Loading

ரகசியம் – 51

“என்ன அன்பு சொல்ற புரியல” என்று கேட்க அவளோ,

“அதாவது சின்ன பிள்ளைல ஒருநாள் எங்க அப்பா என்னோட பிறந்தநாளுக்கு எனக்கு ஒரு டிரஸ் வாங்கிட்டு வந்தாங்க.. அதை திடிர்னு விழி கேட்டதும் அவளுக்கு கொடுத்துட்டாங்க.. நான் போய் கேட்டதுக்கு தங்கச்சி மனசு கஷ்டப்படுவான்னு அவளுக்கு கொடுத்துட்டேன்.. உனக்கு அப்பா வேற வாங்கி தரேன்னு சொல்லிட்டாங்க.. இது ஒரு சின்ன விஷயம் தான்.. சொல்லப்போனா நான் அவளுக்கு நெறய விட்டுக் கொடுத்துருக்கேன்.. அன்னைக்கு அப்பா எனக்கு அந்த டிரஸ கொடுத்த அப்புறம் விழி அழுது கேட்டிருந்தா நானே அவகிட்ட கொடுக்க தான் செஞ்சிருப்பேன்.. ஆனாலும் எனக்குன்னு நெனச்சுட்டு அப்பறம் அவளுக்காக யோசிச்சு எனக்கு செய்யாம போனது தான் என் கோபம்.. என் அப்பாகிட்ட ரெண்டு நாளா பேசல” என்று கூற அவளின் கூற்றைக் கேட்ட அறிவமுதனுக்கு தான் காதல் கூறிய நாளின் நினைவு வந்தது.

‘ஒருவேளை மாறனுக்காக யோசிச்சு தான் இவளோட காதலை நிராகரிக்க பார்த்தோம்னு என்னைக்காச்சு இவளுக்கு தெரிய வந்தா என்ன நடக்கும்.. இவ சொல்ற விதத்தைப் பார்த்தா.. பயமா இருக்குதே’ என்று அறிவு பீதியுடன் யோசித்தான். இவ்வாறு ஒரு ஜோடிகள் பேசிக்கொண்டிருக்க சற்று தள்ளி அமர்ந்து மதுரனும் மதுரிகாவும் பேசிக் கொண்டிருந்தனர்.

“மிஸ்ஸஸ் போர்க்யூபைன் மண்ட” என்று அவன் அழைக்க மதுவோ,

“சொல்லுங்க மிஸ்டர் பண்டாரம்” என்று கூறினாள். அவனோ,

“ஹே லூசு. நீ என்னைக் கூப்பிடுற பேரை மறந்து நான் உன்னைக் கூப்பிடுற பேரை சொல்லி கூப்பிடுற பாரு” என்று அவன் கூற அவளோ தலையில் அடித்தாள்.

“ஏன் டா.. இம்புட்டு பெரிய ட்யூப் லைட்டா டா நீயு.. ஐயோ நீ அப்போ அப்போ அறிவாளித்தனமா யோசிக்குறதைப் பார்த்து நீ விவரமான ஆளுன்னு நெனச்சேன்.. இப்படி மக்கா இருக்க.. இப்படிப்பட்ட தத்திய வச்சுட்டு நான் என்ன செய்ய போறேனோ” என்று புலம்ப அவனோ சிரித்தபடி,

“ஹே ஹே.. என்ன டி நீ பாட்டுக்கு புலம்பிட்டே போற.. நான் சரியா தான கேட்டேன்.. என்னை எப்போதும் மிஸ்டர் போர்க்யூபைன் மண்டன்னு தான கூப்பிடுவ.. இப்போ நீ மிஸ்டர் பண்டாரம்னு கூப்பிட்ட.. அத தான் சொன்னேன்” என்று கூற அவளோ,

“அறிவு நிரம்பி வழியுது.. துடைச்சுக்கோ.. ஆமா நீ எதுக்கு சிரிக்கிற” என்று கேட்க அவனோ அவள் கூற்றில் மீண்டும் சிரித்துவிட்டு பிறகு,

“ஒன்னுமில்லையே.. தெரியலன்னா குணமா வாயில சொல்லணும்.. இப்படி திட்ட கூடாது.. மிஸ்ஸஸ் போர்க்யூபைன் மண்ட” என்று பாவமாக கூறிவிட்டு உதடு மடித்து சிரிக்க அவளோ,

“டேய் தூரா.. நான் உனக்கு மிஸ் பண்டாரம்னா என்னோட மிஸ்டர் யாரு நீ தான.. அப்போ நீ தான மிஸ்டர் பண்டாரம்” என்று கேட்க அவனோ,

“அட ஆமா இது தெரியாம போச்சே மிஸஸ் போர்க்யூபைன் மண்ட” என்று கூறிவிட்டு மீண்டும் மீண்டும் சிரித்தான். அவன் சிரிப்பில் கடுப்பானவள்,

“டேய் நீ எதுக்கு இப்போ சிரிச்சுட்டே இருக்க.. வேணும்னே நக்கலா சிரிக்குற மாதிரி இருக்கு” என்று கேட்க அவனோ இப்பொழுது வாய்விட்டே சிரித்துவிட்டான்.

“ஏன் டி நான் நக்கலா சிரிக்குறேன்னுலான் நோட் பண்ணுன நீ.. நான் இப்போ ஆரம்பத்துல இருந்து உன்னை என்ன சொல்லிக் கூப்பிட்டேன்னு மட்டும் நோட் பண்ண மறந்துட்ட” என்று கூற அப்பொழுது தான் யோசித்தவளுக்கு அவன் முதல் தடவை அழைக்கும் போதே மிஸஸ் போர்க்யூபைன் மண்ட என்று அவனுடைய அவள் இவள் தான் என்று கூறாமல் கூறியிருக்கிறான் என்றும் அது தெரியாமலே தானும் அவனைப் போன்றே சிந்தித்து அவனை அழைத்திருக்கிறோம் என்றும் அது புரியாத மாதிரி அவன் கேட்டது எல்லாம் நடிப்பு என்று அப்பொழுது தான் அவளுக்கு புரிந்தது..

“பாவி தெரிஞ்சே என்னை வம்பிழுத்துருக்கியா.. உன்ன” என்றவள் அவனை அடிக்க அதனை சுகமாக வாங்கியவன் அவளை ரசனையாக பார்த்தான். அவன் பார்வையில் பெண்ணுக்கே உரித்தான நாணம் பெண்ணவளுக்கு தோன்ற அதையும் அவளின் கள்வன் ரசிக்க தான் செய்தான்.

“டேய் அப்படி பார்க்காத.. இப்படி பார்த்து பார்த்து தான் என்னை கவுத்துட்ட.. இப்போகூட வெளிப்படையா வெக்கப் பட்டுருவேன்.. ஆனா உங்கிட்ட இருந்து விலகி இருக்கணும்னு நெனச்ச அப்போவும் இதே மாதிரி நீ பார்ப்ப.. அப்போல்லாம் எனக்கு எப்படி இருக்கும் தெரியுமா.. வெக்கத்தை மறைக்கவும் முடியாம வெளியப்படுத்தவும் முடியாம அவஸ்தையா இருக்கும்” என்று கூற அவனோ,

“தெரியுமே.. நீ அப்போ படுற அவஸ்தை தான் இன்னும் அழகா இருக்கும்” என்றபடி அவன் கண்ணடிக்க அவளோ,

“அடப்பாவி.. ஃபிராடு” என்று திட்டிவள் முறைக்க முயன்று தோற்று போனாள். பிறகு மதுரிகாவோ வெகுநேரமாக மாறனைக் காணாமல்,

“தூரா.. மாறன் அப்போவே வெளியே போனான். இன்னும் அவனைக் காணும்” என்று கூறி இருக்கையில் இருந்து எழும்ப அவள் கூற்றைக் கேட்ட இனியாவும்,

“ஆமா மது.. விழியும் அப்போவே வெளிய போனா.. அவளையும் காணும்.. இதுங்க ரெண்டும் எங்க போச்சுங்க” என்றபடி நால்வரும் வெளியில் வந்து பார்க்க மாறனும் விழியும் நீச்சல் குளத்தில் காலைத் தொங்கப்போட்டு அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதை கண்டவர்கள் அவர்களும் அமர சென்றனர்.

மாறனின் இடதுபக்கம் மதுவும் மதுவுக்கு அடுத்து மதுரனும் விழியின் வலதுபக்கம் இனியாவும் இனியாவுக்கு அடுத்து அறிவும் என ஒன்றாக அமர்ந்தனர். மாறனின் மனதில் அப்பொழுது வரை இருந்த அந்த இடைஞ்சல் உணர்வு இப்பொழுது முற்றிலும் காணாமல் போனது. அவ்வாறே கேலியும் கிண்டலுமாக அந்நாளை கழித்தவர்கள் பிறகு தத்தம் வீடு கிளம்பினர்.

இவ்வாறாக அடுத்து வந்த நாட்களை எல்லாம் தங்கள் கல்லூரி படிப்பில் கவனம் செலுத்தியும் அவ்வப்போது நடிக்க கிடைக்கும் வாய்ப்புகளில் கலந்து கொண்டும் நீங்காத காதலோடும் விட்டுக்கொடுக்காத நட்போடும் மிகவும் அழகாக பயணித்தனர் அறுவரும்.

கேட்காமல் காட்டும் அன்பு
உயர்வானது…
கேட்டுக் கொடுத்தாலே
காதல் அங்கு உயிராகுது…
கேட்கும் கேள்விக்காகதானே
பதில் வாழுது…
காதல் கேட்டு வாங்கும்
பொருளும் அல்ல இயல்பானது…

—————————————————————————

ஐந்து வருடங்களுக்கு பிறகு இவ்வாறு தங்கள் முதல் சந்திப்பு முதல் மதுவிடம் தன் காதலைக் கூறிய நாள் வரை நடந்த அனைத்தையும் தன் தொழில்துறை நண்பர் மற்றும் தனிப்பட்ட உதவியாளரான உதய்குமாரிடம் கூறிக் கொண்டிருந்தான் தமிழகத்தின் புதிய மற்றும் முன்னணி நடிகரான ரொமான்டிக் ஸ்டார் மதுரன்.

