
இங்க பாரு செந்தமிழ் எனக்கு உன்னை கல்யாணம் பண்ணிக்கிறதுல கொஞ்சம் கூட விருப்பமில்ல … உன்னை மட்டுமில்ல யாரையும் நான் கல்யாணம் பண்ணிக்கிற நிலைமையில இல்ல … என் அம்மா பேச்சை மறுக்க முடியாம தான் நான் உன்னை பொண்ணு பார்க்க வந்தேன் என்று அவன் சொல்ல … வெட்கப்பட்டு குனிந்து அழகாக சிரித்துக் கொண்டிருந்தவள் திடுக்கிட்டு மெல்ல நிமிர்ந்து அவனை பார்த்தாள் …
இளமாறன் … 28 வயது … ஆனால் பார்க்க 22 வயதை போல தான் இருந்தான் … நல்ல இளஞ்சிவப்பு நிறம் … கருகருவென சுருட்டை கேசம் அவன் முன் நெற்றி வரை அழகாக சுருண்டு இருந்தது … கம்பீரமான பார்வை … ஒளி வீசும் கண்கள் … அடர்த்தியான அளவான மீசை … அதன் கீழே தடித்த உதடுகள் … அழகாக ட்ரீம் பண்ணிய லேசான தாடியுடன் இருந்தான் … அழகான கன்ன கதுப்புகள் அவன் முகத்திற்கு வசீகரத்தை தந்தன …
அதனால செந்தமிழ் நீயே கீழ வந்து எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லன்னு எல்லார் கிட்டயும் சொல்லிடு என்று அவன் சொல்ல … அவனை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் சத்தமாக பேசியதில் அதிர்ந்து விழித்தாள் …
செந்தமிழ் … 19 வயது … பார்க்க சிறு வயது குழந்தை போன்ற பால் வண்ணம் மாறாத கள்ளம் கபடமற்ற முகம் … சின்ன கண்கள் … ஆனால் அழகான பெரிய இமைகள் … கருகருவென நீளமான தலைமுடி முதுகின் அடிப்புறத்திற்கு கொஞ்சம் மேல் வரை நீண்டு வளர்ந்திருந்தது … நேர்த்தியான மூக்கு … மாநிறத்திற்கும் சற்று கூடுதலான நிறம் …
ஆனால் இளஞ்சிவப்பு நிறத்தில் மென்மையான சின்ன உதடுகள் … கொஞ்சமே கொஞ்சம் சதைப்பிடிப்புடன் இருந்த கன்னங்கள் … அவள் சின்ன குழந்தை போல மனம் விட்டு சிரித்தால் அந்த சின்ன கண்களும் சுருங்கி … இரண்டு கன்னங்களிலும் அழகான சின்ன கன்னக்குழி தெரியும் … கொஞ்சமே கொஞ்சம் சதைப்பிடிப்புடன் இருந்த கன்னங்கள் … மென்மையில் இருந்து மாறி கொஞ்சம் கடினமான குரல் …
அவள் அடர்ந்த இமைகளை படபடவென அசைத்து அவனை பார்க்க … அந்த துறுதுறு பார்வை அவனை ஏதோ செய்தது … பார்வையை வேறு பக்கம் திருப்பியவன் … இப்படியே பேசாம இருந்தா எப்படி … சரி நானே போய் எனக்கு உன்னை பிடிக்கல … இந்த கல்யாணத்துல எனக்கு சம்மதம் இல்லைன்னு சொல்லிடுறேன் என்று சொல்லி எழுந்து நடக்க ஆரம்பித்தான் …
ஒரு காலை கையால் தாங்கி ஊன்றி … இன்னொரு காலை எடுத்து வைத்து அவன் நடந்து செல்வதை பார்க்க அவள் மனது கனத்து போனது … கொஞ்ச தூரம் நடந்து சென்றவன் கீழே இறங்குவதற்கு முன்பு அவளை பார்த்தான் … அவளோ அழுது சிவந்த கண்களோடு கண்ணீரை துடைத்துக் கொண்டு … அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் …
