
ரகசியம் – 61
காலை எழுந்ததும் குளித்து கிளம்பிக் கொண்டிருந்தாள் விழி. அவளை ஏற இறங்க பார்த்த இனியாவோ,
“என்ன டி சண்டே அதுவுமா காலைலயே குளிச்சு எங்கேயோ கிளம்பிட்டு இருக்க.. எங்க போற” என்று கேட்க விழியோ,
‘ஆத்தி இவகிட்ட இப்போ என்ன சொல்றது.. பேசாம இவகிட்ட விஷயத்தை ஓப்பன் பண்ணிருவோமா.. இவ்ளோ நாள் இவ இளா கிட்ட உளறிடுவாளோன்னு பயந்து தான் சொல்லாம இருந்தோம்.. இன்னைக்கு நாமளே இளாகிட்ட ப்ரொபோஸ் பண்ண போறோம்.. இப்போ இவகிட்ட சொல்றதுனால பிரச்சனை எதுவும் வராது.. இவளும் நமக்கு ஐடியா ஏதாச்சும் கொடுப்பா..’ என்று மனதினுள் நினைத்துக்கொண்டிருக்க,
“அடியே.. உன்ன தான்.. நான் பாட்டுக்கு கேள்வி கேட்டுட்டு இருக்கேன்.. நீ என்னடான்னா ரொம்ப எதையோ யோசிக்கிற” என்று அவளை உலுக்கி கேட்க விழியோ அவளின் கரம் பற்றி அழைத்து வந்து அமரவைத்து தானும் அவள் முன்பு அமர்ந்து கொண்டாள். பின்,
“அக்கா..” என்றழைக்க இனியாவிற்கு புரையேறியது. லொக்கு லொக்கென இருமியவள் வெளியில் வேகமாக செல்ல எத்தனிக்க அவளை மீண்டும் கரம் பற்றி அமரவைத்தவள்,
“எங்க போறக்கா..” என்று கேட்க அவளோ,
“அதுவா.. அதிசயமா அக்கானுலான் கூப்புடுறியே.. அதான் மழை வந்துருமேன்னு மாடில காயவைச்ச துணியெல்லாம் எடுக்க போறேன்” என்று கூறியவள் அவளையே புரியாமல் பார்க்க அவளோ,
“என்னக்கா நீ.. நான் எவ்ளோ பாசமா கூப்புடுறேன்.. நீ கிண்டல் பண்ற” என்று சினுங்க,
“அடியே.. உன் பாசம் பாயாசமெல்லாம் எங்களுக்கு தெரியாத.. நீ பொறந்ததுல இருந்து இப்போ தான் முதல் தடவ என்னை அக்கான்னு கூப்பிட்டுருக்க.. அப்போ எனக்கு ஷாக் ஆக தானே செய்யும்.. சரி அதை விடு.. ஏதோ பெரிய குண்ட தூக்கி போட போறன்னு நினைக்குறேன்.. என்னன்னு சொல்லு”
“அது வந்து… நான் ஒருத்தங்களை லவ் பண்றேன்” என்று திக்கித்திணறி கூற இனியாவோ,
“அடிப்பாவி.. எனக்கு முந்தியே உன்மேல சந்தேகம் டி.. இருந்தாலும் அதைப் பெருசா எடுத்துக்காம விட்டுட்டேன்.. நெனச்ச மாதிரியே வந்து சொல்லுறா பாரு”
“ஈஈஈ.. நீ தான் கா எனக்கு ஏதாச்சும் ஐடியா கொடுக்கணும்.. ப்ளீஸ்”
“ஓ இதுக்கு தான் இந்த மரியாதையா.. என்னடா சுண்டலி ஸ்வட்டரோட சுத்துதேன்னு பார்த்தேன்.. சரி யாரு அந்த பையன்.. கூட படிக்குற பையனா.. அவன் வீட்டுல அவன் பேசிறுவான் தான” என்று அவள் போக்கில் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக,
“அக்கா அக்கா.. நிறுத்து.. நான் இன்னும் அந்த பையன் கிட்ட என் லவ்வ கூட சொல்லல” என்று பாவமாக முழிக்க,
“அட பிசினாரி.. ஒன் சைடா அப்போ.. இதுக்கு தான் இவ்ளோ அலப்பறையா” என்று இனியா தலையிலடிக்க,
“என்ன நீ ஒன் சைடான்னு இவ்ளோ சாதாரணமா கேட்குற.. அதெல்லாம் என் கஷ்டம் எனக்கு தான் தெரியும்.. மூணரை வருஷமா அவங்களுக்கு தெரியாம மறைக்கிறதுக்குள்ள நான் பட்ட பாடு எனக்கு தான் தெரியும்”
“எதேய்.. மூணரை வருஷமாவா.. என்ன டி சொல்ற.. நானே அமுதுவ மூணு வருஷமா தான லவ் பண்றேன்.. அப்போ எங்க லவ்க்கு முன்னாடியே நீ லவ் பண்றியா.. அப்போ கண்டிப்பா காலேஜ்ல கூட படிச்ச பையனா இருக்க வாய்ப்பில்ல.. ஸ்கூலும் நீ கேர்ள்ஸ் ஸ்கூல் தான்.. பின்ன யாரைத் தான் டி லவ் பண்ற”
“அது வந்து.. அது வந்து..” என்று கால் பெருவிரலால் கோலம் போட,
“அடச்சீ.. சொல்லி தொல”
“இளாவ தான் லவ் பண்றேன்” என்றவள் வெட்கப்பட்டு சிரிக்க,
“மாறனையா” என்ற இனியாவின் முகமோ புன்னகையால் மலர்ந்தது.
“ஆமா டி.. நான் அவங்களை சந்திச்ச கொஞ்ச நாள்ல இருந்தே லவ் பண்ண ஆரம்பிச்சுட்டேன்.. அவங்களும் என்கிட்ட நல்ல பேசுறாங்க.. அக்கறையா நடந்துக்குறாங்க.. ஆனா அதுக்கு பேரு காதலா இல்ல ஃபிரண்டோட தங்கச்சின்னு பண்றங்களான்னு தெரியல..” என்று கூறியவள் நேற்று தோழி கூறிய அறிவுரை வரை அனைத்தையும் இனியாவிடம் கூறினாள்.
“அட பக்கி.. ஏன் டி இத்தனை நாளா என்கிட்டே சொல்லல.. அவனை விட உனக்கு நல்ல பையன் கண்டிப்பா கிடைக்கமாட்டான்.. நான் என்ன வேணாம்னா சொல்ல போறேன்… நாங்க காலேஜ்ல படிக்கும் போதே நீ என்கிட்ட சொல்லிருந்தா.. ஏதாச்சும் உனக்கு ஹெல்ப் பண்ணிருப்பேன்.. இப்போ வந்து சொல்ற”
“எனக்கு சொல்ல பயம்.. அவரும் தப்பா ஏதும் எடுத்துக்க கூடாது.. உன்கிட்ட சொன்னா நீ ஏதாச்சும் உளரிட கூடாதுன்னு தான் சொல்லல..”
“அடிப்பாவி.. இப்போயாச்சு சொன்னியே.. சரி இப்போ மட்டும் மேடம் எப்படி என்கிட்டே சொன்னிங்க.. இனிமே நான் உளறமாட்டேனாக்கும்”
“அது.. இன்னைக்கு நான் இளாக்கிட்ட என் காதலை சொல்ல போறேன்.. அதான் உன்கிட்டயும் சொல்லிட்டேன்”
“அடிப்பாவி.. உன்ன போய் சின்ன பொண்ணுன்னு தப்பா எடை போட்டேனே டி.. எல்லாம் பிளான் பண்ணி தான் பண்ற என்ன.. சரி எப்படி சொல்ல போற.. வெளிய வர சொல்லிருக்கியா.. நான் ஏதும் ஹெல்ப் பண்ணனுமா” என்று கேட்க அவளின் கன்னத்தில் முத்தமிட்ட விழியோ,
“அக்கான்னா உன்ன மாதிரி தான் டி இருக்கணும்.. ஓரே ஒரு ஹெல்ப் மட்டும் பண்ணு.. நேரா அவங்க வீட்டுக்கே போய் அவர்கிட்ட ப்ரொப்போஸ் பண்ணலாம்னு இருக்கேன்.. என்கூட இப்போ அவங்க வீட்டுக்கு மட்டும் வா..” என்றிட,
“உலகத்துலயே லவ் பண்ற பையன் வீட்டுக்கே போய் ப்ரொபோஸ் பண்ற பொண்ண இப்போ தான் டி கேள்விப்படுறேன்.. ஆனாலும் உனக்கு தைரியம் ஜாஸ்தி தான்.. சரி தங்கச்சியா வேற போய்ட்ட வரேன் நானும்.. ஆனா வந்தா எனக்கென்ன வாங்கி தருவ”
“அடிப்பாவி.. இப்போ தான டி உன்ன பெருமையா சொன்னேன்.. அதுக்குள்ள தங்கச்சிகிட்ட லஞ்சம் கேக்குற”
“அதுவேற டிபார்ட்மென்ட் இதுவேற டிபார்ட்மென்ட்”
“அது சரி.. இளா என் லவ்வுக்கு ஓகே மட்டும் சொல்லட்டும்.. பெரிய ட்ரீட்டா வச்சு அசத்திடுறேன்” என்க பிறகு இருவரும் உற்சாகமாய் கிளம்பி சென்றனர். செல்லும் வழியில் கோவில் சென்றுவிட்டு மனதார வேண்டிவிட்டு மாறனின் வீடு நோக்கி சென்றனர் சகோதரிகள் இருவரும்.
வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு வீட்டுனுள்ளே செல்ல எத்தனித்த நேரம்,
“நாம நெனச்ச மாதிரியே அப்போ மாறன் கல்யாணம் நடக்க வாய்ப்பு இருக்கு தானங்க” என்ற விஜயாவின் கூற்று காதில் விழ இனியாவை இழுத்துக் கொண்டு அங்கு மறைவாக நின்று கொண்டாள் விழி. இனியாவும் ஒளிந்து நிற்க அவர்கள் பேசுவதை இருவரும் கேட்க தொடங்கினர்.
“என்ன விஜி சொல்ற.. அதான் அன்னைக்கே பசங்க அவங்க முடிவை சொல்லிட்டாங்கன்னு நீ தான் அவங்களுக்கு சாதகமா பேசுன இப்போ நீயே மாத்தி பேசுற” என்று சத்யன் புரியாமல் கேட்க இனியாவும் விழியும் அவர்கள் பேசுவது புரியாமல் முழித்தனர்.
