Loading

காலை கனவு 3

சக்தி திருக்குமரன் எப்போதும் அழுத்தம் தான். சிறு வயதிலேயே சரியான ஒன்றில் அழுத்தமாக பிடிவாதமாக நின்றிடுவான்.

“அப்படியே என் அப்பா மாதிரி தெய்வா” என்று கதிர்வேலன் சொல்லி சொல்லியே சக்தி வளரும் போதே ஒருவித ஆளுமையுடன் தான் வளர்ந்தான்.

குடும்பமென்றால் அதீத பாசம். அதிலும் தங்கை அன்விதா என்றால், அவளுக்கு அடுத்து தான் யாவும்.

தந்தைக்கு அடுத்து தொழிலை கையிலெடுத்தவனுக்கு மேலும் மிடுக்குக் கூடிப்போனது. மகனின் கம்பீரம் எந்தளவுக்கு பெருமையாக இருந்ததோ அதே அளவுக்கு தெய்வானைக்கு அவனிடத்தில் பேசவும் தயக்கத்தை உண்டாக்கியிருந்தது.

ஆனால் சக்தி எப்போதும் உறவுகளிடத்தில் இயல்பானவன் தான். அவனது இயல்பே அந்த கம்பீரம் தான்.

“அண்ணனும் தங்கச்சியும் முடிவு பண்ணா ஆச்சா?” என்ற தெய்வானை, “நானெல்லாம் இது விஷயமா பேச அண்ணன் வீட்டுக்கு வரமாட்டேன்” என்றார்.

“நீ வரலன்னா நானும் போகல. சக்தியே சொல்லிப்பான்” என்று கதிர்வேலன் எழுந்திட…

“சக்தியா!” என்று அதிர்ந்தார் தெய்வானை.

“என்ன அதிர்ச்சியாவுற?”

“சக்தி முகத்துக்கு நேரா பட்டுன்னு சொல்லிடுவா(ன்)ங்க” என்றார் தெய்வானை.

“வேறெப்படி சொல்றது?” என்ற கதிர்வேலன், “ரொம்ப அலட்டிக்காத தெய்வா. சக்தி எண்ணத்தை சொன்னா உன் அண்ணனும், தென்னரசியும் புரிஞ்சிப்பாங்க” என்றார்.

சிறுவயது முதலே பெரியவர்களுக்கு இந்த விருப்பம் இருந்தது தான். ஆனால் கல்லூரி வயதிலேயே தெய்வானை விளையாட்டாக, “வெண்மதியை உனக்குத்தான் கட்டி வைக்க இருக்கோம்” என்று சக்தியிடம் பேசிட, அவ்வளவுதான் பார்வையாலே அன்னையிடம் ருத்ரதாண்டவம் ஆடியிருந்தான்.

“இது எங்களுக்கு கல்யாணம் பேசுற வயசா? பெரியவங்களா மதிப்பா பேசுங்கம்மா” என்றிருந்தான்.

அவ்வளவு தான், எப்போதும் சிறுவனாக பின்னால் திரிந்த மகனின் அன்றையத் தோற்றம் தன்னைப்போல் தெய்வானையை மதிப்பாக, மரியாதையாக பார்க்க வைத்திட, அவனிடம் பேசவும் எண்ணி எண்ணி வார்த்தைகளை கோர்க்க ஆரம்பித்திருந்தார்.

சக்தி ஒரு முடிவெடுத்துவிட்டால் அதனை எப்போதும் மாற்ற முடியாதென அப்போதே அனைவருக்கும் அவன் உணர்த்தியிருக்க, மகனின் எண்ணம் தெரிந்த அன்றே தென்னரசியிடம் பேச்சு வாக்கில்…

“பிள்ளைக வளர்ந்து என்னென்ன முடிவு எடுக்கப் போறாங்களோ? அவங்களை மீறி நாம என்னத்த நினைக்கிறது” என்று, பிள்ளைகளை இணைப்பது குறித்து எவ்வித ஆசையும் நமக்கென்று இப்போது வேண்டாமென மறைமுகமாக சொல்லி வைத்திருந்தார்.

