
பார்ட்டி நடந்து இரண்டு மாதங்கள் ஓடி விட்டது. இன்று காலையில் அவர்கள் எடுத்துக் கொண்ட அத்தனை புகைப்படங்களும் வெளி வந்திருந்தது.
ரூபிணி தன் படங்களை எல்லாம் சமூக வலைதளங்களில் போட்டு விட்டு, அன்றைய வேலையை முடித்து விட்டு வீடு வந்து சேர்ந்தாள்.
அந்த பார்ட்டி நடந்து முடிந்ததில் இருந்து, உதயா அவளிடம் மிகவும் அன்பாக நடந்து கொண்டான். அந்த முத்தத்தை பற்றி அவன் கேட்கவே இல்லை.
கேட்டாலும் மதுவின் போதையில் செய்தது என்று தப்பித்து விட நினைத்திருந்தாள். இருவருமே அந்த பேச்சை தவிர்க்க, அது அப்படியே அடியில் தங்கி விட்டது.
மெடோனா அடுத்து என்னவானாள் என்று தெரியவில்லை. ரூபிணி தன் வாழ்வை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அடுத்தடுத்து நிறைய வேலைகள் வந்தது. அனைத்தும் பெரிய நிறுவனத்தின் ஒப்பந்தங்கள்.
சில நேரம் துணையோடு வேலை செய்ய வேண்டும். பல நேரம் தனியாக வேலை செய்ய வேண்டும்.
இன்று வேலையை முடித்து விட்டு வந்த போது, ராஜ் செய்தி அனுப்பியிருந்தான். அத்தனை படங்களும் நன்றாக வந்திருப்பதாக.
ரூபிணி அவனை பாராட்டி விட்டு குளித்து விட்டு வர, உதயாவிடமிருந்து செய்தி வந்திருந்தது. வீட்டுக்கு வரப்போவதாக.
“இவன் வீட்டுக்கு வந்தாலே வில்லங்கத்தோட தான் வர்ரான்.. இன்னைக்கு என்ன செய்ய போறானோ?” என்று சலித்துக் கொண்டாள்.
நாளை பெரிதாக வேலை இல்லை என்பதால், இன்று எதாவது படம் பார்க்கலாம் என்று முடிவு செய்திருந்தாள். உதயா வந்தால் வந்து விட்டு போகட்டும் என்று படத்தை போட்டு அமர்ந்து கொண்டவள், பசிக்கு சாலட்டை எடுத்துக் கொண்டு அமர்ந்தாள்.
படம் ஆரம்பித்து ஓடிக் கொண்டிருக்க, கதவு தட்டும் சத்தம் கேட்டது. சலிப்போடு எழுந்து சென்று கதவை திறந்தவள், “வாங்க சார்.. என்ன திடீர்னு இந்த பக்கம்?” என்று வரவேற்று விட்டு உள்ளே சென்று விட்டாள்.
உதயா கதவை அடைத்து விட்டு அவளை பின் தொடர்ந்தான்.
“உன்னை பார்க்கனும் போல இருந்துச்சு..”
“நம்பிட்டேன். அப்படி பார்க்குறதுனா இன்னைக்கு ரிலீஸ் ஆன ஃபோட்டோஸ பார்க்கலாமே.. எல்லாமே சூப்பரா இருக்கு..”
“ம்ம்”
“பார்த்தியா?”
“பார்த்தேன் பார்த்தேன்”
“ராஜ் செம்மயா இருந்தாரு.. போஸ்டர் வாங்கி வீட்டுல ஒட்டி வைக்கலாம்னு பார்க்குறேன். பார்ப்போம்” என்றவள் தொலைகாட்சியை பார்த்தாள்.
உதயா அவளை முறைத்து விட்டு திரும்பிக் கொண்டான்.
“இதென்ன படம்?”
“எதோ புது படம்.. பார்க்கலாம்னு உட்கார்ந்துட்டேன்.”
“இத அப்புறம் பாரு.. நான் சொல்ல வந்தத முதல்ல கேளு”
ரூபிணி புருவம் சுருக்கி விட்டு, “இரு வர்ரேன்” என்று எழுந்து சென்றாள்.
இரண்டு காபியை தயாரித்துக் கொண்டு வந்து ஒன்றை அவன் கையில் கொடுத்து விட்டு, “இப்ப சொல்லு.. படத்த அப்புறம் பார்க்கலாம்” என்று நிறுத்தி வைத்தாள்.
உதயா காபியை குடித்து விட்டு, “உனக்கு ஆல்பஸ் தெரியுமா?” என்று கேட்டான்.
