Loading

விசை-17 

ஒரு வார காலம் ஓடியிருந்த நிலையில், புலர்ந்த அழகிய மாலைப் பொழுது அது. பூ அலங்காரங்களுக்கு மொத்தமாகப் பூக்கள் கொள்முதல் செய்வதைப் பற்றி ஒரு நம்பகமான வியாபாரியிடம் பேச்சுவார்த்தை நடத்தப் போயிருந்தாள் இறைவி.

அவளுக்கு அவர்களுடனான ஒப்பந்தம் மகிழ்ச்சியையே கொடுத்திருந்தது. அவள் எதிர்பார்க்கும் விலைப்பட்டியலின் கீழ், பல வகையான பூக்களை அவர்கள் விற்பனை செய்வதைத் தெரிந்துகொண்டவள் மிகுந்த மகிழ்வுடனே புறப்பட்டிருந்தாள்.

உற்சாகத்துடன் வந்தவள், பேருந்து நிலையத்திற்கு வந்ததும் முகிலுக்கு அழைத்திருந்தாள். அழைப்பை ஏற்ற முகில், “சொல்லு கேர்ள்” என்க,

“முகி நான் செம்ம ஹாப்பி.. ஏன் சொல்லு” என்றாள்.

“என்னடா? என்ன மேட்டர்?” என்று அவன் கேட்க,

“அந்த பூ டெகரேஷன்ஸ்கு ஒருத்தர்ட பேசப்போனும்னு சொல்லிட்டுருந்தேன்ல? அவங்கட்ட பேசினேன். ப்ரைஸ் அன்ட் வெரைட்டீஸ்லாம் நமக்கு ஏற்ற போல ரொம்ப அஃபார்டபிலா இருக்குதுடா” என்று கூறினாள்.

“ஹே சூப்பர் இரா.. செம்ம. அப்றம் என்ன? ஸ்டார்ட் பண்ணிடலாம்ல?” என்று முகில் கேட்க,

“ம்ம் டா.. இன்னும் கொஞ்சம் செட் அப் பண்ணனும். பேஸ் ஸ்டிராங் ஆனதும் ஆரமிச்சடலாம்” என்றாள்.

அத்தனை சந்தோஷத்துடன் பேசிவிட்டு அவள் அழைப்பைத் துண்டிக்க,

அலைபேசியையே பரிவான புன்னகையுடன் பார்த்திருந்தான் முகில்.

தற்போது அவனுக்கு மதியிடமிருந்து அழைப்பு வந்தது. மெல்லப் புன்னகை மங்கி, முகம் சோகத்தைத் தத்தெடுத்துக்கொள்ள, அலைபேசியையே பார்த்திருந்தான்.

“அடென்ட் பண்ண மாட்டியா முகி மாமா?” என்று அவனுக்குப் பின்னிருந்து அவள் குரல் கேட்க,

வீட்டுத் தோட்டத்துக் கல் மேஜையில் அமர்ந்திருந்தவன் சட்டென எழுந்து திரும்பிப் பார்த்தான்.

கண்களில் கண்ணீர் பளபளக்க அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள், மதிவதனி.

“என்னாச்சு முகி மாமா? ஒரு வாரமா நீங்களும் கால் பண்ணலை நான் பண்ணாலும் எடுக்கலை. நாலு நாள் முன்ன போட்ட டெக்ஸ்ட் கூட இன்னும் ஓபன் பண்ணி பார்க்கலை. அத்தைக்குக் கூப்பிட்டு உங்கள்ட குடுக்க சொன்னா கூட, வேலையிருக்குனு வைக்குறீங்க. என்னாச்சு?” என்று கோபம் பாதி, சோகம் மீதியாய் மதி கேட்க,

அவனுக்குப் பதில் கூற இயலவில்லை.

அவனுக்கு அவளிடம் பேசக்கூடாதென்ற எண்ணமெல்லாம் இல்லை. செந்தில் பேசியதிலும், அதனால் இறைவி கதறித் துடித்ததிலும் அதிகம் ரணப்பட்டுப் போனவனுக்கு அக்காயம் ஆற நாட்கள் தேவையாகப்பட்டது. எங்கே செந்தில் மீதுள்ள கோபத்தை மதியிடம் காட்டிவிடுவோமோ என்று அஞ்சியே அவளிடம் பேசாதிருந்தான்.

