Loading

அத்தியாயம் – 28

விளையாட்டு மைதானத்தில் நடந்த அந்த நிகழ்விற்குப் பிறகு, கல்லூரி வளாகம் ஒரு அமைதியான புயலுக்குப் பின்னான கடலைப் போல இருந்தது. மேற்பரப்பில் அமைதி நிலவினாலும், அடி ஆழத்தில் எண்ணற்ற கிசுகிசுக்கள் சுழன்று கொண்டிருந்தன. 

ஆரவ் மற்றும் அமுதினியின் காதல் கதை, இப்போது வெறும் ரகசியம் அல்ல; அது ஒரு திறந்த புத்தகம். ஒவ்வொருவரும் அந்தப் புத்தகத்தைத் தங்களுக்குத் தோன்றியபடி படித்து, புதிய அத்தியாயங்களை கற்பனையில் எழுதிக்கொண்டிருந்தனர். 

அமுதினி நூலகத்திற்குச் சென்றால், சில கண்கள் அவளை ஆராய்ந்தன. ஆரவ் வகுப்பறைக்குச் சென்றால், மாணவர்களின் பார்வையில் ஒரு புதிய அர்த்தம் தெரிந்தது. அவர்கள் இருவரும் கண்ணுக்குத் தெரியாத ஒரு கண்ணாடி கூண்டிற்குள் அடைக்கப்பட்டது போல உணர்ந்தனர்.

பிப்ரவரி மாதம் மிக அழகாய் பிறந்தது. வசந்தத்தின் மெல்லிய தென்றல் காதலர் தினத்தைக் கையோடு அழைத்து வந்திருந்தது. ஆனால், ஆரவுக்கும் அமுதினிக்கும் சூழ்நிலை அனலாகக் கொதித்தது.

ஒருநாள், துறைத்தலைவர் மீனாட்சியிடமிருந்து இருவருக்கும் அதிகாரப்பூர்வ அழைப்பு வந்தது. ‘விசாரணை’ ஆரம்பம் என்று இருவருக்கும் புரிந்தது. 

மீனாட்சியின் அறைக்குள் அவர்கள் நுழைந்தபோது, அங்கே அவரும், பேராசிரியர் சரண்யாவும் அமர்ந்திருந்தனர். 

அறையின் அமைதி, வரப்போகும் புயலின் அறிகுறியாக இருந்தது.

துறைத்தலைவர் மீனாட்சி, தன் மூக்குக் கண்ணாடியை சரிசெய்துகொண்டு, தன் கம்பீரமான குரலில் பேச ஆரம்பித்தார். 

“ஆரவ்… அமுதினி… நான் நேரடியா விஷயத்துக்கு வர்றேன்… கேம்பஸ் முழுக்க உங்களைப் பத்திதான் பேச்சு… காலேஜ்ல ‘ஹாட் டாப்பிக்’ நீங்கதான்… என்னதான் நடக்குது இங்க?”

ஆரவ் ஒரு அடி முன்னே வந்தான். அவன் குரலில் பதற்றமில்லை, உறுதியும் நம்பிக்கையும் அதிகமிருந்தது.

“மேடம், நான் உண்மையைச் சொல்லவே விரும்பறேன்… ஆமாம், நானும் அமுதினியும் ஒருத்தரை ஒருத்தர் நேசிக்கிறோம்… சமீபமா தான், நாங்க லவ் பண்ண ஆரம்பிச்சு இருக்கோம்… அவளோட படிப்பு முடிஞ்சதும் நானும் அவளும் கல்யாணம் பண்ணிக்க போறோம்…”

அமுதினி அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள். ‘ஐயோ, இவர் என்ன இப்படி எடுத்தவுடனே உண்மையை உடைக்கிறார்!’ என்று அவள் இதயம் படபடத்தது.

“ஆனா,” ஆரவ் தொடர்ந்தான்.

“நான் என் ஆசிரியர் தர்மத்தை எப்பவும் மீறியதில்ல… அவ கஷ்டப்பட்டு தான் எல்லா ரிசர்ச் பேப்பரிலும் கம்ப்ளீட் பண்ணா… அவளோட ஒவ்வொரு புராஜெக்ட்டும், ஒவ்வொரு தேர்வும், வெளிப்படைத் தன்மையோட மதிப்பிடப்பட்டிருக்கு… வேணும்னா, நீங்க எல்லா ரெக்கார்டையும் திரும்ப செக் பண்ணலாம்… எங்க காதலுக்கும், அவளோட திறமைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை மேடம்…” என்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சொன்னான்.

