Loading

அத்தியாயம் 4

 

கீதாஞ்சலி கிரிதரனிடம் தன் மனக்கவலைகளை கொட்டியதும், சற்று தெளிந்தது போல உணர்ந்தார்.

 

மனதில் திடமான முடிவெடுத்தவராக கணவரின் மார்பிலிருந்து நிமிர்ந்தவர், “நம்ம எவ்ளோ சீக்கிரம் முடியுமோ, அவ்ளோ சீக்கிரம் இங்கேயிருந்து கிளம்புறது தான் எல்லாருக்கும் நல்லது.” என்றார்.

 

அவரும் தானே மண்டபத்தில் பார்த்திருந்தார், மணமகளாக அமர்ந்திருந்த ஜீவநந்தினியை துவேஷப் பார்வை பார்த்திருந்த ராகவர்ஷினியை.

 

“ஹ்ம்ம், நீ சொல்றதும் சரிதான் கீது.” என்று கிரிதரன் கூறிக் கொண்டிருக்கும் போதே, வாசலில் அழைப்பு மணியோசை கேட்க, “சாப்பாடு ஆர்டர் பண்ணியிருந்தேன். காலைலயும் யாரும் சாப்பிடலையே. நீ போய் வர்ஷியை கூட்டிட்டு வா.” என்றவர் வாசலை நோக்கிச் செல்ல, கீதாஞ்சலியோ ஒரு பெருமூச்சுடன் மகளிருந்த அறை நோக்கிச் சென்றார்.

 

கிரிதரன், உணவை வாங்கி உணவுமேஜையில் வைத்துக் கொண்டிருக்கும் போதே, “ஐயோ, கிரி இங்க சீக்கிரம் வாங்களேன்.” என்ற மனைவியின் சத்தத்தில், திடுக்கிட்டு அறை நோக்கி விரைந்தார்.

 

அங்கு ராகவர்ஷினி தன் மணிக்கட்டை அறுத்திருக்க, அந்த வெட்டிலிருந்து சொட்டிக் கொண்டிருந்த ரத்தத்துளிகள் கீழே சிறு குளம் போல தேங்கியிருந்தது.

 

மகளின் இந்த நிலையைக் கண்ட கிரிதரன் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல், ஒருநொடி திகைக்க, அவரை அதிலிருந்து மீட்டு வந்தது என்னவோ மனைவியின் விசும்பல் சத்தமே.

 

“ஹையோ, என்னால என் பொண்ணு கல்யாணம் நின்னுச்சு. இப்போ அவளோட இந்த நிலைக்கும் நானே காரணமாகிட்டேனே.” என்று அழுது புலம்பியவரை, அதட்டி சமாதானப்படுத்தியவாறே, மகளை கைகளில் அள்ளிக்கொண்டு மகிழுந்தை நோக்கி விரைந்தார்.

 

சில நிமிடங்களில் அருகில் தென்பட்ட மருத்துவமனையில் அவளை அனுமதிக்க, அவர்களோ முதலில் ‘சூசைட் கேஸா’ என்று தயங்கினர்.

 

பின்னர், கிரிதரனின் அண்ணன் சசிதரன் தன் செல்வாக்கை பயன்படுத்த, உடனே அங்கு அனுமதிக்கப்பட்டாள் ராகவர்ஷினி.

 

அவளுக்கு சிகிச்சையளித்த மருத்துவர் வெளியே வர, அவர் என்ன சொல்லப் போகிறாரோ என்ற பயத்தில் அவரை இரு பக்கமும் சூழ்ந்தனர் கிரிதரன் – கீதாஞ்சலி தம்பதியர்.

