
அத்தியாயம் 7
“சரி விடும்மா, இப்ப என்ன உன்னால போலீஸ்காரனை கல்யாணம் பண்ணிக்க முடியாது, அவ்வளவு தானே. உன்னைக் கட்டாயப்படுத்தி எதுவும் நடக்க வேண்டாம். என்னோட மத்த” வடிவேலு வார்த்தையை முடிப்பதற்குள் இடையிட்டாள் லீலா.
“மாமா, நீங்க பேசும் போது குறுக்க பேசுறதுக்காக மன்னிச்சிடுங்க. இவ ரொம்ப பயந்தவ. ஒரு போலீஸ்காரனால் கொஞ்சம் பிரச்சனை ஆகிடுச்சு. அதனால் போலீஸ்காரங்க என்றாலே தப்பானவங்க என்கிற பிரம்மை இவ மனசில் ஒட்டிக்கிச்சு.
அது விலகணும், இவளோட பயமும் குறையணும். அதுக்கு உங்க இரண்டாவது பையன் சரியா வரும். அதோட பேச்சுக்கு கூட ஜோடியை மாத்தாதீங்க.” உறுதியாகச் சொன்னாள் லீலா.
“அக்கா சொல்றது தான் சரி. ருக்குக்கா நீ தெய்வா மாமாவை தான் கல்யாணம் பண்ணக்கனும். போலீஸ்னா கையில் இலத்தியோடவும், துப்பக்கியோடவுமே எப்பவும் இருக்க மாட்டாங்க.
வீட்டுக்கு வந்திட்டா அவங்களும் நம்மை மாதிரி சாதாரண மனுஷங்க தான். மத்த எல்லாத்தையும் விடு, நாங்க மூணு பேரும் உன்கூடவே தானே இருக்கப் போறோம் அப்புறம் என்ன பயம். உன்னை மாமா ஏதாவது திட்டினாங்கன்னு வைச்சிக்க ஒரே குரல் ஊர்மின்னு கூப்பிடு நான் அவரை உண்டு இல்லைன்னு ஆக்கிடுறேன்.” என்றாள் ஊர்மிளா.
அடுத்து தேவகி, வடிவேல் மீண்டும் லீலா என ஆளாளுக்கு ஒன்று சொல்லி அவளை எப்படியோ சம்மதிக்க வைத்து அவளுடைய வருங்காலக் கணவனைப் பார்க்கவென்று அவன் இருக்கும் காவல் நிலையத்திற்கே புறப்பட்டனர்.
“அக்கா எனக்கு பயமா இருக்குக்கா, நீயும் என் கூட வாயேன்.” கேட்ட ருக்குவை பரிதாபமாகப் பார்த்தாள் லீலா.
சில நிமிடங்களுக்கு முன்னர் தான் எதற்காக நாங்கள் நால்வரும் அக்கா, தங்கைகள் என்ற விஷயத்தை அவர்களிடம் சொல்லக்கூடாது என்று லீலா கேட்டு, அதையும் இதையும் சொல்லி எப்படியோ சமாளித்து முடித்தார் வடிவேலு. அவர் நினைத்தது போலவே முக்கால்வாசி உயிர் போய் திரும்ப வந்திருந்தது.
“ருக்கு மாமா சொன்னதை மறந்துட்டியா. கல்யாணம் முடியுற வரைக்கும் நாம அக்கா, தங்கச்சிங்கன்னு அவங்களுக்குத் தெரியக் கூடாது. அதனால இப்ப நாங்க உள்ள வர முடியாது. அதோட மாமா உன்கூடவே இருப்பாரு பயப்படாம போய் பார்த்துட்டு வா.” தங்கைக்குத் தைரியம் கொடுத்தாள் லீலா.
“அக்கா ப்ளீஸ் கொஞ்சம் சிரி. மாமா இப்படியே உன்னைப் பார்த்தா உனக்கு கல்யாணத்தில் இஷ்டம் இல்லைன்னு நினைச்சிக்க போறாரு.” சொன்னவள் தேவகி.
