Loading

தூவானப் பயணம் 9

அன்று காலையிலிருந்து பாரி யாரிடமும் பேசாது மௌனமாகவே இருந்தான். பிள்ளைகள் நால்வருடன் தான் பொழுதை கழித்தான் என்றும் சொல்லலாம்.

பூ, பாரி சொல்லியதைப்போல் அதிகமில்லாது அத்தியாவசியமாக வேண்டியவற்றை மட்டும் இருவருக்கும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

“நீங்க மூணும் பேரும் இல்லாம வீடே நல்லாயிருக்காது” என்று பார்வதி குறைபட…

“காவ்யா, நதியா, அபி அண்ட் நவிஷா கூட இங்கதாம்மா நாங்க வரவரை ஸ்டே பண்ணுவாங்க. சாய் டிஸ்டர்பன்ஸ் காவ்யாவுக்கு. சத்யாவும் இல்லாத நேரத்தில் நீங்க பார்த்துக்கணும்” என்று பார்வதி மற்றும் தில்லையை ஒரு சேர பார்த்துக் கூறினான்.

அதனை கேட்டுக்கொண்டிருந்த பிள்ளைகள், “ஐ ஜாலி ஜாலி” என்று குதிக்க…

“அப்போ ஷைனியும் வந்தால் நல்லாயிருக்கும்ல அக்கா?” என சின்னுவிடம் கேட்டான் ஆரிஷ்.

“ஷைனியும் இங்கதான்” என்ற பாரி “பிள்ளைகள் பத்திரம் இளா” என்றான். அழுத்தமாக.

“அதெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம் பாரி. நீங்க ட்ரிப் என்ஜாய் பண்ணிட்டு வாங்க” என்று அவர்களின் அருகில் வந்து அமர்ந்தான் தீபன்.

“நீங்க போகலாமே தீபன்.” இளா சொல்லிட…

“நான் ஒருத்தனாவது உங்களுக்கு பார்டிகார்டா இருக்கனே” என்றான்.

“பொய் சொல்லாதீங்க தீபன். லீ விட்டு இருக்க முடியாதுன்னுதான வரமாட்றீங்க?” எனக் கேட்டுக்கொண்டே ஜென்னுடன் உள்ளே வந்தான் அவி.

“செக்ரி சார் எப்போ வரார் அவி?”

“வன் வீக் ஆகும் பாரி. இப்போ கேதார்நாத்தில் இருக்காங்க” என்று பாரியின் கேள்விக்கு பதில் வழங்கினான் அவி.

செக்ரி மற்றும் கோதை வடக்கே ஆன்மீக சுற்றுலா சென்று ஒரு மாதமாகிறது. அதைத்தான் பாரி கேட்டிருந்தான்.

“செக்ரி சார் நல்ல ஷூட்டர். அவர் உடன் இருந்திருந்தா கொஞ்சம் தைரியமா இருக்கும்” என்றான் பாரி.

“நாங்க இத்தனை பேர் ஒண்ணா இருக்கும்போது எங்களுக்கு என்னாகும் பாரி. நாங்க பார்த்துக்கிறோம்” என்றார் தில்லை.

தான் உடனில்லாத நேரத்தில் சாய் மற்றும் வேலு நாதன் என்ன செய்வார்கள் என்று தெரியாத சிறு பயம் பாரியிடம். உடனிருந்தால் அவனைத்தாண்டித்தான் மற்றவர்களை தொட முடியும். அவன் எப்போது திரும்பி வருவானென்று அனுமானிக்க முடியாத நிலை. கலக்கமாகத்தான் இருந்தது.

சத்யா தன் குடும்பத்துடன் வந்து சேர்ந்தான்.

சிறிது நேரம் சத்யா அனைவரிடமும் உரையாடிக் கொண்டிருக்க… பாரி கண்காட்டிட இருவரும் தனியாக நகர்ந்தனர். மற்றவர்களின் கருத்தில் விழாது.

“உன் ஏஜென்சி செக்யூரிட்டி கார்ட்ஸ்க்கு சொல்லிட்டியா சத்யா?”

“சொல்லிட்டேன் பாரி. நாம மூவ் ஆகற செக்கெண்ட்ல இருந்து வீடு அவங்க கண்ட்ரோலுக்கு போயிடும். பசங்க ஸ்கூல் டைமும் அவங்களை வாட்ச் பண்ண சொல்லியிருக்கேன்” என்றான்.