தற்போது அதுவே அவளை வதைத்திருப்பது அவள் முகம் பார்க்கும்போது புரிய, அவனுக்கு என்ன பேசுவதென்றே புரியாத நிலை.

அவன் முன் வந்து நின்றவள், “நா..நான் எதும் உங்கள ஹர்ட் பண்ணிட்டேனா மாமா?” என்று பரிதாபக் குரலில் கேட்க,

“ச்ச இல்லடாம்மா” என்றான்.

“அப்றம் ஏன் மாமா பேசலை?” என்று கேட்டவளுக்கு என்ன பதில் கூறுவதென்று அவனுக்குத் தெரியவில்லை.

“மாமா..” என்றவள், “என்மேல எதும் வருத்தமா? எதுவாருந்தாலும் சாரி மாமா” என்று மதி கூற,

“மதி..” என்றவன் அவளைத் தன் அணைப்புக்குள் நிறுத்தியிருந்தான்.

“மாமா..” என்று அவன் கலக்கம் புரியாது அவள் வினவ,

“சாரி மதிமா..” என்றான்.

“என்னாச்சு மாமா?” என்று அவள் புரியாது அவன் நெஞ்சில் நாடி பதித்து முகம் நிமிர்ந்து கேட்க,

அவள் தலையை வருத்தமாய்க் கோதினான்.

அவனுக்கு அவளிடம் சொல்லவும் சங்கடமாகத்தான் இருந்தது. ஆயிரம் இருப்பினும் செந்தில் அவளுடைய தந்தை. தாயில்லா மகளைத் தனித்து வளர்த்தவர். அவளுக்கு அவள் அப்பா என்றால் உலகமாயிற்றே. நிச்சயம் இந்த விடயம் தெரிந்தால் அவள் தந்தைக்கு ஆதரவாக நிற்கமாட்டாள் என்பது உறுதியே. அது அவன் அறிந்ததும் கூட. ஆனால் செந்திலிடம் சென்று சண்டையிடுவது இன்னும் மனஸ்தாபங்களை உருவாக்குமென்று கருதினான். அதுவுமில்லாமல் இறைவியும் மதியிடம் இதையெல்லாம் கூறக்கூடாது என்று கண்டிப்பாகக் கூறியிருக்க, என்ன கூறுவதென்று புரியவில்லை.

“மாமா..” என்று மீண்டும் அழைத்தவளைக் குனிந்து பார்த்தான்.

கலங்கிப் பளபளக்கும் விழிகள், சிவந்த நாசி, துடிக்கும் அதரம்…

அவள் முகத்திலேயே அவன் பார்வை நிலைத்திருக்க, அவளுக்கு ஒருவிதக் கூச்சம் படரத் துவங்கியது.

இமை தாழ்த்தியவள், தயக்கமாக, “மா..மா..” என்க,

அவள் தாடைப்பற்றித் தன்னை நோக்கச் செய்தான்.

அடிவயிற்றில் என்னென்னவோ செய்ய, தயக்கமாய் அவனைப் பார்த்தாள்.

இங்கும் அங்கும் உருளும் அவளது கருமணிகள், அவன் இதழை மென்மையாய்ப் புன்னகைக்க வைத்தது.

அவன் புன்னகை அவளை அச்சம் கொள்ள வைத்தது.

அவன் அணைப்பும், நெருக்கமும், மெல்ல மெல்ல உரைத்து நாணம் படர, செம்மை பூசும் அவள் கன்னங்களைப் பார்த்தான். அவன் புன்னகை இன்னும் விரிந்தது.

அவள் தோள் சுற்றி வளைத்திருந்த கரம் மெல்ல இடை சுற்றி வளைத்துக் கொள்ள,

அவள் உடல் சிலிர்த்தடங்கியது.

