Loading

பிறை -32

 

விடியற்காலை ஐந்து மணிக்கு அந்த கோவிலுக்குள் நுழைந்தார்கள் பிறை, ஆதியின் குடும்பத்தார்கள்.

 

குடும்பம் என்றால் பெரிய அளவிற்கு இல்லை. இருக்கின்ற பிரச்சனையை மனதில் வைத்துக் கொண்டு அளவாகவே அழைத்திருந்தார்கள்.

 

பிறை அவளது தோழி சுஷ்மிதா மற்றும் கீதாவை அழைத்திருந்தாள். சுஷ்மிதா அவளுடைய மாமா அத்தையுடன் வந்திருந்தாள். கீதா அவள் அண்ணனோடு வந்திருந்தாள். பிறகு சிவகாமி, சிவானந்தம் அவ்வளவே.

 

இந்தப்பக்கம் மீனாட்சி, திவாகர், பார்கவி, மற்றும் அவனோடு வேலை பார்க்கும் ஒரு உயர் அதிகாரி. அவனுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் அவரை மட்டும் அழைத்திருந்தான்.

 

இந்த திருமணத்தை பற்றி அவரும் வெளியே கூறப் போவது இல்லை.

 

பிரம்ம முகூர்த்தத்தில் திருமணத்தை முடித்து விட்டு வீட்டிற்குள் வந்தால் தான் யாருக்கும் அவ்வளவாக இந்த திருமண விஷயம் வெளியே கசியாது என அப்படியே முடிவு செய்திருந்தார்கள்.

 

தற்போதைக்கு சிவானந்தம் கையில் அத்தனை பெரிய தொகை இல்லை. ஏடிஎம் பயன்படுத்தவும் அவருக்கு தெரியாது. மற்றொரு விஷயம் அவரிடம் ஏடிஎம் கார்ட் இல்லை என்பது தான். அவர்களது கிராமத்தில் இருக்கும் வங்கிக்கு சென்று நேராக எழுதி கொடுத்து தான் பணத்தை பெற்றுக் கொள்வார்கள்.

 

அப்படி இருக்க குறிப்பிட்ட தொகையை மட்டுமே எடுத்துக் கொண்டு சென்னை வந்த அவருக்கு, திடீரென மகளின் திருமணம் நடக்கும் என கனவா கண்டார்.

 

கழுத்தில் கிடந்த மனைவியின் நகைகளை வைத்து தற்போதைக்கு திருமண செலவை செய்து விடலாம் என நினைத்திருக்க.. திவாகர் அதை முற்றிலுமாக மறுத்து விட்டார்.

 

” கண்டிப்பா என் பொண்ணோட கல்யாண செலவுல எங்க பங்கும் இருக்கனும்.. நான் செலவு பண்ணாம எப்படிங்க.. சும்மா கட்டிக் கொடுக்க என் மனசு இடம் கொடுக்கலைங்க ” என முடிவாக கூறி இருந்தார்.

 

” அட செஞ்சுக்கலாங்க சம்மந்தி.. உங்க பொண்ணுக்கு செய்யாம யாருக்கு செய்ய போறீங்க ” திவாகர் பேசிப் பார்த்தார்.

 

” இல்லைங்க என் காசும் இருக்கனும்.. இல்லைன்னா நான் ஊருக்கு போய் பணத்தை கொண்டு வந்து தரேன்.. அப்பறம் கல்யாணத்த வச்சுக்கலாம்.. ” கராராக பேசி விட்டார் சிவானந்தம்.

 

” அட என்னங்க இப்படி பேசுறீங்க.. எல்லாமே நம்ம காசு தான்.. நாங்க அதெல்லாம் பெருசா நினைக்கிறது இல்ல.. இப்போ என்ன என் கிட்ட வாங்கிக்கோங்க.. ஊருக்கு போனதும் எனக்கு கொடுங்க ” திவாகர் சமாதனம் பேச.. ஒரு மனதாக ஒப்புக் கொண்டார் சிவானந்தம்.

 

அதன் பின் அவர் பணம் கொண்டு வந்து கொடுத்ததும்.. அதை வாங்கிக் கொண்டவர்.. ” ஊருக்கு போனது கொடுக்கிறேன் சம்மந்தி ” என சொல்லிவிட்டே வாங்கிக் கொண்டார் சிவானந்தம்.

 

” கண்டிப்பா வாங்கிக்கிறேன்” என பணத்தை கொடுத்து விட்டார் திவாகர்.