சரியென்று தலையைத் தலையை ஆட்டிவிட்டு, குலசாமியை வேண்டிக்கொண்டு வடிவேல் பின்னால், நடுங்கும் கரத்தை முந்தானையில் மறைத்துக்கொண்டு காவல் நிலையத்தின் உள்ளே சென்றாள் ருக்மணி.
அவள் நேரமோ என்னவோ, சரியாக அவள் உள்ளே நுழையும் நேரம், “ஏன்டா, உனக்கு என்ன தைரியம் இருந்தா ஏமாத்திப் பிழைக்கிறதை தொழிலா வைச்சிருப்ப. அடுத்தவங்களை ஏமாத்தி நீ மட்டும் சந்தோஷமா இருக்கலாம் னு நினைக்கிறியா.
உன்னை மாதிரி ஆளுங்களைக் கண்டாலே எனக்குப் பிடிக்காது. உன்னை அடிக்கிற அடியில் இனிமேல் நீ யாரையும் ஏமாத்த கனவில் கூட நினைக்கக் கூடாது.” எனக் கையில் மாட்டிய ஒருவனை அடித்து துவைத்துக் கொண்டிருந்தான் தெய்வா.
அவனை யாரோ என்று நினைத்தே நடுங்கிக் கொண்டிருந்த ருக்குவிடம், “அம்மாடி ருக்கு இவன் தான் மா என் இரண்டாவது பையன் தெய்வா.” என வடிவேலு அடையாளம் காட்டவும் விழிகள் பிதுங்கி வெளியே வரும் அளவு அதிர்ச்சியுடன் அதிசயித்தவள் அவன் திரும்பி இருவரையும் பார்த்ததும், உடல் வெடவெடக்க பயத்தில் மயங்கியே விழுந்துவிட்டாள்.
“அட, ருக்கு, ருக்மணி ஐயோ என்னம்மா ஆச்சு உனக்கு.” இன்னும் துண்டிக்கப்படாமல் இருந்த அழைப்பின் வழியே வடிவேலுவின் சத்தம் கேட்டு உள்ளே ஓட முயற்சித்த லீலாவைத் தடுத்துப் பிடித்து நிறுத்தினாள் ஊர்மிளா.
லீலா தவிப்புடன் தங்கையைப் பார்க்க வேண்டாம் என்பதாய் தலையசைத்த ஊர்மி, தன் கரங்களின் மீதிருந்த தமக்கையின் கரங்களில் லேசான அழுத்தம் கொடுத்து விடுவித்தாள்.
வடிவேலுவின் குரலில் கவனம் கலைந்து திரும்பிய தெய்வா அவர் அருகே வந்து, “நீங்க எங்கப்பா இங்க. காலையில் உங்களுக்கு உடம்பு சரியில்லன்னு செல்வா கத்திக்கிட்டு இருந்தான். இப்ப எப்படி இருக்கு.” என்பதாய் தந்தையின் நெற்றியில் கை வைத்துப் பார்த்தான்.
அவர் தான் எதிர்கால மருமகள்களைப் பார்த்ததில் இருந்து பத்து வயது குறைந்ததைப் போல் சுற்றுகிறாரே. சாதாரண சளிக்காய்ச்சல் அவரை என்ன செய்துவிடும். தெய்வாவின் கரம் அவர் சரியான உடல்நிலையை உணர்ந்ததும் தன்னால் நிம்மதி வந்து ஒட்டிக்கொண்டது அவனிடத்தில். அதற்குப் பிறகு தான் அவர் கால் அருகே தரையில் மயங்கிய நிவையில் இருந்த ருக்குவின் மீது பார்வையை பதித்தான்.
“ஆமா யாரு இந்தப் பொண்ணு. என்னாச்சு இவங்களுக்கு, மயக்கம் போட்டு விழுந்து இருக்காங்க. கழுத்தில் தாலி வேற இல்லை. யார் மேலையும் கம்ப்ளைண்ட் கொடுக்க கூட்டிக்கிட்டு வந்தீங்களா?” பொறுப்பான காவல் ஆய்வாளனாக விசாரித்தான் தெய்வா.