இருப்பினும் இன்றைய நாளில் அவர்களின் மனம் என்னவென்று தெரியாது தெய்வானை மனதால் அல்லாடினார்.

******************************

ஃப்ரெண்ட்ஸ் இவன்ட் மேனேஜ்மெண்ட் அருகிலே ஐந்து நிமிட நடையில் தேநீர் கடை ஒன்றிருக்க ஆர்விக், அன்விதா அங்கு தான் வந்திருந்தனர்.

ஒன்றாக நடந்து வந்த போதும் இருவரிடமும் பேச்சென்பதில்லை.

அன்விதா மனதில் உருட்டிக் கொண்டிருக்கும் விடயத்தை தன்னிடம் பகிர்ந்துக்கொள்ளும் வரை அவளின் இந்த மௌனம் நீடிக்குமென பலமுறை அறிந்திருக்கும் அனுபவத்தால் ஆர்விக்கும் எதுவும் பேசாது வந்திருந்தான்.

“வாங்க தம்பி!” அடிக்கடி அங்கு வருவது பழக்கமென்பதால், கடைக்காரர் வரவேற்றார்.

அவருக்கு புன்னகைத்த ஆர்விக், அங்கிருந்த பெஞ்சில் அன்விதா அமர்ந்ததும் சிறு இடைவெளிவிட்டு அமர்ந்தான்.

“இந்தாங்க தம்பி.”

கடைக்காரர் நீட்டிய அடர் பழுப்பு நிற தேநீர் நிரம்பிய இரண்டு கண்ணாடி குவளைகளை வாங்கிய ஆர்விக், தங்கள் இருவருக்கும் இடையில் வைத்தவனாக மற்றொரு காலி குவளையை வாங்கி, தேநீரை ஆற்றி மிதமான சூட்டில் அன்விதாவிடம் கொடுத்தான்.

ஆர்விக்கின் விழிகளை சந்தித்து சிறு புன்னகையோடு வாங்கிய அன்விதா தேநீரை சுவைத்திட, ஆர்விக்கும் தனக்கானதை பருக ஆரம்பித்தான்.

விழிகளால் தன்னவளையும், நாவால் தேநீரையும்.

ஆர்விக்கின் விழி பருகல், பார்த்ததும் மழலையை வருடும் ஆதூரமாய் மட்டுமே இருந்திடும். அன்விதாவுக்கு காதல் இருக்கிறது என்று தெரிந்த நொடி முதல் தன்னுடைய பார்வையிலும் மாற்றம் கொண்டிருந்தான் ஆர்விக்.

ஆர்விக்கின் நேசமெல்லாம் மனதோடு பொத்தி வைக்கப்பட்டவை. அதனின் தீவிர ஆழத்தை அவன் மட்டுமே அறிந்திட்டது.

“அண்ணாக்கு வீட்ல மேரேஜ் பண்ணலாம் நினைக்கிறாங்க.”

“குட் நியூஸ்… இதுக்கெதுக்கு டல்லடிக்கிற?” என்ற ஆர்விக், “திரு என்ன சொல்றாங்க?” எனக் கேட்டான்.

“அண்ணாக்கு வெண்மதியை கட்டிக்க வேண்டாமாம்.” அன்விதாவின் குரலில் ஆழ்ந்த வருத்தம்.

“ஹ்ம்ம்… இது திருவோட மேரேஜ். அப்போ அவருக்கு என்ன விருப்பமோ அதைத்தான செய்யணும்?” என்றவன், “இதுல இப்போ உனக்கென்ன பிரச்சினை?” என்றான்.

“அம்மா, அத்தை, மாமா எல்லாருக்கும் அண்ணாவுக்கு வெண்மதியை கட்டி வைக்கணும் ஆசை” என்று இடை நிறுத்தியவள், மென் குரலில், “கௌதம் மாமாவுக்கும் விருப்பம் இருக்கு” என்றவளாக, காலையில் கௌதம் அழைத்த போது இருவருக்கும் நடந்த பேச்சினைக் கூறியிருந்தாள்.

