Loading

அத்தியாயம் 13

 

இரவு நேரில் கேசவமூர்த்தியுடனும், அலைபேசியில் சுதாகருடனும் அரட்டை அடித்த ஜீவநந்தினி படுக்கையறைக்கு வரவே பத்து மணியானது.

 

உதயகீதனோ அடுத்த நாளைக்கு தேவையானவற்றை பத்தாவது முறையாக சரி பார்த்துக் கொண்டிருந்தான். ஏனெனில், மறுநாள் அவன் உழைப்பில் தயாரான மிகவும் முக்கியமான, பெரிய பிராஜெக்ட்டை வாடிக்கையாளரிடம் செயல் விளக்கம் கொடுக்கும் நாள்.

 

இது அவனின் கனவு என்றே கூறலாம். தானாக சொந்தக் காலில் நின்று இத்தனை பெரிதாக அவன் வளர்த்த நிறுவனம், இந்த பிராஜெக்ட்டால் இன்னும் பல மடங்கு உயரத்தை தொடும் வாய்ப்பிருக்கிறது.

 

அவனின் இந்த பதற்றம் உணர்ந்த ஜீவநந்தினி அதை தணிக்கும் பொருட்டு, “பாஸ், உங்களுக்கு அந்த முசுட்டு முசோ மூஞ்சி தான் செட்டாகுது. இந்த டென்ஷன் சுத்தமா செட்டாகல.” என்று கூற, போலியாக முறைத்தவனோ, “அதுக்கு தான் பட்டப்பெயர் எல்லாம் படுஜோரா வச்சுருக்கியே.” என்று கூறினான்.

 

அவன் இலகுவாக இருப்பது புரிந்தவளும், “பட்டப்பெயர் எல்லாம் இல்லாதது ஒரு வாழ்க்கையா? எனக்கே எனக்குன்னு எத்தனை பட்டப்பெயர் இருக்கு தெரியுமா? ஓட்டவாய், லொடலொட பெட்டி, காலி டப்பா – இப்படி பலது இருக்கு.” என்று கூற, “பட்டப்பெயரை என்னமோ பட்டம் வாங்குன மாதிரி பெருமையா சொல்ற?” என்றவனுக்கும் அவளைப் பற்றிய பேச்சு ஆர்வத்தை கொடுத்தது.

 

“இல்லையா பின்ன, பட்டப்பெயர் வாங்குறது எவ்ளோ கஷ்டமா தெரியுமா?” என்று அதற்கு கூட விளக்கம் கொடுக்க ஆரம்பிக்க, “ஹோல்ட் ஆன்… விட்டா, ‘இங்கு பட்டப்பெயர் வழங்கப்படும்’னு போர்டு வச்சு விளம்பரம் எடுத்துடுவ போல. உன்னை பேச விட்டு, நிறைய சம்பாதிக்கலாம் போல.” என்றான் அவன் கேலியாக.

 

“க்கும், பெரிய வியாபார காந்தம்னு நினைப்பு. வாயை திறந்தாலே, ஒன்னு காசு, பணம், துட்டு, மனி, இல்லன்னா வேலை, ஒர்க், காம் தான்ல!” என்று லேசாக எரிச்சல் எட்டிப் பார்க்க கூறினான் அவள்.

 

அதில் லேசாக புன்னகைத்தவனோ, “அப்போ ஜீவநந்தினி கிட்ட என்ன பேசுறதாம்?” என்று அவன் இயல்பாக கேட்க, அதைக் கேட்டவளுக்கு தான் தேகம் சிலிர்த்தது.

 

முதல் முறை, இயல்பாக அவள் பெயரை கூறியிருந்தானே!

 

அலுவலகத்தில் திட்டுவதற்கு அழைத்ததெல்லாம் கணக்கில் வராதவை!