 

“நல்லவேளை, வெட்டு ரொம்ப ஆழமா இல்லாததால காப்பாத்தியாச்சு. ஆனாலும், பிளட் லாஸ் ஹெவியா இருக்கு. இப்போ பிளட் ஏத்திட்டு இருக்கோம். அவங்க முழுசா கான்ஷியஸுக்கு வரலைன்னாலும், ஏதோ ஒரு பெயரை புலம்பிட்டே இருக்காங்க. இப்படியே இருந்தா அது அவங்க மனநிலையை இன்னும் பாதிக்கும். அவங்க கண் விழிச்சதும் அந்த பெர்சனை வந்து பார்க்கச் சொல்லுங்க. அது அவங்களை கொஞ்சம் நார்மலாக்கும்.” என்று கூறிவிட்டு சென்று விட்டார்.

 

மகளுக்கு ஆபத்து இல்லை என்ற நிம்மதியை கூட அனுபவிக்க முடியாதவாறு, மருத்துவர் இறுதியாக கூறிய செய்தி இருவரின் மனதையும் அறுத்தது.

 

அவர்களுக்கா தெரியாது, மகள் யாரின் பெயரை முணுமுணுத்துக் கொண்டிருப்பாள் என்று!

 

இருவரும் ஒருவரையொருவர் பார்க்க, அவர்கள் அருகே நின்ற சசிதரனோ, “அந்த பையனை வரச் சொல்லுவோமா?” என்று கேட்டிருந்தார்.

 

அவர்கள் கேட்க தயங்கியதை தான் அவர் கேட்டிருந்தார். ஆயினும், அதில் மற்ற இருவருக்கும் விருப்பமில்லை.

 

“இல்ல அண்ணா. அந்த பையனை இனிமே தொந்தரவு பண்ணக் கூடாது. அதுவுமில்லாம, இன்னைக்கு தான் கல்யாணம் வேற ஆகியிருக்கு.” என்று நியாயமாகவே பேசினார் கிரிதரன்.

 

சசிதரனோ ஒரு பெருமூச்சுடன், “சரி, நீ இங்க பார்த்துக்கோ. நான் போய் உன் அண்ணியை கூட்டிட்டு, அப்படியே டிபன் வாங்கிட்டு வரேன்.” என்று சென்று விட்டார்.

 

இருவரும் தங்களின் மகளைக் காண அறைக்குள் சென்றனர்.

 

காலையில் புத்தம்புது மலராக மகிழ்ச்சியில் திளைத்திருந்தவள் இப்போது வாடிய சருகாக மருத்துவமனையில் படுத்திருந்தாள்.

 

ஒரு கையில் புது இரத்தம் ஏறிக் கொண்டிருக்க, மறுகையை வலியில் இறுக்கி மூடியிருந்தாள் பெண்.

 

அந்த இறுக்கத்தை விடுவித்து, தன் கைகளில் அவளின் கரத்தை பொத்தி வைத்துக் கொண்ட கீதாஞ்சலியோ, “அம்மா சாரிடா வர்ஷி. என்னால எல்லாருக்கும் கஷ்டம்னு இப்போ தான் எனக்கு புரியுது. நான் முன்னாடி யோசிக்காம செஞ்சது, இப்போ உன்னை பாதிக்கும்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. ஹ்ம்ம், சும்மாவா சொன்னாங்க, ‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’னு! அன்னைக்கு நான் அவங்க மனசை காயப்படுத்துனதாலயோ என்னவோ, இன்னைக்கு நான் மனசளவுல காயப்பட்டு, அதிலிருந்து வெளிவர தெரியாம தவிச்சுட்டு இருக்கேன். சாரிடா வர்ஷி. ஹையோ, நீ எழுந்து என்ன காரணத்துனால கல்யாணம் நின்னுச்சுன்னு கேட்டா, நான் என்ன சொல்வேன்?” என்று மெல்லிய குரலில் புலம்பிய கீதாஞ்சலியையே கவலையுடன் பார்த்திருந்தார் கிரிதரன்.

