
அத்தியாயம் 3
“என்னடி சொல்ற” தன் உறவினள் சொன்னதை, தான் சரியாகத் தான் காதில் வாங்கினோமா இல்லை தவறாக எதுவும் விழுந்துவிட்டதா எனச் சோதிப்பதற்காக மீண்டும் ஒருமுறை கேட்டார் அவர்.
“அத்தை, நான் வேலை பார்க்கிற கம்பெனி ஓனருக்கு மொத்தம் நாலு பசங்க. ஒவ்வொன்னும் ஒவ்வொரு ரகம். ஒற்றுமைன்னா என்ன விலைன்னு கேட்பாங்க. ஒருத்தருக்கு ஒருத்தர் ஆகவே ஆகாது. நாலு பேர் படிச்சதும் வேற வேற கோர்ஸ், செய்யுறதும் வேற வேற வேலை. அவங்க அப்பாவுக்காக மட்டும் தான் பல்லைக் கடிச்சுக்கிட்டு ஒரே வீட்டில் ஒன்னா இருக்காங்க.
அவங்க எப்பவுமே குறையாத ஒற்றுமையோட இருக்கணும் என்பது எங்க முதலாளியோட நிறைவேறாத ஆசைகளுள் ஒன்னு. என்ன பண்ணியும் அவரோட பசங்களை ஒற்றுமையா வைச்சிக்க, அவரால் முடியல. வரப்போற மருமகளுங்களை வைச்சாவது அதை செஞ்சே ஆகணுமுங்கிற கனவோடவும் கவலையோடவும் இருக்காரு.
நீங்க பார்த்து யாரைக் காட்டினாலும் கல்யாணம் பண்ணிக்கத் தயார். ஆனா நாலு பொண்ணுங்களும் வேற வேற குடும்பமா இருக்கணும் னு எங்க சாருக்கு ஸ்ட்ரிக்ட்டா ஆர்டர் போட்டுட்டாங்க அவரோட பசங்க.
ஆனா எங்க சார், என்ன ஆனாலும் தன்னோட குடும்பத்தை பிரிக்க நினைக்காத பொண்ணுங்க தான் தனக்கு மருமகளா, தன் கோட்டைக்கு இராணியா வேணும் னு தேடிக்கிட்டு இருக்காரு.
இப்ப அவர் காதில் இந்தப் பொண்ணுங்களைப் பத்தி சொன்னேன்னு வைச்சிக்கோங்க. அப்படியே லட்டு மாதிரி தூக்கிட்டு, ச்சீ கூட்டிக்கிட்டு போய் அவரோட பசங்களுக்கு கல்யாணம் பண்ணி வைச்சிடுவாரு.” எதையோ நினைத்து பூரிப்போடு சொன்னாள் பெண்.
“எல்லாம் சரிதான் டி. கல்யாணத்துக்கு அப்புறம் பசங்க நாலு பேரும் தனித்தனியா போறேன்னு இவங்க நாலு பேரையும் பிரிச்சுட்டா என்ன பண்றது.” கேள்வியெழுப்பிய முதிய பெண்மணிக்கு இது சரி வந்தால் நன்றாக இருக்குமே என்கிற எண்ணத்தோடு கூடிய சின்னத் தயக்கம்.
சின்ன வயதில் இருந்து பெண்கள் நால்வரும் கடந்து வந்த பாதையை அருகில் இருந்து பார்த்தவர். திருமணமாகி அவர்கள் செல்லும் இடமாவது பிரச்சனை இல்லாத இடமாக இருத்தல் வேண்டும் என்கிற எண்ணம் இருந்தது அவருள்.
“இவங்க நாலு பேரையும் அவ்வளவு சீக்கிரத்தில் பிரிச்சுட முடியும் னு நினைக்கிறீங்களா என்ன?” சரியான இடத்தில் தட்டி அவரை அமைதிப்படுத்தினாள் கெட்டிக்காரியான அவரது உறவினள்.
“நீ சொல்றது சரிதான். இந்தப் பொண்ணுங்களை யார் நினைச்சாலும் பிரிக்க முடியாது தான். நீ உங்க முதலாளிகிட்ட இவங்களைப் பத்தி சொல்லு. ஆனா, அதுக்கு முன்னாடி அந்தப் பசங்க எப்படிப் பட்டவங்கன்னு மறைக்காம என்கிட்ட சொல்லு.