“இதனால உங்க லவ்” என்ற ஆர்விக் சட்டென்று அடைத்த தொண்டையை சரி செய்தவனாக, “எதுவும் ப்ராப்ளம் வரும் நினைக்கிறியா?” என்றான்.

“அப்படியில்லை… கௌதம் மாமாவுக்கு என்னை ரொம்ப பிடிக்கும். இதுக்காக எல்லாம் என்னை அவாய்ட் பண்ண மாட்டாங்க” என்ற அன்விதா, “இருந்தாலும் ஒரு மாதிரி இருக்கு ஆர்வி” என்றாள்.

“ம்ம்…” என தேநீரை சுவைத்து இரு இதழ்களையும் ஒன்றாக மடித்து தலை அசைத்த ஆர்விக், “உன் முடிவு என்ன? நீ என்ன நினைக்கிற?” என வினவினான்.

“எனக்கு அண்ணா இப்படித்தான் சொல்லுவாங்கன்னு எப்பவோ தெரியும் ஆர்வி. அண்ணா சும்மா விளையாட்டுப் பேச்சுக்கே அம்மாவை அதட்டியிருந்தாங்க. அதனால எனக்கு இதுல எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லை. அண்ணாவுக்கு பிடிச்ச பொண்ணு யார் வந்தாலும் எனக்கு ஓகே தான்” என்ற அன்விதா, “அம்மாவுக்கு அதிக ஆசை இருக்கும்போல” என்றாள்.

ஆர்விக்குக்கு அன்விதாவின் மனம் புரிந்தது. என்னதான் இதனால் தன்னுடைய காதலுக்கு எவ்வித சிக்கலும் வந்துவிடாது என்று அவளே கூறினாலும், அவளுள் சிறு அலைப்புறுதல் இது குறித்து சுழன்றது என்னவோ உண்மை.

“கௌதம் புரிஞ்சிப்பாங்க அன்வி, நீ இதை நினைச்சு ஃபீல் பண்ணாத. இதுல திருவோட மனசும் முக்கியமாச்சே” என்றான் ஆர்விக்.

“எனக்கு இப்போ ஊருக்கு போகவே யோசனையா இருக்குடா. அங்க ரெண்டு பேமிலியும் தான் கோவிலுக்கு போக பிளான். அங்க நான் இருக்கும் போதே எதுவும் பேசினா… எனக்கு எப்படி ரியாக்ட் பண்ணனும் கூட தெரியல” என்றவளின் சுருங்கிய முகத்தைக் கண்டு மென்புன்னகை சிந்தினான் ஆர்விக்.

“என்னடா சிரிக்கிற?” அவனின் தோளிலே அடித்திருந்தாள்.

“திரு உன்கிட்ட என்ன சொன்னாங்க?”

“அண்ணா என்ன சொன்னாங்க… அம்மாவுக்கு இப்படியொரு எண்ணமிருக்கு, உனக்கும் அப்படி ஏதாவது இருக்கா கேட்டாங்க.”

“எப்படி?”

“அதுதாண்டா… வெண்மதியை அண்ணாக்கு…”

“ஓகே ஓகே… அதுக்கு நீயென்ன சொன்ன?”

“டேய் உன்னை கொல்லப்போறேன் பாரேன்” என்று அவனை நோக்கி இரு கைகளையும் நெறிப்பதைப் போல கொண்டுச்சென்றாள்.

“ஹேய்… சில்” என்ற ஆர்விக், “மே பீ… இதனால ப்ராப்ளம் வரலாம். அதுக்காக உன் லவ் அஃபெக்ட் ஆகும் அப்படிலாம் திங்க் பண்ணி ஸ்ட்ரெஸ் பண்ணிக்காத அன்வி” என்றான்.