“ஆமாங்க சொன்னேன் தான்.. ஆனா அப்போ மது மதுரன லவ் பண்ணிட்டு இருந்தா.. இப்போ தான் மதுரனும் மதுவும் பிரிஞ்சுட்டாங்களே.. மதுரன் திரும்பி வருவான்னு எனக்கு தோணல.. மதுவும் அவனை நெனச்சு அடிக்கடி ஃபீல் பண்றா.. கண்டிப்பா மாறனுக்கு அது கஷ்டமா தான் இருக்கும்.. எப்படியாச்சு அவளை சந்தோஷமா வச்சுக்கணும்னு தான யோசிப்பான்.. அவன் மதுவை கல்யாணம் பண்ணிக்கிட்டா அவளை புரிஞ்சு நடந்து சந்தோசமா பார்த்துப்பான்னு அவனுக்கே தெரியும்.. அதனால் கண்டிப்பா மாறன் ஓகே சொல்ல வாய்ப்பு இருக்கு..” என்று பெரிய குண்டைத் தூக்கி விழியின் தலையில் போட அதனை சற்றும் எதிர்பார்க்காத விழியின் கண்களில் கண்ணீர் பெருக இனியாவும் தன் தங்கையின் நிலையை எண்ணி வருந்தினாள். அதற்கு மேல் அங்கு நிற்க முடியாத விழி,
“இனியா வா போலாம்” என்று கூறியபடி விறுவிறுவென்று வண்டி நிற்கும் இடத்திற்கு செல்ல அவளின் பின்னே வந்த இனியாவோ,
“ஹே விழி.. இரு டி.. கண்டிப்பா மாறன் இதுக்கு ஓகே சொல்லமாட்டான்.. அவனும் மதுவும் அப்படியா பழகியிருக்காங்க.. உனக்கு மாறன பத்தி தெரியாதா” என்று கேட்க,
“இளாவைப் பத்தி எனக்கு நல்லாவே தெரியும் டி.. ஆனா இவ்ளோ நாள் இல்லாம திடிர்னு நேத்து ஏன் என் ஃபிரண்ட் என்னை ப்ரொப்போஸ் பண்ண சொல்லி அட்வைஸ் பண்ணனும்.. நான் ஏன் இன்னைக்கு அவங்க வீட்டுக்கே வந்து ப்ரொபோஸ் பண்ணனும்னு பிளான் போடணும்.. அவங்க அப்பா அம்மா ஏன் கரெக்ட்டா நாம வரும் போது இதுபத்தி பேசணும்.. நாம ஏன் அதை கேட்கணும்.. இதெல்லாம் காரணமில்லாம நடக்குறமாதிரி எனக்கு தெரியல டி” என்று அழுதபடி கூற,
“ஹே லூசு.. அப்படியெல்லாம் எதுவும் இல்ல.. எப்போதுமே நாம முதல்ல எடுக்குற முடிவு தான் சரியா இருக்கும்.. நீ ப்ரொபோஸ் பண்ணி அவன் ஓகே சொல்லிட்டா உனக்கு ஹேப்பி தான.. அதுக்கும் வாய்ப்பு இருக்குல்ல.. வா டி உள்ள போலாம்”
“இல்ல டி.. எனக்கு நம்பிக்கை குறைஞ்சுடுச்சு.. நான் என் காதல சொல்ல போறது இல்ல.. இளா எனக்கு தான்னு இருந்தா ஒன்னு அவங்களுக்கும் என்மேல காதல் இருந்து என்கிட்டே சொல்லட்டும்.. இல்லனா விதியே எங்களை சேர்த்து வைக்கட்டும்..” என்று விரக்தியாய் இமைவிழி கூற, “இல்ல டி.. நான் என்ன சொல்ல வரேன்னா..” என்று மேலும் இனியா பேச வர அவளைத் தடுத்த விழி,
“இல்ல டி.. ப்ளீஸ்.. இதுபத்தி இனிமே பேச வேணாம்.. நான் இளாவை லவ் பன்றேன்னு எக்காரணத்துக் கொண்டும் நீ யார்கிட்டயும் சொல்ல கூடாது” என்றவள் அவளின் கரத்தினை எடுத்து தன் தலையில் வைத்துவிட்டு,
“இது என்மேல சத்தியம்.. வா போலாம்” என்க இனியாவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. பிறகு வண்டியைக் கிளப்ப இருவரும் வீடு வந்து சேர விழியோ அறையினுள் அழுதபடி சென்று அடைந்து கொண்டாள். தன் தங்கையின் நிலையை எண்ணி இனியா மிகவும் வருந்த,
‘கடவுளே.. நீங்கதான் ஏதாச்சும் பண்ணனும்’ என்று தங்கைக்காக பிராத்தித்துக் கொண்டாள். அப்பொழுது அறிவு அவளுக்கு அழைப்பு விடுக்க அதனை ஏற்று காதில் வைத்தவள், “சொல்லு அமுது” என்றாள்.
“என்னாச்சு அன்பு.. ஏன் நீ சோகமா பேசுற” என்று அவளின் குரலை வைத்து புரிந்து கொண்டு கேட்க அவளோ,
‘அட கடவுளே.. கண்டுபிடிச்ட்டானே.. இவன்கிட்ட சொன்னா அவ என்னை கொன்னே போட்ருவா.. சரி சமாளிப்போம்’ என்று நினைத்தவள்,
“அதெல்லாம் ஒண்ணுமில்ல டா.. திடிர்னு அம்மா நியாபகம் வந்துருச்சு.. வேற ஒன்னுமில்ல”என்று சமாளிக்க அதற்கு மேல் அறிவமுதன் அது குறித்து அவளிடம் கேட்கவில்லை.
ரகசியம் – 62
“சரி அதை விடு.. நீ என்ன காலைலயே கால் பண்ணிருக்க என்ன விஷயம்.. எப்போதும் சார் நைட் தான கால் பண்ணுவீங்க”
“ஆமா டி.. ஒரு ஷார்ட் பிலிம் ஷூட் விஷயமா பாண்டிச்சேரி வரைக்கும் போறேன்.. வர லேட் நைட் ஆகிடும்.. அதான் இப்போவே பேசிருவோமேன்னு கால் பண்ணேன்..”
“எது அன்னைக்கு ஏதோ பெருசா ஸ்க்ரிப்ட் பிடிக்கலன்னு சொல்லிட்டு இருந்தியே அந்த ஷார்ட் பிலிமா”
“ஹான் ஆமா அன்பு.. அதே தான்”
“வேணாம்னு சொல்லிட்டு இப்போ ஏன் போற”
“தெரியல அன்பு.. வேணாம்னு தான் நெனச்சேன்.. ஆனா திடிர்னு பண்ணலாம்னு தோணுச்சு.. ஏன் எதுக்குன்னு தெரில.. சரி போவோம்னு நானும் கிளம்பிட்டேன்”
“அப்படியா.. சரி அமுது.. பார்த்து போய்ட்டுவா.. அம்மா தனியா இருப்பாங்கல.. நான் வேணா துணைக்கு போய் இருக்கட்டுமா” என்று அவள் கேட்க தன்னவள் தன் அன்னைமீது வைத்திருக்கும் அன்பை எண்ணி நெகிழ்ந்தவன்,
“இல்ல அன்பு.. நீயே இன்னைக்கு தான் கொஞ்சம் ஃபிரீயா இருக்க.. நீ ரெஸ்ட் எடு.. ஏதாவது எமர்ஜென்சினா உனக்கு கால் பண்ண சொல்லிருக்கேன்.. கால் பண்ணா மட்டும் போய்க்கோ..” என்க அவளும்,
“சரி டா.. நீ போயிட்டு வா” என்று தன்னவனிடம் இருந்து இனியா விடைபெற அவனும் அழைப்பைத் துண்டித்துவிட்டு பாண்டிச்சேரிக்கு செல்லலானான். அங்கு சென்ற பிறகு தான் தெரிந்தது. இன்று படப்பிடிப்பு எதுவும் நிகழவில்லை என்று. இயக்குனருக்கு திடிரென்று உடல்நலம் சரியில்லாமல் போக மற்றொரு நாள் ஒத்திவைத்தனர். அதனை படப்பிடிப்பு குழுவில் இருக்கும் ஒருவர் அறிவிடம் கூற அவனோ,
“சார்.. ஒரு கால் பண்ணி என்கிட்டே சொல்லிருந்தா இவ்ளோ தூரம் டிராவல் பண்ணிருக்க அவசியம் இருந்துருக்காதுல..”
“உங்களுக்கு கால் பண்ணேன்.. ஆனா ரீச் ஆகல..” என்று அவர் கூற, “அப்படியா.. சரி விடுங்க.. இப்போ எப்படி இருக்காரு அவரு” என்று விசாரித்துவிட்டு வந்தான்.
‘சரி என்னவோ வந்ததும் வந்துட்டோம்.. நம்மலும் பாண்டிச்சேரி இதுவரை வந்தது இல்ல.. சுத்தி பார்த்துட்டு போவோம்’ என்று நினைத்தவன் ஊரை சுற்றி பார்க்க கிளம்பினான். பல இடங்களுக்கு சென்றுவிட்டு ஊருக்கு கிளம்பலாம் என்று நினைத்து பேருந்து நிலையம் செல்ல ஆட்டோவில் ஏறினான். ஆட்டோ ஓட்டுனரோ அவனிடம் பேச்சு கொடுக்க தொடங்கினார்.
“என்ன தம்பி ஊருக்கு புதுசா”
“ஆமாண்ணா”
“எங்க எல்லாம் சுத்தி பார்த்தீங்க” என்று கேட்க அவனும் தான் சென்று வந்த இடத்தை எல்லாம் கூற அவரோ,
“ஆரோவில் பீச் போலையா நீங்க”
“அப்படி ஒரு பீச் இருக்காண்ணா”
“அட என்ன தம்பி நீங்க.. ரொம்ப அருமையான பீச் அது.. அதுவும் சூரியன் உதயமாகுற காட்சி அங்க அருமையா இருக்கும்.. இங்க வந்த யாரும் அதை மிஸ் பண்ணவே மாட்டாங்க.. இவ்ளோ தூரம் வந்துட்டு அதைப் பார்க்காம போனா எப்படி.. இன்னைக்கு தங்கி நாளைக்கு காலைல சூரிய உதயத்தை அங்க பார்த்துட்டு போங்க தம்பி.. மனசுக்கு அமைதியா இருக்கும்.. என் உயிர் நண்பன் ஒருத்தன் வெளியூர்ல இருக்கான்.. அவனை அங்க கூட்டிட்டு போனேன் ஒருநாள்.. ரொம்ப அருமையா இருக்குன்னு சொன்னான்” என்று கூற ஏனோ அவர் உயிர் நண்பன் என்று கூறியதும் மதுரனின் நினைவுகள் அவனை ஆட்கொண்டன.
