Loading

அதீதம்-20

அர்ஜுன் சொன்னதெல்லாம் கேட்ட பின்னும், இமயன் அவசரமெல்லாம் படவில்லை. வெகு நிதானமாய் யோசித்தான். இந்தத் திருமணத்தால், கவியின் வாழ்க்கையோடு, இமயனின் வாழ்க்கையும் சேர்ந்தே பாதிக்கப்பட்டிருக்கிறது எனும் போது, இருவரின் வாழ்க்கையையுமே சரி செய்ய வேண்டும் என்பதை மட்டும் தீர்மானமாய் முடிவு செய்துக் கொண்டான். அவசரப்பட்டு எதையும் செய்துவிடக் கூடாதென்பதிலும் தெளிவாக இருந்தான்.

இப்போதைக்கு நிதானம் என்பது மிகவும் அவசியம் என்பதும் அவனுக்குப் புரிந்தது.

முதல் வேலையாக, அர்ஜுனிடம் கேட்டு, தீபக் பாதுகாப்பாய் இருக்கிறானா? என்பதை உறுதி செய்துக் கொண்டான்.

அடுத்ததாய் கவிநயா..

சாதி என்னும் ஒற்றைக் காரணத்திற்காக, பெற்ற மகளின் மனதைக் கூட யோசிக்காமல், இத்தனை வேலை செய்தவர், உண்மை தெரிந்தால், கவியையும் எளிதில் விட்டுவிட மாட்டார் என்பது புரிந்தது. கவிநயாவின் பாதுகாப்பையுமே உறுதி செய்ய வேண்டுமென முடிவு செய்துக் கொண்டான்.

இனி எடுத்து வைக்கும், ஒவ்வொரு அடியிலும், திட்டமிடலும் தெளிவும் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்துக் கொண்டான். அதற்கு முதல் வேலையாக அர்ஜுனைத் தான் அழைத்தான் இமயவரம்பன்.

“சொல்லு மச்சான்! அவசரமாய் வரச் சொன்ன?” எனக் கேட்டபடி எதிரே அமர்ந்த அர்ஜுனைப் பார்த்தான்.

“நான் விசாரிக்க சொன்ன விஷயங்கள் என்ன ஆச்சு அர்ஜுன்.?”

“நான் விசாரிச்ச வரை, விவாகரத்து உடனே கிடைக்க வாய்ப்பு இல்லை டா. நாம ஒன் இயர் வெய்ட் பண்ணித்தான் ஆகணும். ஒன் இயர், செப்பரேஷன் பீரியட் முடிந்தால் தான் டிவோர்ஸ் கன்சிடர் பண்ணுவாங்கன்னு லாயர் சொன்னார். இப்போ தானே கல்யாணம் முடிஞ்சுருக்கு, உடனே டிவோர்ஸ் ஃபைல் பண்ணுறது கஷ்டம்ன்னு சொல்றார்.!”

“அப்போ வேற எந்த வழியுமே இல்லையா?”

“ஒரேயொரு வழி இருக்குடா.. இந்தியாவில் கட்டாயத் திருமணங்கள் இந்திய ஒப்பந்தச் சட்டம் 1872 இன் பிரிவு 15 மற்றும் தண்டனைச் சட்டத்தின் கீழ் சட்டவிரோதமானது. இது கட்டாயத் திருமணம்ன்னு கம்ப்ளைண்ட் ரெஜிஸ்டர் பண்ணலாம்.! பட், கேஸ் நிக்காது.!”

“ம்ம்! புரியுது டா! உங்க அப்பா கேஸ் கோர்ட்டுக்கு போக விட மாட்டார். ஊரறிய கல்யாணம் பண்ணிட்டு, கட்டாயக் கல்யாணம்ன்னு ரிப்போர்ட் பண்ண முடியாது டா!” என அர்ஜுன் சொல்ல வரும் கோணத்தைப் புரிந்துக் கொண்டான் இமயன்.

“இப்போ என்ன தான்டா பண்ணுறது?” எனப் புரியாமல் கேட்டான் அர்ஜுன்.

“ஒரு வருஷம் வெய்ட் பண்ணணும்ன்னா வெய்ட் பண்ணித்தான் ஆகணும். அதுக்குள்ளே நாம செய்ய வேண்டிய வேலை நிறைய இருக்கு அர்ஜுன்!” எனச் சொன்னான் இமயன்.

“என்னடா சொல்ற?”

“இன்னொருத்தர் பின்னால் இருந்து கட்சியோட வளர்ச்சிக்கு உதவினது எல்லாம் போதும்ன்னு நினைக்கிறேன். நானே நேரடியாய் உள்ளே இறங்கலாம்ன்னு முடிவு செஞ்சுருக்கேன்!” எனத் தெளிவாகச் சொன்னான் இமயன்.

“புரியுது டா! ஆனால், அந்த ஆளு உன்னை உள்ளே நுழைய விடுவார்ன்னு தோணலை.!”