“வெல்” என்ற பாரி, “ஒரு மாதிரி நெர்வஸ்ஸா இருக்குடா. இது மாதிரி ஃபீல் பண்ணதே இல்லை” என்று நெஞ்சினை நீவிக் கொண்டான்.

“பேமிலி விட்டு போறங்கிறதால இருக்கும் பாரி” என்ற சத்யாவுமே ஒருவித பயத்தில் தான் இருக்கிறான். அவர்கள் தேடி செல்லும் விடயம் அப்படி. அந்த ஆட்கள் எப்படி என்று எவ்வித அனுமானமும் இல்லை இருவரிடமும்.

“பேசமா நான் மட்டும் போகட்டுமா… இந்த ட்ரிப் இன்னொரு நாள் அரேஞ் பண்ணிக்கலாம். நீ இங்கிருந்தே எனக்கு ட்ராக்கிங் டீடெயில்ஸ் கொடு” என்று பாரி சொல்ல,

“உன்னை அப்படி தனியா அனுப்ப முடியாது” என்ற சத்யாவின் குரலோடு பரிதியின் குரலும் சேர்ந்து ஒலித்தது.

“பரிதிண்ணா…”

“நீ எங்களை நினைத்து பயப்படுற அப்படின்னா… பண்ணப்போற காரியம் பெருசுன்னு தெரியுது. வேணுன்னா நீ, நான் போகலாம். இவங்கலாம் இருக்கட்டும்” என்றான்.

“நானும் வருவேன்” என்று சத்யா சொல்ல…

“என்னை விட்டுட்டு போனீங்க அவ்வளவு தான்” என்று அங்கு வந்தது ஜென்.

அவளைத் தொடர்ந்து…

“லீவெல்லாம் போட்டு ஆசையா கிளம்பிட்டேன். இப்போ இப்படி வேணாம் சொன்னீங்க மொத்தமா எல்லாரையும் டிவோர்ஸ் பண்ணிடுவேன்” என்று மிரட்டியபடி வந்தான் அவி.

“கடைசி நேரத்தில் என்ன பிளான். கிளம்பியாச்சு. அவ்வளவு தான்” என்று கேட்ட குரலில் அனைவரும் திரும்பிட, “சாப்பிட வாங்க” என்றுவிட்டு சென்றாள் பூ.

“இவங்களுக்கு நடுவில் ஒரு ரகசியம் பேச முடியுதாடா” என்று சத்யாவிடம் அங்கலாய்ப்பாகக் கூறினான் பாரி.

அடுத்த இரண்டு மணி நேரத்தில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்டு, சிரித்து பேசி மகிழ்ந்து கிளம்ப வேண்டியவர்கள் புறப்படத் தயாராகிவிட்டனர்.

மூன்று இருசக்கர வாகனங்கள் பின்னால் பைகளை சுமந்தபடி தயாராக இருந்தது.

தில்லை மற்றும் தீபனிடம் ஆயிரம் பத்திரங்கள் வாசித்த பாரி, பூவிடம் கிளம்பலாமா என்று பார்த்திட அவள் முகத்தை திருப்பிக்கொண்டாள்.

பரிதி இளாவிடம் பேசிக்கொண்டிருக்க,

பூவை நெருங்கி நின்ற பாரி, “இப்போ எதுக்குடி முறைச்சிட்டு திரியுற? இதுல மேடம் பேசவும் மாட்டேங்கிறீங்க” என்றான்.

“என்ன பேசணும்? நீ அழுத்தமா இருக்கும்போது கூட என்னைத் தேடலதான? அப்புறம் நான் ஏன் உன்கிட்ட பேசணும். பேச முடியாது போடா” என்றவள் ஜென்னின் பக்கத்தில் சென்று நின்றுகொண்டாள்.

“பைக்கில் என்கூடத்தான் வரணும்” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் வகையில் உதடசைத்தவன், சத்யாவின் “போகலாம் பாரி” என்றதில் பைக்கில் சென்று அமர்ந்தான்.

பிள்ளைகளை எப்போதோ உறங்க வைத்திருந்தனர்.

இளாவிடம் ஆயிரம் பத்திரங்கள் வாசித்த பரிதி, “ஆபீஸ் மேனேஜர் மேனேஜ் பண்ணிப்பார் இளா. இல்லைன்னா அப்பா பார்த்துப்பாங்க. நீ ஸ்ட்ரெயின் பண்ணிக்காத” என்று அவளின் கன்னம் தட்டியவன், கண்களால் பேசி விடைபெற்று மற்றொரு பைக்கில் அமர்ந்தான்.