“ம்ம்ம்…”

“உன்கிட்ட வந்து யாரும் இதைப்பத்தி பேசப்போறது இல்லை. அப்புறம் என்ன டென்ஷன். பார்த்துக்கலாம். அப்படியே கேட்டாலும், இது அண்ணாவோட முடிவுன்னு சொல்லிடு” என்றான்.

சக்தியின் முடிவு குறித்து அன்விதாவிடம் யாரும் பேசிட முடியாதுதான். இதில் அவளும் செய்திட ஒன்றுமில்லை. ஆனால் அனைத்திற்கும் அவளே காரணமாக்கப்பட்டிருந்தாள். இவ்விடயத்தில் சக்தியை விட, அன்விதாவின் தலை தான் அதிகம் உருளப் போகிறது என்பதை ஆர்விக், அன்விதா இருவருமே அக்கணம் நினைத்திருக்கவில்லை.

“வெண்மதிக்கு எதுவும் ஆசை இருந்தா?”

“ஹேய்” என்ற ஆர்விக், “அவள் யூஜி தான படிச்சிட்டு இருக்காள். அவளுக்கு ஒருவேளை அப்படி எதுவும் எண்ணமிருந்தா அவளுக்காக அவள் தான் பேசணும். அப்படியே இருந்தாலும் அவள் திருகிட்ட தான் டீல் பண்ணனும். உன்கிட்ட இல்லை” என்றதோடு, “உன் இல்லாத மூளையை ரொம்ப குழப்பி உருகி ஓடவிடாத” என்றான்.

“என்ன கிண்டலா” என்ற அன்விதா தேநீர் குவளை காலியாகவே பெஞ்சில் வைத்தாள். அவனும்.

இருவருக்குமிடையே அவர்கள் பருகிய தேநீர் குவளைகள்… அவர்களின் பேச்சுக்களை தங்களுக்குள் மறைத்துக்கொண்டு.

“இந்த டீயும் நீயும் இருந்தா போதும்டா… அதுவும் டீ குடிச்சிட்டே உன்கிட்ட பேசினா போதும்… எல்லாமே சரியாகிடும்” என்றவளிடம், அவனிடத்தினால் கொண்ட நிறைவு.

“சரி போகலாம்” என்று எழுந்துகொண்ட அன்விதா, இம்முறை சலசலத்துக்கொண்டே வந்தாள்.

அலுவலகத்திற்குள் நுழைந்ததும்,

“நைட் டென்’க்கு பஸ் ஆர்விக்” என்றாள் அன்விதா.

“நினைவிருக்கு” என்றவன், தனக்கான வேலைகளை கவனிக்கலானான்.

*****************************

“எங்க கிளம்பிட்ட ஆர்வி?”

இரவு உணவினை முடித்துக்கொண்டு வெளியில் செல்ல ஆயத்தமாகிய மகனிடம் அனிதா கேட்டார்.

“அன்வி ஊருக்குப் போறாம்மா. பஸ் ஸ்டாப் வரை ட்ராப் பண்ணிட்டு வரேன்” என்றான்.

அங்கு அமர்ந்திருந்த யாஷ் நண்பனை முறைத்துக் கொண்டிருந்தான்.

“என்னவாம் டா உனக்கு?” என்ற ஆர்விக், “நீ வரியா?” என்றான்.

“நான் எதுக்கு?” என்ற யாஷ், “இவனால எப்படிம்மா முடியுது?” என்றான். ஆயாசமாக!

“என்னாச்சு யாஷ். என்ன கோபம் உனக்கு?” என்று அவனின் அருகில் அமர்ந்தார் அனிதா.

“அவள் இவனுக்கு இல்லைன்னு ஆகிப்போச்சு. கொஞ்சம் டிஸ்டென்ஸ் மெயின்டெய்ன் பண்ணலாம்ல” என்றான்.

“அவளை நான் லவ் பண்றதுக்கு முன்னாடி அவள் என் ஃப்ரெண்ட்” என அழுத்தமாகக் கூறினான் ஆர்விக்.