 

ஒருமணி நேரம் கழித்து கண்விழித்த ராகவர்ஷினியோ, தான் மருத்துவமனைக்கு எதற்கு வந்தோம் என்று புரியாமல் புருவம் சுருக்க, சில நொடிகளிலேயே அதற்கான காரணமும் விளங்கியது.

 

பொங்கும் கண்ணீரை துடைத்தபடி பார்த்திருந்த தாயையோ, கவலை சுமந்த விழிகளுடன் பார்த்திருந்த தந்தையையோ தேடாமல், உதயகீதனை தான் தேடின அவளின் நேத்திரங்கள்.

 

அவன் வர மாட்டான் என்று புரிந்தாலும், வந்திருப்பானோ என்ற எதிர்பார்ப்பை அவளால் நீக்கிவிட முடியவில்லை.

 

அந்த நேரத்தில், தனக்கு இப்படியானது அவனுக்கு தெரிந்திருக்குமா என்றெல்லாம் எண்ண தோன்றவில்லை பெண்ணவளுக்கு.

 

சற்று நேரம் பொறுத்து பார்த்தவள், மெல்ல அன்னையிடம், “உதய்… வந்தானா?” என்று வினவ, மகளுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை கீதாஞ்சலிக்கு.

 

அவர் இல்லை என்று தலையை மட்டும் அசைக்க, அந்த பதில் தந்த ஏமாற்றமோ, இல்லை உடல் தந்த சோர்வோ கண்களை மூடிக் கொண்டாள் ராகவர்ஷினி.

 

மகளை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று வெளியே வந்த தம்பதியர் ஒருவரையொருவர் தயக்கத்துடன் பார்க்க, முதலில் தயக்கத்தை உடைத்து பேசியது கிரிதரனே.

 

“நாம உதய்க்கு சொல்வோமா?” என்று கிரிதரன் வினவ, கீதாஞ்சலியின் மனதிற்குள் அந்த எண்ணம் இருந்தாலும், “இப்போ எப்படிங்க நாம கூப்பிடுறது? அதுவும் இந்த சமயம்…” என்று தயங்கினார்.

 

“எனக்கும் புரியுதுமா. ஆனா, நம்ம பொண்ணோட நிலைமை நேரமாக ஆக மோசமாகிட்டு வருதே. இப்படியே போனா, வர்ஷி என்னாவான்னு பயமா இருக்கு கீது.” என்று கண் கலங்கியவர், “எனக்கு தெரியும் கீது, நீ உன் பாஸ்ட் லைஃபை வர்ஷி கூட பகிர்ந்துக்க விரும்பல. ஆனா, இப்போ அப்படி இருக்க முடியாது. வர்ஷிக்கு கண்டிப்பா அது தெரிஞ்சே ஆகணும். அதே சமயம், உன்னால அதை சொல்ல முடியலன்னும் புரியுது. அட்லீஸ்ட், உதய் மூலமா அவளுக்கு தெரிய வரட்டுமே.” என்றார்.

 

அவன் கூறுவான் என்று அவருக்கு என்ன நம்பிக்கையோ?!

 

அப்போதும் கீதாஞ்சலி தயங்கியபடி தான் இருந்தார். இப்போது அவரின் சிந்தனை ராகவர்ஷினிக்காக மட்டும் இல்லை, உதயகீதனுக்காகவும் தான்.

 

உதயகீதனைக் காணும் போதெல்லாம், குற்றவுணர்வில் மூச்சு முட்டி, நெஞ்சு பிளந்து விடுமோ என்ற அளவுக்கு வலிக்கிறதே! குட்டி ஊசியால் இதயத்தை குத்தி குத்தி ரணமாக்கும் வலியை தாங்க முடியாமல், அவனைக் காணாத தூரம் ஓடிவிட வேண்டும் என்றலல்லவா நெஞ்சம் விம்முகிறது.

 

ஆனாலும், ஒரு ஓரத்தில், அவனையும் அவன் வளர்ச்சியையும் கண்ணார கண்டு மகிழவும் மனம் விழைவது என்ன விந்தையோ?