வளைத்துக் கொண்ட கரம் வலுபெற, அவனை நிமிர்ந்து பார்த்து திருதிருவென விழித்தாள்.

“மதி..” என்று காற்றுக்கும் கேட்குமோ என்ற சந்தேகத்துடன் மென்மையாய் அழைத்தபடி அவளை நோக்கி அவன் குனிய, அவள் இமைகள் அவளையும் மீறித் தாமாய்க் மூடிக் கொண்டன.

துடிக்கும் அவள் அதரங்களைப் பார்வையிட்டவன், அதன் துடிப்பதை தனதாக்கியிருக்க, முதலில் அதிர்ந்து விழித்தவளும், மெல்ல மெல்ல அவன் தீண்டலில் சிக்கிக் கொண்டாள்.

பூட்டிக்கொண்ட இதழ்கள் கொடுத்த பரவசம் இருவருக்குமே புதிது. தொட்டுப் பேசியதே இருவருக்கும் அரிதாகியிருந்த நிலையில், என்ன பூதம் புகுந்து அவள் இதழ் முற்றுகையிட முனைந்தான் என்று அவனும் அறிந்திருக்கவில்லை, அவன் தீண்டலிலேயே வெடவெடத்துப் போனவள், எந்தத் தைரியத்தில் அவன் இதழ் முத்தம் ஏற்று கட்டுண்டு இருந்தாள் என்று அவளும் அறியவில்லை.

ஆனால் முதல் முத்தம், இருவரையும் அதன் பலவர்ண உணர்வுகளுக்குள் கட்டுண்டு கரையவைத்தது.

இடம் பொருள் மறந்து, அவளைத் தீண்டிவிட்டவன் தான், முதலில் சுயம் மீண்டதும். அவனுக்கே அவனது செயல் அதிர்வைக் கொடுத்திட, அதில் திடுக்கிட்டுப்போய் அவளிலிருந்து பிரிந்தான். அவன் கடத்திக் கொண்டிருந்த உணர்வு சட்டென்று தடைபட்டு கண்விழித்தவளும் அப்போதே சுயம் உணர, வெடவெடத்துப்போய் அச்சத்துடன் அவனை நோக்கினாள்.

அவன் பார்வையைச் சந்திக்க இயலாத நாணம் தடை போட, அதிர்ந்து உடல் நடுங்கிய நிலையில், அப்படியே அவனை ஏறெடுத்தும் பார்க்காமல் திரும்பி ஓடியே இருந்தாள்.

“ம..மதி..நா..” என்று அவன் பேச வந்தவை எதையும் கேட்கும் நிலையில் அவள் இல்லவே இல்லை. அச்சத்தின் பிடியில், செய்துவிட்ட செயல் கொடுத்த நடுக்கத்தில் அவன் முகம் கூட பார்க்க இயலாது ஓடியிருந்தாள்.

“அய்யோ.. என்ன காரியம் பண்ணேன்?” என்று வெட்கத்துடன் முனகியவன் சுற்றி முற்றிப் பார்க்க, அந்திவானம் மட்டுமே அவர்கள் முதல் சஞ்சரத்தின் சாட்சியாய்.

மந்தகாசப் புன்னகை தோன்றிய அதே கணம், அவன் வளர்ந்த விதம், சூழல், அவளது வயது என்று யோசிக்கையில் ‘அய்யோ’ என்றானது.

அங்கு வெகுநேரமாகப் பேருந்திற்காகக் காத்திருந்து சலித்துப்போனாள் இறைவி. ‘சம்பாதிச்சு முதல்ல என்ன வாங்குறோமோ இல்லயோ ஒரு வண்டி வாங்கனும்’ என்று அவள் மனதோடு கூறிக் கொள்ள, அவள் மனம் கவர்ந்த மண்ணாளன் அவ்விடம் வந்தான்.

தனது இருசக்கர வாகனத்தில் அவ்விடம் வந்துகொண்டிருந்தவன் மனமெல்லாம் சற்றுமுன் நடந்தவற்றிலேயே உழன்றது.

