
காலை கனவு 14
தரையில் மடங்கி அமர்ந்து நெஞ்சில் கை வைத்து சத்தமிட்டு கதறிய அன்விதாவின் அழுகையை காண முடியாது ஆர்விக் துடித்துக் கொண்டிருந்தான்.
இதற்கு என்ன ஆறுதல் சொல்லிட முடியுமென்று அவனுக்கு மட்டுமல்ல, அன்விதாவின் அழுகையில் உறைந்து நின்றிருந்த யாஷ், பூபேஷுக்கும் கூட தெரியவில்லை.
காரணம் தெரிந்தாலும் அது குறித்து பேசி தேற்றிட முடியும்… இங்கு அவர்களுக்கு தெரியாத காரணம் காதலாக இருந்திட என்னவென்று ஆறுதல் சொல்ல முடியும்?
“டேய் அன்வி… ப்ளீஸ்!” என்று ஆர்விக் அவளருகில் குத்திட்டு அமர்ந்திட…
“ஆர்வி” என்று அவனது தோளில் சாய்ந்தவளின் கரம் அவனின் மார்புச் சட்டையை இறுகப் பிடித்திருந்தது.
கண்ணீரில் இமை இழைகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டி, கன்னம் வழிந்த நீரின் அளவை உணர்த்திட, ஆர்விக்கின் நெஞ்சம் தவித்தது.
“அன்வி அழாதடா” என்று அவள் முன் யாஷ் மற்றும் பூபேஷும் அமர்ந்திட,
“முடியலன்னு சொல்லக்கூடாது இருக்கேன் ஆர்வி… ஆனா வலிக்குதுடா! நான் ஸ்ட்ராங் சொல்லுவியே! அப்படிலாம் இல்லைத் தெரியுமா?” என்று தேம்பியவள், “சொல்லியிருக்கலாம் ஆர்வி… சொல்லியிருந்தாலும் என்னால என்ன பண்ணிட முடியும்? ஆனாலும் இத்தனை வருஷமா பைத்தியக்காரி மாதிரி நம்பிட்டு இருந்திருக்கேன்” என்றவளின் அழுகையை எப்படி நிறுத்துவதென்று மூவருக்குமே தெரியவில்லை.
“டேய் அன்வி” என்று தழுதழுத்த பூபேஷ், “என்னால பார்க்க முடியலடா” என்று எழுந்து வெளியே செல்ல, அன்விதா அழுகையோடு பேசுவதை கேட்டவனாக நின்றிருந்தான் கௌதம்.
அவளை ஏமாற்றிய வலி கொஞ்சமும் இல்லையென்றாலும், அவள் வார்த்தைகளில் வேதனை கொண்டான்.
“அப்படி என்னதான் ப்ரோ பண்ணீங்க?” என்று சிறு கோபத்தோடு கௌதமிடம் கேட்ட பூபேஷ், “அவளை இப்படி நாங்க பார்த்ததே இல்லை. எதுவாயிருந்தாலும் பேசி சால்வ் பண்ணிடுங்க. நீங்கயில்லாம அவளால இருக்க முடியாது” என்றான்.
கௌதமால் அவளுடன் இருந்திட முடியாது என்பது அறியாது சொல்லியிருந்தான் பூபேஷ்.
“என்ன ப்ரோ அப்படியே நிக்கிறீங்க? அவள் போன்னு சொன்னதும் போறதுக்கா சிக்ஸ் இயர்ஸா லவ் பண்ணீங்க?”
‘லவ் பண்ணீங்க?’ என்ற வார்த்தை கௌதமை உள்ளுக்குள் அதிரச் செய்தது.
“நான் ஆர்விக்கிட்ட பேசணுமே!” என்ற கௌதம், “சீ சைட் இருக்கேன். வர சொல்லுங்க” என்று அலுவலகத்திற்கு பின்னிருக்கும் கடற்கரை நோக்கிச் சென்றான்.
பூபேஷ் உள்ளே செல்லத் திரும்பிட, பார்ட்டி ஹாலிருக்கும் பகுதியிலிருந்து வந்தாள் தான்யா.