“அட அவசரத்துக்குப் பிறந்தவனே, உன் வாயில் வசம்பு வைச்சுத் தான் தேய்க்கணும். இவ என் இரண்டாவது மருமக டா. உன் கல்யாணத்துக்கு நான் பார்த்து இருக்கிற பொண்ணு.” கத்திவிட்டு தவிப்பாய் ருக்குவைப் பார்த்தார் வடிவேலு.
“அப்பா என்னப்ப திடீர்னு சொல்றீங்க.” அழகாக வெட்கம் வந்தது முரட்டு தெய்வராஜிற்கு.
“அதெல்லாம் ரொம்ப நாளா பார்த்துட்டு தான் இருந்தேன். கொஞ்ச நாள் முன்னாடி தான் இந்தப் பொண்ணை உனக்குன்னு முடிவு பண்ணேன். சரி உன்னைக் காட்டலாம் னு கூட்டிட்டு வந்தா, நீ அரக்கன் மாதிரி கையில் மாட்டின ஒருத்தனைப் போட்டு அந்த அடி அடிக்கிற.
எனக்கே பயமா இருந்தது. பாவம் பயந்த சுபாவம் உள்ள பொண்ணு. அதான் மயங்கிடுச்சு” லீலாவிற்கு என்ன பதில் சொல்வது என இப்பொழுதே தவிக்க ஆரம்பித்திருந்தார் பெரிய மனிதர்.
தெய்வாவின் கண்கள் ருக்மணியின் முகத்தை மென்மையாய் வருடியது. சாந்த சொரூபிணியாய், ஆலயத்தின் கர்ப்பக்கிரகத்தில் இருக்கும் அம்மன் சிலை உயிர்பெற்று வந்தது போல் இருந்தவளைப் பார்த்ததும் இன்னதென்று இனம்புரியாத பரவசம் உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை சீறிப் பாய்ந்தது. இதெல்லாம் முழுதாக ஒரு நிமிடம் மட்டும் தான்.
அடுத்த நிமிடம் முகத்தை பழையபடி கடுமையாய் மாற்றியவன் டேபிளில் இருந்த வாட்டர் பாட்டிலில் தண்ணீர் எடுத்து அவள் முகத்தில் சற்று வேகத்துடன் தெளித்தான்.
விழித்தவள் இரு கரம் கொண்டு சில நொடிகளுக்கு கண்ணை கசக்கிவிட்டு எதிரே இருப்பவனைப் பார்த்தாள். அவனைப் பார்த்ததும் அவன் அந்தக் கைதியைப் போட்டு அடித்த அடி நினைவுக்கு வர, “ஐயோ, நா நான் எதுவும் பண்ணல, என்னை அடிச்சிடாதீங்க.” கைகளை முகத்திற்கு நேரே வைத்து அவன் பார்வையில் இருந்து தன்னைக் காத்துக்கொள்ள முயன்றாள்.
“ஹலோ, நான் எதுக்குங்க உங்களை அடிக்கப் போறேன். எதுக்கு இப்ப தேவையில்லாம என்னைப் பார்த்து பயப்படுறீங்க. நான் என்ன பேயா, பிசாசா. உங்களை மாதிரியே இரண்டு கை, இரண்டு கால் இருக்கிற சாதாரண மனுஷன் தான். என்னைக் கொஞ்சம் பாருங்க.” என்றான். இதைச் சொல்லும் போது அவனுக்கு லேசாக சிரிப்பு கூட வந்தது, மீசை அடர்ந்த இதழுக்குள் மறைத்துக் கொண்டான்.
“மாமா, நான் வெளியே இருக்கேன்.” சொன்ன ருக்கு, அவர் பதில் சொல்லும் நேரம் வரை கூட காத்திருக்க விரும்பாமல், கடலைத் தேடி ஓடும் ஆறாக சகோதரிகளிடம் ஓடினாள்.