நண்பனை காணாமல் அவனிடம் பேசாமல் அறிவு படும் அவஸ்தை அவன் அறிந்த ஒன்றே.. அவனை நினைத்து இத்தனை நாட்களாக அறிவின் மனம் அமைதியற்று கிடப்பது என்னவோ உண்மைதான். அங்கு சென்றால் அமைதி கிடைக்கும் என்று ஆட்டோ ஓட்டுநர் கூறவும் அன்று தங்கி மறுநாள் காலை சூரிய உதயத்தைப் பார்த்துவிட்டே கிளம்பலாம் என்று முடிவு செய்தவன் இன்று ஒரு இரவு தன் அன்னையுடன் தாங்கிக்கொள்ளும்படி இனியாவிற்கு செய்தி அனுப்பிவிட்டு இரவு ஹோட்டலில் தங்கி மறுநாள் ஆரோவில் கடற்கரைக்கு சென்றான்.
அலைகள் மெதுவாக அதன் போக்கில் ஆட குளிர்ந்த கடற்கரை காற்று மேனியைத் தழுவ கதிரவன் கடலுக்குள் ஒளித்துவைத்திருந்த தன கதிர்களை மெல்ல விரித்தபடி மேலெழும்பி வந்து கொண்டிருந்த காட்சி காண்பதற்கு மிகவும் ரம்மியமாக இருந்தது. இயற்கை எப்பொழுதுமே பேரழகு தானே.. அதனைக் கண்டவனின் மனதில்,
உப்பு கடலோடு மேகம்
உற்பத்தி ஆனாலும்
உப்பு தண்ணீரை மேகம்
ஒரு போதும் சிந்தாது
மலையில் விழுந்தாலும்
சூரியன் மறித்து போவதில்லை
நிலவுக்கு ஒளியூட்டி தன்னை
நீட்டித்துக் கொள்கிறதே…
எனும் வரிகள் ஓட அதனை அசைபோட்டவாறே ரசித்தவனின் மனதில் நிஜமாகவே பேரமைதி குடிக்கொண்டது.
ஆனால் அவ்வமைதி புயலுக்கு முன் வரும் அமைதி என்றறியாதவன் சுற்றி முற்றி வேடிக்கைப் பார்த்தான். அப்பொழுது அவன் கண்ணில் ஒருவன் தென்பட புருவம் சுருக்கி பார்த்தான் அவனை. ஆனால் சற்று அடையாளம் கண்டுகொள்ள சிரமமாக இருக்க அருகில் சென்று பார்க்கலாம் என்று எண்ணி அருகில் செல்ல அதற்குள் அறிவைப் பார்த்து திகைத்த அந்த ஒருவன் வேகமாக கூட்டத்தினுள் மறைந்து செல்ல முயற்சிக்க வேகமாக ஓடிவந்து இடைமறித்த அறிவு அவனின் தாடி வளர்ந்த முகத்தைப் பார்த்து அதிர உதடுகளோ,
“மதுரா” என்று உச்சரித்தது. ————–
ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த விஜயா மற்றும் சத்யனின் கூற்று மது மற்றும் மாறன் இருவரின் காதிலும் விழ மதுவின் கண் கலங்க அதனைக் காண பொறுக்காத மாறன் கோபமாகவும் வேகமாகவும் கீழிறங்கி வந்தான்.
“ம்மா.. என்னம்மா நீங்க புரியாம பேசிட்டு இருக்கீங்க.. அன்னைக்கு தான நாங்க தெளிவா சொன்னோம்.. மறுபடியும் மறுபடியும் அதையே சொன்னா என்ன அர்த்தம்.. இங்க பாருங்க என்ன நடந்தாலும் சரி எனக்கும் மதுவுக்கும் கல்யாணம் பண்ணனும்னு நீங்க நெனைக்குறது நடக்காது. இதுக்கு மதுவே சம்மதிச்சாலும் நான் சம்மதிக்கமாட்டேன். அவ்ளோ தான் சொல்வேன்..” என்று கூறியவன் மூக்குப்புடைக்க தன் தாய் தந்தையரை ஏறிட்டான். விஜியோ,
“டேய் மாறா… என்ன பேசுற நீ.. அவ நம்ம மது டா.. இனிமே அந்த மதுரன் வருவான்னு என்ன நிச்சயம் இருக்கு.. யாரையோ கல்யாணம் பண்ணி இவளோட காதல் விஷயம் அவங்களுக்கு தெரியவந்து பிரச்சனை ஆகுறதுக்கு பதில் அவளை நல்ல புரிஞ்ச நீ அவளைக் கல்யாணம் பண்ணிக்குறதுல என்ன இருக்கு.. இல்ல நீயும் யாரையும் விரும்புரியா” என்று கேட்க பதில் கூறாமல் விஜயாவை சன்னமாய் பார்த்தவன் அவனோ அதே கேள்வியைத் தனக்குள்ளும் கேட்டுக்கொண்டான் அக்கணம்.
“இல்ல டா.. மதுவே சம்மதிச்சாலும் அவளை நீ கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொல்றியே அதனால கேட்டேன்” என்று கூற மதுவோ,
“என் மதுரன் கண்டிப்பா திரும்ப வருவான்னு நான் நம்பிட்டு இருக்கேன் அத்தை… இவ்ளோ நாள் அந்த நம்பிக்கைல தான் நான் வாழ்ந்துட்டு இருக்கேன்.. ப்ளீஸ் அத்தை புரிஞ்சுக்கோங்க..” என்று கிட்டத்தட்ட கெஞ்சாத குறையாக கண்கலங்க வேண்டினாள். விஜியோ,
“இங்க பாரு மது.. உன் வாழ்க்கைக் கெட்டு போகணும்னு அத்தை என்னைக்காச்சும் நெனச்சுருக்கேனா.. என் பொண்ணா தான உன்னையும் நெனச்சுருக்கேன்” என்று கேட்க மாறனோ,
“இல்லவே இல்ல மா.. நீங்க அப்படி நினைக்கவே இல்ல.. ஒருவேளை மது உங்க பொண்ணா இருந்து நான் அப்பாவோட தங்கச்சி பையனா இருந்திருந்தா மது மதுரனைத் தான் விரும்புறான்னு தெரிஞ்சும் எனக்கு கட்டி வைக்க நெனைப்பீங்களா.. கண்டிப்பா மாட்டீங்க.. இப்போ நெனைக்குறீங்கன்னா என்ன அர்த்தம்.. அவளை அப்பாவோட தங்கச்சி பொண்ணாவோ இல்ல உங்க ஃபிரண்ட் பொண்ணாவோ தான நெனைக்குறீங்க” என்று கூறினான் அப்பொழுது தான் அவர்கள் இனிமேல் இந்த பேச்சை எடுக்க மாட்டார்கள் என்று நினைத்து. அவன் கூற்றில் கோபமுற்ற சத்யன்,
“என்னடா சொன்ன” என்றபடி அவனை அறைய வர அதற்குள் மதுவின் விரல்கள் மாறனின் கன்னத்தைப் பதம் பார்த்தது.
“என்ன வார்த்தை டா சொன்ன.. அதுவும் என் விஜி அத்தைய பார்த்து.. நான் இவ்ளோ நாள் என் அப்பா அம்மா நெனப்பு கூட இல்லாம இருந்துருக்கேன்னா அதுக்கு என் அத்தை மாமா மட்டும் தான் டா காரணம்.. அவங்க பொண்ணா இல்ல.. அதை விட மேலா என்னை நெனைக்க போய் தான் அவங்க பையனான உனக்கு என்னைக் கட்டி கொடுக்கணும்னு நெனைக்குறாங்க.. அவங்க செஞ்ச ஒரே தப்பு.. நம்ம மனசுல இருக்குற நெனப்பு புரியாம நம்மள சேர்க்க நெனைக்குறது மட்டும் தான்.. அதுக்காக என் அத்தை மாமாவை எப்போதும் நான் விட்டு கொடுக்க மாட்டேன்” என்று கூற அவள் கூற்றில் விரக்தியாக சிரித்தவன்,
“மதுவே சம்மதிச்சாலும் நான் சம்மதிக்க மாட்டேன்னு ஏன் சொன்னேன்னு கேட்டீங்களே.. இதுக்காக தான்.. அவ மனசுல வேற ஒருத்தன் இருந்தாலும்.. என்னைக் கல்யாணம் பண்ணிக்க அவளுக்கு விருப்பமே இல்லனாலும் ஒரு கட்டத்துல கண்டிப்பா உங்க பேச்சுக்காக கட்டுப்பட்டு சரின்னு அவ சொல்லுவா.. இப்போ தெரியுதா நான் ஏன் அப்படி சொன்னேன்னு” என்று கேட்க மதுவுக்கு மனது வலித்தது. இந்த அளவிற்கு தன்னை புரிந்து வைத்திருக்கிறானே.. அவனையா நான் கை நீட்டி அடித்தேன் என்று.
“இங்க பாரு மது.. உனக்கு அந்த மதுரன் வேண்டாம் அவ்ளோ தான் நாங்க சொல்லுவோம்..” என்று தீர்க்கமாக இருவரும் கூற மாறனோ,
“அதான் ஏன்னு கேட்குறோம்… நீங்க உலகமுழுக்க சல்லடைப் போட்டு தேடுனாலும் மதுவை மதுரனை மாதிரி பார்த்துக்குற ஒரு பையன் கிடைக்கமாட்டான்” என்று தன் நண்பனுக்கு உத்தரவாதம் கொடுத்தான் மாறன். அவன் கூற்றில் சிரித்த சத்யனோ,
“ஓஹோ அப்பேற்பட்ட நல்லவன் தான்.. இவள ஏமாத்திட்டு போனானா”
“அவனுக்கு அங்க என்ன சூழ்நிலைன்னு நம்ம யாருக்கும் தெரியாது.. சும்மா ஒரு பொண்ண ஏமாத்திட்டு போகுற கேரக்டர் மதுரன் கிடையாது பா.. தயவு செஞ்சி புரிஞ்சுக்கோங்க”
“சரி டா.. அவன் சூழ்நிலை காரணமா அப்படி செஞ்சான்னு கூட வச்சுப்போம்.. ஆனா அவன் நீ சொல்றமாதிரி உத்தமனா இருந்தா அட்லீஸ்ட் காரணத்தையாச்சும் சொல்லிட்டு போயிருக்கணுமா வேணாமா” என்று கேட்க மதுவோ தலைக் குனிந்தாள்.
நடப்பதை எல்லாம் பார்த்த சத்யனுக்கு உண்மையைக் கூறுவதைத் தவிர்த்து வேறு வழியில்லை என்று தான் தோன்றியது.