அடுத்து அவி ஒன்றில் ஏறிட, அவனின் பின்னால் ஜென் அமர்ந்தாள்.

பரிதியின் பின்னால் சத்யா ஏறும் முன் பூ ஏறியிருந்தாள்.

பாரி முறைத்திட அவள் கண்டுகொள்ளவே இல்லை.

சத்யா இப்போது பாரியின் வண்டியில் தான் ஏற்வா வேண்டாமா என்று பாரியையும், பூவையும் மாற்றி மாற்றி பார்க்க…

“ஏறுங்க சத்யாண்ணா… டைம் ஆகுதுல” என்றாள் பூ.

“உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல மாட்டிக்கிட்டு முழிக்கப்போற அப்பாவி ஜீவன் நான்தானா?” என்று கேட்டுக்கொண்டே சத்யா பாரியின் பின்னால் அமர, “என்ஜாய் சத்யா” என்றான் அவி.

“நீ தப்பிச்சிட்டேங்கிற தைரியமா?” என்று சத்யா கேட்க…

“ஆமாம்” என்று சிரித்தான் அவி.

அனைவரும் கையசைத்திட ஆறு பேரும் தலையசைத்து உற்சாகமாக பயணத்தை தொடர்ந்தனர்.

சென்னையில் புறப்பட்ட அவர்களின் பயணம் முதலில் கர்நாடகா வழியாக மஹாராஷ்டிராவை நோக்கி.

மூன்று வண்டிகளும் பூந்தமல்லி தாண்டி பெங்களூரு புறவழிச்சாலையில் ஒரே வேகத்தில் சீறிப்பாய்ந்தது.

“உனக்கும் பாரிக்கும் என்ன?”

“சும்மா மாமா. அவனை சீண்டனுமே” என்று கூறி சிரித்தாள்.

“பய முகமே மாறிடுச்சு. நீ என் வண்டியில் ஏறியதும்” என்ற பரிதிக்கும் சிரிப்பு.

“கடைசி வரை நம்மளை கழட்டி விடுறதுலே இருந்தான்ல. கொஞ்ச நேரம் தவிக்கட்டும்” என்ற பூ, “எந்த நொடி என்ன வருமோன்னு பயமாவே இருக்கு மாமா” என்றாள்.

“ரிலாக்ஸ்சா என்ஜாய் பண்ணு தமிழ். பாரி விட்டுடுவானா என்ன?”

“இதுதான்னு தெரிஞ்சிட்டா சமளிக்கலாம்ன்னு ஒரு திடம் இருக்கும். ஒண்ணுமே தெரியாம… முடியல மாமா. ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கு. பாரிக்குமே ஒருவித பதட்டம். அவனே இப்படி பீல் பன்றான்னா… எனக்கு எப்படின்னு சொல்லத் தெரியல மாமா” என்றாள்.

பரிதிக்கு எதுவாக இருந்தாலும் தன் தம்பிக்கு துணை நிற்க வேண்டுமென்கிற எண்ணம் மட்டுமே. தம்பியின் மீது அவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறான். எல்லாம் அவன் பார்த்துக்கொள்வான் என்று.

“கொஞ்சம் ஸ்லோவா போ அவி. காத்துல முடி பிச்சிக்கும் போல” என்று ஜென் கத்துவதையெல்லாம் பொருட்படுத்தாது… நீண்ட நாட்கள் கழித்து கிடைத்த பைக் ரைட் நேரத்தை அவி ரொம்பவே ரசித்திட்டான்.

பரிதி மற்றும் அவிக்கு நிகராக வண்டியை செலுத்தினாலும் அவர்களுக்கு பின்பாக அரணாக சென்று கொண்டிருந்தான் பாரி.

சத்யா அடிக்கடி தன்னுடைய டராக்கிங் டிவைசை ஆராய்ந்தபடி பாரியிடம் தகவல் அளித்துக் கொண்டிருந்தான்.

“கிளம்பியாச்சு பாரி.”

“வெல்… நாம முதலில் போயிடணும்.”

சென்னையிலிருந்து பெங்களூரு ஐந்து மணி நேரப்பயணம். இரண்டு மணி நேரம் கடந்திருக்க சாலையோர ஓட்டல் ஒன்றில் வண்டியை நிறுத்தியிருந்தனர்.