“என்னப்பா என்னைப் பார்த்து இந்த ஓட்டம் ஓடுறாங்க. வாழ்க்கை முழுக்க டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி தான் போகும் போல.” புன்னகையுடன் சொன்னவனை முறைத்தவர், “உன் முரட்டுத்தனத்தை குறைச்சுக்கோன்னு பல முறை சொல்லி இருக்கேன். ஏன்னு இப்ப புரியுதா? ஏற்கனவே போலீஸ்காரங்க மேல ஏதோ ஒரு விதமான பயத்துல இருந்த பொண்ணு, நீ போலீஸ் னு சொன்னதும் ஓடப் பார்த்துச்சு.
ஈரத்துணி போட்டு கோழியை அமுக்குற மாதிரி அதையும் இதையும் சொல்லி இங்க கூட்டிட்டு வந்தேன்.தேன் கூட்ட கல்லால் அடிச்ச மாதிரி அந்தப் பொண்ணை தலைதெறிக்க ஓட விட்டுட்ட. இனிமே அந்த பொண்ணு சம்மதிக்குமோ என்னவோ. இந்தக் காலத்தில் விட்டுக்கொடுத்துப் போகும் பொண்ணுங்க ரொம்பவே கம்மின்னு என் மரமண்டைப் பசங்களுக்குத் தெரிய மாட்டேங்கிதே ஆண்டவா.
இவனுங்களுக்குப் பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கவே எனக்கு இன்னும் பத்து வருஷத்துக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தை கொடு.” எனச் சற்று சத்தமாகவே வேண்டிக்கொண்டார்.
கசங்கிய உடை, தலைமுடி அனைத்தையும் சரி செய்துகொண்டே, “பத்து வருஷம் போதுமா? எனக்குப் பிறக்கப்போற குழந்தை வளர்ந்து, அவங்க கல்யாணத்தைப் பார்க்கிற வரைக்கும், நீங்க ஆரோக்கியமா இருந்தாகணும். அதனால மறுபடியும் கடவுள் கிட்ட வேண்டுதலை மாத்தி வேண்டிக்க ஆரம்பிங்க. நான் போய் உங்க மருமகளை சமாதானப்படுத்துறேன்.” என்றுவிட்டு வெளியே செல்ல முயன்றவனை மறித்தார் வடிவேல்.
”எனக்குன்னு பார்த்த பொண்ணு தானே, நான் போய் பார்க்கிறேன்.” நிதானமாகவே சொன்னான்.
“டேய் பாவம் டா சின்னப் பொண்ணு, ரொம்ப பயந்திடுச்சு. இப்ப நீ போனா இன்னும் பயந்திடுவா. அவளுக்குப் பக்குவமா எடுத்துச்சொல்லி இன்னொரு நாள் உன்கூட பேச வைக்கிறேன்.” அப்பா நாளை உனக்கு நிச்சயம் ஐஸ் வாங்கித் தருகிறேன் என சின்னக்குழந்தையை ஏமாற்றுவது போல தெய்வாவை ஏமாற்றப்பார்த்தார். அவன் வித்தகனுக்கே வித்தகன், தந்தையின் செயலுக்கான காரணம் புரியாதவனா என்ன.
“இந்தக் கதை எல்லாம் என்கிட்ட நடக்காது. இவங்க தான் என் பொண்டாட்டின்னு முடிவு பண்ணி, என்னைப் பத்தி எல்லாத்தையும் சொல்லி தானே கூட்டிக்கிட்டு வந்தீங்க. அப்புறம் எதுக்கு இப்படி ஓடுறாங்க. என்னைப் பார்த்தா குழந்தைங்களைப் பிடிச்சிக்கிட்டு போற பூச்சாண்டி மாதிரியா இருக்கு.