 

அறைக்குள் வந்ததும் மீனாட்சி தனது கணவனை வசை பாட தொடங்கினார். ” எதுக்கு அவர் கிட்ட போய் பணத்தை திருப்பி கேட்கிறீங்க”

 

” அட நீ வேற, நான் இப்போ அப்படி சொல்லலைனா அவரு கல்யாணத்தை நிறுத்திட்டு ஊருக்கு பணத்தை எடுக்க போயிடுவாரு..  அதுனால தான அப்படி சொன்னேன். பார்க்க ரொம்ப கட்டு செட்டான ஆளா இருக்காரு. அவர் பொண்ணுக்கு அவர் செய்யனும்னு நினைக்கிறாரு.. விடு மீனு செய்யட்டுமே.. ” என மனைவிக்கு புரிய வைத்தவர், கிளம்பி இருந்தார்.

 

இதோ திருமணத்திற்காக பணம் வாங்கியவருக்கு ஒரு செலவையும் வைக்க விடாமல், அனைத்தையும் திவாகர் செய்திருக்க.. அந்த பணம் அப்படியே அவரது கையில் தங்கிப் போனது.

 

ஆனால் அமைதியாக நடப்பதை வேடிக்கை பார்த்தவர்..இந்த பணத்தை மகளுக்கு கொடுத்து விட முடிவு செய்தார்.

 

மாப்பிள்ளையாக பட்டு வேஷ்டி சட்டையில் கம்பீராக வந்திருந்தான் ஆதிதேவ்.

 

” என் மகன் ரொம்ப அழகா இருக்கான்.. என் கண்ணே பட்டுடும் போல ” மீனு சொடக்கிட.. மகனை தான் புன் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார் திவாகர்.

 

பின்னால் அவன் எடுத்து கொடுத்த ஆகாய வண்ணப் பட்டில் ஜொலித்து கொண்டு வந்தாள் பிறைநிலா.

 

இயற்கையிலேயே அழகான முக பாவனையை கொண்டவள்.. இன்று அழகு நிபுணர்களின் கை வண்ணத்தில் இன்னும் மிளிர்ந்தாள்.

 

அத்தனை அலங்காரத்துடன் வந்த பிறையை பார்த்தும் பார்க்காதது போல கடந்து சென்றான் ஆதி.

 

இருவரையும் அழைத்துக் கொண்டு நேராக சன்னதிக்கு சென்றனர். அங்கு எல்லாம் தயாராக இருக்க.. இருவரையும் அருகே நிறுத்தி, பூஜைகளை செய்து விட்டு.. சாமியின் காலடியில் இருந்த மாங்கல்யத்தை எடுத்து வந்து ஆதி கையில் கொடுக்க.. பெரும் மூச்சுடன் அந்த மாங்கல்யத்தை பார்த்தவன்.. அருகில் நின்ற பிறையையும் ஒரு பார்வை விட்டு, கையில் வாங்கிய நொடி, கழுத்திலும் கட்டி இருந்தான்.

 

கடவுளை வணங்கிக் கொண்டு, அவன் கட்டிய தாலியை மனதார வாங்கிக் கொண்டாள் பிறைநிலா.

 

ஒரே மாதத்தில், பிறைநிலா சிவானந்தம் ஆக இருந்தவள், தற்பொழுது பிறைநிலா ஆதிதேவ் ஆருத்தரனாகி போனாள்.

 

பிறகு அவளது நெற்றியில் குங்குமத்தை வைத்து விட்டு, மாங்கல்யத்திலும் வைத்து விட.. அவனது சின்ன தொடுகைக்கும் தேகம் சிலிர்த்தது.

 

” ரொம்ப சந்தோஷமா இருக்குங்க.. என் பையனுக்கு கல்யாணம் ஆகிடுச்சு ” மீனாட்சி கண்ணீரை துடைத்துக் கொண்டார். மனைவியை தோளோடு அணைத்துக் கொண்டார் திவாகர்.

 

” வாழ்த்துக்கள் ஆதி ” என மகன் அருகில் வந்த திவாகர்.. ” பொண்ணை பேசி முடிச்சது வேணா நாங்களா இருக்கலாம். ஆனால் பொண்ணை பார்த்தது நீதான்னு எனக்கு தெரியும் ” என அவனது காதில் கிசுகிசுத்து செல்ல.. உதட்டளவில் வந்த புன்னகையை அடக்கிக் கொண்டான் ஆதி.