“அவர் அனுமதி எனக்கு தேவையில்லை அர்ஜுன்.! அதுக்கு என்ன செய்யணும்ன்னு எனக்கு தெரியும்.!” தெளிவும் தீர்க்கமும் அவன் குரலில் இருந்தது.

“எதுவா இருந்தாலும், நிதானமா பண்ணுடா! அவரைப் பத்தி உனக்கு தெரியாது.!” நல்ல நண்பனாய் அறிவுறுத்தினான் அர்ஜுன்.

“இத்தனை நாள் தெரியாமல் இருந்ததை இனிமே தானே தெரிஞ்சுக்க போறேன்.. அவர் நினைச்சதை நடத்துறதுக்காக, என் வாழ்க்கையையும், கவி வாழ்க்கையையும் கேள்விகுறியாய் மாத்திட்டாரு! நான் சும்மா விடப் போறதில்லை அர்ஜுன்.!” எனச் சொன்னான் இமயன்.

“உன் நிலை எனக்கு புரியுது டா!” என நண்பனின் தோளில் ஆதரவாய் தட்டினான் அர்ஜுன்.

“அர்ஜுன் நீ எனக்கு ஒரு உதவி செய்யணும்.! நான் இதை வச்சு தான் உங்க அப்பாக்கிட்டே கேம் விளையாடப் போறேன். இதைத் தவிர எனக்கு வேற வழியும் தெரியலை.!”

“ஏய்! உதவி அது, இதுன்னு பைத்தியம் மாதிரி பேசாதே டா! செய்ன்னு சொன்னால், செய்யப் போறேன்.!” என அர்ஜுன் சொல்ல,

“இல்லை அர்ஜுன், நீ முன்னவே சொன்ன, நான் தான் கேட்கலை. நான் சொன்னதை நம்பி தான் கவியும், இந்தக் கல்யாணத்திற்கு சம்மதிச்சாள். உங்க அப்பா முன்னே நின்னு நடத்தறேன்னு சொல்றதே நாடகம்ன்னு நீ சொன்னதை நாங்க கேட்டுருக்கணும். இப்படியொரு திட்டத்தை அவர் போடுவார்ன்னு நான் எதிர் பார்க்கவே இல்லை.” என இமயன் நிஜமான வருத்தத்துடன் சொன்னான்.

“விடுடா! இப்படித்தான் நடக்கணும்ன்னு இருந்திருக்கு. நீ உன் மேல் பழியைப் போட்டுக்காதே! பொண்ணு வாழ்க்கைன்னு கூடப் பார்க்காமல் விளையாடின அவரைத்தான் சொல்லணும்!” என நண்பனைச் சமாதானப்படுத்த முயன்றான் அர்ஜுன். அப்போதும், இமயன் இயல்புக்குத் திரும்பாமல் இருக்க,

“உனக்கு என்ன ஹெல்ப் வேணும்? அதை முதலில் சொல்லு டா!” என அவனை திசை திருப்பினான் அர்ஜுன்.

“தீபக் உன்கிட்டே பத்திரமாகத் தானே இருக்கான்?” என உறுதிபடுத்திக் கொள்வதற்காய் கேட்டான்.

“ஆமா டா! தீபக்கோட அப்பா, அம்மாவை கொன்னுடுவேன்னு மிரட்டி, கவி கிட்டே, அவள் வேண்டாம்ன்னு சொல்ல வச்சிருக்காங்க! அதோட, அவனை அடிச்சு கொடுமை படுத்திருக்காங்க டா. நமக்கு தெரிஞ்ச பசங்களை வச்சு தேடிப் பிடிச்சேன். ரொம்பப் பாவம் டா தீபக். இன்னுமே அந்த ஆளுக்கு தீபக் உயிரோட இருக்கான்னு தெரியாது!” எனச் சொன்னான் அர்ஜூன்.

“இப்போ நாம என்ன பண்ணணும்ன்னா, கவியையும், தீபக்கையும் யூ.எஸ் அனுப்பி வச்சிடணும். ஏன்னா அவங்க பாதுகாப்பு ரொம்ப முக்கியம்.!”

“அவங்க பாதுகாப்பெல்லாம் இருக்கட்டும் இமயன், இப்போ எதுக்கு அவங்களை அங்கே அனுப்பணும்?” புரியாமல் கேட்டான் அர்ஜுன்.

“அவங்களை இங்கே வச்சிருந்தால், அவங்களை வச்சு, நம்மக்கிட்டே கேம் ஆடிருவாரு உங்க அப்பா! என் விளையாட்டையும் நான் அவங்களை வச்சு தான் ஆடப் போறேன். எதுக்காக உங்க அப்பா இத்தனையும் செஞ்சாரோ, அதை வச்சே அவருக்கு எதிரா விளையாடப் போறேன்.!” என இமயன் சொல்வது, மெல்ல மெல்லமாய் அர்ஜுனுக்கு பிடிபட்டது. அவனது திட்டமிடல் என்னவாக இருக்கும் என்பதை ஓரளவு யூகித்திருந்தான் அர்ஜுன்.

