
அத்தியாயம் 2
“பாலைக் குடிச்ச கொஞ்ச நேரத்தில் எல்லாம் அந்த ரஞ்சினிப் பொண்ணு மயக்கம் போட்டு விழுந்திருக்கு. அதை மடியில் போட்டுட்டு அம்மாக்காரி அழும் போது அறை மயக்கத்தில் இருந்த குழந்தை,
‘எனக்கு என்னமோ பண்ணுதும்மா. நானும் அப்பா மாதிரியே சாமிகிட்ட போயிடுவேனா. தங்கச்சி பாப்பாங்க பிறந்ததும், அவங்க கூட விளையாடனும் னு ஆசைப்பட்டேன். அவங்களுக்கு நாலு பெயர் கூட நான் யோசிச்சு வைச்சிருந்தேன்.
வளர்ந்து பெரிய பொண்ணாகி உங்களையும் அவங்களையும் நல்லாப் பார்த்துக்க ஆசைப்பட்டேன். ஆனா முடியாது போலவே’ னு சொல்லி அழுது இருக்கு.
அப்ப தான் பண்ண கிறுக்குத்தனம் பிடிபட்டிருக்கு பரமேஸ்வரிக்கு. பிச்சையெடுத்தாவது பிள்ளைகளை நல்ல படியா வளர்க்கலாம் னு முடிவு பண்ண நேரத்தில் விதி வேலையைக் காட்டிடுச்சு.
பரமேஸ்வரி குடிச்ச பாலில் இருந்த விஷம் வேலை செய்யும் முன்னாடியே, மசக்கை வாந்தி வர அதோட சேர்த்து விஷமும் வெளிய வந்திடுச்சு.
மூத்த பொண்ணோட சேர்த்து வயிற்றுக்குள் இருக்கும் மற்ற பிள்ளைகளும் வாழத்தான் ஆசைப்படுதுன்னு புரிஞ்சுக்கிட்ட பரமேஸ்வரி, மடியில் மயக்கமா கிடந்த சிவரஞ்சினியைக் காப்பாத்த முயற்சி பண்ண நேரத்தில் மயக்கம் வர அவளும் விழுந்திட்டா. காலையில் பால்காரன் ரொம்ப நேரம் கதவைத் தட்டியும் திறக்காததால் பக்கத்து வீட்டில் உள்ளவங்களை கூப்பிட்டான்.
அடிப் பாதகத்தி உடம்பு சரியில்லைன்னு ஆஸ்பத்திரியில் ஒருநாள் இருந்திட்டு வரதுக்குள்ள என்னடி பண்ணித் தொலைச்சன்னு அவளோட வீட்டில் தங்கியிருந்த பாட்டி ஒப்பாரியை ஆரம்பிக்க, சிலர் அந்த வீட்டுக் கதவை உடைச்சாங்க.
செத்துப் போன ரஞ்சினியை மடியில் போட்டுக்கிட்டு சித்தபிரம்மை பிடிச்ச மாதிரி உட்கார்ந்து இருந்த பரமேஸ்வரியோட உருவம் இன்னமும் என் கண்ணுக்குள்ள அப்படியே நிற்குது.” என்ற செண்பகவல்லியின் கண்ணில் இருந்து கண்ணீர் வடிய, அவர் கைகளை ஆதரவாகப் பிடித்துக் கொண்டார் மருமகள் ராதா.
“அதிர்ந்து ஒரு வார்த்தை பேசத் தெரியாத பொண்ணு. புருஷன் கூட அவ்வளவு அன்பா அனுசரணையா குடும்பம் நடத்தும் அழகில் அந்த மொத்தக் காலனியோட கண்ணும் அவங்க மேல தான் இருக்கும்.
புருஷன் பொண்டாட்டி எப்படி இருக்கணும் என்பதற்கு நல்ல உதாரணமா இருந்த அவங்க தான் கடைசியில் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கும் உதாரணமாகிப் போயிட்டாங்க.” திக்கித் திக்கி பேசிய தன் மாமியாரைப் பார்த்ததும்,
“சொல்லக் கஷ்டமா இருந்தா வேண்டாம் அத்தை விட்டுடுங்க.” அவர்களுக்கு என்ன ஆனது எனத் தெரிந்துகொள்ள ஆசை இருந்தும் அதை மறைத்தார் ராதா.
