
பிறை -29
பொங்கி வந்த கருமேகங்கள் எப்போது வேண்டுமானாலும் மழை பொழிந்து விடுவேன் என்ற நிலையில், பூமியை இருட்டும் பணியில் தீவிரமாக இருக்க.. அந்த இருளை வெறித்து கொண்டு உயர்ந்த கட்டிடத்தில் நின்று கொண்டிருந்தான் ஆதி.
உலகம் எப்போதும் போல தான் சுழன்று கொண்டிருக்கிறது. ஆனால் அவனது உலகம் அப்படி அல்லவே.. அவனது உலகம் வேறு.. அவனது மக்கள் வேறு.. அவனது தொழில் வேறு.. அவனது ஆசைகள் வேறு.. அவனது பிடித்தம் வேறு.. அவனது குறிக்கோள் வேறு. சொல்லப் போனால் வேற்று கிரக வாசியாக வாழ வேண்டியவன்.. இந்த பூமியில் பிறந்து விட்டான்.
கருமேகங்கள் துளித் துளியாக நீரை கொண்டு பூமியை முத்தமிட ஆரம்பிக்க.. சற்று நேரத்தில் அடித்து ஊற்றிய மழையில்.. முத்தமிட்ட இடங்கள் எல்லாம் சேரும் சகதியுமாக மாறிப் போனது.
ஆரம்பம் முத்தத்தில் இருந்தாலும்.. அதில் வன்முறையை இறக்கும் பொழுது அந்த இடத்தில் சேதாரம் ஆகி விடும். ஏனோ அந்த இடம் சேதாரம் ஆவதை பார்த்தவனின் உதடுகள் மெல்ல வளைந்து கொடுத்தது.
அவனுக்கும் பூப்போல முத்தமிடுவது பிடிக்காதே.. வன்முறையில் இறங்குவது தானே அவனுக்கு அலாதி பிரியம். இன்று மழையும் அவனை போல பொழியவும்.. அவனது மனம் சில்லென்று ஆனது.
அந்த மனநிலையை கெடுத்தது அவனது அலைபேசியின் நோட்டிபிகேசன் ஒலி.
” பெல் சர்ச் ஷார்ப்லி அட் செவன்” என்ற மெசேஜை பார்த்தவனுக்கு, இதழோரம் இகழ்ச்சியான புன்னகை வந்தது.
அவனது புன்னகைக்கு பின்னே உள்ள ரகசியத்தை அவன் மட்டுமே அறிவான். ரகசியம் ரகசியமாகவே இருக்கட்டுமே !
***
பிறையின் அறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார் மீனாட்சி.
” நான் கூட அவன் தனியா பேசனும்னு சொன்னதும்.. அவ்வளவு தான் இந்த கல்யாணம் நடக்காதுன்னு நினைச்சிட்டேன் மா.. நல்லவேளை நீ அவனை சம்மதிக்க வச்சிட்ட.. எனக்கு தெரியும் மா.. அவன் தான் இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்லிருப்பான்.. ஆனால் வெளிய வந்து உன்ன கோர்த்து விட்டான்.. அதானே ” என கேட்டவரை விசித்திரமாக பார்த்தாள் பிறை.
” அட என்ன பார்க்குற.. என் பையனை பத்தி எனக்கு தெரியாதா.. எப்போ பார்த்தாலும் கஞ்சி போட்ட சட்டை மாதிரி விறைப்பா இருப்பான்.. ஒரு பொண்ணையும் பார்த்தது இல்ல.. இவனுக்கு கல்யாணம் ஆகுமானே எனக்கு கனவா தான் இருந்துச்சு.. ஆனால் அது இப்போ நடக்க போகுது.. எல்லாம் உன்னால தான். எனக்கு தெரியும் உனக்கு என் மகனை பிடிச்சிருக்கு தானே ” என சிரிப்புடன் கேட்டவர்.. ” பால் சூடு போகுது பாரு.. குடிச்சுட்டு குடு எனக்கு ஆயிரம் வேலை இருக்கு. இப்போ கல்யாண வேலை வேற இருக்கு ” என அவரே கேள்வியும் கேட்டு பதிலும் கூறிக் கொண்டார்.
