
ரகசியம் – 31
“மது ஏன் அப்படி சொல்லிட்டு போனா.. அவ சொல்றதைப் பார்த்தா நான் இனியாவை லவ்வே பண்ணலையா அப்போ.. மது கேட்ட கேள்வியெல்லாம் வச்சு பார்த்தா மதுகிட்ட நான் எப்படி எல்லாம் எதிர்பார்க்குறேனோ அதே தான் இனியா கிட்ட எதிர்பார்த்துருக்கேன்.. ஆனாலும் என் மனசு ஏன் இதை காதல்னு சொல்லுது.. இது காதலா இல்லையா.. இது காதல் இல்லன்னா வேற எது தான் காதல்” என்று யோசித்தவாறே தலையணையில் தலையை வைக்க தலையணை உறைக்குள் ஏதோ காகிதம் இருப்பது போன்று தோன்ற என்னவென்று எடுத்து பார்த்தான் மாறன். அதில்,
“தேங்க்ஸ் ஃபார் மேக்கிங் மை டே வெரி ஸ்பெஷல் இளா.. பை (by) இமைவிழி” என்று எழுதிருக்க அதனைப் படித்தவனின் உதடுகள் புன்னகையில் விரிந்தது.
‘அட இந்த வேலைய எப்போ பார்த்தா இந்த பச்சைமிளகா.. இளா..? இப்படி கூட நம்ம பெயரைக் கூப்பிடலாமா.. நல்லா இருக்கே.. அவளோட முழுப்பெயர் இமைவிழியா.. இதுவும் நல்லாயிருக்கே..’ என்று நினைத்தவன் ஒருமுறை சத்தமாக, “இமை” என்று கூறிப் பார்த்து சிரித்துக் கொண்டவன் பிறகு அவ்வாறே உறங்கியும் போனான்.
இரண்டு மூன்று நாட்களாக மதுரிகாவிடம் தான் இனியாவைப் பற்றி யோசித்து வைத்த முடிவைக் கூறலாம் என்று நினைத்து பேச வந்தான்.
“என்ன டா.. ஏதோ பேசணும்னு சொன்ன” என்று மது கேட்க அவனோ,
“இல்ல மது.. நீ அன்னைக்கு இனியா மேல எனக்கு இருக்குறது காதலா இல்லையான்னு யோசிக்க சொன்னல.. நானும் யோசிச்சேன்.. எனக்கு இது காதல் தான்னு என் மனசு சொல்லுது.. நீ என்கிட்ட கேட்ட கேள்வியெல்லாம் நானும் எனக்குள்ள கேட்டு பார்த்துட்டேன் ஆனால் அதையெல்லாம் என் மனசு நம்ப மறுக்குது.. அப்படி காதல் அளவுக்கு இல்லனாலும் கூட நட்பையும் தாண்டின ஒரு உணர்வு இருக்குதோன்னு தான் தோணுது..” என்று கூற,
‘அடப்பாவி.. என்ன டா இவ்ளோ சீரியஸா பேசுற.. அவ வேற அறிவை லவ் பண்றாளே டா.. அது தெரிஞ்சா நீ தான கஷ்டப்படுவ’ என்று நினைத்தவள்,
“புரியுது டா மாறா.. ஆனா அவளுக்கு உன்மேல அந்த மாதிரி ஃபீலிங்ஸ் இருக்கணும் தானே.. ஒருவேளை அவ மனசுல வேற யாராச்சு இருந்தா” என்று கேட்க அவனோ,
“அப்படி இருந்தா இந்நேரம் நம்மகிட்ட சொல்லாமையா இருப்பா.. அவளுக்கு என்மேல லவ் ஃபீலிங்ஸ் இல்லன்னு நல்லாவே தெரியுது.. அவ ஒரு ஃபிரண்டா தான் என்கிட்ட பேசுறா.. ஆனா நான் அவகிட்ட என் லவ்வ சொன்ன அப்புறம்.. ஒருவேளை என்மேல அவளுக்கு லவ் வர வாய்ப்பு இருக்கு தானே” என்று மாறன் கூற மதுவோ,
“டேய் மாறா.. நான் ஒன்னு சொன்னா கோச்சுக்கமாட்டியே.. உன்கிட்ட எனக்கு அப்றம் உரிமையா பேசுற பொண்ணு இனியா.. நான் உன்கூட சின்ன வயசுல இருந்தே இருக்கேன்.. அதனால என்மேல உனக்கு எந்த மாதிரி ஃபீலிங்ஸும் வராது.. ஆனா இனியா திடிர்னு வந்து உங்கிட்ட உரிமையா ஜாலியா பேசவும் உனக்கு அந்த மாதிரி தோணிருக்கு டா.. இது லவ்வா இருக்கும்னு தோணல.. ஆப்போசிட் ஜெண்டர் அட்ராக்ஷன் தான் டா..” என்று கூற அவளின் கூற்றில் கோபமுற்ற மாறன்,
“மது.. நீ இப்படி சொல்லுவன்னு எதிர்பாக்கல டி.. அட்ராக்ஷனுக்கும் லவ்வுக்கும் வித்தியாசம் தெரியாமையா இருக்கேன்.. சரி நீ சொல்ற மாதிரி அட்ராக்ஷனாவே இருந்துட்டு போகட்டும்.. எதுவா இருந்தாலும் அவகிட்ட சொல்லிடலாம்னு தான் யோசிக்குறேன்.. அவ முடிவு என்னனு சொல்லட்டும்.. அவகிட்ட சொல்லாம எனக்கு ஒரு நிம்மதி கிடைக்காது.. அவ ஏத்துக்கிட்டா இது காதல்.. ஏத்துக்கலன்னா இது ஒருதலை காதல்.. அவ்ளோ தான்.. அவ மனசுல வேற யாரும் இருக்காங்கன்னு தெரிஞ்சாலோ இல்ல அவளுக்கு என்மேல அந்த மாதிரி எதுவும் இல்லன்னு அவ சொன்னாலோ அதுக்குமேல நான் அவளை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்.. அவ்ளோ தான்” என்றவன் விறுவிறுவென சென்றுவிட்டான்.
‘இவன் கிட்ட நான் என்னனு சொல்லி புரியவைப்பேன்.. கடவுளே அவ அறிவை லவ் பண்ரான்னு நாம சொன்னா இவன் நம்பவும் மாட்டான்.. இப்போ என்ன தான் செய்றது’ என்று புலம்பினாள் மதுரிகா.
பிறகு வழக்கம் போல் கல்லூரியில் சந்திக்க போட்டிக்காக பயிற்சிகள் மேற்கொள்ள ஆரம்பித்தனர். மதுரன் மற்றும் மதுரிகா இருவரும் அவர்களுக்கான காட்சியை நடித்து பயிற்சி செய்யும் பொழுது மற்ற மூவரும் அவர்களுக்கு உதவியாக இருந்து தத்தம் யோசனைகளை சொல்லி மெருகேற்ற அதே போல் மாறன், இனியா மற்றும் அறிவு நடிக்கும் பொழுது மூவருக்கும் மதுரனும் மதுரிகாவும் உதவி செய்தனர். அவ்வாறே ஓரிரு வாரங்கள் கடந்திருக்க அப்பொழுது எய்ம்ஸ் அணியின் கிருஷ்ணாவோ,
“டேய்.. அந்த பாண்டவாஸ் க்ரூப் பிராக்டிஸ் பண்றத பார்த்தேன் டா.. நல்ல பன்றாங்க.. மத்த க்ரூப் எல்லாம் நம்ம அளவுக்கு இல்ல.. சுமாரா தான் பன்றாங்க.. எனக்கென்னமோ நமக்கு போட்டியா இந்த பண்டாவாஸ் தான் வருவாங்க போல…. அதுலயும் நான் அங்க நிக்குறேன்னு தெரிஞ்சு அந்த இனியா இருக்கால.. ரொம்ப ஓவரா கலாய்க்குறா.. அவனுங்கள ஏதாச்சும் பண்ணனும் டா” என்று கூற மாதவோ,
“கூல் மச்சான்.. நான் சொன்ன மாதிரி இவனுங்களுக்கு எப்போவோ ஸ்கெட்ச் போட்டுட்டேன்.. நடக்க வேண்டிய நேரத்துல சரியாய் நடக்கும்..” என்றவன் தன் திட்டத்தை எண்ணி வன்மமாக சிரித்துக்கொண்டான்.
இங்கு இவ்வாறு போய்க்கொண்டிருக்க இனியா, மதுரிகா, மாறன் மூவரும் கேன்டீன் செல்ல மதுரனும் அறிவும் பசிக்கவில்லை என்று மைதானத்தில் அமர்ந்துவிட்டனர்.
அங்கு கேன்டீனில் ஆர்டர் செய்ய மாறன் சென்றிருக்க மதுவும் இனியாவும் தனித்து அமர்ந்திருந்தனர். அப்பொழுது இனியாவோ, ‘நாம இவ்ளோ நாள் நம்ம விஷயம் பத்தி மது கிட்ட எதுமே பேசல.. இப்போ தனியா தான் இருக்கோம்.. சொல்லிடுவோம்’ என்று நினைத்தவள்,
“மது.. உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் டி” என்று கூற அவளும்,
“சொல்லு டி.. என்ன விஷயம்.. எக்ஸ்ட்ரா ரெண்டு முட்டை பப்ஸ் வேணுமா” என்றிட இனியாவோ,
“ஹே ச்சே.. அது இல்ல.. நான் அறிவை லவ் பண்றேன் டி” என்று கூற ஏற்கனவே தெரிந்தும் அந்த நேரம் தெரியாதது போல் கேட்டுக்கொண்டாள் மதுரிகா.