 

சிவகாமிக்கு சொல்லவே வேண்டாம்.மகளை  ஒரு நல்லவன் கையில் கொடுத்த திருப்தி அவரது முகத்திலேயே தெரிந்தது. எங்கே ஊருக்கு சென்றால் கணவனின் மனதை மாற்றி தங்கை மகனுக்கு திருமணம் செய்து கொடுத்து விடுவாரோ என்ற பயத்தில் இருந்து முழுமையாக விடைபெற்றார் சிவகாமி.

 

கண்ணீர் மல்க மகளை அணைத்துக் கொண்டார் சிவகாமி.

 

” எதுக்கு மா அழகுற..  அந்த வீட்டுக்கு தனியா போறதை பத்தி யோசிக்கிறியா என்ன ” நக்கலாக கேட்ட மகளை பார்த்து சிரித்தவர்..

 

” இத்தனை வருஷம் சமாளிச்சுட்டேன்.. இன்னும் குறை பொழுதை சமாளிக்க முடியாம போயிடுமா என்ன.. அதுவும் இல்லாம முன்ன மாதிரி இல்ல உங்க அப்பா ” அந்த வார்த்தையை கூறும் போதே சிவகாமிக்கு வெட்கம் வந்து விட்டது.

 

இத்தனை வருடத்திற்கு பிறகு தாயின் நிறைவான முகத்தை பார்த்து பூரித்து போனாள் பிறை.

 

” வெளிச்சம் வரதுக்குள்ள நம்ம வீட்டுக்கு கிளம்பிடலாம்.. வாங்க ” என திவாகர் அழைத்ததும்.. கோவிலை சுற்றி வந்த தம்பதிகள் இருவரும், பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு காரில் ஏறினர்.

 

” லீவ் எடுத்துக்கோ ஆதி ” அவனது உயர் அதிகாரி கூறியும், தலையை இடவலமாக ஆட்டியவன்.. ” இல்ல சார்.. இந்த கேஸ்ல என் பொண்டாட்டியும் இருக்கா.. அப்படி இருக்கும் போது .. இதை எப்படி என்னால விட முடியும் .. நான் நாளைக்கு வந்துடுவேன் ” என்றதும்.. அவனை உயர்வாக பார்த்தவர்..

 

” ஓகே ஆதி.. உன்னோட இஷ்டம் தான் எல்லாம்.. என்னோட சின்ன கிஃப்ட் ” என இருவருக்குமான மோதிரத்தை அவன் கையில் கொடுத்தவர்.. பிறைக்கும் வாழ்த்தை தெரிவித்து விட்டு கிளம்பி இருந்தார்.

 

அவர் சென்றதும்.. குடும்பமாக காரில் கிளம்பி இருந்தார்கள். காரில் அமைதியாக அவனருகில் அமர்ந்து கொண்டாள் பிறை.. கதவோரத்தில் ஆதி, அவனருகில் பிறை, பிறைக்கு அருகில் பார்கவி அமர்ந்திருந்தார்கள்.

 

விடியற்காலையில் எழுந்த அசதியிலும், ஜன்னல் வழியாக வந்த குளிர் காற்றிலும், கண்கள் தானாக சொருக.. முயன்று பார்த்தவளுக்கு முடியாமல் போக.. சொக்கி போய் பார்கவியின் தோளில் சாய்ந்த வண்ணம் உறங்கப் போனாள் பிறைநிலா.

 

தங்கையின் தோளில் சாய்ந்த வண்ணம் உறங்கிக் கொண்டிருந்த மனைவியை ஒரு பார்வை பார்த்தவன்.. பின் ஜன்னல் பக்கம் பார்க்க தொடங்கி விட்டான்.

 

சிந்தனைகளில் பல விஷயங்கள் ஓடிக் கொண்டிருந்தது. அரை மணி நேரத்தில் வீடு வந்து சேர்ந்து விட்டார்கள். வீட்டிற்குள் சென்ற மீனாட்சி ஆரத்தி கரைத்து வந்து மகளிடம் கொடுக்க.. மணமக்களுக்கு சுற்றி எடுத்து உள்ளே அனுப்பி வைத்தாள். தட்டில் ஐநூறு ரூபாய் நோட்டுகளை போட்ட அண்ணனை விழிகள் விரிய பார்த்தவள்.. துள்ளி குதிக்காத குறை தான்.

 

அவளுக்கு காசை பற்றி எல்லாம் கவலை இல்லை. ஆனால் அண்ணன் முதல் முறையாக அவளுக்கு கொடுத்த பணம் என்பதால் வந்த சந்தோஷம்.

 

உள்ளே வந்ததும் பால் பழம் கொடுத்து .. சாமி படத்திற்கு முன் விளக்கை ஏற்ற வைத்தார் மீனாட்சி.