பாலை குடித்து விட்டு அவரிடம் கொடுத்தவள்.. தானாக பேசிக் கொண்டு செல்லும் மீனாட்சியை விசித்திரமாக பார்த்தாள்.
‘ இவங்க தான் கமிஷனர் அம்மான்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க.. என்ன பேச்சு.. படப்படன்னு அவங்களே பேசி.. அவங்களே ஒரு முடிவு பண்ணிப்பாங்க.. அப்படியே அவங்க பையன் மாதிரி.. என்ன இவரு மிரட்டி முடிவு பண்ணுறாரு, இவங்க சிரிச்சிக்கிட்டே முடிவு பண்ணுறாங்க ‘ என புலம்பிக் கொண்டே எழுந்து வெளியே சென்றவள்.. நேராக தாய் தந்தை இருக்கும் அறைக்கு சென்றாள்.
” மா.. ”
” வா கண்ணு.. வந்து உட்காரு.. ” என சிவகாமி அழைக்கவும்.. தயக்கமாக வந்து அமர்ந்தாள் பிறை.
” மா.. அது உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கனும்”
” சொல்லு மா.. ”
” இல்ல மா.. கல்யாணம் விஷயம் தான்.. அது.. இவங்களை எல்லாம் பார்த்தா கொஞ்சம் பெரிய இடமா தெரியுறாங்க.. இவங்க அளவுக்கு நம்மனால செய்ய முடியும்மா மா.. அது நான் தப்பா ஒன்னும் கேட்கலை மா.. நம்ம கிட்டயும் வீடு, நிலம், நகை எல்லாம் இருக்கு. ஆனால் இவங்க கேட்கிற அளவுக்கு இருக்குமா மா.. இந்த கல்யாணத்துக்காக அப்பா எதுவும் கடன்.. எதுவும்.. ” என தயங்கி நிறுத்த..
” என்ன சிவகாமி உன் பொண்ணு புதுசா வீட்டு விஷத்தை எல்லாம் பேசுறா” சிவானந்தம் கேட்கவும்.. தலையை குனிந்து கொண்டாள் பிறை.
” கல்யாணம் பண்ணிக்கிட்டா மட்டும் போதும்.. மத்த செலவு, சீர், நகை நட்டு எல்லாம் நான் பார்த்துக்கிறேன்.. அவங்க என்ன கேட்கிறது. எனக்கு இருக்கிறது ஒரே பொண்ணு. என்னோட எல்லாம் அவளுக்கு தானே.. போட்டு ஜொலிச்சுற மாட்டேன் ” என்றதும் முட்டிக் கொண்டு வந்த கண்ணீரை அடக்கிய வண்ணம் அமர்ந்திருந்தாள் பிறை.
” அப்பத்தா கல்யாணத்துக்கு வரலையா மா ”
” உங்க அப்பா கூப்பிட வேண்டாம்னு சொல்லுறாரு டி ” என்றதும் தந்தையை கேள்வியாக பார்க்க..
” அம்புட்டு பாசமா என் ஆத்தா மேல.. அவங்க வந்தா கல்யாணம் நடக்கிறதுல பிரச்சனை வரும்.. பண்ணிட்டு போய் சொல்லிக்கலாம் மா ” என்றவருக்கும் மனது ஒரு நிலையில் இல்லை. இத்தனை சொந்த பந்தம் இருந்தும் அனாதை போல மகளின் திருமணத்தை நடத்தும் நிகழ்வு வந்து விட்டது என நினைத்து வருந்தாத நேரமில்லை.
ஆனால் இதை தவிர அவருக்கும் வேறு வழி இல்லையே.. ” நீ இந்த கல்யாணத்தை பத்தி எதுவும் யோசிக்க வேண்டாம்.. நீதான் கல்யாணப் பொண்ணு.. சந்தோஷமா இரு… மத்தது எல்லாத்தையும் அப்பா பார்த்துக்கிறேன் ” அவர் முடிவாக கூறியதும்.. அமைதியாக அறைக்கு திரும்பியவள்.. சுஷ்மிதாவின் வரவை அறிந்து வேகமாக வெளியே வந்தவள்.. அவளை அழைத்துக் கொண்டு மாடிக்கு சென்று விட்டாள்.
