
காதல்-1
தனக்கு முன்னால் இருக்கும் அந்த குளுமையான மலை பிரதேசத்தை கண் இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தாள் அவள்.
வழமைக்கு மாறாக அவள் மனம் இன்று மிகவும் மன உளைச்சலில் இருக்க , அந்த கடுமையான மனநிலையில் இருந்து கலைந்து அவளது மன உளைச்சலை போக்கும் ஒரே இடமான புத்தகத்தை தேடி சென்றாள்.
வழமையாக புத்தகம் படிப்பது அவளது அன்றாட பழக்கமாக இருந்தது. அவள் சிறிய வீட்டில் இருந்த ஒரு குட்டி அறையை திறந்தாள் , அவள் நிற்பதற்கு மட்டுமே இடம் இருந்தது மற்ற இடம் எல்லாம் புத்தகங்களால் நிறைந்த வண்ணம் இருக்க கண்களை அழகாக சூழ விட்டவள் அவள் கைகளுக்கு வாகாக வைத்திருந்த அந்த புத்தகத்தை கையில் எடுத்தாள்.
ஏனோ அந்த புத்தகத்தை கையில் எடுத்தாலே அவளது பாதி துயர் தீர்ந்ததை போல் ஒரு எண்ணம் இருக்கும். இன்றும் அந்த துயரை போக்குவதற்கு தானே அந்த புத்தகத்தை கையில் எடுத்தாள். தன் நெஞ்சோடு கட்டி கொண்டு அந்த அறையில் உள்ள மீதி புத்தகங்களை நோட்டம் விட்டவாரு நின்று கொண்டிருந்தாள் சாயாலி.
தேயிலை தோட்டத்திற்கு வேலைக்கு செல்பவள். அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து தோட்டத்திற்கு சென்றாள் மதியம் பன்னிரெண்டு மணிக்கு வீடு வந்து விடலாம். அப்படி தோட்ட வேலை செய்து சம்பாதித்த பணத்தில் வாங்கிய புத்தகங்கள் தான் இவைகள். இவனை திருமணம் செய்து கொள் என்று கூறினால் கூட எதுவும் பேசாமல் அமைதியாக தலை ஆட்டும் ரகம், புத்தகத்தை மட்டும் அப்படி தலை ஆட்டி வாங்கி விட மாட்டாள். ஒரு புத்தகத்தை வாங்க அவளுக்கு குறைந்தது 10 நிமிடங்களாவது தேவைப்படும்.
அந்த புத்தகத்தில் அப்படி என்ன ஆராய்ந்தாள் என்பது அவளுக்கு மட்டுமே வெளிச்சம். புத்தகம் வேண்டுமா உணவு வேண்டுமா என்று கேட்டால் புத்தகம் போதும் என்று கூறும் புத்தக பிரியை அவள். ஆண்களுக்கு பெண்கள் மீதும் பெண்களுக்கு ஆண்கள் மீதும் வருவது தான் காதலா?? இதோ புத்தகத்தின் மீது அவளுக்கு , அவள் கைகளில் புரளும் புத்தகத்திருக்கும் அப்படி ஒரு காதல்! இருவரும் மாறி மாறி காதலித்து கொள்கின்றனர்.
அப்படி அந்த சொற்ப வருமானத்தில் அவள் சேர்த்து வைத்த ஒரே சொத்து அந்த புத்தகங்கள் தான். தன் நெஞ்சோடு கட்டி கொண்ட புத்தகத்தை எடுத்து கொண்டு ஜன்னலுக்கு அருகில் இருக்கும் நாற்காலியில் அமர்ந்து கண்களை மூடி ஒரு பக்கத்தை திறந்தாள். பக்கம் என் 234.. அதில் பொறிக்கப்பட்ட வாக்கியம்..
வேலியை தாண்டி வளரும் கள்ளிசெடிகளுக்காக நாம் வேலியை முறிப்பதில்லை..!
மனம் என்னும் வேலியை உடைத்து வளரும் உளைச்சல் என்னும்
கள்ளிசெடிக்கு மட்டும் முக்கியத்துவம் எதற்கு????
ஏனோ அவளுக்காகவே எழுதப்பட்டதை போல் இருந்தது அந்த வாக்கியம். இதுதான் இதற்குத்தான் இந்த புத்தகத்தை தேர்வு செய்தாள். அவளது மன கவலைகளை தீர்க்க கூடிய ஒரே மருந்து இந்த புத்தகம் தான்.