“புரியுது டா மச்சான்! முதலில் அவங்களை அனுப்பற வேலையை பார்க்கிறேன்.!” என அர்ஜுன் சொல்லிவிட்டு விடைபெற., அடுத்தடுத்த திட்டங்களை யோசித்தபடியே நின்றிருந்தான் இமயவரம்பன்.

*****

இமயனின் திட்டத்தின் முதற்கட்டமாக, அன்று காலையே இமயனை அழைத்திருந்தார் மயில்ராவணன்.

“இ.. இமயன்! நீ என் மேலே கோபமாய் இருப்பேன்னு தெரியும்! இப்படியே தொழில் முறை உறவோட ஒதுங்கிடலாம்ன்னு இருக்கியா? நீ தாலிக்கட்டின உன் பொண்டாட்டி இங்கே இருக்காள்ன்னு மறந்துட்டியா?”

“கவியைப் பார்த்துக்க நீங்க இருக்கும் போது, நான் எதுக்காக மாமா கவலைப்படணும்? ஊருக்காக எங்க கல்யாணம் நடந்துடுச்சு. இது இப்படியே இருக்கட்டும் விட்டுருங்க!”

“இது சரியில்லை இமயன்!”

“இதை உங்க பொண்ணுக்கிட்டே சொல்லுங்க மாமா!”

“இங்கே பாரு இமயன், கவி, யு.எஸ் போறேன்னு ஒற்றைக் காலில் நிற்கிறா! நீ தான் என்னன்னு வந்து கேட்கணும்?” என மயில்ராவணன் சொல்ல,

“உங்க பொண்ணோட தகுதி வேற, என்னோட தகுதி வேற.. உங்கப் பொண்ணைக் கேள்வி கேட்கிறதுக்கும், ஒரு தகுதி வேணுமே, அது என்கிட்டே இல்லை.!” என நக்கலாகவே பதில் சொன்னான் இமயன்.

“இமயன் நான் சொல்றதைப் புரிஞ்சுக்கோ! டி.ஐ.ஜியில் இருந்து, கட்சி செயலாளர் வரை, உங்களை விருந்துக்கு கூப்பிட்டுருக்காங்க. அதோட நம்ம சாதி சங்கம் சார்பாக பாராட்டு விழாவும் இருக்கு. நீயும், கவியும் கண்டிப்பா வரணும்!”

“இந்த ப்ரோக்ராம் எல்லாம் எனக்கு தெரியும்! உங்கப் பொண்ணை வேணும்ன்னா கூட்டிட்டு போங்க! நான் எங்கேயும் வரலை!” எனச் சொல்லிவிட்டு, அவன் அலைபேசியை அணைக்கப் போக,

“இமயன்! எனக்காக இந்த ஒரேயொரு முறை மட்டும் வா!” என அவர் சொல்ல, புன்னகையுடனே இணைப்பைத் துண்டித்தான் இமயன்.
மயில்ராவணன் வீட்டில் என்ன நடந்துக் கொண்டிருக்கும் என்பதை முன்பே அறிந்தவனாய், வேண்டுமென்றே தாமதமாக அவர் வீட்டிற்குச் சென்றான் இமயவரம்பன்.

“இங்கே பாருங்கப்பா! எனக்கு இந்தக் கல்யாணமும் வேணாம்! ஒண்ணும் வேணாம்! இங்கே வீட்டுக்குள்ளே அடைஞ்சுக் கிடக்க என்னால் முடியாது!”

“இதுக்குத்தான் உனக்கு கல்யாணம் பண்ணி வச்சேனா?”
“நான் தீபக்கை தான் லவ் பண்ணினேன். நான் இமயனை டிவோர்ஸ் பண்ணிடுறேன். நீங்க வேணும்ன்னா ரெண்டாந்தாரமாய் இமயனைக் கட்டிக்கோங்க!” எனச் சொன்னாள் கவிநயா.

“பைத்தியம் மாதிரி பேசாதே கவி!”

“என்னைப் பேச வச்சுட்டீங்க! இன்னும் கொஞ்ச நாள் இங்கே இருந்தேன்னா என்னை பைத்தியக்காரியாய் மாத்திடுவீங்க! நான் இங்கிருந்து போறது தான் எனக்கு நல்லது!” உறுதியாய் தெளிவாய் பேசினாள் கவிநயா.

“என் மேலே தான் தப்பு! நான் தான் தப்பு பண்ணிட்டேன். உங்களோட எமோஷ்னல் ப்ளாக் மெய்ல்க்கு பயந்துட்டு, கொஞ்சமும் யோசிக்காமல், கண்ணை மூடிட்டு கழுத்தை நீட்டிட்டேன். உங்களோட நடிப்பை உண்மைன்னு நம்பி ஏமாந்துட்டேன்!” என அவர் கண்களைப் பார்த்து அவள் பேசி, தன் தகப்பனின் கண்களுக்குள் வந்து போன அந்த நொடி நேர தடுமாற்றத்தை உணர்ந்துக் கொண்டாள் கவிநயா.