ராதாவின் தலையில் கை வைத்து ஆதரவாகத் தடவி விட்டவர் மேற்கொண்டு தொடர்ந்தார். “தன்னிலும் கேடு நாட்டில் கோடின்னு புரிஞ்சுக்காம ஒரு நிமிஷ வருத்தத்தில் தவறான முடிவு எடுத்த பரமேஸ்வரிக்கு ஆண்டவன் கொடுத்த மிகப்பெரிய தண்டனை அவ மூத்த மகளோட சாவு.
ரஞ்சினி சாவுக்கு அவ கண்ணில் இருந்து ஒரு துளி கண்ணீர் வரல. பொண்ணை நாமளே கொன்னுட்டேமோங்கிற குற்றவுணர்ச்சி மட்டும் தான் இருந்தது. இந்தச் சம்பவத்துக்கு அப்புறம் உடம்பையும், மனசையும் இரும்பாக்கிக்கிட்டா, கிடைச்ச சின்னச் சின்ன வேலையை செஞ்சிக்கிட்டு இருந்தா. திடீர்னு ஒருநாள் வீட்டு வாடகையை மொத்தமா கொடுத்துட்டு வீட்டைக் காலி பண்ணிட்டு எங்கேயோ போயிட்டா. அப்படி போகும் போது அவளுக்கு ஆறு மாசம், ஆனா ஒன்பது மாசம் மாதிரி வயிறு இருக்கும்.
கொஞ்ச நேரம் சேர்ந்தாப்பில் நிற்க முடியாது, உட்கார்ந்து எழுந்திரிக்க முடியாது. சின்னச் சின்ன வேலைகள் செய்வது கூட கஷ்டம், ஒத்தை ஆளா எல்லாத்தையும் சமாளிச்சா, ஒத்தப் பிள்ளையை கொன்னாச்சு, இந்தப் பிள்ளைங்களை பெத்து வளர்க்கிறது தான் மூத்த பொண்ணுக்கு செய்யுற நியாயமா இருக்கும் னு நினைச்சாளோ என்னவோ, அவளோட ஒவ்வொரு செயலிலும் வைராக்கியம் அதிகமா இருக்கும். இந்நேரம் எங்க இருக்காளோ என்ன பண்றாளோ தெரியல.” பெருமூச்சுவிட்டார் மூதாட்டி.
“ஏன் அத்தை அந்தப் பொண்ணும் அவங்க வயித்தில் இருக்கிற குழந்தைங்களும் கண்டிப்பா நல்லா இருப்பாங்க இல்ல.” தன் நிறைமாத வயிற்றில் கை வைத்தபடி கவலையுடன் வினவினார் ராதா.
அந்தக் கவலை தனக்குள்ளும் இருந்தாலும் அதை மறைத்து, “கண்டிப்பா நல்லா இருப்பாங்க மா. அவ அங்க இருந்து போகும் போது, அவளோட கண்ணில் ஒரு தீட்சண்யம் தெரிஞ்சது. எப்படியாவது தன்னோட பொண்ணுங்களை வளர்த்து ஆளாக்கியே தீருவேன் என்கிற வைராக்கியம் தெரிஞ்சது.
என்ன ஒன்னு அந்த தைரியம் கொஞ்ச நாளைக்கு முன்னாடி வந்திருந்தா, அந்த சின்னப்பொண்ணு ரஞ்சினி அநியாயமா உயிரை விட்டு இருக்காது. இனி இழக்கிறதுக்கு நம்மகிட்ட என்ன இருக்குன்னு எப்ப ஒருத்தங்களுக்கு தோணுதோ, அப்ப கிடைக்கிற தைரியம் அவங்க வாழ்நாள் முழுக்க போதுமானதா இருக்கும். அப்படி ஒரு தைரியத்தோட தான் பரமேஸ்வரி அங்க இருந்து கிளம்பினா.
நம்ம முன்னோர்களோட பூர்வீகச் சொத்து நமக்குதான்னு கோர்ட்டில் தீர்ப்பு வந்ததும் நானும் பொண்ணு வீட்டில் இருந்து இங்க வந்திட்டேன்.
இது நடந்து இப்ப இரண்டு மாசம் ஆகுது. அப்ப இந்நேரத்துக்கு அவளும் நிறைமாத கர்ப்பிணியா இருப்பா. என்ன பண்றாளோ.” கவலையுடன் பேசினார் செண்பகவல்லி.