ஏற்கனவே ஒரு படம் நடித்து அது மாபெரும் வெற்றியைத் தொட்டுவிட இப்பொழுது முன்னணி இயக்குனர் ஒருவர் இயக்கிவரும் தன் இரண்டாவது படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் சற்று முன் முடிந்திருக்க வழக்கமாக மனதில் எழும் சோகத்துடன் தனியே வந்து அமர்ந்திருந்தான் மதுரன். அப்பொழுது,

“எக்சிகியூஸ்மீ பாஸ்.. மே ஐ கமின்” என்று மதுரனின் பிஏ உதயகுமார் கேரவன் வாசலில் நின்று கேட்க மதுரனோ அவனை உள்ளே வரும்படி கூறினான். வந்தவனிடம்,

“உதய்.. எத்தனை தடவ சொல்லிருக்கேன்.. இந்த பெர்மிஷன் கேட்டு உள்ள வர பழக்கத்தை விடுன்னு.. நீ என்னோட பிஏ.. உனக்கு என்னை கேட்காம உள்ள வர ரைட்ஸ் இருக்கு.. காட் இட்?” என்று கேட்டபடி அவனிடம் உரிமையாக கோபப்பட்டான் மதுரன். அதற்கு உதயோ,

“அது பழகிடுச்சு பாஸ்.. சரி இந்த ப்ராஜெக்ட்டோட எல்லா ஷூட்டுமே முடிஞ்சுருச்சு” என்று இழுத்தபடி கூற மதுரனோ, “அதான் தெரியுமே உதய்.. டைரக்டர் சொல்லும் போது நானும் உன்கூட தான இருந்தேன்” என்று தன் அலைபேசியைப் பார்த்தபடி மதுரன் கூற உதயோ,

“ஆமா பாஸ் தெரியும்.. அதான் மறுபடியும் நியாபகம் படுத்துறேன்.. இந்த ப்ராஜெக்ட்டோட ஷூட் எல்லாம் முடிஞ்சுருச்சு…..” என்று மீண்டும் அதையே அழுத்தி கூற அவனை ஒரு பார்வைப் பார்த்தான் மதுரன்.

“சரி ஓகே பாஸ் டென்சன் ஆகாதீங்க.. நேரடியா விஷயத்துக்கு வரேன்.. இப்போவாச்சு உங்க பாஸ்ட் லைஃப் பத்தி சொல்லலாம்ல.. இந்த ப்ராஜெக்ட் ஷூட் முடிஞ்சதும் சொல்றேன்னு நீங்க தான் சொன்னிங்க..” என்று கூற மதுரனோ,

“அது நீ மறந்துருவன்னு நெனச்சு சொன்னேன்.. நீ என்ன மறக்காம நியாபகம் வச்சுருக்க” என்று மதுரன் கேட்க அவனோ, “மறக்க கூடிய விஷயமா பாஸ் அது.. உங்களுக்குள்ள ஒரு ரகசிய பெட்டகமே இருக்குன்னு தெரியும் எனக்கு.. சரி அதை விடுங்க.. பேச்சு மாற மாட்டீங்கன்னு நம்புறேன்” என்று அவன் பவ்யமாய் கேட்க அவன் கூற்றில் சிரித்த மதுரன்,

“விடமாட்டியே நீ” என்றபடி கூற ஆரம்பித்த கதையை தான் மது மற்றும் மாறனின் பிறந்தநாள் அன்று நடந்த வரை கூறி முடித்தான் மதுரன். ஆனால் யாருடைய பெயர்களையும் வெளிப்படையாக கூறாமல் கூறினான்.

“சோ நீங்களும் மிஸ் எக்ஸும் லவ்வ சொல்லி ஒன்னு சேர்ந்துட்டீங்க.. நல்லாதானே போய்ட்டு இருக்கு.. அப்புறம் எப்படி ரெண்டு பேரும் பிரிஞ்சீங்க.. வாட் இஸ் தி ப்ராப்லம்” என்று ஆர்வமாக உதய் கேட்டான்.

 

ரகசியம் – 52

தன் பிஏ உதய்குமாரிடம் தன் கடந்தகாலத்தைக் கூறிக்கொண்டிருந்த மதுரனுக்கு ஓர் அழைப்பு வந்தது. அழைப்பை ஏற்று காதில் வைத்தவன் மறுமுனையில் கூறியதைக் கேட்டுவிட்டு,

“என்னமா சொல்றீங்க.. நான் உடனே வரேன்” என்று கூறிவிட்டு,

“உதய்.. நான் அவசரமா வீட்டுக்கு போகணும். இதுக்கு மேல எதுவும் கமிட்மென்ட் இருந்தா கேன்சல் பண்ணி வேற டேட்ல ஷெடுள் பண்ணிடு.. கிவ் மீ தி கார் கீ” என்று கேட்க அவனோ,

“பாஸ் ரொம்ப அவசரமா போகுற மாதிரி தெரியுது.. நான் வேணா ட்ரைவ் பண்றேன்.. உங்க வீடு இருக்குற ஏரியாவுக்கு முன்னாடியே வேணா நான் இறங்கிருறேன்.. டென்ஷனா வேற இருக்கீங்க” என்று கூற மதுரன் அவனை ஒரு பார்வைப் பார்க்க அவனோ,

“சரி சரி புரியுது.. நம்ம ஆபீஸ் வரை தான் எனக்கு பர்மிஷன் அதானே.. நீங்க பத்திரமா போய்ட்டு வாங்க” என்றபடி வண்டி சாவியை அவனிடம் கொடுக்க வாங்கியவன் தன் காரில் பறந்தான் தன் வீட்டை நோக்கி.

“இந்த பாஸ புரிஞ்சுக்கவே முடியல… ஒரு நேரம் ரொம்ப க்ளோசா உரிமையா பேசுறாரு.. அதே நேரம் அவரைப் பத்தின விஷயத்துல ரொம்பவே தெளிவா இருக்காரு.. ஆனா மத்த நேரம் ரொம்ப அந்நியமா நடந்துக்குறாரு.. என்னவா இருக்கும்.. எதனால இப்படி இருக்காரு.. இவருக்கு பின்னாடி இருக்குற ரகசியம் தான் என்ன..” என்றபடி யோசிக்க பின் அதற்கு விடைக் கிடைக்காததால் அவன் கூறிவிட்டு போன வேலையை செய்துவிட்டு தன் வீட்டை நோக்கி சென்றான் உதய்குமார்.

தன் வீடு சென்ற மதுரன் வேகமாக காரை வெளியே நிறுத்திவிட்டு உள்ளே ஓட அவனின் தந்தை வசீகரன் படுக்கையில் படுத்திருக்க கையில் குளுக்கோஸ் ஏறிக்கொண்டு இருந்தது.

“டாக்டர் அப்பாக்கு என்னாச்சு” என்று பதற்றமாய் கேட்க அவனைத் தனியே அழைத்துக் கொண்டு வெளியே வந்த மருத்துவர்,

“இட்ஸ் க்ரிட்டிக்கல் மிஸ்டர் மதுரன்.. ட்ரை டு ஃபுல்ஃபில் ஹிஸ் லாஸ்ட் விஷெஸ்..” என்று கூறி அவனின் தோளைத் தட்ட மதுரனோ,

“ஹௌ மோர் டேஸ்” என்றான் கண்களில் கண்ணீர் வழிந்தபடி.

“சாரி மதுரன்.. மிஸ்டர் வசீகரன் இஸ் அபௌட் டு ஜஸ்ட் ஒன் மந்த் மோர்” என்றவர் அவன் கரங்களை ஆதரவாக பற்றிவிட்டு சென்றுவிட அவர்கள் கூற்றினை ஓரமாக நின்று கேட்டுக் கொண்டிருந்த மதுரனின் தாய் கமலா மௌனமாய் கண்ணீர் வடித்தார்.

நேராக தன் தந்தையின் அருகில் சென்று அமர்ந்தவன் உறங்கி கொண்டிருக்கும் அவரைத் தொந்தரவு செய்யாமல் அமைதியாக பார்த்தான். அவன் விழிநீர் அவரின் கரத்தை சுட மெல்ல தன் இமைகளைத் திறந்தார் வசீகரன்.

“மதுரா” என்று அவர் அழைக்க அவனோ மௌனமாய் பார்த்திருந்தான்.

“நான் பானுக்கு துரோகம் பண்ணிட்டேன்னு விஜி நெனச்சுட்டு இருக்கா டா.. என் மேல தப்பில்லன்னு நிரூபி டா மதுரா” என்று அவர் கூற மதுரனின் முகத்தில் எந்தவித உணர்ச்சியும் இல்லை. இக்கூற்றை தான் பலமுறைக் கேட்டிருக்கிறானே. வசீகரனின் வாயிலிருந்து அடிக்கடி வரும் வார்த்தை இது. அது பற்றி பேசுவதற்காக விஜியையோ சத்யனையோ மாறனையோ மதுரிக்காவையோ சந்திக்க பலமுறை முயற்சி செய்தும் பலன் என்னவோ பூஜ்யம் தான்.

“சரி பா நீங்க தூங்குங்க” என்று அவருக்கு ஆறுதல் கூறி தூங்கவைத்தவன் தன் அறைக்கு வந்து தன் நண்பன் அறிவமுதனுக்கு அழைத்தான்.