“நான் நடிச்சேன்னு சொல்றியா? உன் வாழ்க்கை நல்லா இருக்கணும்ன்னு நினைச்சேன் பார்த்தியா? என்னைச் சொல்லணும்!” அவர் போலியாய் கோபப்பட,

“அதான் என் வாழ்க்கை நல்லா இருக்கே.. நீங்க தான் பார்க்கிறீங்களே?” என அவள் கேட்க, மயில்ராவணன் முகம் சட்டென சுங்கியது.
அதே நேரம் இமயனும் அங்கே வந்து சேர்ந்திருந்தான்.

“வா! வா! இமயன்! உன்னைத் தான் எதிர்பார்த்துட்டு இருந்தேன். இவளைப் பாரு.. இப்போவே வெளிநாடு கிளம்பறேன்னு ஒற்றைக்காலில் நிற்கிறா!” என அவர் சொல்ல,

“குடும்ப விஷயங்கள் பேச இங்கே வரவே கூடாதுன்னு நினைச்சுருந்தேன். உங்க வார்த்தைக்கு மரியாதை கொடுத்து தான் மாமா இங்கே வந்தேன்!” உணர்வற்ற குரலில் அவன் சொன்ன அதே நேரம்,

“உன்னைப் பார்க்காமல் போயிருவேனோன்னு நினைச்சேன். எங்க அப்பாவோட வார்த்தையைக் கேட்டு உன் வாழ்க்கையையும் வீணாக்கிட்டேன். என்ன தான் தீபக் என்னை வேணாம்ன்னு சொன்னாலும், அவனை நினைக்காமல் என்னால் இருக்க முடியலை. ஸோ, நான் யு.எஸ் கிளம்பறேன்.!” எனச் சொன்னவள், அவன் முன் வந்து நின்றவள், அவன் கட்டிய தாலியைக் கழற்றி அவன் கரத்திலேயே வைத்துவிட்டு விறுவிறுவென வெளியேறியிருந்தாள்.

மயில்ராவணனால் மகளைத் தடுக்கவே முடியவில்லை. அவர் ஆடிய ஆட்டத்தில், மகளின் பிடிவாதம் முதன் முறையாய் ஜெய்த்திருந்தது.
அவள் தாலியைக் கழற்றிக் கொடுத்துவிட்டுப் போன நொடியில், அவனுக்குள் எழுந்த நிம்மதியுணர்வை அவனால் தடுக்க முடியவில்லை. ஆனாலும் முகத்தை இறுக்கமாய் வைத்தபடி, மயில்ராவணன் முகத்தில் வந்து போன உணர்வுகளைக் கவனமாய் ஆராய்ந்தபடி நின்றிருந்தான் இமயன்.

“இமயன்! அவள் சின்னப் பொண்ணு! ஏதோ தெரியாமல் பண்ணிட்டா! நான் அவகிட்டே பேசுறேன். இந்த விஷயம் மட்டும் கட்சிக்குள்ளே யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கோ இமயன்! கட்சிக்குள்ளே தெரிஞ்சுதுன்னா என் மானமே போய்டும்! மீடியா நியூஸ்ன்னு போட்டு நாறடிச்சுடுவானுங்க!” எனச் சொன்னவரின் குரலில் இருந்த பயத்தை இமயனால் தெளிவாக உணர முடிந்தது.

“இப்போ நான் என்ன செய்யணும் மாமா? உங்கப் பொண்ணு யு.எஸ் போய்ட்டு வர்ர வரையிலும், அவள் நினைப்போடவே, இந்த தாலியைக் கையில் வச்சுட்டே அலையணுமா? இதுக்காகத்தான் இந்தக் கல்யாணத்தை நடத்தி வச்சீங்களா? ஒருவேளை உங்கப் பொண்ணு வரவே இல்லைன்னா நான் கடைசி வரை சந்நியாசியா அலையணுமா?”கேள்வி ஒவ்வொன்றும் மயில்ராவணனை ஊசியாய்க் குத்தியது. பதில் சொல்ல முடியாது திணறி, பேச முடியாமல் அமைதியாய் நின்றார் அவர்.

“நான் அவள்கிட்டே பேசறேன் இமயன்!” என மழுப்ப முயன்றார் அவர்.

“நீங்க சொன்ன ஒரு வார்த்தைக்குக் கட்டுப்பட்டு, என்னைப் பெத்தவங்களைக் கூடக் கேட்காமல் தாலி கட்டினேன். இப்போ நான் என்ன செய்யணும்ன்னு நீங்க தான் சொல்லணும்!” அவன் சொன்னதற்கு, எந்த எதிர்வினையும் அவரிடமிருந்து இல்லை. அவர் குழம்பி தவித்து நிற்பதைப் பார்த்து இதழ்களில் புன்னகை அரும்ப, அமைதியாக அங்கிருந்து வெளியேறியிருந்தான்.

‘இன்னும் தீபக்கைப் பற்றி தெரிந்தால் இவர் என்ன செய்யப் போகிறார்?’ என்றக் கேள்வியும் அவனுக்குள் இருந்தது.

*****

அடுத்த சில நாட்களில், தன் ஆட்டத்தை முழுதாகவே ஆடத் துவங்கியிருந்தான் இமயன்.

