Loading

காலை கனவு 6

அன்று அரசியல்வாதி ஒருவரின் வீட்டு நிகழ்விற்காக ஃபிரண்ட்ஸ் இவன்ட் மேனேஜ்மென்ட் பம்பரமாக சுழன்று கொண்டிருந்தது.

நகரத்திலே மிகவும் பிரபலமான மண்டபம் அது. அதன் வாடகையே ஒரு மணி நேரத்திற்கு சில லட்சங்கள்.

“இந்த ஃபங்க்ஷன் மட்டும் நல்லபடியா முடிச்சிட்டா… இன்னும் நல்ல ரீச் ஆவோம்” என்றான் யாஷ்.

“எஸ்… மந்திரி வீட்டு கல்யாணம்னா சும்மாவா? ரொம்ப பெரிய பெரிய ஆளுங்கயெல்லாம் வர்றாங்க. அவங்கெல்லாம் நோட் பண்ற மாதிரி நம்ம வேலையிருந்துட்டா போதும்” என்றான் பூபேஷ்.

“சும்மா பேசிட்டு இருக்காம வேலையைப் பாருங்கடா” என்று இருவரின் முதுகிலும் தட்டியவனாக ஆர்விக் வர,

“ஸ்டேஜ் டெக்கர் எப்படி மச்சான்?” எனக் கேட்டான் யாஷ்.

“சூப்பர்டா” என்ற ஆர்விக், “அன்வி இல்லாம ஃபர்ஸ்ட் இவன்ட்… ஒரு மாதிரி இருக்குல?” என்றான்.

“எனக்கு அப்படிலாம் ஒரு மாதிரியும் இல்லையே” என்று ஆர்விக்கை முறைத்துக்கொண்டு யாஷ் கூறிட,

“நானும் அவளை மிஸ் பண்றேன்” என்றான் பூபேஷ்.

அதில் சத்தமின்றி பற்களைக் கடித்த யாஷ்,

“தான்யா இன்னும் உனக்கு ஓகே சொல்லலதான? போ, போய் உன் பதிலென்னன்னு அவகிட்ட கேளு. போ!” என்று பூபேஷை அங்கிருந்து விரட்டிவிட்டு ஆர்விக் பக்கம் திரும்பினான் யாஷ்.

“என்னடா எதுவும் ஹெவி பெர்ஃபார்ம் பண்ணப்போறியா?” என்ற ஆர்விக் அப்போதுதான் நினைவு வந்தவனாக,

“டேய் அந்த மாப்பிள்ளை டான்ஸ் ஸ்டெப் ரிகர்சல் பண்ண உன்னை கூப்பிட்டாங்க டா. ஓடு ஓடு” என்று துரத்தியிருந்தான்.

“இந்த மேரேஜ் முடியட்டும். உன்கிட்ட பேசிக்கிறேன்” என்று முனகியவனாக யாஷ் சென்றிட, ஆர்விக் அங்கு போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தான்.

மந்திரி வீட்டு கல்யாணம் என்பதால் அத்தனை பாதுகாப்பு. அதுவும் ஆர்விக்கின் குழுவின் கீழ் தான் ஏற்பாடாகியிருந்தது.

விடிந்தால் திருமணம். சற்று நேரத்திற்கு முன்னர் தான் நிச்சயதார்த்தம் முடிந்திருக்க, இன்னும் இரண்டு மணி நேரத்தில் வரவேற்பு. அதற்கு தான் அரசியலில் முக்கிய புள்ளிகள் அனைவரும் வரவிருக்கின்றனர். அதற்குள் நிச்சயத்திற்கு வடிவமைத்த மேடை அலங்காரத்தை மாற்றி, மணமக்களின் வரவேற்பு ஆடைகேற்ற வகையிலான அலங்காரத்தை வடிவமைத்திருந்தனர்.

இந்த தீம் அன்விதா தயார் செய்தது.

“எப்படித்தான் கலர்ஸ் மேட்ச் பண்றாளோ” என்று வாய்விட்டே சொல்லிக்கொண்ட ஆர்விக், அவளிடமிருந்து எதுவும் தகவல் வந்திருக்கிறதா என அலைபேசியை எடுத்துப் பார்த்தான்.

அதிகாலையிலே அவளிடமிருந்து ஒற்றை குறுந்தகவல் வந்திருந்தது.