ராதா தங்களை விட்டுச் சற்று தொலைவில் தொட்டிலில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த தன் முதல் இரட்டையர்களையும், எப்பொழுது வேண்டும் என்றாலும் வெளிவரத் தயார் என்ற நிலையில் தன் வயிற்றுக்குள் இருக்கும் அடுத்த இரட்டையர்களையும் நினைத்து பெருமூச்சுவிட்டார். ஆண்டவன் கணக்கிற்கான விடை அப்போதே அவருக்குத் தெரிந்ததோ என்னவோ.
சிலபல ஆண்டுகளுக்குப் பிறகான கடலூர் மாவட்டம். நெய்வேலியை அடுத்த கிராமமும் அல்லாத நகரமும் அல்லாத இரண்டுக்கும் இடைப்பட்ட மதிப்பு கொண்ட ஊரில், “ஹாய் ஹலோ குட்மார்னிங். உங்க எல்லாரையும் ஹெவ் எ குட் டே ப்ரோகிராமுக்கு அன்புடன் வரவேற்பது நான் உங்கள் வைஷ்ணவி. தினம் தினம் வித்தியாசமான ஒரு குடும்பத்தை தான் நாம இந்த நிகழ்ச்சியில் சந்திச்சுக்கிட்டு இருக்கோம்.
அந்த வகையில் இன்னைக்கும் ஒரு வித்தியாசமான குடும்பத்தைப் பத்தி தான் பார்க்கப் போறோம். இந்தக் குடும்பத்தில் மொத்தம் நாலு பேரு, நாலு பேரும் சிஸ்டர்ஸ்.
இதில் என்னடா வித்தியாசம் இருக்குன்னு கேட்கிறீங்களா. வித்தியாசம் இருக்குங்க, இந்த நாலு பேரும் ஒரே பிரசவத்தில் பிறந்தவங்களாம். உங்களுக்கே ஆச்சர்யமா இருக்கு இல்ல. முதன் முதலா இவங்களைப் பத்தி தெரிய வந்தப்ப எங்களுக்கும் ஆச்சர்யமா தாங்க இருந்தது. அதே ஆச்சர்யத்தோட வாங்க அவங்களைப் பத்தி தெரிஞ்சிக்கலாம்.” மூச்சுவிடாமல் பேசிவிட்டு திண்ணை வைத்துக் கட்டப்பட்டிருந்த அந்தப் பழங்கால வீட்டை நோக்கி நடந்தாள் வைஷ்ணவி.
பாரிஜாத மலரைப் போன்ற தூய வெண்மை நிறத்தில் வாசலை நிறைத்திருந்த கோலம் வைஷ்ணவியின் இதழ்களில் புன்னகையைத் தோற்றுவித்தது. அவளுக்கெல்லாம் சுட்டுப்போட்டால் கூட கோலம் வரையை கை வளையாது என்பதே அதற்குக் காரணம்.
நிலைப்படியைத் தாண்டி வீட்டின் உள்ளே வர மெல்லிய சப்தத்தில் கிருஷ்ண லீலைகள் பாடல் ஓடிக்கொண்டிருந்தது. தூசி என்ற பெயருக்கு கூட அங்கு இடமில்லை. தேவைக்கதிகமான ஒரு பொருளும் இல்லை என்பதால் அந்த சின்ன வீடு கூட தாராளமாகத் தெரிந்தது.
சுவற்றில் சில பெண் குழந்தைகளின் படங்கள் இருக்க வைஷ்ணவியின் கட்டளையின் பேரில் வேகவேகமாக அதை ஃபோகாஸ் செய்தான் கேமராமேன்.
“அடடே வைஷ்ணவி வாங்க வாங்க.” ஆள் அரவம் உணர்ந்து வெளியே வந்து வரவேற்றாள் ஒருவள். நேர்வகுடெடுத்து நீண்ட கூந்தலை பின்னலிட்டு, அதில் சிறிதாய் மல்லிகை பூ சூடி இருந்தவள் கழுத்தில் ஒரு கவரிங் செயின், கையில் கண்ணாடி வளையல்கள், காதில் சிறிய தங்க கம்மல், மடிப்பு களையாத காட்டன் புடவை சகிதத்திலும் அழகாகவே காட்சியளித்தாள். அவள் தோற்றமே அவளுடைய எளிமையையும், பண்பையும் காட்டியது.
