான் என்று ஊர்ஜீதப்படுத்திக் கொண்டான் தர்மா.
தேவகியோடு சேர்த்து வடிவேலுவும் பதற்றமடைய விளையாட்டு போதும் என நினைத்தானோ என்னவோ, “ஆனா நான், நீங்க சொல்ற பொண்ணைத் தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு தெளிவா சொல்லிட்டேன். அதனால் தேவையில்லாத குழப்பங்கள் வேண்டாம்.
நீங்க பொண்ணு பாருங்க. அது யாரா இருந்தாலும் எனக்குச் சம்மதம். இதோ உங்க பக்கத்தில் ரொம்ப நேரமா அமைதியா, பதற்றமா இருக்காங்களே இந்தப் பொண்ணைக் காட்டி இவ தான்டா உனக்கு நான் பார்த்து வைச்சிருக்கிற பொண்ணுன்னு சொன்னீங்கன்னா கூட சந்தோஷமா தாலி கட்ட நான் தயார்.
ஏன்னா நான் என்னை விட உங்களை அதிகமா நம்புறேன். எனக்கு ஏத்த மாதிரி ஒரு வாழ்க்கைத் துணையைத் தான் நீங்க எனக்கு செலக்ட் பண்ணுவீங்க, இதோ இவங்களை மாதிரி, சரிதானங்க.” என்க, தேவகிக்கு மூச்சே நின்றுவிட்டது.
“பை த வே, என்னை மாப்பிள்ளை பார்க்க நான் வேலை பார்க்கிற காலேஜிக்கே வந்து இருக்கீங்க. குட், ஐ லைக் திஸ் சேன்ஜ். உங்களோட பேரு என்னன்னு சொல்ல முடியுமா?” அப்பாவிடம் பேச்சை ஆரம்பித்து தேவகியிடம் முடித்தான்.
தேவகி அவனுடைய கேள்விக்கு பதில் சொல்ல தலைநிமிர்த்த, சகோதரிகள் நால்வரின் புகைப்படத்துடன் கூடிய வாரஇதழ் ஒன்று பல்லைக் காட்டிக்கொண்டு அவர்கள் அமர்ந்திருந்த அந்த மேஜேயிலே இருந்ததைக் கண்டாள்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
11
+1
+1
1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


இதென்ன டா டுவிஸ்ட்… எத்தனை நாளைக்கு இதை மறைக்க முடியும் … வடிவேலு எப்பவும் சூப்பர் தான் … அய்யோ தெய்வா செம்ம லவ்வர் பாய் … டாக்டர் ஒண்ணு கூட பேசல … இவர் ரொம்ப நல்ல போலீஸ் … உங்க டாக்டர் அண்ணனுக்கு சொல்லி குடு பா … தெய்வா ருக்மணியை மயக்கிட்டான் … அண்ணனுங்கள மிஞ்சிட்டான் தர்மா …