“அங்க போறது கௌதம் தானே?” என்று கேட்ட தான்யாவின் குரலில் பூபேஷ் நின்றிட,
“அன்வி சோகமா இருக்கான்னு பார்க்கிறதுக்கு நேர்லே வந்துட்டாங்களா? செம லவ்ல!” என்றாள்.
“ஆமா ஆமா பொல்லாத லவ்வு” என்ற பூபேஷ், “உள்ள அவள் அழுதுட்டு இருக்காள்” என்றான்.
“அன்வியா?” என்ற தான்யா அப்போதுதான் வெளியில் கேட்கும் மெல்லிய கதறலைக் கேட்டு பதற்றம் கொண்டவளாக உள்ளே ஓடினாள்.
ஆர்விக்கின் தோளில் சாய்ந்திருந்தவளின் வேதனையின் சுவடு, அவள் பற்றியிருந்த ஆர்விக்கின் சட்டையின் சுருக்கங்களின் தெரிந்தது.
“என்னடா ஆச்சு? ஏன் இப்படி அழுதிட்டு இருக்காள்?” என்று தான்யா கேட்க,
“எங்களுக்கும் ஒன்னும் தெரியல தானு” என்றான் யாஷ்.
அன்விதாவின் கதறலை நிறுத்திட முயற்சித்திடாது, ஆர்விக்கும் கலங்கி துவண்டிருப்பதை கண்ட தான்யா,
“உனக்கென்னடா இப்போ?” என்று அதட்டலாகக் கேட்டு,
“இப்படி அவள் அழறான்னு ஆளாளுக்கு மாத்தி மாத்தி அழுதா சரியாப்போச்சா?” என்றாள்.
“ஹே… அவளே ஏதோ நடந்ததுல தாங்க முடியாது அழுதிட்டு இருக்காள். நீ ஏன் இப்போ இப்படி பேசுற” என்று அருகில் வந்த பூபேஷ், “ஆர்வி பார்த்துப்பான். நீ வா” என்று தான்யாவின் கரம் பிடித்து இழுத்தான்.
“ம்ப்ச்… விடுடா!” என்ற தான்யா,
“அவனும் கூட சேர்ந்து வேணுன்னா அழுவான்” என்றாள்.
“அன்வி” என்று தான்யா கீழே அமர, “டேய் உன்கிட்ட கௌதம் பேசணும் சொல்லி வரச்சொன்னாங்க. சீ வீவ் பாயின்ட்ல இருக்காங்க” என்று ஆர்விக்கிடம் கூறினான் பூபேஷ்.
“எதுக்காம்? பண்றதெல்லாம் பண்ணிட்டு… இப்போ ஆர்வி மூலமா சமாதானம் செய்யப் பார்க்குறாங்களா?” என்ற யாஷ், “அவள் இப்படி அழறா(ள்) அப்படின்னா ஏதோ பெருசா பண்ணியிருக்காங்க” என்றான்.
“யாஷ் நீ சும்மா இரு. நான் போய் பேசிட்டு வர்றேன்” என்ற ஆர்விக், அன்விதாவின் தலையை நிமிர்த்த,
“நீ போக வேணாம் ஆர்வி. யார்கிட்டவும் பேச வேணாம்” என்றாள்.
“பேசினாதான் சரியாகும் அன்வி!”
“இது சரியாகவே முடியாது. நீ போக வேணாம். அவ்ளோதான்” என்றவளிடம் அத்தனை அழுத்தம்.
“அதான் அவள் வேணாம் சொல்றாளே… விடுடா” என்று யாஷ் சொல்ல,
“இது அவளோட லவ் டா” என்ற ஆர்விக்கின் தொண்டையில் சிக்கி வெளிவந்த வார்த்தையில், அவனது காதலை தெரிந்திருந்த தான்யா மற்றும் யாஷால் ஆர்விக்கின் மறைக்கப்பட்ட வலியை உணர முடிந்தது.
“ஆமா… என்னோட லவ்… என்னோட லவ் மட்டும் தான்” என்று முகத்தை இரு உள்ளங்கைகள் கொண்டு அழுந்த துடைத்த அன்விதா, “இப்போ இல்லாமப்போச்சு” என்றாள்.