அவனும் ராஜும் மட்டுமே அவ்வறையில்… “இது டைரக்டர் அன்புராஜ்.. அந்தளவு இல்லைனாலும் ஓரளவு நாதனுக்குப் பழக்கமான ஆள். நாதன் வீட்டு விசேஷங்கள் சிலதுக்கு விருந்தினராப் போயிருக்காரு. நாதன்கூட நல்ல பேச்சுவார்த்தையும் இருக்கு” என்று அய்யனார் கூற,

“இது வேல்முருகன் சார். ஆன்மீகச் சிந்தனையாளர். நாதனோட ரொம்ப நெருங்கிய பழக்கமுண்டு. இவருக்குனு ஒரு மடம் இருக்கு. மனநிம்மதிக்காக நாதன் அடிக்கடி அங்கப்போறதா சொல்லப்படுது. அந்த மடத்துக்கு நன்கொடைகள் பல அவன் குடுத்ததாகவும் கேள்விப்பட்டேன்” என்று ராஜ் கூறினான்.

“வெல்.. இது ஆல்பர்ட்.. டாக்டர்.. இவனுக்கு நாதன் இவரோட ஆஸ்பிடலுக்கு டோனேஷன் நிறையா கொடுத்ததா ரெக்கார்ட்ஸ் இருக்கு. என்னோட சந்தேக லிஸ்ட்ல இவங்க ரெண்டு பேரையுமே எடுத்துருக்கேன். ஏன்னா ரெண்டுபேர்கிட்டயும் நாதனுக்கு கனெக்ஷன் இருக்குறதுக்கு ஒரு ஒற்றுமை இருக்கு. டைரக்டர் அன்புராஜோட மூவி ஒன்னு போதைப்பொருள் உட்கொள்றதோட இன்னல்களைப் பற்றின விழிப்புணர்வு படத்துக்கு நாதன் சப்போர்ட் பண்ணி பணம் எல்லாம் குடுத்துருக்கான். அதேபோல இந்த டாக்டர் ஒரு போதை ஒழிப்பு முகாம் நடத்தி அதுக்குத் தலைமை விருந்தினரா போயிருக்கான்” என்று அய்யனார் கூற,

“சார்.. இவங்கட்டயும் நான் அதே ஒற்றுமைலதான் எடுத்தேன்” என்று ராஜ் கூறினான்.

அய்யனார் அவனை அமைதியான பார்வையோடு நோக்க,

“இந்த வேல்முருகன் போதையால அடிமைபடுத்தப்பட்ட இளைஞர்களுக்கு ஆன்மீகச் சொற்பொழிவுகள் எல்லாம் ஆற்றியிருக்கானாம். அதேபோல இதோ இந்த ஃபோட்டோல இருக்குறவன் ஒரு பிஸ்னஸ் மேன். பேரு அரசன். சமீபமா வெளிநாட்டுலருந்து போதைப்பொருளை மறக்க வைக்க ஒரு மருந்து கொண்டுவரப்போறதா அறிவிச்சிருக்க, அதை பாராட்டி நாதன் பேசிருக்கான். இந்த பிஸ்னஸ் மேன் இவனுக்கு ஏதோ குடும்ப வழியில் சொந்தம் போல. தூரத்து சொந்தம்தான் சார்” என்று ராஜ் கூறினான்.

“போதைப்பொருளை ஒரு பக்கம் இவனே சேல்ஸ் பண்ணிட்டு அதுல எந்த சந்தேகமும் வந்துடக்கூடாதுனு இப்படியெல்லாம் செஞ்சு ஊரை ஏமாத்துறான் ராஸ்கல்” என்ற அய்யனார், “இவங்க நாலு பேர்தான் நம்மோட இப்போதைய டார்கெட் ராஜ்.. என் பக்கம் இந்த கேஸ்ல சந்தேக வட்டத்தில் எடுக்கும் அளவு யாரும் பிடிபடலை. உங்க பக்கமும் அந்த அஷ்ஷுரன்ஸ் இருந்தா இவங்களை இப்போதைக்கு வாட்ச் பண்ணுவோம்” என்று அய்யனார் கூற, ராஜும் சரியென்றான்.