“மாமனாரே.. மாமனாரே..! இது என்ன நீங்களும் உங்கப் பொண்ணும் போட்ட ப்ளானா?” சத்தமாய்க் கத்தியபடி மயில்ராவணன் வீட்டிகுள் நுழைந்தான் அவன். எதுவுமே புரியாமல், குழப்பமாய் இவனைப் பார்த்தார் அவர்.

மயில்ராவணன் முகத்திலோ, அதிர்வு அப்பட்டமாய் தெரிந்தது. தீபக் உயிரோடு இருப்பான் என அவர் எதிர்பார்க்கவில்லை. அதிலும் தன் மகளோடு இருக்கிறான் என்பது அவருக்கு பேரதிர்ச்சி தான்.

‘இவனை மொத்தமா முடிச்சுடத் தானே சொன்னேன். ஒரு வேலையை உருப்படியாய் செய்ய மாட்டானுங்க!’ மனதிற்குள் திட்டிக் கொண்டவர், வெளியில் சமாளிப்பாய் சிரித்தபடியே..

“என்ன இமயன் சொல்ற? எனக்கு ஒண்ணும் புரியலை.!” எனக் கேட்டார்.

“இதெல்லாம் என்ன? இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்?” எனக் கேட்டவன், தன் அலைபேசியிலிருந்த புகைப்படங்களைக் காட்டினான். தீபக்கும், கவிநயாவும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களைப் பார்த்தவர்,

“இதெல்லாம் என்னன்னு உனக்கு தெரியாதா? கவி தீபக்கை விரும்பினாள்ன்னு உனக்கு தெரியும் தானே?” என நிதானமாய் கேட்டார் அவர்.

“அந்த ஈரவெங்காயமெல்லாம் எங்களுக்கு தெரியும். இது இப்போ எடுத்த ஃபோட்டோஸ்..! திட்டம் போட்டுத் தானே உங்கப் பொண்ணை அங்கே அனுப்பி வச்சீங்க? அவளோட தீபக்கையும் சேர்த்து அனுப்பிருப்பீங்க போல? அப்போ எதுக்காக என்னை இதுக்குள்ளே இழுத்தீங்க? உங்க காரியத்தை சாதிச்சுக்கிறதுக்கு நான் ஊறுகாயா?” எனக் கோபமாய் பேசினான் இமயன்.

“நான் சொல்றதைக் கேளு இமயன்! எனக்கு இதைப் பற்றியெல்லாம் எதுவுமே தெரியாது!”

“நீங்க தெரியாதுன்னு சொல்றதை நான் நம்பணும்? உங்கப் பொண்ணு தாலியைக் கழற்றிக் கொடுத்துட்டு போறதையும் வேடிக்கைப் பார்த்துட்டு தான் இருந்தீங்க! இப்போவும் தெரியாதுன்னு தான் சொல்றீங்க! நான் இதை சும்மா விட மாட்டேன்! நம்ம சாதி சங்கத்தில் போய் ரிப்போர்ட் பண்ணப் போறேன்.!” எனச் சொன்னதும் அவர் முகம் சட்டென மாறியது.

“என்ன பேசுற இமயன்? என்னை அவமானப்படுத்தணும்ன்னு முடிவு பண்ணிட்டியா? போனவாரம் தான், நம்ம சங்கத்தில் பாராட்டு விழாவெல்லாம் நடத்தினாங்க! இப்போ போய் இதைச் சொன்னால், என் மானமே போய்டும்! நம்ம கட்சிக்கு சாதி ஓட்டு எவ்வளவு முக்கியம்ன்னு உனக்குத் தெரியும். நீயே இப்படி பேசினால் எப்படி?” அவருக்கு காரியம் ஆக வேண்டும் என்பதற்காக கொஞ்சம் பொறுமையாய் பேசினார் அவர்.

“அப்போ என் வாழ்க்கைக்கு என்ன வழி? நீங்க சொன்னீங்கன்னு தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன். நீங்க தான் எனக்கு என்ன வழின்னு சொல்லணும்!” என அவன் கேட்க மயில்ராவணனால் பதில் பேசவே முடியவில்லை.

“என்ன மாமா, பதிலையே காணோம்? எனக்குன்னு ஆசைகள், கனவுகள் இருக்காதா? என் வாழ்க்கை விஷயத்தில், நானும் கொஞ்சம் சுயநலமாக தான் முடிவு எடுக்கணும்.!” என அவன் வேண்டுமென்றே குரலுயர்த்தி சொல்ல,

“ஷ்ஷ்..! கொஞ்சம் மெதுவா பேசு இமயன்! இப்போ என்ன உன் வாழ்க்கையை நீ வாழணும் அவ்வளவு தானே? இந்தக் கல்யாணம் நடந்தது நடந்தாகவே இருக்கட்டும். இந்த ஊரைப் பொருத்தவரை நீ என் மருமகன் தான். உனக்கு எந்தப் பொண்ணைப் பிடிக்குதோ, அந்தப் பொண்ணு கூட, ரகசியமா வாழ்ந்துட்டு போ!” என அவர் சொன்ன கேவலமான யோசனையைக் கேட்டு அருவருப்பில் முகம் சுளித்தான் இமயன்.