தாய் தகப்பன் இல்லாத பொண்ணுங்க, அதுவும் தங்கமான பொண்ணுங்க. நல்லது பண்றேன்னு நாம ஏதாவது பண்ணப் போய் அது அவங்களுக்கு பிரச்சனையா முடிஞ்சிடக் கூடாது.” உண்மையான அக்கறை தெரிந்தது அவரிடம்.
“அத்தை, அம்மா இல்லாத பெரிய வீட்டுப் பசங்கன்னா ஏதாவது சின்னச் சின்ன குறை இருக்கத் தான் செய்யும். அதே மாதிரி தான் இவங்களும். தனியா சுதந்திரமா இருக்கணும், தன்னை யாரும் எதுக்காகவும் கேள்வி கேட்கக் கூடாதுன்னு நினைக்கிறவங்க, அந்த ஒன்னைத் தவிர்த்தா அவங்க நாலு பேரும் தங்கமான பசங்க தான்.
அதுவும் பொண்ணுங்க விஷயத்தில் அப்படியே அந்த ஸ்ரீராமன் தான். பொண்டாட்டியை அடக்கி ஆழ நினைக்கிறவங்க கிடையாது. என்ன ஒன்னு கொஞ்சம் கோபக்காரங்க. அதை இவங்க தான் பொறுத்து போகணும்.” தனக்குத் தெரிந்தவரை சொன்னாள்.
“என்னடி வக்காளத்து எல்லாம் பலமா இருக்கு. அவங்களைப் பத்தி இத்தனை தகவல் உனக்கு எப்படித் தெரியும். நீ அவங்க அப்பா கம்பெனியில் தானே வேலை பார்க்கிற.” தன் வீட்டுப் பெண்ணின் மீது அக்கறை வந்தது அவருக்கு.
“ஐயோடா, என் அத்தைக்கு அவங்க தம்பி பொண்ணு மேல எவ்வளவு பாசம், எங்க கம்பெனியில் வேலை பார்க்கும் எல்லோருக்கும் அவங்க நாலு பேரையும் தெரியும். அப்படித்தான் எனக்கும் தெரியும்.
எங்க சார், ஒரு பொட்டு நகை கேட்காம, வரதட்சணைப் பணம் கேட்காம இவங்களை அவரோட வீட்டு மகாலட்சுமியா கூட்டிக்கிட்டுப் போவாரு.
தங்கத்தட்டில் வைச்சித் தாங்குவாரு, இவங்க வாழ்க்கையே தலைகீழா மாறிடும். எல்லாத்தையும் விட இவங்க நாலு பேரும் ஒன்னா ஒரே வீட்டில் மருமகளா இருப்பாங்க. என்ன சொல்றீங்க அத்தை, நான் எங்க சார் கிட்ட பேசட்டுமா.” ஆர்வமாய் கேட்டவள் கண்ணில் ஆசைமின்னல் இடைவிடாது வெட்டிக்கொண்டிருந்தது.
“நீ சொல்றது நல்ல விஷயம் தானே. நம்மால் அந்தப் பொண்ணுங்களுக்கு நல்லது நடந்தா சந்தோஷம் தான். நீ உன் முதலாளிகிட்ட இவங்களைப் பத்தி சொல்லி இங்க வரச்சொல்லு. அவர் லீலா கிட்ட பேசட்டும். மத்ததெல்லாம் கடவுள் விட்ட வழி.” என்றபடி உள்ளே சென்றுவிட்டார் அவர்.
உடனடியாக கோயம்புத்தூர் சென்றவள், மனைவி ராதா அன்னை செண்பகவல்லி என இருவரையும் எமனுக்குத் தாரை வார்த்துவிட்டு, தான் பெற்றெடுத்த நான்கு பிள்ளைகளையும் வைத்துக் கொண்டு தினம் தினம் அல்லாடிக் கொண்டிருக்கும், தன் ஓனர் வடிவேலுவிடம் இந்த நான்கு பெண்களைப் பற்றியும், அவர்களின் குணங்கள் பற்றியும் ஆகா ஓகோ என்று புகழ்ந்து தள்ளினாள். குறிப்பாக அவர்களுடைய ஒற்றுமையை மேற்கோள் காட்டிப் பேசினாள்.