இதில் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால்.. மனம் அமைதியாக இருக்கும் பொழுது மற்ற புத்தகங்களை நாடுபவள் , அதே நேரம் மனம் அமைதியற்று இருக்கும் பொழுது இந்த புத்தகத்தை எடுத்து கண்களை மூடி ஒரு பக்கத்தை திறந்து பார்ப்பாள். அவளுக்கென்று ஒரு வாக்கியத்தை அதில் எழுதி இருப்பார் எழுத்தாளர்.
அதுவரை கூட்டி இருந்த இதழ்கள் அந்த வாக்கியத்தை படித்தவுடன் சற்று விரிந்து கொடுத்தது. தனது தளிர் கரங்களால் அந்த வாக்கியத்தை விரல் கொண்டு வருடியவள்.. இதுவரை அமைதியில்லாது அலைந்து கொண்டிருந்த மனதை சற்று தெளிவு படுத்திய எண்ணத்தோடு வெளியே வர அவளது அன்னை சத்தமிட்டார்.
“சாயு தோட்டத்துக்கு நேரம் ஆச்சு இன்னும் கிளம்பாம அந்த புத்தகத்தை போட்டு பிரட்டிட்டு இருக்கியா , அப்படி என்னதான் இருக்கோ அந்த புத்தகத்தில , உன்ன கஷ்ட பட்டு படிக்க வச்சது தப்பா போச்சு ஒரு ரூம் முழுக்க புத்தகம் வாங்கி வச்சு படிச்சா நல்லாவா டி இருக்கு, நீ புத்தகம் வாங்குன காசுக்கு ஒரு வீட்டை கட்டி இருக்கலாம் ” என்று தேனு புலம்பி கொள்ள.. அவரது சத்தம் கேட்டதும் தோட்டத்திற்கு கிளம்ப தயாரானாள். தேனு பேசிய பேச்செல்லாம் அவள் அன்றாடம் கேட்டு பழகிய பேச்சுக்கள் தான் அதனால் அவள் மனதை பெரிதாக பாதிக்கவில்லை.
இப்படி வசவு கொடுப்பவர் தான் எங்காவது புத்தக கடை போட்டிருந்தால் முதல் ஆளாக வந்து மகளிடம் கூறி வாங்க சொல்லி கூறுவார். தன் மகளை பற்றி தலை முதல் கால் வரை அறிந்தவர் அல்லவா , அவளுக்கென்று இருப்பது அந்த புத்தகமும் அவரும் தான். என்னதான் மகளை திட்டி அனுப்பினாலும் அவள் டேபிலில் வைத்து சென்ற புத்தகத்தை எடுத்து பத்திரப்படுத்தி வைத்து விடுவார்.
கூடையை தூக்கி கொண்டு தேயிலை தோட்டத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் சாயாலி.
தலையில் துண்டை வைத்து சுறுமாடு சுருட்டி வைத்து அதில் பெரிய கூடையை தலையில் மாட்டி சுமந்து கொண்டு மலை பகுதியை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். வழியில் அவளுடன் வேலை செய்யும் ஆட்கள் சேர்ந்து விட ஒரே பேச்சும் கலாட்டாவுமாக சென்றாலும் அனைத்திற்கும் சிறு சிரிப்பை மட்டுமே பதிலாக கொடுப்பாள்.
மலை காட்டுக்குள் ஏறி நின்று கூடையை கழற்றி தன் அருகில் வைத்தவள், அவள் அணிந்திருந்த பாவடையை தூக்கி இடுப்பில் சொருகினாள். சிவப்பு நிற பாவாடையின் மேலே ஆண்கள் அணியும் ஊதா நிற பூ போட்ட சட்டை மட்டுமே அவளது ஆடை.
இடைக்கு மேல் தூக்கி சொருகிய வண்ணம் கட்டரை எடுத்து அழகாக அளவான பாங்குடன் அந்த தேய்யிலைகளை வெட்ட துடங்கினாள் சாயாலி.
கைகள் தான் வேலையில் இருந்து, ஆனால் மனம் ஒரு நிலையில் இல்லை. அருகில் நின்று வேலை செய்து கொண்டிருந்த மேகலை ” யாத்தா சாயி நீ கவலை படாத, உன் கவலை எல்லாம் தீத்து வைக்க உன் வீட்டுக்காரன் வெள்ளை குதிரையில வருவான் பாரு ” என்று கூறி வைக்க அவர் சொன்ன வெள்ளை குதிரையை நினைத்து பார்த்தவளுக்கு சிரிப்பு தான் வந்தது.