“விஜி இதுக்கு மேல நாம உண்மைய மறைக்கணுமா..” என்று கேட்க அதில் அதிர்ந்த விஜியோ,
“என்னங்க சும்மா இருங்க” என்று அதட்ட மதுவோ,
“என்ன உண்மை மாமா அது.. அன்னைக்கே ஏதோ சொல்ல வந்தீங்க.. அப்புறம் அத்தைய காரணமா சொல்லி பேச வேணாம்னு சொல்லிட்டீங்க.. தயவு செஞ்சி சொல்லுங்க மாமா” என்று கேட்க மாறனும் அதே கேள்வியோடு ஏறிட்டான்.
“வேற வழியில்லை விஜி.. ப்ளீஸ்.. சொல்ல வேண்டிய நேரம் வந்துருச்சு” என்க விஜியும் வேறு வழியின்றி சம்மதித்தார்.
ரகசியம் – 63
“மதுமா.. நாங்க சொல்ல போற விஷயத்தைக் கேட்டா.. நீயே மதுரனை வேணாம்னு சொல்லிடுவ.. ஆனா அது தெரிஞ்சும் நாங்க உண்மைய உன்கிட்ட மறைக்க காரணம் நீ மனசு கஷ்டப்படக் கூடாதுங்குற ஒரே காரணம் தான்.. ஆனா நீங்க புரிஞ்சுக்கிட்ட மாதிரி தெரியல.. அதனால இத்தனை வருஷமா சொல்லாத விஷயத்தை உன்கிட்ட சொல்ல போறோம்” என்று கூற,
‘இத்தனை வருஷமா சொல்லாத விஷயத்துக்கும் மதுரனுக்கும் என்ன சம்மந்தம் இருக்க போகுது’ என்று நினைத்தபடி சத்யன் கூறப்போகும் உண்மைக்காக காத்திருந்தனர் மதுவும் மாறனும். பல நாட்களாக சொல்ல நினைத்தும் சொல்ல முடியாமல் போன உண்மையை சத்யன் கூற ஆரம்பித்தார்..
—————————————————————
அதே சமயம் பாண்டிச்சேரி கடற்கரையில் பார்த்த ஒருவனைக் குழப்பமாய் பார்த்தபடி அறிவு அவனின் பின்னே செல்ல அறிவைக் கவனித்த அவனும் அவனிடம் இருந்து தப்பித்து ஓட முயற்சி செய்ய வேகமாய் ஓடி வந்து அவனின் முன் நின்ற அறிவின் உதடுகள் அவனைப் பார்த்து,
“மதுரா” என அதிர்ந்து உச்சரித்தது.
ஆம் சாட்ஷாத் நம் மதுரனே. எப்பொழுதும் சவரம் செய்யப்பட்டு வளுவளுப்பாக பிரகாசமாக இருக்கும் அவனின் முகமோ இன்று தாடிகள் வளர்ந்து பொலிவிழந்த முகமாக காட்சியளித்தது. அவனின் தோற்றம் அறிவின் மனதை வருந்த செய்ய,
“டேய் மதுரா.. என்ன டா கோலம் இது.. எங்கடா போன நீ.. எப்போ இந்தியா வந்த.. ஆமா அப்பா இப்போ எப்படி இருக்காங்க.. நேரா நம்ம ஊருக்கு வராம இங்க பாண்டிச்சேரில என்ன டா பண்ற.. இத்தனை நாள் எங்களை எல்லாம் பார்க்காம எப்படி டா உன்னால இருக்க முடிஞ்சுது.. மது வேற தினமும் உன்னை நெனச்சே வருத்தப்பட்டுட்டு இருக்கா டா.. சரி அதெல்லாம் இருக்கட்டும்.. நாம நம்ம ஊருக்கு போற வழில பேசிக்கலாம் வா என்கூட” என்று படபடவென பொரிந்து தள்ளியவன் அவனின் கரம் பற்றி முன்னே இழுத்து செல்ல எத்தனிக்க மதுரனோ அவனின் கரத்தைத் தன்னிடம் இருந்து விலக்கிவிட்டு தலைக் குனிந்து நின்றான்.
“என்ன டா.. என்கூட வருவ தான” என்று கேட்க மதுரனோ இடவலமாக தலையை அசைத்தான்.
“மச்சான் விளையாடாத.. ஒழுங்கா வா” என்று மீண்டும் கரம் பற்ற போக,
“இல்ல மச்சான்.. என்னால வர முடியாது.. சொன்னா புரிஞ்சுக்கோ” என்றபடி விலகி நின்றான்.
“என்ன தான் டா உன் பிரச்சனை.. இவ்ளோ நாள் நீ ஃபாரீன்ல இருந்ததுனால எங்களால ஏதும் செய்ய முடியல.. அதான் இந்தியா வந்துட்டியே.. அப்புறம் என்ன.. வந்து மது கிட்ட பேசு.. அவ பாவம்.. நீயும் கண்டிப்பா அவளை மிஸ் பண்ணிருப்ப தான” என்க மதுரனோ மௌனம் சாதித்தான். அதற்குமேல் பொறுமையிழந்த அறிவு,
“டேய் உன்ன தான் கேட்குறேன்.. பதில் சொல்லாம நின்னா என்ன அர்த்தம்..” என்று முதன் முறையாக தன் நண்பனிடம் கோபமாக பேசினான்.
“மச்சான்.. ப்ளீஸ் டா புரிஞ்சுக்கோ. நான் எதுவும் சொல்ல கூடிய நிலைமைல இல்ல டா.. நீ தயவு செஞ்சி ஊருக்கு கிளம்பு..” என்றிட அறிவோ,
“இல்ல முடியாது.. நீ வராம கண்டிப்பா நான் போக மாட்டேன்” என்று தீர்க்கமாக கூற,
“அறிவு அடம்பிடிக்காம ஊருக்கு போ.. என்னால உன்கூட வர முடியாது..” என்று சற்று காட்டமாக கூறினான்.
“அதான் ஏன்னு கேக்குறேன்.. உனக்கு ஒரு உண்மைத் தெரியுமா.. நான் நேத்தே இங்க இருந்து கிளம்ப வேண்டியது.. ஆனா விதி என்னைக் கிளம்ப விடல.. காரணம் இப்போ தான் புரிஞ்சுக்கிட்டேன்.. என் மச்சானை பார்த்து கையோட கூட்டிட்டு போக தான் இத்தனையும் நடந்துருக்கு.. நீ என்கூட வந்து தான் ஆகணும்.. இங்க பாண்டிச்சேரில உனக்கு யாரைத் தெரியும்.. எதுக்கு ஊருல இருந்து வந்ததும் வராததுமா இங்க வந்துருக்க.. உனக்கு பாண்டிச்சேரி புதுசு தான” என்று கேட்க பொறுமையிழந்த மதுரன்,
“நான் ஒரு வருஷமா இங்க தான் இருக்கேன்.. எனக்கு புதுசு இல்ல” என்றுவிட அவனது கூற்றில் அதிர்ந்தான் அறிவு.
“என்ன டா சொல்ற… ஒரு வருஷமா இங்க இருக்கியா.. அப்போ நீ மது கிட்ட இந்தியா வரமாட்டேன்னு சொன்ன எல்லாம்”
“பொய் தான்.. அன்னைக்கு வெளிநாட்டுக்கு போயிட்டு மூணு நாள்ல திரும்பி வந்துட்டேன்.. போதுமா..” என்று கூறி முடிக்கவும் அறிவின் கரங்கள் மதுரனின் கன்னத்தைப் பதம் பார்க்கவும் சரியாக இருந்தது.
“என்ன காரியம் டா பண்ணி வச்சுருக்க.. உன்னால அங்க எத்தனை பேர் கஷ்டப்பட்டுட்டு இருந்தோம் தெரியுமா.. மது உன்ன லவ் பண்ணத தவிர வேறென்ன டா பாவம் செஞ்சா.. அவ உன்னையே நெனச்சு உருகிட்டு இருக்கா டா.. நீ வருவன்னு நம்பி தான் ஒவ்வொரு நாளையும் ஓட்டிட்டு இருக்கா.. இப்படி எங்க யாரு நெனப்பும் கொஞ்சம் கூட இல்லாம அசால்ட்டா சொல்ற ஒருவருஷமா இங்க தான் இருக்கேன்னு.. உனக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா டா..” என்று அறிவு அவன் போக்கில் மதுரனை வார்த்தைகளால் வதைக்க அனைத்தையும் கேட்டு மௌனமாக நின்றான் மதுரன். அவனது மௌனம் அறிவை மேலும் மேலும் கடுப்பேற்ற,
“இப்போவும் நீ வாய் திறக்க மாட்டல.. எப்படி திறப்ப சொல்றதுக்கு நியாயமான காரணம் இருந்தா தான் திறப்ப.. வேறென்ன பெரிய காரணம் இருந்துட போகுது.. ஒன்னு மது உனக்கு போர் அடிச்சுருப்பா இல்லனா அவளை விட பெட்டரா ஒரு பொண்ண உன் வீட்டுல பார்த்துருப்பாங்களோ என்னவோ.. அதான் துரை மனசு மாறிட்டிங்க.. கடைசில நீயும் பணக்கார புத்திய காமிச்சுட்டல.. ச்சீ” என்று வார்த்தைகளில் ஆயுதத்தைத் திணித்து உபயோகித்தான் அப்பொழுதாவது கோபம் வந்து தன் நண்பன் உண்மையைக் கூறமாட்டானா என்ற நப்பாசையில். அவன் நினைத்தது போன்றே அவனின் வார்த்தை ஆயுதம் மதுரனை அசைத்து பார்த்தது.
“என்ன டா சொன்ன.. நான் பணக்கார புத்திய காமிக்குறேனா.. என் தூரிகாவை விட பெட்டரா பொண்ணு கிடைச்சு நான் மனசு மாறிட்டேனா.. ஏன்டா அவளை விட பெட்டரா ஒரு பொண்ணு எனக்கு எப்படி டா கிடைக்க முடியும்.. அவ என் உயிர் டா.. அவளைவிட்டு வந்தது வெறும் உடம்பு மட்டும் தான்.. என் உயிரும் மனசும் அவளை சுத்தியே தான்டா இருந்துச்சு இந்த ஒரு வருஷமும்.. இனிமேயும் அப்படி தான் இருக்கும்.. ஏன்னா அவ என் தூரிகா..
