Loading

 

கனமான வெள்ளை நிற திரைச்சீலைகள் மெல்ல விலக வெளிச்சம் கண்ணில் பட்டு கண் திறந்தாள் அதிரூபிணி.

“குட் மார்னிங் மேடம்..” என்று முன்னால் நின்று புன்னகைத்தது அவளது அசிஸ்டன்ட்.

சலிப்போடு புரண்டு படுத்தவள் சோம்பல் முறித்தாள்.

“பிரேக் ஃபாஸ்ட் ரெடி.. நீங்க ஓகே சொன்னா மேக் அப் ஆர்டிஸ்ட வர சொல்லுறேன்” என்று அசிஸ்டன்ட் இனிமையான குரலில் பேச “மணி என்ன?” என்று கேட்டாள்.

“பத்து மேடம்”

“பணிரெண்டுக்கு மேல வரச்சொல்லு போதும்”

“ஓகே மேடம். உங்களுக்கு அவுட் ஃபிட் வந்துடுச்சு.. எது வேணும்னு செலக்ட் பண்ணுங்க” என்றதும் உடனே எழுந்து அமர்ந்தாள்.

“ஹேய் ஹேர்ள்.. நல்லா தூங்குனியா?” என்று சந்தோசமாக கேட்டுக் கொண்டு வந்தார் அவளுடைய மேனேஜர்.

அவளுடைய சித்தியும் அவர் தான்.

“எஸ் சித்தி.. பட் இன்னும் டயர்ட் போகல..”

“இந்த புரோகிராமுக்கு அப்புறம் உனக்கு ஒரு வாரம் லீவ் தர்ரேன். ஓகே?”

“இப்படி தான் சொல்லுவீங்க.. திடீர்னு வந்து இது நல்ல பிராஜெக்ட்னு நீட்டுவீங்க” என்று சலித்துக் கொண்டாள்.

“இந்த தடவ கண்டிப்பா லீவ்னா லீவ் தான்.. ப்ராமிஸ்”

இது போன்ற சத்தியங்களை எல்லாம் பல முறை கேட்டு விட்டதால் அவள் அலட்டிக் கொள்ளவில்லை.

“நீ ஃப்ரஸ்ஸாகி சாப்பிட்டு கூப்பிடு.. மேக் அப் ஆர்டிஸ்ட் வந்துடுவாங்க. நான் போய் சிலர பார்க்கனும்”

அதிரூபிணி கையால் “போ போ” என சைகை செய்து வைத்தாள்.

அசிஸ்டன்ட்டும் மேனேஜரும் வெளியேறி விட பெருமூச்சு விட்டு திரும்பிப் பார்த்தாள்.

கண்ணாடி வழியாக வானம் பளிச்சென தெரிந்தது. அந்த ஹோட்டலில் மேல் தளத்தில் இருக்கிறாள்.

மெத்தையை விட்டு இறங்கி கண்ணாடியின் அருகே சென்றாள். உயர்ந்த கட்டிடங்கள் மட்டுமே தெரிய தரை தெரியவில்லை.

அந்த கட்டிடங்களை போலவே அவளும் இப்போது உட்சத்தில் தான் இருக்கிறாள்.

இந்த ஐந்து வருடத்தில் அவள் சாதித்தது எத்தனையோ! ஆனால் அனைத்தையும் விட அவளுக்கு அவளது காதலன் விஷால் மேல் அதிக பாசம் உண்டு.

உடனே திரும்பி கைபேசியை தேடினாள். மெத்தையில் கிடக்க உடனே மெத்தையில் விழுந்து அதை எடுத்தவள் திறந்து பார்த்தாள்.

விஷாலிடம் இருந்து செய்திகள் வந்திருந்தது. அவளது இன்றைய ஃபோட்டோ சூட்டுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தான்.

முகத்தில் சந்தோசம் பளிச்சிட அவனுக்கு பதில் அனுப்பினாள். சில நொடிகள் வரை அவனது பதிலுக்காக காத்திருந்தாள். வரவில்லை என்றதும் தூக்கி போட்டு விட்டு எழுந்து கொண்டாள்.