“வணக்கம் மிஸ், எங்களோட நேயர்களுக்கு உங்க பெயரைச் சொல்லுங்க. அதோட நீங்க எத்தனாவது சிஸ்டர் என்றும் சொல்லிடுங்க.” வைஷ்ணவி சொல்லவும், சிறிதாய்ப் புன்னகைத்தவள்,
“என் பேர் ஊர்மிளா, நான் மூணாவது பொண்ணு.” என அவள் சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில் சாம்பிராணி கரண்டியுடன் அவளைக் கடந்து செல்ல முயன்றவள் ஜடையைப் பிடித்து இழுத்து தன் அருகில் நிறுத்தி, “இவ என் பாசமான தங்கச்சி தேவகி, உங்களுக்குப் புரியும் படிச் சொல்லணும் னா எங்க வீட்டோட கடைக்குட்டி, செல்லமான இளவரசி.” தங்கையின் கன்னம் கிள்ளி முத்தமிட்டாள் ஊர்மிளா.
துறுதுறுவென ஒரு நிமிடத்தில் முகத்தில் ஆயிரம் உணர்வுகளைக் காட்டிக் கொண்டிருந்த தேவகியின் கண்கள் கேமராவைப் பார்த்ததும் பல அபிநயம் பிடித்தது.
“ஊர்மி, என்ன சத்தம் யாரு கூட டேசிக்கிட்டு இருக்க.” என்றவாறு வந்தாள் அழகு நிறைந்த சாந்தமான முகத்துக்கு சொந்தக்கார பெண்ணொருத்தி.
“இவங்க யாரு பர்ஸ்டா செகண்டா?” வைஷ்ணவி கேட்க, குழப்பத்துடனும், கேமராவைக் கண்டதால் லேசான பதற்றத்துடனும் வந்த புதியவளின் புஜத்தில் கிள்ளி துள்ளவிட்டு ரசித்து முடித்த ஊர்மி, “எங்க இரண்டாவது அக்கா, பெயர் ருக்மணி அப்பாவியான அழகி.” என்று தமக்கையைத் தோளோடு அணைத்து பயம் போக்கினாள்.
“அக்கா, இங்க ஒரு நிமிஷம் வாங்களேன். அன்னைக்கு வந்தாங்க இல்ல டீவி சேனலில் இருந்து, அவங்க வந்திருக்காங்க.” ருக்மணி அழைக்க வந்தாள் மூத்தவள்.
ஆர்ப்பாட்டமில்லாத அழகி, சாந்தம் தவழும் சந்தன மேனியுடையவளின் முகத்தில் எச்சரிக்கை உணர்வு பொங்கி வழிந்தது. அது குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களாக இருக்கும் எவருக்கும் தானாக வந்து ஒட்டிக்கொள்ளும் என்பதில் சந்தேகம் கொள்ள எதுவும் இல்லை.
“இவங்க தான் எங்க மூத்த அக்கா பேரு லீலாவதி.” என்றனர் முவரும் கோரஸாக.
“என்ன கோரஸ் எல்லாம் பலமா இருக்கு நீங்க கொடுக்கிற பில்டப்பை வைச்சுப் பார்த்தா இவங்க தான் இந்த வீட்டோட ஹீரோயினா.” தன் பாணியில் புன்னகையுடன் கேட்டாள் வைஷ்ணவி.
“அக்கா, தங்கச்சி நாங்க நாலு பேருமே இந்த வீட்டோட ஹீரோயின்ஸ் தான்.” தங்கைகளை விட்டுக் கொடுக்காமல் உடனே பதில் வந்தது லீலாவிடம் இருந்து.
“அப்படி சொல்லுக்கா” என்றவண்ணம் மற்ற மூவரும் மூத்தவளை நெருங்க, அவர்கள் பிரிவதற்கு முன்னர் வேக வேகமாக அவர்களை ஃபோகஸ் செய்து காணொளிக்கு நடுவே சில பல புகைப்படங்களையும் எடுத்தான் கேமராமேன்.
“என்ன அத்தை கேமராவோட நிறைய வண்டிங்க இருக்கு. சினிமா ஷீட்டிங் ஏதாவது நடக்குதா என்ன?” பெண்கள் நால்வரின் வீட்டுக்கு, எதிர்வீட்டில் விருந்தாளியாக வந்திருந்த பெண் ஒருத்தி தன் அத்தையிடம் வினவினாள்.
