Loading

பிறை -16

 

வாயிலில் கட்டியிருந்த வண்ணத் தோரணங்களை எல்லாம் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் பிறைநிலா.

 

இப்படியெல்லாம் ஒரு அலங்காரத்தை அவள் பார்த்தது இல்லை. வீடும் அத்தனை பிரமாண்டமாக இருந்தது. அதில் பூஜைக்காக  மலர்களாலும், வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு இருக்க.. ஏதோ அரண்மனை போலவே இருந்தது அந்த வீட்டின் தோற்றம்.

 

” யார் வீடு அத்தை இவ்வளவு பெருசா இருக்கு.. ” சுஷ்மிதா வியந்து கேட்க.. அதே கேள்வியை மனதிற்குள் வைத்துக் கொண்டு ரஞ்சனியின் பதிலுக்காக காத்துக் கொண்டிருந்தாள் பிறைநிலா.

 

” இந்த வீட்டம்மா நம்ம வீட்ல இருந்து ரெண்டு தெரு தள்ளி தான் இருக்காங்க. பக்கத்துல இருக்குற முருகன் கோவிலுக்கு அவங்க மகனுக்கு கல்யாணம் ஆகனும்னு விடாமல் விரதம் இருந்து தீபம் போட வருவாங்க. அப்போதான் அவங்களை எனக்கு தெரியும் அப்படியே பழக்கம் ஆகிடுச்சு. அதுனால தான் கூப்பிட்டு இருக்காங்க. ஆனாலும் ரொம்ப எல்லாம் நாங்க பேசிக்கிட்டது இல்ல. இந்த பூஜைக்கு வந்தா ரொம்ப நல்லது. அதான் நானும் உங்களை கூட்டிட்டு வந்துட்டேன் ” விளக்கம் கொடுத்துக் கொண்டே ரஞ்சனி உள்ளே செல்ல.. கதையை கேட்டுக் கொண்டே இருவரும் பின்னே சென்றனர்.

 

” ரொம்ப பணக்காரங்களோ”

 

” இருக்கும் போல.. நானும் உங்களை மாதிரி தானே முதல் முறை வரேன் ” என இரு பெண்களையும் அழைத்துக் கொண்டு உள்ளே செல்ல.. வாசலில் நின்று வரவேற்றுக் கொண்டிருந்தார் மீனாட்சி.

 

” வாங்க வாங்க ரஞ்சனி.. ” என முகம் கொள்ளா சிரிப்புடன் வரவேற்க.. அவருக்கு பின்னால் நின்ற இரு பெண்களையும் பார்த்தவர்.. பிறையை பார்த்து மகிழ்ந்தவராய்..

 

” அட தாவணி பொண்ணு.. நீ என்ன மா இங்க .. வா மா ” என பிறையின் கைகளை பிடித்துக் கொண்டவர்.. அருகில் இருந்த சுஷ்மிதாவையும் அழைத்து கொண்டு உள்ளே சென்றார்.

 

” உங்களுக்கு பிறையை தெரியுமா ” சுஷ்மிதா புரியாமல் கேட்க..

 

” ஆமா அன்னைக்கு தானே எக்சிபிஷன்ல பார்த்தோம் ” என நடந்ததை கூற.. ரஞ்சினியும், சுஷ்மிதாவும் அவர்களது அறிமுகத்தை தெரிந்து கொண்டனர்.

 

” வா மா பிறை.. எப்படி இருக்கே..” பின்னால் கேட்ட குரலில் திரும்பி பார்க்க.. திவாகர் நின்று கொண்டிருந்தார்.

 

” ரொம்ப நல்லா இருக்கேன் அங்கில் ” என தெரிந்தவர்களை பார்த்த மகிழ்ச்சியின் இருந்தாள் பிறை.

 

” இது உங்க வீடு தானா மா..”

 

” ஆமா டா நம்ம வீடு தான், பூஜைக்கு நேரம் ஆச்சு மூணு பேரும் போய் அங்க உட்காருங்க.. எல்லாம் முடிஞ்சு சாப்பிட்டு தான் போகனும் ” என மூவரையும் சாமிக்கு முன்னே அமர வைத்து விட்டு வெளியே வந்தவர்.. கணவரது காதில் மெலிதாக பேசினார்.

 

” அந்த பொண்ணை பாருங்க .. அன்னைக்கு தாவணியில ரொம்ப அழகா இருந்தான்னு நினைச்சேன். ஆனால் இந்த சேலையில அதை விட ரொம்ப அழகா இருக்காங்க.. இதையெல்லாம் பார்த்தா கூட உங்க மகனுக்கு கல்யாணம் ஆசை வருமான்னு தெரியல ” என சலித்துக் கொள்ள..

 

” அவன் என் பிள்ளை டி.. நான் எப்படி இன்னும் மீனு மீனுன்னு  உன் பின்னாடி சுத்திட்டு இருக்கேன். அதுமாதிரி தான் அவனும் இருப்பான் ” என கர்வம் பொங்க மீசையை நீவிக் கொள்ள..

 

” எல்லாரும் உங்களை பொண்டாட்டி தாசன்னு சொன்னதை கெத்தா வேற சொல்லிட்டு இருக்கீங்களா ”

 

” இதுல என்ன டி கெத்து இல்லாம போச்சு.. எனக்கு என்ன ஆனாலும் என் பொண்டாட்டி தான் முக்கியம். நாளைக்கே உன் மகன் அவன் பொண்டாட்டி கூட குடும்பம் பண்ண போயிடுவான். உன் மகளும் அவளோட புகுந்த வீட்டுக்கு போயிடுவா.. அதுக்கு அப்பறம் ஆயிசுக்கும் எனக்கு நீயும்.. உனக்கு நானும் தானே டி.. பிள்ளைங்க முக்கியம் தான். ஆனால் எனக்கு ஏன் பொண்டாட்டி அதை விட முக்கியம் ”  என பேசிக் கொண்டிருக்கும் பொழுதே அவருக்கு அழைப்புகள் வந்து விட.. அங்கிருந்து நகர்ந்து இருந்தார் திவாகர்.

 

போகும் கணவனது முதுகை வெறித்தவர்.. அவரது தீராத காதலின் வெளிப்பாட்டை நினைத்து, வெட்கத்தில் சிவந்தவர்.. அதை மறைத்து வேலைகளில் மூழ்கினார்.

 

கணவர் கூறிய ஒவ்வொரு வார்த்தையும், அவரது அடி மனதில் இனிக்கத்தான் செய்தது.

 

” இன்னும் எங்க இந்த பையனை காணோம்.. பூஜை ஆரம்பிக்க நேரம் ஆகிடுச்சு ” என புலம்பிக் கொண்டே பார்கவியை தேடியவர்… ” பாரு மேலே போய் அண்ணன் ரெடி ஆகிட்டா கூட்டிட்டு வா மா ” என்றதும் இடுப்பில் கை வைத்து அன்னையை முறைத்தவள்.. ” அதுசரி நல்லா என்ன மாட்டி விட பார்க்குறீங்களே.. நீங்களே போங்க.. நீங்க தானே அண்ணாவுக்கு டிரஸ் எடுத்தது.. அப்போ நீங்கதான் போகனும் ” என பார்கவி கழண்டு கொண்டாள்.

 

மகளை வசை பாடிக் கொண்டே மாடிக்கு சென்றவர்.. அறை வாயிலில் நடந்து கொண்டு தட்டுவதா வேண்டாமா என்ற எண்ணத்தில் இருக்க.. கதவு திறக்கும் சத்தத்தில் நடையை நிறுத்தி விட்டு கதவு புறம் பார்த்த மீனாட்சிக்கு மகனை அந்த ஆடையில் பார்த்து மகிழ்ந்து போனார்.

 

” போகலாமா பா பூஜைக்கு நேரம் ஆகிடுச்சு ”

 

” நீங்க போய் ஸ்டார்ட் பண்ணுங்க மா.. ரெண்டு நிமிஷத்துல வரேன் ” மகனின் தோற்றத்தை பார்த்த மகிழ்ச்சியில் படியிறங்கி சென்றிருந்தார் மீனாட்சி.

 

பூஜை கோலாகலமாக ஆரம்பிக்க தொடங்கியது. ” பாட்டு பாடி லட்சுமியை அழைக்கனும்.. இங்க யாரு நல்லா பாடுவா.. ” பொதுவா கேட்டார் மீனாட்சி.

 

” இந்தா என் பிரெண்ட் நல்லா பாடுவா ஆண்டி ” என அருகில் இருந்த பிறையை கை காட்ட..

 

” ரொம்ப சந்தோஷம்.. முன்னாடி வா மா.. ” என அழைக்கவும்.. சற்றே சங்கடத்துடன் , சுஷ்மிதாவை செல்லமாக தட்டி விட்டு முன்னால் சென்றாள் பிறைநிலா.

 

” லட்சுமியை நாங்க அழைச்சுட்டு வரோம்.. நீ பாட்டை ஆரம்பிச்சுவுடு மா ” என மீனாட்சி பூஜையை ஆரம்பிக்க.. முன்னாள் இருந்த அம்மனை கைகூப்பி வணங்கி விட்டு.. பாட்டை ஆரம்பித்தாள் பிறை.

 

லக்ஷ்மி வாராய் என் இல்லமே

லக்ஷ்மி வாராய் என் இல்லமே

பாலாலி செல்வி வரலக்ஷ்மி

வாராய் என் இல்லமே

பாலாலி செல்வி வரலக்ஷ்மி

வாராய் என் இல்லமே

 

லக்ஷ்மி வா நான் வாழ்ந்திடும் வீடு

சூரியன் ஆயிரம் சுடர்முடியோடு

சூச்சுமமான பேறு பதினாறு

சுந்தரி தாராய் துளசியினோடு

லக்ஷ்மி வாராய் என் இல்லமே

பாலாலி செல்வி வரலக்ஷ்மி

வாராய் என் இல்லமே

 

என அவளது தேன் குரல் அந்த கூட்டத்தை கட்டி போட்டிருக்க.. பிறையின் குரலில் லட்சுமியை வீட்டிற்குள் அழைத்து வந்த மீனாட்சிக்கு அத்தனை மனநிறைவாக இருந்தது.

 

அனைவருமே அவளது குரலில் மயங்கிப் போனார்கள். மொத்த பாடலையும் அழகாக பாடி முடித்து அவள் கண் விழிப்பதற்கும்.. வரலட்சுமியை அழைத்து வந்து பூஜை ஆரம்பிப்பதற்கும் சரியாக இருந்தது.

 

கண் விழித்தவள்.. எதிரில் இருந்த அம்மனை மனதார தரிசனம் செய்து விட்டு, தோழியை பார்க்க திரும்பியவளுக்கு பேர் அதிர்ச்சியாக இருந்தது அவனது தரிசனம். இத்தனை நேரம் அவள் பாடிய பாடலை சுவற்றில் சாய்ந்த வண்ணம், கைகள் இரண்டையும் மார்பின் குறுக்கே காட்டிக் கொண்டு..பட்டு வேஷ்டி சட்டையில்  அத்தனை மிடுக்காய் நின்று  கொண்டிருந்தான் ஆதிதேவ் ஆருத்ரன்.

 

அவனை பார்த்த அதிர்ச்சியில் சட்டென மீண்டும் திரும்பிக் கொண்டவள்.. அதன் பின் அப்பக்கமே திரும்பவில்லை.  ” இவரு எப்படி இந்த வீட்ல இருக்க முடியும்.. இருக்காது இருக்காது.. ஐயோ அவரை நினைச்சுட்டே இருக்குறதுனால எனக்கு அப்படி தெரிஞ்சதோ.. ஆமா அப்படித்தான் இருக்கும்.. இல்லைன்னா எப்படி.. ” என யோசித்து அவளே ஒரு முடிவுக்கு வந்தவள்..

 

சற்றே தைரியத்தை வரவழைத்துக் கொண்டு.. மீண்டும் அப்பக்கம் பார்வையை செலுத்த.. அந்த இடம் வெற்று இடமாக இருந்தது.

 

அதே வெறுமையும் அவள் மனதை ஆக்ரமிக்க.. ” இப்போ அவரு இருக்கனும்னு நினைக்கிறேனா.. இல்லை வேணாம்னு நினைக்கிறேனா .. ஐயோ எனக்கே ஒன்னும் புரிய மாட்டுதே ” என தன்னோடு புலம்பிக் கொண்டவள்.. அதன் பின் பூஜையில் கவனமாக இருந்தாள்.

 

மீனாட்சியும் அவளருகில் வந்து பூஜையில் அமர்ந்து கொள்ள.. கூட்டுப் பிராத்தனை செய்து அம்மனை வழிபாடு செய்தனர்.

 

அதன் பின் அங்கிருக்கும் ஸ்பீக்கரில் அம்மன் பாட்டை ஒலிக்க விட்டு, இவர்கள் மீண்டும் பாடி.. அதன் பின் தீப ஆராதனை காட்டி விட்டு பூஜையை ஒரு மணி நேரமாக செய்து நிறைவு செய்தனர். இடையில் ஹோமமும் நடந்தேறியது.

 

” எல்லாரும் பூஜை தட்டை வணங்கிட்டு.. சாப்பிட போங்க ” என மீனாட்சி கூறியதும்.. அனைவரும் அவ்வாறே செய்ய.. வெளியே உள்ள பெரிய இடத்தில் பந்தல் அமைத்து சாப்பாடு பரிமாறப் பட்டது.

 

அம்மனுக்கு படைத்த உணவுகள், அதன் பின் இரவு உணவாக பல உணவுகள் என மிகவும் விமர்சையாக கொடுக்கப்பட்டது.

 

” பாரு மா.. இங்க வா .. நீயும் அண்ணனும் தான் முதல்ல பரிமாறனும்.. சாப்பாடை வைங்க ” என முதலில் இனிப்பை வைக்க சொல்லி கேசரி வாலியை பார்வதியின் கையில் கொடுத்தவர்.. அடுத்ததாக சக்கரை பொங்கலை எடுத்து மகனிடம் கொடுத்தார்.

 

வேஷ்டியை தூக்கி இடுப்பில் மடித்து கட்டியவன்.. வாலியை வாங்கிக் கொண்டு ஒவ்வொருவருக்கும் பரிமாற ஆரம்பித்தான்.

 

இதில் நான்காவது வரிசையில் பிறை, சுஷ்மிதா ,ரஞ்சனி மூவரும் அமர்ந்திருந்தனர்.

 

“இவங்க வீட்ல இருக்குற அம்மனுக்கு நல்ல அழகான முகம். நல்லா பண்ணாங்க பூஜை ” ரஞ்சனி எதார்த்தமாக பேசிக் கொண்டிருந்தார்.

 

” ஆமா அத்தை.. அதோட நம்ம பிறை பாட்டும் அப்படி ” தோழியை விட்டுக் கொடுக்காதவளாய்.

 

” அதைச் சொல்லு.. பிறை இவ்வளவு நல்லா படுவான்னு எனக்கே இப்போதானே தெரியும் ”

 

இருவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது சுஷ்மிதா எதையோ பார்த்து அதிர்ந்தவளாய்… அருகில் இருந்த தோழியையும் ஒரு பார்வை பார்க்க.. பிறை இது ஏதும் அறியாமல் போனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

மெதுவாக அவளது கையை சுரண்டி.. ” ஹே .. இந்தா டி… ”

 

” என்ன டி..”

 

” கொஞ்சம் போனை பார்க்காம என்ன பாரு ”

 

” ம்ம் இப்போ சொல்லு ” என போனில் இருந்து தலையை எடுத்து கேட்க..

 

” தெரிஞ்சு தான் இந்த வீட்டுக்கு வந்தியா ”

 

” லூசா நீ.. தெரியாம எப்படி வருவேன்… நீங்க தானே கூட்டிட்டு வந்ததே.. ”

 

” அது தெரியுது.. இது யாரோட வீடு ”

 

” உங்க அத்தையோட கோவில் பிரெண்ட் வீடு.. ”

 

” அவ்வளவு தானா” என்றதும் அவளை குழப்பமாக பார்த்தவள்..

 

” ஓ நான் எக்சிபிஷன்ல பார்த்ததை சொல்லுறியா ” என்றதும் தலையில் அடித்துக் கொண்டவர்..

 

” பொங்கச் சோறு வருது…ரெடியா இரு” என அவள் அமைதியாகி விட..

 

” ம்ம் நானும் அதுக்குத்தான் வெயிட் பண்ணுறேன்.. பூஜைல வைக்கும் போதே நல்ல நெய் வாசனை தூக்கிருச்சு ”

 

” அதுசரி.. உனக்கு இன்னைக்கு விருந்தே இருக்கு போ” என அவள் தலையை குனிந்து கொள்ள..

 

முதலில் பார்கவி வந்து அவளது இலையில் கேசரி வைத்து விட்டு செல்ல.. அடுத்ததாக அவளது இலையில் பொங்கல் வந்தது. இலை வரை வந்த பொங்கல்.. இலைக்கு வராமல் கரண்டியில் நிற்பதை பார்த்து.. யோசனையாக நிமிர்ந்து பார்த்தவள் அதிர்ந்து போனாள்.

 

‘ என்ன மறுபடியும் வந்துட்டாரு. ஐயோ எனக்கு மட்டும் ஏன் அவரு மாதிரியே தோணுது ‘ என நினைத்துக் கொண்டே அவளும் பார்வையை விலக்காமல் பார்த்து வைக்க.. சட்டென ஒற்றை புருவத்தை உயர்த்தி என்னவென்று கேட்டவனை பார்த்து, அவளுக்கு சப்த நாடியும் அடங்கியது .

 

முன்னால் இருப்பவன் பொய் அல்ல நிஜம் என அவளது புத்திக்கு உரைத்தது.

 

அவளது ஒவ்வொரு அசைவையும் பார்த்துக் கொண்டிருந்த சுஷ்மிதாவிற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

 

அவளது இலையில் பொங்கலை வைத்து விட்டு அவன் நகர்ந்து விட.. நெய் விட்ட பொங்கல் தான் அவளுக்கு தொண்டையில் இறங்க மறுத்தது.

 

பட்டு வேஷ்டி பட்டு சட்டையில் மின்னி கொண்டிருந்தவனை பார்வையால் களவாடி கொண்டிருந்தாள் பிறை.

 

” கமிஷனர் இந்த கெட் அப்ல செம்ம அழகா இருக்காருல ” சுஷ்மிதா வெளிப்படையாகவே ரசித்து வைக்க..

 

” நல்ல இஞ்சி தின்ன குரங்கு மாதிரி இருக்காரு.. அழகா இருக்காராம் … பேசாம சாப்பிட்டு வா டி ” எரிச்சலாக மொழிந்தாள் பிறைநிலா.

 

அவளது கடுப்பில் ஏதோ புரிந்தவளாய்.. ” உனக்கு என்ன டி.. நான் இன்னும் கொஞ்ச நேரம் கமிஷனரை பாத்துட்டு வரேன்.. இந்த மாதிரி எல்லாம் அவரை இனிமே எப்போ பார்க்க போறேனோ ” என்றதும் சட்டென இலையை மூடிவிட்டு எழுந்தவள்.. ” நீங்க சாப்பிட்டு வாங்க நான் உள்ள இருக்கேன் ” என வீட்டிற்கு சென்று அவனிடம் தனியாக மாட்டிக் கொள்ள போவதை அறியாமல் வேக எட்டுக்களுடன் உள்ளே சென்றாள் பிறைநிலா.

 

சனா💖

 

Click on a star to rate it!

Rating 4.2 / 5. Vote count: 40

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
23
+1
0
+1
2

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்