விரிந்து கிடந்த கூந்தலை கட்டிக் கொண்டு நேராக குளியலறைக்குள் நுழைந்தாள்.

நேரம் போவது தெரியாமல் குளித்து விட்டு வெளியே வர கைபேசியில் செய்தி வந்து விழுந்தது.

துள்ளிக் கொண்டு ஓடி எடுக்க அதில் விஷாலின் பெயருக்கு பதிலாக அசிஸ்டன்ட் பெயர் வந்திருந்தது.

“இவன் எங்க போனான்?” என்று சலிப்பாக உதட்டை சுழித்து விட்டு அவனை அழைத்து விட்டாள்.

சில நொடிகளுக்குப் பிறகு அழைப்பை ஏற்றான் விஷால்.

“பேபி..”

“பேப்.. நான் ஒரு முக்கியமான மீட்டிங்ல இருக்கேன்.. முடிச்சுட்டு கூப்பிடுறேன் ப்ளீஸ்” என்று கெஞ்ச அவள் ஒன்றும் சொல்லாமல் வைத்து விட்டாள்.

அசிஸ்டன்ட் செய்தியை படித்து விட்டு அவளை அழைத்தவள் “நான் ரெடி.. வந்துடுங்க” என்றாள்.

பத்து நிமிடத்தில் அவளுக்கான அனைத்தும் அந்த அறையில் வந்து நிறைந்தது.

உடைகளை மொத்தமாக வைத்து அந்த கம்பியை தள்ளிக் கொண்டு வந்தனர். மேக் அப் போட்டு விட மூன்று பெண்கள் வந்தனர். அவளுக்கான உணவும் வந்தது.

அதிரூபிணி அமைதியாக அமர்ந்து சாலட்டை உண்ண மற்றவர்கள் தங்களது வேலையை கவனித்தனர்.

அதிரூபிணி புகழ்பெற்ற மாடல்கள் பட்டியலில் இடம்பிடித்து ஒரு வருடம் ஆகிறது. சீக்கிரமே வளர்ந்து கொண்டிருக்கிறாள்.

அவளுடைய தாய் தந்தை எல்லாம் எதோ ஒரு கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருந்தனர்.

அவளுடைய சித்தி மெலினா மாடல் உலகில் இருந்தவர். பெயர் சொல்லும் அளவு பெரிய அளவில் அவர் வளரவில்லை. ஆனால் அக்கா மகளுக்கு மாடல் ஆசை வந்த போது அவர் உடனே ஆதரவு தந்தார்.

பெற்றோர்களிடம் கெஞ்சி சம்மதம் வாங்கிக் கொண்டு மெலினாவுடன் புறப்பட்டாள்.

இரண்டு வருடத்தில் எதையாவது சாதிக்கவில்லை என்றால் உடனே திரும்பி விட வேண்டும். மெலினாவை போல அவளும் வாழ்வை தொலைக்க அனுமதிக்க முடியாது என்று அவளது தாய் சொன்னதை வேத வாக்காக கொண்டு வேலை தேட ஆரம்பித்தாள்.

சில பல கசப்பான சம்பவங்களுக்கு பிறகு அவளது கனவு நிறைவேறியது. கடந்த ஐந்து வருடங்களாக அவளது வாழ்வு அவள் நினைத்தது போலவே மாறிக் கொண்டிருந்தது.

எத்தனையோ ஃபோட்டோ சூட்களை இதுவரை பார்த்து விட்டாள். ஆனால் இன்றும் முதல் முறையாக ஃபோட்டோ சூட் போகும் போது இருந்த பயமும் பதட்டமும் அவளிடம் உண்டு.

இப்போதெல்லாம் காட்டிக் கொள்வதில்லை அவ்வளவு தான். ஆனால் இல்லைவே இல்லை என்று மறுக்க மாட்டாள்.

மெலினா இன்னும் வரவில்லை. சிகையலங்காரம், முக அலங்காரம், நக அலங்காரம் என்று எல்லாமே முடிந்தது.

