Loading

அத்தியாயம் – 3

அன்றைய இரவு அன்று நடந்த நிகழ்வுகளை நினைத்தபடியே மெத்தையில் படுத்திருந்தாள் நித்திலா,..

அடுத்த மாதம் சுபமுகூர்த்தில் விக்ராந்த்-நித்திலாவின் திருமண தேதியை குறித்திருந்தனர்,. நித்திலாவின் மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தது, அவன் சொன்னதையும் மீறி பிடித்திருக்கு என்ற வார்த்தையை சொல்லி தானே சிங்கத்தின் வலையில் மாட்டி கொண்டது போல இருந்தது அவளுக்கு,….

இப்போது நினைத்தால், தானே இதையனைத்தையும் நிறுத்தி விடலாம், ஆனால் அப்படி அவள் செய்யாமல் இருக்க காரணம் லட்சுமன மூர்த்தி என்பது தான் உண்மை….

ஆம்…. நேற்று மதிய நேரத்தின் போது நித்திலாவிற்கு புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்தது, அவள் யோசனையுடன் அதை ஏற்று பேசிய பின்னர் தான் அது லட்சுமண மூர்த்தி என தெரிய வந்தது,….

அவர் தன்னை சந்திக்க வருமாரு நித்திலாவிடம் கூறினார், நித்திலாவிற்கு அவருடன் ஓரளவு பழக்கம் இருந்தது, தன் தாத்தாவின் நண்பன் அவரின் தந்தை என்ற வழியில்,… எனவே அவளும் மறுக்க முடியாமல் அன்று மாலை லட்சுமண மூர்த்தியை சந்திக்க சென்றாள்,….

அது ஒரு உயர்ரக ஹோட்டல், அவள் அவருக்காக காத்திருந்த நேரம் சற்று தாமதமாகவே வந்தார் அவர்…..

“ஸாரிம்மா…. ரொம்ப நேரம் வெயிட் பண்ண வச்சிட்டேன்னா, வர வழிய டிராஃபிக்” அவர் பாந்தமாக சொல்ல….”பரவால்ல அங்கிள்” என்றவள் அவருக்கு எதிரிலிருந்த நாற்காலியில் அமர்ந்தாள்,….

அவர் தன்னை எதற்காக வர சொல்லிருக்கிறார் என்பது புரியாத நித்திலா கேள்வியாக அவரை பார்த்தாள்,… அவரும் இழுக்காமல் நேராக விஷயத்திற்கு வந்தார்,….

“என்னோட ரெண்டாவது மகனுக்கு உன்னை பெண் கேட்டு உன் தாத்தாகிட்ட பேசி, நாளைக்கு உன்னை குடும்பத்தோட பொண்ணு பார்க்க வர இருக்கோம், அது உனக்கும் தெரியும்” என ஆரம்பித்தவரை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள் நித்திலா….

“நான் டைரக்டாவே சொல்லிடுறேன்மா, என் பையனுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை” அவர் சொல்ல, இத்தனை நேரம் என்னவோ ஏதோ என்று படபடப்புடன் இருந்த நித்திலாவின் முகத்தில் அப்போது தான் பதட்டம் குறைந்தது, “இவ்வளவு தானா அங்கிள், நான் வேற என்னவோன்னு நினைச்சு பயந்துட்டேன், பரவால்ல அங்கிள் தாத்தாகிட்ட சமாளிக்கிற வேலையை நான் பார்த்துகிறேன்” என்றாள் புன்னகையுடன்,…

“இல்லமா,. நான் என்ன சொல்ல வரேன்னா என் பையனுக்கு இதுல விருப்பம் இல்ல தான், ஆனா நீ தான் என் வீட்டுக்கு மருமகளா வரணும்னு நான் ஆசைப்படுறேன்” என்றவரை புரியாமல் குழப்பமாக பார்த்தாள் நித்திலா….