“கோவிலுக்கு கிளம்பியாச்சு ஆர்வி… இவன்ட் நல்லா பண்ணுங்க. நான் வீட்டுக்கு ரிட்டர்ன் ஆனதும் மெசேஜ் பண்றேன். இன்னைக்கு நைட்டே கிளம்பிடுவேன்” என சக்தியின் எண்ணிலிருந்து அனுப்பியிருந்தாள்.

அவள் சொல்லிய நேரமும் முடிந்திருக்க, இன்னமும் அவளிடமிருந்து எந்தவொரு தகவலும் இல்லை.

‘நாமளே கூப்பிட்டு பார்ப்போமா?’ என நினைத்த ஆர்விக், அவளின் எண்ணிற்கு அழைக்க அணைத்து வைக்கப்பட்டிருப்பதாக வந்தது.

“அம்மா மொபைலில் சிம் போட்டிருக்கேன் சொன்னாளே” என எண்ணிய ஆர்விக்,

“அங்க கார்டனில் புஃபே செக் பண்ண கேட்டரிங் மேனேஜர் கூப்பிடுறார் டா. பொண்ணுக்கு மேக் ஓவர் முடிஞ்சுது. நான் ப்ரீ ஷூட் பண்ணனும்” என்று வந்த பூபேஷ், மணமகள் அறைக்குச் செல்ல, அந்நேரத்திற்கு அன்விதாவின் நினைப்பை ஓரம் வைத்தவனாக ஆர்விக் எழுந்து மண்டபத்தின் தோட்டப்பகுதிக்குச் சென்றான்.

சில நிமிடங்களில் அரசியல் பிரமுகர்கள் வருகை தர ஆரம்பிக்க
நிற்க நேரமின்றி நேரம் நகர்ந்தது.

அனைத்து பிரிவுக்கும் வேலையாட்கள் இருப்பினும், அனைத்தும் சரியாக நடக்கிறதா என்று மேற்பார்வை செய்வதற்கே ஆண்கள் மூவரும் களைத்துப் போயினர்.

மணப்பெண்ணின் மொத்த அலங்காரமும் தான்யா தான் என்பதால், அவளுக்கு மணப்பெண் மேடை ஏறும் வரை தண்ணீர் குடிக்கக்கூட நேரம் கிடைக்கவில்லை.

அவளின் வேலை முடிய, டச்சப்பிற்கு பணியாளை பார்த்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு தங்களுக்கென ஒதுக்கிய அறையில் வந்தமர்ந்த தான்யாவின் முன்பு பழச்சாறு குவளையை நீட்டினான் ஆர்விக்.

“தேங்க்ஸ்… இப்போ இது ரொம்பவே தேவை” என்று வாங்கி ஒரே மூச்சாகக் குடித்து முடித்தாள்.

“உன்னால முடியலனா வேற யார்கிட்டவும் விட வேண்டியதுதான. இவ்ளோ டயர்ட் ஆகுற அளவுக்கா செய்வ?” என அக்கறையாகக் கடிந்து கொண்டான்.

“நம்ம பியூட்டி அசிஸ்டன்ட் பிரிப்பேர் பண்ணது வேற பிரைட். லாஸ்ட் மினிட்ல இன்னொன்னு வேணும் கேட்டு அவ்ளோ ஆர்க்யூ. என்ன பண்ண? நானே செய்ய வேண்டியதாப்போச்சு” என்ற தான்யா, “நம்ம ரூல்ல இன்னொன்னு ஆட் பண்ணனும் ஆர்வி. இனிமே ப்ரீ பிளான் பண்ண எதையும் ஆன் த ஸ்பாட் மாத்தினால் பண்ண முடியாது அப்படின்னு” என்றாள்.

“ஹ்ம்ம்… ஆட் பண்ணிடலாம்” என்ற ஆர்விக், “நீ ரெஸ்ட் எடுத்துக்கோ. மார்னிங் மேக்கப் வேற நீ பண்ணனும்” என்றான்.

“அன்வி இல்லாம ரொம்ப கஷ்டமா இருக்கு ஆர்வி… அவள் இருந்திருந்தா இவ்ளோ ஹெவி ஃபீல் ஆகியிருக்காது” என்ற தான்யா, “எங்க ரெஸ்ட் எடுக்க? கேக் டெக்கரேஷன் செக் பண்ணனும். சரியா பண்ணியிருக்காங்களா, சொதப்பியிருக்காங்களா தெரியல” என எழுந்தவளை பிடித்து அமர வைத்தான் ஆர்விக்.