“நீ இங்க முதல்முறை வந்திருக்க இல்ல அதனால் தான் உனக்குத் தெரியல, அந்த வீட்டில ஒரே பிரசவத்தில் பிறந்த நாலு பொம்பளைப் புள்ளைங்க இருக்காங்க. அவங்களைப் பேட்டி எடுக்கத் தான் டீவி சேனல் காரங்க வந்து இருக்காங்க.” என்றார் அவளுடைய அத்தை.
“அம்மாடியோவ் ஒரே பிரசவத்தில் நாலு பொண்ணுங்களா? அவங்க அம்மா எப்படித் தான் தாங்கினாங்களோ தெரியல!” என்றாள் அந்தப் பெண் ஆச்சர்யத்துடன்.
“எங்களுக்கும் தாங்க தெரியல. அப்பா செத்துப் போய், மூத்த பொண்ணையும் இழந்துட்டு, அநாதையா அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழியில்லாம இந்த ஊருக்கு வந்த எங்க அம்மாவுக்குள்ள அப்படி என்ன வைராக்கியம் இருந்துச்சோ தெரியல.
இந்த வீட்டில் அவங்களோட பழைய ப்ரண்டு ஒருத்தங்க இருந்தாங்க. அம்மா, அப்பா, புருஷன், புள்ளைன்னு எல்லாத்தையும் விபத்தில் பலி கொடுத்த தனிக்கட்டை. அவங்க தான் எங்க அம்மாவுக்கு அடைக்கலம் கொடுத்து தங்க வைச்சிருந்தாங்க.
உங்களுக்கு இன்னொரு விஷயம் சொல்லவாங்க. நாங்க நாலு பேரும் சுகப்பிரவசம். அதுவும் இந்த வீட்டில் தான் பிறந்தோம். எங்க அம்மாவோட ப்ரண்டு பொன்மணி அத்தை சில பாட்டிங்க சேர்ந்து தான் பிரசவம் பார்த்து இருக்காங்க.
முதல்ல நான் லீலா, எனக்கு அடுத்து மூணு நிமிஷம் கழிச்சு ருக்குமணி, அடுத்த ஐந்து நிமிஷத்தில் ஊர்மிளா, அடுத்த இரண்டாவது நிமிஷத்தில் தேவகின்னு வரிசையாப் பிறந்தோம்.
பொன்மணி அத்தைக்கு எங்களைப் பார்த்துக்கிறது மட்டும் தான் வேலை. அம்மா பக்கத்தில் இருந்த ஒரு மில்லில் வேலை பார்த்தாங்க. நாலு குழந்தைங்க என்பதால் பால் நிறைய சுரக்கும் அம்மாவுக்கு. காலையில் நிறைய பால் எடுத்து டப்பாவில் அடைச்சு அத்தைகிட்ட கொடுத்துட்டு தான் வேலைக்கு போவாங்க, வேலை நடுவிலும் சிலசமயம் வந்து பசியாத்திட்டு போவாங்க.
இருந்தாலும் அடிக்கடி பால் கட்டி ரொம்ப வேதனையை அனுபவிப்பாங்களாம். அதைச் சரியா கவனிக்காம விட்டு அது மார்பகப் புற்றுநோயில் வந்து முடிய ரொம்பவே கஷ்டப்பட்டுட்டாங்க. அத்தையின் பெயரில் இருந்த இன்னொரு வீட்டை வித்து அம்மாவுக்கு வைத்தியம் பார்த்தாங்க, ஆனாக் காப்பாத்த முடியல.
ஒருத்தர் மாத்தி ஒருத்தர் வயசுக்கு வந்து உட்கார்ந்த நேரம் அது. எங்களைப் பார்த்துக்கிறதுக்காக அத்தை அதே மில்லுக்கு வேலைக்குப் போக ஆரம்பிச்சாங்க. எங்க வாழ்க்கை ரொம்ப சந்தோஷமும் கிடையாது ரொம்ப துக்கமும் கிடையாது. அவ்வளவு கஷ்டத்திலும் எங்களையும் வேலைக்கு போக சொல்லாம அரசுப் பள்ளியில் படிக்க வைச்சாங்க பொன்மணி அத்தை.