 

கீதாஞ்சலி அவரின் யோசனையில் மூழ்கிவிட, “கீது, நாம ஜஸ்ட் இன்ஃபார்ம் பண்ணலாம். வரதும் வராததும் அவன் விருப்பம்.” என்ற கிரிதரன் ராகவர்ஷினியின் அலைபேசியிலிருந்து உதயகீதனுக்கு அழைத்திருந்தார்.

 

அதே சமயம், தன் படுக்கையறையில், மனைவியுடனான உரையாடலில் தர்மசங்கட சூழலில் சிக்கி, அதிலிருந்து மீள்வதற்கான வழியை யோசித்துக் கொண்டிருந்தான் உதயகீதன்.

 

அப்போது தான் ராகவர்ஷினியிடமிருந்து வந்த அழைப்பைக் கண்டு, அவளிடம் எப்படி பேச என்ற தயக்கம் ஒருபுறம் தவிப்பு மறுபுறமாக அழைப்பை ஏற்றான்.

 

மறுமுனையிலோ ராகவர்ஷினியின் குரல் கேட்காமல் ஆணின் குரல் கேட்க, முதலில் திகைத்து தான் போனான் உதயகீதன்.

 

“ஹலோ உதய், நான் கிரிதரன் பேசுறேன்.” என்ற குரல் கேட்க, என்ன பேசுவதென்று தெரியாத உதயகீதனோ, அமைதியாக இருந்தான்.

 

மகளின் நலன் வேண்டும் தந்தையாகிற்றே, அவனின் மௌனத்தை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

 

“அது… வர்ஷி…” என்று அவர் தயங்க, இம்முறை அந்த பெயரின் காரணமாகவோ, இல்லை அவரின் தயக்கத்தினாலோ, “என்னாச்சு?” என்றிருந்தான்.

 

“அவ சூசைட் அட்டெம்ப்ட் பண்ணிட்டா. இப்போ ஹாஸ்பிடல்ல சேர்த்துருக்கோம்.” என்று கிரிதரன் கூற, தூக்கிவாரிப் போட்டது உதயகீதனுக்கு.

 

இருப்பினும், அதிர்ச்சியை மறைத்தவன், “எங்க?” என்று ஒற்றை வார்த்தையில் வினவ, கிரிதரனும் மருத்துவமனையின் பெயரையும் விலாசத்தையும் பகிர்ந்தார்.

 

“நான் உடனே வரேன்.” என்றவன் அழைப்பை துண்டித்துவிட்டு கிளம்ப, அதுவரை அவன் பேச்சை ஜீவநந்தினி கவனத்திருந்தாலும், அவனது ஒற்றை வார்த்தைகளை வைத்து அவளால் என்ன புரிந்து கொண்டிருக்க முடியும்?

 

ஏதோ பிரச்சனை என்று மட்டும் புரிந்தவள், அன்றைய திட்டிலிருந்து தப்பித்த நிம்மதியில் கட்டிலில் படுத்துக் கொண்டாள்.

 

கணவன் அவனின் முன்னாள் காதலியை தான் பார்க்க சென்றிருக்கிறான் என்று தெரிந்தால், இப்படி சொகுசாக கால் நீட்டி படுத்திருப்பாளா?

 

மதியமே நன்றாக உறங்கி எழுந்தால், இப்போது உறக்கம் கொஞ்சமும் எட்டிப் பார்க்கவில்லை ஜீவநந்தினிக்கு.

 

கட்டிலில் படுத்து உருண்டு கொண்டிருந்தவள், அலைபேசியை நோண்டிக் கொண்டிருக்க, அப்படியே அனுஷாவிற்கும் ஒரு ‘ஹாய்’யை புலனத்தில் அனுப்பி வைத்தாள்.

 

அப்போது தான் வீடு சென்று சேர்ந்த அனுஷாவோ, தோழியிடமிருந்து செய்தி வந்திருக்கிறது என்பதை பார்த்ததும் பதறித்தான் போனாள்.