“அறிவு” என்று மதுரன் சோர்வாய் அழைக்க அவனோ,

“அப்பாக்கு இப்போ எப்படி டா இருக்கு” என்று கேட்டான். மருத்துவர் கூறியதை அவனிடம் கூற அதனைக் கேட்ட அறிவுக்கும் வருத்தமாக தான் இருந்தது.

“கவலைப்படாத மது.. அன்பு கிட்ட சொல்லி மதுவை சந்திக்க ஏற்பாடு பண்றேன்” என்று கூற மதுரனோ,

“சரி மச்சான் நீ எங்க இருக்க” என்று கேட்க அவனோ,

“ஸ்விஸ்ல ஒரு ஆல்பம் ஷூட்க்காக வந்தேன் டா” என்று கூற மதுரனோ,

“சூப்பர் டா.. சரி நீ வொர்க் கண்டின்யு பண்ணு.. நான் லேட்டரா இனியாவைக் கான்டக்ட் பண்ணிக்குறேன்” என்று கூறி அழைப்பைத் துண்டித்தான்.

‘கடவுளே என் எதிரிக்கு கூட என்னோட நிலைமை வர கூடாது..’ என்று மனதினுள் வேண்டியவன் அவ்வாறே உறங்கி போனான் நாளை நடக்கவிருக்கும் விபரீதம் தெரியாமல்.

மறுநாள் இனியாவின் உதவியில் மதுவை சந்திக்க வாய்ப்பு கிட்டியது. மதுவின் முன் சென்று நின்ற மதுரன்,

“தூரிகா” என்றழைக்க அவளோ,

“தயவு செய்து என்னை அப்படி கூப்பிடாத.. நம்மளோட கடந்த காலத்தை நெனச்சு பார்க்க விரும்பல..” என்று எங்கோ பார்த்துக்கொண்டு கூறினாள் வருத்தமாக..

“நல்லது அது தான் எனக்கு வேணும்.. இன்ஃபேக்ட் நாம காதலிக்குறது சரியா இருக்காதுன்னு உன்கிட்ட முதல்ல வந்து சொன்னது நான் தான்னு நினைக்குறேன்.. எங்க நீ மனசு மாறாம இருந்துருவியோன்னு தான் பயந்தேன்..” என்று கூறினான் தன் மனதினைக் கல்லாக்கி கொண்டு.. “அண்ட் சாரி பழக்க தோஷத்துல தூரிகான்னு கூப்டுட்டேன்..” என்று கூற மதுவோ,

“நீ நம்ம காதலை வேணாம்னு சொல்லி தான் ஆகணும்.. ஏன்னா உங்க அப்பா செஞ்ச காரியம் அப்படி..” என்று கூறியவள் முகத்தில் அப்படி ஒரு வெறுப்பு..

“மது ப்ளீஸ்.. நீ நெனைக்குற அந்த காரியத்தை செஞ்சது என் அப்பா கிடையாது.. தயவு செஞ்சி புரிஞ்சுக்கோ” என்று கிட்டத்தட்ட மன்றாடினான். அவளோ அவனைப் பார்த்து விரக்தியாக சிரித்தவள்,

“ஓ அப்படியா.. முதல்ல உனக்கே உங்க அப்பா மேல சந்தேகம் தான் இருக்கு.. அதனால தான் நீ முதல்ல வந்து நம்ம காதலை வேண்டாம்னு சொன்ன” என்று கூறியவளின் கண்களில் கண்ணீர் வழிய,

“இல்ல இல்ல இல்ல.. எங்க அப்பா மேல சந்தேகப்பட்டு நான் நம்ம காதலை வேணாம்னு சொல்லல.. ஏற்கனவே உன்கிட்ட இதுக்கு நான் விளக்கம் கொடுத்துட்டேன்.. மறுபடியும் நான் சொல்றேன்.. நான் நம்ம காதலை வேணாம்னு சொன்னதுக்கு காரணம் ஒரு புனிதமான காதலுக்கு கொடுக்குற மரியாதைல மட்டும் தான் .. அதை முதல்ல புரிஞ்சுக்கோ” என்று அடக்கப்பட்ட கோபத்துடன் கூறினான் மதுரன்.

“வாட்.. காதலுக்கு மரியாதையா.. இப்போ நம்ம காதலுக்கு இங்க மரியாதை இல்லாம போச்சுல.. உங்க அப்பா செஞ்ச காரியத்துக்கு ப்ரூஃப் இருக்குங்குறத மறந்துராத தூரா..” என்றவள் பிறகு தனது குரலை செருமிக்கொண்டு, “சாரி மதுரன்” என்றாள்.

“எங்க அப்பா செஞ்ச காரியத்துக்கு ப்ரூஃபா… நல்ல தெளிவா யோசிச்சு சொல்லு.. நீ சொல்ற ப்ரூஃப்ல என்ன இருக்குன்னு” என்று கூற மதுரிகாவின் பொறுமை காற்றில் பறந்தது.

“மிஸ்டர் மதுரன்.. மைண்ட் யுவர் வொர்ட்ஸ்” என்று பொங்கி வந்த கோபத்தோடு கூற,

“லிசன் மது.. உனக்கு எப்படி கோபம் வருதோ அது மாதிரி தான் எனக்கும் கோபம் வரும்.. நீ என்ன வேணாலும் என் குடும்பம் பத்தி பேசலாம்.. ஆனா நான் பேசுனா மைண்ட் யுவர் வொர்ட்ஸா.. எந்த விதத்துல நியாயம்.. இங்க பாரு நான் நெனச்சா நீங்க எல்லாரும் எங்க அப்பா மேல சொல்ற குற்றச்சாட்ட பொய்னு நிரூபிக்கலாம்.. ஆனா உங்கள நம்ப வைக்க நான் அதை செஞ்சா நான் எங்க அப்பாவை நம்பாத மாதிரி ஆயிடும்னு ஒரு காரணத்தால தான் அதை செய்யாம இருக்கேன்” என்று கூறி தன் கோபத்தை சற்று மட்டுப்படுத்தியவன்,

“மது.. கொஞ்ச பொறுமையா நான் சொல்றதை கேளு.. பாஸ்ட் அப்பார்ட்.. நீ உங்க விஜி அத்தைய கூட்டிட்டு வரணும் எங்க வீட்டுக்கு.. ப்ளீஸ்” என்று கூற அவளோ,

“வாட் விஜி அத்தைய நான் கூட்டிட்டு வரணுமா.. அதுவும் போயும் போயும் உன் அப்பா இருக்குற அந்த வீட்டுக்கு” என்று அருவெறுப்பின் உச்சத்தில் கூற மதுரனோ,

“மது.. ஹி இஸ் கௌன்டிங் ஹிஸ் டேஸ் மது.. ப்ளீஸ் ட்ரை டூ அண்டர்ஸ்டேன்ட்.. அவர் சாகுறதுக்குள்ள அவர் மேல தப்பு இல்லன்னு புரிஞ்சுக்கனும்னு நெனைக்குறாரு.. சாகுற நேரத்துல எந்த மனுஷனாச்சு பொய் சொல்வாங்களா.. நிஜமாவே என் அப்பா தப்பு செஞ்சிருந்தா.. அவரோட கடைசி நேரத்துல அவர் தப்ப சொல்லி மன்னிப்பு தான் கேட்டுருப்பாரு.. இப்படி அவர்மேல தப்பு இல்லன்னு நீங்க புரிஞ்சுக்கணும்னு நெனைக்க மாட்டாரு… ப்ளீஸ் மது உன்ன கெஞ்சி கேக்குறேன்.. ஒரு தடவ கூட்டிட்டு வா” என்று கூற மதுவோ,

“ஏன் மதுரன்.. ஒருவேளை என் இடத்துல நீ இருந்து உன் இடத்துல நானும் என் அப்பாவும் இருந்தா.. நீ இப்படி தான் பொறுமையா பேசிருப்பல” என்று அவனை அடிபட்ட பார்வை பார்க்க அவனோ,

“மது.. உன் நிலைமை புரிஞ்சனால தான் நானும் உங்கிட்ட பொறுமையா பேசிட்டு இருக்கேன்.. ஆனா உனக்கு உண்மை தெரியாது மது.. அதனால தான் நீ இப்படி பேசுற..” என்று கெஞ்சும் நிலையில் அவன் நிற்க அதில் சற்று மனமிறங்கியவள்,

“உங்க அப்பா செஞ்ச தப்புக்கு நீ இவ்ளோ தூரம் கெஞ்சுற.. சரி உனக்காக கூட்டிட்டு வரேன்.. இப்போ நாம காதலிக்கலானாலும் நாம காதலிச்ச நாட்கள் இன்னும் என் மனசுல இருக்கு.. அந்த நம்ம காதலுக்காக உன் வார்த்தைக்கு மரியாதை கொடுத்து நானும் அத்தையும் வரோம் உன் வீட்டுக்கு.. ஆனா அங்க வந்த அப்புறம் விஜி அத்தை உங்க அப்பாகிட்ட என்னைக் கேள்வி கேட்டாலும் அதுக்கு நான் பொறுப்பில்ல.. அவ்ளோ தான் சொல்லுவேன்” என்று கூறிக்கொண்டிருக்க அப்பொழுது மாறன் தன் வண்டியில் வந்து நின்றான். வந்தவன்,

“முடிஞ்சுடுச்சா மது.. போலாமா” என்றான் மதுரன் என்ற ஒருவன் அங்கு இல்லை என்பது போல்.

“டேய் மாறா” என்று மதுரன் அழைக்க அவனைத் தடுத்த மாறனோ,

“இங்க பாரு மதுரா.. எனக்கு உன்மேல தனிப்பட்ட கோபம்னு ஏதும் இல்ல.. நடந்த எல்லாம் உனக்கும் தெரியும்.. இவ்ளோ விஷயம் தெரிஞ்ச அப்புறமும் நாம உறவு கொண்டாடுறது சரியா படலை எனக்கு..” என்றவன் மதுரிகாவைப் பார்க்க அவளோ மாறனின் பின்னே ஏறிக்கொள்ள இருவரும் கிளம்பிவிட்டனர்.