“நீங்க செய்ற அதே கேடுகெட்ட வேலையை என்னால் செய்ய முடியாது. நீங்க துரோகம் பண்ணுறது உங்க பொண்டாட்டிக்கு வேணும்ன்னா தெரியாமல் இருக்கலாம். ஆனால் எனக்கு எப்போவோ தெரியும். இத்தனை நாள் இதையெல்லாம் வெளியே சொல்லாமல் இருந்தது உங்க மரியாதையைக் காப்பாத்தறதுக்குத்தான். இனிமே அப்படியெல்லாம் இல்லை. அவசியமிருந்தால், உங்க இரகசியங்கள் அத்தனையையும் அம்பலப்படுத்த நான் தயங்க மாட்டேன்.!” தெள்ளத் தெளிவாய் அவன் சொல்ல, விக்கி விரைத்துப் போனார் மயில்ராவணன்.

“இமயன்! நன்றி மறந்துட்டு பேசுற! நீ இந்த நிலையில் நிற்க நான் தான் காரணம் அதை மறந்துடாதே! என்னையே பகைச்சுக்க நினைக்காதே! நான் நினைச்சால், உன்னை என்ன வேணும்ன்னாலும் பண்ண முடியும்!” என மிரட்டல் தொனியில் அவன் பேச,

“தாராளமாய் செய்ங்க மாமனாரே..! இனிமே எதற்கும் நான் பயப்படப் போறதில்லை. உங்களைப் பார்த்து கூழைக் கும்பிடு போட்ட காலமெல்லாம் மலையேறிப் போச்சு. என்னை அழிக்கணும்ன்னு நீங்க நினைச்சீங்கன்னா, உங்க இரகசியங்கள் அத்தனையும் வெளியே வந்துடும். இது மட்டுமில்லை, நீங்க யார்க்கிட்டே எவ்வளவு லஞ்சம் வாங்கியிருக்கீங்க? யாருக்கு எவ்வளவு கொடூத்திருக்கீங்க? அதோட, எந்த ப்ராஜெக்ட்டில் எவ்வளவு அடிச்சிருக்கீங்க? எல்லாத்துக்கும் ஆதாரம் என்கிட்டே இருக்கு. நீங்க ம்ம்ன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க எல்லாத்தையும் வைரல் பண்ணிடுவோம்!” என பதில் சொன்னான் இமயன்.
மயில்ராவணன் கொஞ்சம் பயந்து தான் போனார். இவர் தனிப்பட்ட விஷயங்களோடு, தொழில் சம்மந்தப்பட்ட விஷயங்களும், அவன் கைவசம் இருக்கையில், தன் பதவிக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து வரலாம் என்பதை நினைத்ததும், அவருக்குள் பதற்றம் வந்து தொலைத்தது.

“உ.. உன்கிட்டே ஆதாரம் இருக்குன்னு நான் எப்படி நம்பறது?”

“இப்போ நீங்க எதையும் நம்ப வேண்டாம் மாமனாரே.. எல்லா ஆதாரமும் வெளியே வந்ததும் நம்புங்க! நகர்புற மேம்பாட்டு நிதியாக வந்த மொத்த பணத்தையும் அடிச்சுட்டு, நிதிப்பற்றாக்குறைன்னு ஆரம்பிச்ச மேம்பால வேலைகளை பாதியில் நிறுத்தி வச்சிருக்கீங்க.. இந்த பணத்தை அடிச்சதில் யார் யாருக்கு பங்குன்னு சொல்லட்டுமா? உங்க ஷேர் எவ்வளவுன்னு சொல்லவா? அதை எங்கே வச்சிருக்கீங்கன்னு சொல்லவா?” என அவன் கேட்க, அதிர்ந்து போனார் மயில்ராவணன். பதவி தன்னை விட்டுப் போய்விடுமோ? என்ற பயம் அவருக்குள் வந்திருந்தது.

“இதெல்லாம் உனக்கு யார் சொன்னது?” யார் மூலமாக இவன் தகவல்களைத் தெரிந்துக் கொள்கிறான் என அறிந்துக்கொள்ள முற்பட்டார் அவர்.

“அதெல்லாம் இரகசியம் தான். இருந்தாலும் உங்களுக்காக சொல்றேன். எல்லாமே நான் நேரடியாய் ஆராய்ஞ்சு தெரிஞ்சுக்கிட்டது தான். வேறெங்கும் கிளைகள் இல்லை.!” என அவன் சொல்ல,

“இங்கே பாரு இமயன், நமக்குள்ளே டீல் போட்டுக்கலாம். இனிமே நான் செய்ற எல்லா விஷயத்திலும் உன்னை சேர்த்துக்கிறேன். எவ்வளவு அடிக்கிறோமோ, அதை ஷேர் பண்ணிக்கலாம்! கிட்டத்தட்ட உன்னை என் பாட்னராகவே சேர்த்துக்கிறேன்.!”