“ஒரு ரிலேஷன்ஷிப்ல பிரச்சினை வரது சாதாரணம் அன்வி. அதுக்காக அந்த உறவே வேணாம் சொல்றது சரியில்லை” என்றான் ஆர்விக்.
“இவனால எப்படிடா இப்படி பேச முடியுது?” என்று யாஷிடம் மெல்லியக் குரலில் கேட்ட தான்யா, “நியாயமா அவன் லவ்வுக்கு தானா ரூட் கிளியர் ஆகுதுன்னு சந்தோஷப்படனும். அதைவிட்டு அவளோட லவ் சேர்த்து வைக்க பேசிட்டு இருக்கான்” என்றாள்.
“நீ அவனை புரிஞ்சிக்கிட்டது அவ்ளோதான்” என்ற யாஷ், “அவனோட வலி அவளுக்கும் வேணான்னு பேசுறான். லவ்வோட பெயின்… அவனைவிட வேற யாருக்கு நல்லாத் தெரிஞ்சிடும்” என்றான்.
இருவரின் பேச்சினையும் உள்வாங்கிய பூபேஷ்…
“உங்க பேச்சில் எனக்கொன்னு புரியுது. அது கரெக்ட் தானா?” என்றான்.
“ஓ புரிஞ்சிடுச்சா… குட்” என்ற தான்யா, “புரிஞ்சதை உள்ளுக்குள்ளே வைச்சு லாக் பண்ணிடு” என்றாள்.
“நீ சொல்றது உண்மையா இருக்க உறவுக்குதான் ஆர்வி” என்ற அன்வி, “உண்மை தெரிஞ்சா இந்த உறவு தொடரனும் அப்படின்னு நீயும் நினைக்கமாட்ட” என்றாள்.
“எதுவும் மிஸ் அண்டர்ஸ்டேண்டிங்கா கூட இருக்கலாமே அன்வி… கௌதம் பக்கமிருந்து என்னன்னு தெரியும்போது சரியாகலாமே” என்றான் ஆர்விக்.
“அவள்தான் வேணாம் சொல்றாளே! அப்புறம் என்னடா?” என்ற யாஷை முறைத்த ஆர்விக்,
“பார்த்துக்கோங்க… என்னன்னு பேசிட்டு வரேன்” என்று ஆர்விக் எழுந்திட…
“அவங்க சொல்றது கேட்டு அடிச்சாலும் அடிச்சிடுவ… அப்படி அடிச்சன்னா, எனக்காக சேர்த்து ஒன்னு கொடு” என்ற அன்விதாவின் வார்த்தையில், ஏதோ பெரியதாக ஒன்று வரையிருக்கிறது எனும் எண்ணத்தோடு கௌதம் இருக்கும் இடம் சென்றான் ஆர்விக்.
அலுவலகத்தின் பின்பக்கமாக வந்த ஆர்விக், சக்திக்கு அழைத்தான்.
வெண்மதி கூறியது, அன்விதா அழைத்து கௌதம் வேண்டாமென்றது என சிந்தையில் உழன்று கொண்டிருந்தான். வெண்மதி சென்றபோது அமர்ந்திருந்த நிலையிலே கண்களை மூடி பின் சாய்ந்திருந்தான்.
அலைபேசியின் ஒலியில் கண்கள் திறந்த சக்தி…
மீண்டும் ஆர்விக்கின் எண்ணிலிருந்து அன்விதா தான் அழைக்கின்றாளோ எனும் யோசனையோடு எடுத்திட்டான்.
ஆர்விக், “ஹலோ” என்க,
“அன்வி ஓகேவா ஆர்வி?” என்றான் சக்தி.
“ஷீ இஸ் கம்ப்ளீட்லி புரோக்கன் திரு” என்ற ஆர்விக், “கௌதம் என்னை பார்த்ததும் மேரேஜ் பிக்ஸ் பண்ணியிருக்காங்க சொன்னாங்க. ஆனால் அன்வி” என்று நடந்ததைக் கூறினான்.