 

ஏனோ, அந்த கணம் இருவரையுமே சொல்லத் தெரியாத, பெயரிடப்படாத உணர்வு ஆட்கொள்ள அதை கலைப்பது போல அலைபேசி இசைத்து அந்த அழகான தருணத்தை கெடுத்தது.

 

அவன் அலைபேசியை எடுக்க விரையும் போது, “ஜீவநந்தினி கிட்ட பியார், பிரேமா, காதல் பத்தி கூட பேசலாம்.” என்று கண்ணடித்து சொன்னவள், வேகமாக குளியலறைக்குள் சென்று மறைய, “பயந்தாங்கோலி!” என்று சொல்லி சிரித்தவனின் சிரிப்பு அலைபேசியில் தெரிந்த பெயரைக் கண்டு உறைந்து போனது.

 

அழைத்தது ராகவர்ஷினி தான்!

 

என்னதான், அவளைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் குற்றவுணர்வு தோன்றினாலும், அவள் காலையில் அலுவலகத்தில் செய்த தேவையற்ற கலாட்டா, சற்று எரிச்சலை கொடுத்திருந்தது உண்மையே.

 

இப்போது கூட, ‘அடுத்து என்ன செய்யப் போறாளோ?’ என்று தான் எண்ணியது அவன் மனம். இந்த மாற்றம் நல்லதற்காகவா?

 

தொடர்ந்து இசைக்கும் அலைபேசியை கையில் வைத்துக் கொண்டு சிந்தனையில் ஆழ்ந்து விட்டவனை யோசனையுடன் பார்த்தபடி அருகில் வந்தவள், எதேச்சையாக அலைபேசியை பார்க்க, அதில் ‘மை ராகா’ என்றிருந்தது.

 

அதைக் கண்டவளின் மனம், அத்தனை நேரமிருந்த இதத்தை தொலைத்தது. அவள் வந்ததை கூட உணராமல் இருந்தவனை ஒரு பார்வை பார்த்தவள், சத்தம் கொடுக்காமல் படுக்கையை நோக்கி சென்று விட்டாள்.

 

கிட்டதட்ட பத்து அழைப்புகள்! அவனை தொடர்பு கொள்ள வேண்டும் என்று ராகவர்ஷினி பகீரத பிரயத்தனம் மேற் கொண்டிருந்தாள் போலும்!

 

வெகுவாக யோசனைக்கு பின்னர் அழைப்பை ஏற்றவன், ஜீவநந்தினி படுத்து விட்டதை பார்த்து, அவள் உறக்கத்திற்கு தொந்தரவு தர வேண்டாம் என்ற எண்ணத்தில் பால்கனிக்கு சென்று விட, அதை சரியாக தவறான கண்ணோட்டத்தில் பார்த்தாள் ஜீவநந்தினி.

 

முனுக்கென்று கண்ணீர் வேற வந்துவிட, ‘இது ஒன்னு, ஆணாவூனா வந்துடுது!’ என்றவளுக்கு நேரம் காலமில்லாமல், அன்று ராகவர்ஷினி கூறியவை நினைவுக்கு வர, ‘அவ சொன்னது பலிச்சுடுமோ!’ என்ற எண்ணமே அவளை தற்சமயம் ஆட்டிப் படைத்தது.

 

அந்த நேரம், அது கட்டாய திருமணம் என்பதோ, அதற்காக தந்தையிடம் சண்டையிட்டாள் என்பதோ மறந்து தான் போனது!

 

*****

 

பால்கனி வரும்வரை எதுவும் பேசாமல் அமைதியாக இருந்த உதயகீதனின் மௌனத்தை தவறாக பொழிபெயர்த்த ராகவர்ஷினியோ, “என்கிட்ட பேசக்கூட பிடிக்கலையா உதய்? இல்ல, என்கூட பேசக் கூடாதுன்னு உன் புது பொண்டாட்டி ஆர்டர் போட்டாளா?” என்று கோபத்துடன் கேட்டாள்.