ஒரே பிரவசத்தில் பிறந்த நான்கு பெண் குழந்தைகள், அதுவும் இருபத்தி ஐந்து வயதில். மூளையில் ஏதோ பொறி தட்ட, “அவங்களோட அம்மா பெயர் என்னன்னு உனக்குத் தெரியுமா மா?” என்று கேட்டுவிட்டு, அவள் சொல்லப்போகும் பதில் தனக்கு சாதகமாக இருக்க வேண்டுமே என, அந்த மிகக்குறுகிய நேரத்திற்குள் தனக்குத் தெரிந்த அனைத்து தெய்வங்களிடமும் வேண்டுதல் வைத்தார் வடிவேலு.
சிறிது நேரம் யோசித்தவளுக்கு ஒருவழியாக பெயர் நினைவு வர, “பரமேஸ்வரி, இதுதான் அவங்க அம்மா பெயர். என்னோட அத்தை இதைத் தான் சொன்னாங்க.” நினைவு வந்துவிட்ட குஷியில் சற்றே சத்தமாகச் சொன்னாள்.
வடிவேலுவின் மொத்த பாரமும் இறங்கியது போல் ஆனது. தனக்காக இவ்வளவு பெரிய உதவி செய்தவளுக்கு சன்மானமாக ஒரு இலட்ச ரூபாய் கொடுக்க, முகமெல்லாம் பல்லாக வாங்கிக்கொண்டாள் அவள். அவள் எதிர்பார்ப்பும் அதுவாகவே இருக்க, நினைத்தது நிறைவேறிய சந்தோஷம் அவளிடத்தில் சற்று அதிகமாகவே இருந்தது.
வடிவேலு அதற்குப் பிறகு அவளைக் கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை. அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் கூட தனக்கு என்ன நன்மை என்று எதிர்பார்க்கும் ரகம் இவள் என்பது தெரியுமாதலால் அமைதியாக அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிக்க ஆரம்பித்துவிட்டார்.
இரண்டாம் பிரசவத்தில் ராதா இறந்துவிட, செண்பகவல்லி தான் தன்னுடைய நான்கு பேரன்களையும் வளர்த்தார். இல்லை இல்லை வளர்க்க முயற்சித்தார்.
ஒரு இணைக்கும், மற்றொரு இணைக்கும் இடையே ஒரு வருடம் மட்டுமே இடைவெளி இருக்க, நால்வருமே கண்ணின் இமையாக கவனித்துக் கொள்ளப்பட வேண்டிய குழந்தைகள் தான்.
செண்பகவல்லி எப்படியோ தன்னால் இயன்ற அளவு அவர்களின் பத்தாம் அகவை வரை பார்த்துக்கொண்டார். அப்பொழுதே பிள்ளைகள் நால்வருக்கும் இடையில் ஏழாம் பொருத்தம் தான்.
அவர்களின் ராஜா காலத்து பெரிய வீடு முழுக்க ஓடி ஓடி சண்டையிட்டு கீழே விழுந்து உருண்டு மல்லுக்கு நிற்கும் பேரன்களைப் பிரித்து விடுவதிலே அவருக்கு உடலின் ஜீவன் அனைத்தும் வற்றிவிடும்.
முதுமை அவரை அமிழ்த்த தாதிப் பெண்ணொருவர் பணிக்கு சேர்க்கப்பட்டார். தினமும் ஒரு சண்டை, அடிதடி என நடக்க, பொறுக்க முடியாமல் நான்கு தாதிப் பெண்கள் பணியமர்த்தப்பட்டனர் அந்த வீட்டில். அப்பொழுதில் இருந்து வீட்டில் சண்டைகள் குறைந்தது. அதில் நிம்மதியான வடிவேலு மகன்களைக் கவனிக்க மறந்துவிட்டார்.
தாங்கள் தனித்தனியாக இருப்பது தான் நன்றாக இருக்கிறது. ஒன்றாக இருந்தால் பிரச்சனை தான் என்னும் எண்ணம் அந்தச் சின்ன வயதிலேயே, அவர்கள் நால்வரின் மனதில் ஆணிவேரை விட ஆழமாய் வேரூன்றிவிட்டது. அதுவே பின்னாளில் அவர்கள் தனித்தனித் துறையை தேர்ந்தெடுக்கவும் முழுக்காரணமாக அமைந்தது.
தனியாகச் சம்பாதிக்க ஆரம்பித்த பின்னர் ஒருகட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறி புது வாழ்க்கை வாழ ஆசைகொண்டு, ஒவ்வொருவரும் தனித்தனியாக தந்தையை தன்னுடன் வரும்படி அழைத்த போது, வடிவேலு பேயாட்டம் ஆடி விட்டார்.