சக்தியிடம் அமைதி. அவனுக்கும் கௌதம் பக்கமிருந்து எதுவும் தெரியாதே!
“கௌதம் என்னதான் பண்ணாங்க திரு? அன்வி…” என்று அடைத்த தொண்டையை சரி செய்த ஆர்விக், “அவள் அழறதை பார்க்க முடியல திரு” என்றான்.
ஆர்விக்கின் காற்று கவ்விய குரலில் சக்தியின் நெற்றி முடிச்சிட்டது.
“எனக்கும் என்னன்னு தெரியாது ஆர்வி… ஆனால் கௌதமுக்கு அன்வியை மேரேஜ் பண்ணிக்க விருப்பமில்லைன்னு மட்டும் தெரியுது” என்ற சக்தியிடம்,
“மேரேஜ் பண்ணிக்காததுக்கு எதுக்கு லவ் பண்ணனும்? அவளுக்கு எல்லாமே அப்படிங்கிற ஹோப் கொடுக்கணும்?” என்றான் ஆர்விக்.
“அவுட் ஆஃப் சிலபஸ்” என்ற சக்திக்கு மனதில் நிதாஞ்சனியின் முகம் மின்னலாய் தோன்றி மறைந்தது.
“ஆமா… ஆமா… ஒருத்தி நம்மளையே சுத்தி வரது தெரிஞ்சும் வெறப்பா இருந்தா… எல்லாமே அவுட் ஆஃப் ஃபோகஸ் தான்” என வாய்க்குள்ளே முனகினான் ஆர்விக்.
“என்ன சொல்றீங்க ஆர்வி. சரியா கேட்கல…” என சக்தி சொல்ல,
“கௌதம் என்கிட்ட பேசணும் சொன்னாங்க…” என்றான் ஆர்விக்.
“ஹ்ம்ம்… பேசுங்களேன்!”
“நான் பேசுறதைவிட அன்வி பேசினா கரெக்டா இருக்கும் திரு. இது அவங்க லவ்.”
“ஃப்ரெண்டுக்காக போய் பேசுங்க. தப்பில்லையே! அவள் அழறதை பார்க்க முடியல சொன்னீங்களே! அதை நிறுத்தனுமே… போய் பேசுங்க! கௌதம் என்னதான் சொல்றான் தெரிஞ்சிப்போம்” என்றான் சக்தி.
“நானும் அன்விக்காக மட்டும் தான் பேச நினைச்சேன்” என்ற ஆர்விக், “அன்வி ரியாக்ட் பண்றதைப் பார்த்தால், கௌதம் என்னவோ பெருசா பண்ணியிருக்காங்க” என்றான்.
“ம்ம்… உங்க மொபைல், இந்த கால்… ஆன்லே இருக்கட்டும்” என சக்தி கூற, கௌதம் பேசுவதை நேரடியாகக் கேட்டிட சக்தி நினைக்கிறான் என்பது புரிய, சரியென… சற்று தூரத்தில் கடலைப் பார்த்தவாறு நின்றிருந்த கௌதமின் அருகில் செல்ல அடி வைத்திட்டான் ஆர்விக்.
“மியூட் யூர் கால் திரு.”
ஆர்விக் வரும் அரவம் உணர்ந்தபோதும் கௌதம் அசையாது தன்னிலையில் மாற்றமில்லாது நின்றிருந்தான்.
கௌதமிற்கு பக்கவாட்டில் சில அடி இடைவெளிவிட்டு சென்று நின்றான் ஆர்விக்.
ப்ரெண்ட்ஸ் இவன்ட் மேனேஜ்மென்ட் அலுவலகத்திற்கு உரிமையான கடற்கரைப் பகுதி என்பதால் ஆட்கள் யாருமின்றி, கடல் அலையின் பேரிரைச்சலின் நிசப்தமாக அவ்விடம்.
நிமிடங்கள் கடந்திட இருவரிடமும் வார்த்தைகளற்ற தருணமாய்!
மாலை நேர சூரியன் மெல்ல கடலின் மடியில் துயில் கொள்ள ஆயத்தமாகினான்.
