
ரூபிணி கம்பீரமாக காரில் இருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தாள். இன்று அவளது மனம் துள்ளிக் கொண்டிருந்ததால், அவளது அலங்காரம் தூக்கலாக இருந்தது.
அலுவலக கட்டிடத்தில் நுழையும் போது அவளை பார்த்து சிலர் புன்னகைத்தனர். பதிலுக்கு புன்னகைத்து விட்டு நேராக லிஃப்டில் நுழைந்தாள்.
மேலே செல்லும் போதே கைபேசியில் மெலினாவுக்கு செய்தி அனுப்பி வைத்தாள்.
லிஃப்ட் நின்று கதவு திறக்க, அவள் முன்பு விஷால் நின்றிருந்தான். பார்த்ததும் வெறுப்பு சட்டென மனதில் மூண்டது.
எப்படியும் அவனை இன்று சந்திக்க வேண்டும் தான். வந்த வேலையை முடித்து விட்டு பார்க்கலாம் என்று நினைத்தாள். ஆனால் முன்னால் வந்து நிற்கிறான்.
அவளை பார்த்ததும் பளிச்சென புன்னகைத்த விஷால், “பேபி.. எப்படி இருக்க? ஏன் கால்ஸ் அட்டன் பண்ண மாட்டேங்குற?” என்று அவன் அவசரமாக பேச, ரூபிணிக்கு ஓங்கி அறைய வேண்டும் போல் இருந்தது.
அலுவலகத்தில் வைத்து பேசும் போது அமைதியாக தான் பேச வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டு வந்ததால் அவனை தாண்டி நடக்க ஆரம்பித்தாள்.
“பேபி நில்லு” என்று அவன் கையைப்பிடிக்க, கையையும் அவனையும் மாறி மாறி பார்த்தாள்.
“என்ன ஆச்சு உனக்கு? என் மேல கோபம்னா என்னனு சொல்லு. தப்பு பண்ணிருந்தா ஐம் சாரி ஓகே..” என்று மிகவும் இறங்கிய குரலில் பேசினான்.
ரூபிணிக்கு தொண்டை கசந்தது. இது போல பல நேரங்களில் விஷால் அவளிடம் இறங்கி வந்திருக்கிறான். எப்போதும் அவளை ராணி போல் நடத்துவான். அனைத்தும் வேசம் என்று தெரியாமல் அதை எல்லாம் நம்பிக் கொண்டிருந்தாளே.
“லீவ் மீ” என்று கையைப்பார்த்தாள்.
“பேபி..”
“கைய எடு விஷால். எனக்கு வேலை இருக்கு”
“நாம பேசாம உன்னை போக விட மாட்டேன்”
மெலினா கண்ணாடி கதவை திறந்து கொண்டு வேகமாக வந்தார்.
“ரூபிணி வா.. மீட்டிங்கு டைம் ஆச்சு” என்றவர் விஷாலை கண்டு கொள்ளாமல் ரூபிணியை இழுத்துச் சென்று விட, விஷால் புரியாமல் நின்று விட்டான்.
அவனது வேலையை முடித்து விட்டு, மீட்டிங் நடக்கும் இடத்திற்கு அருகே சென்று அமர்ந்து விட்டான். ரூபிணிக்கு என்ன கோபம்? என்று கேட்டு சமாதானம் செய்தே ஆக வேண்டும்.
ரூபிணியோ விஷால் தொட்ட இடத்தை அருவெறுப்போடு துடைத்துக் கொண்டு சென்று அமர்ந்தாள்.
அந்த நிறுவனத்தில் அவளது வேலைகளை எல்லாம் கவனிக்கும் மேனேஜர் வந்து சேர்ந்தார். ஒப்பந்தத்தை பற்றிய பேச்சு ஆரம்பித்தது.
“காண்ட்ராக்ட்ட ரினிவல் பண்ணிக்கலாம் தான?” என்று உறுதியாக தெரிந்தது போல் அவர் கேட்க, ரூபிணி மறுப்பாக தலையசைத்தாள்.
“நோ.. இதோட நான் கிளம்பனும்” என்று விட்டாள்.
“மேடம்?”
“எனக்கு ரினிவல் பண்ணுற ஐடியா இல்ல சார். பேப்பர்ஸ ரெடி பண்ணிட்டு சொல்லுங்க. நான் சைன் பண்ணிடுறேன்”
“திடீர்னு ஏன் இந்த முடிவு?”
“ரொம்ப நாளா செய்ய நினைச்சது தான். இப்ப தான் காண்ட்ராக்ட் பீரியட் முடிஞ்சது. இனி நான் இங்க வேலை பார்க்குறதா இல்ல”
“என்ன காரணம்னு சொல்லுங்க. எதாவது வேணும்னா பண்ணிடலாம்” என்று கேட்க, ரூபிணி மெலினாவை பார்த்தாள்.