நானே போய் என்ன ஏதுன்னு விசாரிச்சிட்டு வரேன். மோர் ஓவர் கல்யாணத்துக்கு அப்புறமும் இதே மாதிரி பயந்தா, அப்பவும் நீங்களா வந்து சமாதானப் படுத்துவீங்க? அது அவ்வளவு நல்லா இருக்காது பாருங்க. அதனால் அவங்களைச் சமாதானப்படுத்த இப்ப இருந்தே பயிற்சி எடுத்துக்கிறேன்.” என்று தன் முழு சம்மதத்தை மறைமுகமாக சொல்லிவிட்டு ருக்குவைத் தேடிச்சென்றான் தெய்வா.
தெய்வா, தினமும் எத்தனையோ பெண்களை கடந்து வருபவன். அவன் மேல் மரியாதை கொண்டவர்களாக, அவன் மேல் ஆசைப் படுபவர்களாக, சில நேரம் அவன் மீது கோபப்படுபவர்களாக கூட அவன் பல பெண்களைப் பார்த்திருக்கிறான்.
ஆனால், அவனைப் பார்த்து இந்தளவு பயம் கொள்ளும் பெண்ணை இதுவரை பார்த்ததும் இல்லை, இனி பார்ப்பானா என்றும் தெரியாது. அவன் பார்த்த, பழகிய பெண்களில் இருந்து தனித்துத் தெரிந்தாள் ருக்கு.
ருக்குவைப் போன்ற சாத்வீக அழகியையும் அவன் இதுவரை பார்த்தது இல்லை. ஈரெதிர் துருவங்கள் இணையும் என்ற இயற்பியல் கோட்பாடு தங்கள் விஷயத்திலும் நடந்ததை நினைத்து சங்கோஜப்பட்டுக்கொண்டே நடந்தான்.
அவள் அழகிலும், குழந்தைத்தனமான பயத்திலும் முதல் அறிமுகத்திலே ஈர்க்கப்பட்டான் என்றே சொல்ல வேண்டும். அவனுக்கு அவன் மீது உள்ள நம்பிக்கையை விட, தகப்பன் மீது நம்பிக்கை அதிகம். அதனால் அவர் தேர்ந்தெடுத்த பெண்ணின் மீது தன் நம்பிக்கையை அழுத்தமாகவே பதித்து விட்டான். பெண்கள் மறைக்கும் உண்மை வெளிவரும் தருணம் மற்றவர்களை விட அதிகம் பாதிக்கப்பட போவது இவன் தான் என்பது தவிர்க்க முடியாத உண்மை.
ருக்கு, ருக்மணி… லேசாகப் புன்னகைத்த இதழ்களுடன் அவள் பெயரைச் சொல்லிப்பார்த்தான். பெயரே தித்தித்தது. அவள் தன் மனைவியாகப் போகிறவள், ஆதலால் இனி அவள் தன்னைப் பார்த்து பயம் கொள்ளக்கூடாது என்ற உரிமை பொங்கி எழவும் தான் அவளைத் தேடி தானே வந்தான்.
கால்கள் ஸிக்ஸேக்கில் பின்னிக்கொள்ள, நடப்பதே ஏதோ பறப்பது போல் இருந்தது. முகத்தில் பூத்த புது புன்னகையுடன் சுற்றியும் முற்றியும் தன்னவளைத் தேடியவன் அவள் எங்கும் இல்லாததைக் கண்டு முதலில் அதிர்ந்தாலும் தன் அப்பாவின் வண்டியில் புடவை முந்தானை ஒன்று வெளியே தெரிய கதவு அடைக்கப் பட்டிருப்பதைக் கண்டதும் அவள் உள்ளே தான் இருக்கிறாள் என்று அறிந்துகொண்டு காரின் அருகில் சென்றான்.
ஆனால், உண்மையில் அது லீலாவின் முந்தானை. ஸ்டேஷனுக்குள் இருந்து அழுகையுடன் ஓடி வந்த ருக்கு, கார் கதவைத் திறந்துகொண்டு போராடி தன் பாசமான அக்காவிற்கும், தைரியமான தங்கை ஊர்மிளாவுக்கும் இடையே அமர்ந்து கொண்டு அழ ஆரம்பித்தாள். இந்த ஆர்ப்பாட்டங்களில் லீலாவின் புடவையோடு சேர்த்து காரின் கதவு அடைக்கப்பட்டுவிட்டது.
