
அத்தியாயம் 34
“நம்ம ஆபீஸ்ல பவித்ரா சேந்ததுல இருந்து நீ அவ பின்னாடி சுத்துறதை பார்த்து, இந்த வயசுல நீ இப்படித்தான் இருப்ப.. அப்புறம் போக போக நீ சரி ஆகிருவ அப்படினு நெனச்சேன்.
ஆனால் அவளும் சேந்து உன்ன விரும்ப ஆரம்பிச்சா.. அதுக்கு அப்புறம் ரெண்டு பேரும் ஊரு ஊரா சுத்த ஆரம்பிச்சீங்க.
அதுல என்னோட ஃப்ரண்ட்ஸ் அண்ட் பார்ட்னர்ஸ் பார்த்துட்டு, என்ன உன் பையன் ஏதோ ஒரு பொண்ணுகூட சுத்திட்டு இருக்கான். நம்ம அந்தஸ்துக்கு இது எல்லாம் தேவையானு ஆளாளுக்கு பேச ஆரம்பிச்சாங்க..
நானும் உங்கிட்ட மறைமுகமா சொல்லிப் பார்த்தேன். ஆனால் நீ கேட்கல.
சரி விட்டுப் பிடிப்போம்னு நான் அமைதியா இருந்துட்டேன்.
அதுக்கு அப்புறம் என் பார்ட்னர் பொண்ணுக்கு உன்ன பேசி வச்சி இருந்தேன்.
அந்த விஷயத்தை கொஞ்ச நாள் கழிச்சு உங்கிட்ட சொல்லலாம். இப்போ பவித்ரா மோகத்துல இருக்க. அவ மேல இருக்குற ஈர்ப்பு குறைஞ்சதும், நான் சொல்ற பொண்ணைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு தப்பு கணக்கு போட்டுட்டேன்.
ஆனால் நீ என்கிட்ட பவித்ரா வீட்டுக்கு, அவளை பொண்ணு பாக்க போகணும். அவங்க அப்பா அம்மாகிட்ட பேசணும்னு என்கிட்ட சொன்னதும் எனக்கு என்ன பண்றதுனு தெரியல.
நம்ம ஒரு கணக்கு போட்டால் இவன் ஒரு கணக்குப் போடுறானு நெனச்சேன்.
என் பார்ட்னருக்கு ஒரேப் பொண்ணு. அவகூட உனக்கு கல்யாணம் பண்ணி வச்சா, அவனோட சொத்தும் நமக்குத் தான் வந்து சேரும்னு நெனச்சேன்.
நான் நெனைக்கிறதுக்கு தடையா இருக்கிறது அந்த பவித்ரா.
அவளை எப்படி உங்கிட்ட இருந்து விலக்குறதுனு யோசிச்சேன்.
அவகிட்ட போய் மிரட்டுனா, கண்டிப்பா உனக்கு அது தெரிய வரும்.
அவளுக்காக நீ என்னையே தூக்கி எறிஞ்சிட்டு போவ. அதுனால… ” என்று மகாலிங்கம் இதுவரை கூறி விட்டு நிறுத்த,
“அதுனால.. அவளை ஒரேடியா என்கிட்ட இருந்து பிரிக்கணும்னு நெனச்சிட்டீங்க.. அப்படித்தானே..” என்று தந்தை என்றும் பாராமல் அவரது சட்டையைப் பிடித்து உலுக்க,
அவரோ, “சஞ்சய்.. சஞ்சய்..” என்று மகனிடம் பேசுவதற்கு தயக்கப் பட்டார்.
“சொல்லுங்க.. அது தானே உங்க திட்டம்..” என்று சஞ்சய் கத்த,
“ஆ.. ஆமா.. ” என்றார் மகாலிங்கம்.
“அப்புறம் எப்படி அவன் காரை யூஸ் பண்ணீங்க..” என்று விளக்கம் கேட்க,
“அதை நான் சொல்றேன்..” என்றான் பரிதி.
