Loading

ஊர் திரும்பி இரண்டு நாட்கள் ஆகியிருந்தது. மெலினா தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தார். ரூபிணி ஓய்வெடுக்கட்டும் என்று விட்டு விட்டு அவரே எல்லாம் செய்து கொண்டிருக்க அவரது கைபேசி இசைத்தது.

எதற்கும் இருக்கட்டுமே என்று வாங்கி வைத்த விஷாலின் பெயர் அதில் ஒளிர எடுத்து யோசனையுடன் காதில் வைத்தார்.

“ஹலோ?”

“ஹாய்.. நான் விஷால் பேசுறேன். அது.. ரூபிணி என்ன பண்ணுறா? எங்க இருக்கா?” என்று கேட்டு வைத்தான்.

“ஏன்? வீட்டுல தான் இருப்பா”

“கால் அட்டன் பண்ணல.. அதான் எதாவது பிசியோனு கேட்க கூப்பிட்டேன்”

மெலினா புருவம் சுருக்கினார்.

“தெரியல.. நான் பேசி பார்க்குறேன்”

“வேணாம் வேணாம்.. வொர்க் முடிஞ்சு நான் வீட்டுக்கு போய் பார்த்துக்கிறேன்” என்றதும் மெலினா ஒன்றும் சொல்லவில்லை.

இருவருக்குள்ளும் எதாவது சண்டையாக இருக்கும் என்று விட்டு விட்டார்.

மாலை ரூபிணியின் வீட்டு வாசலில் நின்றிருந்தான் விஷால். அழைப்பு மணியை பல முறை அழுத்திய பின்னும் ரூபிணியிடமிருந்து பதில் வரவில்லை.

கைபேசியில் அழைத்துப் பார்த்தான். செய்திகளை அனுப்பி பார்த்தான். எதற்கும் பதில் இல்லை.

“என் மேல எதாவது கோபமா பேபி? எதுவா இருந்தாலும் பேசு.. இப்படி இக்னார் பண்ணா என்ன அர்த்தம்?” என்று கேட்டு வைத்தான்.

அப்போதும் பதில் இல்லை.

ஒரு வேளை அவளுக்கு எதாவது ஆகி விட்டதோ? என்று பயம் வர அவசரமாக மெலினாவை அழைத்தான்.

“வீட்டையும் திறக்க மாட்டேங்குறா. என்னனு தெரியல.. நீங்க வாங்க” என்று கூப்பிட மெலினா பயந்து போனார். இரண்டு நாட்களாக அவரிடமும் அவள் பேசவில்லையே.

பதறியடித்து ரூபிணியை அழைத்துக் கொண்டே கிளம்பினார். இரண்டாம் முறை ரூபிணி அழைப்பை ஏற்றாள்.

“என்ன சித்தி?” என்று சோர்வாக அவள் கேட்க “ரூபிணி.. பத்திரமா இருக்க தான? எங்க இருக்க?” என்று அவசரமாக கேட்டார்.

“வீட்டுல தான் இருக்கேன்”

“இப்ப தான் உயிரே வருது” என்று பெருமூச்சு விட்டார்.

“உன் பாய்ஃப்ரண்ட் ஃபோன் பண்ணி நீ கதவ திறக்கலனு சொன்னதும் பயந்துட்டேன்”

“ம்ம்.. வந்து நின்னுட்டு இருந்தான்.”

“உங்களுக்குள்ள எதாவது சண்டையா?”

“அவன் கூட சண்டை போடுறதா? எனக்கு வேற வேலை இல்ல?”

“அப்புறம் என்ன?”

“அவன் மேல கோபம்.. நானே அத டீல் பண்ணிக்கிறேன். அவன் உங்களுக்கு ஃபோன் பண்ணா பண்ணக்கூடாதுனு சொல்லிடுங்க” என்று விட்டு வைத்து விட்டாள்.

அவள் நலமாக இருக்கும் திருப்தியோடு விஷால் கேட்ட போது அவள் சொன்னதையே சொல்லி வைத்தார்.

விஷால் என்னவென்று புரியாமல் திரும்பித்திரும்பி அழைத்து கேட்டுக் கொண்டே இருந்தான். ஆனால் ரூபிணி கதவை திறக்கவில்லை. சில நிமிடங்கள் நின்று விட்டு கிளம்பி விட்டான்.