என்ன சொன்ன என்கிட்ட சொல்ல நியாயமான காரணம் இல்லாதனால தான் நான் வாயைத் திறக்க மாட்டேங்குறேனா.. முட்டாள்.. என்கிட்டே நியாயமான காரணம் இருக்குறதுனால தான் டா வாயைத் திறக்க மாட்டேங்குறேன்.. ஏன்னா அந்த காரணம் தெரிஞ்சா மது இப்போ கஷ்டப்படுறத விட இன்னும் பன்மடங்கு கஷ்டப்படுவா.. அந்த ஒரு காரணத்துக்காக தான் என் நட்பு, என் காரியர், என் காதல்னு எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சுட்டு இப்படி அநாதை மாதிரி இங்க தனியா கிடக்குறேன்.. ” என்று கூறியவன் கடற்கரை மணலில் அப்படியே முட்டிபோட்டு அமர்ந்து அழத்தொடங்கினான் மதுரன். அவனின் தோளை ஆதரவாக பற்றிய அறிவு,
“மச்சான்.. சாரி டா.. வேணும்னு தான்டா அப்படி எல்லாம் சொன்னேன்.. என் மதுரன் தப்பு பண்ணமாட்டான்னு எனக்கு தெரியாதா.. நீ என்ன நடந்துச்சுன்னு முதல்ல சொல்லு டா ப்ளீஸ்.. எதனால மதுவை வேணாம்னு சொல்லி விலகி வந்த.. அப்படி அவளை அதிகமா காயப்படுத்துற அந்த காரணம் தான் என்ன. நீ சந்தோஷமா இருந்த நேரமெல்லாம் உன்கூட இருந்துருக்கேன்.. இப்போ நீ சொல்ல முடியாத கஷ்டத்துல இருக்க.. இப்போ கண்டிப்பா நான் உன்கூட நிக்கணும் டா.. தயவு செஞ்சி சொல்லு டா என்ன ஆச்சு” என்று வருத்தம் தோய்ந்த குரலில் கேட்க நண்பனின் கேள்விக்கு பதில் கூற தொடங்கியது மதுரனின் இதழ்கள்..
தன்னந்தனி படகுபோல
தத்தளிக்கும் வாழ்க்கை போல
தண்டனைகள் ஏதும் இல்ல
இந்த மண்ணுல
—————————-
தன் நண்பனிடம் உண்மையைக் கூறலாம் என்று நினைத்த மதுரனுக்கு அவசரமாக அழைப்பு வர,
“மச்சான் சாரி டா.. நான் உடனே போகணும்.. அப்பாக்கு திடீர் திடீர்னு என்னமோ ஆகுது டா.. நான் கூட இருந்தா மட்டும் தான் கொஞ்சம் நார்மலா இருக்காரு.. நான் ஒருநாள் கால் பண்றேன் அப்போ நீ வா.. நான் எல்லாம் விளக்கமா சொல்றேன்.. இப்போ நேரமில்லை.. கிளம்புறேன் டா” என்க,
“என்ன மதுரா சொல்ற.. உன்கூட இங்க தான் அப்போ அப்பா அம்மா இருக்காங்களா.. நானும் வரேன் டா உன்கூட” என்று கூற,
“இல்ல மச்சான்.. சாரி டா.. இப்போ நீ வரது சரியா இருக்காது.. கண்டிப்பா இன்னோரு நாள் கூட்டிட்டு போறேன்.. இப்போ நீ கிளம்பு டா ப்ளீஸ்..” என்க அந்நிலையில் தன் நண்பனைப் பார்ப்பதற்கே அறிவுக்கு கஷ்டமாக இருந்தது.
“சரி மச்சான்.. நீ ரொம்ப போட்டு மனச குழப்பிக்காத.. எல்லாம் நல்லாதவே நடக்கும்..”
“சரி டா.. தூரிகாவ எல்லாரும் நல்ல பார்த்துக்கோங்க டா.. இப்போதைக்கு நீ என்னை பார்த்த விஷயமும் நான் இங்க தான் குடும்பத்தோட இருக்கேங்குற விஷயத்தையும் யார்கிட்டயும் சொல்லாத.. பாய் டா” என்றவனின் கண்களில் அவ்வளவு வலி இருந்தது. அறிவும் மதுரனைப் பார்த்துவிட்ட திருப்தியில் ஊருக்கு கிளம்பினான்.
——————————————————
இங்கு உண்மையைக் கூற நினைத்த சத்யன் முதலில் மதுவிடம் சில கேள்விகள் கேட்க தொடங்கினார்.
“மது.. நான் ஒருத்தனோட போட்டோ காட்டுறேன்.. உனக்கு யாருன்னு தெரியுமான்னு பார்த்து சொல்லு..” என்று ஒருவரின் புகைப்படம் ஒன்றைக் காண்பித்தார். அதனைப் பார்த்த மதுவுக்கு அவரின் ஜாடை மிகவும் பரிச்சயப்பட்டதாக தோன்றியது. கண்கள், முக அமைப்பு, சிரிப்பு என அனைத்தும் யாரையோ நினைவு படுத்தியது போன்று தோன்றியது.
“இவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு.. ஆனா எங்கன்னு தெரியல மாமா” என்று கூற,
“இவன் ஒரு பழைய நடிகர்..” என்க மதுவோ,
“நடிகரா.. சரி திடிர்னு ஏன் இவரை காமிச்சு தெரியுமான்னு கேக்குறீங்க”
“ஏன்னா.. பழைய நடிகருங்குறதையும் தாண்டி உனக்கும் இவனுக்கும் நாலு முக்கிய சம்மந்தம் இருக்கு.. அதுமட்டுமில்ல உன் அப்பா அம்மாவும் கூட சினிமா நடிகர்கள் தான்”
“என்ன மாமா சொல்றீங்க.. என் அப்பா அம்மாவும் நடிகர்களா..”
ரகசியம் – 64
“ஆமா மது.. இருபத்திரண்டு வருஷத்துக்கு முன்னாடி வந்த மூணு நாலு படத்துல உங்க அப்பா அம்மாவைப் பார்க்கலாம்.. இப்போ உள்ள பசங்களுக்கு அவங்கள தெரியுறதுலான் கஷ்டம் தான்..”
“சரி.. இந்த போட்டோல இருக்குற அவருக்கும் எனக்கும் சம்மந்தம்னு சொல்றீங்க.. அப்படி என்ன சம்மந்தம்” என குழப்பத்தின் உச்சஸ்தானியில் கேட்க மாறனும் அதே குழப்பத்தோடு தான் பார்த்தான்.
“முதல் சம்மந்தம் இவன் தான் விஜியோட அண்ணன் வசீகரன்..” என்க மதுவும் மாறனும் திகைத்து நோக்கினர்.
“என்ன மாமா சொல்றீங்க.. அப்போ என் அப்பா விஜி அத்தையோட அண்ணா கிடையாதா” என்று கேட்க அதற்கு எதையோ நினைத்து ஆழ்ந்த பெருமூச்சொன்றை விட்டவர்,
“இல்ல மது.. பிரபாகரன் என் தங்கச்சி புருஷன் மட்டும் தான்.. உறவுமுறைல வேணா அவர் விஜிக்கு அண்ணன்.. ஆனா அவளோட கூட பொறந்த அண்ணன் இந்த போட்டோல இருக்குறவன் தான்..” என்று கூற அக்கூற்றில் கோபமுற்ற விஜயா,
“இன்னொரு தடவ அவனை என் அண்ணன்னு சொல்லாதீங்க” என்று கூற சத்யனோ,
“விஜி.. நான் மது கிட்ட முழு விஷயத்தையும் சொல்லி முடிக்குற வரை நீ எதுவும் பேச கூடாது சொல்லிட்டேன்.. நீ உணர்ச்சிவசப்படாம இரு.. அப்புறம் மயக்கம் வந்துரும்..” என்றவர் விஜயா வழக்கமாக உட்கொள்ளும் மாத்திரையை எடுத்து வந்து கொடுத்த சாப்பிட சொல்லி அவரை அமர வைத்துவிட்டு,
“ப்ளீஸ் விஜி.. நான் சொல்றவரை நீ அமைதியா இரு சரியா” என்க அவரும் சரியென்றார். பின் மீண்டும் மதுவிடம் வந்தவர்,
“ரெண்டாவது சம்மந்தம்.. பிரபாகரன் பானு சாவுக்கு இவன் தான் காரணம்..”
“என்ன மாமா சொல்றீங்க.. என் அப்பா அம்மா சாவுக்கு இவர் காரணமா.. அன்னைக்கு காதல் தான் காரணம்னு சொன்னீங்க.. இன்னைக்கு இவருன்னு சொல்றீங்க.. அய்யோ எனக்கு ஒண்ணுமே புரியல.. தெளிவா சொல்லுங்க மாமா ப்ளீஸ்” என்று மது ஆதங்கமாய் கேட்க சத்யன் கூற ஆரம்பித்தார்.
————––——————————————
வசீகரன் வசதி வாய்ப்பு வாய்ந்த செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர். நடிப்பின் மீதிருந்த ஆர்வத்தில் கல்லூரி படிப்பிற்காக சென்னை வந்தவருக்கு கல்லூரி தோழனாக பிரபாகரன் அறிமுகமாயினார்.
நாளுக்குநாள் அவர்களின் நட்பு அதிகரிக்க வசீகரனின் நடிப்பு ஆர்வம் பிரபாகரனையும் தொற்றிக்கொண்டது. தானும் நடிகராக வேண்டும் என்று ஆசைப்பட்டார் பிரபாகரன். அவ்வாறே நாட்கள் சென்றது.
சிறுவயது முதலே விஜயாவின் உயிர் தோழியான பானு தன் தோழி வீட்டிற்கு அடிக்கடி வந்த போது வசீகரன் மீது ஏற்பட்ட ஈர்ப்பு நாளடைவில் காதலாக மாற அவருக்காகவே அடுத்த வருடம் அதே கல்லூரியில் வசீகரனுக்கு ஜூனியராக வந்து சேர்ந்தார்.
புதிதாய் பழகிய பானுவின் மேல் பிரபாகரனுக்கு காதல் ஏற்பட அதனை அவரிடம் தெரிவித்தார் பிரபாகரன். ஆனால் தான் வசிகரனை காதலிப்பதாக கூறி பானு மறுத்துவிட பிரபகரனும் கண்ணியமாக விலகிக்கொண்டார்.
பிறகு ஒருநாள் வசீகரனிடம் பானு தன் காதலைத் தெரிவிக்க அவரின் காதலை வசீகரன் ஏற்றுக்கொண்டார். இருவரும் காதல் ஜோடியாக வலம் வந்தனர்.
பானுவை மறக்கவேண்டுமென பிரபாகரன் கல்லூரிக்கு சரியாக கூட வரவில்லை. அதிகமாக விடுப்பு எடுத்தார். அவ்வாறே அவர்கள் கல்லூரி படிப்பு முடிய பின்பு வசீகரன் மற்றும் பிரபாகரனின் விடாமுயற்சியில் அவர்களுக்கு நடிக்க வாய்ப்பு கிட்டியது.