“நீ தூங்கு. அதை நான் பார்த்துக்கிறேன்” என்று வெளியேறிய ஆர்விக், மீண்டும் ஒருமுறை அன்விதாவின் எண்ணுக்கு அழைத்து ஏமாந்தவனாக அடுத்தடுத்த வேலையில் மூழ்கிப்போனான்.

எல்லாம் முடித்து சற்று ஆசுவாசம் கொள்வதற்குள், விடியலில் திருமணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளில் தங்களை தொலைத்திருந்தனர் நால்வரும்.

“ஒரு சின்ன நிகழ்வைகூட தவறவிடக் கூடாது… வருபவர்கள் அனைவரும் முக்கியமானவர்கள்” என மந்திரி கூறியிருக்க, புகைப்படம் எடுப்பதையும் பணியாளர்கள் தவிர்த்து தாங்களே பார்த்துக் கொண்டனர்.

“எவ்ளோ நேரம்டா… டீ குடிச்சிட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு. எங்க வேலையெல்லாம் முடிஞ்சுது. இனி நானும், யாஷும் பார்த்துக்கிறோம்” என பூபேஷிடமிருந்த காமிராவை ஆர்விக் வாங்கினான்.

மாப்பிள்ளை மணமேடை வர, ஒவ்வொன்றும் அழகாய் ஆர்விக்கின் கையிலிருந்த காமிராவில் நிழலுருவமாக பதிந்தது.

“பொண்ணு வந்ததும் டான்ஸ் இருக்குடா… இந்த ரெட் கார்ப்பெட்டில் கிடக்கும் வயர்ஸ் அண்ட் ஃபிளவர்ஸ் டிஸ்போஸ் பண்ண சொல்லு” என யாஷிடம் கூறிய ஆர்விக் புகைப்படம் எடுப்பதில் கண்ணாக இருந்தான்.

சிறிது நேரத்தில் ஆர்விக்கின் அருகே வந்த மாப்பிள்ளையின் தங்கை, “சாங் பிளே பண்ண சொல்லுங்க” என்றாள்.

ஆர்விக் அவளின் முகத்தைக்கூட பார்க்கவில்லை… காமிராவின் லென்சில் விழிகள் வைத்தவனாக,

“யாஷ்” என்றிருந்தான்.

இந்த திருமணம் குறித்து இவர்களிடம் பேச்சு வார்த்தை துவங்கியது முதல், பையன் வீட்டு சார்பாக இவர்களிடம் அனைத்தும் கலந்து பேசியது அப்பெண் தான்.

அவள் இனியா.

ஆர்விக்கை பார்த்ததும் அவளுள் மெல்லிய ஈர்ப்பு. அவனுடன் சில நாட்கள் பயணிக்க நேர்ந்திட, அவனது அனைத்தும் அவளுக்கு பிடித்துப்போனது.

இதனால் இல்லாத காரணங்களை சொல்லிக்கொண்டு, இந்தவகை பூக்கள் வேண்டும், ஏற்கனவே தேர்வு செய்து வைத்த முடிவுகளில், “இப்படி மாற்றம் கொண்டு வரலாமா? அதை இப்படி செய்யலாமா? இதை இப்படி செய்தால் எப்படியிருக்கும்? எல்லாருக்கும் ஒரே மாதிரி தீம் ட்ரெஸ் நல்லா இருக்குமா?” என ஆயிரம் கேள்விகளை முன்னிறுத்தி தினமும் ஆர்விக்கின் அலுவலகம் வந்துவிடுவாள். ஆர்விக்கை பார்ப்பதற்கென்றே!

மற்றவர்களுக்கு அண்ணன் திருமணத்தில் அனைத்தும் சரியாக நடக்க வேண்டுமென அதிக மெனக்கெடல் கொள்கிறாள் எனும் தோற்றம்.

ஆனால் ஒரு பெண்ணின் அண்மை, அவளின் பார்வை எதற்காக என்பது, அவள் தன்னையே தொடர்வதில் ஒரு ஆணுக்குத் தெரியாமலாப்போகும்.

ஆர்விக் எளிதில் கண்டுகொண்டான்.

அது முதல் வெளிப்படையாக தன்னுடைய விலகலையும் காட்டிக்கொண்டிருக்கிறான்.

விலகளை காண்பிப்பதற்கு நேரடியாக இனியாவிடம் இதெல்லாம் வேண்டாமென சொல்லிவிடலாம்.