“என் பையன் கொஞ்சம் கோபக்காரன்மா, என்ன காரணம்னு தெரியல கல்யாணம் வேணாம்னு ஒரே பிடியா நிக்கிறான், அவன் ஒன்னு நினைச்சிட்டா அது படி தான் நடக்கணும், இல்லனா ரொம்ப கோபப்படுவான், இப்போ கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு பிடிவாதம் பண்ணுறான், அவன் இப்படி பண்ணுறான் அப்டிங்கிறதுக்காக ஒரு தகப்பனா அப்படியே விட்டுட முடியலமா என்னால, அவனும் மனைவி குழந்தைன்னு குடும்பமா சந்தோஷமா இருக்கணும்னு நான் ஆசை பட மாட்டேன்னா, அவனுக்கு அது புரியமாட்டேங்கிது” தன் மனக்குமுறல்களை அவர் அவளிடம் கொட்ட,….”இதுல நான் என்ன பண்ணனும்னு எனக்கு புரியல அங்கிள்” என்றாள் பரிதாபமாய்,….

“என் பையன் என் பேச்ச மீற மாட்டான்மா, ஆனா இந்த கல்யாண விஷயத்துல அவன் நான் சொல்றத கேட்க மாட்டேங்கிறான், ஒரு வாரத்துக்கு முன்னாடி எனக்கும் அவனுக்கும் இடையில பெரிய வாக்குவாதமே நடந்துச்சு கல்யாணத்தை பத்தி, என்னை மதிக்கிறதா இருந்தா இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லுன்னு சொன்னேன், அதோட அத்தனை நேரம் எனக்கு போட்டிக்கு போட்டி பேசிக்கிட்டு இருந்தவன் கப்சிப்புன்னு வாய மூடிக்கிட்டான், அவன் நான் சொன்னதை கேட்டு நடக்க முடிவு பண்ணிடான்னு நான் அந்த நிமிஷம் சந்தோஷ பட்டேன், அதெல்லாம் சில நொடிகள் மட்டும் தான்” என்று பேசிக்கொண்டே போனவரை அமைதியாய் பார்த்து கொண்டிருந்தாள் நித்திலா….

‘நீங்க என்ன பண்ணணுமோ பண்ணுங்க, இதை எப்படி சரிகட்டனும்னு எனக்கு தெரியும்’னு சொன்ன அந்த நொடி எனக்கிருந்த சந்தோசம் ஒன்னுமில்லாம காணாம போயிடுச்சு,

‘நீங்க எத்தனை பொண்ணு பார்த்தாலும் அந்த பொண்ணை நேர்ல சந்திச்சு ‘எனக்கு உன்னை பிடிக்கல’னு நான் சொல்ல மாட்டேன், ‘நீ என்னை பிடிக்கலனு சொல்லணும்’னு சொல்லி அவள் மனநிலையை உடைப்பேன், மாப்பிளையே இப்படி சொன்னா எந்த பொண்ணு தான் கல்யாணம் பண்ண சம்மதிப்பா, என் ரேஞ்சுக்கு இதெல்லாம் கம்மி தான், இன்னும் அடாவடியா நடந்துக்கலாம் தான், ஆனா வேணாம் உங்களுக்காக அமைதியாவே சரி கட்டுறேன்’ என்றுவிட்டு வெளியேறினான்,…

அன்று நடந்ததை நித்திலாவிடம் மறைக்காமல் சொல்லி காட்டிய லட்சுமணன்…..”நாளைக்கு உன்னை பொண்ணு பார்க்க வரும் போது அவன் உன்னை தனியா சந்திச்சு இந்த கல்யாணத்தை நிறுத்திட சொல்லி உன்கிட்ட சொல்லுவான், ஆனா நீ அப்படி பண்ணிடாதமா” அவர் கெஞ்சல் பார்வையுடன் சொல்ல….. இத்தனை நேரம் அமைதியாக அவர் பேசியதை கேட்டு கொண்டிருந்தவள்….”எப்படி அங்கிள், உங்களால என்கிட்ட இப்படி கேட்க முடியுது, உங்க பையனுக்கு விருப்பம் இல்லாத கல்யாணத்தை என்னை பண்ணிக்க சொல்றீங்க, ஸாரி அங்கிள் என்னால முடியாது, நான் கிளம்புறேன்” என அவள் இருக்கையிலிருந்து எழுந்தாள்….