“என்ன இனியா சொல்ற.. அறிவை நீ லவ் பண்றியா.. என்கிட்ட சொல்லவே இல்ல நீ” என்று கேட்க அவளோ,
“சாரி டி.. சொல்ல சந்தர்ப்பம் கிடைக்கல.. மாறன் இருக்கும் போது உங்கிட்ட சொன்னா அவன்மூலமா அறிவுக்கு தெரிஞ்சுறுமோன்னு பயம்.. இப்போ தான் அந்த மூணு லூசுங்களும் நம்ம கூட இல்லல.. அதன் டக்குனு உங்கிட்ட சொல்லிட்டேன்” என்று கூற மதுவோ,
“ஓ சரி டி” என்றவள் மாறனைப் பற்றி சிந்திக்க அவளுக்கு கஷ்டமாக இருந்தது. அவளை உலுக்கிய இனியாவோ,
“என்னாச்சு டி.. நீ ஏன் சோகமாயிட்டா.. நான் அறிவை லவ் பண்றது உனக்கு பிடிக்கலையா” என்று கேட்க மதுவோ,
“ஹே லூசு.. சீச்சீ.. அப்படியெல்லாம் இல்ல.. அறிவும் உன்ன லவ் பன்றானா” என்று கேட்க அவளோ,
“தெரியல டி.. அந்த திருட்டு பய சரியான அமுக்கினியா இருக்கான் டி.. எதையுமே கண்டுபிடிக்க முடியல” என்று கூற மதுவோ,
“ஒருவேளை அறிவு உன்ன லவ் பண்ணலைனா.. நீ என்ன பண்ணுவ” என்று மாறனுக்கு ஏதேனும் வாய்ப்பு இருக்குமா என்ற எண்ணத்தில் கேட்க அவளோ,
“என்ன டி நெகட்டிவா பேசுற” என்று சோகமாக இனியா கேட்டாள். மதுவோ,
“ஹே சாரி டி.. உன்ன கஷ்டப்படுத்த அப்படி கேட்கல.. ஆனா எல்லாத்துக்கும் நாம் தயாரா இருக்கணும்ல.. அதனால் கேட்குறேன்” என்று கூற அவளோ,
“இருக்கவே இருக்கு மூணு வருஷம்.. இந்த மூணு வருஷம் முடியுறதுக்குள்ள என் காதலை அவனுக்கு புரியவைக்க ட்ரை பண்ணுவேன்.. அப்படியும் அவனுக்கு புரியலைனா அப்புறம் யோசிப்போம்” என்று கூற அவளின் உறுதி மதுவுக்கு நன்றாகவே புரிந்தது.
“சரி விடு… போக போக தெரிஞ்சுப்போம்” என்று கூறவும் மாறன் வரவும் சரியாக இருந்தது. அதன்பிறகு அதைப் பற்றி அவர்கள் பேசவில்லை.
அங்கு மதுரனும் அறிவும் தனித்திருக்க,
“டேய் அறிவு.. உங்கிட்ட பேசணும் டா” என்று மதுரன் கூற அறிவோ,
“என்ன டா சொல்லு.. மதுவை லவ் பண்ற அதான” என்று கூற அவனோ,
“மச்சி.. எப்படி டா..” என்று கேட்க அவனோ,
“ஆமா இது பெரிய ரகசியம்.. நீ அவளை பார்க்குற பார்வை.. பேசுற பேச்சு இதை வச்சு கண்டுபிடிக்க தெரியாமையா இருக்கு.. நான் தான் ஏற்கனவே அன்னைக்கு உங்கிட்ட கேட்டேன்ல நீ தான் பெருசா அன்னைக்கு கேட்கும் போது அப்படி எல்லாம் இல்லன்னு சொன்ன இப்போ என்னவாம்” என்று கேட்க அறிவின் மனசாட்சி அதே கேள்வியை அறிவிடமும் கேட்க,
‘நீ மூடு.. நான் அவன்கிட்ட தான பேசுறேன்.. நீ எதுக்கு இப்போ என்ட்ரி கொடுக்குற.. போ உள்ள’ என்று அதனை அடக்கியவன் நண்பன் மேல் கவனமாக மதுரனோ,
“இல்ல மச்சான்.. விழி பர்த்டேக்கு மது வீட்டுக்கு போயிருந்தோம்ல.. அப்போவே முடிவு பண்ணிட்டேன் அவ தான் என் காதல்னு” என்று கூற அறிவோ,
“என்னடா சொல்ற.. அங்க என்ன நடந்துச்சு.. அவ உனக்காக அழுதாளே.. அதனாலயா..” என்று கேட்க மதுரனோ,
“அதுவும் ஒரு காரணம் தான்.. ஆனா இத்தனை நாள் எதை நெனச்சு பயந்துட்டு இருந்தேனோ.. அதுக்கான பதில் கிடைச்சுட்டு டா.. அந்த பதில் தூரிகா தான்” என்று கூற அவன் கூற்றில் அதிர்ந்த அறிவோ,
“மச்சான்.. என்ன சொல்ற.. நிஜமாவா.. செம செம.. இது எதிர்பார்க்கவே இல்ல டா நானு.. எப்படி இதெல்லாம்” என்று கேட்க மதுரனோ ஒரு விஷயத்தைக் கூற அதனைக் கேட்ட பிறகு,
“அப்போ நீ எடுத்த முடிவு சரி தான்.. இதனால தான் துறைக்கு மது மேல லவ்வு வந்துச்சா” என்று கேட்க மதுரனோ,
“இல்ல மச்சான்.. என் குற்றவுணர்வு போக அவ காரணமா இருந்துருக்கான்னு நெனச்சு எனக்கு லவ் வரல.. இந்த விஷயம் எல்லாம் தெரியுறதுக்கு முன்னாடியே எனக்கு அவமேல லவ் வந்துடுச்சு.. ஆனா அவகிட்ட என் லவ்வ சொல்லறதுக்கு முன்னாடி என் குற்றவுணர்வை பத்தி சொல்லனும்னு இருந்தேன்.. ஆனா இப்போ அதுக்கு அவசியம் இல்லன்னு தெரிஞ்சுட்டு.. அவ்ளோ தான் ” என்று கூற அறிவோ,
“அப்புறம் என்ன.. அவகிட்ட உன் லவ்வ சொல்ல வேண்டியது தான் பாக்கி.. அவளுக்கும் உன்னை பிடிக்கும்னு நல்லாவே தெரியுது..” என்று கூற மதுரனோ,
“ஆமா டா கூடிய சீக்கிரம்.. என் லவ்வ அவகிட்ட சொல்லுவேன்” என்று கூறினான். அறிவோ, ‘நம்ம மச்சான் நம்மகிட்ட எதையுமே மறைக்காம பேசுறான்.. நாம மட்டும் மறைக்கிறது சரியா இருக்காது’ என்று நினைத்தவன் மதுரனிடம்,
“மச்சான் நானும் உங்கிட்ட ஒன்னு சொல்லணும் டா..” என்று கூற மதுரனோ,
“நீயும் இனியவை லவ் பண்ற அதான” என்று கேட்க அவன் கூற்றில் சிரித்த அறிவு,
“லவ் பன்றேனான்னு தெரியல.. ஆனா அவளை காலமுழுக்க கஷ்டப்படாம பார்த்துக்கணும்னு என் மனசுக்கு தோணுது.. அவளுக்கும் என்மேல லவ் இருக்குனு தெரிஞ்ச அப்றம் நான் ஏன் அவளை அவாய்ட் பண்ணனும்” என்று கூற மதுரனோ,
“புரியலடா.. என்ன திடிர்னு” என்று கேட்க அறிவு நடந்ததைக் கூற ஆரம்பித்தான்.
ரகசியம் – 32
அன்று ஞாயிற்றுக் கிழமை இனியா தன் தந்தைக்கு இன்றும் முக்கியமான ஒரு வேலை என்பதால் அவரது அலுவலகத்திற்கு சாப்பாடு கொண்டு வந்திருந்தாள்.
“சண்டே கூட லீவ் இல்லாம வேலை பார்க்கறீங்க” என்று புலம்பியபடி அவருக்கு உணவினைக் கொடுத்துவிட்டு செல்ல அங்கு ஒரு வீட்டின் வாசலில் நிற்பவனைப் பார்த்தவள்,
‘என்ன இது நம்மாளு மாதிரியே தெரியுது’ என்று நினைத்தபடி அருகில் செல்ல சாட்ஷாத் அறிவமுதனே தான். அவளைக் கண்டவன்,
“ஹே அன்பு.. நீ எங்க இங்க” என்று அவன் கேட்க அவளோ,
“அப்பா ஆபிஸ் அங்க தான் இருக்கு.. சாப்பாடு கொடுக்க வந்தேன்.. நீ எங்க இங்க” என்று கேட்க அவனோ,
“அட.. இதான் என் வீடு” என்று கூற அவளோ,
“பார்றா.. இது தெரியாம இருந்துருக்கோம்” என்று கூற பின்பு,
“சரி உள்ள வா.. இவ்ளோ தூரம் வந்துட்டு உள்ள வராம போகாத” என்று அழைக்க அவளும்,
‘நான் வாழ போற மாமியார் வீடாச்சே.. வராம போவேனா’ என்று நினைத்தவள்,
“வரேன் டா” என்க அவனும் உள்ளே அழைத்து சென்றான். அவனின் அன்னையை அறிமுகப்படுத்த அவரும் அவளை நலம் விசாரிக்க இவளும் விசாரிக்க என பொதுவான பேச்சுக்கள் ஓடின. பின்பு,
“வா மா சாப்பிடலாம்” என்று அவர் அழைக்க,
“அயோ இல்ல அத்தை..” என்று முதலில் கூற பின்பு,
‘ஐயோ அவசரப்பட்டு உளறிட்டோமே’ என்று நினைத்து,
“அது பக்கத்துக்கு வீடு அத்தை எல்லாம் அப்படி கூப்பிட்டு பழகிடுச்சு.. அந்த பழக்கத்துல..” என்று இழுக்க அவரோ,
“அட இதுல என்ன இருக்கு.. அத்தைன்னு கூப்பிட்டுக்கோ” என்றவர் உணவை எடுத்து பரிமாற அவளோ,
“சரிங்க அத்தை.. அப்படியே கூப்பிடுறேன்.. வீட்டுல சமைச்சு வச்சுட்டு தான் வந்திருக்கேன்.. அங்க போய் சாப்பிட்டுக்குறேன்.. இருக்கட்டும்” என்று கூற அவரோ,
“அது இருக்கட்டும்.. முதல் தடவ வீட்டுக்கு வந்திருக்க.. சாப்பிடாம போனா எப்படி.. கை கழுவிட்டு வா.. சாப்பிடுவோம்” என்று கூற அறிவும்,
“வா அன்பு சாப்பிடுவோம்” என்று கூற அதற்குமேல் அவளால் தட்ட முடியுமா.. கை கழுவிவிட்டு வந்து அமர்ந்தாள். மீன் குழம்பு செய்த்த்திருந்தார் அறிவின் அன்னை லதா.
