Loading

காரில் ஏறியதும் ரூபிணி ஒரு பக்கமாக சாய்ந்து கண்ணை மூடிக் கொண்டாள். உதயா அவளை திரும்பிப் பார்த்துக் கொண்டே காரை ஓட்டினான்.

சற்று முன்பு நடந்த எதையும் அவனால் நம்ப முடியவில்லை. மெடோனா அப்படி திடீரென வந்து நிற்பாள் என்று எதிர்பார்க்கவில்லை.

அவளை பார்த்த உடனே தெரிந்தது நிறைய குடித்திருக்கிறாள் என்று. அதுவும் உளறியது வேறு கோபத்தை கிளப்பியது.

அங்கிருந்த பாதிபேர் அவனுக்கு கீழ் வேலை செய்பவர்கள். மீதம் வேறு கம்பெனியை சேர்ந்தவர்கள். அவர்கள் முன்பு அவனது அந்தரங்கம் வெளிவருவதா?

மெடோனா கழுத்தை பிடித்து வெளியே தள்ளி விட தான் தோன்றியது. ஆனால் அப்படி கோபத்தில் எதாவது செய்தால், அது மேலும் பெரிய விசயமாக பரவ ஆரம்பிக்கும்.

பேசுபவள் வாயை எப்படி அடைப்பது என்று அவன் யோசிக்கும் போதே, ரூபிணி ஆரம்பித்து விட்டாள். ரூபிணியின் கோபம் ஒன்றும் அவனுக்கு புதிதல்ல. ஆனால் அவனுக்காக வந்த கோபம் இது. அது புதிது தான்.

ரூபிணி பேசும் போது உள்ளே எழுந்த சந்தோசமும் ஆச்சரியமும், அவன் வாயை கட்டிப் போட்டு விட்டது.

மெடோனாவை ரூபிணி அடித்த போது, ஆழ் மனதில் ஒரு வித திருப்தி பரவியது. அவன் செய்ய வேண்டிய ஒன்றை ரூபிணி செய்து விட்டாளே.

ஆனால் அந்த முத்தம்? விரலால் மெல்ல உதட்டை வருடிக் கொண்டு ரூபிணியை பார்த்தான்.

அவள் இன்னும் அமைதியாக கண்ணாடியில் சாய்ந்திருந்தாள்.

உதயாவின் முகத்தில் புன்னகை வந்தது. மிகவும் அழகான புன்னகை தான். திடீரென கிடைத்த முத்தத்தை நினைத்து முதலில் அதிர்ந்தாலும் இப்போது பிடித்திருந்தது.

காரை ஒரு இடத்தில் நிறுத்தி விட்டு ரூபிணியை பார்த்தான்.

“தூங்கிட்டியா?” என்று கேட்க, நிமிர்ந்து அமர்ந்து மறுப்பாக தலையசைத்தபடி சுற்றிலும் பார்த்தாள்.

“இறங்கு..” என்றவன் முதலில் இறங்கி விட, அவளும் இறங்கி நின்றாள்.

சில்லென முகத்தில் மோதிய காற்று, அவளது உடலை மெல்ல அமைதிபடுத்தியது.

“வா..” என்று அவள் கையைப்பிடித்து அழைத்துக் கொண்டு நடந்தான்.

ரூபிணி இணைந்திருந்த கைகளை பார்த்தாலும், அவன் இழுத்த இழுப்புக்கு நடந்தாள்.

ஒரு பாலத்தின் மீது ஏறி நின்றனர். சற்று முன்பு பெய்த மழையின் காரணமாக, தண்ணீர் தடம் அங்காங்கே இருந்தது. மற்றபடி ஆட்கள் பெரிதாக இல்லை. சிலர் பாலத்தை தாண்டி நடந்து கொண்டிருந்தனர்.

கீழே வாகனங்கள் ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்க, மறுபக்கம் தண்ணீர் இருந்தது. அருமையான இடம் தான்.

ரூபிணியின் முகத்தில் மெல்ல புன்னகை மீண்டது. உதயா அவளையே கவனித்துக் கொண்டிருந்தான். அவள் இழகுவான பின்பே அவனும் புன்னகைத்தான்.