 

“ஷ், இப்போ எதுக்கு அவளை இழுக்குற?” என்று உதயகீதனும் கோபமாகவே வினவ, “ஓஹ், அவளை சொன்னா உனக்கு கோபம் வருதா? சும்மாவா, எந்த பொண்ணுக்கும் கொடுக்காத உன் பி.ஏ போஸ்டிங்கை அவளுக்கு கொடுத்துருக்க… உன் ஆஃபிஸ்ல என்னடான்னா, எல்லாரும் அவளை தாங்குறாங்க!” என்று பேச எண்ணியதை மறந்து என்னென்னவோ பேச, “எனஃப் ராகவர்ஷினி! நீ அடுக்கியதுக்கு எல்லாம் அவ டிசர்விங்கா இருந்தா. அதான் அவளுக்கு தானா கிடைச்சது.” என்றான் அவன்.

 

“ஹ்ம்ம், அப்போ நான் டிசர்விங் இல்லன்னு சொல்றியா?” என்று மல்லுக்கு நிற்க, “இந்த கம்பேரிசன் தேவையில்லாதது. நீ ரொம்ப காம்ப்ளிகேட் பண்ணிக்குற.” என்றான் சலிப்புடன்.

 

“ஹ்ம்ம், நான் உன்னை மாதிரி இல்ல உதய். என்னால ஈஸியா மூவான் ஆக முடியல. அதுக்காக பிடிச்சு தொங்கிட்டே இருக்கணும்னு நினைக்கல. நான் ஜெர்மனி போகப் போறேன். அதுக்கு முன்னாடி, என் ஃபிரெண்ட்ஸ் எல்லாரையும் கூப்பிட்டு ஒரு கெட்-டூ-கேதர் வைக்கலாம்னு பிளான் பண்ணி, அதுக்கு உன்னை இன்வைட் பண்ணலாம்னு தான் ஆஃபிஸ் வந்தேன். ஆனா, என்னை அங்க டிரீட் பண்ண விதம்… ச்சு, இனி நான் அங்க தேவையில்லாத ஆணி தான. அதான் நீயே சொல்லிட்டியே… விடு… நீ கண்டிப்பா உன் ஒய்ஃபோட அந்த பார்ட்டிக்கு வரணும்.” என்று உதயகீதனின் மனதை பாதிக்கும் வகையிலேயே கூறினாள்.

 

அவள் அடுக்கிய குற்றச்சாட்டுகளை கேட்டு கோபம் வந்தாலும், அவள் மனநிலை தெளிவாக இல்லை என்பதை புரிந்து கொண்டவன், அவன் கோபத்தை காட்டவில்லை. மேலும், இன்னும் சில நாட்களில் ஜெர்மனி சென்று விடுபவளை எதுவும் சொல்லி வலியை கொடுத்து விட வேண்டாம் என்றெண்ணியே அமைதியை கடை பிடித்தான்.

 

அவள் சொன்ன ‘பார்ட்டி’க்கு கூட செல்ல விருப்பம் இல்லை தான். இருப்பினும், அவள் மீண்டும் மீண்டும் வருந்தி அழைக்க, வருவதாக அரை மனதுடன் சம்மதம் தெரிவித்தான்.

 

அங்கு நடக்கப் போவதை பற்றி அறிந்திருந்தால் சென்றிருக்க மாட்டானோ?

 

*****

 

படுக்கையின் ஒரு புறம் போர்வையை முகம் முழுக்க போர்த்தி படுத்திருந்த மனைவியை பார்த்த உதயகீதன், ஒரு பெருமூச்சுடன் மறுபுறம் படுத்து விட, அதை உணர்ந்தவளும் மௌனமாகவே இருந்தாள்.

 

சற்று முன்னர், ரகசியமாக பகிரப்பட்ட பரிபாஷைகள் சத்தமே இல்லாமல் மறைந்து போயிருக்க, அதனிடத்தை பயமும் குழப்பமும் ஆட்கொண்டு விட்டது.