தான் உயிரோடு உள்ள வரை தன்னுடைய நான்கு மகன்களும் தன்னுடைய வீட்டில் தான் இருக்க வேண்டும் என்று அவர் உறுதியாய் சொல்லிவிட, தனையன்களால் மறுக்க முடியவில்லை.
அவர்களுக்குள் இருந்த ஒரே ஒற்றுமை அவர்கள் தங்களுடைய அப்பாவான வடிவேலுவின் மீது வைத்திருந்த பாசம் தான். அது அவர்களுக்குள்ளும் வர வேண்டும் என்பது தான் வடிவேலுவின் ஆசை கனவு எல்லாமே.
பெருமூச்சுடன் பழைய நினைவில் இருந்து தன்னைத் தானே மீட்டுக் கொண்டவர், மிகுந்த சந்தோஷத்தோடு நல்ல நாள், நல்ல நேரம் எல்லாம் பார்த்து பெண்களிடம் திருமணம் பற்றி பேசுவதற்காக புறப்பட்டுச் சென்றார்.
அவர்கள் வீடு இருக்கும் தெருவைக் கண்டறிந்தவர் தன்னுடைய விலை உயர்ந்த காரை ஓரமாக நிறுத்திவிட்டு, எளிமையான உடையுடன் உள்ளே இருந்து இறங்கினார். அவர் மனதில் பல விஷயங்கள் ஓடிக் கொண்டிருந்தது. அது அனைத்தையும் போராடி ஒதுக்கி வைத்தவர், வந்த காரியம் நல்ல படியாக முடிய வேண்டும் என இறைவனுக்கு ஒரு பலமான வேண்டுதலை வைத்துவிட்டு நகர்ந்தார்.
வண்டிக்கும் அதன் உள்ளிருந்து இறங்கும் ஆளுக்கும் சம்பந்தமே இல்லையே என்று தெருவில் நின்றிருந்த சிலர் யோசித்துக் கொண்டிருக்க அவர்களிடமே சென்று சகோதரிகளின் வீட்டு முகவரியைக் கேட்டறிந்தார்.
குலதெய்வத்தை வேண்டிக் கொண்டு வீட்டின் கதவை வடிவேலு தட்ட, ஊர்மிளா வந்து கதவைத் திறந்தாள்.
“யார் நீங்க உங்களுக்கு என்ன வேணும்?” பட்டுக் கத்தரித்தது போல் கேட்டாள். வாங்க, வணக்கம் என்பது போன்ற சம்பிரதாய வார்த்தைகள் ஏதும் இன்றி நேரடியாக விஷயத்திற்கு வந்தவளை மலைப்பாகப் பாரத்தாலும் சமாளித்து,
“நான் உங்கப்பா ரமணியோட பால்ய சிநேகிதன், பேரு வடிவேலு. என்னை உங்களுக்குத் தெரியாது, ஆனா உங்களையும், உங்க அம்மாவையும் எனக்கு நல்லாத் தெரியும்” தயங்கியவாறே சொன்னார்.
“ஆனா இத்தனை வருஷம் இல்லாம இப்ப எதுக்காக வந்து இருக்கீங்க.” மீண்டும் முகத்தில் அடிப்பது போன்ற இன்னொரு நேரடிக் கேள்விக்கணையால் நொந்து தான் போனார் வடிவேலு.
“அதை வீட்டுக்குள்ள போய் பேசலாமா?” கேட்டவரின் குரலில் லேசான ஏக்கம் தெரிந்தது.
“இது நாலு வயசுப் பொண்ணுங்க இருக்கிற வீடு. நீங்க பாட்டுக்கு உள்ள போய் பேசலாம் னு சொல்றீங்க.” உறுமினாள் ஊர்மிளை.
“அம்மாடி, எனக்கு உங்க அப்பா வயசும்மா.” சற்றே ஆதங்கத்துடன் சொன்னார் வடிவேலு.
“அது எங்களுக்குத் தெரியும். ஆனா ஊர் வாய்க்குத் தெரியாதே. இங்க பாருங்க சார், நீங்க எங்க அப்பாவோட ப்ரண்டா இருக்கலாம், அதுக்காக எல்லாம் உங்களை வீட்டுக்குள்ள கூட்டிட்டுப் போக முடியாது. இந்த ஊரில் எங்களுக்குன்னு இருக்கிறது எங்களோட சுயகௌரவம் மட்டும் தான். அது களங்கப்படும் வகையில் எதையும் நாங்க அனுமதிக்கிறது இல்ல.