“ரெண்டு பேரும் சாப்பிடுங்க.. இதோ வந்துடுறேன்” என்று கூற அவனோ,
“ம்மா என்ன புதுசா பேசுற.. மீன் குழம்பு வச்சா நீ தான ஊட்டிவிடுவ” என்று கூற அவரோ,
“இவன் ஒருத்தன் ஏழு கழுதை வயசாகுது.. இன்னும் மீன்ல முள்ளு எடுத்து சாப்பிட தெரியாம ஊட்டிவிடுன்னு சொல்லிட்டு கிடக்குறான்” என்று இனியாவிடம் புலம்ப அவளோ அறிவைப் பார்த்து சிரிக்க அவனோ,
‘ஐயோ அன்பு முன்னாடி மானத்தை வாங்குறாங்களே’ என்று நினைத்து அசடு வழிய அவளோ அவனைத்தான் ரசனையாக பார்த்தாள். அவனின் அன்னை அவனுக்கு ஊட்டிவிடுவதைப் பார்த்தவளுக்கு தன் அன்னையின் நியாபகம் வர கண்கள் கலங்கியது. அதனைக் கவனித்தவர்,
“என்னமா.. ஏன் கண் கலங்குற.. காரமா இருக்கா” என்று கேட்டிட அவளோ,
“இல்ல.. என்னோட அம்மா நியாபகம் வந்துட்டு” என்று கூற அறிவோ அவள் அம்மா இறந்ததை அவரிடம் கூற லதாவுக்கு மனது கேட்கவில்லை. அறிவுக்கும் கஷ்டமாக இருந்தது.
“அதனால என்ன மா இப்போ.. நானும் உனக்கு அம்மா மாதிரி தான்..” என்று அவளின் தட்டை வாங்கியவர் அவளுக்கும் சேர்த்து ஊட்டிவிட அவரது அன்பில் கரைந்து தான் போனாள் இனியா.. அவளது மகிழ்ச்சியைக் கண்ட அறிவுக்கு சொல்ல இயலா ஓர் உணர்வு முதன் முறையாக தோன்றியது அவளின் மேல்.
“கவலைப்படாத.. உனக்கு எப்போ எல்லாம் அம்மா நியாபகம் வருதோ.. அப்போ எல்லாம் நீ இங்க வா” என்று லதா கூறினார். அவளின் கலங்கிய கண்கள் அறிவை மிகவும் பாதித்தது.
“ஆமா அன்பு.. அழாத” என்றவன் அவளின் கரத்தை ஆதரவாக பற்ற அவளோ,
‘இந்த கையை நீ கடைசி வராம விடாம பிடிச்சுக்கோ டா. அதுவே போதும்’ என்று நினைத்தவள் மகிழ்ச்சியாக உண்டு முடித்து தன் வீட்டிற்கு சென்றாள்.
இவ்வாறு அறிவு நடந்தைக் கூறி முடிக்க மதுரனோ,
“ஓஹோ.. சோ அம்மா பாசத்தைக் காலமுழுக்க இனியாக்கு கொடுக்கணும்ன்னு சார் முடிவு பண்ணிடீங்க.. அப்படி தானே” என்று கேட்க அதில் சிரித்த அறிவோ,
“அது மட்டுமில்ல டா.. என்மேல அவளுக்கு காரணமேயில்லாத அன்பு நெறய இருக்கு.. ஒருத்தனுக்கு இதைவிட வேற என்ன பெருசா வேணும்.. என்னையும் ஒரு பொண்ணு லவ் பண்ணுறான்னு நினைக்கவே எனக்கு சந்தோஷமா தான் இருந்துச்சு.. இருந்தாலும் எனக்கு அந்த மாதிரி எண்ணம் ஏன் இவ்ளோ நாள் வரலன்னு எனக்கு தெரியல.. பொண்ணுங்கள பார்த்து பயந்தே வாழ்ந்துட்டேன்.. ஆனா அன்பு சம்திங் ஸ்பெஷல் டா எனக்கு.. அன்னைக்கு அவ அழும்போது.. எனக்கு என்னமோ பண்ணுச்சு டா.. அதனால அவளை ரொம்ப நாள் காக்க வைக்காம நானே அவளுக்கு முன்னாடி அவகிட்ட கேட்க போறேன்” என்று கூற மதுரனோ,
“செம டா.. நல்ல முடிவு தான்.. ஆள் தி பெஸ்ட்” என்று கூறி நண்பனை அணைத்துக் கொண்டவன் பிறகு,
“டேய் அறிவு..” என்று மதுரன் அவனின் அக்மார்க் இழுவையை இழுக்க அறிவோ,
“என்னடா கொஞ்ச நாளா உன் தத்துவத்தைக் காணோமேன்னு பார்த்தேன்.. சொல்லும் சொல்லித் தொலையும்” என்று கூற அவன் கூற்றில் சிரித்தவன்,
“மச்சான் பாலும் பால்டாயிலும் ஒரே கலர்ல இருக்குன்னு பாலைக் குடிக்காம இருப்போமா.. இல்லல.. அதைமாதிரி தான் டா.. உன் பெரியப்பா பையன் லவ் பண்ண பொண்ணு அவனை ஏமாத்திட்டு போய்ட்டான்னு அவன் செத்துட்டான்.. அதுக்காக எல்லா பொண்ணுங்களும் அது மாதிரி இருப்பாங்கன்னு நெனைச்சு பயப்படுறது தப்பு மச்சான்.. நல்லவேளை இப்போவாச்சு புரிஞ்சுக்கிட்டியே அதுவரைக்கும் சந்தோஷம்” என்று கூற அவனது கூற்றை ஆமோதித்தான் அறிவு.
——————————————-
நெடுஞ்சாலையில் வாகனங்கள் அங்குமிங்கும் அதிவேகத்தில் போய்க்கொண்டிருக்க சாலையைக் கடக்க முயன்ற மாறன் திடீரென்னு மகிழுந்தில் மோதி தூக்கி வீசப்பட உடனே அங்கு மக்கள் கூட்டம் குவிய அதிவேகமாக ஆம்புலன்ஸிலிருந்து இறங்கிய மருத்துவர் மாறனைப் பரிசோதித்துவிட்டு இதயத்துடிப்பு நின்றுவிட்டதாக கூற,
“இளாஆஆஆஆ” என்று அலறியவாறு எழுந்து அமர்ந்தாள் விழி. மதிய உணவு சாப்பிட்டு முடித்ததும் கணித வகுப்பு நடைபெற்றதில் விழியின் விழிகள் உறக்கத்தில் சொக்கிக் கொண்டுவர தன் தோழியிடம்,
“ஹே நான் தூங்குறேன் டி.. மிஸ் கவனிச்சாங்கன்னா சிக்னல் கொடு” என்றவள் மேஜை மீது படுக்க ஆழ்ந்த உறக்கத்திற்கு இழுத்து செல்லபட்டவளுக்கு தன்னவனுக்கு விபத்து ஏற்படுவது போன்று கனவு வந்தது.
அவளது அலறலில் வகுப்பு மொத்தமும் பயந்து அவளைத் திரும்பி பார்க்க அப்பொழுது தான் தன்னிலை அடைந்தவள்,
‘கனவா.. நல்ல கனவு’ என்று நினைத்து தன்னை அசுவாசப்படுத்திக் கொண்டாள். ஆசிரியர் அவளருகில் வந்து,
“இமைவிழி.. என்னாச்சு.. எதுக்கு அப்படி கத்துனா” என்று கேட்க அவளோ,
‘அய்யயோ இப்போ கனவுன்னு சொன்னா.. க்ளாஸ் டைம்ல எதுக்கு தூங்குனனு இந்தம்மா கேட்குமே’ என்று நினைத்தவள்,
“மிஸ்.. மயக்கமா வந்துச்சு மிஸ்.. அப்புறம்.. அப்புறம்.. ” என்று கூறியபடி மறுபடியும் மயங்கியது போன்று நடித்து படுத்துவிட்டாள். ஆசிரியரோ உடனே இனியாவிற்கு அழைத்து நடந்ததைக் கூற இனியாவோ,
“என்ன மிஸ் சொல்றிங்க.. அய்யயோ அவளை கொஞ்சம் பார்த்துக்கோங்க.. நான் உடனே வரேன்” என்று பதற்றமாய் கூட அவளை சுற்றி அமர்ந்திருந்த மற்ற நால்வரும் பதற்றமாய் என்னவென்று கேட்க அவளோ,
“தெரியல.. திடிர்னு விழி மயக்கம் போட்டு விழுந்துட்டாளாம்.. அவ மிஸ் கால் பண்ணி சொன்னாங்க” என்று பதற்றமாய் கூற மாறனோ,
“என்ன இனியா சொல்ற… இமை மயங்கிட்டாளா.. முதல்ல வா என்னாச்சுன்னு போய் பாப்போம்” என்றவன் விறுவிறுவென்று வண்டியை எடுக்க சொல்ல அவளும்,
“சரி நான் அவன்கூட போயிட்டு என்னாச்சுன்னு பாத்துட்டு வரேன்” என்றவள் வேகமாக ஓடினாள். வண்டி அதிவேகத்தில் சென்றது பள்ளியை நோக்கி. மாறனின் மனதிலோ தான் நேசிப்பவள் வருந்துகிறாள் என்றோ.. அவளின் தங்கைக்கு இவ்வாறு ஆகிவிட்டது என்றோ.. தான் நேசிக்கும் பெண் தன்னோடு வண்டியில் முதல்முறையாக வருகிறாள் என்றோ.. எந்த எண்ணமும் சுத்தமாக இல்ல. அவனைப் பொறுத்தவரை அவனுக்கு தெரிந்த அவனுக்கு பிடித்த ஒரு பெண்ணுக்கு ஆபத்து என்று மட்டும் தான் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.
அங்கு விழியோ மயக்கம் தெளிந்து சோர்வாக இருப்பது போல் நடித்து அமர்ந்திருந்தாள்.
‘அடியே இனியா.. சீக்கிரம் வந்து தொலை டி.. நானும் எவ்ளோ நேரம் தான் நடிக்குறது’ என்று நினைத்தபடி வாயிலையே பார்த்துக் கொண்டிருக்க அவளவனே வந்து நின்றான்.