ரூபிணி புருவம் சுருக்கினாள். கேள்வி பட்ட பெயர் தான். ஆனால் சட்டென நினைவு வரவில்லை.
அவளது குழப்பத்தை கவனித்து விட்டு, அவனது நிறுவனத்தின் பெயரை சொன்னான்.
“ஓ.. அவனா.. அவன் ஒரு க்ரிமினல் ஆச்சே.. அவனுக்கென்ன?”
“அவன் கூட தான் இப்ப மெடோனா இருக்கா”
ரூபிணி அதிர்ந்து காபி கப்பை கீழே வைத்தாள்.
“அவன் கூடயா? ஏன்?”
“உனக்கு தெரியாதா?”
“அவன் ஒரு கேடு கெட்டவன். மாடலிங்காக வர்ர பொண்ணுங்கள யூஸ் பண்ணிட்டு வாழ்க்கைய அழிச்சுடுவான். அவன் கிட்ட மெடோனாவா?”
“அதான என் ப்ளானே” என்று உதயா புன்னகைக்க, ரூபிணி நம்ப முடியாமல் பார்த்தாள்.
“என்ன பண்ண?”
“மெடோனாக்கு மாடலிங் ஆசை வந்துச்சு..”
“அதுக்கு?”
“உனக்கு முழுசா சொன்னா தான் புரியும்.. நாங்க பழக ஆரம்பிச்சப்போ, மெடோனாக்கு மாடல்ஸ் மேல பெரிய மதிப்பு இல்ல. ஆனா போக போக அவங்க சம்பாதிக்கிறத பார்த்து ஆசை கூடிருச்சு. என் கிட்ட நானும் மாடல் ஆகலாமானு கேட்டா. நானும் அப்போ சரினு சொன்னேன்”
ரூபிணி மீண்டும் காபியை எடுத்து குடிக்க ஆரம்பித்தாள்.
“என் கம்பெனிலயே ட்ரைனியா சேரு.. பார்க்கலாம்னு சொன்னேன். அதுக்கு அவ மாட்டேன்னு சொல்லிட்டா.. என் நிழல்ல வளர்ந்ததா இருக்க கூடாதாம். தனியா செய்ய முடிஞ்சா நல்லா இருக்கும்னு சொன்னா..”
“சோ..?”
“அவள அதுக்கு தான் அன்னைக்கு பார்ட்டிக்கு கூட்டிட்டு வந்தேன். என் கேர்ள் ஃப்ரண்ட்னு சொன்னா, அவள வேற யாரும் சேர்த்துக்க மாட்டாங்க. ஜஸ்ட் ஃப்ரண்ட்னு சொல்லலாம்னு சேர்ந்தே முடிவு பண்ணோம். அன்னைக்கு நான் அவள வெறும் ஃப்ரண்டா தான் எல்லாருக்கும் அறிமுக படுத்துனேன். உன்னை தவிர யாருக்குமே அவ என் கேர்ள் ஃப்ரண்ட்னு தெரியாது.”
ரூபிணி ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அன்னைக்கு பார்ட்டில ஆல்பஸும் இருந்தான். அவன பத்தி தான் தெரியுமே.. புதுசா அப்பாவியா பொண்ணுங்க சிக்குனா வலை விரிப்பான்னு.. அவன் நம்பர மெடோனா கிட்ட கொடுத்துட்டான்.”
“ஓ…”
“அவன பத்தி நான் வார்ன் பண்ணனும்னு நினைச்சேன். ஆனா நேரமே கிடைக்கல. அவசரமா அன்னைக்கு கிளம்பி போயிட்டா. அதுக்கப்புறமும் சீட் பண்ண நியூஸ் தான் வந்துச்சு. சோ ஆல்பஸ் பத்தி நான் சொல்ல முடியல.
நாங்க பிரிஞ்சப்புறம் தான் திட்டம் போட்டேன். அவள எப்படியாவது அவளே போய் ஆல்பஸ் கிட்ட விழுற மாதிரி பண்ணிடனும்னு”
“என்ன பண்ண?”