வழக்கை இருவர் மட்டும் அமைதியாகக் கையாளுவதால், இது சார்ந்து காவல் நிலையத்தில் ஏதும் பேச இயலாது போனது. அதனாலேயே அவ்வப்போது இப்படித் தனியே எங்கேயாவது கூடி பேசிக் கொள்வர் இருவரும். அதன்படி இன்றும் தனியே ஒரு இடத்தில் சந்தித்துப் பேசிக் கொண்டு வீடு திரும்பினர்.

அப்படித் திரும்பித் தனது வண்டியில் சென்று கொண்டிருந்தவனைத் தற்செயலாகப் பார்த்த இறைவியின் மனதிற்குள் அவளையும் அறியாது ஒரு பரவசம் வந்து போனது.

அது அடுத்த கணமே துடைத்தெடுத்தாற்போல், வண்டியோடு சரிந்துகொண்டு அவன் கீழே விழும் காட்சி அவளைப் பதற வைத்தது.

முன் பின் அறியாத மனிதர்கள் முகத்தைக் கைக்குட்டையால் மறைத்து, அவன் வந்துகொண்டிருந்த இருசக்கர வாகனத்தை இடித்திருக்க, அதை எதிர்பார்க்காத அய்யனாரும் நிலைதடுமாறி விழுந்திருந்தான்.

அவன் சுதாரிக்கும் முன்பே, அவனை இடித்துக் கீழே தள்ளியிருந்த அந்த முகமூடிக் காரர்கள் கையில் அரிவாளை எடுத்திருக்க, இங்கு இறைவியின் இதயமே அதன் துடிப்பை நிறுத்தியிருந்தது.

அய்யனாரை நோக்கி அவர்கள் அரிவாளை வீச, சுதாரித்து அவன் பிரண்டு விட்டபோதும், அவன் முழங்கைக்கு மேல் பகுதியை கீறியிருந்தது.

அவன் முகம் சுருங்கியதில், அவள் மனம் கசங்கியது.

பதட்டமான பூவவளின் காதல் மனம், அடுத்த கணம் எதையும் யோசிக்கவேயில்லை. அவனை நோக்கி ஓடி வந்தவள், “சார்..” என்று பதட்டமாய்க் கத்தி அழைக்க,

அந்த முகமூடிக்காரன் அவளைத் திரும்பிப் பார்த்துவிட்டு மீண்டும் தன் அரிவாளை ஓங்கினான்.

இம்முறை அவன் ஓங்கிய அரிவாளைப் பிடித்திருந்த அய்யனார், அவனை எட்டி உதைத்துக் கீழே தள்ள, சுற்றிலும் சூழல் பதட்டத்திற்கு உள்ளானது.

கூட்டம் கூடுவதைக் கண்டவனுக்கு, அய்யனார் எழுந்து நின்றிடவும் பயம் சூழ்ந்துகொள்ள, அவன் தள்ளாட்டத்தைப் பயன்படுத்தி மீண்டும் வெட்ட முன் வந்தவன் எதிர்பாராத வகையில், அவனைப் பிடித்துத் தள்ளியிருந்தாள் இறைவி.

அவளை மீறி அவள் கண்கள் கண்ணீரைக் கொட்டிக் கொண்டிருந்தது. அவளைச் சற்றும் எதிர்பாராத அய்யனார், தனக்கான தவிப்பை அவள் கண்களில் கண்டான்.

அந்த முகமூடிக்காரன் கீழே விழுந்து தடுமாறி எழ,

“டேய்.. வுட்டு வாடா” என்று அவனுக்காக வண்டியில் காத்திருந்த மற்றொரு முகமூடிக்காரன் எங்கே மாட்டிக்கொள்வோமோ என்ற பயத்தில் கத்தினான்.

சுற்றிலும் ஆட்கள் கூடுவதைக் கண்ட அவனும் வேகமாய் ஓடிவிட,

“சா.. சார்.. சார்” என்று அவனிடம் பதட்டமாய் வந்தவள், அவன் முழங்கைக்கு மேலும், உள்ளங்கையிலும் உள்ள காயத்தையும், வழியும் குருதியையும் கண்டு படபடப்பானாள்.