ஆனால், தானாகக் கேட்கப்போய்…

“என்னை உங்களுக்கு புரியுதுல. அப்போ நிச்சயம் ஒருநாள் பிடிக்கவும் செய்யும்” என்று நேரடியாகவேக் கூறிவிட்டாள் என்ன செய்வதென்றே மௌனித்து இருக்கின்றான்.

அவளாக வந்து சொல்லும்போது பார்த்துக்கொள்ளலாம் எனும் எண்ணம். அதற்காக அவளுடன் இயல்பாகவும் அவனில்லை. வார்த்தையாக சொல்லாத தன்னுடைய எண்ணத்தை விலகல் மூலம் அப்பட்டமாகக் காட்டிக் கொண்டிருக்கின்றான்.

அவனது இந்த விலகலே, அவனுக்கு தன்னை தன்னுடைய காதல் மனதை அவனுக்கு புரிகிறது என்று இனியா அகமகிழ்ந்து இன்னும் இன்னும் அவனை நெருங்கிட முயற்சித்துக் கொண்டிருக்கிறாள்.

“என்னடா எப்படி போயிட்டு இருக்கு?” என்று தான்யா வர,

“ஐ நீட் ரெஸ்ட் தான்யா” என காமிராவை அவளிடம் கொடுத்த ஆர்விக், “யாஷ் டிஜே கவுண்டரில் இருக்கான். டான்ஸ் பெர்ஃபார்மன்ஸ் முடிஞ்சதும் வர்றேன். எதுவும் ஹெல்ப் அப்படின்னா யாஷ் கிட்ட கேளு” என்றவனாக ஆர்விக் அங்கிருந்து சென்றுவிட்டான்.

அக்கணம் ஆர்விக்கை தேடிக்கொண்டு வந்த இனியா,

“ஆர்விக் எங்க?” என தான்யாவிடம் கேட்டாள்.

“எதுவும் சொல்லணுமா?” என தான்யா கேட்க,

“நத்திங்” என்றவளாக யாஷிடம் சென்ற இனியா, அங்கு ஆர்விக் எங்காவது தென்படுகின்றானா என பார்வையால் அலசினாள்.

தான்யா சில நிமிடங்கள் இனியாவை கவனித்தவளாக வேலையில் கண்ணானாள்.

வீடியோ காமராவை பிடித்திருந்த தினேஷ்,

“இந்தப்பொண்ணு நம்ம ஆர்விக் அண்ணாவையே சுத்தி வர மாதிரி தெரியுது மேடம்” என்றான்.

“அப்படியா?” என தான்யா தெரியாததைப் போன்று ஆச்சரியமாகக் கேட்க,

“ஆமா… நீங்க வேணுன்னா கவனிச்சுப் பாருங்க” என்றான் தினேஷ்.

“அதை கவனிக்கிறது இருக்கட்டும்” என்று தினேஷின் தலையில் தட்டியவனாக வந்த பூபேஷ், “காமிராவை என்கிட்ட கொடுத்திட்டு டைனிங் ஹாலில் போய் சரியா நடக்குதா பாரு” என்று தினேஷை அனுப்பியிருந்தான்.

பூபேஷ் அருகில் வரவும் தான்யாவிடம் மெல்லிய பதற்றம்.

முன்பெல்லாம் அவனருகில் இதுபோன்ற தடுமாற்ற உணர்வினை அவள் கொண்டதில்லை.

ஆனால், பூபேஷ் காதலை சொல்லியது முதல் அவனை நேர்கொண்டு பார்த்திடவே, அவளுக்கு அவஸ்தையாக இருந்தது.

“ரிலாக்ஸ் தான்யா!” என்ற பூபேஷ், “எனக்கு எப்போ ஓகே சொல்வ?” எனக் கேட்டு, தான்யா அதிர்வாய் மூச்சினை இழுத்துப் பிடித்துப் பார்க்க, “அப்படியெல்லாம் கேட்டு உன்னை டிஸ்டர்ப் பண்ணமாட்டேன். உனக்கு எப்போ தோணுதோ அப்போ சொல்லு. அதுவரை என்கிட்ட எப்பவும் போல இரு” என்றவனாக அவளின் தலையில் கை வைத்து காமிராவை நோக்கி திருப்பியிருந்தான்.

“ஆர்விக் எங்க யாஷ்?”

இனியா யாஷிடம் சென்று விசாரித்தாள்.