•••

மெடோனா ஊருக்குச் சென்ற பிறகு உதயா தன் வேலைகளை கவனித்தான். அவனது தந்தை இறந்த சோகமெல்லாம் அவனை ஒன்றுமே செய்யவில்லை. எப்போதும் போல் வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.

மெடோனா அவளுக்கு பிடித்தவரின் உடல்நிலையை கவனித்துக் கொண்டிருப்பதாக சொன்னாள். மருத்துவமனையில் அவள் மட்டுமே இருப்பதால் மிகவும் கலைத்து விடுவதாக புலம்பினாள்.

அதை பற்றியே யோசித்துக் கொண்டிருந்தவன் தனது அசிஸ்டன்ட்டை அழைத்தான்.

“ஹாஸ்பிடல் அட்ரஸ் அனுப்புறேன். அங்க போய் மெடோனாவுக்கு என்ன ஹெல்ப் வேணுமோ செஞ்சுட்டு வா” என்றவன் போகும் போது சில பொருட்களையும் அவளுக்காக வாங்கிக் கொண்டு செல்லச் சொன்னான்.

முதலிலேயே அசிஸ்டண்ட்டை அனுப்புவதை சொல்லி விடலாமா? என்று யோசித்தான். பிறகு சர்ப்ரைஸாக இருக்கட்டும் என்று நினைத்து அமைதியானான்.

அவளே அசிஸ்டண்ட்டை பார்த்து விட்டு சந்தோசமாக அழைக்கட்டும் என்று காத்திருந்தான்.

ஆனால் மெடோனாவுக்கு பதில் அசிஸ்டண்ட் தான் அழைத்தான்.

“போய் பார்த்துட்டியா?”

“சார்.. நான் சொல்லுறத தப்பா எடுத்துக்க கூடாது…” என்று அவன் ஆரம்பிக்க உதயாவுக்கு ஒன்றும் புரியவில்லை.

“என்ன சொல்லனும்?”

“இங்க உங்க கேர்ள் ஃப்ரண்ட் கூட ஒருத்தன் இருக்கான்”

“யாரு?” என்று கேட்ட போது எதாவது நண்பனாக இருக்கலாம் என்று நினைத்தாள்.

“அவனோட அம்மாவுக்கு தான் காயம் பட்டுருக்கு போல. அவன் கூட தான் இருக்காங்க”

சட்டென உதயாவின் மனம் கோபத்தில் இறுகியது.

யாரும் இல்லை அதனால் உதவிக்கு போகிறேன் என்றாளே? மகன் இருக்கிறான் என்றால் இவள் எதற்கு?

“அவன் மகன் தானா?”

“ஆமா.. நல்லா விசாரிச்சுட்டேன். முக்கியமான விசயம்.. அந்தம்மா எப்பவோ டிஸ்சார்ஜ் ஆகிட்டாங்களாம்”

உதயாவின் இதயம் பலமாக துடிக்க ஆரம்பித்தது. இதைப்பற்றி காலையில் பேசும் போது கூட மெடோனா எதுவும் சொல்லவில்லையே.

“நீ எங்க இருக்க?”

“அவங்க டிஸ்சார்ஜ் ஆகிட்டாங்கனு சொன்னதும் வீட்டுல போய் பார்க்கலாம்னு அட்ரஸ் வாங்கிட்டு போனேன்.. அங்க..”

“இழுக்காம சொல்லித்தொலை” என்று எரிந்து விழுந்தான்.

“நான் சொல்லுறத விட நீங்களே பாருங்க. நான் வீடியோ அனுப்புறேன்” என்று விட்டு வைத்து விட்டான்.

உதயாவுக்கு பதட்டம் அதிகரித்தது.

“இல்ல இல்ல.. எதுவும் தப்பா இருக்காது” என்று அவனுக்கு அவனே ஆறுதல் சொல்லிக் கொள்ள பார்க்க சில நொடிகள் அவனை தவிக்க விட்டு விட்டு செய்தி வந்து விழுந்தது.

பதட்டம் அதிகரிக்க அதை திறந்து பார்த்தான்.

மெடோனா தான் நடந்து கொண்டிருந்தாள். அவளும் அவளோடு ஒருவனும் சேர்ந்து கையைப்பிடித்துக் கொண்டு நடந்து கொண்டிருந்தனர்.

இருவரும் வீட்டை விட்டு வெளியேறி ஒன்றாக காரில் ஏறிக் கிளம்பும் வரை இருந்தது.