அவர் பேச ஆரம்பித்த பிறகு ரூபிணி வாயைத்திறக்கவில்லை. பணத்தில் அவர்கள் எத்தனை குளறுபடிபகள் செய்தனர்? எத்தனை எத்தனை லட்சங்கள் அவளுக்கு வர வேண்டிய பணம் வந்து சேரவில்லை என்பதை அவர் அடுக்க, மேனேஜருக்கு சமாளிக்க முடியவில்லை.
அவரை விட உயர் பதவியில் இருக்கும் நபரை அழைத்து பேச வைத்தார். மெலினா விடுவதாக இல்லை. எதற்கும் இருக்கட்டும் என்று மெலினா பல ஆதாரங்களை சேகரித்து வைத்திருந்தார். இன்று அனைத்தையும் காட்ட, மற்ற இருவராலும் சமாதானம் சொல்ல முடியவில்லை.
பிறகு அதற்கும் மேல் உள்ள ஒருவர் வந்து சிரிக்க சிரிக்க பேசினார். மெலினாவும் சிரித்துக் கொண்டே பேசி மூக்கை உடைக்க, கடைசியில் எந்த பேச்சுக்கும் மசிய மாட்டார்கள் என்று புரிந்த பிறகு, அவளுக்கு சேர வேண்டிய பணத்தை தருவதாக சொன்னார்கள்.
“பணத்த கண்டிப்பா கொடுத்துடுறோம்.. அதுக்காக காண்ட்ராக்ட்டே ரினிவல் பண்ண மாட்டேன்னா எப்படி?” என்று கேட்க, “அப்ப நீங்க அந்த பணத்த எனக்கு தரனும். தராம ஏமாத்திருக்கதா நீங்களே ஒத்துக்கிறீங்க இல்லையா?” என்று கேட்டு வைத்தாள் ரூபிணி.
அவர்கள் எதோ சமாளிக்கப்பார்க்க, “நீங்க சமாளிச்சது போதும்” என்றவள் அது வரை மேசையில் இருந்த கைபேசியை எடுத்து அதில் எதையோ செய்து முடித்தாள்.
“இப்ப நாம பேசுனத எல்லாம் ரெகார்ட் பண்ணி க்ளவுட்ல போட்டுட்டேன். இந்த ஆதாரம் எல்லாம் வெளிய போகனுமா? வேணாமானு நீங்களே முடிவு பண்ணுங்க. நான் காண்ட்ராக்ட்ட கேன்சல் பண்ணிட்டு நேரா கோர்ட்ல போய் நிப்பேன். எப்படி வசதி?” என்று கேட்டு நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.
மிரட்டுகிறாள் என்று புரிந்ததும் பதிலுக்கு மிரட்டிப்பார்த்தனர். ஆனால் மெலினா விடவில்லை.
“இத்தனை ஆதாரமும் கொடுத்து நாங்க கேஸ் போட்டா, நீங்க கொடுக்க வேண்டியதுக்கு மேல கொடுக்க வேண்டி வரும். அதோட நீங்க பண்ண ஃப்ராடு தனத்தையும் கவர்மண்ட் கண்டு பிடிச்சுடும். மொத்தமா மாட்டி எல்லாத்தையும் இழக்கனுமா? இல்ல எங்களுக்கு செட்டில் பண்ணிட்டு தப்பிக்கனுமானு நீங்களே முடிவு பண்ணுங்க” என்று மெலினா சொல்ல, மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
இது வரை அமைதியாக இருந்து விட்டு, இவர்கள் இப்படி கடைசியில் பொங்கி எழக்கூடும் என்று எதிர்பார்க்கவில்லை.
இரண்டு நாட்களில் பதில் சொல்வதாக சொல்ல, “ரெண்டு நாள் எல்லாம் வெயிட் பண்ண முடியாது. நாளைக்கே பதில் வரனும். ஆல்ரெடி லாயர கன்சல்ட் பண்ணிட்டோம். நாளைக்கு பதில் வரலனா நேரா கோர்ட்ல பார்த்துக்கலாம்.” என்ற மெலினா எழ, ரூபிணியும் எழுந்து கொண்டாள்.
இருவரும் வெளியேற, உள்ளே இருந்த மூவரும் என்ன செய்வது? என்று புரியாமல் அமர்ந்திருந்தனர்.
ரூபிணியை பார்த்ததும் விஷால் வேகமாக எழுந்து வர, “நீங்க போங்க சித்தி.. நான் முடிச்சுட்டு வர்ரேன்” என்றாள்.