எதுவா இருந்தாலும் இப்படித் திண்ணையில் உட்கார்ந்து பேசலாம். நீங்க உட்காருங்க, நான் தண்ணி எடுத்துட்டு வரச் சொல்றேன். அதைக் குடிச்சிட்டு வந்த விஷயத்தை சொல்லிட்டு கிளம்புங்க.” முகத்திற்கு நேராக மனதில் தோன்றுவதை தயங்காமல் சொல்லும் பெண்ணை வடிவேலுக்கு மிகவும் பிடித்துப் போனது.
“அம்மாடியோவ், இவ என்ன கொழுத்திப் போட்ட சிவகாசிப் பட்டாசா இந்த வெடி வெடிக்கிறா, இவ தான் நம்ம சீனப் பட்டாசு மகனுக்கு சரியா இருப்பா. அவன் மூணாவது இவ எத்தனாவது பொண்ணுன்னு தெரியலையே.
எத்தனையாவது பொண்ணா இருந்தா என்ன, இவதான் நம்ம மூணாவது மருமக.” தனக்குள் பேசி மகிழ்ந்து கொண்டிருந்தவரை லீலாவின் சத்தம் கலைத்தது. வேலை முடிந்து அப்பொழுது தான் வீட்டிற்கு வந்தாள் அவள்.
“ஊர்மி யாரு இவரு, எதுக்காக சத்தம் போட்டு பேசிக்கிட்டு இருக்க. உன் சத்தம் தெருமுனை வரை கேட்கிது.” என்றவளிடம் சற்றே கோபமான தொணி இருந்தது போல் தோன்றியது வடிவேலுவுக்கு.
“அக்கா, இவரு நம்ம அப்பாவோட ப்ரண்டாம். இத்தனை வருஷம் கழிச்சி நம்மளைப் பார்க்க வந்து இருக்காரு.” பொறுமையாகச் சொல்வது போல் இருந்தாலும், அவளுடைய சொல்லில் எரிச்சல் எக்கச்சக்கமாய் மண்டிக் கிடந்ததை உணர முடிந்தது அந்தப் பெரிய மனிதரால்.
“என்ன பட்டாசா வெடிச்சவ, அக்காவைப் பார்த்ததும் இப்படிப் பம்முறா. அக்கா மேல அவ்வளவு மரியாதையா? இந்தக் கலியுகத்தில் இப்படிப்பட்ட பொண்ணா?” மனதிற்குள் ஊர்மிளாவை நினைத்து ஆச்சர்யப்பட்டவர் லீலாவைப் பார்த்து கரம் கூப்பினார்.
“அம்மாடி, என்னோட பேரு வடிவேல். உங்க அப்பா ரமணி இருந்த காலனியில் தான் என்னோட தங்கச்சி இருந்தா. அவளைப் பார்க்க வரும் போது உங்க அப்பாவோட நல்ல பழக்கம்.” பலவற்றை மறைத்து, சிலவற்றை மட்டும் சொன்னார்.
“அப்படியாங்க, ரொம்ப சந்தோஷம். நான் லீலாவதி, இவ என் தங்கச்சி ஊர்மிளா.” தன்னை அறிமுகப்படுத்தியவரிடம் மரியாதைக்காக தன்னையும், தங்கையையும் அறிமுகப்படுத்தினாள் லீலா.
இவ்வளவு சொல்றா, ஆனா இவளும் உள்ள வாங்கன்னு கூப்பிட மாட்றாளே, வடிவேல் மனதில் நினைத்ததை அப்படியே லீலா சொல்ல திகைத்துப் போனார் அவர்.
“இவ்வளவு சொல்றா, வீட்டுக்குள்ள வாங்கன்னு கூப்பிட மாட்றாளேன்னு யோசிக்கிறீங்களா சார். ஊர்மியே சொல்லி இருப்பா, இது நாங்க நாலு பொண்ணுங்க மட்டும் வாழுற வீடு.
இது கலிகாலம் சார், நாம மட்டும் நல்லவங்களா இருந்தா பத்தாது. நம்மமைச் சுத்தி இருக்கிறவங்களும் நல்லவங்களா இருக்கணும். ஆனா அதுக்கு வாய்ப்பு ரொம்பக் கம்பி. முள்ளு மேல சேலை விழுந்தாலும், சேலை மேல முள்ளு விழுந்தாலும் பாதிப்பு என்னவோ சேலைக்குத் தான். அது மாதிரி தான் பொண்ணுங்க வாழ்க்கையும்.
