Loading

ரூபிணி கண்மூடி தூங்குவது போல் அமர்ந்திருந்தாள். காருக்குள் அமைதி நிலவியது. உதயா காரை கொண்டு வந்து ஹோட்டலில் நிறுத்தியதும் மெல்ல கண் திறந்தாள்.

“தூங்கிட்டியா? ரூம்க்கு போய் ரெஸ்ட் எடு” என்றதும் தலையாட்டி விட்டு இறங்கினாள்.

மறு பக்கம் உதயாவும் இறங்கி அவளோடு நடந்தான். இருவரும் பெரிதாக எதுவும் பேசிக் கொள்ளவில்லை. அவரவர் அறைக்குச் சென்று விட்டனர்.

உதயா அறைக்கு வந்த பிறகும், ரூபிணியை பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தான். திடீரென கட்டிப் பிடித்ததும் அமைதியாகி விட்டாள். பயமுறுத்தி விட்டோமா? என்று தோன்றியது.

ஆனால் ரூபிணி அவனிடம் பயப்படுவளா? அவளுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவனை அதே உயர்த்திலிருந்து தள்ளி கொன்றிருப்பாள். அமைதியாக இருக்கிறாள் என்றால் குழப்பத்தில் இருக்கிறாள் என்று தான் அர்த்தம்.

அந்த ராஜை சுத்தமாக பிடிக்கவில்லை. அவனுக்கு ரூபிணியை பிடித்திருக்கிறது. உதயா இல்லாவிட்டால் ராஜ் அவளை தூக்கிச் செல்லவும் வாய்ப்புண்டு.

என்னவோ ரூபிணியை விட்டு விடக்கூடாது என்று உதயாவின் மனம் அடம்பிடித்தது. அதே எண்ணத்தோடு உறங்கி விட்டான்.

அடுத்த இரண்டு நாட்களும் விதவிதமான உடைகளோடு சூட் நடந்தது. ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு உடையும் அழகை அள்ளி தெளித்தது.

கடைசி நாள் வேலை முடியும் போது, விடியும் நேரம் வந்து விட்டது.

நாளை இரவு பார்ட்டி இருப்பதால் எல்லோரும் சந்தோசமாக உறங்கச் சென்று விட்டனர்.

ரூபிணி உதயாவின் காரில் தான் ஹோட்டல் திரும்பினாள்.

“நைட் பார்ட்டிக்கு ரெடியாகிட்டு கால் பண்ணு”

“நீயும் கூட வர்ரியா?”

“ம்ம்..”

“நீ இருக்க மாட்டனு கேள்வி பட்டேன்”

“யாரு சொன்னா?”

“யூஸுவலா இருக்க மாட்டனு சொன்னாங்க”

“ஸ்டாஃப்ஸ் கம்ஃபர்டபுளா இருக்க மாட்டாங்கனு நான் இருக்க மாட்டேன். நாளைக்கு ப்ரைவேட் ரூம்ல இருப்போம். பிரச்சனை இல்ல”

“ஓகே.. நான் கால் பண்ணுறேன்.. இப்ப தூங்குறேன்.. பை” என்று விட்டு அறைக்குள் நுழைந்து கதவை அடைத்து விட்டாள்.

பிறகு படுத்து உறங்கி விட்டாள். மதிய நேரம் தாண்டிய பிறகு எழுந்து தயாராகி விட்டு மெலினாவை அழைக்க, அவர் இன்னமும் தூக்கத்தில் இருந்தார்.

“நான் கிளம்பிட்டேன். உதயா கூட போறேன்”

“பத்திரம்.. போன தடவ தனியா போன.. உதயா கிட்ட தான் வம்ப விலைக்கு வாங்கிட்டு வந்த.. இப்ப உதயா கூடயே போற..”

“இந்த தடவ எதுவும் நடக்காதுனு நினைக்கிறேன்.. நீங்க ரெஸ்ட் எடுங்க. ஃபீவர் போகலனா டாக்டர பார்க்க போகலாம்”

“ஓகே” என்று வைத்து விட்டார்.

ரூபிணி உதயாவை அழைத்தாள்.

“ஐம் ரெடி” என்றதும், “அஞ்சு நிமிஷத்துல வர்ரேன்” என்று விட்டு வைத்தான்.

ரூபிணி உதயாவோடு சென்று வாங்கிய உடையை தான் அணிந்திருந்தாள்.

காதில் இருந்த தோடு முதல், காலில் இருந்த செருப்பு வரை அனைத்தும் உதயாவின் பணத்தில் வாங்கியது.