எங்க வீட்டில் புதுத் துணி இருக்காது, விளையாட்டுப் பொருட்கள் இருக்காது, திண்பண்டங்கள் இருக்காது, ஆனா தினமும் மூணு வேளை சாப்பாடு கண்டிப்பா இருக்கும்.
அத்தை இரண்டு வருஷத்துக்கு முன்னாடி தவறிப் போனாங்க. அப்ப நான் குடும்பத்துக்கு மூத்தவளா என்னோட மேல்படிப்பை நிறுத்திட்டு வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். இராத்திரியில் எங்க பாதுகாப்புக்கு ஒருத்தர் மாத்தி ஒருத்தர் கண் முழிச்சி இருப்போம். இதுதாங்க எங்க வாழ்க்கை.” சுருக்கமாய் தேவயானதை மட்டுமே சொன்னாள் லீலா.
“எனக்கு ஒரு சந்தேகம் லீலா, இரட்டை குழந்தைகள் என்றாலே அச்சு அசல் ஒரே மாதிரி இருக்க வாய்ப்பு இருக்கு. அப்படி இருக்க, உங்க நான்கு பேரில் ஒருத்தருக்கு கூட உருவ ஒற்றுமை இல்லையே ஏன்!” அதி முக்கியமான கேள்வியைக் கேட்டாள் வைஷ்ணவி. அவளுக்கு மட்டும் அல்ல, இவர்களை முதன்முதலாகப் பார்க்கும் யாருக்கும் இந்தக் கேள்வி வராமல் இருக்காது.
காரணம் லீலா அவள் அக்கா சிவரஞ்சினியைப் போல் இருப்பாள். ருக்மணி பரமேஸ்வரியின் அச்சு. ஊர்மிளா தந்தை ரமணியைப் போல் இருப்பாள். தேவகி இரண்டு தலைமுறைக்கு முன்னால் இருந்த பாட்டியைப் போல் இருக்கிறாள் என்று பரமேஸ்வரி சொல்லி பிள்ளைகள் கேட்டதுண்டு.
“எங்களுக்குக் கூட அதுக்கான காரணம் ரொம்ப நாள் தெரியாது. ஆனா நாங்க பத்தாம் வகுப்பு படிக்கும் போது எங்க பயாலஜி டீச்சர் தான் அதுக்கான விளக்கத்தைச் சொன்னாங்க.
இரட்டைக் குழந்தைகளோட உருவாக்கத்துக்கு இரண்டு வழி இருக்கு. முதலாவது, ஒரு கருமுட்டை ஒரு உயிரணு சேர்ந்து உருவான கரு பிளவுபட்டு, இரண்டு துண்டாகி இரண்டு குழந்தைகளா வளர்வது. அவங்க தான் ஒத்த இரட்டையர்கள்,(Identical twins). அவங்களோட உருவம் தொடங்கி DNA வரை ஒரே மாதிரி இருக்கும். கைரேகை ஒன்று தான் அவர்களை துல்லியமா வித்தியாசப்படுத்திக் காட்டும். இவங்க பெரும்பாலும் ஒரே பாலினத்தில் தான் இருப்பாங்க. அதாவது இரண்டு ஆண் குழந்தைகளாவோ, இல்லை இரண்டு பெண் குழந்தைகளாகவோ தான் பிறப்பாங்க.
அதுவே, இரண்டு வெவ்வேறு கருமுட்டை ஒரே சமயத்தில் முதிர்ச்சியுற்று கர்பப்பையை வந்து சேர்ந்து, இரண்டு வேறுபட்ட உயிரணுக்களோடு சேர்ந்து கருவுற்று, இரண்டு குழந்தைகளா வளர்வது (Fraternal twins) அதாவது, Non identical twins என்று சொல்லுவாங்க.
இந்த வகையில் பிறக்கும் குழந்தைகள் இரண்டும், ஒரே பாலினத்திலும் இருக்கலாம், இல்ல ஒன்று ஆணாகவும் இன்னொன்று பெண்ணாகவும் இருக்க வாய்ப்பு உண்டு. இந்த வகையில் பிறக்கும் குழந்தைகள் ஒரே பெற்றோருக்குத் தனித்தனியாகப் பிறக்கும் பிள்ளைகள் மாதிரி தான். உருவ அமைப்பில் ஆரம்பிச்சு, நிறைய மாற்றங்கள் இருக்கும் இவர்களுக்குள்ள.