அவளது முதல் உடையை அணிந்த பிறகு கண்ணாடியில் பார்த்த போது திருப்தியாக இருந்தது.

மற்றவர்கள் வேலையை முடித்து கிளம்பத் தயாராக மெலினா வந்து சேர்ந்தார். அவரோடு இன்றைய ஃபோட்டோ சூட்டை எடுக்கும் நிறுவனம் நியமித்திருந்த டைரக்டர் வந்தார்.

அவரை பார்த்ததுமே புன்னகைத்தாள் அதிரூபிணி.

“வாவ்! அமேஜிங்..!” என்று டைரக்டர் பாராட்டிய போதும் அவளது புன்னகை கூடவும் இல்லை. குறையவும் இல்லை.

டைரக்டர் அவளை அவளது அலங்காரத்தை ஒரு முறை நன்றாக பார்த்து திருப்தியடைந்த பிறகு விசயத்தை விளக்கினார்.

இதே ஹோட்டலில் உள்ள சில பகுதிகளில் தான் படம் எடுக்கப் போகின்றனர். அதன் விளக்கத்தை நன்றாக அறிந்திருந்த போதும் டைரக்டர் ஒரு முறை சொன்ன போது கேட்டுக் கொண்டாள்.

பேச்சு முடிந்ததும் எல்லோரும் படம் எடுக்கும் இடத்தை அடைந்தனர். மக்கள் யாரும் அந்த பகுதியை உபயோகப்படுத்தாமல் கட்டுப்படுத்தி இருக்க, கேமராக்கள் விளக்குகள் அனைத்தும் தயாராக இருந்தது.

கடைசி நேர டச் அப் முடிந்தும், அதிரூபிணி கேமரா முன்பு சென்று விட்டாள்.

கேமரா மேன் சொல்வது போலெல்லாம் போஸ் கொடுத்துக் கொண்டே இருந்தாள். அடிக்கடி அவளது மேக் அப் சரி செய்யப்பட்டது. அரை மணி நேரம் தொடர சிறிய இடைவேளை கொடுத்தனர்.

அதிரூபிணி தண்ணீரை குடித்து விட்டு அமர்ந்திருந்தாள். அவள் அணிந்திருந்த உடை தரையில் பரவிக்கிடந்தது. அதில் விழும் தூசியை ஒருத்தி தட்டி விட்டுக் கொண்டிருக்க அதிரூபிணி சுற்றிலும் வேடிக்கை பார்த்தாள்.

“அவுட் டோர் ஃபோட்டோ சூட்டிங்” என்றாலே தொல்லை தான். கொளுத்தும் வெயிலும் பிரச்சனை. கொட்டும் மழையும் பிரச்சனை.

அவள் தன் எண்ணத்தில் மூழ்கி இருக்கும் போதே, சலசலப்பு அதிகமானது. உடனே திரும்பிப் பார்த்தாள்.

கூட்டத்தில் தனியாக தெரிந்த அவனை பார்த்ததும் சுள்ளென கோபம் ஏறியது.

‘இவனுக்கு இங்க என்ன வேலை?’ என்று அவள் பல்லைக்கடிக்க, சுற்றியிருந்த அத்தனை பேரும் அவனை சந்தித்ததில் சந்தோசப்பட்டனர்.

டைரக்டர் அவனோடு கைகுலுக்கிப்பேசுவதும் அவன் முகம் மாறாமல் அவரை பார்த்து தலையசைப்பதும் மௌன படமாக அவளுக்கு தெரிந்தது.

இடைவேளை நேரம் முடிந்ததும் குடையோடு நின்றிருந்த அசிஸ்டன்ட் விலகி விட, மற்றவர்களும் கிளம்பி விட்டனர்.

அதிரூபிணி மீண்டும் தனியாக அமர்ந்திருக்க, கேமரா மேன் வந்தார். அவர் சொன்னதை கேட்டு முடித்தவள், “இது வரை உங்களுக்கு பிடிச்சத செஞ்சுட்டேன். இப்ப நான் எனக்கு பிடிச்ச மாதிரி செய்யுறேன். சரியா வருதானு பாருங்க” என்றாள்.