கண்ணாடியின் முன்பு நின்று பல விதமான படங்களை எடுத்து முடிக்க, உதயா வந்து கதவைத் தட்டினான்.

பர்ஸை எடுத்துக் கொண்டவள், புன்னகையுடன் கதவை திறந்தாள்.

உதயா அவளை மேலிருந்து கீழ் பார்த்தான். அன்று பார்த்து பார்த்து வாங்கிய அனைத்தும் இன்று அழகாக அவளை அலங்கரித்திருந்தது.

“எப்படி இருக்கு?” என்று ரூபிணி கையை விரித்து கேட்க, உதயா தலையை மட்டும் ஆட்டினான்.

“ஹலோ? அப்படினா என்ன அர்த்தம்?”

“என் செலக்ஷன் எப்பவும் பெஸ்ட்னு அர்த்தம்”

ரூபிணி இடுப்பில் கை வைத்து முறைத்தாள்.

“உனக்கு ஓவர் கொழுப்புடா”

“உன் திமிர விட கம்மி தான்.. கிளம்பலாம் வா” என்றதும் முறைத்துக் கொண்டே கதவை அடைத்து விட்டு நடந்தாள்.

அடுத்த அரை மணி நேரத்தில் இருவரும் அந்த க்ளப்பில் நுழைந்தனர். மிகப்பிரபலமான க்ளப் தான். அவர்கள் புக் செய்திருந்த அறை பக்கம் ரூபிணியை உதயா அழைத்துச் சென்றான்.

உதயாவின் கை ரூபிணியின் இடையை வளைத்திருக்க, ரூபிணி பெரிதாக எதுவும் காட்டிக் கொள்ளவில்லை. இப்போதெல்லாம் இருவரும் அதிகம் தொட்டுப்பேச பழகியிருந்தனர்.

கதவை திறந்ததும் உள்ளே இருந்தவர்கள் கண்ணில் பட்டனர். சிலர் உதயாவை எதிர்பார்க்காமல் அதிர, பலர் புரியாமல் விழித்தனர். எல்லோரும் படப்பிடிப்பில் இருந்தவர்கள் தான்.

“இப்ப தெரியுது.. நீ ஏன் வர்ரதில்லனு” என்று ரூபிணி உதயாவின் அருகே சென்று பேச, உதயா குனிந்து கேட்டு சிரித்தான்.

சத்தமான பாடல் ஒன்று ஓடிக் கொண்டிருக்க, எல்லோரின் கையிலும் மது இருந்தது. உதயாவை பார்த்து குழம்பியவர்கள், “பாஸ்.. எங்க கூட ஜாயின் பண்ணிக்க போறீங்களா?” என்று கேட்டவனை அவசரமாக அடக்கி அமர வைத்தனர்.

“என்னை மைண்ட் பண்ண வேணாம். என்ஜாய்.. நான் ரூபிணிக்கு கம்பெனியா தான் வந்தேன்” என்று விட்டு தள்ளிச் சென்று சோபாவில் அமர்ந்து விட்டான்.

ரூபிணி அங்கு பழகிய சிலருக்கு நடுவே சென்று அமர்ந்து கொண்டாள். ரூபிணி குடிக்க ஆரம்பித்தாள். உதயா மறுத்து விட்டான்.

“டிரைவ் பண்ணனும்” என்று விட்டு சோடா மட்டும் வாங்கிக் குடித்துக் கொண்டே, கைபேசியை எடுத்து பார்க்க ஆரம்பித்து விட்டான்.

அவன் இருப்பதால் முதலில் அடக்கி வாசித்தவர்கள் கூட, அவன் கண்டு கொள்ளாமல் இருப்பதை பார்த்து விட்டு தங்களது வேலையை பார்த்தனர். குடிப்பதும், பாட்டு பாடுவதும், பாடலுக்கு ஆடுவதும், சிரிப்பதுமாக நேரம் ஓடிக் கொண்டிருந்தது.

உதயா எதேட்சயாக தலையை தூக்கிப் பார்த்தான். ரூபிணியின் அருகே ராஜ் அமர்ந்திருந்தான். சட்டென உதயாவின் முகம் மாறியது. ஆனால் ராஜ் மற்றவர்களிடம் பேசிக் கொண்டிருக்க, உதயா கோபத்தை கட்டுப்படுத்த வேறு பக்கம் பார்த்தான்.

‘இன்னைக்கோட லாஸ்ட்.. அமைதியா இருப்போம்’ என்று நினைத்து தன்னை தானே சமாதானம் செய்தபடி சோடாவை வாயில் ஊற்றிக் கொண்டான்.