“இறைவி..” என்று அவன் அழைக்க,

“சார்.. ரத்தம்” என்றவளுக்கு வலித்ததைப் போல் கண்ணீரும் பதட்டமும் அவளிடம் பிரதிபலித்தது.

வேக வேகமாய் தன் பையிலிருந்து கைக்குட்டையை எடுத்தவள், அவன் காயத்தில் வைக்க, வலியில், “ஸ்ஸ்..” என்றான்.

“சா..சாரி” என்றவள் அருகே வந்த ஆட்டோ ஓட்டுனர், “ஆஸ்பிடல் பக்கத்துலதான் இருக்கு சார கூப்டு ஏறும்மா” என்றார்.

எதுவுமே யோசிக்கவில்லை அவள். அவன் வண்டியை ஆட்டோ ஓட்டுனர் உதவியுடன் ஓரம் நிறுத்தி சாவியைப் பெற்றுக் கொண்டு, அவன் கரம் பற்றி அழைத்துக் கொண்டு ஆட்டோவில் ஏறி விட்டாள்.

அவன் காயத்தில் தன் கைக்குட்டையைக் கட்டியவள், “அண்ணா சீக்கிரம் போங்கண்ணா” என்க,

அய்யனாரின் பார்வையெல்லாம் அவளிடமே.

அவள் காதலெனும் விசையில் காந்தமாய் ஈர்க்கப்படுவதாய் உணர்ந்தான். அவளிடம் இதுநாள் வரை எந்தக் காதலும் பிரதிபலிப்பதாய் உணர்ந்ததில்லையே என்று நினைத்தவன் அறியவில்லை, அவள் நேசத்தின் விசைதான் அவனை ஈர்த்ததென்பதை.

மருத்துவமனை வந்ததும் வேகமாய் அவனை அழைத்துக் கொண்டு சென்றவள் உடலெல்லாம் நடுங்குவதாய்.

அவள் கரம் பற்றி நிறுத்தியவன், “என்னைவிட நீதான் டென்ஷனா இருக்க. இவ்வளோ பதட்டப்பட்டா உனக்குத்தான் பெட் புக் பண்ணனும்” என்க,

“ர.. ரத்தம்..” என்றாள், குரல் தந்தியடிக்க.

“வலிக்குதுதான்.. இல்லைனுலாம் சொல்ல மாட்டேன். வலி தாங்குற அளவு நான் சூப்பர் ஹீரோலாம் இல்லை. ஆனா எனக்கு இது புதுசில்லயே” என்று அவன் கூற, அவள் உடல் அதிர்ந்தடங்குவதாய் அவள் கரம் பற்றியவனும் உணர்ந்து கொண்டான்.

“நீ இங்கயே இரு.. நான் போயிட்டு வரேன்” என்று அவன் செல்ல, இவளுக்கு இன்னுமும் கண்ட காட்சிகள் பயம் கொடுக்கும் விதமாய் உடல் வெடவெடத்தது.

அவன் கவனிக்காமல் இருந்திருந்தால்? காயம் வேறெங்கும் பட்டிருந்தால்? நினைக்கவே அவளுக்குக் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. அவன் சந்தோஷமாக இருந்தால் போதும் என்பதுதானே அவளது உட்சபட்சக் காதல்? இன்று அவனை அப்படியொரு நிலையில் பார்த்ததை மூளை, அவனது பணி அதுவே என்று உணர்த்தியும் காதல் மனம் ஏற்க முரண்டது.

மருத்துவ சிகிச்சைகள் முடித்துக் கொண்டு வந்தவன், ராஜுக்கு அழைத்து நடந்ததை சுருக்கமாய்ச் சொல்லி, தனது வண்டியை மட்டும் எடுத்து வரும்படிக் கூறினான்.

அவன் அருகே வந்ததும் கண்களால் அவனை ஆராய்ந்தவள், அவன் அலைபேசியில் பேசி முடித்ததும், “என்ன சொன்னாங்க? மருந்து எதும் வாங்கனுமா?” என்று கேட்டாள்.