“அவன் அங்கதான போட்டோகிராபி பிளேசில் இருந்தான்” என்று அங்கிருந்தே எட்டிப்பார்த்த யாஷ், ஆர்விக் கண்ணில் படாததும், “எங்கன்னு தெரியல” என்றான்.

“உங்க ஃப்ரெண்ட் கிட்ட சொல்லி வைங்க” என்று இனியா உதடு சுளிக்க, யாஷ் என்னவென்று புரியாது பார்த்தான்.

“எத்தனை நாளைக்கு ஓடி ஒளிய முடியும்?” என்றாள்.

“நீங்க சொல்றது எனக்கு புரியல?”

“லவ் பண்ணியிருக்கீங்களா?”

“இல்லை!” யாஷ் உதட்டை விரித்து இல்லையென தலையசைத்தான்.

“அப்போ உங்களுக்கு புரியாது” என்ற இனியா, “நீங்க பாட்டை போடுங்க” என்று சென்றிருந்தாள்.

“என்னடா நின்னுட்டே இருக்க? சாங் பிளே பண்ண சொல்லி கத்துறாங்க” என்று யாஷின் அருகில் வந்திருந்தான் ஆர்விக்.

“ஹான்” என்ற யாஷ், பாடலை ஒலிக்கச் செய்திட, இனியா தன்னுடைய தோழிகளுடன் நடனம் ஆடியவாறு மணப்பெண்ணை மேடைக்கு அழைத்து வந்தாள்.

“டான்ஸ் நல்லாயிருக்கு” என்ற யாஷ், “இந்த இனியா உன்னைத் தேடினாள் மச்சான். ஆனா புரியாத மாதிரியே என்னவோ சொன்னாள்” என்றான்.

“அடுத்தவங்களை உனக்கு ஏன் புரியணும். வேலையை சரியா செய்” என்றான் ஆர்விக்.

மாப்பிள்ளை பையன் மேடையிலிருந்து எழவே, அவனுக்கான பாடலை ஒலிக்க விட்டு, “நல்ல டைமிங் கீப் அப் பண்ணேன்ல” என்றான் யாஷ்.

நடனமெல்லாம் முடிந்து மாப்பிள்ளையும், பெண்ணும் மணமேடை சென்று அமர,

“நான் கிளம்புறேன். நீங்க பார்த்துக்கோங்க” என்றான் ஆர்விக்.

“எங்கடா போற… வந்திருக்கிறதெல்லாம் பெரிய பார்டிஸ். நீயில்லாம எப்படி மேனேஜ் பண்றது” என்று தடுத்தான் யாஷ்.

“ம்ப்ச்” என்று நெற்றியைத் தேய்த்த ஆர்விக், “கல்யாணமே முடியப் போகுதுடா! கொஞ்சநேரம் நாயில்லனா மேனேஜ் பண்ண முடியாதா உன்னால?” என்று கடுகடுத்தான்.

“இப்போ எதுக்கு நீ இவ்ளோ டென்ஷன் ஆகற?”

“நேத்து காலையில மெசேஜ் பண்ணதுடா… இப்போ வரை ஒரு மெசேஜ், கால் எதுவுமில்ல” என்ற ஆர்விக்கின் முகத்தில் அன்விதாவுக்கான தேடல் குடிகொண்டிருந்தது.

“ரொம்ப ஓவரா போற ஆர்வி!”

“இது சொன்னா புரியாதுடா உனக்கு.”

“எங்களுக்கும் தான் அவள் ஃபிரண்ட்… ஆனா நாங்க இப்படியா ரியாக்ட் பண்ணிட்டு இருக்கோம்?” யாஷிடம் அத்தனை காட்டம்.

“அன்வி இடத்தில் இப்போ நீயிருந்தாலும் என்னோட ரியாக்ஷன் இதுதான். அவளை நான் லவ் பண்றேங்கிறதை தாண்டி, இது அவள் மேல எனக்கிருக்கும் அன்பு, அக்கறை. உன்மேல தான்யா மேலவும் இந்த அன்பு அக்கறை எனக்கு இருக்கு. எப்பவுமே காதலோடதான் அன்வியை பார்ப்பேன்னு என்னை தப்பா ஜட்ஜ் பண்ணிட்டு இருக்க நீ” என்று சத்தமின்றி அதிக அழுத்தத்துடன் கூறிய ஆர்விக்…