 

இருவரின் குழப்பத்திற்கும் காரணமான ராகவர்ஷினியோ அங்கு கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தாள்.

 

“எவ்ளோ ஈஸியா என்னை மறந்தது மட்டுமில்லாம, அவளுக்கு சப்போர்ட் பண்ணி என்னையே திட்டுற? உன்னை சும்மா விட்டுட்டு போக எனக்கு மனசு வரல உதய். கண்டிப்பா, இனி என்னை உன் வாழ்க்கை முழுக்க என்னை மறக்க மாட்ட.” என்று கூறியவள், யாருக்கோ அழைத்தாள்.

 

மறுமுனையில் இருந்தவன் அரைகுறை போதையில் இருந்தான் போலும், அவன் குரல் குளறலாக ஒலித்தது.

 

அது ராகவர்ஷினிக்கு பிடிக்கவில்லை என்றாலும் அவளின் காரியம் பெரிதாக தெரிந்ததால், அதை பொறுத்துக் கொண்டு, “ஹலோ, பிளான் எல்லாம் ரெடி தான?” என்று வினவினாள்.

 

“….”

 

“ஆமா, பார்ட்டி டைம் எல்லாம் தெரியும்ல? அதை விட்டா வேற சான்ஸ் இல்ல. எல்லாம் பெர்ஃபெக்ட்டா எக்சிக்யூட் பண்ணனும். உன்னோட ஆளுங்க எல்லாம் நம்பகமானவங்க தான?” என்று வரிசையாக கேள்விகளை அடுக்கியவள், அதற்கான பதிலையும் பெற்று கொண்டாள்.

 

“ஓகே, உனக்கு ஃபோட்டோ அனுப்புறேன். சரியா பார்த்து தூக்கு. ஆளை மாத்தி தூக்கிடாத.” என்று பல எச்சரிக்கையுடன் அழைப்பை துண்டித்தாள் ராகவர்ஷினி.

 

அவள் மனதில் காதல் மறைந்து பொறாமையும் மட்டுமே மிஞ்சி இருந்தது. தன்னை அவமானப்படுத்தி விட்டவர்களை பதிலுக்கு கஷ்டப்படுத்தி பார்க்க வேண்டும் என்கிற விபரீத எண்ணம் உருவாக, அவளின் குணமும் வளர்ப்பும் காரணமாகி விட்டது என்று தான் கூற வேண்டும்.

 

அவர்கள் இருவரும் தன்னை மறக்க கூடாது என்று எண்ணி அந்த காரியத்தை கையில் எடுத்திருந்தவளுக்கு தெரியாது, அவள் தான் அதை வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாமல் தவிக்க போகிறாள் என்று!

 

*****

 

மறுநாள், ஜீவநந்தினி வழக்கத்தை விட விரைவாக எழுந்து விட்டாள். முன்தினம் ஏற்பட்ட குழப்பம் மனதை தாக்கி, அதன் காரணமாக மூளையையும் மந்தமாகியதால் உறக்கம் அவளை எட்டவில்லை என்பது தான் அதற்கு காரணம்.

 

எப்போதும் வாய் ஓயாமல் பேசி சுற்றி வரும் மருமகள் ஏதோ யோசனையில் இருப்பதை கண்ட கேசவமூர்த்தி கூட இருவருக்கும் ஏதாவது பிரச்சனையா என்று சிந்தித்து, அவளை அப்படியே விடாமல் அவளின் கவனத்தை அவ்வபோது அவர் பக்கம் திருப்பிக் கொண்டு தான் இருந்தார்.

 

அத்தனை நாட்கள் அவரின் இல்லத்தில் தனிமையில் இருந்துவிட்டு வந்த சுதாகரும் கூட மகளின் வாடிய முகத்தை கண்டு கொண்டு காரணம் வினவினார்.