“நான் சொல்றதை கொஞ்சம் புரிஞ்சிக்க முயற்சி பண்ணுமா, என் பையனுக்கு நீ வாழ்க்கை துணைவியா வந்தா அவன் வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கும்னு எனக்கு தோணுது” அவர் சொல்ல,…”உங்க பையன் வாழ்க்கை நல்லா இருக்கும் சரி, என் வாழ்க்கை?, உங்க பையன் கோபக்காரர்னு சொல்றீங்க, அவருக்கு பிடிக்கலனு தெரிஞ்சும் எப்படி நான் இதுக்கு சம்மதிக்கிறது அங்கிள், உங்க பையனை பத்தி மட்டும் யோசிக்கிறீங்களே, என் நிலமையை யோசிச்சி பார்த்தீங்களா?” என்றாள் சற்று கோபமாக….

“என் பையன் நீ நினைக்கிற அளவுக்கு கெட்டவன் கிடையாது, கோபம் அதிகமா வரும், ஆனா அவன் தங்கம் மா” அவர் மகனை விட்டுக்கொடுக்காமல் பேச,…. “எதுக்காக என்னை உங்க பையனுக்காக செலக்ட் பண்ணீங்க அங்கிள், தாய் தந்தை இல்லாத பொண்ணு கேட்க ஆளில்லனு நினைச்சு தான் இப்படியொரு முடிவு எடுத்தீங்களா?” என்றாள் ஆத்திரமாய்….

“ஏன்டா இப்டிலாம் பேசி என்னை வேதனை படுத்தற, நான் அப்படிலாம் நினைப்பேனா, என் அப்பா வார்த்தைக்கு வார்த்தை அவர் நண்பரான உங்க தாத்தாவை பத்தி தான்டா பேசிட்டு இருப்பாரு என்கிட்ட, அவருக்கு உன்னை எங்க வீட்டு மருமகளாக்கினனு ஆசை, நீ சின்னபிள்ளையா இருக்கும் போது உன் தாத்தா கூட என் வீட்டுக்கு வந்திருக்க, உன்னை தூக்கி வச்சி கொஞ்சிருக்காரு, என்னோட பையனுங்க ரெண்டு பேரும் உன் கூட சேர்ந்து விளையாடியிருக்காங்க, அப்போ தான் அவருக்கு அந்த ஆசை வந்துச்சுன்னு என்கிட்ட சொல்லி காட்டுவாரு, மூத்தவனுக்கு உன்னை கேட்கணும்னு தான் நாங்க முதல்ல நினைச்சோம், ஆனா நீ அப்போ படிச்சிக்கிட்டு இருந்த, அதான் இளையவனுக்கு பேசி முடிச்சிடலாம்னு இந்த ஏற்பாடு பண்ணேன், இதை பத்தி உன் தாத்தாக்கு கூட தெரியும்டா” என்றார் அவர்…..

“என்னவோ அங்கிள் ஆனா உங்க பையனுக்கு தான் இதுல விருப்பம் இல்லைல, அப்புறம் எப்படி நான் இதுக்கு சம்மதிக்கிறது, உங்க பையனுக்கு இதுல இஷ்டம் இல்லைனு பாட்டி தாத்தாக்கு தெரிஞ்சா கூட, நிச்சயமா  இந்த சம்மதம் வேண்டாம்னு நிறுத்திடுவாங்க” என்றாள்….

“எனக்கு தெரியும் டா, ஆனா அப்படி நடக்க கூடாது, என் மகன் மத்த பசங்க மாதிரி சந்தோஷமா வாழனும், அதுக்கு நீ தான் எனக்கு உதவி செய்யணும்மா, தயவு செஞ்சு என் பையனை கட்டிக்கிட்டு அவன் வாழ்க்கையை நீ தான் மா நந்தவனமாக்கனும்” அவர் கெஞ்சலுடன் கேட்க,…. “ஏன் அங்கிள் என்னை இப்படி தர்மசங்கட நிலைக்கு ஆளாக்குறீங்க, இந்த ஊர் உலகத்துல எத்தனையோ பொண்ணுங்க இருக்காங்கல்ல, அவங்கள கட்டி வைக்காம எதுக்கு என்னை நாடி வந்திருக்கீங்க” அவள் குரலில் வருத்தம் மேலோங்கியது.