“ஓகே மேடம்.. பண்ணிடலாம்” என்று விட்டு கேமராவின் பின்னால் சென்று நின்று கொண்டார்.

சில நொடிகளில் தன் முக பாவனைகளை மாற்றிக் கொண்டவள் அடுத்த பத்து நிமிடத்திற்கு கேமராவையும் பார்க்கவில்லை. அந்த அவன் நிற்கும் இடத்தையும் பார்க்கவில்லை.

பார்த்தால் முகத்தில் கோபம் அப்பட்டமாக தெரியும். அது சரி வராது. அதனால் கேமராவை பார்க்காமலே அவள் போஸ் கொடுக்க அனைத்தும் படமாக மாறியது.

அவன் நிச்சயமாக கவனிப்பான். கவனிக்கட்டும். அவளுக்கு பயம் ஒன்றுமில்லை.

அமர்ந்த நிலையில் இருந்து எழுந்தவள் கவுனை கையால் தூக்கிக் கொண்டு முன்னால் நடந்தாள். சரியாக கேமராவுக்குப் பின்னால் அவன் நிற்க, பார்வை அவளையும் மீறி அவனிடம் விழுந்தது.

கெத்தாக ஒரு பார்வை பார்த்துக் கொண்டே அவள் நடந்து வர அது கேமராவில் படமாக பதிவாகியது.

அவளது பார்வையை கவனித்தவனோ நக்கலாக ஒரு சிரிப்பு சிரித்து விட்டு திரும்பிக் கொண்டான்.

சில நிமிடங்களில் அந்த ஃபோட்டோ சூட் முடிவடைந்தது.

“வெல்டன் ரூபிணி.. நெக்ஸ்ட் காஸ்டியூம் சேன்ஜ் பண்ணுங்க.” என்று டைரக்டர் சொன்னதும் தலையாட்டியவள் திரும்பி நடக்க, “பட் எக்ஸ்பிரஸன் பத்தல” என்று அவன் குரல் கேட்டது.

சட்டென நின்று அவள் புயல் வேகத்தில் திரும்ப, அவன் அவளது பார்வையை கவனிக்காதது போல் டைரக்டரை பார்த்தான்.

“புது ஆளுங்கனா அப்படித்தானே சார்.. சொன்னா புரிஞ்சுக்கவும் மாட்டாங்க. ஒரே தலை வலி” என்று டைரக்டர் சொல்ல அவனது முகத்தில் மறைந்திருந்த கிண்டல் சிரிப்பு மேலும் அதிகரித்தது.

“எக்ஸாட்லி.. அதுவும் சில ஆளுங்க அழகு மட்டும் மாடலிங்க்கு போதும்னு நினைச்சுட்டு மூளைய வீட்டுலயே கலட்டி வச்சுட்டு வந்துடுறாங்க”

டைரக்டர் இதை விளையாட்டாக நினைத்து சிரித்தார். அவன் முகத்தில் இருந்த சிரிப்பும் அவனது தொனியும் சிரிப்பை தான் வரவைத்தது. ஆனால் அதிரூபிணிக்கு அல்ல.

மனதில் பொங்கி எழுந்த நெருப்பால் அவனை சுட்டுப் பொசுக்க வேண்டும் என்று காத்திருந்தாள். இப்போது கூட வேறு யாரையோ பேசுவது போல் அவளை தான் மட்டம் தட்டுகிறான்.

அவனது சிரிப்பை பார்த்து எரிந்த மனதோடு திரும்பி நடந்தாள்.

‘உதய குமாரா.. ஒரு நாள் உனக்கு இருக்குடா.. எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு பழி தீர்க்குறேன் இரு’ என்று நினைத்துக் கொண்டாள்.

தொடரும்.

 

Click on a star to rate it!

Rating 4.2 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
11
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. மோதல் காதலாக சான்ஸ் இருக்கிறது.