சஞ்சய் தன் தந்தையின் சட்டையில் இருந்து கையை எடுத்துவிட்டு பரிதியைப் பார்த்தான்.
“அன்னைக்கு பவித்ராவுக்கு விபத்து நடந்த அன்னைக்கு, காஸ்மெடிக்ஸ் கம்பெனிஸ் சார்பா ஒரு கருத்தரங்கம் ஏற்பாடு பண்ணி இருந்தாங்க. அதுல நானும் போயிருந்தேன். உங்க அப்பாவும் வந்து இருந்தாரு.
உங்க அப்பாவுக்கு, பவித்ராவை உங்கிட்ட இருந்து நிரந்தரமா பிரிக்கனும்னு எண்ணம் வந்த பிறகு அந்த சந்தர்ப்பத்துக்காக காத்துகிட்டு இருந்தாரு போல. அன்னைக்கு நீயும் அவளும் ஒண்ணா வெளிய போய் இருக்குற நியூஸ் கேட்டு கொதிச்சிப் போய்ட்டாரு போல…
அன்னைக்கு என்னோட காரை பார்க் பண்ணச் சொல்லி ஹோட்டல் செக்யூரிட்டி கிட்ட கொடுத்துட்டு நான் கான்ஃபெரன்ஸ் ஹால்க்கு வந்துட்டேன். திரும்ப கீ அவன் கொடுக்க வரும் போது, மீட்டிங் நடந்துட்டு இருந்ததைப் பார்த்து, நான் வந்து வாங்கிக்கிறேன்னு சொல்லிட்டேன்.
உங்க அப்பா கான்ஃபெரன்ஸ் ஹால் பாதியில இருந்து வெளிய அவசரமா கிளம்பினாரு.
எதுக்குடா இவ்ளோ வேகமா வெளிய போறாருன்னு கூட நான் பார்த்தேன்.
அப்புறம் திரும்பவும் மீட்டிங்க கவனிக்க ஆரம்பிச்சிட்டேன்.
வெளிய அவசரமா எந்திரிச்சி போனவரு, காரை எடுக்க கார் சாவியை கையில வச்சிக்கிட்டு போக, அந்த பக்கம் செக்யூரிட்டி என் கார் சாவியை கையில வச்சி இருக்க, உங்க அப்பா அவன் மேல மோத, அப்போ ரெண்டு பேரோட கார் கீயும் கீழ விழுந்துருச்சு.
என்னோட துரதிஷ்டம். ரெண்டும் சேம் கார் மாடல் கீ. அப்போ அவரு மாத்தி என்னோட கார் சாவியை எடுத்துட்டுப் போய்ட்டாரு.
அவரு எண்ணம் முழுக்க பவித்ராவும் நீயும் இருந்தனால, கார் நம்பரையும் பாக்காம என்னோட கார் கிட்டப் போய் அதை ஸ்டார்ட் பண்ணி எடுத்திட்டு போய்ட்டாரு.
ஆனால் அதுல என்னோட திங்ஸ் சிலது வச்சி இருப்பேன். அதை கூட அவரு கவனிக்கல.
அவரு கண்காணிக்க உன்ன அனுப்பிச்ச ஆளு நீங்க இருக்குற இடத்தை சொல்லவும் நேரா அங்கதான் வந்தாரு.
அவரோட நல்ல நேரம், பவித்ரா மட்டும் ரோடு கிராஸ் பண்ண நின்னுட்டு இருந்ததைப் பார்த்து ஓரமா நிறுத்திட்டு, அவ வரும் போது வண்டியை வேகமா எடுத்து அவ மேல இடிச்சிட்டு, கொஞ்ச தூரம் வந்த பிறகு தான் பார்த்து இருக்காரு அது வேற ஒருத்தரோட கார்னு.
