
அத்தியாயம் – 25
அடுத்த நான்கு வாரங்கள் அமுதினிக்கு மிகக் கடினமானதாக இருந்தது.
ஒவ்வொரு நாளும் காலையில் எழும்போது, ‘இன்றைக்கு ஆரவ் சாரை எப்படி புரொபஷனலாக மட்டும் பார்த்துத் தொலைப்பது?’ என்ற ஒரே ஒரு கேள்விதான் அவள் மண்டைக்குள் ஓடும். அதுவே உணர்ச்சி ரீதியான சித்திரவதை போல இருந்தது.
அவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். ஆனால், பொதுவெளியில் அவர்கள் வெறும் பேராசிரியர்-மாணவி. இந்த இரட்டை வேடம் அவளைக் கொல்லாமல் கொன்றது.
********
டிசம்பர் மாதம் அதன் குளிரான கரங்களால் சென்னையை மெல்ல அணைக்கத் தொடங்கியிருந்தது.
கேம்பஸ் முழுவதும் கிறிஸ்துமஸ் அலங்காரங்கள், விடுமுறை உற்சாகம் என ஒரே கொண்டாட்டமாக இருந்தது. மாணவர்கள் பரீட்சை முடிந்த சந்தோஷத்தில் துள்ளிக் குதித்துத் திரிந்தார்கள்.
ஆனால் அமுதினிக்கு மட்டும் எதுவுமே மனதில் ஒட்டவில்லை. அவளது மனதில், ஆரவ் மட்டுமே நிறைத்திருந்தான். அவனது ஒவ்வொரு பார்வையும், சிரிப்பும், வார்த்தையும் அவளுக்கு பொக்கிஷம் போலவும், அதே சமயம் இதயத்தில் குத்தும் முள் போலவும் இருந்தது.
******
ஒரு செவ்வாய்க்கிழமை மதியம், உளவியல் துறையில் ஒரு சிறப்பு கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சிறப்பு விருந்தினர் – டாக்டர் அனுராதா சரவணன், உறவுச்சிக்கல் சிகிச்சையில் மிகப் பிரபலமானவர்.
தலைப்பு: “தொழில்முறை உறவுகளில் எல்லைகளைக் கையாளுதல்.”
இதைவிட பொருத்தமான ஒரு தலைப்பை அமுதினியின் வாழ்க்கையில் அப்போது யாரும் தேர்ந்தெடுத்திருக்க முடியாது.
‘அடடா! என்ன ஒரு டைமிங்! காலேஜே சேர்ந்து என்னை கலாய்க்குற மாதிரி இருக்கே..’ என்று தனக்குள் கவுன்ட்டர் கொடுத்தபடி சென்றாள் அமுதினி.
கருத்தரங்க கூடத்தில் அவள் நுழைந்தபோது, ஆரவ் அங்கு ஏற்கனவே, மூன்றாவது வரிசையில் சாதாரணமாக அமர்ந்திருந்தான்.
அவள் கண்கள் அவனைத் தேடிப்பிடித்த நொடியில், அவளது இதயம் ஒரு நொடி நின்று துடித்தது. அவன் அருகே ஒரு காலி நாற்காலி இருந்தது.
‘இவர் பக்கத்துல உட்காரலாமா? அது கொஞ்சம் ஓவரா தெரியுமோ? இல்ல, வேறு எங்காவது உட்கார்ந்தா அதுவும் தப்பா தெரியுமோ? ஐயோ, கடவுளே!’ என்று அவளது மூளைக்குள் ஒரு மாபெரும் பட்டிமன்றம் தொடங்கியது.
அவள் தடுமாற்றத்தைக் கவனித்த ஆரவ், அவளைப் பார்த்து, தன் அருகில் இருந்த காலி நாற்காலியை கண்களால் காட்டினான். அமுதினி ஒரு ரோபோவைப் போல மெதுவாக நடந்து சென்று, அந்த நாற்காலியில் அமர்ந்தாள்.
“ஹாய்,” அவன் குரல் ஒரு ரகசியம் பேசுவது போல ஒலித்தது.
ஒரு ஐ.ஏ.எஸ் நேர்முகத் தேர்வில் பேசுவது போன்ற ஒரு இறுக்கமான குரலில், “ஹாய் சார்,” என்றாள்.
அவர்களுக்கு இடையே ஒரு தர்மசங்கடமான அமைதி நிலவியது. காதலை வெளிப்படுத்திய பிறகு, அவர்களது ஒவ்வொரு சந்திப்பும் இப்படித்தான் இருந்தது. ஒவ்வொரு வார்த்தையும் அளந்து பேசப்பட்டது, ஒவ்வொரு அசைவும் கவனமாக கையாளப்பட்டது.
சிறிது நேரத்தில் சிறப்பு விருந்தினர், டாக்டர் அனுராதா சரவணன், பேசத் தொடங்கினார்.
அவர் தொழில்முறை எல்லைகளைப் பற்றியும், தனிப்பட்ட உணர்வுகள் பணியிடத்தை எப்படி சிக்கலாக்கும் என்பதைப் பற்றியும் விளக்க ஆரம்பிக்க, ஒவ்வொரு வார்த்தையும் அமுதினியின் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவது போல இருந்தது. அவளும் ஆரவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாமல், மிகவும் கவனமாகப் பேச்சைக் கேட்பது போல நடித்தனர்.
‘ஒருவேளை நாங்க ரெண்டு பேரும் ஒரே சமயத்துல தும்மினா, அது கூட ஒரு சிக்னல்-னு யாராவது தப்பா நினைப்பாங்களோ?’ என்று அமுதினிக்கு ஒரு அபத்தமான சிந்தனை ஓடியது.
சிறப்பு விருந்தினர், டாக்டர் அனுராதா சரவணன், ஒரு பவர்பாயின்ட் பிரசன்டேஷனுடன் பேசத் தொடங்கினார்.
“வேலை செய்யும் இடத்தில் பர்சனல் ஃபீலிங்ஸ் வந்தால், அது எக்கச்சக்க சிக்கல்களை உருவாக்கும். குறிப்பாக, உங்களுக்கும் உங்கள் மேலதிகாரிக்கும் இடையில்…” என்று அவர் பேசப் பேச, அமுதினி ஆரவை ஓரக்கண்ணால் பார்த்தாள்.
அவனோ, ஒன்றும் அறியாத பாலகனைப் போல, தீவிரமாகக் குறிப்பு எடுத்துக் கொண்டிருந்தார். அதைக்கண்டு, ‘ஆஹா, இவருக்கு எவ்வளவு நடிப்பு!’ என்று அவள் மனதுக்குள் மெச்சினாள்.
“இப்படிப்பட்ட சூழலில், அந்த தொழில்முறை உறவு முடியும் வரை காத்திருப்பதுதான் புத்திசாலித்தனம். அதுதான் இருவருக்கும் பாதுகாப்பு,” என்று டாக்டர் அனுராதா முடித்தபோது, அமுதினிக்கு அவள் தலையில் ஒரு ஒளிவட்டம் தெரிவது போலிருந்தது.
கேள்வி பதில் நேரத்தில், ஒரு மாணவன் ஆர்வமாக, “டாக்டர், ஒருவேளை ரெண்டு பேருக்கும் உண்மையான ஃபீலிங்ஸ் இருந்தா என்ன பண்றது? அவங்க புரொஃபஷனல் ரிலேஷன்ஷிப் முடியுற வரைக்கும் காத்திருக்கணுமா? அது பிராக்டிகலா சாத்தியமா?” என்று கேட்க,
டாக்டர் அனுராதா மிதமான புன்னகையுடன், “நீங்க கேட்கிறது புரியது… காத்திருப்பது கஷ்டம்தான். ஆனா, அந்தக் காத்திருப்புதான் உங்க எதிர்கால உறவுக்கு ஒரு வலுவான அஸ்திவாரத்தைப் போடும்… அவசரப்பட்டு அஸ்திவாரம் இல்லாமல் கட்டினால், பில்டிங் வீக்காகிவிடும்,” என்று பதிலளித்தார்.
அமுதினி ஆரவைப் பார்த்தாள். அவரும் அவளைப் பார்த்து, ‘கேட்டியா?’ என்பது போலத் தலையசைத்தார்.
‘சரிதான், இன்னும் அஞ்சு மாசம் தானே… மே மாசம் கிராஜுவேஷன் முடிஞ்சதும், இந்த பில்டிங்குக்கு நாம பலமா அஸ்திவாரம் போடுவோம்…’ என்று அவள் மனதுக்குள் உறுதி எடுத்துக்கொண்டாள்.
கருத்தரங்கு முடிந்து, கூட்டம் கலையத் தொடங்கியது. அமுதினியும் ஆரவும் மெதுவாக வெளியேறினார்கள்.
காரிடாரில், “அமுதினி, நாம செய்றது சரிதான்… டாக்டர் அனுராதா சொன்னதைக் கேட்டல்ல?” என்று ஆரவ் மெதுவாகச் சொன்னான்.
“ம்ம்… கேட்டேன் சார். நெறிமுறைப்படி சரிதான். ஆனா… ரொம்ப கஷ்டமா இருக்கு…” அவளது குரல் உடையாமல் பார்த்துக்கொண்டாள்.
“எனக்கும் அப்படித்தான் இருக்கு அமுதினி… ஆனா நாம தைரியமா இருக்கணும்… இன்னும் அஞ்சு மாசம் தானே… மே மாசம் உன் படிப்பு முடிஞ்சிடும். அப்புறம் நமக்கு எந்த கஷ்டமும் இல்லை…”
அமுதினி தலையசைத்து, “நான் முயற்சி பண்றேன் சார்.” என்றாள்.
அவர்கள் அமைதியாக நடந்தனர். அவர்களது கைகள் தங்களுக்குள் ஒரு காந்த சக்தி இருப்பது போல ஒன்றையொன்று தொடத் துடித்தன. ஆனால், அவர்களது மனமோ, ‘கன்ட்ரோல்… கன்ட்ரோல்…’ என்று அலறியது.
********
அடுத்த வாரம், கல்லூரியில் வருடாந்திர கலைவிழாவான “கலாசங்கமம்” கோலாகலமாகத் தொடங்கியது. எங்கு பார்த்தாலும் இசை, நடனம், நாடகம் என மாணவர்கள் அமர்க்களப்படுத்திக் கொண்டிருந்தனர்.
சுருதியோ, அவளைப் பாடச் சொல்லி வற்புறுத்தினாள்.
“அமுது, ப்ளீஸ் டி. நீ கண்டிப்பா பாடணும்… உன் வாய்ஸ்-க்கு ஃபேன்ஸ் அசோசியேஷன் ஆரம்பிக்கலாம்… அந்த அளவுக்கு நல்லா இருக்கும்…”
“ஐயோ இல்ல சுருதி, எனக்கு ஸ்டேஜ் ஏறினா கை, கால் எல்லாம் நடுங்கும். வேணாம் ப்ளீஸ்…”
“ஓஹோ, அப்படியா சங்கதி? சரி, நீ பாடலைன்னா, போன வாரம் லைப்ரரியில நீ தடுக்கி விழுந்த வீடியோவை நான் காலேஜ் வாட்சப் குரூப்ல போட்டு விடுவேன்…” என்று சுருதி விளையாட்டாக மிரட்ட, அமுதினி வேறு வழியின்றி ஒப்புக்கொண்டாள்.
நிகழ்ச்சி நாள் வந்தது. மாலை ஆறு மணிக்கு, திறந்தவெளி அரங்கில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கூடியிருந்தனர்.
சுருதி, அமுதினிக்கு மேக்கப் போடுகிறேன் என்று சொல்லி, அவளை ஒரு ஜப்பானிய பொம்மை போல மாற்றி வைத்திருந்தாள்.
பல நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, அமுதினியின் பெயர் அறிவிக்கப்பட்டது.
அவள் பதட்டத்துடன் மேடை ஏறினாள். ஒலிவாங்கியை பிடித்தபோது அவள் கைகள் நடுங்கின.
கூட்டத்தில் ஆரவ் அமர்ந்திருப்பதை அவள் கண்கள் கண்டுகொண்டன.
ஆரவுக்கு ஒரு மெல்லிய அதிர்ச்சி. ‘அமுதினி பாடப் போறாளா? என்கிட்ட இதைப்பத்தி ஒன்னுமே சொல்லையே?’ என்று நினைத்துக் கொண்டான்.
“குட் ஈவ்னிங் எவ்ரிவன்… இப்போ பாடப்போற பாடலின் பெயர் ‘காத்திருப்பு’… இது என்னோட சொந்த கம்போசிஷன்…”
‘அவள் பாடல் எழுதியிருக்கிறாளா? சொந்தப் படைப்பா? இவளுக்கு கவிதை எழுதற திறமையும் இருக்கா?’ என்று ஆரவுக்கு ஆச்சரியம் இரட்டிப்பானது.
மெல்லிய இசை தொடங்கியது. அமுதினி கண்களை மூடி, பாட ஆரம்பித்தாள். அவளது குரலில், அத்தனை உணர்ச்சிகளையும் சுமந்து கொண்டு காற்றில் மிதந்தது.
“காத்திருக்கிறேன் உனக்காக,
நாள் கணக்கின்றி, நேர கணக்கின்றி,
என் இதயம் உன்னிடம் சொல்லாத வார்த்தைகள் நிறைய,
ஆனால் நான் பொறுமையாக காத்திருக்கிறேன்…
தூரத்தில் இருந்தாலும், நீ என் நினைவில்,
ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு மூச்சிலும்,
ஒருநாள் நாம் ஒன்றாவோம்,
அந்த நாளுக்காக நான் காத்திருக்கிறேன்…
காதல் என்பது காத்திருப்பு,
நம்பிக்கையின் பயணம்,
வலியிலும் இனிமையிலும்,
நான் உன்னை காதலிக்கிறேன், காத்திருப்பேன்…
உனக்காக எப்போதும் காத்திருப்பேன்…”
அவளது குரல் இறுதியில் கண்ணீருடன் கலந்து ஒலித்தது. அது அவளது வலி, காதல், நம்பிக்கை அனைத்தையும் வெளிப்படுத்தியது.
அரங்கம் முழுவதும் மயான அமைதி! சில மாணவிகளின் கண்களில் கண்ணீர்.
ஆரவின் கண்களும் கலங்கியிருந்தன. இந்தப் பாடல் அவனுக்காக எழுதப்பட்டது என்பதை அவன் முழுமையாக உணர்ந்தான். அவனது அமுதினி அவனுக்காக எவ்வளவு வலியைத் தாங்கிக்கொண்டிருக்கிறாள் என்பதை அந்தப் பாடல் அவனுக்கு உணர்த்தியது.
அவள் பாடி முடித்ததும், சில நொடிகள் அமைதி. பிறகு அரங்கம் முழுவதும் கைதட்டல்களால் அதிர்ந்தது. மாணவர்கள் எழுந்து நின்று கரவொலி எழுப்பினர்.
அமுதினி கண்ணீருடன் சிரித்தாள். அவள் மேடையை விட்டு இறங்கியதும், சுருதியும் மற்ற நண்பர்களும் அவளைச் சூழ்ந்துகொண்டு, “அடுத்த சித்ராம்மா நீதான்டி!” என்று கத்தினார்கள்.
நிகழ்ச்சி முடிந்ததும், ஆரவ் அமுதினியை தேட, அவளோ நண்பிகளுடன் பேசிக்கொண்டிருந்தாள்.
அமுதினியோ வெளிக்காட்ட முடியாத வெட்கத்துடன் ஆரவ் இருந்த திசையைப் பார்த்தாள். அவன் தூரத்தில் நின்றபடி, பெருமிதமும் காதலும் ததும்பும் புன்னகையை அவளுக்குப் பரிசளித்தான். அந்த ஒரு நொடிப் பார்வை, ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமமாக இருந்தது.
அவளும் யாருக்கும் தெரியாமல் அவனைக் கண்டு சிரித்தவள், நண்பிகளுடன் பேச்சை தொடர்ந்தாள்.
******
அன்று இரவு, அமுதினி தன் அறையில் களைத்துப் போயிருந்தாலும், மனதில் ஒருவித நிம்மதியுடன் இருந்தாள். பாடல் மூலம் தன் உணர்வுகளை வெளிப்படுத்தியது அவளுக்கு ஒரு பெரிய ஆறுதலாக இருந்தது.
அவள் கைப்பேசி ஒலித்தது. ஒரு தெரியாத எண்ணிலிருந்து ஒரு குறுஞ்செய்தி வரவும், அதைத் திறந்தாள்.
“அமுதினி, உன் பாடல் அற்புதமாக இருந்தது. நான் உன்னை நினைச்சு பெருமைப்படறேன்… எனக்கு தெரியும், இது கஷ்டம்தான்… பட், உன் நிழல் போல உன்னோட தான் இருப்பேன்… ஸ்டே ஸ்ட்ராங் – A…”
வெறும் ‘A’ என்ற அந்த ஒற்றை எழுத்து அவளுக்குப் போதுமானதாக இருந்தது. அவள் இதழ்கள் புன்னகையில் விரிய, கண்ணீர்த் துளிகள் கன்னங்களில் வழிந்தன.
“நன்றி சார்… உங்களுக்காகத்தான் எழுதினேன்… எவ்வளவு காலம் வேண்டுமானாலும் நான் காத்திருப்பேன்…”
சில நிமிடங்களில் மீண்டும் பதில் வந்தது.
“நானும், எப்பவும் உன்னை லவ் பண்ணுவேன் அமுதினி…”
அவள் அந்தக் கைப்பேசியை நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள். இம்முறை வந்த கண்ணீர், நிம்மதியிலும் மகிழ்ச்சியிலும் வந்த கண்ணீர்.
********
அதே நேரத்தில், ஆரவ் தன் வீட்டின் பால்கனியில் நின்றிருந்தான். அமுதினியின் பாடலும், அவளது குரலும், அவளது காதலும் அவன் மனதில் மீண்டும் மீண்டும் ஒலித்தன.
அவனது வாழ்க்கையில் அவள் எவ்வளவு முக்கியமானவள் என்பதை அவன் உணர்ந்தான். அவனது இருண்ட உலகிற்குள் அவள் ஒரு புதிய ஒளியைக் கொண்டு வந்திருக்கிறாள்.
அவன் மனதிற்குள் ஒரு முடிவெடுத்தான். இந்த ஐந்து மாதங்களில், அவன் தன்னை முழுமையாகக் குணப்படுத்திக்கொள்ள வேண்டும். அவன் சிகிச்சை முறைகளை முடித்து, தன் கடந்த காலத்தை ஏற்றுக்கொண்டு, தன்னை மன்னிக்க வேண்டும். அப்போதுதான், அவன் அமுதினிக்குத் தகுதியானவனாக மாற முடியும்.
வானத்து நட்சத்திரங்களைப் பார்த்தபடி, “ரியா, நான் உன்னை மன்னிக்க முயற்சி பண்ணிட்டு இருக்கேன்… நான் என் கடந்த காலத்திலேயே தேங்கி நிற்காம, அமுதினியுடன் சேர்ந்து முன்னேறி போகப்போறேன்… அவ எனக்காக காத்துட்டு இருக்கா… அவளுக்காக நான் ஒரு முழுமையான மனுஷனா மாறணும்… நான் ஹீல் ஆகி, அவளுக்கு ஒரு நிம்மதியான வாழ்க்கையை பரிசாக தரணும்…” என்று வாய் விட்டே சொன்னான்.
அவன் ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்து சுவாசித்தான். பல வருடங்களுக்குப் பிறகு, அவன் மனம் இலகுவாக உணர்ந்தது. குற்ற உணர்ச்சி எனும் பெரும் பாறை அவன் நெஞ்சிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அகல்வது போல இருந்தது.
இன்னும் ஐந்து மாதங்கள். அதுவரை இந்தக் காத்திருப்பு தொடரும். அதில் வலி இருந்தாலும் நம்பிக்கை நிரம்பியிருந்தது.
********
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
10
+1
1
+1