அப்பா அம்மா இல்லாத எங்க மேல நாளைக்கு எந்தக் கறையும் படிஞ்சிடக் கூடாது இல்லையா? அதனால் தான் நாங்க இப்படி நடந்துக்க வேண்டியதாப் போச்சு.” என்று தன்னிலை விளக்கம் கொடுத்தாள்.
அதற்குள் ஒரு கையில் ஒரு பாய், விசிறி இன்னொரு கையில் காபி டம்ளருடன் வந்தாள் ருக்மணி. “வாங்க சார், வந்து உட்காருங்க.” வரவேற்றவள் திண்ணையில் பாயை விரித்து அவர் அமரவும், காபி டம்ளரை அவர் கையில் கொடுத்தாள்.
அவருக்கு இவர்கள் அனைவரும் சேர்ந்து அவரை வீட்டுவாசலிலே அமர வைப்பது ஒன்றும் பெரிதாகத் தெரியவில்லை. அக்கம் பக்கத்தினரின் கவனம் முழுக்க இந்த வீட்டு வாசலில் தான் இருக்கிறது என்பது புரிய தலையைச் சொரிந்தவருக்கு தெருவில் உட்கார்ந்து கொண்டு சம்பந்தம் பேசுவது சங்கடமாக இருந்தது.
பேச வந்த விஷயமும் பெரிய விஷயம் என்பதால் அதை எப்படி ஆரம்பிப்பது என்றும் லேசான பதட்டத்தில் இருந்தார். “இத்தனை வருஷம் கழிச்சு எங்களைத் தேடி வந்து இருக்கீங்க. சொல்லப் போனா எங்களைத் தேடி சொந்தம் னு சொல்லி எங்க வீட்டுக்கு வந்திருக்கும் முதல் ஆள் நீங்க தான்.
உங்களை வீட்டுக்குள்ள கூட்டிட்டு போய் உபசரிக்காம திண்ணையில் வைச்சுப் பேசிட்டு, நீங்க வந்த விஷயம் தெரிஞ்சதும் வெளியே அனுப்ப வேண்டிய நிலைமை. அதுக்காக நீங்க எங்களை மன்னிக்கனும் சார்.” பட்டுத்துணி போன்ற மென்மையான வார்த்தைகள் தான், ஆனால் அதில் இருந்த எச்சரிக்கையை நன்றாகவே உணர்ந்தார் வடிவேலு.
எதுக்காக வந்தன்னு சீக்கிரம் சொல்லிட்டு வெளிய போடாங்கிறதை எவ்வளவு நாகரிகமா சொல்லுது இந்தப் பொண்ணு. சொல்லும் வாய்க்கும் வலிக்காம, கேட்கும் காதுக்கும் வலிக்காம பேசக் கூட திறமை அவ்வளவு சீக்கிரத்தில் யாருக்கும் கிடைப்பதில்லை.
நான் முடிவு பண்ணிட்டேன், இவ தான் என் வீட்டு மூத்த மருமக. என் குலத்தைக் காப்பாத்த போற குலவிளக்கு. மனதினுள் நினைத்துக் கொண்டவர் தான் வந்த விஷயத்தை பேசிவிட முடிவுசெய்தார்.
அடுத்தகணமே, ஆரம்பத்திலே நான்கு பேரையும் நான்கு மகனுக்குக் கேட்டு பிரச்சனை ஆகிவிட்டால், முதலில் மூத்த மருமகளுக்கு மட்டும் தூண்டில் போட்டு பார்ப்போம், அவள் வந்துவிட்டால், அம்மாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு கோவிலுக்குள் நுழையும் குழந்தைகளைப் போல மற்றவர்களும் பின்னாலே வந்துவிடப் போகிறார்கள் என மனதில் ஆசைகள் பொங்கி வழிய, பேசவந்ததை மாற்றிப் பேசினார் அவர்.
ஆனால், அன்று அவர் வாயில் சனி புகுத்திருந்தது போலும். மொத்தமாகச் சொதப்பி, லீலா மற்றும் தங்கைகளிடம் மொத்தமாகக் கெட்ட பெயர் எடுத்து, சோகமாய் ஊர் திரும்ப வேண்டிய நிலையை அவரே உருவாக்கிக் கொண்டார்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
8
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அய்யய்யோ என்ன ஆச்சு போச்சுடா 😳😳😳 பாசமான பெண்கள் … அடித்துக்கொள்ளும் ஆண்கள் … நல்ல கதைக்கரு … 😍😍