 

“ஒர்க் டென்ஷன்பா.” என்று அதனை சமாளித்தவளால், கணவனிடம் அதே காரணத்தை கூற முடியாதல்லவா?

 

“என்னாச்சு ஜீவி? ஏன் டையர்ட்டா இருக்க? ஹெல்த் பிராப்ளமா? ஃபீவர் கூட இல்லையே.” என்று அவள் கழுத்தை தொட்டு பார்த்து ஆராய்ந்த உதயகீதனிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் விழிக்க, தனக்குள் பேசிக் கொண்டிருந்தவளை உலுக்கி, “என்னாச்சு உனக்கு?” என்று அழுத்திக் கேட்டான்.

 

“அச்சோ, ஒன்னுமில்லாததுக்கு ஏன் எல்லாரும் காலைலயிருந்து கேள்வியா கேட்டுட்டு இருக்கீங்க?” என்று அவளின் இயலாமையை எரிச்சலாக வெளிப்படுத்தினாள் ஜீவநந்தினி. இதில் எங்கிருந்து அவன் பெயரை சுருக்கி அழைத்ததெல்லாம் அவள் கருத்தில் பதிய?

 

அவளின் தேவையற்ற கோபத்தை யோசனையாக பார்த்த உதயகீதன், “ஓஹ் ஓகே… இதே மனநிலையோட, நீ வர வேண்டாம்” என்றபடி வெளியேறி விட்டான்.

 

அவன் சட்டென்று அப்படி சொல்லிவிட்டு சென்றது அவளை வருத்தத்திற்கு உள்ளாக்கியது உண்மை என்றாலும், அவனின் முக்கிய நாளான இன்று, தன்னால் எவ்வித தடங்கலும் ஏற்படக் கூடாது என்பதால் அவளும் அமைதியாக வீட்டிலேயே இருந்து விட்டாள்.

 

இருவரின் முகமும் சரியில்லாததை கண்ட கேசவமூர்த்தி யோசனையுடன் இருக்க, மேலும், மகன் மருமகளை விட்டு அலுவலகம் சென்றதை கண்டு, அதற்கு மேலும் பேசாமல் இருக்க முடியாமல், “உங்களுக்குள்ள என்ன பிரச்சனைன்னு கேட்க கூடாதுன்னு தான் இருந்தேன்மா. ஆனா, நீ இப்படி தவிக்குறதை பார்த்து கேட்காம இருக்க முடியல. அவன் உன்னை ஏதாவது சொல்லிட்டானா? அதான் வருத்தமா இருக்கியா?” என்று கேட்டார்.

 

“க்கும், அவரு ஏதாவது சொன்னா, அவரே ஷாக்காகுற அளவுக்கு ஏதாவது பண்ணிடுவேன் மாமா.” என்று பழைய ஜீவநந்தினியாக மொழிந்தவள், “இது வேற மாமா…” என்று சொல்ல தயங்கினாள்.

 

“வேற என்ன பிரச்சனைமா. என்கிட்ட சொன்னா, எனக்கு தெரிஞ்ச சொல்யூஷனை நான் கொடுப்பேன்ல.” என்று கேசவமூர்த்தி கூற, தனக்குள்ளே வைத்து மறுகுவதை காட்டிலும், யாரிடமாவது பகிர்ந்தால் மனநிம்மதியாவது கிடைக்கும் என்பதால், முதல் நாள் ராகவர்ஷினி அலுவலகம் வந்தது, இரவு அழைத்தது, அதனால் அவள் மனதிற்குள் உண்டான குழப்பம் என்று அனைத்தையும் கூறி விட்டாள்.

 

அவள் கூறியதிலிருந்தே, மகன் மீதான மருமகளின் விருப்பத்தை அறிந்து கொண்ட கேசவமூர்த்திக்கு உள்ளம் குளிர்ந்து போனது. அவருள் இருந்த குற்றவுணர்வும் குறைந்து போனது. அவளின் விருப்பம் கேட்காமல், கிட்டத்தட்ட கட்டாய திருமணம் போலல்லவா நடந்தது அவர்களின் திருமணம்.

