Loading

அத்தியாயம் 3

 

நன்கு உறங்கி எழுந்ததாலோ என்னவோ, குழப்பங்கள் சற்று குறைந்து தெளிவாகவே உணர்ந்தாள் ஜீவநந்தினி.

 

ஜீவநந்தினி, சுதாகரின் செல்ல மகள். பிறக்கும்போதே தாயைப் பறிகொடுத்து, அதற்காக ஏச்சும்பேச்சும் வாங்கிக் கொண்டவள்.

 

அவள் வாழ்வில் நடந்த முதல் நல்ல காரியம் என்ன என்று கேட்டால், யோசிக்காமல் தந்தையை தான் கைகாட்டுவாள். அத்தகைய பிணைப்பு இருவருக்கும்.

 

வாழ்க்கை சொல்லித் தந்த பாடமாக, ‘எதுவும் எப்போதும் நிரந்தரமில்லை’ என்பதை தாராக மந்திரமாக கொண்டவள், அதன் காரணமாக எதற்கும் பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டாள். வாழ்வினை அதன் போக்கில் ரசித்து வாழ சிறு வயதிலிருந்தே கற்றும் கொண்டாள்.

 

அதன் விளைவு தான், எதிர்பாராமல் நேர்ந்த திருமணம் என்றாலும், அதற்காக நொடிந்து போய் அமரவில்லை.

 

இதோ, வாழ்க்கை அவளுக்காக வைத்திருக்கும் இனிய ஆச்சரியங்களையும், கொடிய ஆபத்துகளையும் சந்திக்க தயாராகி விட்டாள்.

 

உறக்கம் அளித்த தெளிவுடன் அறையை விட்டு வெளியே வந்த ஜீவநந்தினி, தந்தையும் மாமனாரும் தீவிர உரையாடலில் இருப்பதைக் கண்டு, அங்கு செல்ல, அவள் வந்ததும் இருவரும் பேச்சை நிறுத்தி விட்டனர்.

 

அவள் இருவரையும் சந்தேகமாக பார்க்க, நண்பர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

 

“அப்பா, எதுக்கு இப்படி திருட்டு முழி முழிச்சுட்டு இருக்கீங்க?” என்று மாமனார் இருக்கிறார் என்றும் பாராமல் தந்தையிடம் வினவினாள் ஜீவநந்தினி.

 

கேசவமூர்த்தியை பல முறை தந்தையுடன் சந்தித்திருந்ததால், அவரை வேற்றாளாக நினைக்கவில்லை அவள்.

 

இதுவே, அவரிடம் நன்கு பேசிப் பழகியிருந்தால், இதே கேள்வியை அவரிடமே கேட்டிருப்பாள் என்பதில் ஐயமில்லை!

 

“அது வந்து… நந்தும்மா…” என்று சுதாகர் மகளின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் நண்பனை துணைக்கு அழைக்க, ‘அடுத்து ஏதோ பிளான் பண்ணிட்டாங்க போல!’ என்று சரியாகவே யூகித்தாள் நந்தினி.

 

இவர்களின் உரையாடலை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த கேசவமூர்த்தியின் ஒன்றுவிட்ட தமக்கை ஜீவநந்தினியை சற்று தள்ளி அழைத்துச் சென்றவர், “அம்மாடி, நைட்டு சடங்கு பத்தி அவங்க பேசிட்டு இருக்காங்க. அதை எப்படி உன்கிட்ட சொல்ல முடியும்? ஹ்ம்ம், உனக்கு அம்மாவோ, மாமியாரோ இருந்திருந்தா, அவங்க உன்கிட்ட சொல்லியிருப்பாங்க. ஆனா, அதுக்கு தான் உனக்கு கொடுத்து வைக்கலையே!” என்றார்.

 

அவர் கூறிய செய்தியில் கவனத்தை வைக்காமல், அவர் குரலில் இருந்தது வருத்தமா, ஏளனமா என்ற தீவிர சிந்தனையில் இருந்தாள் சின்னவள்.