இதே மாதிரி தான் மூன்று, நான்கு, ஐந்து பிள்ளைகள் உண்டாவதும். வெளிநாட்டில் ஒரே நேரத்தில் பிறந்த ஐந்து குழந்தைகளில் மூன்று பேர் Identical triplets ஆகவும் மற்ற இரண்டு பேர் Non identical twins ஆகவும் பிறந்திருக்காங்க. இயற்கையோட பல அதிசயங்களில் இதுவும் ஒன்னு.
நாங்க நாலு பேரும் தனித்தனியே நான்கு கருமுட்டைகளும், நான்கு உயிரணுவும் சேர்ந்து, நான்கு தனித்தனி கருவா உருவாகி, ஒரே கர்ப்பப்பையை பகிர்ந்து வளர்ந்தவங்க. அதனால் தான் நான்கு பேரும் உருவ ஒற்றுமையில் கொஞ்சம் முன்ன பின்ன இருக்கோம்.” நீண்ட விளக்கம் கொடுத்தாள் லீலா
“சூப்பர் லீலா, இந்த விஷயம் எல்லாம் எனக்கும் கூட சரியாத் தெரியாது. அப்புறம் இன்னொரு சந்தேகம், அறிவியல் படி முதலில் உருவான கரு கடைசியாப் பிறக்கும், கடைசியா உருவான கரு முதலில் பிறக்கும் னு சொல்லுவாங்க.
அப்படிப் பார்த்தா உங்க தங்கை தேவகி தான் எல்லோருக்கும் மூத்தவங்களா இருக்கணும், இதைப் பத்தி என்ன நினைக்கிறீங்க.” பெரிய விஷயத்தை கேட்டுவிட்டோம் என்ற நினைப்பில் அவர்களைப் பார்க்க, ஒரே நேரத்தில் சிரித்து வைத்தனர் சகோதரிகள் நால்வரும்.
“என்னங்க சிரிக்கிறீங்க?” வைஷ்ணவி குறைப்பட்டுக்கொள்ள, “ஆன்மீகத்துப்படி முதலில் ஜெனிக்கும் குழந்தை தான் மூத்தவங்கன்னு சொல்லுவாங்க. மகாபாரதம் எடுத்துக்கோங்க. தர்மனுக்கு முன்னாடியே கௌரவர்கள் அத்தனை பேரும் காந்தாரியோட கர்பப்பையில் உருவாகிடுவாங்க. ஆனா முதலில் பிறந்ததால் தர்மன் தான் எல்லோருக்கும் மூத்தவராகிப் போனார்.
ஆன்மீகத்தை நம்புறவங்க அதன்படி நடக்கட்டும், அறிவியலை நம்புறவங்க அதன்படி நடக்கட்டும். இங்க எங்க வீட்டில் நாங்க நாலு பேருமே ஒன்னு தான். எங்களுக்குள்ள நீ உயர்வு, நீ தாழ்வு, நான் சொன்னதை தான் நீ கேட்கணும் என்ற எந்தப் பாகுபாடும் கிடையாது.” பெருமையுடன் சொன்னாள் லீலா. இன்னும் சில பல கேள்விகள் கேட்டு பேட்டியை முடித்துக்கொண்டு கிளம்பினாள் வைஷ்ணவி.
“அத்தை எனக்கு அந்தப் பொண்ணுங்களைப் பத்தி தெரிஞ்சிக்கணும் போல இருக்கு. கொஞ்சம் சொல்றீங்களா?” எதிர்வீட்டுப் பெண் கேட்கவும் சொல்ல ஆரம்பித்தார் அவளுடைய அத்தை.
“மூத்தவ லீலா, சரியான சமத்துப் பொண்ணு. வேலைக்குப் போய் சம்பாதிச்சு அவ குடும்பத்தை ஒத்த ஆளாக் காப்பாத்துறா. பொறுப்பு ரொம்பவே அதிகம். அவளுக்கு அவ தங்கச்சிங்க தான் உலகம். அவங்களைப் பத்தி யாராவது ஒரு வார்த்தை தப்பா சொன்னாலும் பத்திரகாளியா மாறிடுவா. ஆம்பிளைங்களை ஏறெடுத்துக் கூட பார்க்கமாட்டா. அவங்க பார்த்தாலும் கண்டுக்க மாட்டா.