ஆர்விக்… கௌதம்…
மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு, கால்களை அகட்டி வைத்து, காற்றின் விரல் பிடித்து, அதனின் அழைப்புக்கு ஏற்றவாறு கரை தழுவும் நுரை நீரை வெறித்தவாறு நின்றிருந்தனர்.
பேச வேண்டுமென வந்துவிட்டான்… ஆனாலும் எப்படி ஆரம்பிப்பது, அவளுக்காக தான் பேசுவது சரியா? எனும் குழப்பத்தில் ஆர்விக்.
தனக்காக தான்தான் பேச வேண்டும்… கேட்பதற்கு அவள் தயாரில்லை என்ற நிலையில், ஆர்விக்கின் மூலம் அவளிடத்தில் தனது மனதிலிருப்பதை சொல்லிட வேண்டுமென வந்துவிட்டான்… ஆனாலும் தடுமாற்றம் கொண்டிருந்தான் கௌதம்.
கௌதமின் அமைதி… அவன் சொல்லவிருக்கும் செய்தியின் வீரியத்தை பறைசாற்றியது. ஆர்விக்குக்கு மட்டுமல்ல, அவனது அலைபேசி இணைப்பிலிருந்த சக்திக்கும்.
ஆர்விக் தொண்டையை செருமிட கௌதம் ஆர்விக்கின் பக்கம் திரும்பினான்.
“அன்வியை ரொம்பவே பிடிக்கும் ஆர்வி… ஆனால்” என்று கௌதம் சொல்ல, கௌதமின் பக்கம் ஆர்விக் திரும்பி நின்றான்.
இருவரும் ஒருவரையொருவர் நேர்கொண்டு பார்த்திருந்தனர்.
தானாகக் கேட்பதைவிட கௌதமாக சொல்வதே சரியாக இருக்குமென்று நினைத்த ஆர்விக், எதுவும் பேசாது அமைதியாக இருந்தான்.
“எப்போ, எப்படின்னு தெரியல… எல்லாம் தெரிஞ்சுதான் பண்ணேன். நான் பண்ணது சரின்னு நியாயப்படுத்தல… ஆனாலும் இது தப்புமில்லையே” என்றான் கௌதம்.
“சரி, தப்புன்னு தீர்மானிக்கிறது நமக்கு எதிர இருக்கிறவங்க தான் கௌதம். நமக்கு நாம என்ன செய்தாலும் அது சரிதான். தப்பாவே இருந்தாலும், நமக்கு நியாயமாதான் படும். நாமெல்லாம் சாதாரண மனுஷங்கதானே” என்ற ஆர்விக், “உங்க ரெண்டு பேருக்குள்ள என்னன்னு தெரியல… ஆனா அவளை நீங்க ரொம்பவே ஹர்ட் பண்ணிட்டீங்கன்னு மட்டும் தெரியுது. பேசுங்க… இங்க பேசினா சரியாகாத பிரச்சினையே கிடையாது” என்றதோடு…
“ஸ்பென்ட் சம் டைம் வித் அ கப் ஆஃப் டீ” என்றான்.
“கொஞ்ச நேரம் ஸ்பென்ட் பண்ணி டீ குடிக்கிறதால சரியாகும் அப்படின்னா… அந்த சரியாகுதல் வேணாமே!”
ஆர்விக்கின் முகம் இடுங்கியது.
“இது நான் எக்ஸ்பெக்ட் பண்ணது தான் ஆர்வி… எனக்கும் இதுதான் வேணுமா இருந்தது” என்ற கௌதம், “இன்ஃபாக்ட் இப்படி நடக்கணும் நினைச்சு நான்தான் சிட்டுவேஷனை கிரியேட் பண்ணேன்” என்றான்.
“வாட்?” ஆர்விக்கு எப்படி உணர்வினை காட்டிட வேண்டுமென்று கூட தெரியவில்லை.
அங்கு அவள் கதறிக் கொண்டிருக்க, இவனோ இது தான் எதிர்பார்த்து தன்னால்தான் நடக்கிறது என்றதும், அவளை தெரிந்தே அழ வைத்த கௌதமை கடல் மணலில் புதைத்திட வேண்டுமென்று ஊடுருவும் கோபத்தை உள்ளங்கையில் விரல்கள் குவித்து கட்டுப்படுத்தினான் ஆர்விக்.