“அக்கா, எனக்கு இந்தக் கல்யாணம் வேண்டாம் கா. எனக்கு அவரைப் பார்க்கவே பயமா இருக்கு. உள்ளே ஒருத்தனைப் போட்டு அந்த அடி அடிக்கிறார். அந்த அடியில் ஒரு அடி என் மேல விழுந்தாக் கூட நான் அங்கேயே செத்திடுவேன் அக்கா.
ப்ளீஸ் கா, மாமாகிட்ட சொல்லுங்க. எனக்கு இந்தக் கல்யாணம் வேண்டாம்.” மிட்டாயை எதிரியிடம் பறிகொடுத்த குழந்தையின் நிலையில் பதறி அழுபவளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்ட லீலா, அவள் முதுகைத் தேய்த்து விட்டு ஆசுவாசப்படுத்த துவங்கினாள்.
அந்த நேரம் கார் கதவின் கண்ணாடி தட்டப்பட பின்சீட்டில் இருந்த மூவர் முன்சீட்டில் இருந்த தேவகி என நால்வரும் ஒரே நேரத்தில் பதற்றமாகினர். இவர்களின் நல்லநேரம் இவர்களால் வெளியே நிற்பவனைப் பார்க்க முடிந்தது, ஆனால் அவனால் உள் இருப்பவர்களைப் பார்க்க முடியவில்லை.
“யார் இந்த போலீஸ்.” ஊர்மி யோசனையாக கேட்க, “இவர் தான் நான் சொன்ன ரவுடி போலீஸ்.” சகோதரிகள் உடன் இருக்கும் தைரியத்தில் நான்கு வார்த்தை சேர்ந்தார் போல வந்தது ருக்குவிற்கு.
“ஹேய், என்ன பேச்சு இது. அவர் உன்னைத் தேடி தான் வந்து இருக்கார் போல. போய் அவர்கிட்ட பேசு.” என்ற லீலாவிடம் கண்டிப்பான தந்தையின் தோரணை இருந்தது.
“என்ன அக்கா விளையாடுறியா?” என்னால முடியாது, மரியாதை காற்றில் பறந்தது ருக்குவிடம்.
“ப்ச் அக்கா, அங்க பாரு மாமா எவ்வளவு அழகா சிரிச்சுக்கிட்டே நிக்கிறாருன்னு. நீ என்னமோ வில்லன் ரேன்ஞ்சுக்கு பில்டப் பண்ண. ஆனா மாமாவைப் பாரு எவ்வளவு அழகா கியூட்டா ரொமேன்டிக் ஹீரோ மாதிரி இருக்காரு.” போலீஸ் மாமனின் தோற்றம் பிடித்துப்போக, ருக்குவிற்கு அருகில் அவன் நின்றால் ஜோடிப்பொருத்தம் நன்றாக இருக்குமே என யோசித்தாள் தேவகி.
கற்பனையே இனிப்பு சாகரத்தில் அவளை மூழ்கடிக்க இளையவளுக்கு தெய்வாவைப் பிடித்துவிட்டது. ஆனால் அவனுக்குரியவளே இதைக் கெடுத்துவிடுவாள் போலவே எனக் கடுப்பாக வந்தது அவளுக்கு.
“அப்ப அவரை நீயே கட்டிக்கோ போ.” சாதாரணமாகப் பேசிய ருக்கு அறிய மாட்டாள், என்ன தான் கோபமானவனாக இருந்தாலும் சகோதரர் நால்வரில் தெய்வா தான் சரியான லவ்வர் பாய் என்று.
“ருக்கு, என்ன பேச்சு இது. அக்கா நான் சொல்றேன். அவர்கிட்ட போய் பேசு. பயப்படாம பேசு. அதுக்கு அப்புறமும் உனக்கு கல்யாணம் வேண்டாம் னு தோணுச்சுன்னா நான் மாமா கிட்ட பேசுறேன். உன்னோட சம்மதம் இல்லாம அக்கா உனக்கு எதையும் கொடுக்க மாட்டேன். இப்ப போய் பேசு.” தீர்மானமாகச் சொன்னாள் லீலா.