க்ளப்பில் நடந்ததை பற்றி பேசலாமா? என்று யோசித்தான். பிறகு அவள் அவ்வளவு தெளிவாக இல்லை என்று உணர்ந்து விட்டு விட்டான்.

“இங்க படிச்சதால நிறைய இடம் தெரியும். எப்பவும் ஃப்ரண்ட்ஸோட சுத்திட்டே இருப்பேன்” என்றவன் பார்வை தண்ணீரில் இருந்தது.

ரூபிணி அவனை திரும்பிப் பார்த்து விட்டு புன்னகைத்தாள்.

“நீ எங்க படிச்ச?” என்று கேட்க, ரூபிணி தோளை குலுக்கினாள்.

“எங்க ஊர் பக்கத்துல ஒரு யுனிவர்சிட்டில..”

“படிக்கிற காலம் ரொம்ப ஸ்பெஷல்ல?”

தலையாட்டினாள்.

“எந்த கவலையும் இல்லாம வாழ்ந்த காலம்”

“அப்படினு யார் சொன்னா?” என்று தலை சாய்த்து கேட்டாள்.

“ஏன் நீ கவலைப்பட்டியா?”

“ஆமா.. நேரத்துக்கு அசைமண்ட் சப்மிட் பண்ணனும். எக்ஸாம்ல பர்சண்டேஜ் குறைஞ்சுட கூடாது. க்ளாஸ் ஒழுங்கா அட்டன் பண்ணனும். முக்கியமா நோட்ஸ் எதுவும் மறந்துட கூடாது.. நிறைய கவலைகள்..”

“ஆனா அதெல்லாம் இப்ப இருக்க கவலைகள கம்பேர் பண்ணும் போது கம்மி தான?”

“ஏன் கம்பேர் பண்ணனும்? அந்த வயசுல அந்த கவலை பெருசுனா.. இப்ப இந்த கவலை பெருசு. எப்பவும் கவலையோட தான் மனுச வாழ்க்கை ஓடும். நாமலா அது சிறுசு இது பெருசுனு நினைச்சு மனச தேத்திக்கிறோம் அவ்வளவு தான்”

“உனக்கு எப்பவும் ஒரு நியாயம் வச்சுருக்க”

“எனக்கான நியாயம் இல்ல.. உலகத்துக்கே அதான் நியாயம். அஞ்சு வயசு பொண்ணுக்கு நாளைக்கு செய்ய வேண்டிய ஹோம் வொர்க் தான் உலகத்துலயே பெரிய கவலை. அம்பது வயசு அம்மாவுக்கு பிள்ளைக்கு தேவையானத வாங்க பணம் இருக்கா? நாளைக்கு ஆஃபிஸ்க்கு போக நேரம் பத்துமா? அதான் பெரிய கவலை. அஞ்சு வயசு பிள்ளை போய் அம்மா மாதிரியும், அம்மாவ அஞ்சு வயசு பிள்ளை மாதிரியும் கவலைப்படக்கூடாது. சுத்தமா பொருந்தாது”

“குடிச்சுட்டா நிறைய ஃபிலாசபி பேசுவியோ?”

ரூபிணி இதைக்கேட்டு சிரித்து விட்டு திரும்பிக் கொண்டாள்.

“உன் பழைய ஃப்ரண்ட் யாரு கூடயும் காண்டாக்ட்ல இல்லையா?”

“இல்ல. சிலர எப்பவாவது பார்ப்பேன். பொய்யா சிரிச்சுட்டு போயிட்டே இருப்பாங்க. நானும் கண்டுக்க மாட்டேன். நீ?”

“நாங்க அடிக்கடி மீட் பண்ணுவோம். யாருக்காவது கல்யாணம்னா ஒன்னா வந்து செலிபிரேட் பண்ணிட்டு போவோம். இதே சிட்டில நடந்தா ஒன்னா ஊர் சுத்தி பழைய கதை எல்லாம் பேசிட்டு போவோம்”

ரூபிணி தலையாட்டி விட்டு கொட்டாவி விட்டாள்.