 

‘இப்போ தான விட்டுட்டு வந்தேன். அதுக்குள்ள என்னாச்சோ?’ என்ற பதற்றத்துடன், ‘அழைக்கலாமா வேண்டாமா?’ என்ற குழப்பமும் சேர்ந்து கொள்ள, முதலில் ‘ஹாய்’ என்று மட்டும் மறுமொழி அனுப்பினாள்.

 

ஜீவநந்தினிக்கு குழப்பம் எல்லாம் இல்லை போலும், உடனே அனுஷாவுக்கு அழைத்து விட்டாள்.

 

“நந்து, என்னாச்சு? ஏதாவது பிரச்சனையா?” என்று அனுஷா பதற்றமாக வினவ,

 

“பிரச்சனையா? அதெல்லாம் ஒன்னுமில்லையே. ஆமா, நீ ஏன் இவ்ளோ டென்ஷனா பேசுற?” என்று கேட்டாள் ஜீவநந்தினி.

 

தோழியின் இயல்பான பேச்சிலேயே பிரச்சனை எதுவுமில்லை என்பதை புரிந்து கொண்ட அனுஷாவோ, “ஏன்டி கேட்க மாட்ட? இப்படி ஃபர்ஸ்ட் நைட் ரூமுக்கு போய், ஃபிரெண்டுக்கு கால் பண்ற ஒரே பொண்ணு நீயா தான்டி இருப்ப. கொஞ்ச நேரத்துல, என்னவோன்னு பயப்பட வச்சுட்டேல!” என்று அலுத்துக் கொண்டாள்.

 

“ஹலோ, உனக்கே இது ஓவரா தெரியல. நாங்க ரெண்டு பேரும் ஈருடல் ஓருயிரா காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டோம், இப்போ ஃபர்ஸ்ட் நைட் கொண்டாட! என் நிலைமை என்னன்னு தெரிஞ்சும் கிண்டலா உனக்கு?” என்று பொருமினாள் ஜீவநந்தினி.

 

“சரி சரி, உன் ஹஸ்பண்ட் எங்க?” என்று அனுஷா வினவ, ஒரு சிரிப்புடன், “முசோக்கு என்னைப் பார்த்து என்ன பயமோ? வெளிய போயிட்டாருடி.” என்றாள் நந்தினி.

 

“அடிப்பாவி, முதல் நாள்லயே வெளிய துரத்திட்டியா?” என்று கேலி பேசினாலும், தோழியின் வாழ்வு குறித்த பயம் ஏற்படத்தான் செய்தது அனுஷாவுக்கு.

 

அதை ஜீவநந்தினியிடமும் கூற, “ஒரு ஃபோன் கால் வந்துச்சு. முசோ பொறுப்பாரா என்ன, உடனே கிளம்பியாச்சு.” என்றவள், தோழியை சமாதானப்படுத்த, “ஏதாவது எமர்ஜென்சியா இருக்கும். வேலைன்னு வந்துட்டா முசோவை கையிலேயே பிடிக்க முடியாதே.” என்றாள்.

 

“சரிடி, இன்னைக்கு எப்படியோ அந்த முசோவோட திட்டுல இருந்து தப்பிச்சுட்டேன். அதை சொல்லத் தான் கால் பண்ணேன். நான் சந்தோஷமா தூங்கப் போறேன். குட் நைட்.” என்று அழைப்பை துண்டித்த பின்னரும் ஜீவநந்தினியை நித்திரை ஆட்கொள்ளவில்லை.

 

அது, நன்கு உறங்கியதாலா, இல்லை வாழ்வை குறித்த பயத்தினாலா என்று அவள் மட்டும் அறிந்த ரகசியம்!

 

*****

 

அடுத்த கால் மணி நேரத்தில் கிரிதரன் கூறிய மருத்துவமனையை அடைந்திருந்தான் உதயகீதன்.