கார்ல இருந்த என்னோட திங்ஸ் அண்ட் இறங்கி வந்து நம்பர் பாக்கவும் அது என்னோட கார்னு தெரிஞ்சிகிட்டு, உடனே அவரு என்னைப் பாக்க திரும்பவும் அந்த ஹோட்டல்க்கு வந்தாரு.
என்னோட காரை யாருடா மாத்தி எடுத்துட்டு போனதுனு நான் அங்க வெயிட் பண்ணிட்டு இருக்கும் போது உங்க அப்பா வர்றதை பார்த்தேன்.
இத்தனை நாள் பேசாத சித்தப்பா, அன்னைக்கு என்கிட்ட வந்து, “ஏதோ ஒரு டென்ஷன்ல உன் காரை மாத்தி எடுத்துட்டு போய்ட்டேன். ஆனால் தவறுதலா ஒரு ஆக்சிடண்ட் ஆகிருச்சு. ” அப்படினு சொல்லவும்,
“ஆக்சிடண்ட்டா .. என்ன ஆச்சி அவங்களுக்குனு..” கேட்டதுக்கு உங்க அப்பா, “அவங்களுக்கு பெருசா ஒன்னும் ஆகல. ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய்ட்டாங்க பா. செலவுக்கு பணமும் கொடுத்துட்டு வந்துட்டேன்னு சொன்னாரு. சரி பெருசா எதுவும் ஆகல. அப்படினு தான் நான் நெனச்சேன்.
ஆனால் அதுக்கு அப்புறம் போலீஸ் வந்து விசாரிக்கும் போது தான் தெரிஞ்சது அடிபட்ட பொண்ணு இறந்துட்டாங்கனு. ஆனால் அந்த பொண்ணோட சைடுல இருந்து எந்த கம்பளைண்ட்டும் வரலனு சொல்லி இருந்தாரு இன்ஸ்பெக்டர்.
அதுனால, அதுக்கான பெனாலிட்டி அண்ட் ஃபார்மலிட்டி மட்டும் முடிச்சிட்டு அதோட அந்த விஷயத்தை முடிச்சிட்டேன்.
உங்க அப்பாகிட்ட அதைப் பத்தி கேக்கும் போது, அவரு அந்த பொண்ணு குடும்பத்தாருக்கு, நான் உதவி பண்ணதாகவும், இனிமேல் அவங்க குடும்ப செலவை நானே ஏத்துக்கிறேன்னு சொன்னதாகவும் சொன்னாரு.
அப்புறம் இன்னொரு விஷயம், இந்த விஷயம் சஞ்சய்க்கு தெரிய வேணாம். அவன் தெரிஞ்சா கோவப் படுவானு என்கிட்ட கேட்டுகிட்டதுனால, நான் அந்த விஷயத்தை அத்தோட விட்டுட்டேன்.
ஆனால் அது தான் இப்போ பூதாகரமா வெடிச்சி நிக்குது.
இதோ உன் பவித்ராவை அழிச்சது உங்க அப்பா தான். அவரை என்ன பண்ணணுமோ பண்ணிக்கோ..” என்றான் அதிகாரத் தொணியில்.
கேட்டுக் கொண்டிருந்த சஞ்சய், தலைச் சுற்றி தொப்பென்று கீழே அமர்ந்து விட்டான்.
தான் முழுதாக நம்பிய தன் தந்தையே தன்னவளை அழித்து இருக்கிறார்.
மகாலிங்கம் சஞ்சயின் அருகே சென்று, “சஞ்சய்.. என்னை மன்னிச்சிருப்பா. நீ அவளுக்காக இப்படி உன்னையே தொலைப்பனு தெரிஞ்சி இருந்தா, நான் ஒன்னும் பண்ணி இருக்க மாட்டேன். ஒரு ரெண்டு நாள் அழுதுட்டு அப்புறம் சரி ஆகிருவனு நெனச்சேன்ப்பா. அதான் இப்படி பண்ணிட்டேன். என்னை மன்னிச்சிரு சஞ்சய்.. என்னை மன்னிச்சிரு..” என்று அவர் தன் மகனிடம் கதற,
அவனோ அமைதியாக இருந்தான்.