“நைட் டைம் பைக் ரைட்… சொர்க்கம்டா” என்றான் அவி. வண்டியை விட்டு இறங்கியதும்.

ஹெல்மெட்டை கழட்டிய பாரி,

“ஹெல்மெட் போட சொன்னா போட முடியாதா உன்னால? முடியாதுன்னா இப்படியே கிளம்பிடு” என்றான் அவியிடம்.

“போட்டுக்கிறேன்” என்ற அவி ஜென்னின் சிரிப்பில் பரிதியிடம் சென்றான்.

“நான் சொன்னா கேட்கல… இப்போ நீ சொன்னதும் எப்படி சரின்னு சொல்றான் பாரு” என்ற ஜென் பூவுடன் ஓய்வறை சென்று வர… அனைவரும் தேநீர் அருந்தி சில பல நிமிடங்கள் பேச்சில் கழித்து அங்கிருந்து கிளம்பினர்.

இப்போது பூ பாரியுடன் ஏறிக்கொள்ள, சத்யா ட்ரைவ் செய்திட பரிதி பின்னால் அமர்ந்தான்.

“நான் ட்ரைவ் பண்ணட்டுமா அவி?” ஜென் கேட்டிட அவி மறுத்திட்டான்.

“டயர்டா பீல் பண்ணா கொடுக்கிறேன்” என்ற அவி “லவ் இட்” என்றான்.

“என்ஜாய் என்ஜாய்” ஜென் அவனின் தோளில் நாடி பதித்து கணவனுடனான பயணத்தை வெகுவாகவே ரசித்திட்டாள்.

“கோபம் போயிடுச்சா மலரே?”

பூ பதிலேதும் சொல்லாது அவனின் வயிற்றோடு கைகளை கோர்த்து கட்டிக்கொண்டவளாக, அவனது பரந்த முதுகில் கன்னம் அழுந்திட முகம் புதைத்தாள்.

“மலரே…”

“ஹ்ம்ம்…”

“இட்ஸ் டெம்டிங்.”

“சோ வாட்?”

“வெறுப்பேத்துறல நீ?”

“கண்டுபிடிச்சிட்டியா?”எனக் கேட்டவள் முதுகிலே கடித்து வைத்தாள்.

“வலிக்குதுடி” என்றவனுக்கு இன்பமாகத்தான் இருந்தது.

“எங்கப்போறோம்?”

“ரூட் வச்சு கண்டுபிடிக்கலையா நீ?”

“கர்நாடகா தெரியுது. அங்க என்ன பிளேஸ்?” எனக் கேட்டாள்.

“கார்டன் சிட்டி.”

“பெங்களூர்?”

“எஸ்… ஏர்லி மார்னிங் ரீச் ஆவோம். ஹோட்டல் புக் பண்ணிருக்கு. ரெஸ்ட் எடுத்துட்டு, பிரேக்பாஸ்ட் முடிச்சிட்டு பதினோரு மணிபோல கிளம்பிடலாம்” என்றான்.

“எல்லாம் பக்கா பிளான்!”

பாரி தலையை மட்டுமே அசைத்தான்.

சிறிது நேரத்தில் காற்றின் குளுமையில் பூ தூங்கிவிட்டாள்.

பாதி நேரத்திற்கு பின் முழு சாலையும் வெறிச்சோடி அவர்களுக்கு மட்டுமே உரித்தானதாக இருந்திட…

பரிதியும், ஜென்னும் கத்துவதைக்கூட பொருட்படுத்தாது… மூவரும் ரேஸ் வைத்து கரிய சாலையில் பறந்தனர்.

அதீத வேகத்தில் விழித்துக்கொண்ட பூ…

“செம பாரி” என்றவளாக அவனின் வேகத்தில் கத்தி ஆர்ப்பரித்தாள்.

அந்த கணங்கள் அவர்களுக்கு கொண்டாட்டமாகத்தான் இருந்தது என்று சொல்ல வேண்டும்.

அதிகாலை மூன்று மணியளவில் பெங்களூரை வந்தடைந்திருந்தனர். ஊருக்கு வெளியில் புறநகர் சாலையில் இருக்கும் ஹோட்டல் ஒன்றைத்தான் பாரி புக் செய்திருந்தான்.

“இன்னும் உள்ள… ஆட்கள் இருக்கும் பகுதியில் புக் பண்ணியிருக்கலாம்” என்று பரிதி சொல்லிட, பாரியும் சத்யாவும் அர்த்தமாக பார்த்துக்கொண்டனர். அதிலே பரிதிக்கு ஏதோ ஒன்று விளங்கிற்று.

பாரி மற்றும் சத்யாவின் பார்வை பரிமாற்றத்தில் அடுத்து ஏதும் சொல்லாது பரிதி அமைதியாகிட…

“மேக்சிமம் சிக்ஸ் ஹவர் பரிதிண்ணா. கிளம்பிடலாம்” என்றான் பாரி.

“நான் எதுவும் சொல்லல” என்ற பரிதி, அறை எண் கேட்டிட… வரவேற்பில் இணையம் வழியாக அறை பதிவு செய்ததை காட்டி சாவிகளை பெற்றான்.

மூன்று அறை பதிவு செய்திருந்தான்.

பரிதி, சத்யா ஒரு அறை. இரு ஜோடிகளும் மற்ற இரு அறைகளை பகிர்ந்து கொண்டனர்.

அறைக்குள் நுழைந்ததும் பாரியை பின்னிருந்து கட்டிக்கொண்ட பூ…

“லவ் யூ வேந்தா” என்க,

“நானும் மலரே!” என்றிருந்தான். எப்போதும் போல.

“என்னவாம் மலரு பொண்ணுக்கு?” எனக் கேட்டவன் முன்னிழுத்து அணைத்துக் கொண்டான்.

“தெரியல” என்றவள், அப்படியே அவனை கட்டிலில் தள்ளி அவன் மீது விழுந்தாள்.

“ஹேய்… மலரே…” அவனின் அதரங்கள் அவளின் இதழில் புதைந்து போயின.

சில நொடிகளில் விடுவித்தவள்,

அப்படியே அவனின் மார்பில் தலை சாய்த்து கண்களை மூடிக்கொண்டாள்.

அவளின் உச்சியில் இதழ் பதித்த பாரி,

“உன்னோட நான் கடைசி வரை வாழனும் பூ. என்னோட சின்ன ஆசையும் நீதான். பெரிய ஆசையும் நீதான். உனக்காகவேணும் நான் என்னை பார்த்துப்பேன். நீ எதையும் போட்டு உருட்டிக்காத” என்றான்.

“ம்” என்றவளின் அணைப்பு இறுகியது.

மெல்லத் தட்டிக்கொடுத்து உறங்க வைத்தான்.

பூ நன்றாக உறங்கிவிட்டாள் என்றதும், அலைபேசியை எடுத்து சத்யாவிற்கு தகவல் அனுப்பினான்.

அடுத்த நொடி “பரிதி அண்ணா இன்னும் தூங்கல பாரி. அவர் தூங்கியதும் வர்றேன்” என்று பதில் அனுப்பினான் சத்யா.

பாரிக்கு இம்முறை எந்த விதத்திலும் விட்டுவிடக்கூடாது என்ற அவசரம். அதனால் பரிதி உறங்கும் வரை காத்திருக்க முடியாது என்பதால் நேராக அவர்களின் அறைக்குச் சென்று கதவினை தட்டினான்.

பரிதி வந்து கதவினை திறந்தான்.

“பரிதிண்ணா சத்யா வேணுமே! நான் கூட்டிட்டுப் போறேன். கொஞ்ச நேரம் நடந்துட்டு வர்றோம்” என்று பாரி அறையின் வாயிலிலே நின்று முகம் பாராது சொல்வதிலேயே, அது உண்மையில்லை என்பது புரிந்த பரிதி எதுவும் சொல்லாது சத்யா என்று அழைத்துவிட்டு உள்ளே சென்றுவிட்டான்.

“என்ன திருட்டு வேலை செய்றீங்க?”

தன்னை தாண்டி சென்ற சத்யாவிடம் வினவினான்.

“அது… பரிதிண்ணா…” சத்யா பாரியை திரும்பிப் பார்த்திட,

“போ… பத்திரம்” என்ற பரிதி செல்லும் இருவரையும் பார்த்தபடியே கதவினை மூடினான்.

“வந்துட்டாங்களா சத்யா?”

“ம்ம்ம்… ட்ராப்பிங் லொக்கேட் இங்க தான் காட்டுது” என்ற சத்யா, “இதுதான்” என்று ஒரு அறைக்கு முன் தன் நடையை நிறுத்தினான்.

“இங்க சிசிடிவி இருக்கும்.” பாரி அத்தளத்தில் பார்வையை சுழற்றியவனாகக் கூறிட…

சத்யா ஜாமர் ஆன் செய்திருந்தான்.

பாரி பக்கத்து அறையின் கதவினை திறந்து உள்ளே சென்று அவ்வறையின் பால்கனி வழியே சத்யா குறிப்பிட்ட அறையின் பால்கனிக்குள் சத்தமின்றி குதித்தான். பாரியை தொடர்ந்து சத்யாவும்.

பால்கனியின் கண்ணாடி கதவு மூடப்பட்டிருந்தது. இடம் கும்மிருட்டாக இருந்தது. அறைக்குள் மட்டும் மத்தியில் சிறு ஒளி.

“இந்த இருட்டில் எப்படி கேப்ச்சர் பண்றது பாரி?” சத்யா கேட்டிட…

“முதலில் என்ன பன்றாங்கன்னு பார்ப்போம்” என்ற பாரி, “நைட் விஷன் காமிராடா. பரிதிண்ணாவுடையது” என்றான்.

முதலில் இருவர் வந்தனர்.

பாரியும், சத்யாவும் தங்களை முழுதாக மறைத்துக் கொண்டனர்.

இருளில் விளக்கினைக்கூட போடாது, அந்த சிறு வெளிச்சத்தில் இருக்கைகளில் அமர்ந்தனர்.

இருட்டில் இருவரின் முகமும் பார்வைக்கு தெரிய…

“இவனுங்க சாய் அனுப்பிய ஆளுங்க பாரி” என்றான் சத்யா.

“ஷ்யூர்?”

“எஸ் டா” என்ற சத்யா, “இங்க அவனுங்க மீட் பண்ண இருக்கிறது கர்நாடகா ஹோம் மினிஸ்டர். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் சாய் அவருக்கு மெசேஜ் அனுப்பினான். இவனுங்க ஃபோட்டா தான்” என்று தன்னுடைய அலைபேசியில் தான் ட்ராப் செய்த தகவலைக் காட்டினான்.

“ஹோம் மினிஸ்டர்?”

“ஆமாம்… இவனுங்க சாதாரண ஆளுங்க இல்லை பாரி” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கு ஒருவர் உள்ளே வந்தார்.

“இவர் தான் ஹோம் மினிஸ்டர் சிவராஜ்… கரெக்ட்?” சத்யா கேட்டிட பாரி ஆமென்றான்.

பாரி இங்கு வேலை செய்த போது சிவராஜ் சாதாரண கட்சித் தொண்டன் மட்டுமே. குறுகிய காலத்தில் எப்படி இத்தனை உயரம் என்று தெரியவில்லை.

“இவனை நானே ஒரு அடிதடி கேஸில் அரேஸ்ட் பண்ணி வெளுத்திருக்கேன் சத்யா” என்ற பாரி, புருவத்தை கீறினான்.

சத்யா யாவற்றையும் காட்சி பதிவு செய்து கொண்டிருந்தான்.

சாய் நாதன் அனுப்பிய இரு ஆட்களும் அவ்வறைக்குள் வரும்போது வெறும் கையுடன் தான் வந்திருந்தனர்.

ஆனால் இப்போது ஒரு பெரிய பெட்டியை சிவராஜ் முன் வைத்தனர்.

அவர்கள் பெட்டியை வைத்த அடுத்த நொடி சிவராஜ் சைலன்சர் பொருத்திய துப்பாக்கியால் சத்தமேயின்றி இருவரையும் இமைக்கும் நொடியில் சுட்டிருந்தார்.

“பாரி…” டிடெக்டிவாக இருந்தாலும், கண் முன்னே ஒரே நேரத்தில் இரண்டு கொலைகளை பார்க்கும் துணிவு சத்யாவிடம் இல்லை.

ஆனால் பாரி அசையாது நின்றான்.

சுற்றிப் பார்த்த சிவராஜ் வந்த வழியே கிளம்பியிருந்தார்.

“சத்யா நீ ரூம் போ” என்ற பாரி, சத்யாவின் கையிலிருந்த காமிராவை வெடுக்கென பறித்தவனாக, சத்யாவின் நானும் வருவேன் என்பதை கண்டு கொள்ளாதவனாக, பால்கனி வழியாக கீழே குதித்து, சுவற்றின் குழாயினை தாவி பிடித்தவனாக சரசரவென கீழே இறங்கியிருந்தான். இவர்கள் இருந்தது ஏழாவது தளம். என்னவென்று உணரும் முன்பு சத்யாவின் பார்வையிலிருந்து பாரி மறைந்திருந்தான்.

“இப்போ பரிதிண்ணா கேட்டா என்ன சொல்றது?” என்ற பெரும் கேள்வியுடன் சத்யா தங்களது அறைக்குச் செல்ல…

பரிதி இவர்களுக்காகக் காத்திருந்தான்.

“பாரி எங்கடா?”

சத்யாவின் பின்னால் பார்த்தபடி பரிதி வினவினான்.

“ரூம் போயிட்டானா?”

சத்யா இல்லையென்றான்.

“வேறெங்க?”

சத்யாவிடம் மௌனம்.

“ஒன்னும் சொல்லிடாதீங்கடா! நாங்க மண்டை காய்ந்து குழம்புறோம்” என்ற பரிதி பாரிக்கு அழைக்க, சத்யாவின் சட்டை பையில் ஒலித்தது.

“ஷிட்…”

“எப்போ போட்டான்னே தெரியலண்ணா” என்ற சத்யா, “அவன்கிட்ட இப்போ ட்ராப் பண்ற மாதிரியான டிவைஸ் எதுவுமே இல்லை” என்று தளர்ந்து இருக்கையில் அமர்ந்தான்.

அவனிடம் கொலைகளை கண்ட நடுக்கம் இன்னமுமே மிச்சம் இருந்தது. அதனை பரிதியிடம் சொல்லவும் முடியாது திணறினான்.

“உன்னை விட்டுட்டு போயிருக்கான் அப்படின்னா… அவன் எத்தனை பெரிய ஆபத்தை நோக்கி போயிருக்கான் புரியுது” என்ற பரிதி “பாரி தான் எங்க உலகமே சத்யா” என்றவனாக இருக்கையில் பொத்தென்று அமர்ந்தான்.

பரிதியின் அந்நிலை சத்யாவை வதைத்தது.

தான் கொஞ்சம் சுதாரிப்பாக இருந்திருந்தால், பாரி தனித்து போயிருக்க மாட்டானென்று தன்னையே நிந்தித்தவன் நினைவு வந்தவனாக சிவராஜின் எண்ணை ட்ராப் செய்தான்.

சிவராஜ் தனது இல்லம் செல்லாது வேறெங்கோ சென்றார்.

அவரது அலைபேசியிலிருந்து வேறொரு நபருக்கு ” காலையில் எட்டு மணிக்கு நீங்க கிளம்பலாம்” என்று தகவல் அனுப்பிவிட்டு, “டன்” என்று சாய்க்கு அனுப்பினார்.

அடுத்து சாயிடமிருந்து சிவராஜ்ஜிற்கு எந்தவொரு பதிலும் செல்லவில்லை.

விடிந்த பின்னரும் கூட பாரி வரவில்லை.

“தமிழ் வந்து கேட்டா என்னடா பதில் சொல்றது?” என்ற பரிதி இடையில் ஒற்றை கையை குற்றியவனாக நெற்றியை நீவியபடி திரும்ப தாழிடப்படாத கதவினை திறந்துகொண்டு பாரி வந்தான்.

“இன்னும் ஒன் ஹவரில் கிளம்பணும்” என்று சொல்லியவனாக, தனது அறை சென்றான்.

பூ குளித்து கிளம்பி தயாராக அமர்ந்திருந்தாள்.

எங்க போன? என்னாச்சு? இப்படி எதுவும் பூ கேட்கவில்லை.

“கிளம்பி வா வேந்தா. பசிக்குது” என்றவள், “நான் ஜென் கிளம்பிட்டாளா பார்க்கிறேன்” என்று வெளியேறினாள்.

குளியலறையில் நீருக்கடியில் நின்று கொண்டிருந்தவனின் சிந்தை வேறெங்கோ பயணித்துக் கொண்டிருந்தது.

பார்த்த தன் விழிகளின் காட்சியையே அவனால் நம்ப முடியவில்லை.

எத்தனை பெரும் செயல். சர்வ சாதாரணமாக செய்கின்றனர். இதற்கு ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டுமென நினைத்தவன் எத்தனை நேரம் தனக்குள் உழன்றவனாக தண்ணீரிலேயே நின்றிருந்தானோ? பூ கதவு தட்டி அழைத்த பின்னரே வெளியில் வந்தான்.