 

எனினும், உள்ளே நுழையும்போது சிறு தயக்கம் எழத்தான் செய்தது. அதே தயக்கத்துடன் அவன் நிற்க, அங்கு எதேச்சையாக வந்த கிரிதரன் அவனை பார்த்து விட்டார்.

 

“உதய்…” என்று அவர் அழைக்க, இனி தயங்கி என்ன பயன் என்று அவரருகே சென்றவன், “என்னாச்சு? ஏன் சூசைட்…” என்று கேட்டு முடிக்கும் முன்னரே, அவன் கேள்வியிலிருந்த அபத்தம் புரிந்து அமைதியானான்.

 

கிரிதரனும் நடந்ததை சுருக்கமாக கூறியபடி, அவனை ராகவர்ஷினியின் அறைக்கு அழைத்துச் சென்றார்.

 

அறையின் வெளியே தொங்கிய முகத்துடன் அமர்ந்திருந்த கீதாஞ்சலியை ஏறெடுத்தும் பார்க்கவில்லை உதயகீதன்.

 

கிரிதரனின் பின்னே அவன் அறைக்குள் நுழைய, அங்கு வாடி வதங்கிய தோற்றத்தில் படுக்கையில் வீழ்ந்திருந்தவளை கண்கொண்டு பார்க்க முடியவில்லை உதயகீதனால்.

 

எப்போதும் துறுதுறுவென்று இருப்பவளை இப்படி காண்பதற்கு மனது பிசைந்தது. அவள் எத்தனை தைரியம் மிக்கவள் என்று அவளுடன் பழக ஆரம்பித்த சில நாட்களிலேயே தெரிந்து கொண்டிருந்தான் உதயகீதன்.

 

அத்தகையவள், இப்படி தற்கொலைக்கு முயலுவாள் என்று அவன் கிஞ்சித்தும் நினைக்கவில்லையே. அதுசரி, தற்கொலை செய்து கொள்வதற்கும் ஒரு தைரியம் வேண்டும் அல்லவா?

 

மொத்தத்தில், அவளைக் காணும்போது, ‘என்னால் தானோ’ என்ற குற்றவுணர்வு ஏற்படாமல் இல்லை.

 

அவளைப் பார்த்துக் கொண்டே இத்தனையும் உதயகீதன் யோசித்திருக்க, அவன் வந்ததை அவளும் உணர்ந்தாளோ என்னவோ, மெல்ல கண்களை விரித்தாள்.

 

அவள் முன்னே கலங்களாக தெரிந்த உதயகீதனைக் கண்டதும், வாடிக் கிடந்த முகம் மலர்ந்தது.

 

“உதய்…” என்று வறண்டு கிடந்த உதடுகளை பிரித்து மெல்லிய குரலில் அவள் அழைக்க, தன்னிச்சையாக அவளருகே சென்றிருந்தான் உதயகீதன்.

 

“நீ வர மாட்டன்னு நினைச்சேன் உதய்.” என்றவளின் இமையோரம் கண்ணீர் துளிகள் விழவா வேண்டாமா என்றிருந்தது.

 

அதற்கு என்ன கூறுவது என்று தெரியாமல் மௌனம் காத்தவன், பின் நினைவு வந்தது போல், “ஏன் இப்படி பண்ண வர்ஷி?” என்று மென்குரலில் வினவினான்.

 

“தெரியல உதய். அந்த நேரத்துல… ஏதோ தோணுச்சு… கட் பண்ணிக்கிட்டேன். உனக்கே தெரியுமே, தற்கொலையை நான் ஆதரிக்க மாட்டேன்னு. ஆனா பாரு, இன்னைக்கு நானே சூசைட் அட்டெம்ப்ட் பண்ணியிருக்கேன். இந்த வாழ்க்கை ரொம்ப வேடிக்கையானது இல்ல.” என்று விரக்தியாக பேசினாள் ராகவர்ஷினி.