மெலினா விஷாலை முறைத்து விட்டு கிளம்பி விட, விஷால் ரூபிணியிடம் வந்தான்.
“பேபி..”
“சட் அப் ப்ளீஸ்.. இருக்க டென்சன்ல நீ வேற கடுப்பேத்தாத” என்றவள் அங்கிருந்து வேகமாக செல்ல, விஷாலும் பின்னால் சென்றான்.
ஆட்கள் இல்லாத இடத்திற்கு வந்து நின்றனர். கண்ணாடி வழியாக கீழே வாகனங்கள் செல்லும் பாதை தெரிந்தது. அதை சில நொடிகள் பார்த்து நிதானமானாள் ரூபிணி.
“ரூபிணி..”
“லெட்ஸ் பிரேக் அப்”
பட்டென உடைக்க புரியாமல் பார்த்தான்.
“பிரேக் அப்பா? என்ன பேசுற நீ?” என்றவன் அவளை பிடித்து திருப்பினான்.
பட்டென கையைத்தட்டி விட்டாள்.
“ரூபிணி என்ன உன் பிரச்சனை? திடீர்னு வந்து பிரேக் அப்னு சொல்லிட்டு இருக்க” என்று கேட்டவனுக்கு கோபம் வந்தது.
ரூபிணி அவனை முறைத்து விட்டு பர்ஸில் இருந்த அவனது வீட்டு சாவியை எடுத்து அருகே இருந்த திட்டில் வைத்தாள்.
“இனி உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.”
“நோ சான்ஸ். என்ன ரீசன்னு சொல்லாம இப்படி பேசாத”
“ரீசன் தான? உன் வீட்டுல ஒருத்தி இருக்காளே.. அவள கேளு”
விஷால் திடுக்கிட்டான். இவளுக்கு என்ன தெரியும்? எப்படித் தெரியும்?
“என்.. என் வீட்டுலயா? யாரு?”
“அத நீ தான் சொல்லனும்”
ரூபிணி நக்கலாக சொல்ல, “ஹேய் வீட்டுல யாருமில்ல.. நீ என்ன பேசுறனே எனக்கு புரியல” என்றான் அவசரமாக.
“நிஜம்மா நீ இவ்வளவு நல்லா நடிப்பனு நான் நினைச்சுக்கூட பார்க்கல விஷால்.. ஹவ் சீப்?” என்றவள் முகத்தில் அளவு கடந்த அருவெறுப்பு மட்டுமே இருந்தது.
“பேபி…”
“அப்படி கூப்பிடாத.. கோபத்துல உன்னை கொன்னுடுவேன்.. எவ்வளவு பெரிய சீட்டர் நீ.. உன்னை போய் நம்புனேன் பாரு.. இனிமே என் கண்ணு முன்னாடி வரக்கூடாது.. வந்த.. அவ்வளவு தான்” என்று மிரட்டி விட்டு நடந்தாள்.
விஷால் அதிர்ந்து நின்றாலும் அவசரமாக ரூபிணியின் அருகே சென்று அவளை அணைக்கப்பார்த்தான். கோபத்தில் அவனைப்பிடித்து தள்ளியவள் பளாரென ஒரு அறை விட்டாள்.
இவ்வளவு வேகமாக அடிப்பாள் என்று அவன் எதிர்பார்க்காமல் தடுமாறி நின்றான்.
“என்னை தொடாத.. தொடுற உரிமை உனக்கு இல்ல.. உன்னை இந்தளவோட சும்மா விடுறேன்னு சந்தோசப்படு. இதான் லாஸ்ட்.. இதுக்கும் மேல எதாச்சும் செஞ்ச..” என்றவள் விரல் நீட்டி எச்சரித்து விட்டு உடனே அங்கிருந்து சென்று விட்டாள்.
விஷாலுக்கு நடப்பதை நம்பவே முடியவில்லை. என்னவென்று புரியாமல் குழம்பி நின்றான்.
மெடோனாவைப்பற்றி ரூபிணிக்கு எப்படித் தெரிந்தது? வீட்டுக்கு எதுவும் வந்தாளா? இல்லை வேறு யாரும் சொல்லி விட்டார்களா?
குழப்பத்தோடு ரூபிணி வைத்து விட்டுச் சென்ற சாவியை எடுத்துக் கொண்டவன் மெடோனாவை அழைக்க, அவள் அழைப்பை ஏற்கவில்லை.
பிறகு ரூபிணிக்கு குறுஞ்செய்திகளாக அனுப்ப ஆரம்பித்தான். அவளை சமாதானம் செய்தாக வேண்டுமே?
தொடரும்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.

சபாஷ் மெலினா ரூபிணி