மீனாட்சி இப்போது அமுதினியைப் பார்த்து, “அமுதினி, நீ என்ன சொல்ல போற?”

அமுதினி ஒரு ஆழமான மூச்சை இழுத்துவிட்டாள். அவள் இதயம் படபடத்தாலும், ஆரவ் அருகில் நிற்கிறான் என்ற தைரியத்தில், அவள் குரல் ஒலித்தது.

“மேடம், அவங்க சொல்றது எல்லாம் உண்மைதான்… அது எங்களோட தனிப்பட்ட விருப்பம்… அதேசமயம், ஆரவ் சார் என் ஆசிரியர்… நான் அவரை மதிக்கிறேன்… என்னோட காதலுக்கும் என்னோட படிப்புக்கும் நான் முடிச்சுப் போட நினைக்கல… நான் வாங்கின ஒவ்வொரு மார்க்கும், என் உழைப்புக்குக் கிடைச்சது… என் மூளைக்குக் கிடைச்சது… 

நாங்க ரெண்டு பேரும் காதலிக்கிறோம்ங்கிறதுக்காக, நான் ஒரு திறமையில்லாத மாணவின்னு யாரும் முத்திரை குத்திட முடியாது… இன்னும் மூணே மாசம்தான்… என் படிப்பு முடிஞ்சதும், நாங்க எங்க காதலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டுப் போகலாம்னு முடிவு பண்ணியிருக்கோம்… அதுவரைக்கும், நாங்க எந்த எல்லையையும் மீற மாட்டோம்னு உறுதியா சொல்றேன் மேடம்…” என்று தெளிவாக பேசி விட்டாள்.

அவள் பேசிய விதமும், அவளது கண்களில் தெரிந்த நேர்மையும் மீனாட்சியை யோசிக்க வைத்தன.

பேராசிரியர் சரண்யா மெல்லிய புன்னகையுடன், “மேடம், நான் இவங்க ரெண்டு பேரையும் கவனிச்சிட்டுதான் வர்றேன்… இவங்க காதல், அமுதினியின் படிப்பை எந்த விதத்திலேயும் பாதிக்கல… சொல்லப்போனா, அமுதினி முன்னை விட இப்போ நல்லா படிக்கிறா… ஆரவும் முன்ன மாதிரி தனிமையில இல்லாம எல்லாரோடவும் பழகி, ரொம்ப சந்தோஷமா இருக்கார்… இவங்க காதலால நல்லது நடந்தா, அதை நாம ஏன் தடுக்கணும்?” என்றார்.

“சரி, இந்த விஷயம் இவ்வளவு பெருசான பின்னாடியும் பயமில்லாம தெளிவா பேசறீங்க… உங்க ரெண்டு பேர் கண்ணுலயும் ஒரு நேர்மை தெரியுது… அதனால, ஒருசில கண்டிஷனோட நான் இதை அனுமதிக்கிறேன்…”

“என்ன கண்டிஷன் மேடம்?” இருவரும் ஒரே குரலில் கேட்டனர்.

“அமுதினியோட ஆய்வறிக்கையை ஆரவ் திருத்தக் கூடாது,.. வேறொரு வெளிப் பேராசிரியர் அதை மதிப்பீடு செய்வாங்க… ரெண்டாவது, கேம்பஸ்ல தேவையில்லாம ஜோடியா சுத்துறது, கேன்டீன்ல ஒரே டேபிள்ல உட்கார்ந்து சாப்பிடுறது, லைப்ரரியில கண்ணால பேசிக்கிறது மாதிரியான எந்த ‘லவ் பேர்ட்ஸ்’ வேலையும் பார்க்கக் கூடாது… மூணாவது, படிப்பு முடியுற வரைக்கும், நீங்க வெறும் ஆசிரியர்-மாணவி மட்டும்தான்… இதுக்கு சம்மதமா?”

“சம்மதம் மேடம்,” என்று இருவரும் ஒரே குரலில் சொன்னார்கள்.