அறிமுக இயக்குனர் ஒருவர் தன் குறுகிய பட்ஜெட் படம் ஒன்றில் வசீகரனுக்கு கதாநாயகன் கதாப்பாத்திரமும் பிரபாகரனுக்கு வில்லன் காதபாத்திரமும் வழங்கி நடிக்க வாய்ப்பு கொடுத்தார். படத்தின் கதாநாயகியாக தேர்ந்தெடுத்தவர் திடீரென நடிக்க முடியாமல் போக அவ்வப்போது வசீகரன் உடன் வந்து செல்லும் பானுவிடம் அவர் அழகாய் இருப்பதாகவும் வசீகரனுக்கும் உங்களுக்கும் ஜோடிப் பொருத்தம் நன்றாக இருக்கும் என்று கூறி அவரை நடிகையாக நடிக்க சம்மதம் கேட்க வசீகரனுக்கு ஜோடியாக நடிப்பதால் பானுவும் சம்மதித்தார்.
படப்பிடிப்பு முடிந்து படமும் வெளியாக மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதன் காரணமாக தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தன. மற்றொரு படத்தில் பிரபாகரனுடன் பானுவை நடிக்க கூற முதலில் மறுத்தவர் பின் வசீகரன் கூறியதால் சம்மதித்தார். பிரபாகரனும் பானு தன் நண்பனின் காதலி என்பதால் படப்பிடிப்பின்போது கண்ணியமாகவே நடந்துகொண்டார்.
நாட்கள் அதன் போக்கில் செல்ல,
அப்பொழுது ஒருமுறை வசீகரன் வெளிநாடு சென்றிருக்கும் பொழுது பிரபாகரனுக்கும் பானுக்கும் எதிர்பாராத விதமாக பெற்றோர்களின் கட்டாயத்தில் திருமணம் ஏற்பாடு செய்ய இருவரும் எவ்வளவோ போராடியும் இருவர் வீட்டிலும் கேட்கவில்லை. வசீகரனையும் தொடர்பு கொள்ள முடியாமல் போனது.
பானுவின் தந்தை பானு இக்கல்யாணத்திற்கு சம்மதிக்கவில்லை என்றால் நான் தற்கொலை செய்துவிடுவேன் என்று மிரட்ட வேறுவழியின்றி தன் பெற்றோருக்காக சம்மதித்தார் பானு. பிரபாகரன் பானுவை சந்தித்து,
“சாரி பானு.. நீ என்னைக்கு வசீய விரும்புறேன்னு தெரிஞ்சுதோ அன்னைக்கே உன்கிட்ட இருந்து விலக நெனச்சு தான் நான் முக்காவாசி நாள் காலேஜுக்கு கூட வரதே இல்ல. விருப்பம் இல்லாத பொண்ண கட்டாயப்படுத்த கூடாதுன்னு நெனச்சு என் மனசை மாத்திக்கிட்டேன்.. நாம ஒண்ணா நடிக்கும் போதும் நீ என் நண்பனோடு காதலிங்குறதுனால கண்ணியமா தான் உன்கிட்ட நடிச்சேன்.. ஆனா இப்போ என் அப்பா அம்மா என்னைக் கட்டாயப்படுத்துறாங்க.. உன் வீட்டுல உனக்கு எப்படி ப்ரஷரோ அதே மாதிரி தான் என் வீட்டுலயும்.. அதனால என்னை மன்னிச்சுரு பானு.. வேற வழியில்லாம கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டேன்” என்று மன்னிப்பு வேண்ட அவர் தரப்பு நியாயம் பானுவுக்கு நன்றாகவே புரிந்தது.
பின் விருப்பமே இல்லாமல் இருவருக்கும் கட்டாய திருமணம் நடந்தது. தாய்நாடு வந்த வசீகரனுக்கு விஷயம் தெரியவும் பானுவிடமும் பிரபாகரனிடமும் நிதர்சனத்தை ஏற்றுக்கொண்டு வாழ்த்துக் கூறி பெருந்தன்மையாகக் காட்டிக் கொண்டார்.
நாட்கள் செல்ல பானுவும் வேறு வழியின்றி பிரபாகரனுடனான தன் திருமண வாழ்க்கையை வாழ தொடங்கினார். ஒரு வருடம் கழிந்தது. வசீகரனுக்கும் கமலா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது
வசீகரனின் திருமணம் முடிந்த ஒரு மாதத்தில் அவரின் தங்கை விஜயாவுக்கும் பானுவின் அண்ணன் சத்யனுக்கும் பெற்றோரின் விருப்பப்படி திருமணம் நிச்சயமாகியது. பானுவிற்கோ ஏக மகிழ்ச்சியைக் கொடுத்தது தன் உயிர் தோழிக்கும் தன் அண்ணனுக்கும் திருமணம் என்ற செய்தி. திருமணமும் வெகு விமர்சையாக முடிந்தது. திருமண நிகழ்வின் போது வசீகரனின் மனைவி கமலா மயங்கி விழ அவளை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்று கூறினார்.
ஆனால் பானு ஒருவருடம் கழிந்தும் கர்ப்பம் தரிக்கவில்லை என்று திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் குறைபாட அது பானுவின் மனதை வேதனைக்கு உள்ளாக்கியது. பானுவின் நிலையைக் கேட்டு விஜயாவும் மனம் வருந்தினார். அவ்வப்பொழுது பானுவை வந்து பார்த்து கவனித்து அவருக்கு உற்ற துணையாய் விஜயா இருந்தார்.
மூன்று மாதங்கள் கழிந்தது. தான் தாயாகவில்லை என்ற எண்ணம் பானுவின் மனதை ரணமாக்கியது. அந்த நேரம் பானுவுக்கு பல நாள் கழித்து நடிக்க வாய்ப்பு கிடைக்க அதுகுறித்து பிரபாகரனிடம் கேட்க அவரோ மறுத்துவிட்டார். ஆனால் குழந்தை இல்லாத காரணத்தினால் மனம் வருந்திய பானுவுக்கு இப்பொழுது நடிப்பு தன் மனதை திசைத் திருப்பி நிம்மதியைக் கொடுக்கும் என்று தோன்றியது. அதனால் நடிப்பை என்னால் விட முடியாது என்று தீர்க்கமாக கூறி நடிக்க ஒப்புக்கொண்டார். பிறகு தான் தெரிந்தது வசீகரன் தான் கதையின் நாயகன் என்று. முதலில் வேறு ஒருவரை தான் படக்குழு கூறியிருந்தது. ஆனால் இறுதியில் வசீகரன் என்று கூறிவிட பிரபாகரனுக்கு கொஞ்சம் நெருடலாக இருந்தது. இருந்தும் தன் மனைவியின் மீது நம்பிக்கைக் கொண்டு ஒப்புக்கொண்டார்.
அடுத்த மூன்று மாதத்தில் படப்பிடிப்பு முடிந்திருக்க படமும் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. இரண்டு நாட்கள் கழித்து உடல் சோர்வாக இருப்பது போல் பானுவிற்கு தோன்ற தன் கணவனை அழைத்து கொண்டு மருத்துவமனை சென்றவருக்கு அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்ற நற்செய்தி கிட்டியது. அதே சமயம் மருத்துவமனைக்கு வந்திருந்த விஜயாவும் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை கூறினார். தோழிகள் இருவரும் ஓரே நேரத்தில் தாயாகி இருப்பது இருவருக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி.
ஆனால் இவ்வளவு நாள் இல்லாமல் வசீகரனுடன் படப்பிடிப்பு முடிந்ததும் பானு கருதரித்திருப்பது பிரபாகரனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஒருவேளை இது வசீகரனின் வாரிசோ என்று. ஆனால் அப்பொழுது அது குறித்து யாரிடமும் எதுவும் கூறவோ கேட்கவோ இல்லை. குழந்தை பிறந்ததும் இதற்கு ஒரு தீர்வு காண்போம் என்று நினைத்து அமைதி காத்தார்.
நான்கு மாதங்கள் கழிந்த நிலையில் வசீகரனுக்கு குழந்தை பிறந்திருக்க அடுத்த நான்கு மாதத்தில் விஜயாவிற்கு ஆண் குழந்தையாய் இளமாறனும் பானுவிற்கு பெண் குழந்தையாய் மதுரிகாவும் ஒரேநாளில் ஒரே நேரத்தில் பிறந்தனர்.
குழந்தை பிறந்து ஒரு மாதமிருக்கும் சமயத்தில் பிரபாகரன் தன் மனதில் இருக்கும் சந்தேகத்தின் காரணமாய் யாருக்கும் தெரியாமல் தனக்கும் மதுரிகாவிற்கும் மரபணு சோதனை எடுக்க ஏற்பாடு செய்தார். சோதனையின் முடிவில் மதுரிக்காவின் மரபணுவுடன் பிரபாகரனின் மரபணு பொருந்தவில்லை அதனால் மதுரிகாவின் தந்தை பிரபாகரன் இல்லை என்று தொண்ணுற்றெட்டு சதவிகிதம் வந்திருக்க பிரபாகரனுக்கு ஆத்திரம் அதிகமாகியது.
பிரபாகரனைப் பொறுத்தவரை பானுவின் குழந்தைக்கு காரணம் வசீகரன் தான் என்று ஊர்ஜிதமானது. நண்பனும் மனைவியும் தனக்கு துரோகம் செய்ததை பிரபாகரனால் ஏற்றுக்கொள்ள முடியாமல் தன் மனைவியிடம் தன் ஆவேசத்தைக் கொட்ட பானுவோ பிரபாகரனிடம்,
“சத்தியமா இது நம்ம குழந்தை தான்.. நம்புங்க.. நான் உங்களுக்கு துரோகம் பண்ணல..” என்று கெஞ்ச வசீகரன் பானுவுக்கே தெரியாமல் இதனை செய்திருக்கிறார் என்று பிரபாகரனுக்கு புரிய வந்தது. வசீகரனை நினைக்க நினைக்க ஆத்திரம் பொங்கியது. வசீகரனின் உண்மை முகத்தை உடைக்க எண்ணி ஊடகத்துறையை அழைத்து விஷயத்தைக் கூறவும் மக்களிடையே வசீகரனின் மதிப்பு குறைந்தது.
கோபத்தில் வசீகரன் பிரபாகரனின் வண்டியை லாரி மோத செய்து விபத்துக்குள்ளாக்க பிரபாகரன் உயிர் சம்பவ இடத்திலேயே பிரிந்தது. துரதிர்ஷ்டவசமாக வழியில் வண்டி பழுதாகி நின்ற விஜயவைத் தன் வண்டியில் அழைத்து வந்ததால் தலையில் பலத்த அடிபட்ட விஜயா குறுகிய கால நினைவுகளை இழந்தார் விஜயா. பிறகு யாருமறியாவண்ணம் வசீகரன் தன் மனைவி மற்றும் குழந்தையோடு தலைமறைவானார்.