 

அவரின் பதிலுக்காக காத்திருக்கும் மருமகளை வாஞ்சையுடன் பார்த்த கேசவமூர்த்தி, “உனக்கு உதய் மேல சந்தேகமா நந்தும்மா?” என்று வினவ, “அந்த முசோ மேல எல்லாம் சந்தேகம் இல்ல மாமா. சும்மாவே சிடுசிடுன்னு இருக்குறவரு, அந்த ஃபோன் கால்லயும் அப்படி தான் பேசியிருப்பாரு.” என்று கூற, மானசீகமாக மகனுக்கு பாவம் பார்த்தார் தந்தை!

 

“பின்ன என்னம்மா குழப்பம்?” என்று கேசவமூர்த்தி வினவ, பெரும் தயக்கத்துடன், திருமணத்தன்று ராகவர்ஷினி கூறியதை சொன்னவள், “அவங்க அன்னைக்கு பேசுனது கொஞ்சம் டிஸ்டார்ப்பா இருக்கு மாமா. இத்தனை நாள் இல்லாம, இப்போ அவருக்கு கால் பண்றது… ம்ச், எனக்கு சொல்ல தெரியல… அதுக்காக, அவரு மேல சந்தேகம்னு இல்ல. என்னோட இன்ட்யூஷன், ஏதோ தப்பா நடக்க போகுதுன்னு சொல்லிட்டே இருக்கு.” என்றாள் ஜீவநந்தினி.

 

“ஹ்ம்ம், இதுக்கு சொல்யூஷன் உன்கிட்ட தான் இருக்கு நந்து. நடக்குறது நடக்க தான் போகுது. சோ, அதையே யோசிச்சு, மனசை போட்டு குழப்பிக்காத. ஜஸ்ட் கோ வித் தி ஃப்ளோ. பாசிடிவ்வா இரு, எல்லாம் நல்லதாவே நடக்கும்.” என்று கேசவமூர்த்தி கூற, மென்மையாக சிரித்தவள், “ம்ம்ம், எனக்கும் இந்த சீரியஸ் மூட் செட்டாகல மாமா. தேங்க்ஸ் ஃபார் ஹியரிங் மீ அவுட்.” என்று மற்ற வேலைகளை பார்க்க சென்றாள்.

 

அவளிடம் அப்படி கூறிவிட்டாலும், கேசவமூர்த்திக்கு சிறிது கோபம் எட்டிப் பார்க்க தான் செய்தது. மகனின் வாழ்க்கை அல்லவா?

 

உடனே, கிரிதரனுக்கு அழைத்து விட்டார் கேசவமூர்த்தி.

 

கிரிதரனும் கீதாஞ்சலியும் கனத்த மனதுடன், அப்போது தான் மருத்துவமனையை விட்டு வெளியே வந்திருந்தனர்.

 

மருத்துவ பரிசோதனையில் கீதாஞ்சலிக்கு கேன்சர் இருப்பது தெரிய வந்திருந்தது. என்னதான், மருத்துவர்கள் அதை குணப்படுத்தி விடலாம் என்று சொன்னாலும், அதனால் உண்டாகும் வலியையும் வேதனையையும் அவர்களால் தவிர்க்க முடியாதே.

 

அதை எண்ணி சோர்வுடன் வாகன தறிப்பிடத்தை நோக்கி நடக்கும் போது தான் கேசவமூர்த்தி அழைத்திருந்தார்.

 

கீதாஞ்சலியை ஒரு பார்வை பார்த்துவிட்டு, அழைப்பை ஏற்றார் கிரிதரன்.

 

எப்போதும் இல்லாத வகையில் சிறிது கோபத்துடனே பேசினார் கேசவமூர்த்தி. அதை ஸ்பீக்கர் வழியே கேட்டுக் கொண்டிருந்த கீதாஞ்சலியும் உணர்ந்தார்.