 

இதே யோசனையில் இருந்தவளை கலைத்தது எதிரே இருந்தவரின் பேச்சு.

 

“தம்பியை பத்தி நான் சொல்லணும்னு இல்ல. ரொம்ப தங்கமான புள்ள. தேடுனாலும் இவனைப் போல ஒரு புருஷன் உனக்கு அமைய மாட்டான். ஹ்ம்ம், எனக்கு ஒரு பொண்ணு இருந்துருந்தா, நாங்க ஏன் வெளிய பொண்ணு தேடப் போறோம். சரி சரி, இனி நீதான் அவனை பார்த்துக்கணும். அந்த பொண்ணு மேல காதல், ஆசை இதெல்லாம் கொஞ்ச நாள் இருக்கத்தான் செய்யும். அதிலிருந்து நீதான் அவனை வெளிய கொண்டு வரணும்.” என்று அடுக்கிக் கொண்டே சென்றவர், அவளின் அமைதியைக் கண்டு என்ன நினைத்தாரோ,

 

“ப்ச், உன்னைப் பார்த்தா வெகுளியா தெரியுது. ஆனா, என்ன பண்றது, இதெல்லாம் நீ சமாளிச்சு தான் ஆகணும்.” என்றவரை அப்போதும் அமைதியாக தான் பார்த்தாள்.

 

வெளியில் அமைதியாக காட்டிக் கொண்டாலும், மனமோ அவரின் ஒவ்வொரு வரிக்கும் எதிர் பதிலை கொடுத்துக் கொண்டு தான் இருந்தது.

 

‘உங்க தம்பியை பத்தி என்கிட்ட ஏன் சொல்லணும்?’

 

‘எவ்ளோ கிலோன்னு சொன்னா, உருக்க வசதியா இருக்கும்!’

 

‘ஆமா ஆமா, இவனை மாதிரி ஒரு முசோவை தேடி தான் கண்டுபிடிக்கணும்!’

 

‘எங்கேயோ ஸ்டோமக் பேர்ன்னாகுற மாதிரி தெரியுதே!’

 

‘நான் என்ன ரீஹேபிலிடேஷன் சென்டரா? இவரை மீட்டு கொண்டு வரணுமாம்ல!’

 

‘உங்களைப் பார்த்தா கூடத்தான் சரியான அராத்து மாதிரி தெரியுது!’

 

இப்படி அவர் பேச ஆரம்பித்ததிலிருந்து நந்தினியின் மனம் கவுண்டர் கொடுப்பதை நிறுத்தவே இல்லை.

 

அவர்களை காப்பாற்றவே அங்கு வந்த கேசவமூர்த்தி, “அக்கா, உதய்யை பத்தி நந்தினிக்கு நல்லா தெரியும். அவளும் அவன் ஆஃபிஸ்ல தான வேலை செய்யுறா.” என்றார்.

 

“ஓஹ் அப்படியா?” என்ற கேசவமூர்த்தியின் அக்கா, ஜீவநந்தினியை மேலிருந்து கீழ்வரை ஆராய்ச்சி பார்வை பார்த்துவிட்டு, பின் தம்பியிடம் திரும்பி, “உன் மருமகளுக்கு எல்லாம் சொல்லிட்டேன். எங்க உன் மகனை ஆளே காணோம். அவன்கிட்ட சொல்லிட்டியா?” என்றார்.

 

அதற்கு தானே வெகுவாக தயங்கிக் கொண்டிருக்கிறார் கேசவமூர்த்தி.

 

மகனை வற்புறுத்தி திருமணம் செய்து வைத்தாகிற்று. மேலும், அவனை எதிலும் வற்புறுத்த விருப்பம் இல்லை கேசவமூர்த்திக்கு. ஆனால், சொந்தங்கள் கூடி இருக்கும் வேளையில், சடங்கை மறுக்கவும் அவருக்கு வழியில்லை.