அவர் ஒரு பெருமூச்சுடன் “என் அப்பா ஆசைக்காக மட்டும் நான் உன்னை என் வீட்டு மருமகளாக்கிகனும்னு நினைக்கலமா, உன்னை முதல் தடவை பார்க்கும் போதே நீ தான் என் விக்ராந்த்க்கு ஏத்த ஜோடியா இருப்பனு உள்ளுணர்வு சொன்னது, எனக்கு ஏன் அப்படி தோணியதுன்னுலாம் எனக்கு தெரியல, ஆனா எனக்கு ஏதாச்சும் ஒன்னு சரின்னு பட்டதுன்னா அது சரியா தான் அமஞ்சிருக்கு, மறுபடியும் சொல்லிக்கிறேன்மா, என் பையன் கெட்டவன் கிடையாது, ஆரம்பத்துல அவன் கொஞ்சம் உன்கிட்ட முரண்டு பிடிப்பான், அப்புறம் உன்கூட சேர்ந்து வாழ ஆரம்பிச்சுடுவான்மா, என் பையனோட வாழ்க்கைக்காக உன் கால்ல” என அவர் சொல்ல வர, அவள் துடித்துப் போனாள்..

“ஐயோ அங்கிள் என்ன பேசறீங்க, நீங்க என் அப்பா மாதிரி, நீங்க போய் என்கிட்ட” என பதறி போனவள், அடுத்த சில நிமிடங்களுக்கு எதுவும் பேசவில்லை, அந்த இடத்தில் சில நிமிடங்கள் மௌனம் மட்டுமே சுவாசித்தது, அவள் இதயம் வேகமாகத் துடித்தது, அவளது கண்ணுக்குள் அந்த முதிர்ந்த மனிதரின் கெஞ்சும் முகம், மகனின் நலனுக்காக மன்றாடும் பிம்பமாக ஓடியது,..

​அவள் பார்வை கீழே பதிந்தது, பிறகு மெதுவாக நிமிர்ந்து முடிவெடுத்த ஒரு ஸ்திரத்துடன்…
“சரிங்க அங்கிள் நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன், உங்களுக்காக சம்மதிக்கிறேன்” என்றாள்….

அவர் முகம் பிரகாசமானது, “ரொம்ப நன்றி மா, என் பையனை மட்டும் கருத்துல வச்சிக்கிட்டு இப்படி பண்ணிட்டேனு நினைக்காதே, அவன் என் பையன்ன்னா, நீ எனக்கு பொண்ணு மா, உனக்கு நான் எந்தவொரு தீங்கையும் அண்ட விட மாட்டேன்” என்று சொல்லி அவள் தலையை பாசத்துடன் கோதினார். அந்தத் தொடுதலில் ஒரு தந்தையின் பாதுகாப்பு உணர்வு இருந்தது, அவள் எடுத்த முடிவின் பாரத்தை லேசாக்க முயல்வது போல அவள் கண்கள் லேசாகக் கலங்கின. இனி என்ன நடக்கும் என்ற பயம் இருந்தும், அந்த அன்பான அரவணைப்பு அவளுக்கு சிறிய ஆறுதலைத் தந்தது.

நேற்று நடந்த சம்பவத்தை நினைத்து பார்த்த நித்திலாவிற்கு, தான் செய்தது சரியா? தவறா? என்பதை புரிந்து கொள்ள இயலாவிட்டாலும், லட்சுமணன் கேட்டுக்கொண்டதற்காக இதை செய்ய ஒப்புக்கொண்டாள்,….

‘நடக்கிறது எதுவாக இருந்தாலும் எல்லாம் இறைவனோட செயல், எந்த மாதிரி ஒரு கஷ்டமான சூழ்நிலை வந்தாலும் அதை தாங்கி கொள்ளும் சக்தியை எதுக்கு கொடு இறைவா’ என இறைவனிடம் மனமார வேண்டி கொண்டாள் நித்திலா,….

“மாப்பிளை நல்லா வாட்ட சாட்டமா நம்ம நித்திக்கு ஏத்தவரா தான் இருந்தாரு இல்லைங்க” வைத்தீஸ்வரி தன் கணவரிடம் வினவ,…. “ம்ம்ம்… ஆமா ஈஸ்வரி, நம்ம நித்தி கண்ணுக்கு ஏத்த ராஜகுமாரு இவர் தான்” என மகிழ்ச்சி பொங்க சொன்னார் ஜெயமோகன்…