சக்தியின் செவியோடு அகமும் கூர்மைப் பெற்றது.
“நீங்க கிரியேட் பண்ண சிட்டுவேஷன் அப்படின்னா?” என்ற ஆர்விக், “அப்போ அன்வியை தெரிஞ்சே அழ வைக்கிறீங்க… ரைட்?” என்றான்.
“எஸ்… அவள் அழுவாள் தெரியும். நான் ஏமாத்திட்டேன் தெரிஞ்சு கோவப்படுவாள் தெரியும். ஆனால் இப்படி வலிக்க துடிப்பா(ள்)ன்னு எக்ஸ்பெக்ட் பண்ணல” என்றான் கௌதம்.
“புரியல!” என்ற ஆர்விக், “அவள் உங்களை எவ்ளோ லவ் பண்றான்னு தெரியும்ல உங்களுக்கு? அப்போ இதை நீங்க எதிர்பார்த்திருக்கனும்” என்றான்.
“எஸ்… எதிர்பார்த்திருக்கனும்…” என்ற கௌதம்,
“ஒருத்தவங்க மேல நாம வைக்கிற அன்பு… கடைசி வரை அவங்க மேல அப்படியே இருக்குமா?” எனக் கேட்டான்.
“நீங்க என்கிட்ட என்ன சொல்ல ட்ரை பண்றீங்க கௌதம்?”
“சொல்லுங்க ஆர்வி… ஆரம்பத்திலிருக்க அன்பு கடைசி வரை ஒரே மாதிரிதான் இருக்குமா?”
“இந்த கேள்வியை உங்க பேரண்ட் கிட்ட கேளுங்க கௌதம்… நீங்க பிறந்ததிலிருந்தே அன்பு காட்டுறாங்களே! இப்போ மாறிடுச்சா என்ன?”
“மாறாது…”
“அப்போ இந்த கேள்வி எதுக்கு?”
“அவங்க வைச்சிருக்க அன்பு வேற.”
“அன்புனாலே ஒண்ணுதாங்க… ஒருத்தர் மேல வைக்கிற அன்புக்கு உறவு அடிப்படையில் வேணுன்னா வேற வேற பேர் இருக்கலாம். ஆனால் மொத்தமா பார்த்தால் அது அன்பு… இட்ஸ் ஆன் அன்-டிஃபைன் அண்ட் ப்யூர்லி டிவைன் திங்” என்ற ஆர்விக்,
“உங்களுக்கு அன்வி மேல லவ் குறைஞ்சிடுச்சு சொல்லவர்றீங்களா?” எனக் கேட்டான்.
கௌதம் கேட்பதிலிருந்து ஆர்விக்கின் யூகம் இதுவாகத்தான் இருந்தது.
கௌதம் பதில் சொல்லாதிருக்க…
“எல்லா நேரமும் ஒரே மாதிரி ஃபீல் அண்ட் தாட்ஸ் இருக்காதே! இப்போ கம்மியா தெரியுற ஃபீல் இன்னும் கொஞ்சநாள்ல அதிகமா தெரியலாம். அதுக்காக லவ் குறையுது அர்த்தமாகதே” என்றான் ஆர்விக்.
கௌதமின் உதடு வளைந்தது.
“அன்வி உங்களுக்கு ஃப்ரண்ட்?”
“ஆமா… இப்போ அதுக்கென்ன? புதுசா தெரியுங்கிற மாதிரி கேட்கிறீங்க?” என்ற ஆர்விக்கிடமிருந்த பொறுமை சக்தியிடம் கொஞ்சமும் இல்லை.
கௌதம் சுற்றி வளைத்து பேசுவதிலேயே சக்தியின் பொறுமை கரை உடைக்கத் தயாராக இருந்தது. இருப்பினும் தான் அங்கில்லாத நிலையில் பொறுமை காத்தான்.
“அன்வி உங்களுக்கு ஃப்ரண்டா இருக்க அதே சமயம் தான்யாவும் எப்படி ஃப்ரெண்ட்?” என்றான் கௌதம்.