 

சாதாரண நேரமாக இருந்திருந்தால், தன் சூழலை சொல்லாமலேயே மகன் புரிந்திருப்பான் தான்.

 

ஆனால், இப்போது தன்மீது கோபத்தை அல்லவா சேமித்து வைத்திருக்கிறான். மேலும், அவன் மனநிலை என்னவென்று தந்தைக்கு புரியாதா என்ன?

 

அவரின் தவிப்பை முகமே காட்டிக் கொடுக்க, புது மருமகளுக்கும் புரிந்து தான் இருந்தது.

 

‘க்கும், நல்லா அனுபவிக்கட்டும். இவங்க தான ஃபோர்ஸ் பண்ணி கல்யாணம் பண்ணி வச்சாங்க. இப்போ எங்க நிலைமை தெரிஞ்சும் இந்த சடங்குக்கு ஏற்பாடு பண்ணியிருக்காங்க!’ என்று கோபமாக நினைத்தாலும், தந்தையர் இருவரின் முகமும் அவளின் கோபத்தை நீடிக்க விடவில்லை.

 

அவர்களின் மேலிருந்த கோபமெல்லாம், ‘சடங்கு’ என்று நச்சரிக்கும் உறவுகளின் மீது திரும்பியது.

 

‘இவங்க எல்லாம் என்ன நினைச்சாங்க? ரூமை டெகரேட் பண்ணி, உள்ள அனுப்பினா, எங்க வாழ்க்கையை ஆரம்பிச்சுடுவோம்னா? கொஞ்சம் கூட இங்கிதமே இருக்காது போல.’ என்று உள்ளுக்குள் பொங்கினாலும், வெளியே புத்தருடன் போட்டி போடும் அளவிற்கு சாந்தமாக காட்சியளித்தாள்.

 

மகளின் எண்ணம் எவ்வாறெல்லாம் இருக்கும் என்பதை நன்குணர்ந்தவராகிற்றே சுதாகர்.

 

“நந்தும்மா, அங்க பாரு உன் பிரெண்ட் அனுஷா வந்துருக்கா. நீ அவளை கூட்டிட்டு ரூமுக்கு போ.” என்று மகளை அனுப்பி வைத்தவர், மகளின் தோழிக்கு கண்களால் செய்தியை பகிர்ந்து கொண்டார்.

 

அனுஷா, ஜீவநந்தினியின் நீண்டகால தோழி. கிட்டத்தட்ட பத்து வருட நட்பு!

 

ஒரு வருடம் முன்னர் தான், திருமணம் முடிந்திருந்தது அனுஷாவுக்கு. அதிலிருந்து தோழிகள் சந்தித்துக் கொள்வது அபூர்வமானதாக மாறிப் போனது.

 

நீண்ட நாட்கள் கழித்து அனுஷாவை சந்தித்ததில், மற்றவை மறந்து தான் போனது ஜீவநந்தினிக்கு. சுதாகரும் அதற்காக தானே அனுஷாவை அழைத்திருந்தார்.

 

என்னதான், மகளை சிறு வயதிலிருந்தே ஒற்றை ஆளாக வளர்த்திருந்தாலும், சில விஷயங்களை வெளிப்படையாக பேசிவிட முடியாதே. அப்போதெல்லாம் அனுஷாவும் அவளின் குடும்பமும் தான் உதவியாக இருப்பர்.

 

இப்போதும், நடந்ததை அலைபேசியில் அனுஷாவுக்கு சுதாகர் கூறியிருக்க, “அச்சோ, இந்த நேரத்துல அம்மா இங்க இல்லையே. அக்காவை பார்க்க ஊருக்கு போயிருக்காங்க. சரி, நான் அவருக்கிட்ட சொல்லிட்டு, உடனே அங்க வரேன் அங்கிள். அதுவரை நீங்க அவளை பார்த்துக்கோங்க.” என்று கூறியதுடன் அல்லாமல், இதோ தோழிக்காக விரைந்து வந்திருந்தாள்.