இதயம் வெடிக்கத் தயாராக இருந்த போதும் “இதுல எதுவும் தப்பா இல்ல.. ஜஸ்ட் ஃப்ரண்டிலியா.. கைய பிடிச்சுருக்கலாம்” என்று சொல்லிக் கொள்ள அவனது மனசாட்சியே இதைக் கேட்டு சிரித்தது.

அந்த வீடியோவோடு முடியவில்லை. அடுத்தடுத்து படங்கள் வந்து விழுந்தது.

இருவரும் ஒன்றாக சாப்பிங் சென்றிருந்தனர். ஒன்றாக சாப்பிட்டனர். அனைத்தையும் விட கடைசியாக வந்த வீடியோ அவனது இதயத்தை உடைக்க போதுமானதாக இருந்தது.

காரில் ஏறும் முன்பு அவன் மெடோனாவை கட்டியணைத்து முத்தமிட்டான்.

அதை தெளிவாக வீடியோ எடுத்து அனுப்பியிருந்தான் அசிஸ்டண்ட். அவ்வளவு தான். உதயாவின் இதயம் பலமாக நொறுங்கி விட கை துவண்டு கைபேசி நழுவியது.

மெடோனா அவனை ஏமாற்றுவாள் என்று அவன் கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லையே.

அடுத்தும் சில படங்கள் வந்து சேர்ந்தது. அதை பார்க்கும் அளவு தைரியம் வரவில்லை. கண்ணை மூடிக் கொண்டவனுக்கு ஏமாற்றமும் வலியும் தாங்கமுடியவில்லை.

கோபத்தை தாண்டி வலி அதிகமாக இருந்தது. மெடோனாவை அவன் அவ்வளவு தூரம் நேசித்தான்.

படங்கள் வந்த வண்ணம் இருந்தது. குறுஞ்செய்தியின் ஒவ்வொரு சத்தமும் அவனது இதயத்தில் சுத்தியல் கொண்டு அடிப்பது போல் வலியை உண்டாக்கியது.

சத்தம் நின்று சில நிமிடங்கள் வரை அவன் கண்ணை திறக்கவில்லை. வலியை விழுங்கிக் கொள்ள சில நிமிடங்கள் தேவைப்பட்டது.

பிறகு மெல்ல தண்ணீரை எடுத்துக் குடித்தவன் கைபேசியின் பக்கம் பார்வையை திருப்பினான்.

படங்கள் குவிந்து கிடக்க அதை ஒவ்வொன்றாக பார்க்க ஆரம்பித்தான்.

காலையில் சென்று சேர்ந்ததில் இருந்து இந்த நிமிடங்கள் வரை மெடோனாவை பின் தொடர்ந்து மொத்த படங்களையும் அனுப்பியிருந்தான் அசிஸ்டன்ட்.

சாப்பிங் சாப்பாடோடு நிற்கவில்லை. ஊர் சுற்றி பார்க் சென்று விட்டு அங்கிருந்து வீட்டுக்குச் சென்றிருக்கின்றனர்.

அதோடு முடியவில்லை. இரவு நேரம் மீண்டும் இருவரும் தனியாக நடந்து விட்டு வீட்டுக்குச் செல்ல இருவரின் பார்வை பரிமாற்றங்கள் உதயாவின் மனதில் நெருப்பை மூட்டியது.

இருவரும் நேற்று சந்தித்தது போல் தெரியவில்லை. பல நாட்களாக பழகியவர்கள் போல் இருந்தனர்.

“மெடோனா.. தப்பான ஆள் கிட்ட விளையாடிட்ட நீ” என்றவன் அசிஸ்டண்ட்டை அழைத்து அவன் யாரென விசாரிக்கச் சொன்னான்.

இந்த ஏமாற்று வேலை எவ்வளவு நாளாக நடக்கிறது? என்று அவனுக்கு தெரிந்தாக வேண்டும். அவனிடம் பொய் சொல்லும் அளவு தைரியம் வந்திருக்கிறதே. அவனோடு தைரியமாக ஊர் சுற்றுகிறாள். உதயா என்கிற முட்டாளுக்கு தெரிந்துவிடாது. அவனுக்கு சந்தேகமே வராது என்ற நம்பிக்கை தானே? ஆனால் தெரிந்தால் என்ன நடக்கும் என்று யோசிக்க வேண்டுமல்லவா? யோசிக்காமல் விட்டதன் பலனை இருவருமே அனுபவிப்பார்கள்.

இருவரையும் ஒரு வழியாக்கி விட வேண்டும் என்று முடிவெடுத்துக் காத்திருக்க மறுநாள் தான் பதில் கிடைத்தது.