‘ஐய்.. இளா.. நல்லவேளை எதும் ஆகல.. நல்லபடியா இருக்காங்க’ என்று நினைத்தவள் ஒரு வேகத்தில் பட்டென்று எழுந்துவிட அவன் பின்னாள் இனியா வந்தாள். மாறனும் விழி நன்றாக இருப்பதைப் பார்த்த பின்பு தான் ஆசுவாசமடைந்தான். விழி எழுந்ததைப் பார்த்த ஆசிரியர்,
“என்னாச்சு விழி.. இப்போ மயக்கம் போய்டுச்சா” என்று கேட்க அவளோ,
‘ஆள பார்த்த ஹேப்பில பர்ஃபாமென்ஸ மறந்துட்டோமே’ என்று நினைத்தவள் பிறகு,
“அக்கா” என்று அழுதபடி இனியாவை அணைத்துக்கொண்டாள்.
“என்னாச்சு டி.. ஏன் அழுற.. ஏதாச்சும் பண்ணுதா.. ஹாஸ்பிட்டல் போலாமா” என்று கேட்க அவளோ,
“தெரியல அக்கா.. திடிர்னு உனக்கு ஏதோ ஆகுற மாதிரி ஒரு பிரம்மை.. அதுல கத்திட்டேன்.. அப்புறம் திடிர்னு மயங்கிட்டேன்” என்று நடித்து தள்ள ஆசிரியரோ,
“ஆமா.. க்ளாஸ் நடந்துட்டு இருந்துச்சு.. திடிர்னு இளான்னு கத்திட்டா..” என்று கூற இனியாவோ,
“இளான்னு கத்துனாளா” என்று புரியாமல் கேட்க மாறனுக்கு புரிந்தது. இளா என்று அவள் அழைப்பது தன்னை தான் என்று. விழியோ,
‘ஆத்தி.. இந்த வாத்தி மாட்டி விட்டிடுச்சே..’ என்றபடி ஓரக்கண்ணால் இளாவைப் பார்க்க அவனோ அவளைத் தான் சந்தேகமாக பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு விழியோ,
“இளான்னு கத்தல மிஸ்.. இல்லன்னு கத்தினேன்.. உங்களுக்கு ராங்கா கேட்டிருக்கும்.. இல்ல டி” என்றவள் தன் தோழியைப் பார்த்து கேட்க அவளும், “ஆமா மிஸ்” என்று ஜால்றா அடித்தாள். பிறகு ஆசிரியரோ,
“ஓகே நீங்க ஹெச்எம் கிட்ட பர்மிஷன் வாங்கிட்டு அவளை வீட்டுக்கு கூட்டிட்டு போங்க” என்று கூறிவிட்டு மற்ற மாணவிகளை அழைத்துக்கொண்டு வகுப்புக்கு சென்றுவிட இனியா அனுமதி வாங்க தலைமையாசிரியர் அறைக்கு சென்றிட அங்கு இளமாறனும் இமைவிழியும் தான் நின்றிருந்தனர்.
ரகசியம் – 33
“ஹே பச்சைமிளகா.. எதுக்கு என் பெயரை சொல்லி கத்துன” என்று கூற அவளோ,
“அதான் சொன்னேனே.. இளான்னு கத்தல.. இல்லன்னு தான் கத்துனேன்னு” என்று கூற அவனோ,
“அதை அவங்க சொன்னதும் என்னைப் பார்த்து திருட்டு முழி முழிச்சியே அதுக்கு முன்னாடி சொல்லிருந்தா நம்பிருப்பேன்..” என்று கூற அவளோ,
“ஈஈஈ.. கண்டுபிடிச்சுடீங்களா.. வேற ஒண்ணுமில்ல.. திடிர்னு உங்களுக்கு ஆக்சிடென்ட் ஆகுற மாதிரி கனவு.. நமக்கு தெரிஞ்சவங்களுக்கு ஆபத்துனா மனசு பதறுமா இல்லையா.. அதான் ஒரு பயத்துல அப்படி கத்திட்டேன்.. கனவுன்னு சொன்னா க்ளாஸ் டைம்ல எதுக்கு தூங்குனன்னு கேள்வி வரும்.. அதனால் தான் மயக்கம் போடுற மாதிரி செட்டப்பு” என்று கூற அவளது கூற்றில் சிரித்தவன்,
“அடிப்பாவி.. நல்லாவே நடிக்குற.. நானும் உங்க அக்காவும் எவ்ளோ பதறிப் பொய் வந்தோம் தெரியுமா.. வந்த வேகத்துக்கு நீ கனவுல கண்டது நிஜத்துல நடந்திருக்கும்” என்று கூற அவளோ,
“அவ பதறுனா சரி.. நீங்க எதுக்கு பதறுனீங்க” என்று கேட்க அவனோ,
“அதுவா.. அது நமக்கு தெரிஞ்சவங்களுக்கு ஆபத்துனா மனசு பதறுமா இல்லையா” என்று அவள் கூறியது போலவே கூறி காண்பிக்க இமையோ சத்தமாக சிரித்துவிட்டாள். பிறகு ஆட்டோ பிடித்து அவளை வீட்டிற்கு வந்து இறக்கிவிட்டு மீண்டும் கல்லூரி வந்து சேர்ந்தனர் மாறனும் இனியாவும். நடந்ததை மற்றவர்களிடம் கூறிகொண்டிருக்க அப்பொழுது வகுப்பறைக்குள் நுழைந்தார் வேம்பு.
“காய்ஸ்.. ஒரு அர்ஜென்ட் அனௌன்ஸ்மென்ட்.. நடக்க போற காம்பெட்டிஷனுக்கு வைக்குற செலக்ஷன் ப்ராசஸ்ல ஒரு சின்ன மாற்றம்.. சஹா பிலிம் இண்டஸ்ட்ரிக்கு ரெண்டு கேண்டிடேட் தேவைப்படுறங்கணும் மூணு மாசம் கழிச்சு அவங்க பைனல் ஆடிஷன் வைக்குறாங்கன்னும் சொன்னோம் இல்லையா.. ஆனா இப்போ அஞ்சு பேர் தேவைப்படுறாங்களாம்.. அதுவும் அவங்களுக்கு இப்போ அதிகமா நேரமும் இல்லையாம்.. அதனால நம்ம காலேஜ் மேனஞ்சமென்ட் செலக்ட் பண்ற ப்ராசஸ அடுத்த மாசம் நடத்த சொல்றாங்க.. அதை அவங்க நேர்ல வந்து பார்த்து அதுல இருந்தே அவங்களுக்கு தேவையான மெம்பெர்ஸ செலக்ட் பண்ண போறாங்களாம். இன்னைக்கு தான் கால் பண்ணி சொன்னாங்க.. சோ இன்னும் ஒரு மாசம் இருக்கு.. பட் அது தான் பைனல் செலெக்ஷனும் கூட. நல்ல பிராக்டிஸ் பண்ணுங்க” என்று கூறிவிட்டு செல்ல அனைவரிடமும் சலசலப்பு.
“காய்ஸ்.. நாம ஆல்ரெடி ஹார்ட்வொர்க் பண்ணிட்டு தான் இருக்கோம்.. இன்னும் நம்ம சீரியஸா வொர்க் பண்ணா கண்டிப்பா நம்மளால ஜெயிக்க முடியும்.. ஓகே” என்று மதுரன் தன் அணியிடம் கூற அனைவருக்குள்ளும் நம்பிக்கைப் பிறந்தது.
இளமாறன் மீது விதைக்கப்பட்ட இமைவிழியின் ஒருதலை காதல் விதை அவளின் மனம் எனும் மண்ணிலிருந்து முளைத்து செடியாய் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கொண்டிருக்க,
அன்பினியாவின் மேல் முளைத்த இளமாறனின் ஒருதலைத் தளிர் அவ்வப்போது அவள் சினேகமாக அவன்பால் எடுத்துக்கொள்ளும் உரிமை உரத்தின் உதவியில் காதல் பூவை உதிர்க்க காத்திருக்கும் மொட்டாய் வளர,
அறிவமுதன்பால் வளர்ந்த அன்பினியாவின் ஒருதலை மொட்டு காதல் பூவாய் மலர அந்த ஒருதலை மொட்டளித்த அன்பினில் அன்பினியாவின் மேல் அறிவமுதனுக்கு முளைத்த நேசப்பூ மலர தயாராயிருக்க,
ஆரம்பத்தில் காயாய் கசந்த மதுரன் மதுரிகாவின் இடையேயான உறவு காலம் செல்ல செல்ல காதல் கனியை எட்டிவிடும் தூரத்தில் இருந்தாலும் அவர்களிருவர் மனதில் ஒளிந்திருக்கும் கடந்தகால நிகழ்வின் காரணத்தால் கனியாமலே தொடர நாட்கள் மட்டும் வேகமாக நகர தொடங்கியது.
மாறனுக்கு இனியாவின் மேல் இருக்கும் உணர்வு காதல் தான் என்று நம்பிக்கொண்டு மாறன் இருக்க.. இது தொடர்ந்தால் பிற்காலத்தில் மாறனுக்கு தான் ஆபத்து என்று அறிந்த மதுரிகா மதுரனிடம் உதவி கேட்கலாம் என்றெண்ணி மாறன் வெளியில் சென்றிருக்கும் சமயம் அழைப்பு விடுத்திருந்தாள்.
“என்ன மிஸ் பண்டாரம்.. லீவுல கூட என் நியாபகம் வருதா மேடமுக்கு” என்று கேட்க அவளோ,
“அய்ய.. அதெல்லாம் இல்ல.. உங்கிட்ட முக்கியமா பேசணும்” என்று கூற அவனோ அவள் குரலில் இருந்த பதற்றம் புரிந்து தன் கிண்டல் பேச்சுக்களை தள்ளி வைத்து, “சொல்லு டி.. என்ன விஷயம்” என்று கேட்டான்.
“அது வந்து.. மாறன் இனியாவை லவ் பண்றதா நெனச்சு அவமேல ஃபீலிங்ஸ வளர்த்துட்டு இருக்கான்” என்று கூற மதுரனோ,
“வாட்.. என்ன சொல்ற மது.. மாறன் இனியா மேல ஃபீலிங்ஸா இருக்கானா.. ஆனா இனியாவும் அறிவும் லவ் பண்றாங்களே” என்று கூற மதுவோ,
“வாட் அறிவும் இனியாவ லவ் பன்றானா” என்று கேட்க,
“ஆமா மது.. அறிவுக்கும் இனியாவை பிடிச்சுருக்கு.. அவங்க ரெண்டு பேருமே ஒருத்தருக்கொருத்தர் விரும்புறாங்க.. ஆனா இன்னும் ரெண்டு பேரும் சொல்லிக்கல” என்று கூற மதுவுக்கோ மாறனை நினைத்து கஷ்டமாக இருந்தது.