“என்கிட்ட அந்த கனவு வரது மட்டும் தான் பிரச்சினை. அதுக்காக இன்னொருத்தரை லவ் பண்ற பொண்ணை எப்பவுமே லவ்வோடவேதான் பார்ப்பேன்னு நீ நினைக்கிறது தப்பு மச்சான். ஆர்விக் அப்படிப்பட்ட ஆளில்லை. அன்வி என்னை லவ் பண்ணனும்னு ஆரம்பத்தில் ரொம்பவே அழுத்தமா நினைச்சிட்டேன் போல… அதான் இப்பவும் அவளா எனக்கு லவ் சொல்ற மாதிரி கனவு வருது. அஃப்கோர்ஸ் எனக்கும் அந்த கனவு பிடிக்குது… அதுக்காக அவளை வேற விதமா நினைக்க முடியாதுடா என்னால. லவ் இருக்கு… அது எனக்கே எனக்கு மட்டுமா எனக்குள்ள மட்டுமே இருக்கு” என்றான். எப்படியாவது தன்னை நண்பனுக்கு புரிய வைத்துவிட வேண்டுமென்ற எண்ணம் அவனது வார்த்தைகளில் பிரதிபலித்தது.

யாஷுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

“சக்தி அண்ணாவுக்கு ட்ரை பண்ண வேண்டியது தானடா! இதுக்கெதுக்கு இவ்வளவு ஃபீல் பண்ற” என்றான் யாஷ்.

“திருவுக்கு கால் பண்ணேன்… ரெஸ்பான்ஸ் இல்லை” என்ற ஆர்விக், “ஏர்லி மார்னிங் வந்துடுவேன் சொன்னாடா!” என்றான்.

இரவு முழுக்க அன்விதாவுக்கு முயற்சி செய்த ஆர்விக், காலை தான் சக்திக்கு அழைத்திருந்தான். ஒருமுறைக்கு மேல் மீண்டும் எப்படி அழைப்பதென தெரியாது இந்த நொடி வரை அன்விதாவை நினைத்து அலைப்புற்றுக் கொண்டிருக்கிறான்.

“நைட்டு கிளம்பாம கூட இருந்திருக்கலாம்ல” என்ற யாஷ், “இப்போ இங்க என்னன்னு பாருடா” என்றான்.

“எதுலயுமே கான்சன்ட்ரேட் பண்ண முடியலடா” என்று கைகளை இடை குற்றியவனாக, உதட்டினை குவித்து ஊதினான் ஆர்விக்.

“சக்திண்ணா மேரேஜ் விஷயமா பேமிலில எதுவும் பிரச்சினை ஆகிருக்கும்டா. அதுதான் அன்வி சொன்னாளே! நீ ஃப்ரீயா இரு. நார்மல் ஆனதும் அவளே கால் பண்ணுவா” என்ற யாஷ், “சும்மா இருந்தா இப்படித்தான் கவலைப்பட நிறையத் தோணும். பேக்கேஜ் அமௌன்ட் இல்லாம அடிஷ்ணல் பேமெண்ட் கால்குலேட் பண்ணு. மேரேஜ் முடிஞ்சதும் பேக்கப் பண்ணிடலாம்” என்றான்.

“ஹ்ம்ம்” என நகர்ந்த ஆர்விக் மீண்டும் ஒருமுறை சக்திக்கு முயற்சித்தவனாக மண்டபத்திற்கு வெளியில் செல்ல, அவனின் பின்னாலே வந்திருந்தாள் இனியா.

இம்முறை அலைபேசியை எடுத்த சக்தி…

“ஹாய் ஆர்வி” என்றான். வழக்கமான இறுகிய குரல்.

“அன்வி…?” என்று ஆர்விக் கேள்வியாக கேட்க,

“நைட் கிளம்பிடுவாள்” என பதில் வழங்கிய ஆர்விக், “நான் வெளியில் இருக்கேன் ஆர்வி” என வைத்திருந்தான்.

அன்விதா வீட்டில் இருக்கின்றாள் என்பதே, இரவு முழுக்க கொண்டிருந்த தவிப்பிற்கு ஆசுவாசமாக இருந்தது.

மண்டபத்திற்குள் செல்ல ஆர்விக் திரும்பிட, இனியா நின்றிருந்தாள்.

“என்ன?”

“உங்ககிட்ட பேசணும். எப்போ பேசலாம்?” என்றாள்.