“இப்ப ஓகேவா?”

“ம்ம்..”

“போகலாமா?”

“அங்க இருக்கவங்க என்ன நினைச்சுருப்பாங்க?”

“என்ன நினைச்சா நமக்கென்ன? அவங்க மனச மாத்துறதால எதுவும் ஆகிட போறது இல்ல..”

ரூபிணி பெருமூச்சு விட்டு விட்டு திரும்பி நடந்தாள்.

இருவரும் மீண்டும் காருக்கு வந்து அமர்ந்ததும், ரூபிணி மேலும் கொட்டாவி விட்டாள்.

“தூக்கமா வருது..”

“தூங்கு.. அங்க போனதும் எழுப்புறேன்” என்றதும் கண்ணை மூடிக் கொண்டாள்.

•••

அடுத்த நாள் மாலை வீடு திரும்பினர்.

மெலினா அவளை வீட்டில் விட்டு விட்டு, குறுகுறுவென பார்த்தார்.

“என்ன?”

“பார்ட்டில என்ன நடந்துச்சுனு நீ சொல்லவே இல்ல. நானா கேட்டாலும் அவாய்ட் பண்ணிட்டே இருக்க”

“ப்ச்ச்.. ரொம்ப முக்கியமில்ல”

“அப்ப கண்டிப்பா எதோ நடந்துருக்கு”

“ஏன் சித்தி நம்ப மாட்டேங்குறீங்க?”

“எனக்கு உன்னை நல்லா தெரியும் ரூபிணி. நீ காலையில இருந்தே நல்லா இல்ல. எதோ யோசனையிலயே சுத்துற.. என்ன விசயம்?”

“நான் சக்ஸஸ் ஆகிட்டேன் சித்தி”

மெலினா அதிர்ச்சியோடு பார்த்தார்.

“அப்படினா? உதயா உன்னை லவ் பண்ணுறானா?”

“கிட்டத்தட்ட வந்துட்டான்”

“ரூபிணி.. இது விபரீத விளையாட்டுனு எத்தனை தடவ சொன்னேன்?”

“அவன் பண்ணது மட்டும் சரியா? என்னை கார்னர் பண்ணி அவனுக்கு ஃபேக் கேர்ள் ஃப்ரண்ட்டா நடிக்க வச்சான். அதுவும் நான் அவன எவ்வளவு வெறுக்குறேன்னு தெரிஞ்சும் நடிக்க வச்சான்” என்று ரூபிணி வெடித்தாள்.

“இப்ப ஏன் கத்துற? அவன் பண்ணது தப்பு தான். அதுக்காக நீ அவன இப்படி பழி வாங்கனுமா?”

“வேற எப்படி பழி வாங்குறது? அவன மாதிரி என் கிட்ட பணம் இருக்கா? அவனை விலைக்கு வாங்கி செல்லாக்காசாக்க? இல்ல வேற எதாவது வழி இருக்கா? நீங்களே சொல்லுங்களேன்”

“அதுக்காக அவன் மனசோட விளையாடனும்னு இல்ல?”

“ஹா..” என்று தலைமுடியை சிலுப்பினாள்.

“அவன யாரு இவ்வளவு முட்டாளா இருக்க சொன்னது?”

“இப்ப அவன் லவ் பண்ணுறான்னு எப்படி கண்டு பிடிச்ச?”

“பார்ட்டில.. அவன கிஸ் பண்ணேன்”

“ரூபிணி! என்ன இதெல்லாம்?” என்று நம்ப முடியாமல் கேட்டார்.

“அந்த மெடோனா அங்க வந்து நிப்பானு நினைக்கல. எல்லாரு முன்னாடியும் நாங்க நடிக்கிறோம்னு போட்டு உடைச்சுட்டா. விசயம் லீக் ஆனா என் பேருல டேமேஜ் ஆகிடும்.. அவ கிட்ட முதல்ல சண்டை போட்டேன். அப்புறம் இதான் சான்ஸ்.. உதயாவ செக் பண்ணிடலாம்னு கிஸ் பண்ணேன்.. சர்ப்ரைஸ்!! அவன் என்னை தள்ளி விடல. பதிலுக்கு கிஸ் பண்ணான். சோ கண்டிப்பா என் கிட்ட விழுந்துட்டான்”

ரூபிணி கெத்தான சிரிப்போடு பேச, மெலினாவுக்கு ரூபிணியை பார்க்க பரிதாபமாக இருந்தது.