 

“உங்க பொண்ணு, என் பையனுக்கு ஏன் கால் பண்ணி டிஸ்டர்ப் பண்றா?” என்று எடுத்ததும் இப்படி அவர் கேட்க, என்ன பதில் சொல்வதென்று தெரியாமல், குழப்பம் பாதி அவமானம் மீதி என்று மௌனமாக நின்றிருந்தனர் ராகவர்ஷினியின் பெற்றோர்!

 

சில நொடிகள் மௌனமாக கழிய, “இனிமே, உங்க பொண்ணை கால் பண்ண வேண்டாம்னு சொல்லுங்க. இதை உங்க பொண்ணுக்காகவும் தான் சொல்றேன். அவங்க வாழ்க்கை முக்கியமில்லையா?” என்று சற்று நிதானமாக பேசிய கேசவமூர்த்தி, “இதை உங்க மகன் கிட்ட சொல்ல வேண்டியது தானன்னு நீங்க நினைக்கலாம்.” என்று கூற, கிரிதரன் திடுக்கிட்டார்.

 

ஏனெனில், மகளை குற்றம் சொன்னதும், அவர் மனதிற்குள் நினைத்தது அதுவே!

 

“அவன் கிட்டயும் நான் பேச தான் போறேன். இனிமே, உங்க பொண்ணு கால் பண்ணா எடுக்காதன்னு… அதான், அதுக்கு முன்னாடி உங்க கிட்டயும் சொல்லிக்குறேன்.” என்ற கேசவமூர்த்தி, அழைப்பை துண்டிக்க போக, “மூர்த்தி ஒரு நிமிஷம்…” என்றார் கீதாஞ்சலி.

 

மனைவி அவரிடம் பேச விரும்புகிறார் என்பதை உணர்ந்து கொண்ட கிரிதரன், அவரிடம் தலையசைத்து வாகனத்தை எடுத்து வர செல்ல, அவரின் புரிதலில் மனம் நெகிழ்ந்த கீதாஞ்சலி, அழைப்பில் காத்திருந்த கேசவமூர்த்தியிடம், “சாரி…” என்று வெகு நாட்களாக சொல்ல நினைத்து, சொல்லாமல் போனதை சொன்னார்.

 

வேறு எதுவோ என்று காத்திருந்த கேசவமூர்த்தி, நிச்சயமாக இதை எதிர்பார்க்கவில்லை.

 

அவர் அமைதியாக இருக்க, அதற்கு மேல் எதையும் விளக்க விரும்பாத கீதாஞ்சலி, “இனி, என் பொண்ணு கால் பண்ண மாட்டா. உங்க மகனோட வாழ்க்கை சந்தோஷமா இருக்கும். வாழ்த்துகள்!” என்றார்.

 

“சந்தோஷம்! நன்றி.” என்பதோடு முடித்துக் கொண்டார் கேசவமூர்த்தி.

 

இருவருக்குமே, சொல்லவும் கேட்கவும் பல விஷயங்கள் இருந்தாலும், அவரவரின் பிள்ளைகளுக்காக அவற்றை முற்றிலுமாக தவிர்த்தனர்.

 

கேசவமூர்த்திக்கு இது பழகி இருந்தாலும், கீதாஞ்சலிக்கு இதுவே முதல் முறை! அவரும் பழகி விடுவாரோ என்னவோ!

 

தொடரும்…

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 26

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
26
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. ஜீவி 😍😍😍
    உதய் நந்தினி இயல்பா ஒருத்தரை ஒருத்தர் ஏத்துக்க ஆரம்பிச்சுட்டாங்க…. 🥰🥰🥰🥰

    வர்ஷினி 😡😡😡😡
    தேவையில்லாத வேலை பார்க்குறா 😤 நந்தினியை கடத்தப் போறாளா 😬😬