“உங்ககிட்ட பேச எனக்கு ஒண்ணுமில்லைங்க” என்ற ஆர்விக் இனியாவைத் தாண்டிக்கொண்டு உள் சென்றான்.

தான்யா எதிர்ப்பட,

“இதுல பில்லிங் டீடெயில்ஸ் எல்லாம் இருக்கு. பார்த்துக்கோ” என தன்னுடைய மேக் புக்கை கொடுத்தவன் கிளம்பிவிட்டான்.

அடுத்த சில மணி நேரங்களில் அனைத்தும் முடிய, மந்திரியின் காரியதரிசி, நிகழ்வுக்கு ஆகிய மொத்த செலவு குறித்து கணக்கு கேட்க… யாஷ் ஆர்விக்கை தேடினான்.

“ரொம்ப நேரமா அவனை ஆளே காணோமே! எங்கடா?” என்று பூபேஷிடம் வினவ, அவனும் “தெரியவில்லை” என்றான்.

“எனக்கு பயந்து தான் உங்க ஃப்ரெண்ட் ஓடியிருப்பார்” என்று இனியா வர,

“உங்களுக்கு ஏன் அவன் பயப்படணும்?” என்றான் பூபேஷ்.

காரியதரிசியிடம், “நீங்க போங்க அங்கில்” என்று அனுப்பி வைத்த இனியா, “பயந்து தான் ஆகணும்” என யாஷ் மற்றும் பூபேஷ் பார்த்துக் கூறினாள்.

“புரியல” என்ற யாஷ், இனியா ஏதோ சொல்ல வாய் திறக்கவும்,

“இவன் லவ் பண்றான். இவனுக்கு புரியும். சொல்லுங்க” என்று இனியாவின் முந்தைய பேச்சினை வைத்துக் கூறினான்.

அதில் சத்தமின்றி சிரித்த இனியா,

“இப்போ சொல்றதுக்கில்லை” என்றாள்.

“என்னது?” என்று பூபேஷ் கேட்க,

“என்னோட லவ்” என்ற இனியா, “ஆர்விக் யாரையும் லவ் பண்றாரா?” எனக் கேட்டாள்.

“நீங்க ஏன் இதை கேட்கிறீங்க?” என யாஷ் கேட்க, “அவன் அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டான்” என்றிருந்தான் பூபேஷ்.

யாஷ் பூபேஷை முறைத்திட,

“சந்தோஷம்” என்றாள் இனியா.

“உங்களுக்கென்ன சந்தோஷம்?” யாஷ் நெற்றி சுருக்கினான். யோசனையாக.

இனியா பதில் சொல்லாது சிரித்திட,

“என்னங்கடா இங்க நின்னு வெட்டிக்கதை பேசிட்டு இருக்கீங்க? செட்டில்மென்ட் வொர்க் எல்லாம் யார் பாக்குறது” என்று அருகில் வந்த தான்யா,

“இந்தாடா மொத்தமா இவ்ளோ ஆகியிருக்கு. ஒரு ரூபாய் கூட விடாம வாங்கிடு. எல்லாம் மக்கள்கிட்ட கொள்ளையடிச்ச பணம் தான” என மெல்லிய ஒலியில் கூறினாள்.

“பார்த்து பேசு தான்யா” என யாஷ் அவளின் தலையில் தட்ட,

இனியா தொண்டைய செருமி தன்னுடைய இருப்பைக் காண்பித்தாள்.

“ஹாய் நீங்க எப்போ வந்தீங்க” என்று அனைத்துப் பற்களையும் காட்டி அசடு வழிந்த தான்யா, “இவங்க இருக்கிறதையே கவனிக்கலடா” என்று யாஷின் பக்கம் சரிந்து கிசுகிசுத்தாள்.

“ஏதாவது சொல்லி சமாளி” என்று யாஷும் தங்களை முறைத்துக் கொண்டிருந்த இனியாவை பார்த்து சிரித்து வைத்தான்.

இனியா முறைப்பு அதிகமாக, பின்னால் சற்று தள்ளி நின்றிருந்த காவலர்களை அர்த்தமா ஏறிட்டாள்.

“நீங்க ஆர்வியை லவ் பண்றீங்க… ரைட்?” என்றிருந்தாள் தான்யா.

“அடி பாதகத்தி” என்று யாஷும், பூபேஷும் ஒரு சேர நெஞ்சில் கை வைத்திருந்தனர்.

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 32

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
17
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்