“சந்தோஷம்” என்ற யாஷ், “எப்பவும் வலியோட வாழ முடியாது ஆர்வி” என்று நிதர்சனத்தைக் கூறினான்.

புரிந்தாலும் மீள முடியாது அவனால். கரையேற அவனே எண்ணம் கொண்டிடாத போது எப்படி கடந்திட முடியும்?

“புரிஞ்சிக்கிட்ட ஒரு விஷயம் எப்பவும் வலி கொடுக்காது யாஷ்” என்ற ஆர்விக், “அவளை ஹாஸ்டல் போயிட்டு பிக்கப் பண்ணி பஸ் ஸ்டாப் போகணும் அனி. நான் திரும்பிவர லேட் நைட் ஆகும். நீங்க வெயிட் பண்ணாம தூங்குங்க” என்றதோடு, “நான் வரவரை நீ மேல போயிடாத” என யாஷிடமும் கூறியவனாக வெளியேறினான்.

“இவன் ஏ(ன்)ம்மா இப்படி இருக்கான்?”

“என்னாச்சு யாஷ்?”

“அன்வி பிரதருக்கு மேரேஜ் பேசுறாங்க. அடுத்து அவளுக்குத்தான். அவன் இன்னமும் இப்படி அவளோட லவ்வுல இருக்கிறது எனக்கு பயமா இருக்கும்மா.” நண்பனாக அவன் கவலை கொள்வது அனிதாவுக்கு மகிழ்வாக இருந்தது.

“ஆர்விக்கு நாம சொல்லணும் அவசியமில்லை யாஷ். லவ் இருந்தாலும் அதை வெளிக்கட்டிக்காம இருக்கானே! அது போதாதா?” என்றார் அனிதா.

“நீங்களாவது சொல்லலாமே!” ஆதங்கமாகக் கூறினான்.

“இதுல நான் சொல்ல ஒன்னுமேயில்லை யாஷ். இது ஆர்வியோட விருப்பம். அவன் மனசு தெரிஞ்சும் என்னால வேண்டாம் சொல்ல முடியாது” என்றார்.

“அப்போ அவனுக்குன்னு ஒரு வாழ்க்கை வேணாமா?”

“இப்போ அவன் வாழ்க்கைக்கு என்னடா குறை?”

“எல்லாமே குறை தான். எல்லாம் இந்த லவ்வால வந்தது” என்ற யாஷ், “உங்களுக்கு அப்புறம் அவனுக்குன்னு யாரும் வேணாமா?” எனக் கேட்டான்.

“அதான் நீ இருக்கியேடா. அவனை பார்த்துக்கமாட்டியா?”

“அச்சோ அம்மா… உங்களுக்கு புரியுதா? இல்லையா?” சற்று உரக்க வினவிய யாஷின் தலையில் கை வைத்து எடுத்த அனிதா,

“புரியாம இல்லை… ஆனால் ஆர்வியோட மொத்த சந்தோஷமும் அவனோட காதல் தான். உள்ளுக்குள்ள அந்த உணர்வுகளோடவே வாழ்ந்துட்டு இருக்கான். அவனுக்கு ரொம்ப பிடிச்சதை நான் எப்படி வேண்டாம் சொல்றது யாஷ்? அவனுக்கு வலி கொடுக்கும் தெரிஞ்சும், என்னால எப்படி முடியும்?” என்றார்.

“வலிக்கும் தெரிஞ்சுதான் எல்லாமே நடக்குதும்மா. எதுதான் வலி அண்ட் கஷ்டம் கொடுக்கல?”

மென்னகை உதிர்த்த அனிதா,

“அன்வியோட சந்தோஷத்தில் தான் ஆர்வியோட வாழ்க்கை இருக்கு யாஷ்” என்றார்.

“அதுக்காக கௌதமை விட்டு அவளை ஆர்வியை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்க முடியுமா?”