‘உண்மையாவே வெள்ளை குதிரையில வந்தா எப்படி இருக்கும் ‘ என்று மனதிற்குள் ஒரு முறை நினைத்து பார்த்தாள். முகம் தெரியவில்லை என்றாலும் ஒருவன் வெள்ளை குதிரையில் அந்த மலை பாதைகளில் வருவதை போல் இருந்தது.
மேகலை அவளை உழுக்க அதில் தன்னிலை அடைந்தவள் சிறு சிரிப்பை உதிர்க்க ” என்ன தாயி கனவுல போயிட்ட போல ” என்று சிரித்து விட, பதிலுக்கு அவளும் “ம்ம்” என்று தலை ஆட்டி சிரித்தாள்.
***
கரங்கள் நடுங்க கணக்கு வழக்கு நோட்டை கைகளில் வைத்து கொண்டு உள்ளே நீ செல்வதா நான் செல்வதா என்று போட்டி போட்டு கொண்டிருந்தனர்.
” யோவ் போன முறை நான் போய் ஒரு அறை விட்டாரே பார்க்கலாம் இப்போ வரைக்கும் காது குய்யினு கத்துது, சரியாகி ரெண்டு நாள் தான் ஆகுது இப்போ திரும்ப போய் காது போச்சுன்னா என் பொண்டாட்டி என்ன வீட்ல சேர்க்க மாட்டாயா ” என்று அந்த மனிதன் வெளிப்படையாகவே கதற
அருகில் உள்ளவன் வேறு வழி இல்லாமல் நோட்டை வாங்கி கொண்டு உள்ளே நுழைந்தான். கரங்கள் நடுங்க அதை டேபிளில் வைத்தவிட்டு ” சார் இது இப்ப கடைசி மாசத்தோட கணக்கு ” என்று பவ்வியமாக கூற…
எதிரே உள்ளவனை தீ பார்வை பார்த்தவன் அமைதியாக அந்த நோட்டை எடுத்து முதல் பக்கத்தை ஒரு நிமிடம் பார்த்திருப்பான் அடுத்த நொடி அந்த நோட் பறந்து சென்று வாசலில் விழுந்தது. அந்த புத்தகம் வெளியே போவதற்கு முன்னே உள்ளே இருந்தவன் வெளியே ஓடி இருந்தான்.
” டாம் இட் ” என்று உள்ளுக்குள் புழுங்கியவன்.. அவனது அடுத்தகட்ட வேலையை வேண்டா வெறுப்பா பார்க்க தொடங்கினான்.
அப்பொழுது அவனது அறை கதவை திறந்து கொண்டு கையில் ஒரு பார்சலுடன் உள்ளே நுழைந்தாள் அவனது பிஏ பிரீத்தி..
“சார் நம்ம ஆப்போனென்ட் கம்பனில இருந்து டீல் ஓகே ஆனதுக்கு கிஃப்ட் அனுப்பி இருக்காங்க” என்று அவன் அனுமதிக்காக அவள் காத்திருக்க , கையை டேபிளை நோக்கி காட்டி விட்டு கணினிக்குள் தலையை புகுத்தினான்.
ஒரு மணி நேரம் அதே வேலையை செய்து அழுத்து போக கைகளை முறுக்கி சோம்பல் முறித்து நிமிர்ந்து அமர்ந்தவன் கண் முன்னே அந்த பரிசு பொருள் தெரிய , கைகள் தானாக அதை எடுத்து பிரிக்க ஆரம்பித்தது.
ஒரு கட்டத்தில் முழு கவரை நீக்கி விட்டு பரிசை பார்த்தவனது விழிகள் சிவந்து போக.. அடுத்த நொடி எதையும் யோசிக்காமல் லைட்டரை எடுத்து பற்ற வைத்து எரிக்க தொடங்கினான்.
பரிசில் இருந்த அழகான புத்தகமோ தீயில் கரியாகி கொண்டிருந்தது. புத்தகம் எரிவதை அப்படி ஒரு மன நிறைவுடன் பார்த்து கொண்டிருந்தான் தமிழ் மறவன்.
சனா💖