 

உறவுகள் சிலநேரம் கைவிட்டாலும், அனுஷாவை போன்ற தோழிகளும் இருக்கத்தான் செய்கின்றனர்.

 

“அனும்மா, நந்துவை ஃபோர்ஸ் பண்ணி இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சுட்டேன்னு குற்றவுணர்ச்சி எனக்குள்ள இருந்துட்டு தான் இருக்கு. இதே நிலைல அவளுக்கு அட்வைஸ் பண்ண போனேனா, இன்னும் ஏதாவது சொல்லி கட்டாயப்படுத்துவேனோன்னும் தோணுது. நீதான் அவளுக்கு புரிய வைக்கணும்.” என்று அனுஷாவை தனியே அழைத்து பேசியிருந்தார் சுதாகர்.

 

அனுஷாவோ ஒரு பெருமூச்சுடன், “எனக்கே உங்க முடிவை நினைச்சு வருத்தமா தான் இருக்கு அங்கிள். ஆனா, இனிமே அதைப் பத்தி பேசி பிரயோஜனம் இல்ல. உங்க பொண்ணுக்கு நான் என்ன அட்வைஸ் பண்றது. பண்ணாலும், அதை எல்லாம் கேட்குறவளா அவ? ஆனா, ஒண்ணு அங்கிள், உங்க ஃபிரெண்டோட பையன் தான் பாவம், இவகிட்ட வந்து மாட்டிக்கிட்டாரு.” என்று பேசி, பதற்றமாக இருந்தவரை சற்று இயல்பாக்கியவள், தோழியைக் காணச் சென்றாள்.

 

*****

 

மண்டபத்திலிருந்து நேராக ராகவர்ஷினியின் பெரியப்பாவுக்கு சொந்தமான விருந்தினர் மாளிகைக்கு வந்திருந்தனர் ராகவர்ஷினியின் குடும்பத்தினர்.

 

சில நிமிடங்கள் பேசிவிட்டு, ராகவர்ஷினியின் பெரியப்பா குடும்பமும் கிளம்பியிருக்க, மிச்சம் இருந்தது என்னவோ, ராகவர்ஷினியும் அவளின் பெற்றோர் கிரிதரன் – கீதாஞ்சலி தம்பதியரும் தான்.

 

ராகவர்ஷினி மண்டபத்தை விட்டு வெளியே வந்ததிலிருந்து எதுவுமே பேசவில்லை.

 

இதோ வீட்டிற்கு வந்ததும், அங்கிருந்த நீள்சாய்விருக்கையில் அமர்ந்து, வெற்று சுவரையே வெறித்துக் கொண்டிருந்தாள்.

 

கவலையுடன் மகளை பார்த்துக் கொண்டிருந்த மனைவியிடம் வந்த கிரிதரன், “கீது, இந்தியா வந்ததுல இருந்தே நல்ல அலைச்சல் உனக்கு. நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுமா. நான் வர்ஷி கிட்ட பேசுறேன்.” என்றார்.

 

என்னதான் சோர்வு இருந்தாலும், பெற்ற பிள்ளை தவிக்கும்போது, தான் மட்டும் போய் படுப்பதற்கு தாயின் மனம் உடன்படுமா?

 

இன்னொரு அறையிலிருந்த நீள்சாய்விருக்கையை கூடத்தில் போடச் சொன்ன கீதாஞ்சலி, அதில் தளர்வாக அமர்ந்து, கணவனை மகளிடம் பேசுமாறு கூறினார்.

 

கிரிதரனும் ஒரு பெருமூச்சுடன், மகளருகே அமர்ந்து அவளின் தலைமுடியை மெல்ல கோதிக் கொண்டே, “வர்ஷும்மா, அப்பா சொல்றதை கேளுடா. நாம ஜெர்மனி போலாம்டா.” என்று கூறினார்.