“நான் சொல்றது உனக்கு புரியல” என்ற அனிதா, “அன்வி கல்யாணம், குடும்பம் அப்படின்னு சந்தோஷமா வாழ ஆரம்பிச்சிட்டா, ஆர்வி அவன் லவ்ல இருந்து மூவ் ஆன் ஆகிடுவான் சொல்றேன்” என்றார்.

“உங்களுக்கு அப்படி தோணுதா?”

“இங்க நம்பிக்கைங்கிற வார்த்தையில் தான் எல்லாமே நகருது யாஷ்…”

“உங்களால தான் அவன் இப்படி இருக்கான். ஆர்விகிட்டவே அன்வி அவளோட லவ் கதையெல்லாம் பேசுறா! அப்போலாம் ஆர்வி முகத்துல இருக்க சிரிப்புக்கு பின்னால இருக்க வலி எனக்கு புரியுதே! இதெல்லாம் அவன்கிட்ட ஏன் சொல்ற அன்வின்னு கத்தணும் போல வருதே! நான் என்ன பண்ணட்டும்?” என்றவனின் வருத்தமெல்லாம் வெகு விரைவில் மேகமாக கலைந்து செல்லக் காத்திருக்கிறது.

“அவனுக்காக ஃபீல் பண்ணது போதும். போய் தூங்குடா” என்றவர், தன்னுடைய அறைக்குச் சென்றார்.

இன்று அன்விதாவுடன் பேசிவிட்டு வந்த ஆர்விக், யாஷ் என்னவென்று கேட்டிட அனைத்தும் மேலோட்டமாகக் கூறியிருந்தான். யாஷுக்கு அதனால் வந்த சிடுசிடுப்பு இது.

“அவளை நினைச்சு உருகிட்டு இருக்க உன்னால எப்படிடா, அவளோட லவ்க்காக யோசிக்க முடியுது” என்று அப்போதே ஆர்விக்கிடம் கத்தியிருந்தான் யாஷ்.

“எனக்கானது நடக்கல அப்படிங்கிறதுக்காக, அவளோடது நடக்கக்கூடாதுன்னு நினைக்கிறது தப்புடா” என்ற ஆர்விக்கின் மண்டையிலே நாலு கொட்ட வேண்டும் போலிருந்த கோபம், வீட்டிற்கு வந்த பின்பும் தணியாதிருக்க, அனிதாவிடம் ஆதங்கமாக அனைத்தையும் வார்த்தைகளாகக் கொட்டியிருந்தான்.

*******************************

கிளாம்பாக்கம்… பன்முனை பேருந்து நிலையம்.

“எதையும் நினைச்சு குழப்பிக்காம போயிட்டு வா அன்வி…” என்று காரிலிருந்து இறங்கினான் ஆர்விக்.

மறுபக்கமிருந்து அன்விதா இறங்கிட அவளது பையை தான் வாங்கிக்கொண்டான்.

“சிட்டி உள்ள இருந்து இங்க வரவே ஊர்பயணம் மாதிரி இருக்கு” என்றவள், “உள்ள கொடைக்கானல் பஸ் நிக்கிற இடம் போக அரை மணிநேரம் நடக்கணும்” என்றாள். அலுப்பாக.

“ஜஸ்ட் நைட் வாக் நினைச்சுக்கோ…” என்ற ஆர்விக், “ஷட்டில் பஸ் வருதா வெயிட் பண்ணுவோமா?” எனக் கேட்டான்.

(Shuttle bus – நுழைவிலிருந்து வளாகத்திற்குள் மட்டும் பயன்படுத்தப்படும் வாகனம்.)

“இங்கிருக்க கூட்டத்தைப் பார்த்தியா? நம்மால ஏற முடியுமா?” என்றவள், “வா நைட் வாக் பண்ணுவோம்” என்று நடந்தாள்.

“சாப்பிட்டியா?”

“அதெல்லாம் ஹாஸ்டல் மெஸ்லே ஆச்சு” என்ற அன்விதா, கௌதமிடமிருந்து அழைப்பு வரவே ஏற்றிருந்தாள்.