“ம்ம்.. நான்..” என்று அவன் முடிக்கும் முன், “வாங்க மருந்து வாங்கிட்டு உங்களை வீட்ல விட்டுட்டுப் போறேன்” என்றாள்.

அவனுக்கு இப்போது சிரிப்பாக வந்தது. “நான் சக்தி கிடையாதுமா” என்று அவன் கூறவும், அவள் முகம் முற்றுமாய் வாடிப் போனது. அந்த நொடிதான், தான் எடுத்துக்கொள்ளும் அதிகப்படியான உரிமையை உணர்ந்தாள்.

கண்ணைக் கட்டியணைத்த பயமெனும் திரையோடு கரம் கோர்த்த காதலின் விளைவால் இத்தனை நேரமும் அவனைக் குழந்தைபோல நடத்தியது புரிய, தற்போது சங்கடமாய் உணர்ந்தாள். சட்டென்று விலகிடவும் முடியவெல்லை, அக்கறை காட்டவும் முடியவில்லை.

“சரி வாமா போலாம்” என்று அவனே கூற,

“எ.. எனக்கு ஹெல்ப்லாம் பண்ணிருக்கீங்க. உங்களை என்னால எப்படி அப்படியே விட்டுட முடியும்? அதான்…” என்று தயக்கமாய்க் கூறினாள்.

“ஐ அன்டர்ஸ்டான்ட்” என்றவன் மனதிற்குள் சிரித்துக் கொண்டு நகர, தானும் அவனுடன் சென்றாள்.

அவனுக்கான மருந்துகளையெல்லாம் வாங்கியவள் மீண்டும் ஆட்டோவில் ஏற, “அம்மாவைப் பார்த்தா நடந்ததையெல்லாம் உளறிடாத. வண்டி ஸ்கிட் ஆயிடுச்சுனு சொல்லிக்குறேன்” என்றான்.

“காயத்தைப் பார்த்து கண்டுபிடிச்சுட மாட்டாங்களா?” என்று அவள் கேட்க,

‘கியூட்டுடி நீ’ என்று மனதோடு சொல்லிக் கொண்டவனாய், “சமாளிச்சுக்குறேன்” என்றான்.

அதற்குமேல் அவளும் எதுவும் பேசவில்லை. அவ்வப்போது அவன் கரத்திலுள்ள கட்டுகளைப் பார்த்துக் கொண்டாள்.

வண்டி ஒரு திருப்பத்தில் சாயவும் பிடிமானமின்றி அய்யனார் அவள்மீது சாய்ந்திட, “பாத்து சார்” என்று அவனைத் தாங்கியவள், “அண்ணா பாத்துப்போங்க” என்று ஓட்டுநரிடம் கூற, அய்யனார் நேராய் அமர்ந்து கொண்டான்.

அவனுக்கு அவளுடனான அந்தக் தனிமை அத்தனைப் பிடித்திருந்தது. கைவிரல் கூட உரசிடாத அந்த அருகாமை அவனுக்கு அத்தனை பிடித்திருந்தது. ஒருவர் சுவாசம் மற்றவரைச் சூழ்ந்து செல்லும் நெருக்கம் அவனுக்குப் பிடித்திருந்தது.

இருவரும் வீட்டை அடைய, “நீ பாத்துப்போமா. நான் பாத்துக்குறேன்” என்றவன், ஓட்டுநரிடம் பணத்தைக் கொடுத்து அவளைப் பத்திரமாய் சேர்ப்பிக்கச் சொல்ல, “இல்ல நான் தந்துப்பேன்” என்றாள்.

“இருக்கட்டும்.. நானும் தரலாம்” என்றவன் மனதோடு சிரித்துக் கொண்டு நகர, வண்டி நகர்ந்து சென்றது.

தெருவின் முனை வரை சென்றதும், மெல்ல அவள் திரும்பிப் பார்க்க, தன் வீட்டு வாசலிலேயே அவள் பார்வைக்காகக் காத்திருந்தவன், மனதோடு குதூகலித்தவனாய் உள்ளே சென்றான்.

 

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 25

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
18
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்