தன் மீது அவப்பெயர் ஏற்பட்டதால் குற்றஉணர்வில் தவித்தவருக்கு தன் கணவனின் இறப்பு பேரிடியாய் இருக்க மனபாரம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்டார் பானு.
குறுகிய கால நினைவுகளை இழந்த விஜயாவுக்கு சத்யன் நடந்த அனைத்தையும் கூற தன் தோழி இறந்த செய்தியால் வருத்தமும் தன் உடன் பிறந்தவன் மீது தீரா வெறுப்பும் ஏற்பட்டது. பிறகு தன் தோழியின் குழந்தையான மதுரிகாவை சத்யனின் அனுமதியோடு தானே தன் மகளாய் வளர்க்க நினைத்து தன் வீட்டிற்கு அழைத்து வந்தார்.
——————————————–
இவ்வாறாக நடந்த அனைத்தையும் சத்யன் கூறிமுடிக்க மதுரிக்காவி கண்கள் கண்ணீராலும் வசீகரனின் மேல் ஏற்பட்ட கோபத்தாலும் நிறைந்திருந்தது.
“ச்சீ.. இப்படிப்பட்ட கேடு கெட்டவனோட வாரிசா நான்.. நெனைக்க நெனைக்க எனக்கு வெறுப்பா இருக்குது மாமா.. இப்போ அவ எங்க இருக்கான்.. என் கையாலேயே அவனை சாகடிச்சுருவேன்” என்று ஆத்திரமாய் பேசியவள் பிறகு முகத்தை மூடி அழுக ஆரம்பித்துவிட்டாள். மாறனுக்கும் நடந்த அனைத்தையும் கேட்க கோபமாக இருந்தது. விஜயாவும் மாறனும் மதுவை சமாதானம் செய்ய சத்யனும் அவளைக் கலக்கத்தோடு பார்த்தார்.
‘பாவம் மது.. இதுக்கே நீ ரொம்ப உடைஞ்சுட்ட.. இதுல இன்னொரு முக்கியமான ஒரு விஷயம் ஒன்னு இருக்கு அது தெரிஞ்சா உன் மனசு என்ன பாடு படுமோ..’ என்று யோசித்தவர்,
“இது தான் மது மூணாவது சம்மந்தம்.. நீ அழாத.. இவ்வளவு கெட்டது செஞ்ச அந்த வசீகரனுக்கு கடவுள் நிச்சயம் தண்டனை கொடுப்பாரு.. நீ உன் ரூமுக்கு போ.. மிச்சத்தை அப்புறம் பேசிக்கலாம்” என்று கூறிவிட்டு இப்பொழுது அந்த விஷயத்தைக் கூற வேண்டாம் பிறகு கூறி கொள்ளலாம் என்று முடிவு செய்துவிட்டு செல்ல தணிக்க மதுவின், “மாமா ஒரு நிமிஷம்” என்ற வாக்கியம் அவரின் கால்களுக்கு தடைபோட்டது. திரும்பி மதுவைக் கேள்வியாய் அவர் நோக்க,
“அந்த நாலாவது சம்மந்தம் என்னனு சொல்லுங்க மாமா” என்று தீர்க்கமாக கேட்க அவரோ,
“இல்ல மது வேணாம்.. நீ தாங்க மாட்ட.. இதோட விட்ருவோம்” என்க அவளோ,
“ப்ளீஸ் மாமா எனக்கு தெரிஞ்சே ஆகணும்” என்க சத்யனோ விஜயாவைப் பார்க்க அவருக்கு கண்கள் கலங்கியது.
ரகசியம் – 65
சத்யனோ தயங்க, “ப்ளீஸ் மாமா.. நான் மொத்தமா இன்னைக்கே அழுது முடிச்சுருறேன்.. என்னன்னு சொல்லுங்க மாமா” என்று விடாமல் கேட்க சத்யனோ,
“அது வந்து மதுமா.. நீயும் மாறனும் பொறக்குறதுக்கு நாலு மாசத்துக்கு முன்னாடி வசீகரனுக்கு ஒரு குழந்தை பொறந்துச்சுன்னு சொன்னேன்ல.. அந்த குழந்தை தான் நீ காதலிக்கிற மதுரன்” என்று கூற அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்ற மதுரிகா சத்யனின் வார்த்தைகளை ஜீரணிக்க முடியாமல் மூர்ச்சையடைந்தாள்.
மூர்ச்சையாகி விழுந்த மதுவை சத்யன், விஜயா மற்றும் மாறன் தண்ணீர் தெளித்து எழுப்ப முயல அவளோ எழுந்திருக்கவில்லை. விஜயாவோ,
“ஏங்க எனக்கு பயமா இருக்குங்க.. டாக்டரை கூப்பிடுங்க” என்று பதற்றமாய் கூற மாறனோ விரைவாக மருத்துவருக்கு அழைக்க வந்து பரிசோதித்து பார்த்த மருத்துவர்,
“அவங்க அளவுக்கதிகமான ஸ்ட்ரெஸ்ல இருந்துருக்காங்க.. அந்த அழுத்தம் தாங்க முடியாம தான் மயங்கி விழுந்துட்டாங்க.. இவங்களுக்கு தேவை இப்போ கம்ப்ளீட் ரெஸ்ட்.. ஸ்லீப்பிங் டேப்லட் கொடுத்திருக்கேன்.. இன்னைக்கு முழுக்க தூங்குனா நாளைக்கு மயக்கம் தெளிஞ்சு நார்மலாகிடுவாங்க.. டோன்ட் வொரி” என்று கூறிவிட்டு செல்ல மாறன் அவளைத் தூக்கிக்கொண்டு அவளறைக்கு சென்றான். படுக்கையில் அவளை படுக்கவைத்தவன் அவளின் சிகையை கோதியபடி அவளருகே அமர்ந்து கலக்கமாய் அவளை நோக்கினான்.
“அப்பா சொன்ன விஷயத்தை எல்லாம் என்னாலேயே தாங்கிக்க முடியலையே டி.. நீ எவ்ளோ மனசு உடைஞ்சுருப்ப.. அதுவும் நம்ம மதுரனோட அப்பா தான் அவன்னு கேட்ட அந்த நேரம் உனக்கு எப்படி இருந்துருக்கும்னு என்னால யோசிச்சு கூட பார்க்க முடியலையே டி.. நாளைக்கு மயக்கம் தெளிஞ்சு கண்ணு முழிச்ச அப்புறம் உன்னோட நிலைமையை நினைக்கவே எனக்கு பயமா இருக்கு டி” என்று தன் போக்கில் அவளிடம் புலம்பியவன் பிறகு அவளுக்கு போர்வையை போர்த்திவிட்டு தன்னறைக்கு வந்தான். அங்கு விஜயாவும்,
“என்னங்க.. எனக்கு மதுவை நெனச்சா ரொம்ப பயமா இருக்குங்க.. நாளைக்கு கண்ணுமுழிச்ச அப்பறம் ரொம்ப வேதனைப் படுவா.. இந்த வேதனையை அவ அனுபவிக்கக் கூடாதுன்னு நெனச்சு தான் உண்மைய மறைக்க நாம போராடுனோம்.. ஆனா இந்த பிள்ளைங்க கேட்டுச்சா.. அயோ கடவுளே” என்று அவர் கண் கலங்க சத்யனோ,
“என்ன விஜி செய்ய சொல்ற.. ஆனா இந்த விஷயத்தை எத்தனை நாளைக்கு மறைக்க முடியும்.. எப்படியும் ஒருநாள் தெரிஞ்சு தான் ஆகணும்.. விடு மதுவை இனி நாம கவனமா பார்த்துக்கணும்” என்று ஆறுதல் கூறியவரின் மனத்திலும் சிறு கலக்கம் இருக்க தான் செய்தது.
மறுநாள் பொழுது விடிய லேசாக கண்விழித்த மதுவுக்கு தலை பாரமாக இருக்க தலையைப் பிடித்தபடி எழுந்து அமர்ந்தாள். சிறிது நேரம் கழித்து தான் நேற்று நடந்த அனைத்தும் நியாபகத்திற்கு வர கண்கள் கரித்துக் கொண்டு வர முகத்தை மூடி கதறி அழுக ஆரம்பித்துவிட்டாள். சத்தம் கேட்டு பதறிய மாறன் அவளறைக்கு செல்ல அழுது கொண்டிருப்பவளைப் பார்த்தவனுக்கு மனது வலித்தது. அவளருகே சென்றவன்,
“மது அழாத டி ப்ளீஸ்.. யாரோ செஞ்ச தப்புக்கு நீ ஏன் அழுகுற..” என்க அவளோ,
“அந்த வசீகரன நெனச்சு நான் அழல மாறா.. ஆனா அவன் செஞ்ச விஷயத்தால.. இப்போ என்னோட காதல் கலங்கமாயோடுச்சே.. தூரன்.. தூரன்.. எனக்கு அண்ணா முறையா போயிட்டானே.. தான் காதலிச்சவங்க நமக்கு சகோதர முறைன்னு கேள்விப்படுறப்போ அது எவ்ளோ வலிக்கும்” என்று கேட்டவளின் தொண்டையில் வார்த்தைகள் சிக்கிக் கொள்ள கேவி கேவி அழுதாள். பிறகு எதையோ யோசித்தவள்,
“மாறா.. அப்போ இதனால தான் தூரன் என்னைவிட்டு போனானா.. அவனுக்கு உண்மை தெரிஞ்சுதான் அவன் இது சரியா வராதுன்னு போனானா.. அப்போ ஏன் அவன் என்கிட்ட சொல்லல.. சொல்லிருந்தா போன வருஷமே எவ்ளோ அழ முடியுமோ அழுது முடிச்சுறுப்பேனே.. இப்படி அவனுக்காக காத்திட்டு இருந்துருக்கமாட்டேனே.. அந்த வசீகரன் செஞ்ச துரோகத்தால என்னோட உண்மையான காதலுக்கு அர்த்தம் இல்லாம போயிடுச்சே.. ” என்று பிரம்மை பிடித்தபடி அவள் பிதற்ற மாறனோ,
“இருக்கும் மது.. அவனுக்கு உண்மை தெரிஞ்சு தான் விட்டு போயிருக்கான்.. ஆனா உண்மைய உன்கிட்ட சொன்னா நீ வருத்தப்படுவியோன்னு தான் சொல்லாம போயிருப்பான்.. அவனுக்கும் இது எவ்ளோ பெரிய ஏமாற்றமா இருந்திருக்கும்.. தன்னோட அப்பாவோட ரத்தத்துல பொறந்த ஒரு பொண்ணை தான் நாம காதலிச்சுருக்கோம்னு தெரிஞ்ச அந்த செக்கன்ட் அவனும் எவ்ளோ துடிச்சுறுப்பான்.. ” என்று அவன் பக்கமாய் இருந்து யோசித்து கூற மதுவுக்கும் சரியென்றே தோன்றியது.