அவர் கையை தட்டி விட்டு, அவன் பாட்டுக்கு எழுந்து வெளியே நடந்து வந்தான்.
அவன் நடையில் ஒரு தளர்வு தெரிந்தது.
வாழ்க்கையே வெறுத்துப் போன உணர்வு.
உணர்ச்சி துடைத்த முகத்துடன் தள்ளாடி தள்ளாடி சென்று கொண்டிருந்தான்.
ராமலிங்கமோ, “என் பொண்ணு என்னயா பாவம் பண்ணா.. இப்படி பண்ணி இருக்கியே..” என்று மகாலிங்கத்தை பார்த்து கூறியவர், பின் பரிதியைப் பார்த்து, “தம்பி என்னை மன்னிச்சிருங்க ப்பா. உண்மை தெரியாம நான் நடந்துகிட்டேன். என்னை மன்னிச்சிரு ப்பா..” என்று அவன் காலிலே விழுந்து விட,
“நீங்க வயசுல பெரியவங்க. இப்படி என் காலுல விழுகுறீங்க.. எந்திரிங்க முதல்ல..” என்று அவரை எழுப்பி விட்டு, “இனிமேலயாவது யாரு எது சொன்னாலும் நம்பாம, உண்மை எது பொய் எதுன்னு அலசி ஆராய்ஞ்சு பிறகு ஒரு முடிவுக்கு வாங்க.. இங்க இருக்க வேணாம். வீட்டுக்கு கிளம்புங்க..” என்று அவரிடம் கூறி விட்டு,
“இனியா.. சஞ்சய் அவன் பாட்டுக்கு வெளியப் போறான். அவனை பார்த்தாலே சரி இல்லை. தப்பா எதுவும் நடக்குறதுக்குள்ள அவனை பிடிச்சி ஆகணும். வா போலாம்..” என்று இனியனைப் பார்த்து கூறியவன்,
“நிரஞ்சனா.. நீ இங்க இரு.. நாங்க வந்துருறோம்..” என்று அவளிடம் கூறி விட்டு, அவசரமாக வெளியே ஓடினான்.
மகாலிங்கத்திற்கும் அந்த பதட்டம் தொற்றிக் கொண்டது.
அவரும் அவர்களின் பின்னாலே ஓடி வந்தார்.
வெளியே வந்து பரிதியும் இனியனும் சஞ்சயைத் தேட, அவனோ சாலையில் பித்துப் பிடித்த போல நடந்து கொண்டிருந்தான்.
அவனைக் கண்ட பரிதி, “ஓ.. காட்.. இனியா அங்கப் பாரு..” என்று இனியனிடம் சஞ்சயை கூறிக் காண்பிக்க, இருவரும் அவனை நோக்கி ஓடினர்.
தேசிய நெடுஞ்சாலை என்பதால் வாகனங்கள் வேகமாக வந்து கொண்டிருக்க, இவர்கள் சாலையின் ஓரத்தில் நிற்க வேண்டியதாகப் போயிற்று.
மகாலிங்கம் மகனைக் கண்டு, “அய்யயோ.. என் பிள்ளை.. ” என்று கதறியவர், அவரும் அவனை நோக்கி வர ஆரம்பித்தார்.
வயோதிகம் காரணமாக அவரால் வேகாக வர முடியவில்லை.
பரிதி சாலையில் ஒரு கண்ணை வைத்து இருந்தாலும் மறு கண்ணை சஞ்சயின் மேல் தான் வைத்து இருந்தான்.