ருக்குவின் பயந்த சுபாவத்தை சிறிதளவேனும் கட்டுப்படுத்த இதைவிட்டால் வேறு வழி இல்லை என்பதில் அத்தனை உறுதியாக இருந்தாள் லீலா. ஒருவழியாகத் தங்கையைச் சரிகட்டி, தண்ணீர் குடிக்க வைத்து, அழுத அவள் முகத்தை அழுந்த துடைத்து, தலைமுடியை ஒதுக்கி பொட்டை நேர்படுத்தி வெளியே நிற்கும் தெய்வாவின் கவனம் சிதறும் நேரத்திற்காக காத்திருக்க ஆரம்பித்தாள் லீலா.
அந்நேரத்தில் அவனுக்கு ஒரு போன் வர அதை எடுத்துக்கொண்டு சற்று தூரம் நகர்ந்தான். அந்த நேரத்தை சரியாகப் பயன்படுத்தி தாங்கள் இருப்பது வெளியே தெரியாமல் ருக்குவை வெளியே அனுப்பி வைத்தாள் லீலா. கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டதும் திரும்பிய தெய்வா ருக்குவைப் பார்த்ததும் புன்னகைத்தபடி அவள் அருகே வந்தான்.
தெய்வா அருகே வந்ததும் ருக்குவின் இதயம் தன் துடிப்பை அதிகமாக்க, சேலை முந்தானையை முன்னால் கொண்டு வந்து தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கசக்கினாள். தலை வேறு பூமியைப் பார்த்தவாறு நின்று கொண்டு நிமிர்வேனா என அடம்பிடித்தது.
“ரொம்ப நெர்வஸா இருக்கீங்களா? நான் வேணுமுன்னா காரில் இருந்து தண்ணீர் எடுத்துத் தரவா.” பேச்சை ஆரம்பித்த தெய்வா காரின் முன்பக்க கதவில் கை வைக்க, பதறிப்போன ருக்கு, ‘இல்ல’ என கத்திவிட்டு,
“அதுவந்து, வந்து நான் என்ன சொல்ல வந்தேன்னா எனக்கு தண்ணீர் வேண்டாம்.” என்றாள் திக்கித்திணறி. இரண்டே வரி தான் இதைச் சொல்வதற்கே , புதிதாய் பிறந்த சிசுவைப் போல் தடுமாறினாள்.
நிழல்கள் இரண்டும் உரசும் அளவு தன் அருகாமையில் நின்றிருந்தவளின் தடுமாற்றத்தை இரசித்த தெய்வா, “நானும் நெர்வஸா தாங்க இருக்கேன். எனக்குத் தண்ணீர் வேணும்.” என்றவாறு காரை நெருங்கினான்.
“இல்ல, அதுவந்து, ஆங் காரில் தண்ணீர் இல்லை.” எப்படியும் தன் சகோதரிகளைக் காப்பாற்றிவிட வேண்டும் என்ற நினைப்பில் பயத்தை குறைத்து பேச்சை வளர்த்தாள் ருக்கு.
“நீங்க சரியா பார்த்து இருக்க மாட்டீங்க. அப்பா காரில் எப்பவும் தண்ணீர் வைச்சிருப்பாரு.” என்றவண்ணம் காரின் முன்பக்க கதவைத் திறந்தே விட்டான் தெய்வா.
“போச்சு டா நாம மாட்டினோம்.” என்பது போல் காரில் இருந்த பெண்கள் மூவரும் முழிக்க ஆரம்பித்தனர்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
12
+1
+1
1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


எங்களுக்கும் தெய்வா தான் லவ்வர் பாய்ன்னு தெரிஞ்சு போச்சு … அந்த பெரிய மனுஷனை போட்டு எல்லாரும் என்ன பாடு படுத்துறாங்க … அவரும் நல்லா பேசுறார் 😜😜😜😜