செல்லும் அவர்களையே வெறித்து பார்த்தவன் சற்று நேரம் தன் தலையில் கைவைத்தபடி அங்கு அமர்ந்துவிட்டான். பிறகு தன் காரில் கிளம்பியவன் செல்லும் வழியில் உதயை அழைத்துக்கொண்டு தன் பணிக்கு சென்றான்.

 

ரகசியம் – 53

உதயோ, “என்னாச்சு பாஸ்.. ரொம்ப அப்செட்டா இருக்கீங்க” என்றான் அவனை விட வருத்தமாய். அவன் குரலில் இருந்த வருத்தத்தைக் கண்ட மதுரன்,

“என் வருத்தம் இருக்கட்டும்.. நீ ஏன் வருத்தமா இருக்க.. உனக்கும் உன் ஆளுக்கும் ஏதும் சண்டையா” என்று கேட்க அவனோ,

“அது.. நான் காதலிச்ச பொண்ணுக்கு நாளைக்கு என்கேஜ்மென்ட்” என்றான் வருத்தம் தோய்ந்த குரலில். அவன் கூற்றில் சட்டென காரை நிறுத்தியவன்,

“வாட்.. என்ன உதய் சொல்ற..” என்று அதிர்ந்து கேட்க அவனோ,

“சூழ்நிலை பாஸ்.. அவளையும் குத்தம் சொல்ல முடியாது.. எங்க காதல் சேர கூடாதுன்னு தான் விதி இருக்கு போல.. சேர்ந்தா தான் காதலா.. சேரலைனா அது காவியம்.. எங்க காதல் காவியமா இருந்துட்டு போகுது.. அதைவிட வருத்தம் என்னனா.. ஈஸியா என்ன மறந்துடுன்னு சொல்லிட்டு அவ தான் இப்போ என்னை மறக்கமுடியாம நாளைக்கு வேற ஒருத்தனோட கையைப் பிடிக்க போறா.. எனக்கு அவளை மறக்க கூட அவகாசம் இருக்கு.. ஆனா அவளுக்கு அது கூட இல்ல.. அது தான் என் வருத்தம்.. பொண்ணுங்க நிலைமை கொஞ்சம் பாவம் தான் இந்த விஷயத்துல.. என்ன பாஸ்” என்று கூற அவனின் புரிதலை எண்ணி மதுரனுக்கு ஆச்சர்யமாய் இருந்தது.

“எப்போ மத்த பசங்கள மாதிரி இல்லாம அந்த பொண்ணோட நிலமைல இருந்து யோசிச்சு அவளுக்காக உன் காதலை சந்தோஷமா விட்டு கொடுத்தியோ அப்போவே உன் காதல் ஜெயிச்சுடுச்சு உதய்.. ஐம் ப்ரௌட் ஆப் யூ மேன்” என்றவன் வண்டியை இயக்க உதயோ,

“என் கதையை விடுங்க பாஸ்.. உங்க கதையை நேத்து பாதிலையே விட்டு போயிட்டிங்க..” என்று கேட்க விரக்தியில் சிரித்த மதுரனோ,

“ஏன் உதய்.. காதலிச்ச பொண்ணு நமக்கு கிடைக்காம போறது கொடுமை தான்.. ஆனா நாம காதலிச்ச பொண்ண நாம காதலிக்க வேண்டிய இடத்துலயே வைக்க முடியாதுன்னு தெரியும் போது ஒரு வலி வரும் பாரு.. அடிச்சு சொல்றேன்.. கண்டிப்பா அதை யாருமே அனுபவிச்சுருக்க மாட்டீங்க” என்று கூறியவனின் கண்கள் தானாக கலங்க அவனின் இதழ்கள் உதிர்த்த வார்த்தைகளோ மீண்டும் ஐந்து வருடம் பின்னோக்கி பயணித்தது.

இவ்வாறாக அடுத்து வந்த நாட்களை எல்லாம் தங்கள் கல்லூரி படிப்பில் கவனம் செலுத்தியும் அவ்வப்போது நடிக்க கிடைக்கும் வாய்ப்புகளில் கலந்து கொண்டும் நீங்காத காதலோடும் விட்டுக்கொடுக்காத நட்போடும் மிகவும் அழகாக பயணிக்க முதலாம் ஆண்டு நிறையும் தருணமும் வந்தது.

அந்த ஆண்டின் செமஸ்டர் தேர்வுகள் முடித்து தங்கள் விடுமுறை நாட்களை அவ்வபோது வெளியே ஒன்றாக சென்றும் மகிழ்ச்சியாக கொண்டாடி கொண்டிருந்தனர். விழியும் தனது பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வினை சிறப்பாக எழுதி முடித்து நல்ல மதிப்பெண்களும் எடுத்திருந்தாள்.

அடுத்து என்ன கல்லூரியில் என்ன படிப்பு படிக்கலாம் என்று கலந்தாலோசித்தனர் ராமானுஜம், இனியா மாற்று விழி. ஆனால் விழிக்கோ தன் எழுத்து ஆர்வத்தின் விளைவாய் இயக்குனர் ஆகும் ஆசை எழ அதனை எவ்வாறு தந்தையிடம் கூறலாம் என்று தயங்கி தயங்கி அமர்ந்திருந்தாள். அவளின் தயக்கத்தைக் கண்டுக்கொண்ட ராமானுஜமோ,

“விழிமா.. உனக்கு என்ன படிக்கணும்னு ஆசை.. தயங்காம சொல்லு” என்று கேட்க அவளோ,

“அப்பா.. எனக்கு டைரக்டர் ஆகணும்னு ஆசை.. என்னோட கதைகள் எல்லாத்தையும் நான் வருங்காலத்துல படமா எடுக்கணும்னு ஆசைப் படுறேன்.. அதனால அது சம்பந்தமா ஏதாவது படிக்க நினைக்குறேன்” என்று கூற ராமானுஜம் முகத்தில் சற்று வருத்தம் தென்பட்டது. ஏற்கனவே இனியா படிக்கும் படிப்பில் ராமானுஜத்திற்கு உடன்பாடு இல்லை. இதில் விழியும் அதே போன்று துறையை தேர்ந்தெடுப்பது இன்னும் அவருக்கு ஏமாற்றமாக இருந்தது.

“அப்பா உங்களுக்கு விருப்பம் இல்லனா நீங்க சொல்லுங்க அப்பா.. நான் உங்கள மீறி அதை படிக்க விரும்பல.. உங்களுக்கு விருப்பம் இல்லனா நான் பிஏ தமிழ் படிச்சுக்குறேன்” என்று கூறும் மகளிடம் எவ்வாறு தன் அபிப்ராயத்தை கூறுவார் ராமானுஜம்.

“உன் விருப்பப்படியே படி விழிமா.. இருக்குறது ஒரு வாழ்க்கை.. நம்ம ஆசைப்பட்டப்படி இல்லனா வாழ்ந்து என்ன பிரயோஜனம்” என்று தன் அனுமதியை தெரிவிக்க விழிக்கோ ஏக மகிழ்ச்சி.

“இனியா படிக்குற காலேஜ்லயே நீ எடுக்க நெனைக்குற கோர்ஸ் இருக்கா விழிமா” என்று அவர் கேட்க இனியாவோ,

“என் காலேஜ்ல இருக்கு பா.. டிப்ளோமா இன் டைரக்ஷன்” என்று கூற பின் விழியை அங்கு சேர்க்க முடிவு செய்தனர்.

‘ஹப்பாடா ஒரு வழியா நம்மாளு படிக்குற காலேஜ்ல சேர்ந்த மாதிரியும் ஆயிடுச்சு.. நமக்கு பிடிச்ச கரியரை சூஸ் பண்ண மாதிரியும் ஆயிடுச்சு. இனிமே தினமும் நம்மாள பாக்கலாம்’ என நினைத்து மகிழ்ந்தாள் இமைவிழி.

மதுரன், மதுரிகா, இளமாறன், அறிவமுதன், அன்பினியா ஐவருக்கும் இரண்டாம் ஆண்டும் இமைவிழிக்கு தன் முதலாம் ஆண்டு கல்லூரியும் இனிதாக ஆரம்பித்தது. நாட்கள் பிரச்சனை இல்லாமல் ஓடினால் விதிக்கு சுவாரசியம் கிட்டாமல் போய்விடுமே.. அது தன் சித்து விளையாட்டை ஆரம்பித்தது.

அன்று ஒருநாள் வழக்கம் போல் அறுவரும் வெளியில் சென்றிருந்தனர். ஜோடிகள் இருவரும் ஜோடியாக செல்லும் காரணத்தால் மாறனும் விழியும் ஜோடி ஆகாமலே ஜோடியாக செல்ல நேர்ந்தது. விழிக்கு அது மிகவும் வசதியாகி போனது. மாறனுக்கு விழியின் மீது அவ்வாறு எந்த உணர்வுகளும் தோன்றவில்லை என்றாலும் அவனுக்கு பொதுவாக விழியைப் பிடிக்கும். தினமும் சந்திப்பதாலும் அதிகம் ஒன்றாக செல்வதாலும் முன்பை விட நெருக்கம் இருந்தது இருவருக்குள்ளும். மாறனின் கண்ணோட்டத்தில் நட்பாய் விழியன் கண்ணோட்டத்தில் காதலாய்.