” கள்ளி.. கீழே இருந்தா உன் திருட்டு லவ் தெரிஞ்சுடும்னு தானே மேல கூட்டிட்டு வந்த.. ” உற்சாகத்துடன் கேட்ட தோழியை வெறி கொண்டு முறைத்தவள்..
” நான் எப்போ டி அந்த கமிஷனரை லவ் பண்ணுறேன்னு சொன்னேன்.. ” அழாத குறையாக கேட்டு வைத்தாள் பிறை.
” அப்போ லவ் இல்லையா ”
” இல்ல ”
” ஓ அப்போ அவரை பிடிக்கலையா”
….
” என்ன பதிலை காணோம்.. அமைதியா இருந்தா நான் என்னனு எடுத்துக்க.. ஐயோ அப்போ பிடிக்காம தான் கல்யாணம் பண்ணுறியா.. கட்டாய கல்யாணமா.. கமிஷனருக்கு இந்த விஷயம் தெரியுமா ” என கத்தினாள் சுஷ்மிதா.
” ஐயோ கத்தி தொலையாத டி ” என அவளது வாயை மூடினாள் பிறை..
” அப்போ உண்மையை சொல்லு ”
” இப்போ உனக்கு என்ன தெரியனும்.. ஆமா பிடிக்கும் தான்.. அதான் கல்யாணம் பண்ணுறேன் ” என்றதும் சுஷ்மிதா அவளை நக்கல் பார்வை பார்த்து வைத்தாள்.
” சும்மா பார்க்காத டி.. நீ கேட்டியேன்னு சொன்னேன் ”
” நடிப்ப போடாத.. நீ அந்த கமிஷனரை பார்க்க காபி ஷாப் போகும் போதே எனக்கு தெரியும் டி .. ”
” நீ நினைக்கிற மாதிரியெல்லாம் எதுவும் இல்ல டி.. பிடிக்கிற எல்லாத்தையும் கல்யாணம் பண்ணிக்க முடியுமா என்ன.. ”
” அதான் நானும் கேட்குறேன்.. பிடிக்கிற எல்லாத்தையும் கல்யாணம் பண்ண முடியாது.. மனசுக்கு நெருக்கமா இருந்தா தான் கல்யாணம் பண்ணிக்க தோணும் ” தோழியின் பேச்சில் வேறு பக்கமாக திரும்பிப் கொண்டாள் பிறை.
அவள் முகம் தானாக சிவப்பதை அவளால் தடுக்க இயலவில்லை. இதையும் அவள் பார்த்து விட்டால் முடிவே செய்து விடுவாள்.
கண்களை இறுக்க மூடி நின்றவள்.. சற்றே நிதானம் அடைந்து கண்களை திறக்க.. இந்த பேச்சிற்கு சொந்தக்காரன் மார்பின் குறுக்கே கைகளை கட்டி கொண்டு அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
கண் விழித்தவளுக்கு அதிர்ச்சியாகி போனது. எதுவரை அவன் கேட்டான் என தெரியவில்லை. சுஷ்மிதா தான் நமட்டு சிரிப்புடன் கீழே சென்றிருந்தாள்.
படபடவென அடித்த இமைகளை நிறுத்த வழியறியது.. திண்டாடிக் போனவள்.. சுஷ்மிதா சென்ற வழியில் இறங்க போக..
” உன் பிளவுஸ் சைஸ் என்ன ” என்றவனது கேள்வியில் சட்டென நின்றிருந்தாள்.
” ஹான்… ” அவனை அதிர்ச்சியாக பார்க்க..
” காது கேட்கலையா.. இல்ல திரும்ப சொல்லனுமா ” மீண்டும் கேட்டவனுக்கு முறைப்பை பதிலாக கொடுக்க..
” நீயும் சொல்லலைனா நான் எப்படி உனக்கு டிரஸ் வாங்குறது. சரி நானே தெரிஞ்சுக்கிறேன்.. ” என்றவன்.. அவளது முகத்தில் இருந்த பார்வையை சற்றே கீழ் நோக்கி இறக்க.. அவசரமாக தடுத்தவள்…
” அது தர்டி போர் ” அந்த வார்த்தையை கூறுவதற்கு அத்தனை தயக்கமாக இருந்தது அவளுக்கு..