அவள் கண்ணீர் அவனை ஏதோ செய்ய … திரும்பவும் மெல்ல நடந்து அவள் அருகில் வந்தான் … இப்போ எதுக்கு அழற என்று கொஞ்சம் கடுப்பாக கேட்டான் … அவள் பதில் பேசாமலிருக்க … சொன்னா தான தெரியும் … சரி நான் போறேன் என்று அவன் திரும்ப …
அது வந்து … எனக்கு அம்மா இல்ல … நான் பிறந்த கொஞ்ச நாள்ல அவங்க இறந்துட்டாங்க … என் அப்பா ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டார் … என் சித்தியோட அண்ணன் மனைவி சமீபத்துல இறந்துட்டாங்க … அதனால என் சித்தி அவருக்கு என்னை கல்யாணம் பண்ணி வைக்க நினைக்கிறாங்க …
என் அப்பாவும் அவங்களை ஒண்ணும் சொல்ல முடியல … அவங்க கிட்ட பேச முடியாம எனக்கு வரன் பார்க்க ஆரம்பிச்சார் … நீங்க தான் என்னை முதன்முதல்ல பொண்ணு பார்க்க வந்திருக்கீங்க … எனக்கும் இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல … நான் நல்லா படிப்பேன் … எனக்கு காலேஜ் போய் படிக்கணும்னு ஆசை …
+2 படிச்சு முடிக்கிறதுக்கே வீட்ல தினமும் திட்டும் அடியும் வாங்கி தான் படிச்சேன் … அதுக்கப்புறம் என்னை படிக்க வைக்கல … ரெண்டு வருஷம் வீட்டு வேலை … சமையல் … குழந்தைகளை பார்த்துக்கிறதுன்னு வீட்ல தான் இருக்கேன் …
நீங்க நிறைய படிச்சிருக்கீங்க … சென்னைல பெரிய ஐடி கம்பெனியில வேலை பார்க்குறீங்க … கல்யாணத்துக்கு அப்புறம் என்னை படிக்க வைப்பீங்கன்னு சொன்னாங்க … அதுவும் நகை பணம் சீர்வரிசை எதுவும் வேணாம்னு சொன்னாங்க … அதனால என் சித்தி ஒண்ணு நான் உங்களை கல்யாணம் பண்ணனும் … இல்லன்னா அவங்க அண்ணனை கல்யாணம் பண்ணனும்னு சொல்லிட்டாங்க …
அதனால தான் நான் உங்களை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சேன் … இப்போ நீங்களோ நானோ போய் இந்த கல்யாணம் வேணாம்னு சொன்னா அடுத்து எனக்கு என் சித்தியோட அண்ணன் கூட தான் கல்யாணம் நடக்கும் … அவருக்கு என் வயசுல பசங்களே இருக்காங்க … உங்களை தான் நான் நம்பியிருந்தேன் … இப்போ நான் என்ன பண்ணுவேன் என்று முகம் மூடி அழுதவளை பார்க்க அவனுக்கு பாவமாக தான் இருந்தது …
செந்தமிழ் அழாத … இங்க பாரு என்னை பாரு … அவன் அதட்டலாக பேச அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள் … உனக்கு என்னை பிடிச்சிருக்கா ?? என்று அவன் கேட்க … அவள் ஒன்றும் பேசாமல் அவனை பார்த்தாள் …
ம்ச் … உனக்கு காது கேட்காதா … எல்லாம் ரெண்டு தடவை சொல்லணுமா … என் கால பார்த்தியா … எனக்கு ஒரு கால் உயரம் கம்மியா இருக்கும் … அதனால நான் சாய்ச்சு தான் நடப்பேன் … எனக்கு 28 வயசு ஆகுது உன்னை விட 9 வயசு அதிகம் … இதல்லாம் என்கிட்ட இருக்க குறை … இப்ப சொல்லு இன்னும் உனக்கு என்னை பிடிச்சிருக்கா ?? என்று அவன் அவள் கண்களை பார்த்து கேட்க …
அவள் கண்களோ அவன் கண்களை பார்த்து ரசித்து … பின் அவன் இதழை பார்த்து உள்ளுக்குள் தடுமாற … ஹ்ம்ம் … உடம்புல இருக்கிறது குறை இல்ல … மனசுல இருக்கிறது தான் குறை … இவ்ளோ நேரம் பொறுமையா நீங்க என்கிட்ட பேசுறீங்க … என்னோட கருத்தை கேட்கிறீங்க … அதுனால நீங்க நல்லவர் … எனக்கு உங்களை பிடிச்சிருக்கு என்று சொன்னாள் செந்தமிழ் …