“அச்சோ.. இப்போ மாறன் கிட்ட இந்த விஷயத்தை எப்படி சொல்றது.. சொன்னா அவனோட ரியாக்ஷன் எப்படி இருக்கும்னு பயமா இருக்கு டா” என்று கூற மதுரனோ,
“புரியுது டி.. கண்டிப்பா இந்த மைண்ட் செட்ல இதை நாம சொன்னா சரியா இருக்காது.. அப்படியே நாம சொன்னாலும் ஒன்னு நம்ம மேல அவனுக்கு கோபம் வர வாய்ப்பு இருக்கு.. இல்லனா அறிவு மேல கோபம் வர வாய்ப்பு இருக்கு.. அறிவும் இனியாவும் லவ் பண்றாங்கன்னு அவன் லைவ்வா தெரிஞ்சுக்கணும்.. அப்போ தான் அவனோட மனசு மாறும்” என்று கூற அவளோ,
“லைவாவா.. அந்த ரெண்டு பக்கிங்களும் தான் இன்னும் லவ்வ சொல்ல மாட்டுதுங்களே.. அதுங்க லவ்வ சொல்லி லவ் பண்ண ஸ்டார்ட் பண்ணா தான மாறன் அதைப் பார்த்து மனசு மாறுவான்” என்று கூற மதுரனோ,
“எஸ் கரெக்ட்.. அப்போ நாம தான் அறிவையும் இனியாவையும் ப்ரொபோஸ் பண்ண வைக்கணும்.. அதை மாறன பார்க்க வைக்கணும்.. கொஞ்ச கஷ்டமா தான் இருக்கும்.. ஆனா அப்போ தான் எஃபெக்டிவா இருக்கும்” என்று கூற மதுவோ,
“என்ன டா சொல்ற.. புரியுற மாதிரி சொல்லு.. நாம எப்படி அறிவையும் இனியாவையும் ப்ரொபோஸ் பண்ண வைக்க முடியும்” என்று கேட்க அவனோ, “அடியே மக்கு பண்டாரம்” என்று திட்ட அதில் கடுப்பானவள்,
“என்ன டா சொன்ன.. நான் மக்கா.. நீ ஒன்னும் ஐடியாவே சொல்ல வேணாம் போ” என்று கோபமாக கூற,
“சரி சரி கோச்சுக்காத டி.. என் செல்ல….” என்று கூற வந்தவன் அவ்வாறே பாதியில் நிறுத்திவிட அவளோ,
“என் செல்ல….” என்று அவன் விட்டதை தொடர்ந்து கேட்க அவனோ, ‘என் செல்ல தூரிகா ல” என்று உளர வந்ததை எண்ணி சிரித்தவன் அவளது கேள்விக்கு,
“அது.. அது வந்து.. ஹான்.. என் செல்ல பண்டாரம்லன்னு சொல்ல வந்தேன்” என்று சமாளிக்க அவனது செயலில் சத்தமின்றி புன்னகைத்துக் கொண்டாள் மதுரிகா. பிறகு, “சரி ஐடியாவை சொல்லு” என்று அவள் பேச்சை மாற்ற அவனும்,
“அதாவது.. அறிவ ப்ரைன்வாஷ் பண்ணி அவனை சீக்கிரம் லவ்வ சொல்ல வைக்க வேண்டியது என் பொறுப்பு.. இனியாவை ப்ரைன்வாஷ் பண்ணி அவ லவ்வ அறிவு கிட்ட சொல்ல வைக்க வேண்டியது உன் பொறுப்பு.. அப்படி அவங்க ரெண்டு பேரையும் ஒரே நாள்ல ப்ரொபோஸ் பண்ண வச்சு அதை மாறனைப் பார்க்க வைக்க வேண்டியது நம்ம பொறுப்பு.. டீலா” என்றிட பெண்ணவளும் சம்மதித்தாள்.
“சரி அப்புறம்..” என்று மதுரன் இழுக்க அவளோ,
“அப்புறம்….” என்று அவனைவிட இழுக்க மீண்டும் அவன்,
“ஹான்.. அப்புறம்…” என்க அதில் சிரித்தவள்,
“அப்புறம் ஒண்ணுமில்ல.. பாய்” என்றிட அவன் முகமோ காற்று வெளியிடப்பட்ட பலூன் போல் ஆனது.
“அவ்ளோதானா” என்று அவன் கேட்க அவளோ,
“அவ்ளோதான.. வேறென்ன” என்று கேட்டவள் உதடுமடித்து சிரிக்க அவனோ,
“வேற ஒண்ணுமேயில்ல.. பாய்” என்றவன் துண்டித்துவிட இரண்டு மதுவும் சிரித்துக்கொண்டனர். சரியாக அவள் அலைபேசியை பார்த்து சிரிக்கும் பொழுது அவள் அறைக்கு வந்த மாறனோ அவளிடம்,
“ஹே மதுரன் கிட்ட தானே நீ பேசிட்டு இருந்த” என்று கேட்க அவளோ பேசியதை ஏதும் கேட்டுவிட்டானோ என்று முதலில் பயப்பட பிறகு,
“அது.. அவனுக்கு சீன்ல ஏதோ டவுட்டுன்னு கால் பண்ணான்” என்று அசடு வழிய கூற அவனோ,
“ஆஹான்.. நம்பிட்டேன்.. ஏன் டி.. அவனும் உன்னை லவ் பண்றான்னு உனக்கு தெரியுது.. உனக்கும் அவனைப் பிடிச்சுருக்கு.. அப்புறம் ஏன் இந்த கண்ணாமூச்சியாட்டம்” என்று கேட்க அவளோ, ‘நல்லவேளை நாங்க பேசுனதைக் கேட்கல இவன்’ என்று நினைத்தவள்,
“நீ சொல்ற எல்லாம் எனக்கு புரியுது மாறா.. ஆனா அதுக்கு முன்னாடி நான் சந்திக்க நெனைக்குற அந்த ஒருத்தன நான் பார்க்கணும்.. அப்புறம் தான் என்னால எந்த முடிவுனாலும் எடுக்க முடியும் டா..” என்று கூற மாறனோ,
“ஏன் மது.. பேரு தெரியாம ஊரு தெரியாம வெறும் ஒரு டீ ஷர்ட் வச்சும் அவனுக்கு இடுப்புல இருந்த பெரிய சைஸ் மச்சத்தை வச்சும் எப்படிடி கண்டுபிடிக்க முடியும்.. பொண்ணா இருந்தாவாச்சு சாரி கட்டும் போது இடுப்பு தெரியும்.. ஈஸியா கண்டுபிடிக்கலாம்” என்று மாறன் கூறிக்கொண்டிருக்க அவன் கூற்றில் மது அவனை முறைத்தாள்.
“ஹிஹி.. இல்ல டி ஒரு ஐடியாக்காக சொன்னேன்.. சரி அதை விடு.. அப்படியே நீ அவனை சந்திச்சாலும் மிஞ்சி போனா ஒரு தேங்க்ஸ் சொல்லுவியா.. அதுக்கும் நீ மதுரன் கிட்ட உன் லவ்வ சொல்றதுக்கும் என்ன டி சம்மந்தம்” என்று கேட்க அவளோ,
“தெரியல மாறா.. ஆரம்பத்துல அவன் எனக்கு செஞ்ச உதவிய நெனச்சு மரியாதை தான் இருந்துச்சு.. ஆனா நாளுக்குநாள் அந்த உணர்வு கொஞ்சம் கொஞ்சமா ஒரு நேசமா மாறுச்சு.. காதலான்னு கேட்டா சொல்ல தெரியல.. ஆனா இப்போ சில நாளா அந்த எண்ணம் எனக்கு இல்லங்குறது உண்மை தான்.. அது நீ சொன்ன மாதிரி மதுரனை சந்திச்ச அப்புறமா என்னன்னு தெரில..
ஆனாலும் அந்த கொஞ்ச காலம் நான் அவன் மேல வச்ச நேசம் என்னைக் கேள்வி கேக்குது டா.. உனக்கு இவ்ளோ பெரிய உதவி செஞ்சவனைக் கூட மறந்துட்டு இப்போ புதுசா ஒருத்தன பிடிச்சதும் அவன் பக்கம் உன் மனசு சாயுதே.. இது தான் உன் நேசமா.. அவ்ளோ தான் உன் நன்றியுணர்வான்னு” என்று மது கூற அவனோ,
“உனக்கே இது குழந்தைத்தனமா இல்லையா மது.. உதவி செஞ்சதுக்கு கைமாறா உன் மனசை கொடுக்கலாம்னு யோசிச்சதே முட்டாள்தனம்.. இதுல உனக்கு நிஜமா ஒருத்தன் மேல காதல் வந்தும் அந்த ஒரு முட்டாள்தனத்தை யோசிச்சு உன் உணர்வை சொல்லாம மறைக்கிற.. உனக்கு அவன் உதவி செஞ்சதுக்கும் நீ அவனை நேசிச்சதுக்கும் நடுவுல மதுரன் ஏன் கஷ்டப்படணும்.. என்னவோ போ சொல்றதை சொல்லிட்டேன்.. உனக்கு நான் எவ்ளோவோ பரவாயில்ல.. தினமும் நான் சந்திக்கிற ஒருத்திய தான் லவ் பண்றேன்.. நீ எவன்னே தெரியாதவனுக்காக உன் ஃபீலிங்ஸ வளர்த்துக்கிட்டு இதுல எனக்கு அட்வைஸ் வேற” என்றவன் கடுப்பாக சென்றுவிட மதுரிகாவும் யோசித்தாள்.
ரகசியம் – 34
‘ஆமா மாறன் சொல்றதும் சரி தான்.. மதுரனை நான் ஏன் கஷ்டப்படுத்தனும்.. ஒன்னு எனக்கு உதவி செஞ்சவன நேசிச்சதை மறந்துட்டு மதுரன் கிட்ட என்னோட உணர்வுகளை சொல்லணும்.. அப்படி இல்லனா மதுரன் கிட்ட டிஸ்டன்ஸ் கீப்அப் பண்ணிட்டு உதவி செஞ்சவனுக்காக நான் காத்திருக்கணும்..
ஒருவேளை நான் உதவி செஞ்சவன சந்திக்கும் பொழுது அவன் எனக்கு கிடைக்காம போனா.. எனக்கு கிடைச்ச மதுரனோட காதலையும் தான நான் இழந்திருவேன்.. முதல்ல அந்த ஊர் பெயர் தெரியாதவன் எனக்கு கிடைப்பான்னு நான் எந்த தைரியத்துல நம்புறது.. இது தெரியாம முட்டாள்தனமா நேசிச்சுருக்கோம்..