” தர்டி போர்.. ம்ம்… அவ்வளவு தானா.. ” என்றவனை முட்டை கண்கள் விரிய பார்த்தாள் பிறை..
” என்ன… ” என அவள் பல்லை கடிக்க..
” இல்ல அவ்வளவு தானா.. இல்ல வேற எதுவும் உனக்கு வாங்கவான்னு யோசிச்சுட்டு இருந்தேன்.. ஓகே நான் பார்த்துக்கிறேன்.. ” என்றவன் படிகளில் இறங்கிக் கொண்டே அவளை திரும்பி பார்த்த பார்வையில்.. ஆணி அடித்தார் போல நின்று விட்டாள் பிறைநிலா.
அவனது துயில் உரிக்கும் பார்வையை முதல் முறையாக உணர்கிறாள். என்ன மாதிரியான பார்வை இது.. என அவளே கேட்டுக் கொண்டவளுக்கு.. விடை தான் தெரியவில்லை. ஆனால் அவனது உரிமை பார்வையில், அவளது உடலில் சிலிர்த்து நின்ற ரோமங்கள் சொல்லியது அவளது சொல்லாத காதலை.
இருவரும் ஒருவர் பின்னாக ஒருவர் கீழே இறங்கி வர.. ” பிறை அவன் உனக்கு பட்டு எடுக்க போறான். நீயும் கூட போயிட்டு வரியா ” மீனாட்சி கேட்டதும்..
” அது.. இல்ல ஆண்டி.. அவங்களே எடுத்துட்டு வரட்டுமே.. ” எப்படியாவது அவனிடம் இருந்து தப்பிக்க நினைத்தாள் பிறை.
” இங்க வா.. ” என அவளை அருகில் அழைத்து.. ” அவன் போனா சேலை மட்டும் தான் எடுப்பான்.. மத்த விஷயம் எல்லாம் எடுக்க தெரியாது.. அப்பறம் ஒரு வாரத்துல பிளவுஸ் கொடுக்கறது கஷ்டம்.. அதுனால ரெடிமெட் வாங்கிக்கலாம்.. அப்பறம் பாவாடை, இன்னர் எல்லாம் வாங்கிக்கோ.. அவனுக்கு அதெல்லாம் தெரியாது மா ” மகனை பற்றி அறியாத அப்பாவி அன்னை அவர்.
மீனாட்சி கூறியதற்கும், அவன் மாடியில் கேட்ட விஷயத்திற்கும் சம்மதமே இல்லை.. மீனாட்சியை பரிதாபமாக பார்த்தவள்.. ” கிளம்பிட்டு வரேன் ஆண்டி ” என அறைக்குள் செல்ல.. அவளை பின் தொடர்ந்து சென்ற மீனாட்சி.. ” கொஞ்சம் வெயிட் பண்ணு பா.. பிறையை கூட கூட்டிட்டு போ ” என மகனிடம் பேசிக் கொண்டே அறைக்குள் சென்று விட்டார்.
” என்ன ஆண்டி.. ”
” இங்க வா ” என அவளது பிளவுஸ் ஒன்றை தேர்வு செய்து , அதற்கு தோதாக அவரிடம் இருந்த அழகான புடவையை கொடுக்க.. சின்ன புன்னகையுடன் வாங்கிக் கட்டிக் கொண்டாள்.
அவளுக்கு தான் தாவணி புடவை என்றால் மிகவும் பிடிக்குமே.. அணிந்து கொண்டவளுக்கு அத்தனை சந்தோஷம். ஆனால் கொண்டவன் பார்வையில் இருந்த தப்ப முடியுமா.. ?
வெளியே வந்த பிறையை பெரும் மூச்சுடன் பார்த்து விட்டு காருக்கு சென்றான் ஆதிதேவ் ஆருத்ரன். அவளும் பெற்றவர்களிடம் அனுமதி கேட்டு விட்டு வந்தாள்.
அவனது வெப்பக்காற்று அவளிருக்கும் திசை வரை தாக்கியது. ஒரு வித அவஸ்தையோடு காரில் ஏறிக் கொண்டாள் பிறை.
சனா💖