எல்லார்கிட்டையும் பேசுவா, ஆனா ரொம்ப ஒட்ட மாட்டா. தான் பட்டினியா கிடந்தாவது தங்கச்சிங்களை சாப்பிட வைப்பா. முக்கியமான விஷயம், எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் கடன் னு பணமோ, பொருளோ கேட்டு எந்த வீட்டு வாசலிலும் போய் நிற்க மாட்டா. ரொம்ப ரோஷக்காரி. அதே நேரத்தில் ரொம்ப பாசக்காரியும் கூட.
இரண்டாவது ருக்குமணி. அக்கா சொல்லு தான் அவளுக்கு வேதவார்த்தை. தன்னோட அக்கா தனக்கு எப்படி ஒரு வழிகாட்டியோ, அதே மாதிரி அவ அவளோட இரண்டு தங்கச்சிங்களுக்கும் வழிகாட்டியா இருப்பா. ரொம்ப அழகு. ஆனாக் கொஞ்சம் பயந்த சுபாவம் அவ்வளவு தான்.
மூணாவது ஒருத்தி இருக்காளே ஊர்மிளா. சரியானவடி அவ, சரியான மூளைக்காரி. நாலு பேருல ரொம்ப தைரியமானவ. அக்காங்க அவளுக்கு தெய்வம் மாதிரி. தங்கச்சி குழந்தை மாதிரி.
ஒரு தடவை அவளோட அக்கா லீலாவை ஒருத்தன் பஸ்ஸில் வைச்சு வேணும்னே இரண்டு தடவை இடிச்சிட்டான்னு வெளுத்துக் கட்டிட்டா அவனை. ரொம்பத் துடுக்குத்தனம் நிறைஞ்சவ ஆனா ரொம்பவே நல்ல பொண்ணு.
கடைக்குட்டி தேவகி. அக்காங்களைத் தவிர வேற ஒன்னும் தெரியாது. படிப்பில் சரியான கெட்டிக்காரி, அவளோட வகுப்பில் எப்பவும் அவ தான் முதல் ரேங்க். மேல படிக்க ஆசை இருந்தும் அக்காங்களை தொந்தரவு பண்ணக் கூடாதுன்னு அமைதியா இருக்கா.” பொதுவான குணங்களைச் சொல்லி முடித்தார் அவர்.
“நாலு பேரும் ஒன்னா ஒரே நாளில் பிறந்தவங்க தான், ஒரே வயசு தான். ஆனா அவங்களுக்குள்ள எத்தனை வித்தியாசம்.” அதிசயித்துக் கேட்டாள் அவள்.
“ஒரே வயசு தான், ஆனாலும் குணங்கள் வேற வேற தானே. அதனால் தான் இத்தனை வித்தியாசம். ஆனா அதையும் தாண்டி இவங்களுக்குள்ள பல ஒற்றுமையும் இருக்கு.
பொண்ணுங்க நாலு பேரும் புடவையைத் தவிர வேற எதுவும் கட்டமாட்டாங்க. நாலு பேருக்குமே நல்ல நீளமான முடி. நாலு பேரும் நல்லா சமைப்பாங்க. எல்லாத்துக்கும் மேல நாலு பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் ரொம்பப் பாசம் வைச்சு இருக்காங்க.
ஒருத்தரை விட்டு ஒருத்தர் இவங்களால இருக்கவே முடியாது. இவங்களோட ஒற்றுமை தான் இவங்களோட மிகப்பெரிய பலம். மொத்த தெருவோட கண் திருஷ்டியும் அவங்க மேல தான் தெரியுமா? அவங்க நாலு பேரும் சண்டை போட்டு ஒருநாளும் பார்த்தது இல்லை, அந்தளவுக்கு ஒற்றுமை அவங்களுக்குள்ள.
கல்யாண வயசும் வந்திடுச்சு. எந்தப் புண்ணியவானுங்க இவங்களைக் கட்டிக்கப் போறானுங்களோ தெரியல.” என்றவாறு பெருமூச்சு விட்டார் அவர்.
“அந்தப் புண்ணியவானுங்க யாருன்னு எனக்குத் தெரியுமே.” என்று நிறுத்திப் புன்னகைத்தாள் அந்த உறவுக்காரப் பெண்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
6
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அவங்க யாருன்னு எங்களுக்கும் தெரியுமே 😉 … சூப்பர் நாலு ஹீரோ ஹீரோயினா … அக்கா தங்கைங்க ரொம்ப பாசமா இருக்காங்க …