சரி அப்படியும் இல்லனா மதுரன்கிட்ட என் காதலை சொல்லி நாங்க காதலிக்கிற சமயம் இவன பத்தின நியாபகம் வந்து எனக்கு உறுத்துச்சுன்னா என்ன செய்ய.. அயோ கடவுளே இப்படி ரெண்டு மனசா என்னை யோசிக்க வைக்குறீங்களே.. ‘ என்று புலம்பியவள் தலையில் கைவைத்து அமர்ந்துவிட சிறிது நேர யோசனைக்கு பிறகு,
‘சரி மாறன மனசு மாற வைக்குற வர மதுரன் உதவி நமக்கு தேவை.. அதுல மாறன் வாழ்க்கை மட்டுமில்ல.. இனியா அறிவு வாழ்க்கையும் இருக்கு.. அதனால இதெல்லாம் நல்ல முடியுற வர நாம மதுரன் கிட்ட பேசி வச்சு இருப்போம்.. அதுக்கு அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா அவனை அவாய்ட் பண்ண ட்ரை பண்ணுவோம்.. ஒருவகைல இது சுயநலம் தான்.. ஆனாலும் மதுரனுக்கு என்மேல காதல் இருக்குன்னு தெரிஞ்சும் நாம அதை வளர்க்குற மாதிரி பேசுறது அதைவிட தப்பு..’ என்று நினைத்தவள் பிறகு இனியாவை எவ்வாறு அறிவிடம் காதலைக் கூற வைக்கலாம் என்ற யோசனையில் இறங்கினாள்.
——————————-
அங்கு மதுரனோ மதுரிகாவைப் பற்றி தான் சிந்தித்துக் கொண்டிருந்தான்.
‘அறிவு இனியா கிட்ட லவ் சொல்றது எல்லாம் இருக்கட்டும்.. நீ ஏன் மது என்கிட்ட உன் லவ்வ சொல்ல மாட்டிக்க.. ஒருவேளை நான் தான் முதல்ல சொல்லணும்னு எதிர்பார்க்குறியா.. உனக்கும் என்னை பிடிச்சுருக்குனு நீ பேசுற விதத்துலையே தெரியுது.. சரி என்னவோ.. நம்ம அறிவு இனியா லவ் சொல்ற மிஷன் முடிஞ்சதும் என்னோட லவ்வ உங்கிட்ட சொல்றேன்.. அப்போ நீ உன்னோட காதலை என்கிட்டே சொல்லி தான ஆகணும்.. ஐ வில் பீ வெயிட்டிங் ஃபார் யூ மை டியர் தூரிகா..” என்று கூறி கொண்டவன் பிறகு,
‘அதுசரி நாமெல்லாம் எதுக்கு இந்த காலேஜ் சேர்ந்தோமோ அந்த வேலை முடியுறதுக்குள்ள ஆளாளுக்கு கல்யாணம் பண்ணி குடும்பமா செட்டில் ஆயிடுவோம் போலயே.. நோ நோ.. காதல் எவ்ளோ முக்கியமோ அந்த அளவுக்கு கடமையும் முக்கியம்’ என்று தனக்குத்தானே கூறிக் கொண்டவன் பிறகு சிரித்தவாறு தன் பணிகளை கவனிக்க தொடங்கினான்.
அன்றொரு நாளில் மதுரனின் யோசனைப்படி இனியாவின் காதலை வெளிக்கொணரும் முயற்சியில் அவளிடம் பேச தொடங்கினாள் மதுரிகா.
“ஏன் டி.. அதான் நீ அறிவை லவ் பண்றல.. அவன்கிட்ட உன் லவ்வ சொல்ல வேண்டியது தானே.. எதுக்கு மூடி மறைச்சு தெரியாம சைட் அடிச்சுட்டு இருக்க” என்று கேட்க அவளோ,
“இல்ல மது.. எனக்கு அவன்மேல எவ்ளோ காதல் இருக்கோ.. அதே மாதிரி அவனுக்கும் என்மேல காதல் இருக்கணும்ல.. அது வராம எப்படி நான் என் காதலை சொல்ல” என்று கேட்க மதுவோ,
“ஹே லூசு காதல் இல்லாம தான்.. அன்பு அன்புன்னு அன்பா கூப்பிடுறானா.. இங்க பாரு டி.. இந்த காலத்துல எதையும் மறைச்சுட்டு உக்காந்துருக்க கூடாது.. அப்புறம் நமக்கு கிடைக்க வேண்டியதை வேற ஒருத்தவங்க பறிச்சுட்டு போய்டுவாங்க.. கிடைக்குதோ இல்லையோ நம்ம மனசுல உள்ளதை அவங்க கிட்ட சொல்லி அப்ப்ளிகேஷனைப் போட்டு வச்சுட்டா.. அவங்களுக்கு எப்போ அந்த மாதிரி எண்ணம் வருதோ அப்போ கன்சிடர் பண்ணி பார்ப்பாங்க..” என்று கூறிக்கொண்டிருக்க சரியாக அந்நேரம் தூரமாக நின்று கொண்டிருந்த அறிவிடம் ஒரு பெண் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள். உண்மையில் அப்பெண் ஒரு குறிப்பிட்ட வகுப்பிற்கு எவ்வாறு செல்ல வேண்டும் என்று வழி தான் கேட்டுக்கொண்டிருந்தாள். அதனை கவனித்த மதுவோ அதனை தனக்கு சாதகமாக்கி,
“ஹே இனியா அங்க பாரு.. ஒரு பொண்ணு அறிவு கிட்ட சிரிச்சு பேசிட்டு இருக்கா..” என்று கூறி காண்பிக்க அங்கே பார்த்த இனியாவின் மனதில்,
‘மது சொல்றது நிஜம் தானோ.. நாம லவ்வ சொல்றதுக்கு முன்னாடி வேற யாராச்சு முந்திகிட்டா என்ன செய்றது.. நம்ம ஆளு வேற அப்பாவியா இருக்கான்.. டக்குன்னு கவுந்துட்டா நான் என்ன செய்வேன்.. அவனுக்கு நம்ம மேல காதல் வருதோ இல்லையோ அதை அப்புறம் பார்த்துக்கலாம்.. முதல்ல நமக்கு இருக்குற லவ்வ அவன்கிட்ட கன்வே பண்ணிடுவோம்’ என்று நினைத்தவள் மதுவிடம்,
“நீ சொல்றதும் சரி தான் டி.. அவன் என் லவ்வ அக்செப்ட் பன்றானோ இல்லையோ.. முதல்ல நான் அவன்கிட்ட என் லவ்வ சொல்லிடுறேன்” என்று எழுந்து அறிவை நோக்கி செல்ல போக மதுவோ,
‘என்ன இவ.. இவ்ளோ ஈஸியா கவுந்துட்டா.. அயோ விட்டா இப்போவே போய் சொல்லிடுவா போலயே.. மதுரன் வேற அறிவு கிட்ட பேசுனானா என்னன்னு தெரியல.. இவளை நாளைக்கு சொல்ல சொல்லுவோம்.. அதுக்குள்ள மதுரன் அறிவை கன்வின்ஸ் பண்ணட்டும்’ என்று நினைத்தவள்,
“ஹே எங்க டி போற” என்று கேட்க அவளோ,
“அமுதுகிட்ட என் லவ்வ சொல்ல போறேன் டி” என்று வெட்கப்பட்டு கூற,
“கருமம்.. ஒன்னு அட்டு ஸ்லோவா இருக்க.. இல்லைனா ஜெட்டு ஸ்பீடா இருக்க.. இரு டி.. இப்போ வேணாம்.. நாளைக்கு நான் நீயும் அறிவும் தனியா மீட் பண்ற மாதிரி ஏதாச்சு ஏற்பாடு பண்றேன்.. அப்போ சொல்லு” என்று கூற இனியாவோ,
“என் செல்லக்குட்டி.. யாரு டி நீ.. எனக்காக இவ்ளோ விஷயம் பண்ற.. உம்மா” என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டவள்,
என் காதல் சொல்ல நேரம் இல்லை
உன் காதல் சொல்ல தேவை இல்லை
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை
உண்மை மறைத்தாலும் மறையாதடா
என்று பாடியபடி உற்சாகமாய் சென்றாள்.
“இவ என்ன அவ ஆளுக்கு கொடுக்க வேண்டியதை எனக்கு கொடுத்துட்டு போறா.. கருமம்” என்று சத்தமாக புலம்பியவள் பிறகு மதுரனிடம் திட்டத்தை கூற அவனைத் தேடினாள். அப்பொழுது மாறன், அறிவு மற்றும் மதுரன் மூவரும் கேன்டீனுக்கு தேநீர் குடிக்கலாம் என்று செல்ல அவர்கள் முன் சென்று,
“மிஸ் போர்க்யூப்பைன் மண்டை.. எதுக்கு எனக்கு டயலாக் தப்பு தப்பா எழுதி கொடுத்திருக்க” என்று கேட்க அவனோ,
“என்ன சொல்ற பண்டாரம்.. நான் தப்பா எழுதி கொடுத்தேனா.. எங்க காட்டு” என்றவன் மாறன் மற்றும் அறிவிடம்,
“டேய் நீங்க கேன்டீன் போங்க.. நான் வந்துடுறேன்” என்று கூறிவிட்டு மதுவுடன் வர,
“இதுங்களுக்கு வேற வேலை இல்ல” என்று புலம்பியபடி கேன்டீன் சென்றனர் மாறனும் அறிவும்.
“ஹே மது.. உங்கிட்ட தனியா பேசணும்.. அதனால தான் டயலாக் தப்பு அது இதுன்னு பொய் சொன்னேன்” என்று மதுரிகா கூற அவனோ,
“அடிப்பாவி.. நல்லாவே நடிக்குற நீயு” என்று கூற அவளோ,
“ரொம்ப முக்கியம்.. சரி சொல்றதை கேளு.. இனியா நாளைக்கு அறிவுகிட்ட லவ்வ சொல்லிடுவா” என்று கூற மதுரனோ,
“ஹே என்ன டி சொல்ற.. அதுக்குள்ள எப்படி டி அவ கிட்ட பேசி கன்வின்ஸ் பண்ண” என்று ஆச்சர்யமாய் கேட்க,
“இந்த மது ஒரு காரியத்துல இறங்கிட்டா அது முடியாம போனதா சரித்திரமே இல்ல” என்று வசனம் கூற அவனோ அவளை மேலிருந்து கீழ்வரை பார்த்தவன்,
“சரி என்ன நடந்துச்சுன்னு சொல்லு” என்று கூற அவளும் நடந்ததை விளக்கிவிட்டு,
“அவ்ளோ தான் என் வேலை முடிஞ்சுது.. இனிமே நீ அறிவை கன்வின்ஸ் பண்றது தான் மிச்சம்” என்று கூற மதுரனோ,
“சரி ஓகே.. நான் அவன்கிட்ட ஏதாச்சும் பேசி சம்மதிக்க வைக்குறேன்” என்று கூற மதுரிகாவின் முகம் திடீரென வாடியது.
“ஹே என்னாச்சு டி.. எதுக்கு திடிர்னு சோகமாயிட்ட” என்று கேட்க மதுரிகாவோ,
“இல்ல டா.. மாறன் என் மாமா பையன் அவன் காயப்படக் கூடாதுன்னு அறிவு இனியாவோட தனிப்பட்ட விஷயத்துல தலையிட்டு சுயநலமா பண்றோமே.. இது தப்பு இல்லையா” என்று கேட்க மதுரனோ,
“ஹே லூசு.. அறிவும் இனியாவும் ஏற்கனவே ஒருத்தருக்கொருத்தர் விரும்புறாங்க.. ஏற்கனவே விரும்புறவங்கள நாம அவங்களோட லவ்வ சொல்ல தான் வைக்குறோம்.. இதுல என்ன தப்பு இருக்கு.. சொல்லப்போனா ஹெல்ப் தான் பண்றோம்.. ஏன்னா இப்படியே விட்டா அதுங்க ரெண்டும் எத்தனை வருஷத்துக்கு சொல்லாம இழுக்கங்களோ தெரியாது..
அதே மாதிரி இனியா மேல தொடர்ந்து ஃபீலிங்ச வளர்க்குற மாறனோட மனசு காயப்படக் கூடாதுன்னும் தான இதை செய்யுறோம்.. ஒரு நல்லதுக்காக செய்யுற எந்த விஷயமும் தப்பில்ல.. நீ வீணா மனசை போட்டு கொழப்பிக்காத.. நான் அறிவு கிட்ட பேசி புரியவைக்குறேன்.. நாளைக்கு அறிவும் இனியாவும் ப்ரொபோஸ் பண்றாங்க.. அவ்ளோ தான்.. ஓகே பாய்” என்றவன் அவள் தலையை ஆதரகவாக வருடிவிட்டு செல்ல அவனது அனுசரணையான பேச்சிலும் அன்பான செயலிலும் தன்னையும் மீறி அவன்பால் சாயும் மனதை மதுரிகாவால் கட்டுப்படுத்த முடியவில்லை.
‘இப்படி ஒருத்தன நேர்ல வச்சுக்கிட்டு.. யாருன்னே தெரியாதவன தேடி என் மனசு என்னை சாவடிக்குது.. அப்படி ஒரு விஷயம் மட்டும் நடக்காம இருந்திருந்தா இந்நேரம்.. நானும் மதுரனை ஜாலியா லவ் பண்ணிருப்பேன்.. எல்லாம் என் நேரம்’ என்று நொந்து கொண்டாள். பிறகு அன்றைய பயிற்சிகள் முடிய அனைவரும் வீட்டிற்கு கிளம்பினர்.
செல்லும் வழியில் மதுரனோ,
“டேய் அறிவு..” என்று அழைக்க அவனோ,
“சொல்லு மது” என்றான்.
“நேத்து ஒரு கதை புக் படிச்சேன் டா.. செம்ம லவ் ஸ்டோரி தெரியுமா.. இப்படியும் கூடவா காதல் இருக்கும்னு பிரமிப்பா இருந்துச்சு” என்று கூற அதில் ஆர்வமான அறிவோ,
“பாரேன்.. சரி அப்போ அதை சொல்லு.. நான் தெரிஞ்சுகுறேன்” என்று கேட்க மதுரனோ கூற ஆரம்பித்தான்.
ரகசியம் – 35
“அது வந்து டா.. ஒருபொண்ணும்.. ஒரு பையனும் காதலிக்குறாங்க.. இவன் லவ் பண்றது அவளுக்கு தெரியாது.. ஆனா அவ லவ் பண்றது அவனுக்கு தெரியும்.. ஆனாலும் ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் வெளிப்படையா அவங்க லவ்வ சொல்லிக்கல.. அப்படி அவங்க சொல்லாமலே நாள் செல்ல ஒரு நாள் அந்த பையனுக்கு ஆக்சிடென்ட் ஆகி உயிருக்கு போராடிட்டு இருக்கான்.. டாக்டர் எல்லாம் வந்து செக் பண்ணி பார்த்துட்டு.. கொஞ்ச நேரம் தான் உயிர் இருக்கும்னு சொல்லிட்டாரு..
அப்படியே நேரம் ஆக ஆக அவனோட கண்டிஷன் மோசமாச்சு.. ஆனா ஏதோ ஒன்னு அவனோட உயிரைப் போக விடல.. மறுபடியும் டாக்டர் வந்து செக் பண்ணி பார்த்துட்டு.. ஏதோ ஒரு விஷயத்துக்காக அவன் அவனோட உயிரைக் கைல பிடிச்சுட்டு இருக்கான்னு சொல்ல அவன் ஃபிரண்ட்ஸ் எல்லாம் அவன் ஒரு பொண்ண உயிருக்குயிரா லவ் பண்றான்.. அதனாலயா கூட இருக்குமான்னு கேட்க அந்த டாக்டர் அப்படியா அப்போ அந்த பொண்ண உடனே கூட்டிட்டு வாங்க ஏதாச்சு மேஜிக் நடக்க வாய்ப்பு இருக்குன்னு சொல்ல அவன் ஃபிரண்ட்ஸும் அந்த பொண்ண கூட்டிட்டு வர அவளும் அழுதுகிட்டே வந்தா..
அவளை பார்த்ததும் கொஞ்சம் கொஞ்சமா அவனோட கண்டிஷன் இம்ப்ரூவ் ஆகிருச்சு.. அப்புறம் சில பல ட்ரீட்மெண்ட் எல்லாம் கொடுத்து ஒரு வழியா அவன் அபாய கட்டத்தைத் தாண்டிட்டான்னு சொல்லிட்டாங்க.. அப்போ தான் அவன் ஃபிரண்ட்சுக்கும் அந்த பொண்ணுக்கும் நிம்மதியே வந்துச்சு. அப்போ டாக்டர் என்ன சொன்னாங்க தெரியுமா.. அவன் அவனோட காதலை நெனச்சுட்டே அவன் உயிரை விட கூடாதுன்னு வைராக்கியமா இருந்துருக்கான்னு சொன்னாரு..
அப்புறம் அந்த பொண்ணு போய்ட்டு அவன்கிட்ட பேசும் போது அவன் சொல்லிருக்கான்.. நீயும் என்னை லவ் பண்றன்னு எனக்கு தெரியும்.. நீ என்கிட்ட லவ்வ சொல்லலைனா கூட என்னால கண்டுபிடிக்க முடியும்.. ஒருவேளை நான் செத்து போயிட்டா நீ ரொம்ப வருத்தப்பட்டுருப்ப.. அதனால என் உயிர் போக கூடாது போக கூடாதுன்னு நெனச்சுட்டே இருந்தேன்.. அதனால தான் உயிர் பொழச்சு வந்துருக்கேன்.. நானும் உன்ன லவ் பண்றேன் ஐ லவ் யூன்னு சொன்னான்” இவ்வாறு மதுரன் அந்த கதையை அறிவிடம் கூற அறிவோ,
“ச்ச செம லவ்வுல மச்சான்..” என்று பிரமிப்பாய் கூற மதுரனோ,
“இந்த கதைல இருந்து உனக்கு என்ன மச்சான் தெரியுது” என்று கேட்க அறிவோ,
“உண்மையா ஆத்மார்த்தமா லவ் பண்ணனும்னு தெரியுது” என்று கூற மதுரனோ,
“த்தூ.. உன் மூஞ்சி.. அது இல்ல டா.. அந்த பொண்ணு அவனை லவ் பண்றான்னு அந்த பையனுக்கு தெரிஞ்ச போய் தான அவன் உயிரை விட கூடாதுன்னு வைராக்யமா இருந்தான்.. ஒருவேளை தெரியாம இருந்தா செத்துருப்பான் தான.. அப்போ இதுல இருந்து என்ன தெரியுது.. நமக்கு ஒருத்தங்க மேல காதல் வந்தா அதுவும் அவங்களும் நம்மள விரும்புறாங்கன்னு தெரிஞ்சா உடனே சொல்லிரனும்.. இல்லனா பின்னாடி பல சிக்கலை உருவாக்கும்” என்று கூறி முடிக்க அறிவோ சிந்தித்தான்.
‘சம்மந்தமே இல்லாம திடிர்னு இப்படி ஒரு கதை நாம ஏன் தெரிஞ்சுக்கணும்.. ஒருவேளை நாம அன்பு கிட்ட உடனே காதலை சொல்லணும்னு கடவுள் நமக்கு மதுரன் மூலமா எச்சரிக்கை மணி கொடுக்குறாரோ.. எதுக்கு வம்பு அதான் அன்பும் நம்மள காதலிக்குறா தான.. லேட் பண்ணாம நாளைக்கே அவகிட்ட நம்ம லவ்வ சொல்லிடுவோம்’ என்று நினைக்க கண்ணாடி வழியே அறிவு யோசிப்பதைப் பார்த்த மதுரன்,
‘ஹான் நாம சொன்ன கதை வொர்கவுட் ஆகுது போல.. யோசிக்குறான் யோசிக்குறான்’ என்று நினைத்து சிரித்துக்கொண்டான். பிறகு அறிவோ,
“என்ன மச்சான்.. இப்படி ஒரு கதையை சொல்லி என்னை பயப்பட வச்சுட்டியே.. ஏதோ ஒரு காரணமா தான் கடவுள் என்னை இந்த கதையைக் கேட்க வச்சிருக்காரு.. நான் நாளைக்கே அன்புக்கிட்ட என் லவ்வ சொல்ல போறேன் டா” என்று கூற மதுரனோ,
“சூப்பர் மச்சான்.. இப்படி தான் இருக்கணும்.. நல்ல முடிவு டா.. நாளைக்கே இனியா கிட்ட லவ்வ சொல்ற அடுத்த நாள்ல இருந்து நீங்க ரெண்டு பேரும் லவ் பேர்ட்ஸா காலேஜ சுத்தி வரீங்க.. ஓகே” என்று கூறியவன்,
‘ஹப்பாடா.. ஒரு வழியா இவனை கன்வின்ஸ் பண்ணிட்டோம்’ என்று நினைத்து பெருமூச்சு விட்டான் மதுரன்.
நாளை அறிவும் இனியாவும் தங்கள் காதலைக் கூறிக் கொள்வார்களா..? காத்திருப்போம் விடியலுக்காக.
மறுநாள் விடியல் அன்பினியா மற்றும் அறிவமுதனுக்கு காதலைக் கூறப்போகும் தருணத்தின் காத்திருப்புடனும் மதுரிகா மற்ற மதுரனுக்கு தங்களது முயற்சி வெற்றி பெறுமா என்ற கேள்வியுடனும் விடிந்தது.
காலை சீக்கிரமாக கல்லூரிக்கு கிளம்பியா இனியா மதுரிகாவிற்கு அழைத்து காதலை எவ்வாறு அறிவிடம் வெளிப்படுத்துவது என்று யோசனைக் கூறும்படி கேட்க வெகு சீக்கிரமாகவே மதுவை அவளுடைய ஸ்கூட்டியில் அழைத்துக் கொண்டு கல்லூரி சென்றுவிட்டாள். இனியாவிற்கு ஏதோ பொருட்கள் வாங்க வேண்டியிருக்கிறது என்று மாறனிடம் பொய் கூறி மது இனியாவுடன் சென்றதால் அதன் பிறகு மெதுவாக கிளம்பி தனியாக கல்லூரி சென்று கொண்டிருந்தான் அவன்.
செல்லும் வழியில் மதுரன் மற்றும் அறிவு வண்டி பழுதானதால் சாலையில் நின்று கொண்டிருக்க அதனைக் கண்ட மாறன் அருகில் சென்று காரணங்கள் விசாரித்தான். வண்டி பழுதடைந்த காரணத்தைக் கூறிய மதுரன் அறிவிடம்,
“டேய் மச்சான்.. நீ மாறன் கூட காலேஜுக்கு போ.. இனியாகிட்ட எப்படி ப்ரொபோஸ் பண்ணலாம்னு யோசிச்சு அதுக்கான ஸ்டெப் எடு.. நான் சீக்கிரம் வந்துடுறேன்” என்று அவன் காதில் கூற அறிவு உற்சாகமாய் மாறனோடு கல்லூரிக்கு புறப்பட்டான். அறிவும் மாறனும் வருவதைக் கண்ட மதுரிகா,
‘இந்த போர்க்யூபைன் மண்டையன் எங்க போனான்.. ஐயோ பிளான் பண்ண மாதிரி எல்லா பக்காவா நடக்குமான்னு தெரியலையே’ என்று நினைத்து கொண்டிருந்தவள் அறிவிடம்,
“டேய் அறிவு.. மதுரன் எங்க டா.. இன்னைக்கு காலேஜ் வரலையா” என்று கேட்க மாறனோ நடந்ததைக் கூறினான். பிறகு சிறிது நேரத்தில் மதுரன் வகுப்புக்குள் வர அப்பொழுது தான் மதுரிகாவுக்கு மூச்சே வந்தது. பிறகு மதுரனிடம்,
‘எல்லாம் ஓகேவா’ என்று கண்களால் கேட்க அவனோ,
“பக்கா’ என்றபடி சாதாரணமாக கண்ணடிக்க அவனது செயலில் சிறிது தடுமாறினாள் பெண்ணவள். அவளின் தடுமாற்றத்தைக் கண்டவன் காரணம் தெரிந்தும் அவளிடமே,
“என்ன” என்று புருவம் உயர்த்திக் கேட்க அவளோ இடவலமாக தலையாட்டிவிட்டு திரும்பிக்கொண்டாள்.
‘கடவுளே இந்த ஜோடிய சேர்த்து வச்சுட்டு மதுரன் கிட்ட இருந்து விலகலாம்னு நான் யோசிச்சா.. அவன் பண்ற எல்லாம் இப்போ தான் என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது’ என்று மனதினுள் புலம்பினாள். பிறகு மதுரனோ அறிவைத் தனியாக அழைத்து கொண்டு மைதானத்திற்கு செல்ல மதுரிகாவோ மாறனிடம்,
“டேய் நாங்க ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்துடுறோம்” என்று கூறிவிட்டு இனியாவை அழைத்துக் கொண்டு மைதானத்திற்கு சென்றாள். மதுரனும் அறிவும் ஒருபுறம் நின்று பேசிக் கொண்டிருக்க இனியாவும் மதுரிகாவும் ஒருபுறம் பேசிக்கொண்டிருந்தனர்.
மாறன் தனியே அமர்ந்திருப்பதைக் கண்ட எய்ம்ஸ் அணியின் ரீனா.. மாதவ் மற்றும் கிருஷ்ணாவிடம்,
“டேய் மாதவ்.. நீ பண்ண பிளானை எப்போ எக்ஸெக்யூட் பண்ணுவியோ தெரியல.. ஆனா அதுக்கு முன்னாடி நான் ஒரு பிளான் போட்டுட்டேன்.. அந்த பாண்டவாஸ் க்ரூப் இன்னையோட ரெண்டாவோ இல்ல மூணாவோ பிரியப் போகுது.. வில் சீ” என்று வன்மமாய் சிரித்தபடி கூறிவிட்டு தனியே அமர்ந்திருந்த மாறனின் எதிரில் சென்று அமர்ந்தாள்.
“ஹாய் மாறன்” என்று புன்னகை முகமாக சென்று அமர மாறனோ அவளை சந்தேகமாக நோக்கிவிட்டு,
“நீ எதுக்கு இப்போ இங்க வந்து உக்காந்துருக்க” என்று கேட்க அவளோ,
“உன்ன பார்க்க பாவமா இருந்துச்சு.. அதான் அட்வைஸ் பண்ணலாம்னு வந்தேன்” என்று கூற அவனோ,
“பாவமா இருந்துச்சா.. ஏன்.. நீ எதுக்கு எனக்கு அட்வைஸ் பண்ணனும்.. அதுக்கு என் ஃபிரண்ட்ஸ் இருக்காங்க..” என்றவன் எழுந்து செல்ல போக,
“உன் லவ் மேட்டர் பத்தி பேச தான் நான் வந்துருக்கேன்.. வேணம்னா நீ தாராளமா போகலாம்” என்று கூற மாறனின் கால்கள் தானாக நின்றது. மீண்டும் தன் இடத்தில் வந்து அமர்ந்த மாறன்,
“என் லவ் மேட்டரா.. என்ன உளறுற..” என்று கேட்டவன் மனதினில்,
‘நான் இனியாவை லவ் பண்றது இவளுக்கு எப்படி தெரியும்’ என்று நினைத்துவிட்டு அவளைக் குழப்பமாக நோக்கி ரீனாவோ,
“என்ன சார்.. வேகமா போனீங்க.. இப்போ யூ டர்ன் போட்டுட்ட” என்று நக்கலாக கேட்க மாறனோ,
“உனக்கு இப்போ என்ன வேணும்.. என்ன சொல்லணுமோ சீக்கிரம் சொல்லு.. என் லவ் மேட்டர் உனக்கு எப்படி தெரியும்” என்று எரிச்சலாக கேட்க அவளோ ஒரு காகிதத்தை எடுத்து அவனிடம் காண்பிக்க அதனைப் பார்த்தவனுக்கு புரிந்தது.
இரண்டு நாட்களுக்கு முன்பு கையில் கிடைத்த காகிதத்தில் இளமாறன் இனியா என்று எழுதியவன் அதை சுற்றி இதயம் வரைந்து அதைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான். பிறகு இனியா அங்கு வரவும் சட்டென அதனைக் கசக்கி குப்பைத்தொட்டியில் வீசிவிட்டான். நடப்பதை கவனித்த ரீனாவோ குப்பைத்தொட்டியில் இருந்து அந்த காகிதத்தை எடுத்து பார்க்க மாறனின் காதலைத் தெரிந்துகொண்டாள். காகிதத்தைப் பார்த்த மாறன்,
“ஆமா நான் இனியாவை லவ் பண்றேன்.. இப்போ அதுல உனக்கு என்ன பிரச்சனை” என்று கேட்க அவளோ அவன் கூற்றைக் கேட்டு சிரித்தபடி,
“நீ அவளை லவ் பண்றதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல.. ஆனா உன் லவ்வுல தான் இப்போ பெரிய பிரச்சனை” என்று கூறினாள். குழப்பமாக அவளை நோக்கிய மாறன்,
“ஹே என்ன பேசுற நீ.. என் லவ்வுல பிரச்சனையா..” என்று கேட்க,
“அதாவது நீ போட்டிக்காக நடிக்க எந்த கேரக்டர் சூஸ் பண்ணிருக்கியோ அது வெறும் கேரக்டர் இல்ல பாஸ்.. உன்னோட நிஜ வாழ்க்கையே அது தான்.. பாவம் நீ” என்று போலியாய் பரிதாபப்பட அவள் கூற்றில் மேலும் மேலும் குழம்பிய மாறன்,
“இங்க பாரு.. தேவையில்லாம எதையும் பேசாம எதுவா இருந்தாலும் தெளிவா சொல்லு” என்று கூற அதற்குமேல் இழுக்காமல் நேரடியாக விஷயத்தைக் கூற ஆரம்பித்தாள் ரீனா.
“அதாவது நீ இனியாவை லவ் பண்ற.. ஆனா இனியா அறிவை ரொம்ப ரொம்ப லவ் பண்றா.. இதுல பியூட்டி என்னனா அறிவும் இனியாவை லவ் பன்றான்.. இன்னொரு பியூட்டி என்னன்னா ஒரு ஜோடிய சேர்த்துவைக்க இன்னொரு ஜோடி ஹெல்ப் பண்ணுது” என்று கூறியவள் மாறனுக்காக தான் இதை செய்கிறார்கள் என்பதை மட்டும் தவிர்த்து அறிவு மற்றும் இனியாவைக் காதலைக் கூற வைக்க போவதையும் அதனை மாறனைப் பார்க்க வைப்பதாய் மதுரன் மற்றும் மதுரிகா தீட்டிய திட்டத்தையும் கூறினாள்.