அன்விதா கௌதமிடம் பேசிக்கொண்டே நடந்திட, அவளுடன் இணைந்து நடந்துகொண்டிருந்த ஆர்விக் தன்னைப்போல் நடையின் வேகத்தைக் குறைத்து பின் தங்கினான்.

“சொல்லு மாமா!” அன்விதாவின் அவ்வார்த்தை ஆர்விக்கு புதிதல்ல. ஆனால் அவளுடனான தருணங்களில் அவ்வார்த்தையை கேட்க நேரிடும் நொடிகளில் எல்லாம், அவ்வார்த்தையில் தெறிக்கும் காதலில், உரிமையில் ஆர்விக்கின் இதயம் துடித்தடங்கும்.

எப்போதும் போல் இப்போதும் பெரும் வலி ஒன்று நெஞ்சத்தை சூழ்ந்திட, மென் முறுவலோடு ஏற்றுக்கொண்டான்.

அன்விதாவின் பேச்சு தனக்கு கேட்காத இடைவெளியில் அவளை பின் தொடர்ந்தான்.

“கிளம்பிட்டியா?”

“ம்ம் பஸ் ஸ்டாப் வந்துட்டேன். முன்னவே புக் பண்ணதுதான். லேட் ஆனாலும் வெயிட் பண்ணுவாங்க” என்ற அன்விதா, “நீ வர முடியுமா பாரு மாமா!” என்றாள்.

“ரொம்ப தேடுற மாதிரி தெரியுது” என்ற கௌதம், “ஆர்விக் கூட வந்திருக்கானா?” எனக் கேட்டான்.

“ம்ம்… எனக்கு டிரைவர் வேலை பார்க்க வந்திருக்கான்” என்று திரும்பிய அன்விதா, ஆர்விக் சில அடிகள் பின் இருக்கவே, அவனின் அருகில் சென்று, பிடித்து இழுத்தவளாக, “வாடா” என்று இணைந்து நடந்தாள்.

“மாமாவை கேட்டு யாரோ வந்தாங்களாம்?” கௌதம் கேட்க, அன்விதாவுக்குமே இது புதிய செய்தி.

“எனக்குத் தெரியாது மாமா” என்றவள், “யார் சொன்னா?” எனக் கேட்டாள்.

“மாம்ஸ் உன்கிட்ட சொல்லாம இருக்கமாட்டாரே” என்ற கௌதம், “அப்பா சொன்னதா அம்மா சொன்னாங்க. யாருன்னு எனக்கும் தெரியல. நாளைக்கு அப்பாவே கல்யாணப் பேச்சு எடுத்திடுவார் நினைக்கிறேன்” என்றான்.

“போச்சுடா!” தன்னைப்போல் கலக்கமாகக் கூறியிருந்தாள்.

ஆர்விக்கு கௌதம் பேசியது கேட்காததால், அன்வியை என்னவென்று பார்த்தான்.

“என்ன அன்வி உங்க வீட்டுல எதுவும் எங்களுக்குத் தெரியாம நடக்குதா?” என கௌதம் கூர்மையாகக் கேட்டிட, “அச்சோ மாமா எனக்கும் ஒன்னும் தெரியாது. நாளைக்கு வீட்டுக்கு போன அப்புறம் தான் அங்க என்னன்னு தெரியும்” என்றாள். படபடவென.

“எப்படியோ மாமா கல்யாணப் பேச்சு ஸ்டார்ட் பண்ணா எனக்கு சந்தோஷம் தான்” என்று கௌதம் சொல்ல…

“ரொம்ப எதிர்பார்க்குற மாதிரி தெரியுது” என அன்விதா கிசுகிசுப்பாகக் கேட்டிட,

ஆர்விக் அகம் தைத்த முள்ளினை ஏற்றவனாக தடுமாறி நின்றான்.

“நம்ம ரூட் கிளியர் ஆகுமே” என்ற கௌதம், “சீக்கிரமே உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு கூடவே வைச்சிக்கணும் போல இருக்குடா” என்றான் காதலாக.