சில நிமிடங்கள் மேலும் கடக்க, ரூபிணி உதயாவை கவனித்து விட்டு எழுந்து அவனருகே வந்தாள்.

“நீ குடிக்கல?”

“ட்ரைவ் பண்ணனும்..”

“போரிங்” என்று உதட்டை சுளிக்க, சிரிப்போடு அவளது கையைப்பிடித்து இழுத்து அருகே அமர வைத்தான்.

“எனக்கும் சேர்த்து நீ என்ஜாய் பண்ணு..” என்றவன் தன் சோடா பாட்டிலை அவளது மதுக்குடுவையோடு இடிக்க, சலிப்பாக குடித்து முடித்தாள்.

அந்த நேரம் கதவை திறந்து கொண்டு இரண்டு வெயிட்டர்கள் உணவோடு வர, அவர்களுக்குப் பின்னால் மெடோனா வேகமாக நுழைந்தாள்.

வந்ததும் அவளது பார்வை உதயாவையும் ரூபிணியையும் தேடியது. இருவரும் அருகருகே இருப்பதை பார்த்து வயிறு எரிய, விறுவிறுவென சென்று ரூபிணியின் கையில் இருந்த டாம்ளரை வாங்கி கீழே போட்டாள்.

அத்தனை பேரும் அதிர்ந்து போய் பார்க்க, ரூபிணியும் மெடோனாவை எதிர்பார்க்காமல் அதிர்ச்சியோடு பார்த்தாள். ஒருவன் உடனே பாடலை நிறுத்தி விட்டான்.

உதயாவோ ‘இவ எப்படி இங்க வந்தா?’ என்று புரியாமல் பார்த்தான்.

“யார வேணா ஏமாத்தலாம்.. ஆனா என்னை ஏமாத்த முடியாது.. நீங்க ரெண்டு பேரும் லவ்வர்ஸ் கிடையாது. உன்னை பார்த்தாலே அவனுக்கு பிடிக்காது. எனக்கு உன்னை பிடிக்காதுங்குறதுக்காக உன்னை வச்சு என்னை வெறுப்பேத்துறான். அது தெரியாம நீ அவன நம்பிட்டு இருக்க.. நீங்க எல்லாரும் இவங்க லவ்வர்ஸ்னு நம்புறீங்க தான? ஆனா இல்ல.. இவன் என் பாய் ஃப்ரண்ட்.. என்னை கோபப்படுத்துறதுக்காக இவ கூட சுத்துறான். இவள இவனுக்கு பிடிக்காது.. எப்பவுமே பிடிக்காது..”

மெடோனா உளறிக் கொண்டிருந்தாள். அதிகமாக குடித்திருப்பாள் போலும். நிற்கவும் முடியாமல் தள்ளாடினாள். கண்ணீர் வேறு அவளது முகத்தில் இருந்த பாதி மேக் அப்பை அழித்து விட்டது. அவளது பேச்சு முன்னுக்குப்பின்னாக இருக்க, பலருக்கு ஒன்றுமே புரியவில்லை. அவள் தெளிவாக பேசினாலும் புரியாத நிலையில் தான் இருந்தனர். ஆனால் மெடோனா அதோடு நிறுத்தவில்லை.

“ஏன் இப்படி பண்ணுற? நான் தப்பு பண்ணிட்டேன்.. சாரி.. அதுக்காக இவ கூட சேர்ந்து என்னை பொறாமை பட வைக்க நினைக்காத.. இப்ப நான் பொறாமை படனுமா? பட்டுட்டேன்.. கெஞ்சனுமா? கெஞ்சுறேன்.. ப்ளீஸ் உதயா.. என் கிட்ட வந்துடு” என்று மெடோனா மண்டியிட, அறை முழுவதும் அமைதியானது.

வெளி பக்கமிருந்து வந்த பாடல் சத்தத்தை தவிர, வேறு எந்த சத்தமும் கேட்கவில்லை. எல்லோருக்கும் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. யார் இவள்? எதற்கு இப்படி திடீரென வந்து பேசுகிறாள்? என்று புரியாமல் வேடிக்கை பார்த்தனர்.

உதயாவின் காலின் மீதிருந்த மொடோனாவின் கையை ரூபிணி தட்டி விட்டாள்.

“தொடாத.. அவன தொட உனக்கு உரிமை கிடையாது” என்று ரூபிணி அதட்ட, மெடோனா அவளை தீயாக முறைத்தாள்.

“என் இடத்த பறிச்சுட்டு.. என்னையவே தொடாதனு சொல்லுவியா?”