 

அவளோ அமைதியாக தந்தையின் முகத்தை கண்டவள், “நீங்களும் மம்மியும் கூட லவ் மேரேஜ் தான டேடி. அப்போ ஏன் என் கஷ்டம் உங்களுக்கு புரியல?” என்று அழுத்தம் திருத்தமாக கேட்க, கிரிதரனோ அதற்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் விழித்தார்.

 

மீண்டும் சுவரை வெறிக்க ஆரம்பித்த மகளைக் கண்ட பெற்றோர் இருவருக்கும் வேதனையாக தான் இருந்தது.

 

மகளின் பிடிவாததத்தை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் திகைத்து தான் போயினர் இருவரும்.

 

‘சின்ன வயசுல பிடிவாதம் பிடிக்கும்போதே கண்டிச்சு வளர்க்கணும்.’ – என்றோ உதிர்க்கப்பட்ட அந்த வார்த்தைகள் கீதாஞ்சலியின் காதுக்குள் ரீங்காரமிட்டன.

 

திடீரென்று, “எல்லாம் உங்களால தான். என் உதய் எனக்கு கிடைக்காம போனது உங்களால தான். நீங்க வந்ததுக்கு அப்பறம் தான், இந்த கல்யாணம் நின்னு போச்சு!” என்று அடிக்குரலில் ராகவர்ஷினி கத்தியபடி, தந்தையின் சட்டையைப் பிடித்து உலுக்க, அவரோ தன் செல்ல மகளின் இத்தகைய நிலையைக் கண்கொண்டு காண முடியாமல் கண்ணீரில் கரைந்தார்.

 

அந்த காட்சி அவளின் அன்னைக்கு கோபத்தை விளைவிக்க, அது அவளின் கன்னத்தில் அடியாக இறங்கியது.

 

இதுவரை அடித்திராத அன்னையிடம் அடி வாங்கியவளுக்கு அப்படி ஒரு அதிர்ச்சி!

 

“அம்மா…” என்று குரல் எழும்பாமல், வாயை மட்டும் அசைக்க, “உனக்கு செல்லம் கொடுத்து ரொம்ப கெடுத்து வச்சுருக்கோம். ஏதோ, வருத்தத்துல புலம்பிட்டு இருக்கன்னு விட்டா, அப்பான்னு கூட பார்க்காம சட்டையை பிடிக்கிற ராஸ்கல். இனி, நாங்க சொல்றபடி தான் நீ நடந்துக்கணும், புரிஞ்சுதா? இப்போ ரூமுக்குள்ள போய் அமைதியா படு. இன்னமும் ஏதாவது கலாட்டா பண்ணனும்னு பார்த்த, இன்னொரு கன்னத்திலயும் அடி வாங்குவ.” என்று கறாராகக் கூறினார் கீதாஞ்சலி.

 

அன்னையையும் தந்தையையும் அடிபட்ட பார்வை பார்த்தவள், எதுவும் பேசாமல் அறைக்கு சென்றாள்.

 

அவள் சென்றதும், அத்தனை நேரமிருந்த திடம் வடிந்துவிட, தளர்ந்து கீழே அமர இருந்தவரை, தாங்கிக் கொண்டார் கிரிதரன்.

 

“என்னால தானா கிரி?” என்று பொங்கும் கண்ணீருடன் கணவனை நோக்க, அவருக்கும் என்ன சொல்வதென்று தெரியவில்லை.

 

தப்பித்தவறி கூட, “உன்னால இல்ல.” என்ற சொற்களை அவர் உதிர்க்கவில்லை!

 

*****

 

“ஹே அனு, என்ன சர்ப்ரைஸ்? உன்னை தனியா விட அண்ணனுக்கு மனசு வந்துடுச்சா? இல்ல, உன்னை வால் பிடிச்சுட்டு அவரும் பின்னாடியே வந்துருக்காரா?” என்று அனுஷாவிடம் கேலியாக ஜீவநந்தினி வினவ, “இந்த நேரம் கூட இப்படி அடுத்தவங்க காலை வார உன்னால தான்டி முடியும்!” என்று சலித்துக் கொண்டாள் அனுஷா.