இரண்டு நாட்கள் அவ்வாறே கழிய சற்று உண்மையை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு வந்திருந்தாள் மதுரிகா. ஆனால் வசீகரன் மேல் கட்டுக்கடங்காத கோபம் கொழுந்துவிட்டு எரிந்தது. அவரை நேரில் சந்தித்தால் கொன்றுவிடும் அளவு ஆத்திரம் பெருகியது.
அப்பொழுது மாறனையும் மதுவையும் பார்த்து பலநாள் ஆனதால் அவர்களை சந்திக்க அறிவு, இனியா போவதாக கூற விழியும் அவளவனைக் காணலாம் என்று வந்திருந்தாள். அப்பொழுது அவர்கள் மூவருக்கும் நடந்த விஷயம் தெரிய வர இனியாவோ,
“அந்த வசீகரன் எல்லாம் ஒரு மனுஷனா.. ச்சீ” என்க, அனைத்தையும் கேட்ட விழிக்கு மதுவை நினைத்து கஷ்டமாக இருந்தது. ஆனால் அதே சமயம் இப்படி ஒரு விஷயம் நடந்திருப்பது தன் காதலுக்கும் சேர்த்தல்லவா பிரச்சனை என்று நினைக்கவும் தவறவில்லை.
ஏனென்றால் இப்பொழுது மதுவும் மதுரனும் சேர்வதற்கு வாய்ப்பு என்பது சற்றும் இல்லை.. அதனால் விஜயா சத்யனின் விருப்பப்படி மது மற்றும் மாறனுக்கு திருமணம் நடத்தி வைக்க வாய்ப்புகள் அதிகம்.. அவர்களுக்குள் காதல் இல்லையென்றாலும் ஒருவரின் மேல் ஒருவர் அக்கறை வைத்திருக்கின்றனர். மதுவின் வாழ்விற்கு பிரச்சனை என்றால் மாறன் அவளை திருமணம் செய்வான் தானே.. இவ்வாறெல்லாம் விழியின் சிந்தையில் ஓட மனம் கனத்து போனது அவளுக்கு.
அறிவுக்கோ மதுரனை நினைத்து மிகவும் வருத்தமாக இருந்தது. அவன் அன்று அவ்வளவு வலியுடன் பேசியது இதனால் தான் என்று புரிந்து. ஆனால் ஒரு சந்தேகம் உதித்தது.
மதுரனுக்கு ஏன் அவனின் தந்தைமீது கோபம் ஏற்படவில்லை. அப்பொழுதும் அவன் அவருக்காக அக்கறைக் கொண்டு தானே பதறி ஓடினான்.. தவறு என்றால் யார் செய்தாலும் தவறு என்று நினைப்பவனுக்கு அவனின் தந்தை என்றபோது போது மட்டும் உணர்வுகளில் சலுகை ஏற்பட்டதேனோ..’ என்று நினைத்த கணத்தில் அறிவுக்கு சற்று மதுரன் மேல் கோபம் வந்தது. அவனை நேரில் சந்திக்கும் பொழுது இது குறித்துக் கேட்கவேண்டும் என்று நினைத்த அறிவுக்கு அவனின் அலைபேசி வைப்ரேட்டில் அலற எடுத்து பார்த்தவனுக்கு தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.
யோசனையாக பார்த்துக்கொண்டே அதனை ஏற்றவன் ஹலோ என்க கைத் தவறி அலைபேசியில் ஒலிபெருக்கியை அழுத்தி விட மறுமுனையில்,
“மச்சான் நான் மதுரன் பேசுறேன்” என்ற குரல் சத்தமாக ஒலிக்க பதறியவாறு அழைப்பைத் துண்டித்த அறிவு சுற்றிமுற்றி பார்க்க மது, இனியா, விழி மற்றும் மாறன் நால்வரும் அறிவை தான் வெறித்து பார்த்தனர். மதுவோ,
“அறிவு.. இப்போ தூரன் தான பேசினான்..” என்று சந்தேகப்பார்வையில் கேட்க அறிவோ, ‘அயோ போச்சு மாட்டிக்கிட்டோமே.. என்ன சொல்லி சமாளிக்குறது’ என்று யோசித்தவன் பின்,
“ஆமா மது.. மதுரனோட குரல் தான்.. ஆனா அது அவன் முன்னாடி என்கிட்ட பேசுன கால் ரெக்கார்ட்.. எப்போ எல்லா அவன்கிட்ட பேசணும் போல இருக்கோ அப்போ எல்லாம் அவனோட இந்த கால் ரெகார்ட் கேப்பேன்.. ஆனா நீங்க திடிர்னு அப்படி பார்த்ததும் என்னாச்சுன்னு கேக்குறதுக்காக கட் பண்ணேன் வேற ஒன்னும் இல்ல” என்றவன் இதற்கு முன் அவனுடன் பேசும் போது ரெகார்ட் செய்யப்பட்ட அழைப்பு ஒன்றை மிக வேகமாக தேடி எடுத்து கேட்க தொடங்கினான். மற்றவர்களும் அழைப்பு வந்து சத்தம் ஏதும் கேட்காததால் அவன் கூறியதை நம்பிவிட்டனர்.
‘நல்லவேளை மொபைலை சைலென்ட்ல போட்ருந்தோம்.. இல்லனா கால் தான் வந்துச்சுன்னு கண்டுபிடிச்சுருப்பாங்க..’ என்று நினைத்தவன் அலைபேசியை எடுத்துக்கொண்டு வெளியில் சென்றுவிட்டான். ஆனால் திடிரென்று மதுரிகாவிற்கு ஒன்று தோன்றியது.
‘அது நிஜமாவே மதுரனோட பழைய கால் ரெகார்டா இருந்தா அவன் ஏன் நான் மதுரன் பேசுறேன்னு மேன்ஷன் பண்ணனும்.. ஆல்ரெடி அறிவு மொபைல்ல அவன் நம்பர் சேவ் பண்ணி தான இருக்கும்.. எதுக்கு நேம் சொல்லணும்..’ என்று யோசிக்க பின் அவன் பெருமூச்சுவிட்டு வெளியில் சென்றதைப் பார்த்தவளுக்கு ஏதோ ஒன்று சந்தேகமாக பட்டது.
“காய்ஸ் என்கூட அமைதியா வாங்க” என்றவள் அறிவைப் பின் தொடர்ந்து செல்ல அவளைத் தொடர்ந்து மற்ற மூவரும் சென்றனர். அறிவோ சுற்றி முற்றி ஒருமுறைப் பார்த்துவிட்டு அழைப்பு வந்த எண்ணுக்கு மீண்டும் அழைத்தான்.
“சாரி மச்சான்.. அப்போ பேச முடியல அதான் கட் பண்ணிட்டேன்.. சரி நீ சொல்லு மதுரா.. என்ன விஷயம்” என்க மறுபக்கம் என்ன கூறப்பட்டதோ அதற்கு இவன்,
“அப்படியா.. சரி டா நாளைக்கு நான் வரேன்.. நானும் உன்கிட்ட நிறைய பேசணும்” என்றவன் அழைப்பைத் துண்டித்தான்.
மறைந்து நின்று கேட்ட நால்வருக்கும் புரிந்தது அவன் மதுரனிடம் தான் பேசியிருக்கிறான் என்று. பிறகு அறிவு திரும்ப அனைவரும் அவனறியாமல் ஹாலுக்கு சென்றனர். வந்தவன்,
“மது நீ கவலைப்படாத.. எல்லாம் நல்லதாவே நடக்கும் சரியா.. நான் கொஞ்சம் அவசரமா வீட்டுக்கு போகணும் போய்ட்டு வரேன்” என்று கூறியவன் அனைவரிடமும் விடைபெற்று சென்றான். அவன் சென்றதும் மாறனோ,
“அறிவு ஏன் நம்மகிட்ட மதுரன் கிட்ட டச்ல இருக்குறத மறைக்குறான்.. அவன்கிட்ட இருந்து கொஞ்சம் கூட இதை எதிர்பார்க்கல” என்க இனியாவோ,
“எனக்கும் அதான் டவுட்டு மாறா.. ஆனா எனக்கென்னமோ மதுரன் இவன்கிட்ட கண்டிப்பா சொல்லக்கூடாதுன்னு ஏதும் சொல்லிவச்சுறுப்பான் போல.. இவனும் வேற வழியில்லாம சொல்லாம இருந்துருக்கான் போல..” என்று தன்னவனுக்கு ஆதரவாக கூற மதுவோ,
“இருக்கும் டி.. சரி இவன் நாளைக்கு வரேன்னு சொன்னான்ல அவன்கிட்ட.. அப்போ தூரன் இந்தியால தான் இருக்கானா” என்று கேட்க அப்பொழுது தான் அனைவருக்கும் அது தோன்றியது.
“ஹே ஆமா டி.. அப்போ அவன் இங்க தான் இருக்கானா.. உன்னை சந்திச்சா உனக்கு உண்மை தெரிஞ்சுரும்னு நம்ம முன்னாடி வராம இருக்கானோ..” என்றான் மாறன். அப்பொழுது விழியோ,
“எதுக்கு இவ்ளோ கன்ஃபியூஸ் ஆகணும்… மாம்ஸ் எப்படியும் அக்காக்கிட்ட சொல்லிட்டு தான போவாங்க.. அப்போ தெரிஞ்சுரும்” என்று கூற இனியாவோ,
“அடியே அவன் சொல்லுவான்.. ஆனா எங்க போறான் எதுக்கு போறான்னு சொல்லாம போனா.. என்ன செய்ய” என்க மதுவோ,
“நீ இன்டைரக்ட்டா கேளு.. நாம அவனை ஃபாலோ பண்ணிட்டு போகலாம்.. தூரன நான் சந்திக்கணும்.. அவன் கூட கண்டிப்பா சேர முடியாதுன்னு தெரிஞ்சுட்டு” என்றவள் கலங்கிய கண்களைத் துடைத்தபடி, “கடைசியா அவனைப்பார்த்து பேசிட்டு மட்டும் வந்துருறேன்.. அவனுக்கும் என்கிட்ட சொல்லாம போனது குற்ற உணர்வா இருக்கும்.. இந்த மீட் அதை போக்கிடும்..” என்றவள் தன்னை சமன்படுத்திக்கொண்டு இனியாவிடம்,
“இனியா.. அறிவு உன்கிட்ட ஏதாச்சும் சொன்னா கொஞ்சம் சொல்லு டி ப்ளீஸ்” என்க,
“லூசு.. கண்டிப்பா சொல்றேன்..” என்க பிறகு இனியாவும் விழியும் வீட்டிற்கு சென்றனர். மாலை நேரம் அறிவு இனியாவுக்கு அழைப்பு விடுத்தான்.