“அதான் உனக்கே தெரியுமே.. உன்னை அவளுக்கு பிடிக்காது. நீ ஒரு மாடலா இருக்கதால நல்லா சம்பாதிக்கிறனு பொறாமை. இப்ப நானும் உன் கூட இருக்கனா? சோ.. ரூபிணியால மட்டும் தான் மாடலாகி சம்பாதிச்சு உதயா கூட சேர முடியுமா? மெடோனாவும் ஒரு மாடலாகலாம். சம்பாதிக்கலாம். பிரிஞ்சு போன உதயாவ திரும்ப இழுத்துக்க முடியும்.. அப்படினு நினைக்கிற அளவு அவள தள்ளினேன்”
“ஓஹோ”
“அவளுக்கு கொடுத்த வீடு, கார், கார்ட் எல்லாம் பறிச்சப்புறம் அவ பழைய வாழ்க்கைக்கு போயிட்டா. அதுலயே இருந்துட்டா அவ தப்பிச்சுடுவா. தப்பிக்க கூடாது. அவ ஒவ்வொரு நாளும் நானும் நீயும் ஒன்னா இருக்க விசயத்த கேள்வி படனும். அது அவள வெறியேத்தும். அந்த வெறில ஈசி அப்ரோச் ஆல்பஸ் கிட்ட போய் விழனும்”
“அதுக்கு தான் இந்த ரூமரா?”
“ஆமா.. இதுல எதிர்பார்க்காம நடந்தது அவள நாம சாப்பிங் அப்போ பார்த்ததும், கிளப்ல பார்த்ததும் தான். ரெண்டு இடத்துலயும் பயங்கரமா அப்சட் ஆகிட்டா. சோ அடுத்த ப்ளான் இருக்க வேலைய தூக்கி போட்டுட்டு கண்டிப்பா ஆல்பஸ் கிட்ட போவானு எதிர்பார்த்தேன். போயிட்டா”
“பிரில்லியண்ட்” என்ற ரூபிணியின் உதடுகள் பெருமையாக வளைந்தது.
“அந்த ஆல்பஸ் தன் காரியம் ஆகுறதுக்கு பொண்ணுங்கள எப்படி வேணா யூஸ் பண்ணுவான். மெடோனா பைத்தியக்காரத்தனமா பணம் புகழுக்காக அவன் சொல்லுறதுக்கெல்லாம் ஆடப்போறா.. அவ வாழ்க்கையே அழிஞ்சு போயிடும்.. நல்ல ப்ளான்” என்ற ரூபிணியின் குரலில் பாராட்டு மட்டுமே உதயாவுக்கு தெரிந்தது.
உதயா திருப்தியாக சிரித்து விட்டு காபியை குடித்தான்.
ரூபிணியின் எண்ணம் ஆல்பஸிடம் சென்றது. அவன் பொல்லாதவன். அவனிடம் சிக்கும் அப்பாவிப் பெண்களின் வாழ்வை மொத்தமாக அழித்து விடுவான். அவனுக்கு வேண்டப்பட்டவர்களிடம் இந்த பெண்களை அனுப்பி காரியம் சாதித்துக் கொள்வான்.
பெயரும் புகழும் கிடைக்கும் என்று அசை காட்டி காட்டி, அவர்களின் இரத்தத்தை உறிஞ்சி விடுவான். இனி அவர்கள் தேவை இல்லை என்றதும், தூசு போல் உதறி விட்டு வேறு பெண்ணை வளைக்க ஆரம்பித்து விடுவான்.
இப்படி வளர்ந்தவன் அந்த ஆல்பஸ். அவ்வளவு கொடூரமான ஒருவனிடம் மெடோனா பேராசையில் சென்று மாட்டிக் கொண்டாள். இதை விட வேறு எந்த வகையிலும் அவளது வாழ்வை அழிக்க முடியாது.
“சோ… ரெண்டு பேரு வாழ்க்கையும் க்ளோஸ்” என்று ரூபிணி கேட்க, உதயா தலையசைத்தான்.
“விஷால் ஜெயில்ல இருக்கான். வெளிய வந்தாலும் கடன் அவன சும்மா விடாது. மெடோனா ஒரு அயோக்கியன் கிட்ட மாட்டிட்டா.. அவளே நினைச்சாலும் அவள அழிக்காம அவன் விட மாட்டான். ரெண்டு பேரும் சீட் பண்ணதுக்கு தண்டனை அனுபவிக்கிறாங்க”
“அதே தான்.. ரெண்டு பேருக்குமே பேராசை அதிகம்.. அதுவே இப்ப ஆப்பா முடிஞ்சுருச்சு”
“நீ சக்ஸஸ் ஆகிட்ட.. வாழ்த்துக்கள்” என்று ரூபிணி புன்னகையுடன் காபி கப்பை தூக்க, உதயாவும் புன்னகையோடு அவளது கப்பில் இடித்து விட்டு குடித்தான்.
“உன் ப்ளான் முடிஞ்சது.. நாம எப்போ பிரேக் அப் பண்ணுறதா சொல்லுறது?” என்று ரூபிணி சாதாரணமாக கேட்டாள்.
உதயாவின் கை அந்தரத்தில் நின்றது. திடீரென காபி கசந்தது.
தொடரும்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


உதய் ரூபிணி சண்டை காதல் ஆகாதா?.