 

“பின்ன, நடந்ததை நினைச்சு, அழுது ஒப்பாரி வைக்க சொல்றியா?” என்று கேட்ட ஜீவநந்தினியை சற்று பெருமையாகவே பார்த்தாள் அனுஷா.

 

மனதிற்குள், ‘இது தான் என் நந்து!’ என்றும் கூறிக் கொண்டாள்.

 

வெளியில் சொன்னால், ஜீவநந்தினியை கையில் பிடிக்க முடியாதே!

 

“நீ தெளிவா தான் இருக்க. ஆனா, அங்கிள் தான் பாவம். ‘நந்துவை கட்டாயப்படுத்திட்டேன்’னு புலம்பிட்டு இருக்காரு.” என்று அனுஷா கூற,

 

“ஹ்ம்ம், தெரியும் அனு. நீ வந்தப்போவே கெஸ் பண்ணேன். ஆனா, எனக்கு அப்பா மேலயும், மூர்த்தி அங்கிள் மேலயும் கோபம் இருக்கத்தான் செய்யுது. இந்த திடீர் கல்யாணம் அவசியமா? இதை நடத்தி, யாருக்கு என்ன ப்ரூவ் பண்ண போறாங்க? மத்தவங்க ஏதாவது சொன்னா, ‘சரிதான் போடா’ன்னு தூக்கி போட்டு போக வேண்டாமா? அதை விட்டு, இப்படி அவசரமா கல்யாணம் பண்ணி, யாருக்கு என்ன சந்தோஷம். சரி, கல்யாணம் நடத்தி முடிச்சிட்டாங்களே, அவங்களாவது சந்தோஷமா இருக்காங்களா? இப்போ கூட யாராவது ஏதாவது சொல்லிடுவாங்களோன்னு தான பதட்டமா இருக்காங்க. இது என்ன தேவைக்கு? இதுல, ஃபர்ஸ்ட் நைட் ஒண்ணு தான் குறைச்சல்! நான் மட்டும் அலங்காரம் பண்ணிட்டு ரூமுக்குள்ள போனேன்னு வச்சுக்கோ, அந்த முசோ மத்தவங்க மேல இருக்க கோபத்துல, என் மூஞ்சிலேயே முறை வாசல் பண்ணிடுவான்.” என்று தன் மனதிலுள்ளவற்றை எல்லாம் தோழியிடம் புலம்பினாள்.

 

“ம்ச், முடிஞ்சு போனதைப் பத்தி பேசுறதுல எந்த யூஸும் இல்லன்னு உனக்கே நல்ல தெரியும். சோ, ஃப்ரீயா விடுடி. அங்கிள்ஸ் ரெண்டு பேரும் உறவுகளுக்கு முன்னாடி, எந்த குறையும் இல்லாம கல்யாணம் முடிஞ்சதுன்னு காட்ட இப்படி செய்றாங்க. அதையும் தப்புன்னு சொல்ல முடியாது. இது அவங்களோட மைண்ட்செட். அப்பறம் என்ன சொன்ன, மூஞ்சில முறை வாசல் பண்ணுவாரா? அதுவரைக்கும் சும்மாவா இருப்ப? பாஸா இருந்தப்பவே, அந்த மனுஷனை சைலண்ட்டா படுத்துவ. இப்போ ஹஸ்பண்ட்டா வேற ஆகிட்டாரு. உன்கிட்ட லைசன்ஸ் வேற இருக்கு. பாவம், அவரை தான் உன்கிட்ட இருந்து காப்பாத்தணும்.” என்று பேசிக் கொண்டே தோழிக்கு மெலிதான ஒப்பனையை முடித்தாள்.