“சரி, நீங்கள் போகலாம்… பட், ஞாபகம் இருக்கட்டும்… எப்பவும் நான் உங்களை வாட்ச் பண்ணிட்டே இருப்பேன்… ஆல் தி பெஸ்ட்… ஃபார் யுவர் எக்ஸாம்ஸ் அண்ட் யுவர் ஃபியூச்சர்…” என்று அவர் லேசான கண்டிப்புடன் சொன்னார் மீனாட்சி.

அறையை விட்டு வெளியே வந்ததும், இருவரும் நிம்மதியில் பெருமூச்சு விட்டனர். 

சரண்யா சிரித்துக்கொண்டே, “நல்லவேளை தப்பிச்சீட்டீங்க! மீனாட்சி மேடம் பார்க்கத்தான் அப்படி… ஆனா, அவங்களும் ஒரு காலத்துல ஜாலியா இருந்திருப்பாங்க இல்லையா? சரி இனிமே பார்த்து நடந்துக்கோங்க..” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

ஆள் அரவமற்ற அந்த நடைபாதையில், “அமுதினி, நீ உள்ளே பேசுனப்போ, நான் பிரமிச்சுப் போயிட்டேன்… அவ்வளவு தைரியம்! அவ்வளவு தெளிவு! எனக்கு ரொம்பப் பெருமையா இருந்துச்சு…” என்றான் ஆரவ், அவன் குரலில் காதல் வழிந்தது.

“நீங்க என் பக்கத்துல இருக்குற தைரியத்துலதான் சார் நான் பேசுனேன்… நீங்க இல்லாம, நான் உடைஞ்சு போயிருப்பேன்…” அவள் அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

அவர்கள் கண்களாலேயே கவிதை பேசிக்கொண்டார்கள். வார்த்தைகள் தேவையில்லாத ஒரு உரையாடல் அது. இனி வரும் நாட்கள் இன்னும் கடினமாக இருக்கும் என்று அவர்களுக்குத் தெரியும். ஆனால், இந்தக் காதலின் அக்னிப் பரீட்சையில் தாங்கள் நிச்சயம் வெல்வோம் என்ற நம்பிக்கை, அவர்கள் இருவரின் இதயத்திலும் ஆழமாக வேரூன்றியது.

********

அடுத்த சில வாரங்கள், அவர்கள் ஒரு நுனிக்கயிற்றில் நடப்பது போல வாழ்ந்தார்கள். கல்லூரியில் அவர்கள் அந்நியர்களைப் போல நடந்துகொண்டார்கள். அவசரமான பார்வைகள் இல்லை, ரகசியப் புன்னகைகள் இல்லை, தற்செயலான தீண்டல்கள் இல்லை.

ஆனால், இரவுகள் அவர்களுக்குச் சொந்தமாக இருந்தன. தொலைபேசி அழைப்புகளும், காணொளி அழைப்புகளுமே அவர்களது காதல் சோலையாக மாறின. பகல் முழுவதும் சந்திக்க முடியாத ஏக்கத்தை, இரவு முழுவதும் பேசித் தீர்த்தார்கள். 

ஒரு வெள்ளிக்கிழமை இரவு, வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தார்கள். புத்தகங்கள் சூழ, கலைந்த தலையுடன், சோர்வான முகத்துடன் இருந்தாள் அமுதினி.

“என்னாச்சு அமுதினி? உன் முகமே சரியில்ல… உடம்புக்கு முடியலையா?” ஆரவ் தவிப்புடன் கேட்க,

“சார், எனக்கு சில சமயம் மூச்சு முட்டுற மாதிரி இருக்கு… தீசிஸ், பரீட்சை, ப்ராஜெக்ட்… எல்லாத்தையும் தாண்டி, உங்களை இப்படிப் பார்க்க முடியாம, பேச முடியாம இருக்கிறதுதான் பெரிய வலியா இருக்கு…” என்று கவலையுடன் சொன்னாள் அமுதினி.

அவனோ பரிதாபமாக பார்த்து, “எனக்கு புரியுது அமுதினி… இந்த கஷ்டமெல்லாம் இன்னும் கொஞ்சநாள் தான்… உன் எக்ஸாம்ஸ் முடிஞ்சு, பட்டமளிப்பு விழா முடிஞ்சதும், நீ என்னோட அமுதினியா மட்டும், என் கூடவே இருப்ப, அப்போ உன்னையும் என்னையும் யாராலும் பிரிக்க முடியாது…”

“நீங்க இல்லைன்னா நான் என்ன ஆகியிருப்பேன்னு தெரியல சார்…”

“ஏய், என்ன பேச்சு இது? நான் இல்லைன்னாலும், நீ இதை சாதிச்சிருப்ப… நீ ஒரு ஹீரோயின். நான் உன் கதைல வர்ற ஒரு சின்ன சைடு கேரக்டர் அவ்வளவுதான்…” என்று விளையாட்டாக சொன்னான் ஆரவ்.

அமுதினி கண்ணீருடன் சிரித்து, “என்ன சைடு கேரக்டரா? நீங்கதான் சார் என் கதையோட ஆரம்பமும் முடிவும்… என்னோட எல்லாமும் நீங்கதான்…” மனதார சொன்னாள்.

*********

ஏப்ரல் மாதம், தேர்வுகள் வந்தன. அமுதினி புத்தகங்களுக்குள் மூழ்கிப் போனாள். அவள் இரவும் பகலும் படித்தாள். ஆரவ் அவளுக்குத் தொலைவிலிருந்தே தன் செய்திகள் மூலம் தைரியமூட்டினான். 

தேர்வுகள் எல்லாம் சிறப்பாய் முடிந்தன. 

அடுத்து, ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு. வெளித் தேர்வாளர், அமுதினியின் ஆய்வறிக்கையை மதிப்பிட்டு, ‘மிகச் சிறப்பு’ என்ற தரத்தை வழங்கியிருந்தார். அவள் ஆனந்தத்தின் உச்சிக்கே சென்றாள்.

அவள் உடனே ஆரவுக்குச் செய்தி அனுப்பினாள். 

“சார்! தீசிஸ் அப்ரூவ் ஆகிடுச்சு! எக்ஸலண்ட் கிரேடு! நான் ஜெயிச்சுட்டேன்! நாம ஜெயிச்சுட்டோம்!”

“நீ ஜெயிக்கப் பிறந்தவ அமுதினி… இது வெறும் ஆரம்பம்தான்… வாழ்த்துகள் அமுதினி!” என்று ஆரவும் பதில் அனுப்பினான்.

********

மாதங்கள் கடந்தன…

ஜூலை மாத நடுவில், பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 10 என்று அறிவிக்கப்பட்டது. 

இன்னும் ஒரே மாதம்!

இன்னும் சரியாக ஒரு மாதம்தான். அமுதினிக்கு ஒரே நேரத்தில் சந்தோஷமாகவும், பதற்றமாகவும் இருந்தது. பட்டமளிப்பு விழா முடிந்ததும், அவள் ஆரவுடன் எந்த ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக இருக்கலாம். 

ஆனால், அதன் பிறகு? அவள் எதிர்காலம்? அவர்கள் உறவின் எதிர்காலம்? என்று கேள்விகள் அவளுக்குள் இருந்தது!

ஒரு வார இறுதியில், அவர்கள் யாருக்கும் தெரியாமல், ஊருக்கு வெளியே இருந்த ஒரு சிறிய ஓட்டலில் சந்தித்தார்கள்.

“சார், படிப்பு முடிஞ்சதும் என்ன பண்ணலாம்?” என்று அமுதினி கேட்க,

ஆரவ் அவள் கைகளை மென்மையாகப் பற்றிக்கொண்டு, “நாம சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கலாம் அமுதினி… இதுக்கு மேலேயும் உன்ன பிரிஞ்சு இருக்க முடியாது…” என்றான் காதலுடன்!

அவளும் சந்தோஷமும் படபடப்பும் கலந்து, “சார்… உங்க… உங்க வீட்டில எல்லாரும் என்னை ஏத்துப்பாங்களா சார்… ஏன்னா, எனக்குன்னு உங்களை தவிர வேற யாரும் இல்ல…” என்றாள் கண்ணீருடன்!

அதைக்கேட்டு ஆரவின் முகம் மாற, தன்னை சமாளித்துக் கொண்டு, “என் வீட்டில இருக்க எல்லாருக்குமே உன்னை ரொம்ப ரொம்ப பிடிக்கும் அமுதினி…” என்க,

“நிஜமாவா?”

“ம்ம்… நிஜமா…”

“எப்ப என்னை கூட்டிட்டு போவீங்க?”

“சீக்கிரமே… ஆனா, உனக்குத்தான் என் வீட்டை, என் வீட்டு ஆளுங்களை பிடிக்குமான்னு தெரியல…” என்று எங்கோ பார்த்து சொன்னான் ஆரவ்.

“எனக்கு கண்டிப்பா பிடிக்கும் சார்… உங்களை எவ்வளோ பிடிக்குமோ, அவங்களையும் அவ்வளோ பிடிக்கும்…” என்று புன்னகையுடன் சொல்லி எதையோ யோசித்தாள் அமுதினி.

“என்ன யோசனை?”

“சார், என் கேரியர் பத்தி யோசிச்சிட்டு இருக்கேன்… நான் பிஎச்.டி பண்ணணுமா, இல்லை வேலைக்குப் போகணுமான்னு ஒரே குழப்பமா இருக்கு…”

ஆரவ் அவள் கையை, மேசைக்குக் கீழே மெதுவாகப் பற்றிக்கொண்டு, “நீ என்ன பண்ண விரும்புற அமுதினி? உன் மனசுல என்ன இருக்கு?”

“எனக்கு பிஎச்.டி பண்ணணும்னு ஆசை சார்… ட்ராமா ஸ்பெஷலிஸ்ட்-ஆ‌ தொடரணும்னு விரும்புறேன்… ஆனா, இதே கல்லூரியிலயா, இல்லை வேற எங்காவதான்னு தான் தெரியல…”

“நீ எங்க பிஎச்.டி பண்ணினாலும், நான் உன்னை ஆதரிப்பேன்… நீ இங்கேயே தொடர விரும்பினா, நாம சக ஊழியர்களா இருப்போம்… ஒருத்தருக்கொருத்தர் சண்டை போட்டுக்கிட்டே வேலை செய்யலாம்… நீ வெளிநாட்டுக்குப் போகணும்னு ஆசைப்பட்டா, நாம லாங் டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப்பை முயற்சி பண்ணலாம்… இல்லையா, நான் என் வேலையை அங்கே மாத்திக்க ஏதாவது வழி இருக்கான்னு பார்ப்பேன்… மொத்தத்துல, நாம எங்க இருந்தாலும், ஒண்ணாதான் இருப்போம்…”

அமுதினி கண்களில் நீர் துளிர்த்தது. “எனக்காக உங்க கேரியரை நீங்க காம்ப்ரமைஸ் பண்ணிக்க நான் விரும்பல சார்…”

“லூசா நீ? உன்கூட இருக்கிறது எனக்குக் காம்ப்ரமைஸ் இல்ல… அது என் சாய்ஸ்! என் முன்னுரிமை! நீ என் வாழ்க்கைத் துணை… நாம ரெண்டு பேரும் சேர்ந்து, எல்லாத்தையும் திட்டமிடலாம்…” என்று செல்லமாக திட்டினான் ஆரவ்.

அவள் நிம்மதியாகப் புன்னகைத்து, “சரி சார்… நாம ரெண்டு பேருமா சேர்ந்தே எதிர்காலத்தை திட்டமிடலாம்…” என்றாள் அமுதினி.

அவர்கள் கைகளை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு, தங்கள் எதிர்காலத்தைப் பற்றிய வண்ணமயமான கனவுகளைப் பேசத் தொடங்கினார்கள்.

********

ஆகஸ்ட் 9, பட்டமளிப்பு விழாவுக்கு முந்தைய நாள். 

அமுதினியின் வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறந்தன. நாளை அவள் முதுகலைப் பட்டதாரி. உற்சாகமும், பதற்றமும் ஒருசேர இருந்தது. நாளை, அவள் வாழ்க்கை மாறப்போகிறது.

நாளை விடியும் பொழுது, ஒரு புதிய தொடக்கத்திற்கான விடியல். அவர்களது காத்திருப்பு முடிவுக்கு வருகிறது. அவர்களது காதல் காவியத்தின் அடுத்த அத்தியாயம் தொடங்கப் போகிறது!

********

Click on a star to rate it!

Rating 4.3 / 5. Vote count: 27

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
15
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்