“எனக்கு ஒரு விஷயம் தாங்க உறுத்தலாவே இருக்கு, மாப்பிளை வந்ததிலிருந்து சிரிச்சி பார்க்கவே இல்ல, நம்ம கிட்ட பேசவும் கூட இல்லை, போகும் போது போயிட்டு வரேன்னு சொல்லிட்டு போனாரு அவ்வளவு தான்,” ஈஸ்வரி குறைபட்டு கொள்ள,… “உன்கிட்ட ஏமா பேசணும், நம்ம பேத்தி கிட்ட பேசுனா போதாதா” என நகைத்தவர்,….”நம்ம நித்தி மாப்பிளை கிட்ட பேசிட்டு வந்திருக்கா தானே, அவளுக்கு அவரை பத்தி எதுவும் தப்பான அபிப்பிராயம் இருந்திருந்தா கண்டிப்பா கல்யாணயத்துக்கு சம்மதம் சொல்லிருக்க மாட்டா, நம்ம கிட்ட அவ எதையும் மறைக்க மாட்டா தெரியும்ல, அவளுக்கு ஏதாச்சும் உறுத்தல் இருந்தா கூட நம்ம கிட்ட வந்து பகிர்ந்துருப்பா, இப்போ வரைக்கும் அவ நம்ம கிட்ட எதுவும் சொல்லல, அப்படினா என்ன அர்த்தம், மாப்பிள்ளையை அவளுக்கு பிடிச்சிருக்குனு தானே அர்த்தம், அவ ஒரு நாளும் தப்பான முடிவை எடுக்கவே மாட்டா” ஜெயமோகன் சொன்ன பிறகு தான் ஈஸ்வரியின் மனதில் இருந்த உறுத்தல் குறைந்தது போல் இருந்தது, அவர் வார்த்தைகளில் இருந்த நம்பிக்கை, அவரது அச்சத்தை மறக்கடித்தது. இருவரும் தங்கள் பேத்தி எடுத்திருக்கும் விபரீத முடிவு தெரியாமல், நிம்மதியாக துயில் கொள்ள ஆரம்பித்தனர்….

​நாட்கள் விறுவிறுவென ஓடியது.
​இருவீட்டிலும் கல்யாண வேலைகள் தடபுடலாக நடந்து கொண்டிருந்தன. ஆனால் நித்திலா மட்டும் கல்யாணப் பொண்ணுக்குண்டான கலை எதுவும் இல்லாமல் நடமாடிக்கொண்டிருந்தாள். எதையோ இழந்தவள் போல ஒரு பாரம் தாங்கிய முகத்துடன் இருந்தாள்.

​”கல்யாணத்துக்குப் பிறகு நம்மளை விட்டுப் போறதை நினைச்சு தான் இப்படி இருக்கிறாள் போல” என பாட்டியும் தாத்தாவும் நினைத்துக் கொண்டனர்.

இது மணப்பெண்களுக்கு சகஜம் என்று எண்ணி அதை அவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் விட்டுவிட்டனர். நித்திலாவின் மனதின் ஆழத்தில் புதைந்திருந்த துயரம் யாருக்கும் தெரியவில்லை. நாட்கள் வேகமாக கடந்து
​அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த கல்யாண நாளும் வந்தது.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
12
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

4 Comments

  1. இந்த டுவிஸ்ட எதிர்பார்க்கல … நித்திலா வாழ்க்கையில இனி என்னல்லாம் நடக்க போகுதுன்னு பார்க்கலாம் …

  2. அடக்கடவுளே! பையனை குடும்பம் குழந்தை என்று பார்க்கும் ஆசையில் இப்படி கட்டாயத்தின் பேரில் ஒரு திருமணம் அவசியமா?
    வெளியில் இருந்து ஒரு பெண் வந்து அதுவும் அவளது முழு சம்மதம் இல்லாது வந்து இவர் மகனிடம் மாட்டிக்கொண்டு முழித்து அவன் வாழ்வை வசந்தம் ஆக்க வேண்டுமா? நல்ல எண்ணம்.
    ஏற்கனவே கோப குணம் கொண்டவன் தனது சொல்லையும் மீறி நடக்கும் திருமணம் எனும்போது எவ்வாறு நித்திலாவை நடத்துவானோ?
    பாவம் பாட்டி தாத்தா புது வரவிற்காக ஆவலோடு தனது பேத்தியின் திருமணத்தை எதிர்நோக்குகின்றனர்.
    என்ன நிகழப்போகின்றது என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

    1. Author

      ம்ம்.. பார்க்கலாம் மா, மிக்க நன்றி