 

அவள் இறுதியாக கூறிய வாக்கியம், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றை நினைவு படுத்தியது.

 

ஏதோ சிந்தித்தவளாக, “உன் வைஃப் கிட்ட என்ன சொல்லிட்டு வந்த உதய்?” என்று வர்ஷினி வினவ, உதயகீதனின் முகம் அவமானத்தில் கருத்தது.

 

என்ன மாதிரியான கேள்வி அது?

 

கிரிதரன் கண்டனமாக, “வர்ஷி என்னது இது?” என்று கேட்க, தந்தை எதற்காக கூறுகிறார் என்று ஒரு நொடி யோசித்தவள், பின்னர் அது தெரிந்தவளாக, “நான் வேற அர்த்தத்துல எதுவும் கேட்கல. உதய்க்கு இன்னைக்கு தான கல்யாணமாச்சு. அதுவும் இது நைட் வேற… அதான் கேட்டேன்.” என்று கூறினாள்.

 

அவள் காரணம் கூறினாலும், அதை ஆண்கள் இருவரும் நம்பினாலும், கீதாஞ்சலிக்கு ஏதோ உறுத்தியது.

 

“அப்பறம் உதய், கல்யாணம் நல்லபடியா முடிஞ்சுதா?” என்று சாதாரண குரலில் அவள் வினவினாலும், அதிலிருந்த குத்தலை அறியாதவனா உதயகீதன்?

 

“வர்ஷி…” என்று அவன் விளிக்க, “ஹ்ம்ம், இந்த வர்ஷியை இப்போ தான் ஞாபகம் வருதா உதய்? நான் அவ்ளோ சொல்லியும், அவ கழுத்துல தாலி கட்டுன தான?” என்றவளின் குரல் இப்போது அழுத்தமாக ஒலித்தது.

 

மகள் உதயகீதனை இங்கு வர சொன்னதற்கான காரணம் என்னவென்று கீதாஞ்சலிக்கு விளங்கி விட்டது.

 

அவளின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் உதயகீதன் தலை குனிய, அதைக் காண சகிக்காத கீதாஞ்சலியோ, “வர்ஷி, என்ன இது? உன்மேல அக்கறை எடுத்து பார்க்க வந்திருக்கவங்களை இப்படி தான் பேசுவியா? இனிமே, உதயோட கல்யாணத்தை பத்தி எதுவும் பேசக் கூடாதுன்னு சொன்னேன் தான.” என்றார்.

 

“உங்ககிட்ட நான் எதுவும் பேசலம்மா.” என்ற ஒற்றை வரியில் பெற்ற அன்னையை தள்ளி நிறுத்தியவள், “நீ சொல்லு உதய். ஹ்ம்ம், அவ கழுத்துல நீ தாலி கட்டுனது எல்லாம் எனக்கு தேவையில்லாத விஷயம். நம்ம கல்யாணம் எதுக்கு நின்னு போச்சு? அதை சொல்லு.” என்றாள்.

 

அதற்கும் எந்த பதிலும் சொல்லாமல் உதயகீதன் மௌனமாக இருக்க, “ஹ்ம்ம், சொல்ல மாட்டேல. எனக்கு தெரியும் உதய், நீ சொல்ல மாட்ட. இதோ, இங்க நிக்கிறாங்களே மிசஸ். கீதாஞ்சலி கிரிதரன், அவங்களால தான் நம்ம கல்யாணம் நின்னு போச்சுன்னு நீ சொல்ல மாட்ட. இந்த கீதாஞ்சலி தான் உன்னையும் பெத்த அம்மான்னும் நீ சொல்ல மாட்ட.” என்று வர்ஷினி கூற, அங்கிருந்த மூவரில் யார் அதிகம் அதிர்ந்தது என்று கூற முடியவில்லை.

 

தொடரும்…

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 20

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
15
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments