
தூவானப் பயணம் 10
பாரியின் மௌனம் பரிதிக்கு என்னவோ போலிருந்தது. பாரி எந்தவொரு வழக்குக்கும் இவ்வளவு அலட்டிக் கொண்டதில்லை.
ராயப்பன், அமோஸ் வழக்கில் அவனின் உயிரான பூ மாட்டிக்கொண்டு தவித்த போதே சூழலை அத்தனை எளிதாகக் கையாண்டவனுக்கு, இந்த வழக்கு உள்ளே போக போக பயங்கரமானதாகத் தோன்றியது.
எல்லாம் பணம் என்ற காகிதத்திற்காக.
கண் முன்னே நான்கு கொலைகள் நடந்திருக்கிறது. ஒன்றும் செய்ய முடியாது வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றிருக்கிறான்.
இறந்தவர்கள் ஒன்றும் உத்தமர்கள் இல்லை. இறக்க வேண்டியவர்களே. உயிருடன் இருந்தால் இந்த சமூகம் இன்னும் சீர்கேடு அடையும். ஆனால் அவர்களுக்கும் குடும்பம் ஒன்று இருக்குமே! நினைத்த பாரிக்கு இதற்கான ஆணி வேரினை கண்டுபிடித்திடும் வெறி. அதற்காக கண் முன்னே என்ன நடந்தாலும், கண்களை மூடிக்கொள்ள மட்டுமே வேண்டும் அவன்.
“பாரி ஆர் யூ ஓகே?”
“ம்ஹூம்…” என்ற பாரி பரிதியின் தோள்களை பற்றியவனாக முதுகில் நன்கு ஒட்டிக்கொண்டான்.
“எப்படி பரிதிண்ணா இவனுங்களால முடியுது? போற போக்குல தென்படுற மரத்தோட இலையை பறித்து வீசிட்டு போற மாதிரி… கொலை பண்ணிட்டு போயிட்டே இருக்கானுங்க” என்று ஒருவித ஆதங்கத்தில் பாரி சொல்லியிருக்க… சென்று கொண்டிருந்த வேகத்தினை சற்றும் குறைக்காது பிரேக்கிட்டு கிரீச்சென்று வண்டியை நிறுத்தியிருந்தான் பரிதி.
“கொலையா?”
புருவத்தை கீறிக்கொண்ட பாரி மேலோட்டமாக சொல்லிட, பரிதிக்கு வியர்த்துவிட்டது.
“இவ்ளோ பெரிய ரிஸ்க் எதுக்கு பாரி?”
ஒருபோதும் பரிதி இதுபோன்று பாரியிடம் கேட்டதில்லை. பாரி போலீசாக இருப்பதில் பாரியைவிட பரிதிக்கு அதீத கர்வம், பெருமை.
ஒவ்வொரு வழக்கின் போதும், பாரி உயிரை பணயம் வைக்கின்றான் என்று தெரியும். ஆனால் இந்தளவிற்கு ஆபத்தாக ஒவ்வொரு அடியும் இருக்குமென்று நினைத்ததில்லை. இவ்வழக்கின் இறுதியில் தன்னுடைய தம்பி தனக்கு முழுதாகக் கிடைப்பானா என்று சடுதியில் தோன்றிவிட்ட பயத்தாலே அவ்வாறு கேட்டிருந்தான் பரிதி.
பரிதியின் கலக்கம் உணர்ந்த பாரி…
“பாத்துக்கலாம் விடுங்க பரிதிண்ணா” என்க, இவர்கள் நின்றுவிட்டது தெரியாது சென்று கொண்டிருந்தவர்கள் திரும்ப வந்திருந்தனர்.
“என்னாச்சு மாமா?” அவியின் பின் அமர்ந்திருந்த பூ வேகமாக இறங்கி வந்து பதற்றத்துடன் வினவிட…
“ஹேய் ரிலாக்ஸ் மலரே! ஜஸ்ட் டூ மினிட்ஸ் ரெஸ்ட்” என்றான் பாரி.
அவ்விடமும் பார்க்க ஆறோடு, புல்வெளி படர்ந்த கரையென அழகாய் இருந்திட…
“நைஸ்” என்ற ஜென், தனக்கு பின்னாலிருந்த சத்யாவுடன் சுயமிகள் எடுத்துக்கொள்ள…
“கொஞ்ச நேரம் இங்கிருந்துட்டு போகலாம்” என்று பைக்கை கரையின் ஓரம் நிறுத்திவிட்டான் அவி.
“வாவ்… செமடா.” அங்கு பலவிதமான பறவைகள் நீர் அருந்திக்கொண்டிருக்க அக்காட்சி கண்களுக்கு விருந்தாகிட, அபி சிலாகித்தான்.
ஆறு பேரும் நீரில் ஓடி விளையாடி, புகைப்படம் எடுத்து என சிறுவர்களாக துள்ளி குதித்திட பாரி தன் வேலையின் சிந்தனையை ஒதுக்கி வைத்திருந்தான்.
ஆற்றில் மீன் பிடிக்கின்றேன் என்று அவி செய்த அட்டகாசத்தில் சிரித்து சிரித்து கண்களில் நீர் வந்திருந்தது.
பூவும், பாரியும் கைகள் கோர்த்தபடி அந்த சூழலை அனுபவித்தவாறு கரையிலே சிறிது தூரம் நடந்து சென்று வர, நால்வரும் வீட்டு ஆட்களுடன் கதைத்துக் கொண்டிருந்தனர்.
பாரியும், பூவும் பேசிட மேலும் சில நாழிகைகள் கரைய, ஆர்ப்பரிப்புகள் ஏதுமின்றி அமைதியான மனநிலையில் பாரி மீண்டும் தன் பயணத்தை தொடர்ந்தான்.
பெங்களூரிலிருந்து ஹூப்பல்லி ஏழு மணி நேரம். அவர்கள் அங்கு வந்து சேர இரவாகியிருந்தது. வழியில் உண்பதற்கு இரு இடங்களில் நிறுத்தியிருந்தனர்.
“இப்போ எங்கடா ஸ்டே பண்ணப்போறோம்?” வண்டி ஓட்டுவது உற்சாகமாக இருந்தாலும், முழுதாக ஒரு பகல் ஒரு இரவு ஓட்டியதில் முற்றிலும் சோர்ந்திருந்தான்.
தன்னுடைய அலைப்பேசியில் ஜிபிஎஸ் ஆகிட்டிவேட் செய்த பாரி…
“என்னை பாலோ பண்ணிக்கோங்க” என்று முன் சென்றனர்.
அரை மணி நேரத்தில் காட்டு பாதை வழியாக சிறு மலையின் உச்சியில் வந்து வண்டியை நிறுத்தியிருந்தான் பாரி.
எதிரே மிகப்பெரிய பள்ளத்தாக்கு. எட்டிப் பார்த்திட மட்டுமல்ல, தள்ளி நின்று பார்க்கவே அத்தனை அச்சமாக இருந்தது. சுற்றி மலைகள் சூழ்ந்திருக்க நடுவில் பேரிறைச்சலில் அருவிகள் கொட்டிக்கொண்டிருந்தன.
இருளில் இயற்கையின் எழில் தெரியாவிட்டாலும் அருவியின் நீர் கொட்டும் சத்தம் மத்தள இசையாக கேட்பதற்கு நன்றாகவே இருந்தது.
“இங்கவா நைட் ஸ்டே?” எனக்கேட்ட ஜென், “ரொம்ப குளிருதுடா பாரி. அருவி வேற… பாதி நைட்டில் ஃபிரீஸ் ஆகப்போறோம்” என்றிட, ஜென்னை பின்னிருந்து அணைத்த அவி, “நான் இருக்கும்போது நீயேன் பீல் பண்ற ஜென்?” எனக் கேட்டான்.
மற்ற நால்வரும் பார்வையை திருப்பிட…
“ரொமான்ஸ் பண்ற நேரத்தை பாரு” என்று முனங்கிய ஜென், அவியின் தலையிலேயே கொட்டியிருந்தாள்.
“இங்க எப்படி பாரி? தரையும் பனியா இருக்கே” என்று பரிதி சொல்ல…
“டென்ட் பேக் இருக்கு பரிதிண்ணா” என்ற பாரி தன்னுடைய வண்டியில் கட்டியிருந்த பையிலிருந்து நான்கு டென்ட் பேக் எடுத்தான்.
“எல்லாமே பிளானா?” அவி கேட்டிட…
“பக்கா பிளான்” என்றான் சத்யா.
“அதென்ன நாலு?” எனக்கேட்ட சத்யா, “நீங்க ரெண்டு பேரும் ஜோடியா சுத்தி வெறுப்பேத்துறீங்கடா” என்றான் சிணுங்கலாக. பரிதி சத்தமிட்டு சிரித்தபடி தன்னுடைய டென்ட்டை விரித்து உள்ளே சென்றுவிட்டான்.
“நீ வா ஜென் நாம போவோம்” என்று அவியும் ஜென்னை இழுத்துக்கொண்டு மற்றொரு டென்டில் நுழைந்துகொள்ள…
“நீ தூங்கு பூ. நானும் சத்யாவும் கொஞ்சம் பேசணும்” என்றான் பாரி. பூவிடம்.
பூ பாரியை சில நொடி பார்த்தாளே தவிர எதுவும் கேட்டிடாது அமைதியாக பாரி விரித்து செட் செய்த டென்டிற்குள் சென்று சிப்பினால் கவர் செய்து கொண்டாள்.
இருவரும் அருவி கொட்டும் விளிம்பில் சென்று நின்றனர்.
“நைட் என்னாச்சு பாரி?” சத்யா கேட்டிட…
“இது சாதாரண கருப்பு பணமில்லை சத்யா” என்ற பாரி, “ஹவாலா பணம்” என்றிட சத்யாவிற்கு அதிர்ச்சியில் சில கணங்கள் பேச்சே வரவில்லை.
“அப்போ இந்த பயணத்தில் இந்தியாவில் இருக்க மொத்த கருப்பு ஆடும் சிக்கிடும் சொல்லு” என்றான் சத்யா.
“ம்ம்ம்… ஆனால்,” என்று நிறுத்திய பாரி, “எத்தனை உயிர் போகும் தெரியல” என்றான்.
“நான் சிவராஜ் பாலோ பண்ணி போனதில் அவர் ஒருத்தனை சந்தித்து, ஹோட்டல்ல அந்த இருவரிடமிருந்து வாங்கிய பணத்தை இருவர் கையில் கொடுத்து ஒருத்தன்கிட்ட கொடுத்துட்டு வர சொன்னான். நான் அந்த ரெண்டு பேரையும் பாலோ பண்ணேன். ஒரு மணி நேரத்தில் ஒரு ஆளுகிட்ட அந்த பணத்தை ஒப்படைத்தானுங்க. பணம் சரியா இருக்கான்னு செக் பண்ண அந்த ஆளு ரெண்டு பேரையும் சத்தமே இல்லாம கொன்னுட்டான்” என்ற பாரி, “அவன் தான் சிவராஜ்ஜின் ஹவாலாதாரரா இருக்கணும்” என்று காமிராவில் அவனின் முகம் காட்டினான்.
“அவனை கையும் களவுமா பிடிச்சிருக்கலாமே பாரி!”
“பிடிச்சிருக்கலாம். ஆனால் இதில் இன்னும் எத்தனை பெரும் முதலைகள் சிக்கும் தெரியல. அவனை அரெஸ்ட் பண்ணிட்டா, சாய் சுதாரிச்சிடுவான். அடுத்து நம்மால ஒரு அடி எடுத்து வைத்திட முடியாது” என்ற பாரி…
“என் திட்டமே வேற” என்றதோடு
“இவனுங்க கொலை செய்யுற ஆளுங்க எல்லாம் பணம் மாத்துரத்துக்காக புதுசா சேர்க்கப்பட்ட ஆட்கள். அவங்களுக்கு ஹவாலா பற்றி ஒன்னும் தெரியாது. அவங்க மூலமா வெளிய தெரிஞ்சிடக் கூடாதுங்கிறதுகாக காரியம் முடிந்ததும் கொலை பண்ணிடுரானுங்க” என்றான்.
“அதுக்காக உயிரை கொல்லனுமா?” நேரில் பார்த்த கொலையின் பயம் இன்னும் சத்யாவிடம் மிச்சமிருந்தது.
“அடுத்து மும்பையில் நாம யாரை சந்திக்கப்போறோம் தெரியல. ஆனால் அங்கும்… அதற்கடுத்தும் இதுதான் தொடரும். பல உயிர்கள் போவதை நிச்சயம் நம்மால தடுக்கவே முடியாது. அதனால் மனதை திடப்படுத்திக்கோ சத்யா” என்றான் பாரி.
“மும்பையில் பணம் கைமாற்றுவது சாயின் ஆளா இருக்கும். அங்க மாற்றியதும், இன்னும் யாருன்னு தெரியாத அந்த நபர் ஹவாலாதாரரிடம் கைமாற்றிட பயன்படுத்திக்கொள்ளும் ஆட்கள் அவனுடைய ஏற்பாடா இருக்கும். நமக்கு இடைத்தரகர்கள் முக்கியமில்லை. பணத்தோட உரிமையாளர் மற்றும் ஹவலாதாரர்கள் மட்டும் தான் நமக்கு வேணும்” என்ற பாரி…
“ஒருத்தன் கிட்டவே இவ்வளவு கருப்பு பணம்” என்றான் விழிகள் விரித்து.
“முறையாக வரி செலுத்துவதில் என்ன பிரச்சினையோ” என்ற சத்யா தூக்கத்தில் தடுமாற,
“அவனுங்க எங்க இருக்கானுங்க பாரு சத்யா” என்றான் பாரி.
“நமக்கு பின் தங்கி தான் இருக்கானுங்க பாரி. ரொம்ப நேரமா ஒரே இடத்தில் காட்டுது. அனேகமா எங்கும் தங்கிட்டானுங்க போல” என்றான்.
“ம்ம்ம்… நீ போடா” என்று சத்யாவை அனுப்பி வைத்த பாரி அங்கிருந்த பாறையில் கால்களைக் கட்டிக்கொண்டு அமர்ந்துவிட்டான்.
அவனின் மனதில் இந்த வழக்கின் முடிவு எப்படியிருக்கும் என்கிற யோசனை.
“தூங்க வரல?” பாரியின் அருகில் வந்து அவனைப்போலவே அமர்ந்தாள் பூ.
“நீ தூங்கியிருப்ப நினைச்சேன்.”
“ஆரிஷ்கிட்ட பேசிட்டு இருந்தேன். சத்யாண்ணா மூவ் ஆனது தெரிஞ்சுது. அதான் வந்தேன்” என்றவள் பாரியின் தோள் சாய்ந்திட… அவளின் தோளில் கைபோட்டு இறுக்கிக் கொண்டான்.
பாரியின் பார்வை தூரத்து இருளில் பதிந்திருக்க… பூ அவனையே பார்த்திருந்தாள்.
“சைட் அடிக்கிறியாடி?”
“ம்க்கும்… அடிச்சாலும் பிரயோஜனம் இல்லை” என்று பூ நேர்கொண்டு முகம் திருப்ப… பாரி அவள் எதிர்பாராத விதமாக அவளின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு விலகினான்.
“வேந்தா…”
“இதுதான் மலரே உன்கிட்ட ரொம்ப பிடிக்குது. நமக்குள்ள இதெல்லாம் சகஜம் தான் அப்படின்னாலும்… ஒவ்வொரு முறையும் புதுசு போலவே சிவந்து என்னையும் மொத்தமா சாய்க்கிற” என்றவன் அந்த பாறையின் மீதே கால் நீட்டி பின்னால் சரிந்து படுத்தவனாக பூவையும் இழுத்து தன் மார்பில் போட்டுக்கொண்டான்.
பாரியின் மார்பிலே தலையை முட்டியவள், அவனை அழுத்தமாக இறுகப் பற்றிக்கொண்டாள்.
“இந்த இடம், இருள், சில்லுன்னு காற்று, அருவி சாரல், கண்ணுக்குத் தெரியமா கொட்டுற பனி, நீ, நான். எல்லாமே ரொம்ப பிடிச்சிருக்கு வேந்தா” என்று அவள் ரசனையோடு மொழிய…
“இன்னும் கொஞ்ச நேரம் இப்படி வெட்டவெளியில் இருந்தாலும்… அடுத்து ஹாஸ்பிடல் தேடி ஓடனும்” என்ற பாரி, “அழகு… அதை ரசிக்கத் தூண்டும் மனம்… எப்போதும் ஆபத்துதான்” என்றதோடு பூவை தூக்கிக்கொண்டு டென்டிற்குள் நுழைந்திருந்தான்.
உள்ளே வந்த பின்னர் தான் பூ குளிரையே உணர்ந்தாள். பற்கள் தந்தியடிக்க…
“வெளிய இருந்தப்போ ஒண்ணுமே தெரியல… இப்போ பல்லெல்லாம் கிட்டுது… என்ன வேந்தா இது?” என்று கேட்டு பூ தன்னிரு கைகளையும் பரபரவென்று தேய்த்துக்கொண்டாள்.
“மேடம் வெளியில என்னோட இப்படி இருந்தீங்க” என்று இருந்த நிலையை செய்து காட்டி… “அதான் குளிர் தெரியல” என்று கூறி, “இனி தெரியாது” என கண்ணடித்தான்.
“அச்சோ… வேந்தா” என்று வெட்கம் கொண்டவளாக பூ அவனுள் புதைந்து போனாள்.
சாய் நாதன் தன்னை பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறான் என்பது தெரியாது, நாளை காத்திருக்கும் நிகழ்வின் ஆராய்வோடு பாரி பூவுடன் உறக்கத்தை தழுவினான்.
***********************
“என்ன யோசனை சாய்?”
நீண்ட நேரமாக தீவிர முகபாவத்தோடு இங்குமங்கும் நடந்து கொண்டிருக்கும் சாயிடம் வேலு நாதன் கேட்டார்.
“அந்த போலீசு அவன் பேமிலியோட ட்ரிப் போயிருக்கான். ஆனால்…” என்று இழுத்த சாய், “எனக்கு எங்கையோ இடிக்குது” என்றான்.
“என்னன்னு தெளிவா சொல்லுடா?”
“நேத்து சிவராஜூக்கு பணம் கைமாற்றிய அந்த ஹோட்டலில் தான் பாரியும் தங்கியிருக்கான். காலையில் கிளம்பி வேறு இடம் போயிருக்கான். அது எங்கன்னு தெரியல. கண்டு பிடிக்கணும்” என்ற சாய், “ஒருவேளை அவன் மோப்பம் பிடித்து பாலோ பன்றானோ?” என்று நெற்றியை தேய்த்துக்கொண்டான்.
“அதுக்கெல்லாம் சான்ஸ் இருக்காது சாய். அப்படியே இருந்தாலும் எந்தவொரு சொதப்பலும் இல்லாம நம்ம திட்டம் நடக்கணும். ஒரு இடம் தான் போய் சேர்ந்திருக்கு. மத்த இடமும் முடிச்சிடனும்” என்ற வேலுநாதனின் கண்களில் பணத்தாசையின் பளபளப்பு.
“ம்ம்ம்… கொஞ்சம் சொதப்பினாலும் மொத்தம் காலி” என்ற சாய்,
“அந்த பாரியை லேசில் எடைபோடக்கூடாது. எமகாதகன். அவன் அடங்குற ஒரே இடம், அவன் பொண்டாட்டி மட்டும் தான். அடுத்து குடும்பம்” என்றான்.
“அப்போ குடும்பத்தை தூக்கிடுவோம்” என்று வெடி சிரிப்பு சிரித்தார் வேலு.
“அவன் லாங் டிராவல் பிளான் பண்ணியிருக்கான் அப்படின்னா, குடும்பத்தை சாதாரணமாவா விட்டுட்டு போயிருப்பான்? வாட்ச் பண்ணுவோம்” என்ற சாய் தனக்குள் திட்டம் வகுத்தவனாக கதிரையில் அமர்ந்தான்.
“மெல்வினா கேஸில் அவன் ஏன் சைலண்ட் ஆனான்னு இன்னும் ரீசன் தெரியல. அதையும் கண்டு பிடிக்கணும்” என்ற சாய், “காவ்யா தாலியை கழட்டி கொடுத்துட்டாள்” என்றான். சோகமோ கவலையோ ஏதோவொன்று சாய்’யை தாக்கியது.
“போனா போகட்டும்டா. வேற பொண்ணே இல்லையா என்ன? தினம் ஒன்னுன்னு என்ஜாய் பண்ணிக்கிட்டு தான இருக்க. இதைவிட வேறென்ன வேணும்?” என்ற வேலு, “நான் கூட அந்த வீட்டுக்கு போயிட்டு ரெண்டு நாள் கழிச்சு வர்றேன். பார்த்துக்கோ” என்றார்.
“காவ்யா என் பொண்டாட்டிப்பா. இன்னைக்கு வரை நான் தொடுற பொண்ணுங்ககிட்ட எல்லாம் அவளைத்தான் தேடுறேன்” என்றான்.
அப்பனும், மகனும் பேசி அலசக்கூடாத விடயத்தை கூச்சமேயின்றே பகிர்ந்து கொண்டனர். உறவின் புனிதம் அறியாத கூமுட்டைகள்.
“பேசாமல் தூக்கிடு. ஏற்கனவே உன்கூட வாழ்ந்து… புள்ளை பெத்துகிட்டவ(ள்) தான! திரும்ப நீ கை வைத்து காட்டிட்டன்னா… அவளே உன்னை சுத்தி வர ஆரம்பிச்சிடுவாள்” என்றுகூறி கண்ணடித்தார் வேலு.
மருமகள் மகளுக்கு நிகரானவள் என்ற எண்ணம் துளியும் இல்லாது வரைமுறையின்றி பேசினார்.
“அவளா வரணும் ப்பா… நான் கட்டின தாலியை கழட்டாம போட்டிருக்கா… என் மேல இன்னும் காதல் இருக்குன்னு தப்பா நினைச்சிட்டேன். அவளை என்னைத் தேடி வரவைப்பேன்” என்ற சாய்… “அவளை நான் எப்பவுமே மறந்தது இல்லை” என்றான்.
“உன் பையன் உன்னைத்தேடி வந்துட்டால்…?”
“அவனுக்கு நான் வில்லன் ப்பா. என்னை நம்பி வரமாட்டான்” என்ற சாய், “பாரி வரதுக்குள்ள எதாவது பண்ணனும்” என்றான்.
“பண்ணிடலாம்…” வேலு நாதனின் முகத்தில் அத்தனை குரூரம்.
*********
“போனவங்க கால் பண்ணாங்களா இளா?”
பேப்பர் படித்துக் கொண்டிருந்த தில்லை கேட்டிட…
“அவங்க பண்ணாங்க மாமா… தமிழுகிட்ட பேசினேன். இப்போ மஹாராஷ்டிரா போயிட்டு இருக்காங்களாம்” என்ற இளா, “லட்டு குட்டி ரெண்டு நாள் அமைதியா இருந்தான். இன்னைக்குலாம் எழுந்ததும் பாரியை கேட்டு ஒரே அழ… அப்புறம் சின்னு தான் சமாதானம் செய்து, பாரிகிட்ட வீடியோ கால் பேச வைத்து… இப்போ அமைதியா ஸ்கூல் கிளம்பிட்டு இருக்கான்” என்றாள்.
பரிதி இல்லாததால் தில்லை அலுவலகம் செல்வதால் அவருக்கு வீட்டில் நடப்பது தெரியவில்லை.
“காலையிலே என்ன கோவிலுக்கு?”
கோவில் சென்றுவிட்டு பூஜை கூடையோடு வீட்டிற்குள் வந்த பார்வதியை கவனித்து தில்லை கேட்டார்.
“இந்தாம்மா பசங்களுக்கு பிரசாதம் வச்சிட்டு… சாமி ரூமில் வை” என்று நதியாவிடம் பூஜை கூடையை கொடுத்துவிட்டு, தில்லையின் அருகில் அமர்ந்தார் பார்வதி.
அவரின் முகமே கலக்கமாக இருந்தது.
“என்னாச்சு பாரு?”
“ஒரே கலக்கமா இருக்குங்க. இந்த பிள்ளைகளை அனுப்பி வச்சிருக்கக்கூடாதோன்னு தோணிட்டே இருக்குங்க” என்ற பார்வதியின் கையில் தேநீர் கோப்பையை திணித்த இளா…
“பாரி ஒத்த ஆள் போதும் அத்தை. தேவையில்லாம எதையும் போட்டு குழப்பிக்காதீங்க” என்றாள்.
“அவனுக்கு ஒன்னுன்னா என்ன பண்ணுவான் இளா?”
இதற்கு இளாவிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
“பாரி அண்ணா எல்லாம் சமாளிச்சிடுவாங்கம்மா” என்றாள் காவ்யா.
அப்போது அங்கு ஓடிவந்த அபி…
“ஹீ இஸ் அ சூப்பர் மேன் பாட்டி. கலவலைப்படாதீங்க” என்று பார்வதியின் கலங்கிய கண்ணை துடைத்துவிட, பள்ளி செல்ல கிளம்பி வந்த மொத்த பட்டாளமும் அவரை சூழ்ந்து கொண்டனர்.
பிள்ளைகளின் ஆர்ப்பரிப்பில் மனதின் அலைப்புறுதலை துறந்தார் பார்வதி.
தீபன் பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்துச்செல்ல… காவ்யா அச்சீவர்ஸ் கிளம்பினாள்.
பாரி சாய்நாதனைப் பற்றி சொல்லியிருந்ததால்…
“இரும்மா நான் டிராப் பன்றேன். நானும் பேக்டரி போகணும்” என்று எழுந்தார் தில்லை.
“இருக்கட்டும்ப்பா… நான் போயிக்கிறேன்.”
“இப்போ நான் டிராப் பன்றேன். வரும்போது தீபன் கூட வந்திடும்மா” என்று அவர் அழுத்தி சொல்ல காவ்யா தில்லையுடன் சென்றாள்.
“லீ எவ்வளவு நேரம் அதை குடிப்ப? டேஸ்ட் மாறியே இருக்கும்” என்று குடிக்க முடியாது குடித்துக்கொண்டிருந்த ஜூஸ் குவளையை அவளின் கையிலிருந்து வாங்கி கீழே வைத்த இளா… “இதை சாப்பிடு. முழுசா சாப்பிட்டிருக்கணும்” என்று அதட்டியவளாக முளைக்கட்டிய பயிறு கலவையை கொடுத்தாள்.
“சாப்பிட வைச்சே கொல்றீங்க அண்ணி” என்ற லீயை பார்த்து நதியா சிரித்திட…
“யூ டூ” என்றாள் லீ.
அந்நேரம் நதியாவுக்கு சத்யாவிடமிருந்து அழைப்பு வர… நதியா தள்ளிச் சென்றாள்.
அனைவரின் நலமும் விசாரித்த சத்யா… “காவ்யாவின் மீது கவனம் இருக்கட்டும்” என்று பலமுறை வலியுறுத்தி வைத்தான்.
இப்போது கோல்காப்பூர் வந்திருந்தனர். அங்கு ஒரு சாலையோர மோட்டலில் உணவிற்காக நின்றிருந்தனர்.
மற்றவர்கள் உள்ளே சென்றிட, சாயின் நடவடிக்கையை ஆராய தன்னுடைய ஹேக்கிங் டிவஸை சத்யா எடுத்து பார்த்திட… சாயின் எண் காவ்யாவின் எண்ணை டிராப் செய்வதை கண்டு கொண்டான்.
அதனால் தான் நதியாவிற்கு அழைத்து காவ்யாவின் பத்திரத்தை வலியுறுத்தினான்.
காவ்யாவிற்கும் கவனமாக இருக்குமாறு தகவல் அனுப்பினான்.
“என்னடா?” பாரி சத்யாவின் தோளில் கரம் பதிக்க…
“சாய் உன் நெம்பரை ட்ராப் பண்ண ட்ரை பண்ணியிருக்கான் மச்சான். பட் முடியல. காவ்யாவை எதுக்கு ட்ராப் பன்றான் தெரியல” என்று நெற்றியை தேய்த்துக் கொண்டான்.
“நீ கார்ட்ஸ் கொஞ்சம் அலர்ட்டா இருக்க சொல்லு… இன்னைக்கு ஒருநாள்… மத்த நாலு பேரையும் அனுப்பி வச்சிடலாம். நேத்து நாலு கொலையை பார்த்த பிறகு இவங்களை கூடவே வச்சிருக்க முடியாது. மும்பை போனதும் பிளைட் ஏத்தி விட்டுடலாம்” என்றான் பாரி.
“பரிதிண்ணாவை விடு… தமிழ் இதுக்கு ஒத்துப்பாளா?”
பாரிக்கும் அக்கேள்வி இல்லாமல் இல்லை. ஆனால், அனுப்பி வைத்துதான் ஆக வேண்டும்.
சாய் நாதன் தங்களை கவனிக்கத் தொடங்கியிருக்கிறான் என்பது அத்தனை நல்லது இல்லை.
அதுவுமில்லாமல் இன்னும் முன்னோக்கிச் செல்ல செல்ல ஆபத்துகள் அதிகம் ஆகலாம். இவர்களை ஓரிடம் விட்டு தாங்கள் ஓரிடம் செல்ல முடியாது. அனுப்பி வைத்தே ஆக வேண்டும்.
‘எப்படி? சொன்னால் கேட்பார்களா?’ பாரிக்கு வழிதான் கிட்டவில்லை.
ஆனால் அதற்கான வழி தானாக அமைந்தது.
“பேசி முடிச்சிட்டிங்கனா வாங்கடா!” அவி அழைத்திட இருவரும் உள் சென்றனர்.
“டிஷ்ஷஸ் எல்லாம் டூ ஸ்பைசஸ் வேந்தா. நமக்கு செட் ஆகாது” என்று பூ சொல்லிட…
“ஆமாம் பாரி மசாலவுக்குள்ள தான் சாப்பாட்டை கலந்திருக்கானுங்க. எலாட்சி பிளேவர் எல்லாம்” என்று ஜென் முகம் சுளித்தாள்.
“இங்க எல்லாம் அப்படித்தான் இருக்கும். இப்போ அட்ஜெஸ்ட் பண்ணிக்கோங்க” என்று பரிதி சொல்ல…
“அதான் உங்களுக்குலாம் செட் ஆகாது வரவேண்டாம் சொன்னேன். இப்பவும் ஒண்ணுமில்லை. பூனே போனதும் பிலைட்டில் கிளம்பிடுங்க. பசங்க வேற தேட ஆரம்பிச்சுட்டாங்க” என்ற பாரி யாரின் பார்வையையும் கண்டு கொள்ளாது உணவில் கவனமாக இருந்தான்.
“எங்களை துரத்திவிட வேற நல்ல ஐடியா கிடைக்கலையா வேந்தா” என்ற பூ, “என்னவா இருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறோம். உன்னை தனியா விட்டுப்போக முடியாது” என்று வேண்டாமென தள்ளி வைத்த உணவை எடுத்து வாயில் வைத்தாள். சில நிமிடங்களில் வேகமாக உண்டு முடித்து பாரியை பார்த்தவள்… “டன்” என்று பெருவிரலை உயர்த்தி காண்பித்துவிட்டு வெளியில் வந்து நின்றுகொண்டாள்.
ஜென்னுக்கும் உணவின் சுவை மாறுபட்டு இருக்க பிடிக்கவில்லை என்றாலும் கடினப்பட்டு விழுங்கி வைத்தாள்.
“எதுக்கு இப்படி கஷ்டப்பட்டு சாப்பிடணும்?” பாரி கேட்டிட,
“ஊர் சுத்த” என்ற அவி அவனை முறைத்துவிட்டு, “எங்களை துரத்த நினைக்காம, எப்படி பாதுகாப்பா கூட்டிப்போலான்னு தின்க் பண்ணு” என்றான்.
ஜென் உணடதும் அவளுடன் அவியும் வெளியேறிட…
“நாங்க போகனும்ன்னா போயிடலாம் பாரி” என்றான் பரிதி. தம்பியின் மனநிலை உணர்ந்தவனாக.
“ரிஸ்க் அதிகம் இருக்கும்போல பரிதிண்ணா. உங்களை கூடவே வச்சிக்கிட்டு” என்றவன் புருவத்தைக் கீறியவனாக, “பார்த்துக்கலாம் விடுங்க” என்று எழுந்து கொண்டான்.
“நீ சாப்பிடல…?”
“பசியில்லை.”
வெளியில் வந்த பாரியை மூவரும் முறைத்து வைத்தனர்.
“சும்மா முறைக்கக்கூடாது. ஒரு விசயம் வேணான்னு சொன்னா, அதுல ஏதோ இருக்கும் அப்படின்னு யோசிக்கணும். அதைவிட்டு சின்னப்பிள்ளைங்க மாதிரி பிஹேவ் பண்ணக்கூடாது” என்ற பாரி, சத்யாவும், பரிதியும் வர…
“பரிதிண்ணா இனி பூ உங்க பைக்கிலே வரட்டும்” என்று சொல்லியவனாக, வண்டியில் ஏறி அமர்ந்து உயிர்பித்தவன்…
“வந்து உட்காருடா” என்று சத்யாவிடம் தன் கோபத்தைக் காட்டினான்.
இத்தனை நேரமிருந்த உற்சாகம் யாரிடமும் இல்லை.
“நாம வேணுன்னா கிளம்பிடலாமா பரிதிண்ணா?” ஜென் கேட்டிருந்தாள்.
“வேண்டாம்.” பரிதி சொல்லும் முன் பூ சொல்லியிருந்தாள்.
“ரெண்டு நாளில்லாம இப்போ நம்மை போக வைக்க நினைக்கிறான் அப்படின்னா… நேத்து என்னவோ நடந்திருக்கு. நடந்த ஒன்னு, பாரிக்கு அதோட தீவிரத்தை காட்டியிருக்கு. இந்த நிலையில் அவனை விட்டு எப்படிப்போக?” எனக் கேட்ட பூவின் கூற்று மற்றவர்களுக்கும் சரியெனப்பட வண்டியில் கிளம்பினர்.
இம்முறை பூ வண்டியை ஓட்டிட, பரிதி பின்னால் அமர்ந்திருந்தான்.
“என்ன மாமா யோசனை?”
பரிதி எதுவும் பேசாது மௌனமாக வரவும் பூ கேட்டிருந்தாள்.
“அவன் வேலைக்கு நடுவில் வந்து அவனுக்கு வேலையை ரிஸ்க் ஆக்கிட்டிருக்கோம் நினைக்கிறேன் தமிழ்” என்றான் பரிதி.
சொல்லப்போனால் அதுவும் உண்மையே!
பாரி, சத்யா மட்டுமென்றால் அவர்களின் பயணம் இத்தனை பொறுமையாக இருந்திருக்காது.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
                +1
	                                4        
	+1
	                                20        
	+1
	        	+1
	        	