அவ்வாறு மது மற்றும் மதுரிகா ஒரு வண்டியிலும் அறிவு மற்றும் இனியா ஒரு வண்டியிலும் மாறன் மற்றும் விழி ஒரு வண்டியிலும் ஜோடியாக இளைஞர்கள் வெளிய சென்றிருக்க அதனை சத்யன் பார்த்துவிட்டார். முதலில் பார்த்தவருக்கு எதுவும் தோன்றவில்லை என்றாலும் மாறனும் மதுவும் ஒன்றாக இல்லாமல் வேறு ஒருவருடன் இருப்பது அவருக்கு சந்தேகத்தைக் கிளப்பியது. உடனே மாறனுக்கு அழைத்தவர்,

“எங்கடா இருக்க” என்று கேட்க மாறனோ,

“ஃபிரண்ட்ஸோட வெளிய இருக்கேன் பா” என்று கூற அவரோ,

“மது எங்க” என்று கேட்க அவனோ சற்றும் யோசிக்காமல்,

“என்கூட தான் வந்துருக்கா.. பின்னாடி உக்காந்துருக்கா.. அவகிட்ட கொடுக்கணுமா” என்று கேட்க அதில் சத்யனின் சந்தேகம் வலுவாக,

“இல்ல வேணாம்.. நான் அப்புறம் பேசிக்குறேன்” என்றவர் அழைப்பைத் துண்டித்தார். வீட்டிற்கு சென்றவர் தன் சந்தேகத்தை விஜயாவிடமும் கூற விஜயாவோ,

“அப்படி எல்லாம் இருக்காதுங்க.. எல்லாரும் ஃபிரண்ட்ஸ் அதனால ஒண்ணா போயிருக்காங்க.. நம்ம மாறன் பின்னாடி வேற பொண்ணு இருக்காங்கிற காரணத்தால அவன் வேற பொண்ண விரும்புறான்னு ஆயிடுமா.. அவனுக்கு மது தான் முதல்ல.. அவளுக்கு அப்புறம் தான் மத்தவங்க” என்று கூற சத்யனோ,

“சரி அப்புறம் ஏன் மாறன் என்கிட்ட அவன் பின்னாடி தான் மது இருக்கான்னு பொய் சொல்லணும்.. எதார்த்தமா இருந்தா அவன் சாதாரணமா சொல்லிருக்கலாமே.. இன்னொரு ஃபிரண்டோட பைக்ல அவ உக்காந்துருக்கான்னு” என்று கேட்க விஜயாவுக்கு சத்யனின் கூற்று யோசிக்கும்படி இருந்தது.

“சரி பொறுமையா விசாரிப்போம்.. நம்மள மீறி நம்ம பிள்ளைங்க ஏதும் பண்ண மாட்டாங்க” என்று நம்பினார் விஜயா. அதன்பிறகு சிலநாட்கள் சத்யன் அவர்களை கண்காணிக்க எப்பொழுதுமே மது மதுரனுடனும் மாறன் விழியுடன் பயணிப்பது தெரிந்த சத்யன் மாறனையும் மதுரிகாவையும் அழைத்து உண்மையை விசாரிக்க மதுரன் மதுரிகாவின் காதல் விஷயம் தெரியவந்தது சத்யன் மற்றும் விஜயாவுக்கு.

“உன்கிட்ட இருந்து இதை கொஞ்ச கூட எதிர்பாக்கல மது” என்று விஜயா கேட்க சத்யனும்,

“இந்த காலேஜ் சேரும்போதே உங்க ரெண்டு பேரு கிட்டயும் நாங்க சத்யம் வாங்குனது நியாபகம் இருக்கா” என்று கேட்க மாறனும் மதுவும் புரியாமல் முழித்தனர்.

“ப்பா.. அது நீங்க எடுக்குற ஒரு முடிவுக்கு நாங்க ஒத்துக்கணும்னு தான் சத்யம் வாங்குனீங்க” என்று கேட்க விஜயாவோ,

“அந்த முடிவே நீங்க ரெண்டு பேரும் வாழ்க்கை முழுக்க சேர்ந்து இருக்கணுங்குறது தான்” என்று கூற மதுவோ,

“ஐயோ அத்தை.. நான் மதுரன விரும்புறதுனால மாறன் கூட பேசாம எல்லாம் இல்ல அத்தை.. யார் வந்தாலும் என் மாறன் தான் எனக்கு முக்கியம் முதல்ல.. அப்புறம் தான் மதுரன் கூட” என்று கூற மாறனோ,

“ஆமா மா.. அவங்க ரெண்டு பேரும் பேசட்டும்னு நான் தான் சில நேரம் விலகி போவேன்.. அப்போ கூட மது என்னை விட்டுக்கொடுக்காம அவக் கூட என்னை உக்கார வச்சுப்பா.. நாங்க பிரிஞ்சுருவோம்ன்னு நீங்க ஏன் பயப்படுறீங்க” என்று கூற சத்யன் மற்றும் விஜயாவுக்கு எவ்வாறு கூறுவது என்று புரியவில்லை. சத்யனோ,

“நாங்க சொல்றது உங்களுக்கு புரியலயா” என்று கேட்க இல்லையென தலையசைத்தனர் இருவரும். விஜயாவோ,

“இதுக்கு மேல மறைக்க என்னங்க இருக்கு.. தெளிவாவே சொல்லிடுறேன்.. நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணி வாழ்க்கை முழுக்க ஒண்ணா இருக்கணும்னு தான் நாங்க ஆசைப்படுறோம்.. அந்த முடிவுக்காக உங்க கிட்ட சத்தியமும் வாங்குனோம்..” என்று பட்டென உடைத்துவிட மாறனும் மதுவும் சற்றும் இதனை எதிர்பார்க்கவில்லை.

“ம்மா.. என்ன பேசுறீங்க நீங்க” என்று மாறன் கோபத்தில் கத்த மதுவோ கண்கள் கலங்கி நின்றாள். சத்யனோ,

“அவ சொன்னதுல என்ன தப்பு இருக்கு.. நீங்க ரெண்டு பேரும் கட்டிக்குற முறை தான.. உனக்கு அவ உயிரு அவளுக்கு நீ உயிருன்னு சொல்லிக்குறீங்க.. கல்யாணம் பண்ணா என்ன தப்பு.. நாங்க இப்படி எல்லாம் கனவு கண்டு வச்சா… இப்போ திடிர்னு அவனை காதலிக்குறேன்னு வந்து நின்னா என்ன அர்த்தம்..” என்று சத்யன் கோபமாய் கேட்க மாறனோ,

“ப்பா.. என்ன பேசுறீங்க நீங்க.. எங்களுக்குள்ள இருக்குறது புனிதமான நட்பு.. இன்னும் சொல்லப்போனா ஒருவகை சகோதரத்துவம் தான் இதுவும்.. எங்களை கேட்காம நாங்க கல்யாணம் பண்ணிக்கனும்னு நீங்க எப்படி ஆசைப்படலாம்..” என்று கேட்க மதுவோ,

“ஆமா மாமா.. ப்ளீஸ்.. நான் மதுரனை தான் விரும்புறேன்.. மாறன் மேல எனக்கு அந்த மாதிரியும் எந்த எண்ணமும் வந்தது இல்ல.. இனியும் வராது.. மாறனுக்கு என்மேல இருக்குறதும் அதே தான்.. உங்க கிட்ட சொல்லாம உங்க அனுமதி இல்லாம நான் மதுரனை விரும்புறது தப்பு தான்.. இல்லன்னு சொல்லல.. ஆனா உங்கள மீறி எதுவும் பண்ணமாட்டேன்” என்று கூறியவள் கண்கள் கலங்க விஜயாவைப் பார்க்க அவர்களிருவரின் எண்ணமும் விஜயாவுக்கு புரிந்தது. ஆனால் சத்யனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

 

ரகசியம் – 54

“கடைசில உங்க அம்மா புத்தி தான உனக்கும் வந்துருக்கு.. அவளும் கெட்ட பேரு வாங்கி பிரபாகரனையும் அசிங்கப்படுத்தி சாவடிச்சு அவளும் செத்து போனா.. இந்த எழவு காதலால தான் எல்லா பிரச்சனையும்.. நாய குளிப்பாட்டி நடு வீட்டுல வச்சாலும் அது போகுற இடத்துக்கு தான் போகும்னு சொல்றது சரியா தான இருக்கு.. ச்சை.. காதலாம் காதல்” என்று கோபத்தில் வார்த்தைகளை கடித்து துப்ப,

“என்னங்க.. பானு பத்தி ஏதாச்சு தப்பா பேசுனீங்க.. நான் மனுஷியா இருக்க மாட்டேன்.. அவ உங்களுக்கும் தங்கச்சிங்குறத மறந்துராதிங்க.. என் கூட பொறந்தவன் செஞ்ச தப்புக்கு பானு என்ன செய்வா.. உண்மை தெரிஞ்சும் இப்படி பேசாதீங்க” என்று சத்யனை விட கோபமாய் விஜயா பேச சத்யனின் பொறுமை காற்றில் பறந்தது.

“வேலி இடம் கொடுக்காம ஆடு உள்ள நுழையாது விஜி.. அதை முதல்ல புரிஞ்சுக்கோ.. நீ உன் தோழிக்கு சப்போர்ட் பண்ணுறேன்னு உண்மைய புரிஞ்சுக்காம பேசிட்டு இருக்க.. என்னவோ பண்ணி தொலைங்க” என்று கூறிவிட்டு சென்றுவிட மதுவின் மனதில் பிரளயமே வெடித்தது. சத்யனின் வார்த்தைகளை அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. விபத்தில் ஏற்பட்ட தன் தாய் தந்தை இறப்புக்கு காதல் எவ்வாறு காரணமாக முடியும்.. என்ற குழப்பம் வேறு மனதினை பிசைய விஜயாவிடம் வந்தவள்,

“அத்தை.. மாமா என்ன சொல்லிட்டு போறாங்க.. என்ன அத்தை நடந்தது.. ப்ளீஸ் சொல்லுங்க” என்று அழுதபடி கேட்க மாறனும்,

“ம்மா.. சொல்லுங்க மா.. அப்பா ஏன் அப்படி சொல்லிட்டு போனாங்க..” என்று கேட்க விஜயாவிற்கு நடந்ததை கூற மனம் வரவில்லை.

அதையே சிந்தித்தவருக்கு கடந்த காலங்கள் எல்லாம் மனத்திரையில் வேகமாக ஓட விஜயாவுக்கு தலை சுற்றியது. லேசாக மயக்கமும் வர அதற்குள் அவரை தாங்கிப்பிடித்த மது மாறனின் உதவியோடு அவரின் அறையில் படுக்க வைத்து மாத்திரை எடுத்து கொடுத்து சாப்பிடவைத்து தூங்க வைத்தாள்.

விஷயம் அறிந்து சத்யன் வந்து விஜயாவைப் பார்க்க அவரோ ஆழ்ந்து தூங்கி கொண்டிருந்தார். மதுவோ குழப்பத்தோடும் கேள்விகளோடும் கண்ணீரோடும் அமர்ந்திருக்க அவள் அருகில் வந்த சத்யன்,

“கொஞ்ச நாளைக்கு இதை பத்தி அவகிட்ட கேட்காதீங்க.. கோபத்துல என் வாயில இருந்து வார்த்தைகளை யோசிக்காத மது.. உன் காதல பத்தி இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்க முடியாது.. கொஞ்ச நாள் போகட்டும்.. புரிஞ்சு நடந்துப்பன்னு நம்புறேன்” என்று கூறிவிட்டு அவளின் தலையை வருடிவிட்டு அவர் சென்றுவிட அவரின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து விஜயாவிடம் எதுவும் கேட்கவில்லை.

விஜயாவுக்கும் சத்யனுக்கும் தங்களின் காதல் பற்றி தெரிந்துவிட்டதை மட்டும் மது மதுரனிடம் கூறினாள். அதன்பிறகு அனைவரும் ஒன்றாக சேர்ந்து வெளியில் செல்வதை குறைத்துக் கொண்டனர். சத்யனோ மறைமுகமாக மதுரன் மற்றும் அவனின் குடும்பத்தை பற்றி விசாரிக்க ஏற்பாடு செய்ய விசாரணையின் முடிவில் தெரிந்த தகவல் சத்யனை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மதுரன் மற்றும் அவனின் குடும்பத்தைப் பற்றி மறைமுகமாக விசாரிக்க சத்யன் ஏற்பாடு செய்திருக்க அதன் முடிவு சத்யனை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

‘இந்த மது என்ன காரியம் பண்ணி வச்சுருக்கா.. போயும் போயும் இவனை தான் அவ விரும்பணுமா’ என்று ஆதங்கப்பட்டவர் விஜயாவிடம் இது குறித்து பேச வந்தார். அவரின் அறைக்கு வந்தவர் முதலில் விஜயாவிற்கு தேவையான மாத்திரையை எடுத்து கொடுக்க அவரோ புரியாமல் நோக்கினார் சத்யனை.

“இதை முதல்ல சாப்பிடு விஜி.. உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்” என்று கூற கணவனின் கவலைத் தோய்ந்த முகத்தைக் கண்டவர் எதுவும் கூறாமல் மாத்திரையை விழுங்கிவிட்டு அவரின் உரையாடலுக்காக காத்திருந்தார். விஜயாவின் அருகில் அமர்ந்த சத்யன்,

“விஜி.. நான் சொல்ல போற விஷயத்தைப் பதற்றப்படாம பொறுமையா கேட்கணும் சரியா.. நீ கண்டிப்பா பதற்றப்படுவ அப்புறம் தேவையில்லாம யோசிச்சு மயக்கமாகிடுவ.. அதனால தான் சொல்றேன்.. நிதானமா கேப்பியா” என்று கூற சத்யனின் பீடிகை விஜியின் மனதில் பிரளயத்தை உண்டுபண்ணியது. இருந்தும் கணவனின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு தன்னை நிதானித்தார்.

“சரிங்க சொல்லுங்க..” என்று அவர் கேட்க சத்யனோ,

“விஜி.. நம்ம மது அந்த பையன் மதுரனை விரும்புறது சரியா இருக்காது..” என்று கூற மது மற்றும் மாறனின் திருமணம் பற்றிய முடிவிலிருந்து தன்னை மாற்றிக் கொண்ட விஜயா பிள்ளைகளுக்கு ஆதரவாய் பேச தொடங்கினார்.

“ஏங்க.. நானும் மதுவும் மாறனும் கல்யாணம் பண்ணினா நல்ல இருக்குமேன்னு ஆசைப்பட்டேன் தான்.. ஆனா பிள்ளைங்க அவங்க மனசுல இருக்குறத தெளிவா சொல்லிட்டாங்க.. இதுக்குமேல நாம வற்புறுத்துறது சரியா இருக்காதுங்க.. அந்த மதுரனும் நல்ல பையன் தான்.. மாறன் அடிக்கடி சொல்லிருக்கான்.. வருஷங்கள் போகட்டும்.. அப்பவும் அவங்க ரெண்டு பேரும் இதே காதலோட இருந்தா நாம அவங்கள சேர்த்து வைக்கிறது பத்தி யோசிப்போம்” என்று தன் மனதில் உள்ளதை விஜயா கூற சத்யனோ,

“அயோ விஜி.. இப்போ நானும் மது மாறன் கல்யாணம் பண்ணிக்கணும் நினைக்கல.. நான் சொல்றது மதுவும் மதுரனும் சேரக்கூடாதுன்னு தான்.. மதுவுக்கு வேற பையன கூட நாம பார்த்துக்கலாம்.. ஆனா மதுரன் மட்டும் வேணாம்னு தான் சொல்றேன்” என்று கூற சத்யனின் கூற்றில் விஜயாவிற்கு பெரும் குழப்பம் ஏற்பட்டது.

“என்னங்க சொல்றீங்க.. எதனால மதுவும் மதுரனும் சேரக்கூடாதுன்னு சொல்றிங்க.. அவன் நல்லவன் கிடையாதா” என்று பதற்றமாய் கேட்க சத்யனோ,

“அவன் நல்லவன் தான் விஜி.. ஆனா….” என்று இழுக்க விஜியோ,

“ஆனா என்னங்க…” என்று கேட்க பிறகு சத்யன் கூறிய கூற்றில் விஜயாவிற்கு பேரதிர்ச்சி.

“என்னங்க சொல்றீங்க.. நிஜமாவா.. என்னால நம்ப முடியல.. அப்போ மதுரன்…..” என்று ஏதோ கூறியபடி சத்யனை நோக்க அவரோ ஆமென்று தலையசைத்தார்.

“இதை கொஞ்சம் கூட நான் எதிர்பாக்கல.. என் அண்ண பானுக்கு பண்ண துரோகம் இப்போ எப்படி வந்து நிக்குது பார்த்திங்களா.. கடவுளே அவன என் அண்ணன்னு சொல்லவே எனக்கு நா கூசுது” என்று வெறுப்பின் உச்சத்தில் விஜயா கூற சத்யனோ,

“இதுல சரிபாதி தப்பு என் கூட பொறந்த சனியன் மேலயும் இருந்து தொலைக்குது.. நெனச்சாலே ஆத்திரமா வருது விஜி” என்று அடக்கப்பட்ட கோபத்தோடு சத்யன் கூற அவரின் கூற்றை மறுத்து பேச வந்த விஜயாவைத் தடுத்த சத்யன்,

“மறுபடியும் அவளுக்காக சோம்பு தூக்காத விஜி.. உன் ஃபிரண்டுங்குறதுக்காக அவ செஞ்ச தப்ப தப்பில்லன்னு சொல்லாத… சரி இப்போ அதை விடு முடிஞ்சு போன அசிங்கத்தைப் பத்தி பேசி என்ன ஆகப்போது.. அடுத்து என்ன செய்யணும்னு யோசிக்கணும்” என்று கூற விஜயாவோ,

“யோசிக்க ஒன்னுமில்லைங்க.. கண்டிப்பா மதுவும் மதுரனும் சேரக்கூடாது.. அவங்க சேர்ந்தா ரொம்ப பெரிய தப்பாயிடும்..”

“ஆமா விஜி.. இதை எப்படி மதுகிட்ட சொல்லுறது.. அவ எந்த மாதிரி எடுத்துப்பா”

“எப்படினாலும் சொல்லி தானே ஆகணும்.. உண்மையா சொல்லிட்டா அவளே மதுரனவிட்டு விலகவும் வாய்ப்பு இருக்கு தான” என்று விஜயா தனது யூகத்தைக் கூற சத்யனோ,

“இருக்கு தான்.. ஆனா நாம சொல்ற எல்லாத்தையும் மது முதல்ல நம்பணுமே” என்று யோசனையாக கேட்க விஜியோ,

“நம்புவா கண்டிப்பா.. நம்பி தான ஆகணும்.. அவ நம்பலனாலும் நடந்ததை மாத்த முடியாது தான.. அப்படியும் அவ நம்பலைனா ஆதாரம் நம்மகிட்ட இருக்கு.. அதை காமிச்சா அவளுக்கே எல்லாம் புரிஞ்சுடும்.. ஆனா பாவம் மது.. அவ மனசு என்ன பாடு பட போகுதோ.. கடைசிவரை அவ உண்மை தெரியாம நம்ம மதுவா சந்தோஷமா இருப்பான்னு நெனச்சேன்.. கடைசில அவகிட்ட உண்மைய சொல்லவேண்டிய கட்டாயத்தை அவளே தேடிக்கிட்டாளே..” என்று கண்கள்கலங்க விஜயா கூற சத்யனோ,

“ஆமா விஜி.. என்ன தான் நான் பானு மேல கோபமா இருந்தாலும் அந்த கோபத்தைக் கொஞ்சம் கூட மதுமேல காட்ட எனக்கு மனசு வராது.. அவ என் தங்கச்சி பொண்ணா இருந்தாலும் கூட நான் பெத்த பொண்ணா நெனச்சு தான் இவ்ளோ நாள் வளர்த்தேன்.. அவ வாழ்க்கை என்ன ஆகும்னு எனக்கு பயம் வருது” என்று வருந்தி கூற,

“சரி விடுங்க.. காலம் போற போக்குல போவோம்.. இது தான் நடக்கணும்னு விதி இருந்தா யாரால மாத்த முடியும்.. கொஞ்ச நாள் போகட்டும் மது கிட்ட இதைப் பத்தி பேசுவோம்” என்று கூற சத்யனும் சரியென்றார்.

———————————————–

பால்கனியில் சோகமே உருவாய் விழியில் கண்ணீர் கோடோடு அமர்ந்திருந்தாள் மதுரிகா. வெகு நேரமாகியும் மதுவைக் காணாத மாறன்,

“இந்த பிசாசு எங்க போயிருப்பா” என்று சத்தமாக புலம்பியபடி அவளின் அறைக்கு வர மாறனின் அரவம் உணர்ந்த அவனின் மது தான் அழுதது அவனறியவண்ணம் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

“ஹே லூசு.. நீ இங்க இருக்கியா.. என்னடி காலைல இருந்து ரூமுக்குள்ளையே இருக்க.. என்னாச்சு..” என்று கேட்க,

“ஒண்ணுமில்ல டா சும்மா தான்..” என்று முயன்று தன்னை சகஜமாக காட்டிக் கொண்டாலும் அவளின் முகவாட்டத்தை அறிய தெரியாதவனா அவன்.

“ஹே மது.. அழுதியா” என்று கேட்கவும் அதற்குமேல் முடியாமல் அவளின் கண்ணீர் விழி எனும் அணையை உடைத்துக் கொண்டு வெளியேறியது. மன சோர்வு தாங்காமல் மாறனை அணைத்து அழுக ஆரம்பித்து விட்டாள் பெண்ணவள். அவள் கலக்கத்தில் பதறிய மாறன்,

“மது.. என்னாச்சு டா.. எதுக்கு அழகுற..” என்று அவளை ஆதரவாய் அணைத்து அவளின் தலையை வருடியபடி கேட்க அவளோ,

“ஏன் மாறா எனக்கு மட்டும் எல்லாம் கெட்டதாவே நடக்குது.. என்னை சுத்தி நடக்குற எதுவும் எனக்கு புரியல… அன்னைக்கு மாமா சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் என் காதுல ஒலிச்சுகிட்டே இருக்கு.. அப்படி என்ன என் அம்மா தப்பு செஞ்சாங்க.. என் அப்பா அம்மா விபத்துல சாகலையா அப்போ.. காதல் எப்படி காரணமாச்சு அவங்க சாவுக்கு..” என்று அழுதபடி கூற அவளை சற்று ஆசுவாசப்படுத்தி அமர வைத்தவன்,

“எனக்கும் அந்த சந்தேகம் இருக்கு மது.. நீ முதல்ல அழுகாத.. அழுதா எதுக்கும் தீர்வு கிடைக்காது.. நம்மள தெளிவா யோசிக்கவும் விடாது.. நீ முதல்ல முகத்தைக் கழுவிட்டு வா.. நாம இதைப்பத்தி டிஸ்கஸ் பண்ணுவோம்” என்று கூறி அவளைக் குளியலறை அனுப்பிவைக்க சற்று நேரத்தில் முகம் கழுவி வந்தவள் அவன் முன் அமர்ந்தாள்.

 

ரகசியம் – 55

“இங்க பாரு மது.. ஏதோ ஒரு பெரிய விஷயம் நடந்துருக்குன்னு மட்டும் தெரியுது.. ஆனா அதை நம்மகிட்ட சொல்லாம மறைச்சு வச்சுருக்காங்க.. பானு அத்தை என் அப்பாவோட தங்கச்சி.. பிரபா மாமா என் அம்மாவோட அண்ணா.. பானு அத்தைக்கு என் அம்மா சப்போர்ட் பண்றாங்க.. பிரபா மாமாக்கு அப்பா சப்போர்ட் பண்றாங்க.. பானு அத்தை பிரபா மாமா ரெண்டு பேரோட சாவுக்கு காதல் தான் காரணம்னு அப்பா சொல்றாங்க.. சரி அப்படியே அவங்க காதலிச்சு கல்யாணம் பண்ணிருந்தாலும் என்ன தான் தப்பு.. ஒருவேளை அப்பாவை மீறி அப்பா பேச்சைக் கேட்காம பானு அத்தை பிரபா மாமாவைக் கல்யாணம் பண்ணிகிட்டாங்களோ.. அதனால் தான் அப்பா இவ்ளோ கோபமா இருக்காங்களா” என்று மாறன் தன் மனதில் உதித்த கேள்விகள் அனைத்தையும் கேட்க மதுவோ,

“டேய் அப்படி மாமாவை மீறி கல்யாணம் பண்ணதுக்கு தான் கோவம்னா அப்போ எங்க அப்பா மேலயும் கோபம் இருக்கணும் தான.. ஆனா மாமாக்கு என் அம்மா மேல மட்டும் தான் கோபம் இருக்குற மாதிரி இருக்கு” என்று கூற மாறனோ,

“லாஜிக்கலி கரெக்ட் மது.. அப்போ பிரச்சனை இதுவா இருக்காது.. வேற ஆங்கிள்ல யோசிப்போம்” என்றபடி தங்களுக்கு தோன்றுகின்ற காரணத்தை எல்லாம் இருவரும் கலந்தாலோசித்து கொண்டிருந்தனர். ஆனால் பதில் கிடைக்கவே இல்லை அவர்களுக்கு.

மறுநாள் பொழுது விடிய சகோதரிகள் இருவரும் சண்டை போட்டபடியே கிளம்பிக் கொண்டிருந்தனர் கல்லூரிக்கு.

“ஏன் டி அங்க தான் இன்னொரு கண்ணாடி இருக்குல்ல.. அந்த பக்கம் போய் நீ ரெடியாக வேண்டி தான..” என்று இனியா தன்னைக் கிளம்ப விடாமல் தொந்தரவு செய்த தன் தங்கையைப் அர்ச்சிக்க,

“அப்போ நீ அங்க போக வேண்டியது தான.. இவளுக்கு மட்டும் பெரிய கண்ணாடியாம்.. எனக்கு மட்டும் சின்னதா.. ஏன் டி இவ்ளோ நாள் இப்படி மின்னிகிட்டு போய் தான் அமுது மாம்ஸ கவுத்துருக்கியா நீயு” என்று வேண்டுமென்றே அவளை சீண்டினாள் விழி.

“ஹே வாய உடைச்சுருவேன்.. அவனை அமுதுன்னு நான் மட்டும் தான் சொல்லுவேன்.. அது சரி நான் மின்னிகிட்டு போய் தான் அமுதுவ கவுத்துருக்கேன்னு கூட வச்சுக்கோ.. ஆளு இருக்கு நான் மினுக்குறேன்.. நீ யாரைக் கவுக்க இப்படி மினுக்குரியாம்..” என்று அவளிடம் திருப்ப ஏற்கனவே மாறனின் நினைவுகளில் மூழ்கியவள் சட்டென யோசிக்காமல்,

“என் ஆள கவுக்க தான்” என்று கூறிவிட அவளின் கூற்றில் உறைந்த இனியா,

“ஹே என்னடி சொல்ற.. உன் ஆளா.. யாரு டி அது” என்று அதிர்ச்சியாய் கேட்க அப்பொழுது தான் உளறிக்கொட்டியது புரிந்தது விழிக்கு.

‘எப்போவும் யோசிக்காம பேசி இவகிட்ட மாட்டிக்குறதே எனக்கு வேலையா போச்சு.. அயோ கடவுளே வசமா சிக்கிட்டேன் போலயே’ எனறு மனதில் நினைத்தபடி திருதிருவென விழி விழிக்க இனியாவோ,

“என்ன டி பேசாம நிக்குற.. உன்ன தான் கேக்குறேன்.. உன் ஆளுன்னு யாரை சொன்ன.. அப்போ நீயும் லவ் பண்றியா” என்று விடாமல் கேட்க விழியோ,

“அது வந்து….” என்று இழுத்தாள் இமைவிழி.

விழியை விடாமல் இனியா கேள்விகளால் துளைக்க அவள் கேள்வியில் முழித்த விழி,

“அது வந்து டி… ” என்று இழுக்க சட்டென்று யோசனைத் தோன்ற பிறகு,

“ஹான் இருக்கிறவங்களுக்கு ஒரு ஆளு.. இல்லாதவங்களுக்கு பார்க்குற எல்லாருமே ஆளு… அந்த மாதிரி சொன்னேன்.. என்னையும் பசங்க நிறையபேர் சைட் அடிக்குறானுங்க தெரியும்ல” என்று மிக லாவகமாய் சமாளித்தாள் இமைவிழி.

“அதான பார்த்தேன்.. எங்க உனக்கொரு இளிச்சவாயன் மாட்டிட்டானோன்னு நெனச்சேன்” என்று கூறி இனியா சிரிக்க,

“அய்யடா.. ரொம்ப தான்.. உனக்கே ஒரு இளிச்சவாயன் கிடைக்கும்போது எனக்கு கிடைக்க மாட்டானா” என்று கூற அவளை இனியா அடிக்க துரத்த அவள் பிடியில் சிக்காமல் ஓடிய விழி ஹாலுக்கு சென்று தன் தந்தை பின்னே ஒளிந்துகொண்டாள்.

“பாருங்கப்பா இனியா என்னை அடிக்க வரா” என்று குற்றம் சாட்ட ராமானுஜமோ.