“எவ்வளவு நேரம் வேந்தா? எல்லாரும் கிளம்பியாச்சு” என்றவள், பையில் அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டிருக்க…

“பூ” என்று அருகில் வந்த பாரி இழுத்து அணைத்திருந்தான். அத்தனை நெருக்கம். இறுக்கம்.

“எதுவா இருந்தாலும் உன்னால முடியும் வேந்தா… தளர்ந்திடாத” என்று அவனின் முதுகினை தட்டிக் கொடுத்தாள்.

என்னவென்று கேட்காது தன்னுடைய மனநிலை புரிந்து நடந்து கொண்ட பூவின் முகம் பார்த்தவன், தாடையை அழுத்தமாக ஒற்றை கையால் பிடித்து கன்னத்தில் தன் மீசை புதைய அழுந்த முத்தமிட்டான்.

“வேந்தா!” பூவின் விழிகள் மெல்ல இமை மூடியது.

முகமெங்கும் முத்த மழை பொழிந்தே அவளை விடுத்தான்.

“ஆர் யூ ஓகே!”

“நீயிருக்கும் போது எனக்கென்ன மலரே” என்றவன் நொடியில் தயாராகிட பைகளை எடுத்துக்கொண்டு உணவு கூடமிருக்கும் தளம் வந்தனர்.

அங்கு ஏற்கனவே மற்ற நால்வரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க அவர்களுடன் இணைந்தனர்.

அடுத்த அரை மணியில் அங்கிருந்து ஹப்பாலி செல்லும் புறவழி பாதையில் பயணத்தை தொடர்ந்தனர்.

இம்முறை பரிதி பின்னால் பாரி அமர்ந்திருந்தான்.

பூ அவியின் பின்னால் இருக்க, ஜென் பின்னால் சத்யா அமர்ந்திருந்தான்.

“எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம் ஜென். உனக்கு எம்மேல ஏதும் கோபம் அப்படின்னா… இதில் காட்டிடாதே” என்று சத்யா சொல்லும்போதே அவள் முடுக்கிய வேகத்தில் சத்யா அலறியிருந்தான்.

மற்ற நால்வரும் சிரித்திட…

“வேணுன்னுதான பண்ற?” என்றான் சத்யா.

“ஆமா சத்யாண்ணா” என்ற ஜென்… செல்லும் வேகத்தில் ஒற்றை கையை ஆக்சிலேட்டரிலிருந்து விடுத்து, அலைபேசியை எடுத்து சுயமி எடுத்திட…

“ஏய்… ஆத்தா… என்னை முழுசா வீடு போய் சேர விடமாட்ட போல நீ?” என்றவன், “இவளை எப்படிடா அவி சமாளிக்கிற?” என்று அவியிடம் வினவினான்.

“தெரிஞ்சே மாட்டிக்கிட்டேன் சத்யா” என்று அவி சொல்ல… ஜென் முறைத்த முறைப்பில் அவி கப்சிப்.

“அந்த பயம் இருக்கணும்” எனக்கூறி அவியின் முதுகில் இரு கைகளாலும் தட்டி பூ சிரித்திட…

“அவனுக்கு தலையில் கொட்டு வாங்காம ஒன்னும் சரிவரல” என்றாள் ஜென்.

“பிளீஸ் டி. மானத்தை வங்காத!” அவி இரைஞ்சினான்.

“அதெங்க நமக்கு இருந்துச்சு அவி. எப்பவும் போல சும்மா துடைச்சிப்போட்டு பொண்டாட்டி காலில் விழுந்திடு. தினமும் நடக்கிறது தான!” என்று பூ கேலி செய்ய…

“அங்கையும் அப்படித்தானா?” எனக் கேட்டு தானே மாட்டிக்கொண்டான் சத்யா.

மூவரின் வண்டியும் இணைந்தே பயணிக்க… பேச்சுக்கு பஞ்சமில்லாது கலகலப்பாக இருந்தது.

“அங்கையும் அப்படித்தனான்னா? நீயும் நதியாகிட்ட நல்லா வாங்குற போல?” என்று பரிதி கூட அவர்களின் பேச்சில் உற்சாகமாகக் கலந்து கொண்டிருந்தான்.

ஆனால் பாரி? ஏதோ யோசனையிலேயே அமைதியாக இருந்தான்.

சுற்றம் அவனின் கருத்திலே பதியவில்லை என்பதை அப்போதுதான் கவனித்தான் பரிதி.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 35

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
24
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment