Loading

மெடோனா வீடு திரும்பினாள். வீட்டுக் கதவை திறந்து உள்ளே சென்றவள் குளித்து முடித்து விட்டு உதயாவை அழைத்தாள். அவன் அழைப்பை ஏற்கவில்லை.

“பிசியா இருப்பான்” என்று விட்டு விட்டு, பசிக்கு உணவை வாங்கி சாப்பிட வெளியேறினாள்.

அருகிலேயே பெரிய ரெஸ்டாரன்ட் ஒன்று உண்டு. உதயாவோடு பழக ஆரம்பித்தப்பிறகு அந்த ரெஸ்டாரண்ட் அவளுக்கு மிகவும் பழக்கம்.

அங்கு உதயா கொடுத்த க்ரெடிட் கார்டை பயன்படுத்தி அனைத்தையும் வாங்கி சாப்பிடுவாள்.

இன்றும் அங்கேயே சென்று அமர, அவளை நல்ல முறையில் வரவேற்று அமர வைத்தனர்.

மிடுக்காக வேண்டியதை ஆர்டர் கொடுத்து விட்டு, கைபேசியை பார்த்தாள். விஷாலின் அழைப்பு வந்ததிருந்தது. உடனே திருப்பி அழைத்தாள்.

“ஹேய்.. நான் ட்ராவல்ல இருந்தேன். என்ன விசயம்?”

“தனியா இருக்கியா?”

“ஆமா.. ரெஸ்டாரண்ட்ல சாப்பிட வந்துருக்கேன்”

“ரூபிணிக்கு நீ என் வீட்டுல இருந்த விசயம் எப்படி தெரிஞ்சது?”

மெடோனா அதிர்ந்தாள்.

“எப்படி தெரிஞ்சது? யாரு சொன்னா?”

“அத தான் நானும் கேட்குறேன். நீ இருந்தது உன்னையும் என்னையும் தவிர யாருக்கும் தெரியாது. என் அம்மாக்கு கூட தெரியாது. இவளுக்கு எப்படி தெரிஞ்சது?”

“வாட்? ஹேய் நான் சொன்னேன்னு நினைக்கிறியா? நோ வே.. அப்படி சொன்னா உதயாக்கும் விசயம் தெரிஞ்சுடும். நானே ஏன் சொல்லுறேன்?”

விஷால் கோபத்தோடு குறுக்கும் நெடுக்கும் நடந்தான்.

“ஒரு வேளை அன்னைக்கு வீட்டுக்கு வந்தது அவ தானோ?” என்று மெடோனா கேட்க, சட்டென நின்று விட்டான் விஷால்.

“வீட்டுக்கு வந்தாளா? யாரு? ரூபிணியா?” என்று பதட்டமாக கேட்க அன்று நடந்ததை சொன்னாள்.

“ச்சே… மெடோனா.. பைத்தியமா நீ.. இத பத்தி என் கிட்ட ஏன் சொல்லவே இல்ல?’ என்று கத்தினான்.

“என் கிட்ட கத்தாத. அவ மாஸ்க் போட்டுருந்தா. நான் தூக்கத்துல சரியா பார்க்கல.”

“அவ கிட்ட என்ன உளறி வச்ச?”

“அவ பேசவே இல்ல விஷால்.. நான் திரும்பி வரும் போது அவ இல்ல. அதான் நான் சுத்தமா மறந்துட்டேன்.”

“நீ எதாவது சொன்னியா? நல்லா யோசிச்சு பாரு”

“நோ.. எதுவுமே பேசல.. நான் சாப்பாடு வாங்க கீழ போயிட்டு வந்தேன். அவளும் என்னை பார்த்த கோபத்துல கிளம்பிருப்பா. அவ்வளவு தான்”

விஷால் நிம்மதி பெருமூச்சு விட்டான்.

“உன்னை பார்க்க மட்டும் தான செஞ்சா? அப்ப நான் சமாளிச்சுக்கிறேன்”

“என்ன பண்ணா அவ?”

“அத பத்தி கேட்காத.. முன்னாடியே சொல்லிருந்தா எதாவது சொல்லி சமாளிச்சுருப்பேன். இவ்வளவு தூரம் வந்துருக்காது.. ப்ச்ச்” என்று விட்டு அழைப்பை துண்டித்து விட்டான்.

மெடோனா கோபமாக கைபேசியை பார்க்க, உணவு வந்து விட்டது. உடனே முகத்தை மாற்றிக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள்.

ரூபிணி அவளை பார்த்ததால் அவளுக்கு சந்தேகம் வரும் என்றால் வரட்டுமே. வந்து விஷாலும் அவளும் சண்டை போடட்டுமே.

ரூபிணியை என்னவோ மெடோனாவுக்கு பிடிக்கவே பிடிக்காது. உதயாவுக்கு அவள் மீது கோபம் அதிகம். ஆனால் காரணம் தெரியாது.

உதயா ரூபிணியின் படம் எதையாவது பார்த்தால், இரண்டு நொடி இமைக்காமல் பார்த்து விட்டுத்தான் செல்வான். அவனது பார்வை மெடோனாவுக்கு பொறாமையை கிளப்பியிருந்தது.

ரூபிணிக்கும் அவனுக்கும் இடையே இருக்கும் தகறாரு என்னவென்று தெரிந்து கொள்ள எவ்வளவோ முயற்சித்தாள். ஆனால் உதயா தெளிவாக சொன்னதே இல்லை.

ரூபிணியின் அழகு, வேலை இரண்டையும் கண்டு பொறாமை கொண்டவள், ரூபிணியை போல மாடல் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டாள்.

எவ்வளவு நாள் தான் உதயாவின் பணத்தில் வாழ முடியும்? உதயா அவளிடம் சளித்துப் போய் விலகி விட்டால், மீண்டும் அவள் பழைய நிலமைக்கு போக வேண்டும். கூடவே கூடாது.

உதயாவை வைத்து இந்த மாடலிங் பகுதியில் நுழைவது மிகவும் சுலபமான ஒன்று. உள்ளே நுழைந்து ஒரு இடத்தை பிடித்து விட்டால், உதயாவை பிரிந்தாலும் கூட அவளால் சந்தோசமாக வாழ முடியும்.

இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் வேலை கூட இனி தேவையில்லை தான்.

அவளால் உதயாவை திருமணம் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இல்லை. உதயா அவளை காதலிக்கிறான் தான். ஆனால் அவளிடம் முழுவதும் திறந்த புத்தகமாக அவன் நடந்து கொண்டதில்லை.

அதனால் அவன் மீது அவளுக்கு அதிக நம்பிக்கை இல்லை.

இந்த திட்டங்களை தீட்டித் தான் அவனிடம் மாடலிங் ஆசையை பற்றி சொன்னாள். அவன் மறுக்காமல் ஒப்புக் கொண்டு அந்த பார்ட்டிக்கு கூட அழைத்துச் சென்றான்.

ஆனால் எல்லாம் பாதியில் கெட்டது. விஷாலின் தாய்க்கு விபத்து ஏற்பட்டது. அவரும் மெடோனாவின் தாயும் நெருங்கிய நண்பர்கள்.

அப்படித்தான் விஷாலோடு அவளுக்கு பள்ளியில் பழக்கம் ஏற்பட்டது. விஷாலின் தாய் மெடோனாவின் குடும்பத்திற்கு பல உதவிகளை செய்திருக்கிறார். முக்கியமாக பண உதவிகள் செய்திருக்கிறார்.

விஷாலோடு காதல் முறிந்தாலும் அவனுடைய குடும்பத்தை மெடோனா பிரிந்தது இல்லை.

அவருக்கு அடி பட்ட போது மெடோனாவின் தாய் அவசரமாக பணம் கேட்க, மெடோனா மறுக்காமல் செல்ல வேண்டியிருந்தது.

விஷால் வந்ததும் அந்த பணத்தை திருப்பிக் கொடுத்து விட்டான் தான். ஆனால் அவள் போகாமல் இருந்தால், மெடோனாவின் தாய் அவளை கொன்றிருப்பார்.

அடிபட்டவருக்கு சிகிச்சை நடக்கும் போது தான் விஷாலை பல வருடங்களுக்குப் பிறகு சந்தித்தாள்.

அவனோடு மீண்டும் பேசிய போது, பழைய நினைவுகள் எல்லாம் மேலே எழுந்தது. மருத்துவமனையில் இருந்து கிளம்பி விஷாலின் வீட்டுக்குச் சென்றனர்.

அங்கிருந்து மெடோனாவின் வீட்டுக்கு பல மணி நேரம் பயணம் செய்ய வேண்டும். அதனால் விஷால் தன் வீட்டுக்கு அழைக்க, சென்று விட்டாள்.

வீட்டுக்குச் சென்று விஷால் சமைத்துக் கொடுக்கும் வரை எதுவும் பெரிதாக தோன்றவில்லை தான். ஆனால் பழைய காதல் மெல்ல மேலே வர, இருவரும் தங்களது கட்டுப்பாட்டை இழந்து விட்டனர்.

அடுத்த நாள் தான் ரூபிணி அவளை பார்த்து விட்டு சென்றது.

அன்றே அவள் கிளம்பிச் சென்று உதயாவிடம் பொய் சொல்லி விட்டு, நேராக விஷாலின் வீட்டுக்கு வந்து விட்டாள்.

அவனது தாயை பார்த்த மாதிரியும் இருக்கும். விஷாலோடு மேலும் சில காலம் இருந்தது போலவும் இருக்கும்.

ஆனால் அது வரை விஷாலுக்கு காதலி இருப்பது மெடோனாவுக்கு தெரியாது. இங்கு வந்த பிறகே விஷால் சொன்னான். அந்த காதலியும் ரூபிணி என்ற தெரிந்த போது, மெடோனாவின் பொறாமை பல மடங்கு அதிகமானது.

உதயாவை தெரிந்து வைத்திருக்கிறாள். விஷாலின் காதலி வேறு. பொங்கி வந்த பொறாமையில் அவளது வாழ்வை அழிக்க வேண்டும் என்பதற்காகவே சந்தோசமாக விஷாலோடு இருந்தாள்.

உதயாவிடம் நல்ல பிள்ளையாக பொய் சொல்வது அவளுக்கு பெரிதாக இல்லை. மற்ற யாருக்கும் விசயம் தெரியாது. இப்போது ரூபிணிக்குத் தெரிந்தால் என்ன? விஷாலை பிரிந்து போவாள் அவ்வளவு தானே? சந்தோசமாக பிரிந்து போகட்டும் என்று நினைத்தவள் சிரிப்போடு உணவை முடித்தாள்.

பில் வந்ததும் உதயா கொடுத்த க்ரெடிட் கார்டை எப்போதும் போல் கொடுக்க, அது தடுத்து நிறுத்தப்பட்டதாக செய்தி வந்தது.

“கார்ட் ப்ளாக்ட் மேடம்” என்று வெயிட்டர் சொல்ல, ஒரு நொடி புரியாமல் அதிர்ந்தவள் உடனே மாற்றி தன்னுடையதை எடுத்துக் கொடுத்தாள்.

அதில் பணத்தை கட்டிய பிறகு பில்லை பார்த்தாள். இது வரை பில்லை அவள் சரியாக கவனித்ததே இல்லை. அவளது பணம் இல்லையே. இன்று எரிச்சல் வர அங்கிருந்து கிளம்பி விட்டாள்.

“கார்ட் எக்ஸ்பையர் ஆகல.. அப்புறம் ஏன் ப்ளாக் ஆகிருக்கு?” என்ற சந்தேகத்தோடு வீடு செல்ல, அங்கே அவளுக்காக வீட்டின் உரிமையாளர் வந்து காத்திருந்தார்.

“நீங்க இங்க என்ன பண்ணுறீங்க?” என்று மெடோனா புரியாமல் கேட்க, “வீட்டோட காண்ட்ராக்ட் தான் இன்னும் ரெண்டு வாரத்துல முடியுதே.. அதுனால என்னென்ன டேமேஜ் இருக்குனு பார்க்க வந்தேன்” என்றார் அவர்.

“முடியுதுனா திரும்ப ரினிவல் பண்ணிப்போம்.. நீங்க போங்க.. நான் அப்புறமா பேசுறேன்”

“மேடம்.. நீங்க என்ன பேசுறது? என் கூட காண்ட்ராக்ட் போட்டவரு கேன்சல் பண்ண சொல்லிட்டாரு. டேமேஜ கணக்கு பண்ணி சொல்லனும். கதவ திறந்தா நான் வந்த வேலைய பார்ப்பேன்”

மெடோனா மீண்டும் ஒரு முறை அதிர்ந்து விட்டு அவசரமாக கைபேசியை எடுத்து உதயாவை அழைத்தாள். அவன் அழைப்பை ஏற்காமல் போக, பதட்டத்தோடு அவனது அசிஸ்டன்ட்டை அழைத்தாள்.

அவன் உடனே ஏற்றான்.

“ஹேய்.. உதயா எங்க? இங்க என் வீட்டு லீஸ் முடிஞ்சதுனு ஓனர் வந்து நிக்கிறான்” என்று கடுப்பாக அவள் பேச, “அவர் வந்த வேலைய முடிச்சுட்டு போகட்டும் மேடம். நான் நேர்ல வர்ரேன்” என்றான் அசிஸ்டண்ட்.

“உதயா எங்கனு கேட்டேன்?”

“அவரு பிசியா இருக்காரு.. நான் வர்ரேன்” என்றதும் மெடோனா கடுப்பாக வைத்து விட்டாள்.

வீட்டு முதலாளி உள்ளே நுழைந்து, “அது ஏன் உடைஞ்சுருக்கு? இது ஏன் இடிஞ்சுருக்கு?” என்று கேட்டு அவளது உயிரை வாங்கி விட்டு அனைத்தையும் குறித்துக் கொண்டு கிளம்பி விட, அசிஸ்டன்ட் வந்து சேர்ந்தான்.

“என்ன இது?” என்று மெடோனா அவனை பார்த்ததுமே கத்த, “உங்களுக்கு சர்ப்ரைஸ் வச்சுருக்காங்க மேடம்.. அத நீங்க உதயா சார் கிட்ட நேராவே கேட்கலாம்.” என்றவன் அங்கே கிடந்த மெடோனாவின் கார் சாவியை எடுத்துக் கொண்டான்.

“கார நான் எடுத்துட்டுப்போறேன். நீங்க வீட்ட காலி பண்ணுற வேலைய பாருங்க”

“ஏய்.. என் கார எதுக்கு எடுக்குற? என் கார்ட் ப்ளாக் ஆகிடுச்சு. இப்ப வீட்டு லீஸ் முடிஞ்சது. காரும் எடுக்குற.. என்ன நினைச்சுட்டு இருக்க? என்ன சார்ப்ரைஸ் இது?” என்று கோபத்தில் கத்த, “அடுத்த வாரம் புதன் கிழமை சாயந்தரம் நாலு மணிக்கு நேரா ஆஃபிஸ் வாங்க. அங்க உதயா சார் கிட்ட எல்லாம் பேசிக்கோங்க” என்றவன் அடுத்து எதுவுமே பேசாமல் வெளியேறி விட்டான்.

அவனோடு வந்தவனை காரை எடுத்து வரச் சொல்லி விட்டு அவன் செல்ல, மெடோனாவுக்காக உதயா வாங்கிக் கொடுத்த காரும் சென்று விட்டது.

மெடோனா புரியாமல் விழித்தாள். என்ன நடக்கிறது? எதற்காக இப்படி செய்கிறான்? என்று புரியாமல் சில நிமிடங்கள் அமர்ந்திருந்தாள்.

அவளது தோழி ஒருத்தி அழைக்க, அவளிடம் நடந்ததை ஒப்பித்தாள். அவளது தோழியோ சந்தோசமாக குதித்தாள்.

“இது கூடவா புரியல? உதயா உனக்கு ப்ரப்போஸ் பண்ண போறான். அப்புறம் நீ எதுக்கு தனி வீட்டுல இருக்கனும்? ஒன்னா ஒரே வீட்டுல இருக்கலாம். புது கார் புது கார்ட்னு எல்லாம் தருவான்” என்று சொல்ல, மெடோனாவின் முகத்தில் சூரியனே வந்து அமர்ந்தது போல் பிரகாசமாக ஒளி வீசியது.

உதயா அவளை திருமணம் செய்ய நினைக்கிறானா? இதை விட வேறு என்ன வேண்டும் அவளுக்கு? இதைத்தான் சர்ப்ரைஸ் என்றானா?

மெடோனா சிரித்து விட்டு உடனே திருமண திட்டம் போட ஆரம்பித்து விட்டாள்.

தொடரும்.

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
10
+1
1
+1
2

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. மொடனோ விஷால் இருவருக்கும் ஆப்பு வைச்சுட்டாங்க