“இதுக்கு நீ அவன் காண்ட்ராக்ட் வேணாம்னு சொல்லிருக்கலாம்”

“சொன்னேனே.. எதுவும் வேணாம் போய் தொலைனு.. அவன் அந்த மெடோனாவ பழிவாங்க என்னை யூஸ் பண்ணியே தீருவேன்னு அடம்பிடிச்சானே.. நேத்து மெடோனா சொல்லுறா.. அவளுக்கு என்னை பிடிக்காதாம். அதுக்காக தான் அவன் என் கிட்ட பழகுறான்னு.. நானும் எதுக்காக என்னை வச்சு அவள பழிவாங்க பார்க்குறான்னு இத்தனை நாள் புரியாம முழிச்சேன். இப்ப தான் விசயமே தெரியுது. அவளுக்கு பிடிக்காத என் கூட சுத்துனா அவ எரியுவா இல்ல? அத பார்த்து அவன் சந்தோசமா இருக்கலாம் இல்ல?”

“ஆனா.. உதயா வேற எதோ பண்ண போறதா தான சொன்னான்?”

“எத பண்ணா என்ன? நேத்து மெடோனா கெஞ்சும் போது எவ்வளவு திமிரா உட்கார்ந்துருந்தான் தெரியுமா? அவள அழ விட்டு வேடிக்கை பார்த்தான் சித்தி.. அவ சீட்டர் தான். அவள நானே கொல்லனும்னு தான் அசைப்பட்டேன். ஆனா அவன் அவள துடிக்க வைக்க பார்க்குறான். ச்சே.. எவ்வளவு கொடூரமான மனசு அவனுக்கு?”

மெலினா பேச்சற்று அமர்ந்து விட்டார்.

“நான் அவன் டீல ஒத்துக்கிட்டதே இதுக்கு தான். உங்களுக்கும் அது தெரியும். அவனுக்கு உண்மையான காதல் வலி என்னனு காட்டுறேன். மெலினா உடைச்சதெல்லாம் ஒன்னுமே இல்ல. நான் உடைக்கிறேன். திரும்பி எந்திரிக்க முடியாத அளவு உடைக்கிறேன்.. எல்லாம் இருந்தும் எதுவுமே இல்லாத மாதிரி உடைக்கிறேன். என்னை அசிங்கபடுத்துவேன்.. என் பேர நாரடிப்பேன்னு மிரட்டவா செய்யுறான்? அவன் கிட்ட பேரு புகழ் எல்லாம் இருந்தும் சந்தோசம் இருக்காது. இருக்கவும் கூடாது.”

“நீ இவ்வளவு தூரம் பழிவாங்க ஆசைப்படுவனு நினைக்கல.. உதயா தப்பானவன் இல்ல ரூபிணி. உங்களுக்குள்ள நடக்குற சண்டை ஒரு சண்டையே இல்ல. அவன் பிறந்து வளர்ந்த விதம் அப்படி. அதுக்கேத்த மாதிரி பிகேவ் பண்ணுறான்”

“சும்மா சொல்லாதீங்க சித்தி.. நாய் கூட தான் ரோட்டுல பிறந்து வளருது. அதுக்காக அதோட குணம்னு எல்லாரையும் கடிக்க விட்டுரலாமா? இல்ல காட்டுமிராண்டிங்க குணமே அதான்னு ஊர்ல எல்லாரையும் அது கொல்லட்டும்னு நின்னு வேடிக்கை பார்க்கலாமா? குணமாம்ல? அந்த குணம் அவனோட இருக்கனும். என் கிட்ட ஏன் காட்டுறான்? அவனுக்கு தேவையானது கிடைக்கனும்னா எந்த எல்லைக்கும் போவானா?”