“என்ன நீங்க இன்னும் சின்ன புள்ள மாதிரி சண்டை போடுறீங்க.. அன்பு.. அவ தான் சின்ன பொண்ணு.. நீயாச்சு பக்குவமா நடந்துக்கோ.. இப்போ எதுக்கு அவளை அடிக்க வர” என்று கேட்க காரணத்தைக் கூற முடியாமல் இனியா முழிக்க அவளைப் பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்த விழி,

“சொல்லு டி.. அதான் அப்பா கேட்குறாங்கல” என்று கூற அவளை முறைத்த இனியா,

“பெருசா ஒன்னுமில்ல பா.. சும்மா தான்” என்று கூறி இடத்தைவிட்டு நழுவினாள்.

“எப்போ தான் இவங்க ரெண்டு பேரும் மாறப்போறாங்களோ” என்று தனக்குள் கூறி சிரித்துக் கொண்டவர் தன் பணியைக் கவனிக்கலானார். பிறகு சகோதரிகள் இருவரும் ஒருவழியாக கிளம்பி கல்லூரி வந்தனர். விழியோ அவளது வகுப்பிற்கு செல்லாமல் இனியாவோடு அவளின் வகுப்பிற்கு வர,

“ஹே என்ன டி.. உன் கிளாசுக்கு போகாம என்கூட வர” என்று கேட்க அவளோ,

‘நானே நேத்து லீவுங்குறதுனால என் ஆள பாக்கலையேன்னு ஆவலா அவனைப் பாக்க வரேன்.. இவ ஒருத்தி கேள்வி மேல கேள்வி கேக்குறா’ என்று மனதில் நினைத்துவிட்டு,

“சும்மா தான் டி..” என்று கூறியபடி வர வகுப்பினுள் மதுரனும் மதுரிகாவும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க மறுபுறம் மாறனும் அறிவும் பேசிக் கொண்டிருந்தனர். முதலில் இனியா உள்ளே நுழைய அவளைக் கண்ட அறிவு அவளோடு சென்று அமர இரண்டு ஜோடிகளைத் திரும்பி ஒருமுறைப் பார்த்த மாறன் பிறகு எழுந்து வெளியே செல்ல எத்தனிக்க அதற்குள்,

“ஹாய் இளா” என்றபடி புன்னகை முகமாக வந்தமர்ந்தாள் விழி.

“ஹே இமை.. நீ உன் கிளாசுக்கு போகலையா.. இங்க வந்துருக்க” என்று கேட்க அவளோ,

“வந்ததும் விரட்டுறீங்க.. சரி போங்க நான் போறேன்” என்று பொய் கோபத்தோடு செல்ல எத்தனிக்க அவளின் கரம் பற்றியவன்,

“ஹே சாரி சாரி.. சும்மா தான் கேட்டேன் இமை.. கோச்சுக்காத உக்காரு” என்று கூற அவனின் ஸ்பரிசத்தில் தன்னைத் தொலைத்தவள் பிறகு அவனின் கெஞ்சும் பாவனையில் மொத்தமாக சாய்ந்தாள் அவன்பால்.

‘இப்படி க்யூட்டா கெஞ்சுனா எந்த பொண்ணுக்கு தான் கோபமா இருக்க தோணும்’ என்று மனதில் நினைத்தவள் பிறகு மீண்டும் அமர்ந்தாள். அவன் சிரித்தாலும் ஏதோ ஒரு வாட்டம் அவனுள் இருப்பதைக் கண்டுகொண்ட விழி,

“என்னாச்சு இளா.. ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க..” என்று கேட்க அவளின் கூற்றில் ஆச்சர்யமாய் பார்த்தான் மாறன். தன் மனதில் இருப்பதை இவள் எப்படி அறிந்தாள் என்றபடி. அவளைப் பார்த்து புன்னகைத்தவன் பிறகு மதுரன் மதுரிகா காதல் விஷயம் வீட்டில் தெரிந்ததைப் பற்றி மட்டும் கூறினான்.

“விடுங்க இளா.. மதுரன் அண்ணாவும் மது அக்காவும் யாருக்கும் எந்த தப்பும் செய்யல அதனால அவங்க மனசுக்காகவே அவங்க ரெண்டு பேரும் எந்த பிரச்சனையும் இல்லாம ஒன்னு சேருவாங்க.. உண்மையான காதல் என்னைக்குமே தோத்து போகாது இளா..” என்று அவனுக்கு நம்பிக்கையளிக்க அவளின் வார்த்தை மாறனுக்கு சற்று தெம்பூட்டியது. பிறகு சகஜமானவன்,

“அது இருக்கட்டும்.. உன்னோட கதைகள் கவிதைகள் எல்லாம் எப்படி போய்ட்டு இருக்கு.. நான் அதை படிக்கணும்னா எதுல படிக்கணும்” என்று மாறன் கேட்க அவளோ,

‘ஆத்தாடி ஆத்தா.. நீங்க மட்டும் என் கதையை படிசீங்கன்னா என் சோலி முடிஞ்சுருமே.. முழுக்க முழுக்க நமக்குள்ள நடந்த சம்பவம் தான் எழுதிருக்கேன்.. அதுமட்டுமா ஹீரோ பெயரெல்லாம் உங்க பெயரை தான் வெற்றிமாறன், தமிழ்மாறன், இளவரசு, இளவேந்தன்னு டிசைன் டிசைனா மாத்திவச்சுருக்கேன்.. அதெல்லாம் படிச்சா கண்டிப்பா உங்களுக்கு என்மேல சந்தேகம் வந்துரும்’ என்று மனதில் நினைத்து கொண்டிருக்க அப்பொழுது சரியாக அவளின் வகுப்பு தோழி அவளை அழைக்க இது தான் சாக்கென்று,

“அப்புறமா சொல்றேன் இளா.. டைம் ஆயிட்டு.. பாய் பாய்” என்று கூறியபடி தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓட்டம்பிடித்தாள். அவள் செயலில் சிரித்தவன் பிறகு தன் அலைபேசியில் மூழ்கினான்.

இப்பொழுதெல்லாம் மாறனுக்கு இனியாவைப் பற்றிய எண்ணங்கள் வருவதில்லை. தான் அவளை ஒருகாலத்தில் காதலித்தோம் என்ற நினைவு கூட பெரும்பாலும் அவனுக்கு நினைவிற்கு வருவதில்லை. அந்த அளவிற்கு அவனின் மனதில் மாற்றம் ஏற்பட்டிருந்தது. அவனின் இந்த மாற்றத்திற்கு முழுக்க முழுக்க விழி தான் காரணம். மற்ற இரண்டு ஜோடிகள் சேர்ந்திருக்கும் நேரமெல்லாம் மாறனைத் தனியாக விடாமல் ஏதாவது பேசி கலகலப்பாகவே வைத்துக்கொள்வாள் இமைவிழி. ஒருகாலத்தில் அவன் இனியாவைக் காதலித்திருக்கிறான் என்ற விஷயம் தெரிந்தாலும் இதே அன்பும் ஆதரவும் விழியிடம் இருந்து மாறனுக்கு கிட்டுமா..?

இவ்வாறு ஒருபுறம் இருக்க மறுபுறம் இனியாவும் அறிவும் பேசிக்கொண்டிருந்தனர்.

“டேய் திருட்டுப்பயலே.. ஏன் நேத்து எனக்கு கால் பண்ணல.. நீ கால் பண்ணுவன்னு ரொம்ப நேரமா மொட்டைமாடியிலேயே நின்னுட்டு இருந்தேன் தெரியுமா” என்று இனியா அவன் மீது கோபம் கொள்ள அவனோ,

“சாரி அன்பு.. நேத்து அம்மாக்கு கொஞ்சம் உடம்பு முடியல.. வேளைக்கு போய்ட்டு வந்து நேத்து நான் தான் வீட்டு வேலையெல்லாம் செஞ்சு முடிச்சேன்.. அப்புறம் டயர்டுல அப்படியே தூங்கிட்டேன்” என்று அவன் சோகமாக கூற அவளோ,

“என்ன அமுது சொல்ற… அம்மாக்கு என்னாச்சு.. இப்போ எப்படி இருக்கு.. ” என்று கேட்க அவனோ,

“பீரியட்ஸ் ப்ராப்லம்ன்னு சொன்னாங்க.. வயிறு ரொம்ப வலிக்குது.. அதிகமா ப்ளீடிங் இருக்கும்போல.. மத விஷயம்னா ஏதாச்சு நான் செஞ்சிருவேன்.. இதுக்கு என்ன செய்றதுன்னு எனக்கு தெரியல.. காலைல இருந்து படுத்து தான் இருந்தாங்க.. சமைச்சு வச்சுட்டு வந்துருக்கேன்.. சாப்பிட்டாங்களா என்னனு தெரியல..” என்று சோகமாக கூற அவளோ,

“அது மெனோபாஸ் சிம்டம்ஸ் டா.. வயசான அப்புறம் லேடிஸ்க்கு இந்த மாதிரி ப்ராப்லம் வரும்.. ரொம்ப கஷ்டமா இருக்கும் இந்த மாதிரி நேரத்துல.. இதுக்கு சரிபண்ண பெருசா மருந்து எல்லாம் கிடையாது.. வயிறு வலிச்சா அது குறைய டேப்லட் குடுப்பாங்க.. ப்ளீடிங் ரெடியுஸ் ஆக இன்ஜெக்ஷன் போடுவாங்க.. மத்தபடி ஸ்டாப் ஆகுற வர மாசம் மாசம் இந்த பிரச்சனை வர தான் செய்யும்.. கம்ப்ளீட் ரெஸ்ட் அன்ட் கேர் தான் டா இதுக்கு தேவை” என்று கூற மேலும் வருந்தினான் அறிவமுதன். அவனின் கலங்கிய முகம் காண பொறுக்காத அவனின் அன்பு தன் தந்தைக்கு அழைத்தாள்.

Click on a star to rate it!

Rating 4.1 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
9
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்