ஆர்விக்கிடம் கிளம்பிய அதே கணிப்பு சக்தியிடமும்.
தனது இக்கேள்வியில் இதுவரையிலான பேச்சுக்களை புரிய வைத்திருந்தான் கௌதம்.
“வாட் யூ மீன்?”
“சொல்லுங்க ஆர்வி… ஒரே நேரத்தில் ரெண்டு மூணு பேர் ஃப்ரெண்ட்ஸா இருந்தா தப்பா?”
“இல்லை…” என்று கண்கள் சுருக்கிய ஆர்விக், “என்னோட கெஸ் கரெக்ட்… ரைட்?” என்றான்.
“எஸ்… இதை எப்படி ஓப்பன் அப் பண்றது தெரியாம… ரொம்பவே தடுமாறிட்டேன்” என்ற கௌதம், “என் வீவ் உங்களுக்கு புரியுது தானே ஆர்வி” என்றான்.
கௌதம் ஆமென்றதுமே அவனது முகத்தை பாராது திரும்பி பின்னால் இரண்டடிகள் வைத்து நகர்ந்த ஆர்விக், இடையின் இரு பக்கமும் கைகளைக் குற்றி கால்களை அகட்டி வைத்து, இருளத் துவங்கியிருந்த வானின் உச்சியை பார்த்து இதழ் குவித்து ஊதினான்.
கால்கள் நனைத்த அலையின் மோதல்கள் ஆர்விக்கின் உள்ளத்தில்.
அங்கு சக்திக்கோ உள்ளம் தீயாய் கனன்றது.
கௌதம் தொடர்ந்து பேசிட,
“சில் ஆர்வி…” என்று வலது கையால் இதயத்தை நீவி பொங்கும் கோபத்தை மட்டுப்படுத்த முயன்ற ஆர்விக், சட்டைப் பையில் தட்டுப்பட்ட அலைபேசியில், அனைத்தையும் சக்தியும் கேட்டுக்கொண்டிருக்கிறான் என்பது நினைவில் எழ, இணைப்பை பட்டென்றுத் துண்டித்திருந்தான்.
தன்னுடைய கண் முன்னால் நின்றிருப்பவனையே ஒன்றும் செய்ய முடியாத தன்னிலையில், அங்கு சக்தியின் நிலை தற்போது என்னவாக இருக்குமென கருதியே அழைப்பை முறித்திருந்தான் ஆர்விக்.
“எனக்கு அன்வியை ரொம்ப பிடிக்கும்” என்று கௌதம் சொல்ல, தான் நிற்கும் தோற்றத்தை மாற்றாது தலையை மட்டும் திருப்பிப் பார்த்த ஆர்விக், “அவளை இப்பவும் லவ் பண்றேன்” என கௌதம் முடிக்கும் முன்னர் பளாரென்று கௌதமின் கன்னத்தில் அறைந்திருந்தான்.
ஆர்ப்பரிப்பாய் பாறை மோதி சிதறும் நீரின் சப்தமாய்… ஆர்விக்கின் கை தடம்.
“இந்த அடி அன்வி கொடுக்கச் சொன்னதுக்காக… என் கோபத்துக்கு நடுக்கடலில் உன்னை தள்ளிவிட்டு தண்ணியில மூழ்கி நீ மூச்சுக்கு தவிக்கிறது பார்க்கணும் போல இருக்கு” என்ற ஆர்விக்… மூச்சினை ஆழ்ந்து வெளியேற்றி தன்னை தன்னை நிலைப்படுத்த முயன்றான்.
“அவளை நான் லவ் பண்றது உண்மை” என கன்னத்தில் கை வைத்தபடி கௌதம் மீண்டும் சொல்லிட,
“ஷ்ஷ்ஷ்” என முகத்துக்கு நேரே சுட்டு விரலை ஆட்டிக் காண்பித்து…
“தொலைச்சிடுவேன்…” என கௌதமின் முகம் காண பிடிக்காதவனாய் வேறு பக்கம் திரும்பியிருந்தான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
13
+1
45
+1
1
+1
1