இளமாறன் ரொம்ப நேரம் நிற்க முடியாமல் உட்கார்ந்து கொண்டான் … நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாமா என்று அவன் கம்பீரமாக மார்பை நிமிர்த்தி அவள் விழிகளை பார்த்து கேட்க … பாவையவள் சொக்கி தான் போனாள் …
செந்தமிழ் உன்னை தான கேட்கிறேன் என்று அவன் கத்த … ஹ்ம்ம் … ஹ்ம்ம் … நீங்கதான கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கல்யாணம் வேணாம்னு சொன்னீங்க … இப்போ இப்படி கேட்கிறீங்க … என்று அவள் விழிகளை உருட்டி தயங்கி தயங்கி கேட்க … இளமாறன் லேசாக புன்னகைத்தான் …
நாம கல்யாணம் பண்ணிக்க போறோம் … ஆனா கணவன் மனைவியா வாழப்போறது இல்ல என்று சொன்னவனை குழப்பமாக பார்த்தாள் … நான் வீட்ல ஒரே பையன் … என் அம்மாவுக்கு நான் தான் எல்லாம் … எனக்கும் அவங்க தான் உலகமே … நான் என் அம்மா சொன்ன படி தான் கேட்பேன் … ஆனா எனக்கு காதல் … கல்யாணம்லாம் விருப்பம் இல்ல … என் அம்மா என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி வற்புறுத்துறாங்க … என்னால அவங்க பேச்சை மீற முடியல என்று சொல்லிக் கொண்டே இருந்தவன் பேச்சை நிறுத்தி அவள் முகத்தை பார்த்தான் …
அவன் பேசுவதை அவள் கேட்டுக் கொண்டிருக்கிறாள் என்பதை … அவள் முகத்தை பார்த்து உறுதி செய்து கொண்டவன் பேச்சை தொடர்ந்தான் … நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா என் அம்மா அவங்க வீட்டு சொத்து பணமும் … சேவிங்ஸ் பணமும் தரேன்னு சொல்லியிருக்காங்க … அதை வச்சு சொந்தமா சாப்ட்வேர் கம்பெனி ஆரம்பிக்கிறது தான் என்னோட ஆசை கனவு எல்லாமே … ஆனா என்னோட அம்மா நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா தான் பணம் தருவேன்னு சொல்லிட்டாங்க …
அதனால நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம் … ஒரு ஆறு மாசம் ஒண்ணா இருக்கலாம் … அதுக்குள்ள என் அம்மா கிட்ட பேசி பணம் வாங்கி நான் பிசினஸ் ஆரம்பிச்சுருவேன் … அதுக்கப்புறம் ஏதாவது காரணம் சொல்லி டிவோர்ஸ் பண்ணிக்கலாம் என்று அவன் சொன்னதும் அவள் அதிர்ச்சியாக அவனை பார்த்தாள்…
நீ எனக்கு இந்த உதவி பண்ணா நான் உன்னை காலேஜ்ல சேர்த்து விடறேன் … உனக்கு காலேஜ் பீஸ் ஹாஸ்டல் பீஸ் எல்லாம் நானே கட்டிடுறேன் … நீ படிச்சு முடிச்சு வேலை வாங்குற வரை … உனக்கு தேவையானது எல்லாம் பண்றேன் என்று அவன் சொல்ல அவள் சிலையாய் நின்றிருந்தாள் …
நீ பயப்படாத … கணவன் மனைவிங்கறது ஊருக்காக என் அம்மாவுக்காக மட்டும்தான் … நான் உன்னை தொட மாட்டேன் … என் விரல் கூட உன் மேல படாது … உன்னை எந்த தொந்தரவும் பண்ண மாட்டேன் … சாப்பாடு … இருக்க பாதுகாப்பான இடம் … படிப்பு இதெல்லாம் உனக்கு சரியா பண்ணிடுவேன் … உனக்கு லீகலா விவாகரத்து குடுத்திடுவேன் …