 

” அண்ணி டிபன் வெளிய சொல்லிட்டேன்.. வந்ததும் சாப்பிடலாம்.. நான் பிறைக்கு மட்டும் பழத்தை உரிச்சு வச்சுட்டு போனேன்.. போய் ஜுஸ் போட்டு வரேன் .. நீங்க எல்லாரும் இங்க இருங்க ” என மீனாட்சி உள்ளே செல்ல.. மீனாட்சியை நினைத்து மனதிற்குள் மகிழ்ந்து போனார் சிவகாமி.

 

தன்னைப் போலவே மகளை பார்த்துக் கொள்ள இங்கு மீனாட்சி இருக்கிறார் என்பதில் நிம்மதி அடைந்தார்.

 

” பிறை .. என்ன உக்காந்து கிட்டே தூங்குற ” சிவகாமி மகளை கடிய..

 

கையில் ஜூசோடு வந்த மீனாட்சி .. பிறைக்கு கொடுத்து விட்டு, அவளது அறையை தயார் செய்து, கையோடு மருமகளை அழைத்து கொண்டு அறையில் விட்டு.. “கொஞ்சம் ரெஸ்ட் எடு மா .. கண்ணெல்லாம் சொருகுது பாரு ” என வெளியே வந்து விட்டார்.

 

” நான் பிறை கிட்ட பேசிட்டு வரேன்… கேஸ் விஷயமா ” உடனே ஆதி எழவும்..

 

” உன் பொண்டாட்டி தான்.. இனிமே இந்த பொய் காரணம் எல்லாம் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல ஆதி ” சொல்லி விட்டு பேப்பருக்குள் தலையை நுழைத்துக் கொண்டார் திவாகர்.

 

அவரை முறைத்தவன்.. சிவானந்தனை பார்க்க.. ” நீங்க போங்க மாப்பிள்ளை ” என அனுப்பி வைத்தார்.

 

வேகமாக அறைக்குள் சென்றவனை பார்த்து வெளியே உள்ளவர்கள் நமட்டு சிரிப்பு சிரித்தனர்.

 

சட்டென அறைக்குள் வந்தவனை எதிர்பாராமல் அதிர்ந்து போனாள் பிறை. அப்போது தான் சேலையில் உள்ள ஊக்குகளை மட்டும் கழட்டி வைத்து விட்டு, அவள் அணிந்திருந்த ஆபரங்களை எல்லாம் ஒவ்வொன்றாக கழற்றிக் கொண்டிருந்தாள்.

 

திடீரென அவன் வரவும்.. கண்ணாடி முன்பு அமர்ந்திருந்தவள் சட்டென எழ.. அவளது புடவைகள் கலைய தொடங்கியதை அறிந்து மீண்டும் அதே நிலையில் அமர்ந்து விட்டாள்.

 

” என்ன… ” பதட்டம் அதிகரித்தது.

 

” என்ன என்ன… ஏன் நான் வரக்கூடாதா.. ”

 

” அதில்ல.. திடீர்னு வந்ததும்.. ”

 

” வந்ததும் ”

 

” இல்ல ஒன்னும் இல்ல.. ” என பேச்சை முடித்துக் கொண்டாள். அமைதியாக மெத்தையில் அமர்ந்து விட்டான்.. ஒன்றும் பேசவில்லை. அவளுக்கும் என்ன செய்வது என தெரியவில்லை. தற்போது அறையில் இருந்து அவனை எப்படி போகச் சொல்வாள்.

 

அமைதியாகவே அமர்ந்திருந்தவள்.. பின் பொறுமை இழந்து.. ஆபரங்களை எல்லாம் கழற்றி விட்டு.. அமைதியாக ஆதியை பார்த்தவள்..

 

” கொஞ்சம் உங்க தங்கச்சியை வரச் சொல்லுறீங்களா ”

 

” ஏன் ”

 

” எனக்கு டிரஸ், ஹேர் எல்லாம் மாத்தனும்.. ஹெல்ப் வேணும் ”

 

புது மனைவியை விடாது பார்த்தவன்.. எழுந்து அவளருகில் நெருங்கி வர.. திக் திக்கென துடித்துக் கொண்டிருந்தது அவளது இதயம்.

 

நெருங்கியவனை பார்க்கத் திணறி குனிந்து கொண்டவளை நெருங்கி.. ” மே ஐ ?” என கேட்க.. அவ்வார்த்தையில் சர்வமும் அடங்கி போனது அவளுக்கு.

 

சனா💖

 

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 35

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
31
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்