 

அதுவரை பேச்சு சுவாரசியத்தில் தன் அலங்காரத்தை கவனிக்காத ஜீவநந்தினியோ, கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து அதிர்ந்து, “அடியேய் அனு, என்னடி இது? இப்படியே போனேன்னு வச்சுக்கோ, அந்த முசோ நானே இந்த கல்யாணத்தை நிறுத்தி, அவரை விருப்பப்பட்டு கட்டிக்கிட்ட மாதிரி பேசுவான்.” என்று புலம்பியவளை சமாதானப்படுத்தி, சாப்பிட வைத்து, அறைக்குள் அனுப்பி வைப்பதற்குள் போதும் போதும் என்றானது அனுஷாவுக்கு.

 

*****

 

மறுபுறம், முதலிரவை பற்றி தயங்கியபடியே உதயகீதனிடம் கூறினார் கேசவமூர்த்தி.

 

அவர் பயந்ததற்கு மாறாக, உதயகீதன் எதுவுமே கூறவில்லை.

 

ஆனாலும், அதுவும் தந்தைக்கு திகிலை கொடுத்தது. தன்மீது இருக்கும் கோபத்தை மருமகளின் மீது காட்டிவிடுவானோ என்று!

 

“உதய், அப்பாக்கு புரியுதுபா. இருந்தாலும், சொந்தம் கூடியிருக்கும்போது, இதை மறுத்தா, அதுக்கும் ஏதாவது பேசுவாங்க…” என்று கேசவமூர்த்தி பேச,

 

“அப்போ உங்க மகனோட வாழ்க்கையை விட, உங்க சொந்தம் என்ன நினைக்குங்கிறது தான் முக்கியமா போயிடுச்சுலப்பா.” என்று உதயகீதன் வினவ, கேசவமூர்த்தியின் வதனம் வாடிப் போனது.

 

“கவலைப்படாதீங்கப்பா, உங்க சொந்தம் முன்னாடி, உங்க மரியாதைக்கு எந்த பங்கமும் வராது. அத்தனை பேருக்கு முன்னாடி கல்யாணமே பண்ணிட்டேன், இதெல்லாம் என்ன?” என்றவனின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் விரக்தியில் முக்கி எடுத்து வெளிவர, மகனை வெகுவாக காயப்படுத்தி விட்டோம் என்பதை புரிந்து கொண்டார் தந்தை.

 

இனி, அவனை எப்படி மீட்கப் போகிறோம் என்ற வருத்தத்துடனே சுற்றினார் கேசவமூர்த்தி.

 

*****

 

‘இதோ அதோ’வென்று ஜீவநந்தினி உதயகீதனின் அறைக்குள் செல்லும் நேரமும் வந்தது.

 

பெரியவர்கள் அவளைச் சுற்றி வளைத்து பல அறிவுரைகளை வழங்கியிருக்க, விட்டால் போதுமென்று அவன் அறைக்குள் செல்ல விரைந்தாள் அவள்.

 

அதற்கும் அவர்கள் சிரித்து வைக்க, ‘ஹையோ, காலக்கொடுமை கடவுளே!’ என்று மனதிற்குள் புலம்ப, அவளைப் புரிந்து கொண்ட தோழியாக, அதிகம் பேசாமல், ஒரு ‘ஆல் தி பெஸ்ட்’டுடன் முடித்துக் கொண்டாள் அனுஷா.

 

ஜீவநந்தினி, இயல்பிலேயே தைரியம் மிக்கவள் தான். ஆனால், இப்போது அந்த தைரியம் சற்று ஆட்டம் கண்டது என்று தான் கூற வேண்டும்.

 

முதலிரவு என்பது எத்தனை தைரியம் மிக்கவர்களையும் தடுமாறச் செய்து விடும் தானே. அதிலும், ஜீவநந்தினி சிக்கியிருக்கும் சூழலில், அவளின் பதற்றமும் பயமும் முதலிரவை குறித்து அல்ல, அவளின் கணவனைக் குறித்தே ஆகும்.

 

அவள் பயந்தது போல குதறி விடுவானோ?