அந்த பதில் அவனை மேலும் அதிர வைத்தது.

மெடோனாவோடு இருப்பவன் பெயர் விஷால். ரூபிணியின் காதலன். ரூபிணியின் ஏஜன்ஸியில் வேலை செய்கிறான். ரூபிணிக்கு காதலன் இருக்கிறான் என்று தெரியும். ஆனால் அவனை உதயா பார்த்ததில்லை.

மெடோனாவை விட இப்போது ரூபிணியின் மீது அதிக கோபம் வந்தது.

“அவளே ப்ளான் பண்ணிட்டாளா?” என்று சுள்ளென கோபம் ஏறியது.

ஆனால் மேலும் மேலும் விசாரித்து அன்று முழுவதும் வந்த செய்திகளை கேட்ட பின்பு ரூபிணிக்கும் இது தெரியாது என்று புரிந்தது.

“ஃபைன்.. இனி உங்கள என்ன பண்ணனும்னு நான் முடிவு பண்ணுறேன்” என்று நினைத்தவன் அப்போதே திட்டம் போட ஆரம்பித்து விட்டான்.

அதே நேரம் தொலைகாட்சியில் பார்வையை பதித்துக் கொண்டு கையில் இருந்த உணவை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தாள் ரூபிணி.

அவளருகே அமர்ந்திருந்த மெலினா ஆச்சரியமாக பார்த்தார்.

“சீட் பண்ணிட்டான்னு இவ்வளவு அசால்ட்டா சொல்லுற?”

“வேற என்ன பண்ணனும்? அழனுமா? அதெல்லாம் அழுது முடிச்சுட்டேன். இனி அழுறதா இல்ல”

“ரூபிணி.. லுக் அட் மீ” என்றதும் திரும்பிப் பார்த்தாள்.

“என்ன நடந்துச்சுனு சொல்லு.. இப்படி மொட்டையா பேசுனா எப்படி?”

“லிசன் சித்தி.. எனக்கு இத பத்தி பேசப்பிடிக்கல.. மேபி இன்னும் நான் உடைஞ்ச மனச சரி பண்ணல.. எனக்கு நிறைய டைம் வேணும். நீங்க சொல்லுற இந்த ப்ராஜெக்ட்ட நான் பண்ண முடியாது. முக்கியமா இன்னும் காண்ட்ராக்ட் ரினிவல் பண்ணுறத பத்தி நான் யோசிக்கவே இல்ல. இன்னும் மூணு வாரத்துக்கு மேல நாள் இருக்கு. நான் ரிலாக்ஸ் ஆகிட்டு முடிவு பண்ணுறேன்.”

“ஓகே காண்ட்ராக்ட்ட விடு. விஷால் என்ன பண்ணான்? உனக்கு எப்படி விசயம் தெரிஞ்சது? அதான் அவன் கால் பண்ணா நீ அட்டன் பண்ணலயா?”

“ம்ம்.. பட் இப்போதைக்கு எனக்கு பேச இஷ்டமில்ல. அப்புறமா சொல்லுறேன்” என்று விட்டாள்.

மெலினா பெருமூச்சு விட்டார்.

ரூபிணி எது நடந்தாலும் அதைப்பற்றி அவ்வளவு சீக்கிரம் பேச மாட்டாள். அவளுக்குள்ளாகவே வைத்து அவளே தெளிந்த பிறகு தான் வாயைத்திறப்பாள். அதனால் தான் மெலினா எப்போதும் அவளை கட்டுப்பாட்டில் வைத்திருக்க பார்ப்பார். அவளை சுற்றி எது நடந்தாலும் உடனே தெரியும் படி பார்த்துக் கொள்வார்.

ஆனால் அனைத்தும் வேலை சம்பந்தமான விசயத்தில். சொந்த வாழ்வில் இப்படி ஒரு பிரச்சனை வரும் என்று நினைக்கவில்லை. இப்போதும் பேச மறுக்கிறாள்.

விஷாலை பார்த்தால் கை காலை உடைத்து விட வேண்டும் என்கிற அளவு வெறி வந்தாலும் ரூபிணி வாயைத்திறந்த பிறகு பேசிக் கொள்ளலாம் என்று விட்டு விட்டார்.

தொடரும்.

Click on a star to rate it!

Rating 4.3 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
10
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. இரண்டு பேரும் டூ மச். உதயா ரூபிணி தப்பிச்சுட்டாங்க.