தூரத்தில் ஒரு கன்டெய்னர் லாரி தாறு மாறான வேகத்துடன் வர, அதைக் கண்ட பரிதி, அவசரமாக சாலையை கடந்து அவன் அருகில் செல்லும் முன் சஞ்சயை தூக்கி எரிந்து விட்டுச் சென்றது.
தூக்கி வீசப் பட்டதில் பரிதாபமாக அவன் உயிர் ஊசலாடிக் கொண்டு இருக்க, “பவி.. பவித்ரா.. நானும் வரேன். ” என்று சொல்லியவனின் உயிர் அவளிடமே தஞ்சம் அடைந்தது.
மகாலிங்கம் மகனைப் பார்த்து கண்ணீர் வடியக் கதறினார்.
இருந்தும் என்ன பயன் அவனுக்காக என்று பார்த்து இப்பொழுது அவனே தன்னை விட்டுச் சென்று விட்டான்.
இனி யாருக்காகத் தான் வாழ்வது என்று அழுது மகனின் உடல் மேலேயே விழுந்து அழுதார்.
பாவம் அவருக்கு அதிகமாக அழுது அழுது மூச்சுத் திணறல் ஏற்பட, அங்கேயே மயங்கி சரிந்தார்.
உடனே அவசர ஊர்திக்கு அழைத்து தகவலைக் கூற, சஞ்சயின் உடல் பிரேத பரிசோதனைக்குச் சென்றது.
மகாலிங்கத்தை மருத்துவமனையில் சேர்த்து இருந்தனர்.
அவர் கண் முழிக்கும் போது, சஞ்சயின் உடல் கொடுக்கப்பட அவரே இறுதி காரியங்கள் அனைத்தும் செய்தார்.
பரிதியும் இனியனும் முன் நின்று அனைத்து வேலைகளையும் செய்தனர்.
மங்களம், விநாயகம், மல்லிகா என்று பரிதியின் குடும்பமே அவருக்கு ஆறுதலாக இங்கே வந்து விட்டது.
மூன்று நாளில் நடக்க இருந்த திருமணம் அதற்கு அடுத்த மூகூர்த்ததில் தள்ளி வைக்கப் பட்டது.
ஒரு வார காலம் சென்றது. மகாலிங்கத்திற்கு ஆதரவாக அவ்வப்போது வந்து கொண்டிருந்தான் பரிதி.
அன்று அப்படித்தான். பரிதி வந்து இருந்த சமயத்தில் சொத்துக்கள் அனைத்தையும் ஆதரவற்றோர் காப்பகம், முதியோர் இல்லம் மற்றும் அனாதை ஆசிரமம் போன்ற இடங்களுக்கு எழுதி அதை பரிதியின் கையில் ஒப்படைத்தார்.
“இதை சேர வேண்டியவங்களுக்கு சேர்த்துரு பரிதி.” என்றார்.
“நீங்க எங்க போகப் போறீங்க. வாங்க நம்ம வீட்டுக்கு போகலாம்..” என்று அழைத்தான்.
“இல்லப்பா.. என்னோட பாவத்தை கழிக்க கோயில் குளம்னு போக போறேன். அங்க முடிஞ்ச அளவு என்னால ஆன உதவியை செய்யப் போறேன். பணம் ஒரு பொருட்டே இல்லை. மனுசங்க தான் எப்பவும் முக்கியம்னு நீ நிரூபிச்சிட்ட. நான் போய்ட்டு வரேன். இந்த வீட்டை வித்து அதையும் ஏதாவது நல்ல காரியத்துக்கு உதவி பண்ணுப்பா. நான் கிளம்புறேன்..” என்றவர் சாதாரண வேஷ்டி சட்டையில் அங்கிருந்து நடந்து வெளியே செல்ல, கையில் சொத்து பத்திரத்துடன் செல்லும் அவரின் முதுகையே வெறித்துப் பார்த்தான் பரிதி.
நித்தமும் வருவாள்…