 

*****

 

மெல்ல அறைக்குள் எட்டிப் பார்த்தவளுக்கு அவன் எங்கும் தென்படாததால், வேகமாக உள்ளே சென்றவள், அவன் வருவதற்குள் தூங்கி விடலாம் என்று நினைத்திருந்தாள். அன்று அவள் நினைத்தது எது நடந்திருக்கிறது?

 

அவளின் கொலுசொலி கேட்ட சமயம், பால்கனியில் சிலை போல நின்றிருந்தவனுக்கு உயிர் வந்தது போல, நிகழ்விற்கு வந்தான் உதயகீதன்.

 

“ம்ச்!” என்ற சலிப்புடன் அவன் உள்ளே வருவதற்கும், அவள் கட்டிலருகே இருந்த மேஜையில் பால் சொம்பை வைத்துவிட்டு திரும்புவதற்கும் சரியாக இருந்தது.

 

திடீரென்று அவனைப் பார்த்ததும் ஏற்பட்ட பதற்றத்தை வெகுவாக முயன்று அவன் பார்க்காதவாறு மறைத்து, தன்னை கெத்தாக காட்டிக் கொண்டாள்.

 

‘ஹையோ! இந்த மனுஷனை கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு என்னவெல்லாம் பண்ண வேண்டியதா இருக்கு? அதுசரி, கொரங்குக்கு வாக்கப்பட்டா மரத்துக்கு மரம் தாவ தான செய்யணும்!’ என்று தன்னை நினைத்தே புலம்பிக் கொண்டாள் மனதிற்குள்.

 

அவனோ அவளைக் கண்டதும், “ஹே, இது என் ரூம். நீ எதுக்கு உள்ள வந்த?” என்று கத்தினான்.

 

‘இவன் என்ன லூசா? இல்ல நம்ம லூசா?’ என்ற ரீதியில் அவனை புருவம் சுருக்கி பார்த்தாள் ஜீவநந்தினி.

 

ஆம், சற்று முன்னர் கேசவமூர்த்தி வந்து முதலிரவு பற்றிய தகவல் சொல்லியது எல்லாவற்றையும் மறந்து தான் போயிருந்தான் உதயகீதன். அவன் தான் அடிக்கடி கடந்த காலத்திற்கு சென்று விடுகிறானே.

 

அவளின் பாவனையே அவன் கூற்றிலிருந்த அபத்தத்தை சுட்டிக்காட்டி விட, ‘உதய், என்னடா பண்ணிட்டு இருக்க?’ என்று தன்னைத்தானே திட்டிக் கொண்டான்.

 

அவனை அந்த தர்மசங்கட நிலையிலிருந்து காக்கவே அலைபேசி ஒலியெழுப்ப, கவனத்தை அலைபேசிக்கு திருப்பினான்.

 

அதில் தெரிந்த பெயரைக் கண்டதும், புருவம் சுருக்கியவன், ஒருவித அவஸ்தையுடனே அதை ஏற்க, மறுமுனையில் கூறப்பட்ட செய்தியில், அவன் முகபாவனை தீவிரமாக மாறியது.

 

“எப்படி? என்னாச்சு?”

 

“…”

 

“எங்க?”

 

“…”

 

“நான் உடனே வரேன்.” என்றவன் அழைப்பை துண்டித்த கையோடு, வெளியே சென்று விட்டான்.

 

“இவ்ளோ நேரம் என்னை வெளிய போன்னு கத்திட்டு, இப்போ அவனே போயிட்டான்!” என்று சத்தமாகவே சிந்தித்தவள், “என்னவா வேணா இருக்கட்டும். இன்னைக்கு ஃப்ரீயா படுக்கலாம்.” என்று மெத்தையில் விழ, அந்த மெத்தையும் அவளை அழகாக உள்வாங்கிக் கொண்டது.

 

அவளின் கணவனோ அவன் முன்னாள் காதலியின் கைகளை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்!

 

தொடரும்…

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 24

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
21
+1
1
+1
2

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. உதய் ஏன் அங்கே போனான்?. என்னாச்சு.