“அதெல்லாம் எனக்கு வேணாம். நான் சொல்ற டீலுக்கு நீங்க ஓகே சொல்லுங்க! அப்பறம் வேணும்ன்னா யோசிக்கலாம்!” என அவன் சொன்னதும், முதலில் அதிர்ந்தாலும், இமயனை தன்னோடு இறுக்கிப் பிடிக்க இதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்தவர்,

“என்ன டீல்?” எனக் கேட்டார்.

“முதலில் எனக்கு டிவோர்ஸ் வேணும்! அதுவும் ஊரறிய வேணும். ரெண்டாவது, எனக்குப் பிடிச்ச மாதிரி, என் கல்யாணத்தை நீங்க தான் முதலமைச்சராய் முன்னே நின்னு நடத்தி வைக்கணும். அதோட, முணாவதா..!” என அவன் நிறுத்த, ஏதோ விவகாரமாய் கேட்கப் போகிறான் என்பதை உணர்ந்து, அவனையே பார்த்தபடி நின்றார் அவர்.

“கட்சிக்கு வெளியே இருந்ததெல்லாம் போதும்ன்னு நினைக்கிறேன். தமிழ்நாட்டை ஆளும் முதலமைச்சரின் மருமகனாக இருந்துட்டு, நான் கட்சிக்குள்ளே இல்லைன்னா எப்படி? ரொம்பவெல்லாம் ஆசைப்படலை மாமா, ரொம்ப ரொம்ப சின்ன பதவி தான், எம்.எல் ஏ பதவி எனக்கு வேணும்!”

“ஏன் எம்.எல்.ஏவோட நிறுத்திட்ட, முதலமைச்சர் ஆகணும்ன்னு ஆசைப்பட வேண்டியது தானே?” நக்கலாய் அவர் கேள்வி கேட்க,

“எடுத்ததும் பெரிசா போக வேண்டாம்ன்னு தான் மாமா! படிப்படியாய் நிதானமாய் போவோம்!” என அவன் சொன்னதில் உள்ளுக்குள் கோபம் மூண்டாலும், எதையுமே முகத்தில் காட்டிக்கொள்ளாமல், இறுகிப் போய் நின்றிருந்தார் அவர்.

“இங்கே பாரு இமயன், சொந்த ஊருக்காரன்ங்கிற மரியாதைக்காகத்தான் உன்னை நிற்க வச்சு பேசிட்டு இருக்கேன். இதையெல்லாம் வேற யாராவது கேட்டுருந்தாங்கன்னு வை..!” பற்களை நறநறவெனக் கடித்தார் அவர்.

“வேற யாரும் கேட்க மாட்டாங்க மாமா! ஏன்னா அவங்கக் கிட்டே ஆதாரம் இல்லையே?”

“ரொம்ப ஆடாதே இமயன், நீ வச்சிருக்கிற அத்தனை ஆதாரத்தையும், ஒண்ணுமே இல்லாமல், ஒரே நொடியில் என்னால் அழிச்சுட முடியும். நீ வச்சிருக்கிற எல்லா ஆதாரமும் போலின்னு என்னால் நிரூபிக்கவும் முடியும். இது எல்லாமே எதிர்க்கட்சியின் சதின்னு ஒரே வார்த்தையில் முடிச்சுவிட முடியும். இப்போவும் சொல்றேன், இந்த விபரீத ஆசையெல்லாம் விட்டுட்டு ஒழுங்கா வேலையைப் பாரு!” என எச்சரித்தார் அவர்.

“ஆல் தி பெஸ்ட் மாமா! முடிஞ்சதைப் பண்ணுங்க! என்னால் முடிஞ்சதை நான் பண்றேன்!” தீர்க்கமானக் குரலில் அவன் சொல்ல, அவன் குரலில் இருந்த உறுதியில் மயில்ராவணன் மனம் கொஞ்சமாய் ஆட்டம் கண்டது.

என்னதான் இமயன் தன்னிடம் ஆதாரம் இருப்பதாய்ச் சொன்னாலும், அதை முழுதுமாய் மயில்ராவணன் நம்பவே இல்லை. ஆனால் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. இமயன் பொய் சொல்கிற ஆள் கிடையாது என்பதும் அவருக்குத் தெரியும். அவனிடம் ஆதாரங்கள் இருக்கிறதா? என்பதை முதலில் உறுதிப்படுத்த முயன்றார். ஆதாரங்களைத் திருட முடிகிறதா? என ஆட்களை வைத்து முயன்று பார்த்தார். எதற்குமே வழியில்லாமல் போக, இமயன் சொன்னவற்றை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தார் மயில்ராவணன்.

ஆனால், அவரால் தோல்வியை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. இமயனின் கதையை முடித்துவிடலாம் என முயன்றாலும், அனைத்தையும் யூகித்து எல்லாவற்றிற்கும் தயாராகவே இருந்தான் இமயன். தேவையில்லாமல், இந்தத் திருமணத்தை செய்து வைத்து, சிக்கலில் மாட்டிக் கொண்டோமா? எனத் தாமதமாகவே தோன்றியது அவருக்கு. கவியிடமும், அர்ஜுனிடமும் பேசி, இமயனிடம் பேசிப் பார்க்கலாம் என முயன்று பார்த்தார். அர்ஜுனும், கவியும் அவர் சொன்ன எதையும் காதில் வாங்கவே இல்லை. வேறு வழியில்லாமல், இமயன் சொன்னவற்றிற்கு சம்மதித்தார் மயில்ராவணன்.