“உன் இடமா? எது? அடுத்தவன் கூட படுத்தியே.. அந்த இடத்த சொல்லுறியா?”

“ஏய்…”

“ஏய்…” என்ற ரூபிணி அடிக்க கை ஓங்கியிருந்தாள்.

பிறகு அவளாகவே இறக்கி விட்டு, “உன்னை தொடுறது எனக்கு அசிங்கம்.. டிர்ட்டி ஃபெல்லோ.. யாரு கிட்ட கத்துற.. கொன்னுடுவேன்” என்று மிரட்டினாள்.

இத்தனை நடந்தும் உதயா பேசவில்லை. காலுக்கடியில் கிடப்பவளை நசுக்கி கொன்று விட துடித்த மனதை அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

“உதயா.. நீ எதுவுமே பேச மாட்டியா?” என்று மெடோனா மீண்டும் உதயாவின் கையைப்பிடிக்க, ரூபிணி அவளை ஒரே தள்ளாக தள்ளி விட்டாள். மெடோனா தரையில் விழுந்தாள்.

“தொடாதனு சொன்னேன்” என்று ரூபிணி பொங்கிய கோபத்தோடு மிரட்ட, மெடோனாவுக்கு வெறி வந்தது.

“அப்படி தான் தொடுவேன்.. அவன் உண்மையா லவ் பண்ணது என்னை தான். நீ ஜஸ்ட் ஃபேக்.. உன்னை அவன் கனவுல கூட நினைச்சு பார்க்க மாட்டான்.. உதயா.. நீ வா.. நான் உன் கிட்ட பேசனும்” என்று உதயாவின் கையை பிடிக்க வர, உதயா தன் கையை பின்னால் இழுத்துக் கொண்டான்.

“சொல்லிக்கிட்டே இருக்கேன்” என்ற ரூபிணி மெடோனாவை ஒரு அறை விட்டாள்.

அந்த வேகம் தாங்காமல், மெடோனா கன்னத்தை பிடித்துக் கொண்டு கீழே விழுந்தாள்.

“யாரு ஃபேக்? ஹீ இஸ் மைன்” என்றவள், உதயாவின் சட்டையைப்பிடித்து இழுத்து, அவன் இதழோடு இதழ் பொருத்திக் கொண்டாள்.

அத்தனை பேரும் அதிர்ந்து மூச்சை இழுத்துப் பிடிக்க, ராஜ் மட்டும் வேறு பக்கம் திரும்பிக் கொண்டான்.

உதயா ஒரு நொடி அதிர்ந்தாலும், அடுத்த நொடி ரூபிணிக்கு இணையாக முத்தமிட்டான்.

ரூபிணி அவனிடமிருந்து பிரிந்து மெடோனாவை தீயாக பார்த்தாள்.

“இன்னொரு தடவ இவன தொட்ட.. தொட்ட கைய எரிச்சுடுவேன்..” என்று விரல் நீட்டி எச்சரித்தவள், “செக்யூரிட்டிய கூப்பிடுங்க” என்று கத்தினாள்.

உடனே ஒருவன் சென்று கதவை திறந்து அங்கிருந்த பவுன்சர்களை அழைக்க, அவர்களும் வந்தனர்.

கன்னத்தைப் பிடித்துக் கொண்டு, நடப்பதை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டு தரையில் கிடந்த மெடோனாவை தூக்கிச் சென்று விட்டனர்.

ரூபிணி அவள் போகும் வரை பார்த்து விட்டு, முன்னால் இருந்த பாட்டிலை எடுத்து மொத்தமாக குடிக்க, உதயா அவள் கையில் இருந்த பாட்டிலை பிடுங்கி கீழே வைத்து விட்டு எழுந்தான்.

“சாரி காய்ஸ்.. நாங்க கிளம்புறோம்” என்றவன் ரூபிணியை அணைத்து இழுத்துக் கொண்டு வெளியேறி விட்டான்.

“வாவ்! வாட் அ டிராமா?” என்று ஒருத்தி சொல்ல, “ஆனா ஒரே அடி தான்.. சுருண்டு விழுந்துட்டா. கேட்ட எனக்கே வலிக்குது” என்று ஒருவன் கன்னத்தை பிடித்தான்.

“அவ பாஸோட எக்ஸா?”

“அப்படி தான் நினைக்கிறேன்”

எல்லோரும் நடந்ததை பற்றியே பேச, ராஜ் மட்டும் மௌனமாக இருந்தான். அவனது பார்வை கதவிலேயே நிலைத்து இருந்தது.

தொடரும்.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 22

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
15
+1
2
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. ரூபிணி உதய் லவ் கன்பார்ம்