“பேபிமா..”

“வேணாம் சித்தி.. உங்க மனசாட்சிய தொட்டு சொல்லுங்க.. நடந்ததுல என் தப்பு என்ன? நான் என்ன பண்ணேன்?” என்று கேட்கும் போது அவள் குரல் உடைந்தது.

மெலினா தாங்க முடியாத வேதனையோடு பார்த்தார்.

“நான் அவனோட லவ்வர சீட் பண்ண சொன்னனா? இல்ல நான் அவ லவ்வர் கூட சேர்ந்து சீட் பண்ணனா? சொல்லுங்க.. நான் என்ன தப்பு பண்ணேன்? எனக்கும் தான் அது காதல் தோல்வி. நான் காதலிச்சவனும் என்னை ஏமாத்திருக்கான். நான் அடுத்தவங்க கிட்ட காட்டிக்கலனா அந்த ஏமாற்றம் வலிக்கவே இல்லனு அர்த்தமா? அந்த வலியில நான் போராடும் போது வந்து நின்னான். விஷால பிரிஞ்சு போனு கேட்டான். பதிலுக்கு உன் கம்பெனி டீல் கொடுனு கேட்டேன். அதுல என்ன தப்பிருக்கு?

அவனுக்கு ஒரு காரியம் நடக்கனும்னா, பதிலுக்கு நான் எதுவுமே கேட்க கூடாதா? அவன் சொல்லுறத எல்லாம் தலையாட்டி கேட்க நான் என்ன அவன் அடிமையா? அவன் கேட்டத கொடுக்கனும்னா நான் கேட்டத கொடுத்துட்டு போயிருக்கலாம்ல? இல்ல அவனுக்கு அவன் வேலை மட்டும் தான் முக்கியம். நான் கேட்டத கொடுக்கனும்னா, பதிலுக்கு என் கிட்ட இருந்து பெருசா எதையாவது பறிச்சுக்கனும்னு பார்த்தான்.

என் பேர அவன் பேர் கூட சேர்த்து அந்த மெடோனாவ அத பார்த்து துடிக்க வச்சு.. அதுல சந்தோசப்படுறான். இத நான் செய்ய மறுத்தா என் பேர நாரடிப்பானாம். நான் தப்பு பண்ண மாதிரி, எனக்கு தண்டனை கொடுக்குறான். இவன் யாரு என்னை தண்டிக்க? அதான்.. அதான் முடிவு பண்ணேன்.. தண்டனை உண்மையிலயே எப்படி இருக்கும்னு அவனுக்கு காட்டனும்னு. உண்மையா மனசு உடைஞ்சு அவனும் துடிக்கனும். அத பார்த்தா தான் நான் நிம்மதியா இருப்பேன்.”

“இதுக்கு நடுவுல உன்னை நீ காயப்படுத்திக்காத பேபிமா”

“நான் ஏன் காயப்பட போறேன்? அவன துடிக்கிறத பார்த்தாலே என் மனசு நிறைஞ்சு போயிடும். அவனோட வலில நான் எனக்கு மருந்து போட்டுப்பேன். நானா அவன கட்டிப்பிடிச்சதும்.. நானா அவன கிஸ் பண்ணதும் போதும்.. அவனா இனி என் கிட்ட வரனும். வருவான்.. அவன் லவ்வ சொல்லுவான். அங்க உடைக்கிறேன் அவன.. அவன அவனே கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு உடைக்கிறேன்” என்று சபதம் போட்டுக் கொண்டவள் கண்ணீர் கூட கண்ணை விட்டு இறங்கவில்லை.

மனதில் இருந்த வஞ்சம் அவளை அவ்வளவு திடமாக்கியிருக்க மெலினாவுக்கு தான் மனம் வலித்தது. அதே வலியோடு கிளம்பிச் சென்று விட்டார்.

தொடரும்.

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 23

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
13
+1
3
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. ரூபிணியை உதயா நிஜமாகவே லவ் பண்ண ஆரம்பித்துவிட்டான் இவளுக்கு புரியவில்லை.