இமயனுக்கும், கவிக்கும் அவன் கேட்டபடியே விவாகரத்து வாங்கிக் கொடுத்தார். அவரால், சில்லு சில்லாய் நொறுங்கிப் போன அவன் வாழ்க்கையை அவரை வைத்தே மாற்றியமைக்க முயன்றான் இமயன்.

ஒருவருடமாய் கவிநயா வெளிநாட்டில் இருந்ததைக் காரணம் காட்டி, தன்னுடைய பதவியையும் பயன்படுத்தி, விவாகரத்தை பெற்றுத் தந்தவர், தன் மகள் தீபக்கோடு இருப்பதை மட்டும் இரசியமாய் மறைத்து வைத்துக் கொண்டார். அவன் கேட்டபடியே அவன் திருமணத்தை முன் நின்று நடத்தவும் முன் வந்தார்.

ஒருபக்கம் திருமணத்திற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்தாலும், அதைத் தடுத்து நிறுத்தவும் இன்னொருபக்கம் முயற்சி செய்துக் கொண்டு தான் இருந்தார். ஆனாலும் அதற்கு ஒருபடி முன்னதாகவே இருந்தான் இமயன். இத்தனையும் அவர் செய்தாலும், அவனைக் கட்சிக்குள் அனுமதிப்பதில் அவருக்கு துளியும் விருப்பமே இல்லை. ஆனால், அதையுமே அவரைச் செய்ய வைத்து, மேலூர் தொகுதியில் தன்னையே உறுப்பினராக நிறுத்தும்படி செய்திருந்தான் இமயவரம்பன்.

கடந்தகாலத்தை சொல்லிவிட்டு, அதிலிருந்து வெளியே வர முடியாமல், அவன் அமைதியாய் அமர்ந்திருக்க,

“இதெல்லாம் அவரைப் பழி வாங்குறதுக்காக தான் செஞ்சியா?” என்ற ஆருத்ராவின் கேள்வி இடையிட்டு இமயனை நடப்பிற்குக் கொண்டு வந்தது.

“இவர் மேலே நான் வைத்திருந்த நன்றியுணர்வும் நம்பிக்கையும் தான், கவியின் கழுத்தில் தாலி கட்ட காரணம். ஆனால், அதையே வச்சு விளையாடியிருக்கார்ன்னு தெரியும் போது, ரொம்பவே கோபம் வந்தது. நான் ஆசைப்பட்ட, வாழ்க்கையை உன்னை இழப்பதற்கு அவர் தானே காரணம். அதோட, நான் இழந்ததற்கெல்லாம் அவர்கிட்டே நஷ்ட ஈடு வாங்க வேண்டாமா?” என அவன் கேட்க, ஆருத்ராவிடம் பதில் இல்லை.

“புரிஞ்சுக்கோ ஆரா! எனக்கு நீ ரொம்ப முக்கியம்! கவியோட விவாகரத்திற்குப் பிறகு, உன்னைப் பார்க்க வந்தேன் உனக்கு தெரியுமா? ஆனால், நீ விவேக்கை லவ் பண்ணிட்டு இருந்த.. ஒருவேளை உனக்கு கல்யாணம் ஆகியிருந்தால், யோசிச்சு பாரு..? உன்னை விட்டுக் கொடுக்க மனமில்லாமல் தான், உங்க தாத்தாக்கிட்டே சொல்லி அவசரக் கல்யாணத்திற்கு ஏற்பாடு செஞ்சேன். எனக்கு இது தப்புன்னு தெரியும். ஆனாலும், என்னால், உன்னை விட்டுக் கொடுக்க முடியலை ஆரா..!” என அவன் சொல்ல, அவனை நம்பாமல் பார்த்த ஆருத்ரா,

“நிஜமாகவே நீ கவியோட சேர்ந்து வாழ முயற்சிக்காததற்கு நான் தான் காரணமா?” என அவனிடமிருந்து விலகி அமர்ந்து அவள் கேட்க,

‘தன் காதலியிடமே, காதலை நிரூபிக்க வேண்டியிருக்கிறதே?’ என்ற எண்ணத்துடன், கசப்பான புன்னகை சிந்திய விழிகளுடன் அவளைப் பார்த்தான் இமயவரம்பன்.

“நீ கேட்கும் கேள்விகள் யாவும்..

என் இதயத்தை தீயிட்டுப் பொசுக்கத்தான் செய்கிறது..

என்ன செய்ய..?

உன்மீதான அன்பின் அதீதங்களில்..

நீ செய்யும் அறியாமைகள்..

அன்பின் அறியாமைகளாய்
தன்னாலே மன்னிக்கப்படுகின்றன..!”

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
9
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்