நீ அதுக்கப்புறம் படிச்சு வேலைக்கு போய் … உன்னோட அழகுக்கும் வயசுக்கும் ஏத்த … உடம்புல குறையில்லாத மாப்பிள்ளையை பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ என்று அவன் சொல்ல … அவள் இன்னும் அதிர்ச்சி குறையாமல் தான் இருந்தாள் … அது அவள் முகத்திலேயே தெரிந்தது …
இதுக்கெல்லாம் உனக்கு சம்மதம் அப்படின்னா கீழ வந்து என்னை பிடிச்சிருக்குன்னு சொல்லு … இல்லை நீயே வந்து என்னை பிடிக்கலை அப்படின்னு சொல்லிடு … நான் சொல்லமுடியாது … என் அம்மா மனசை என்னால நோகடிக்க முடியாது என்று இளமாறன் பேசி முடித்து செந்தமிழை பார்க்க … அவள் கண்ணீருடன் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள் …
அவன் மெல்ல நடந்து செல்ல … அவன் படியில் இறங்க போகும் போது எனக்கு சம்மதம் என்று தன் செவ்விதழ் மலர்ந்தாள் பாவை … அவளை பார்த்து அழகாய் புன்னகை செய்தவன் … ஓகே என்பது போல் பெருவிரலை காட்டி விட்டு கீழே சென்றான் … இப்போதைக்கு சித்தியின் கொடுமையில் இருந்து தப்பிக்க வேண்டும் … சித்தியின் அண்ணனிடம் இருந்து தப்பிக்க வேண்டும் என்று நினைத்தவள் முகத்தை துடைத்து கொண்டாள் …
கீழே இறங்கி சென்றாள் … என்னப்பா எல்லாம் பேசிட்டீங்களா … கல்யாணத்துக்கு சம்மதமா என்று சபையில் இருந்த ஒரு பெரியவர் இளமாறனை பார்த்து கேட்க … எனக்கு சம்மதம் … ஆனா செந்தமிழ் சம்மதத்தை கேளுங்க என்றான் … இப்போது எல்லோரும் திரும்பி அவளை பார்க்க எனக்கு சம்மதம் என்றாள் …
பாவம் இளமாறனை பற்றி முழுதாக தெரியாமல் சம்மதம் சொல்லி விட்டாள் செந்தமிழ் … கொடுமையில் இருந்து தப்பிக்கிறேன் என்று நினைத்து பெரிய கொடுமையில் சிக்கிக் கொண்டாள் … அவன் தன்னுடைய சுயநலத்திற்காக அவளுடைய வாழ்க்கையை பலியாக்க போகிறான் என்று தெரியாமல் மாட்டிக் கொண்டாள் … இதையெல்லாம் தெரிந்து கொள்ளும் போது பாவம் அவள் எல்லாவற்றையும் இழந்து நின்றிருப்பாள் …
காதலாய் வருவாள் 💞 …..
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


காதலாய் ஒரு ஆரம்பம் என்று நினைத்தால் இறுதியில் கொக்கி போட்டு நிறுத்தியுள்ளீர்களே!
நாயகன் தனது சுயநலத்திற்காக கல்யாணம் செய்து கொள்ள போகின்றான்.
நாயகியோ ஏற்கனவே கனவுகள் கூட காண முடியாமல் தவிக்கிறார். திருமணம் வாயிலாக வாழ்வில் சிறிதாவது வசந்தம் வீசும் என்று பார்த்தால்,
அவள் வாழ்வோ சித்தியின் கைப்பிடியில் இருந்து விடுபட்டு கணவனின் கைகளில் சிறைபட போகின்றதோ? பொருத்திருந்து பார்ப்போம்.
வாழ்த்துகள்.
தங்கள் கருத்துகளுக்கும் ஊக்குவிப்புக்கும் மிக்க நன்றி சகி 🥰🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️