“எனக்கும்” என்று வெட்கத்தோடு மொழிந்த அன்விதா, “ஆர்வி இருக்கான் மாமா. நான் பஸ் மூவ் ஆனதும் கால் பண்றேன்” என்று அழைப்பினை வைத்துவிட்டு ஆர்விக்கைப் பார்த்தாள்.

“நீ என்னடா அப்பப்போ நின்னுட்ற?” என்றவள், “டீ வேணுமே” என்றாள்.

அவளின் கையில் தேநீரை திணித்த ஆர்விக், “இதுக்குதான் நின்னேன்” என்று சமாளித்தான்.

“எனக்கு மாமா கிட்ட பேசின அப்புறம் எங்க லவ் பத்தின பயமே போச்சுடா ஆர்வி” என குதுகலித்துக் கூறினாள்.

கௌதமிடம் சக்தியின் திருமணம் பற்றி தங்களின் முடிவை வெளிப்படையாக சொல்லாவிட்டாலும், அவனுக்கு தன்மீது இருக்கும் காதல் போதும், தடைகள் வந்தாலும் அவனே அதனை முறியடித்திடுவானென்று நம்பிக்கை கொண்டிருந்தாள்.

அந்த நம்பிக்கை எல்லாம் கண்ணாடித் துண்டங்களாக சிதறவிருக்கின்றன.

“எப்போ ரிட்டர்ன் அன்வி?”

“டூ டேஸ் தான் பிளான். இப்போ இருக்க சிட்டுவேஷனுக்கு அங்கபோனாதான் அடுத்து என்னன்னு தெரியும்” என்றவள், “பை டா” என்று பேருந்தில் ஏறிட, அவளது கையிலிருந்த அலைபேசி தவறி கீழே விழுந்தது.

“போச்சு” என்றவள் தரை விழுந்த அலைபேசியை எடுக்கும் முன்பு ஆர்விக் எடுத்திருந்தான்.

“டிஸ்பிளே புரோக்ட்” என்றவன் அலைபேசியை திறக்க முயற்சிக்க, அது மொத்தமாக தனது உயிரை துறந்திருந்தது.

“நியூ வன் தான் வாங்கணும்.”

அன்விதா கவலையாக அலைபேசியை வாங்கி திருப்பி திருப்பி பார்த்திட…

“எதுக்கு இப்போ இவ்ளோ ஃபீல் பண்ற? என் மொபைல் வைச்சிக்கோ” என்று தன்னுடையதை நீட்டினான்.

“இது கௌதம் மாமா வாங்கிக்கொடுத்த மொபைல் ஆர்வி” என்றவள், “ம்ப்ச்… உனக்கு பிஸ்னஸ் கால்ஸ் வரும்” என்று மறுத்தாள்.

“இட்ஸ் ஓகே… அன் டைம் டிராவல்… ஏதாவதுன்னு காண்டாக்ட் எப்படி பண்ணுவ” என்றவன் சொல்லியதை மறுத்தவள், “மார்னிங் வீட்டுக்கு போயிட்டா மொபைலுக்கு வேலையே இருக்காது. அண்ணாகிட்ட சொன்னா நாளைக்கே வாங்கிக் கொடுத்திடுவார்” என்றாள்.

“ம்ம்.”

தனியார் பேருந்து என்பதால், நடத்துனரிடம் பேசி அவரின் அலைபேசி எண்ணை வாங்கிக்கொண்டான் ஆர்விக்.

“எல்லாரும் வந்தாச்சா” என்று நடத்துனர் இருக்கைகளை சரிபார்க்க,

“ஓகே பை ஆர்வி. அண்ணாக்கும், கௌதமுக்கும் கால் பண்ணி சொல்லிடு” என்று தனக்கான இருக்கையில் சென்று அமர்ந்தாள்.

எதிர்பாராத நிகழ்வுகளை எதிர்நோக்கி அவளின் பயணம் ஆரம்பமாகியது.

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 44

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
28
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்