Loading

தூவானப் பயணம் 5

“காவ்யா ஹஸ்பெண்ட் சாய்நாதன் தான்னு நீ அரேஸ்ட் பண்ண பிறகு தான் மச்சான் எனக்குத் தெரியும்.”

தனியாக பேச வேண்டுமென்று பாரி அழைத்து வந்ததுமே சத்யா முதலில் சொல்லியது இதைத்தான்.

பாரி நீ சொல்வதற்கு இன்னும் ஏதும் உள்ளதா? பார்த்திருந்தான்.

“பெங்களூர்ல் நீ ஜாயின்ட் பண்ண சமயம், ஒரு பெரிய சமக்ளிங் கேங் கேஸ் டீல் பண்ணிட்டு இருந்தோமே அப்போ தான் ஒருநாள் அப்பா திடீர்னு கால் பண்ணி என்னை ஹைதராபாத் வர சொன்னார். எப்பவும் பேசாதவர் வர சொல்றாரேன்னு போனா, காவ்யா வயித்துல குழந்தையோட நிக்கிறாள். யாருன்னு கேட்டதுக்கு, அவனே வேணான்னு வந்துட்டேன். அவனை தெரிஞ்சு என்ன செய்யப்போறன்னு கேட்டுட்டா(ள்). உன் டிடெக்டிவ் மூளையை வைத்து கண்டுபிடிக்க ட்ரை பண்ணாத சொல்லிட்டா(ள்). ரொம்ப நொந்து வந்திருக்கான்னு அவள் பேச்சில் புரிஞ்சுது. அபி பிறந்தான். அவனுக்காகக்கூட அப்பா யாருன்னு சொல்ல மறுத்துட்டா(ள்). ஃபைவ் சிக்ஸ் மன்த்ஸ் பேக் அப்பா இன்னொரு மேரேஜ் பண்ணிக்க சொல்லி வற்புறுத்தவும், அவரை விட்டு மொத்தமா வந்துட்டா. அவருக்கு பணம், தொழில் தான் முக்கியம். மகனை மாதிரியே மகளையும் ஒதுக்கியாச்சு. சாய்நாதன் காவ்யா இங்க வந்ததை எப்படியோ தெரிஞ்சிட்டு ஸ்கூலுக்கு போய் பிரின்சி மூலமா அபியை பார்க்க ட்ரை பண்ணியிருக்கான். அன்னைக்கு அபி ஸ்கூலுக்கு போகாததால பிரின்சி காவ்யாவுக்கு இன்பார்ம் பண்ணாங்க. அப்பவும் என்கிட்ட மறைச்சிட்டாள். நீ அரேஸ்ட் பண்ற வீடியோ பார்த்துட்டு இருந்தவள்… இதுதான் உன் அப்பான்னு அபிகிட்ட அவளறியாம சொன்னப்போ தான் எனக்கும் தெரிஞ்சுது” என்று முழுதாக விளக்கம் கொடுத்தான்.

“எனக்கு என் ஃப்ரெண்ட் சத்யாவை நல்லா தெரியும்” என்ற பாரி சத்யாவை அணைத்து விடுவிக்க…

“மகேந்திரன் இதில் அதிகமா இன்வால்வ் ஆகுற மாதிரி இருக்கு. கொஞ்சம் சீக்கிரம் மூவ் பண்ணனும் சத்யா” என்றான்.

“அவனுங்க மூவ் பண்ண ஸ்டார்ட் பண்ணிட்டால் நாமளும் ஆரம்பிச்சிடலாம் பாரி” என்ற சத்யா, “எப்பவும் காவ்யாக்காகன்னு சாய்நாதனை பார்க்க மாட்டேன் மச்சி” என்றான்.

“நீ இவ்வளவு விளக்கம் கொடுக்க தேவையில்லடா… எல்லாம் சொல்லிட்டா, என்கிட்ட எதுவும் மறைக்கலன்னு உனக்கு நிம்மதியா இருக்குமே அதான் நீ சொன்ன எல்லாத்தையும் கேட்டேன்” என்ற பாரியின் புரிதலில் சத்யாவுக்கு அத்தனை ஆசுவாசம்.

பாரி திடீரென காவ்யாவின் கணவனைப்பற்றிக் கேட்டதும் தன்னை தவறாக நினைத்துவிடுவானோ என்று உள்ளுக்குள் சிறு அச்சம் இருக்கத்தான் செய்தது. அது இப்போது முற்றிலும் நீங்கியது.

திடீரென பேச்சு சத்தம் உரக்க கேட்க பாரியும், சத்யாவும் நண்பர்கள் இருந்த இடத்திற்கு விரைந்தனர்.

சாய் நாதன் தான் காவ்யாவிடம் தகராறு செய்து கொண்டிருந்தான். வேலுநாதன் அவனுக்கு பின்னால் அமைதியாக நின்றிருந்தார்.

“நான் என் பையனை பார்க்கணும்.”

“காட்ட முடியாது.” அத்தனை அழுத்தமாக மொழிந்தாள் காவ்யா.

சாய்நாதன் கேட்டினை கடந்து உள்ளே வருவதை பார்த்ததுமே நண்பர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவள் வேகமாக எழுந்து அவனருகில் வந்திருந்தாள்.

இவர்களுக்கு பத்தடி தொலைவில் மற்றவர்கள் நின்றிருக்க சாய்நாதனின் கவனம் அங்கு யார் மீதுமில்லை. ஆனால் வேலு நாதன் அங்கு நின்றிருந்த பாரியின் குடும்பத்தைதான் அளவிட்டுக் கொண்டிருந்தார். அவருள் ஒரு எண்ணம் ஓடியது.

சத்யா பாரியின் நண்பனென்று மறைமுகமாக தெரிந்து வைத்திருப்பவருக்கு, ‘காவ்யாவுக்காகத்தான் பாரி தன் மகனை இன்று கோர்ட்டின் குற்றத்திலிருந்து தப்பிக்க விட்டுவிட்டானா?’ என்று.

பாரி நண்பர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் அறிந்தவருக்கு அப்படியாகத்தான் இருக்குமென்று அவ்வெண்ணம் வலுப்பெற்றது.

“இங்கிருந்து போயிடு!” கெஞ்சலையும் நிமிர்வாக வெளிப்படுத்தினாள் காவ்யா.

“என் பையன்கிட்ட பேசிட்டு நான் கிளம்பிடுறேன்…”

“முடியாது. நான் அதுக்கு சம்மதிக்க மாட்டேன்.”

“உன் சம்மதம் எனக்குத் தேவையில்லை. அவன்கிட்ட எனக்கும் ஈக்குவெல் ரைட்ஸ் இருக்கு” என்று சாய் தெரிவிக்க… காவ்யாவிடம் அப்படியொரு சிரிப்பு.

“என்னங்க பார்த்திட்டு நிக்கிறீங்க? போய் என்னன்னு கேட்கலாமே?” இளா பரிதியிடம் சொல்லிட,

“என்னயிருந்தாலும் பேமிலி மேட்டருக்குள்ள நாமெப்படி இன்டர்பியர் ஆகுறது இளாக்கா?” எனக் கேட்டான் அவி.

“ஆமாம் நதியாவே சும்மா நிக்கிறாங்க” என்றாள் லீ.

அவர்களை பார்த்த நதியா… “என்ன பேசணும்? அவங்களுக்குள்ள என்ன பிரச்சினைன்னு தெரிந்தாலாவது யார் மேல தவறுன்னு பேசிட முடியும். அப்படியே சாய் மீதே தவறு இருந்தாலும், பெத்த அப்பாவா பிள்ளையை பார்க்கணும் கேட்கிறவரின் உரிமையை எப்படி குறை சொல்லிட முடியும்?” என்று கேட்டாள். நதியாவின் கூற்று அனைவருக்குமே சரியெனவே பட்டது.

“ஆனால் நீங்க ரெண்டு பேரும் போலீஸுங்கிற முறையில் கேட்கலாம். தப்பில்லை” என்றாள். பூ மற்றும் ஜென்னிடம்.

“பட் நாங்க இப்போ ட்யூட்டியில் இல்லையே. அதுவும் பேமிலி பார்ட்டிக்காக வந்திருக்கோம்” என்று ஜென் சொல்ல…

“நீங்க சொன்னதேதான் நதியா” என்றாள் பூ.

“பேச்சு வார்த்தைதானே நடக்குது. வயலன்ஸ் எதுவும் ஆகற வரை போலீஸா எங்களால் கிட்ட போக முடியாது. பிகாஸ் இது டொமெஸ்டிக் மேட்டர்” என்ற பூ… “காவ்யா இவ்ளோ ஸ்ட்ராங்காடா அவி?” எனக் கேட்டிருந்தாள்.

“எங்களுக்கே இப்போதான் தெரியும். ஆபிஸில் ஒரு பல்லிக்கு பயந்தவளா இவன்னு இருக்கு” என்றான் தீபன்.

அப்போதுதான் பாரியும் சத்யாவும் அங்கு வந்தனர்.

பாரி நண்பர்களுடன் நின்றுவிட, சத்யா காவ்யாவின் அருகில் சென்றான்.

பாரியின் கவனம் பிள்ளைகள் மீது பதிந்தது. அவர்கள் சற்று இடைவெளியில் விளையாட்டில் மூழ்கியிருந்தனர்.

“இத்தனை வருஷம் விட்டு இப்போ என்ன புதுசா பிள்ளை பாசம்?” காவ்யாவின் கேள்வி சாய்க்கு சுருக்கென்றது.

“காவ்யா!” அருகில் வந்த சத்யாவிடம்,

“வாங்க மச்சான். உங்க தங்கை பண்ற காரியத்தை பாருங்க, என் பையனை காட்ட சொல்லுங்க” என்றான் சாய்நாதன்.

“உங்க பையன் தானே நீங்க போய் பாருங்க.” சத்யா சொல்ல காவ்யா வேண்டாமென்று கத்தினாள்.

தங்கையை அடக்கிய சத்யா, “அங்க விளையாடிட்டிருக்கும் பாய் கிட்ஸில் உங்க மகன் யாருன்னு கரெக்ட்டா சொல்லுங்க நானே உங்களோட அவனை அனுப்பி வைக்கின்றேன்” என்றான்.

பிள்ளைகள் ஒவ்வொருவரையும் உற்று நோக்கிய சாய்க்கு யாரென்று அடையாளம் காண முடியவில்லை.

“ஸ்கூலுக்கு போய் நேம் சொல்லி உங்க பேரன்னு சொல்ல தெரிந்த உங்களுக்குக்கூடவா உங்க வாரிசு யாருன்னு தெரியல?” வேலுவை பார்த்து சத்யா கேட்டதில் அத்தனை நக்கல்.

பாரி இருப்பதால் ஏதும் தவறாக நடந்திடக் கூடாதென வேலு அமைதியாக நின்றார்.

“மகனோட பெயரையே அம்மா, மாமா டீட்டெயில் சொல்லி ஸ்கூல் பிரின்சியிடம் தெரிஞ்சிகிட்ட இவங்கிட்ட கேட்டால் எப்படிண்ணா கண்டுபிடிப்பாங்க” என்ற காவ்யா, “உனக்கும் எனக்கும் தான் எதுவுமில்லைன்னு ஆகிப்போச்சே. திரும்ப எதுக்கு வந்து தொல்லை கொடுக்கிற?” என்று சாயினை வெளிநோக்கி தள்ளினாள்.

“ஏய்!” வேலு முன்வர,

“மருமக பிரெக்னென்ட்டா இருக்கும்போதே பணத்துக்காக பையனுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்க முடிவு செய்த நீங்களாம் என் முன்ன நிக்கவேக்கூடாது. இதுல சவுண்ட் விடுறீங்களா?” எனக் கேட்டவள், “அந்த பொண்ணு கல்யாணத்தன்னைக்கு ரெண்டாந்தாரமா போகமாட்டேன்னு ஓடிப்போயிட்டாலாமே?” என்ற காவ்யாவின் குரலில் அத்தனை கேலி.

“என்னையோ, என் பையனையோ நெருங்க நினைச்சீங்க…” அவள் விரல் நீட்டி எச்சரித்ததிலே தங்களைப்பற்றி அவளுக்கு ஏதோ தெரிந்திருக்கிறதென இரு நாதன்களுக்குமே புரிந்தது. பாரிக்கும்.

“பிள்ளையோட வயது வச்சுக்கூட அங்கிருக்கும் பசங்களில் அவன் யாருன்னு உன்னால கண்டுபிடிக்க முடியலல… நீயெல்லாம் ஒரு அப்பன்?” என்ற காவ்யா, “இங்கிருந்து போறீங்களா? இல்லை” என்று காவ்யா பாரியை பார்க்க…

அடுத்து தாங்கள் செய்ய வேண்டிய பல வேலைகளை நினைத்த வேலு, மீண்டும் பாரியிடம் சிக்கிக்கொள்ளக் கூடாதென மகனை இழுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றார்.

“அண்ணா…” என்று தோள் தாங்கிய தங்கையை ஆறுதலாக அணைத்துக்கொண்ட சத்யாவுக்கு வேறெதுவும் அவளிடம் கேட்கத் தோன்றவில்லை.

பனித்த கண்ணீரை இருவருமே துடைத்தபடி மற்றவர்களிடம் செல்ல…

“ஹேய் சியரப் மேன்” என்று அடுத்த நொடி அவ்விடத்தை கலகலப்பாக்கினர் நண்பர்கள் கூட்டம்.

பிள்ளைகள் அனைவரும் ஒன்றாக இருக்க அவரவர் வீட்டிற்கு செல்ல மறுத்தனர்.

“நாளை லீவ் தானே. நைட் இங்கே இருக்கட்டும். நான் பார்த்துக்கிறேன்” என்று நதியா சொல்ல, காவ்யாவும் சத்யாவும் ஆமோதித்தனர்.

“யோசிச்சிக்கோங்க சத்யாண்ணா. தனித்தனியாவே இவங்களை சமாளிக்க முடியாது. இதுல ஒண்ணா அவ்வளவு தான்!” என்றாள் பூ.

“இவ்வளவு நேரம் நாங்க வம்பெதுவும் பண்ணாது குட்டா தானே ஆண்ட்டி இருந்தோம்” என்று அபி முன்வர, “நானும் ஜித்தும் குட்டிங்களையும் பார்த்துப்போம்” என்று சின்னு கூறினாள். தன் அக்கா சொல்லியதை கேட்டு ஆரிஷ் ஆமாமென்க மற்ற பிள்ளைகளும் ஒன்றாக ஆரவாரம் செய்தனர்.

இறுதியில் பெற்றவர்கள் தான் இறங்கி வரும்படி ஆனது.

“எதுன்னாலும் உடனே கூப்பிடுங்க” என்று சொல்லி அனைவரும் தத்தம் இல்லம் சென்றனர்.

செல்லும்போது பாரி சாலையில் கண்ணாக இருக்க… அவனின் சிந்தை வேறெங்கோ இருந்தது.

அவனது தோள் மீது சாய்ந்திருந்த பூ…

“லீவ் எதுக்கு போட்ட வேந்தா? ஏதும் அண்டர் கிரவுண்ட் வொர்க்?” எனக் கேட்டாள்.

பாரி அப்போதும் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான்.

“வேந்தா…”

“ஹான்… என்ன பூ?”

“நத்திங்” என்றவள், “நானும் எமெர்ஜென்சி லீவ் போடுறேன் ஒன் வீக் ட்ரிப் மாதிரி எங்கையாவது போயிட்டு வரலாமா? கொலை, கொள்ளை, திருட்டுன்னு பார்த்து மண்டை சூடாகிப்போச்சு” என்றாள்.

சில நொடிகள் அமைதியாக ஏதும் சொல்லாது இருந்தவன்,

“லீவ் கான்சல் பண்ணலான்னு தின்க் பன்றேன் மலரே!” என்றான்.

“ஆர் யூ ஓகே வேந்தா?”

“யா அம் ஓகே” என்றவன், “போற ரூட் சரியான்னு ஒரே குழப்பமா இருக்கு” என்றான் வண்டியின் வேகத்தை கூட்டியவனாக.

“கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுடா. நீ பார்க்காத கேஸா?” என்றாள். அசட்டையாக.

“இது இதுவரை பார்க்காத கேஸ்.”

பாரி சொல்லிய குரலே வித்தியாசமாக இருந்தது.

“சாய்நாதன் கொலை பண்ண பொண்ணு மும்பை பிக் ஷாட் ஒருவரோடு மகள். அவளோடதான் சாய்க்கு செக்கெண்ட் மேரேஜ் அரேன்ஞ் ஆச்சு. மண்டபத்தை விட்டு போன பொண்ணு சாய்நாதனோட லிவ்விங்கில் இருந்திருக்காள். அவனோட இருக்க நினைத்தவள் ஏன் கல்யாணம் வேணான்னு போகணும்?” என்று பூவிடம் கேள்வி கேட்பதைப்போல் தனக்குத்தானே கேட்டுக்கொண்டவன், “கிட்டத்தட்ட பதினைந்து வருடம் ரிலேஷன்ஷிப்பில் இருந்த பொண்ணை அவன் கொலை செய்ததற்கான மோட்டிவ் என்ன? இப்போ அவன் ஏன் காவ்யாவை நெருங்க ட்ரை பன்றான்?” மண்டைக்குள் ஓடிய கேள்விகள் யாவுக்கும் விடை தெரியாது குழம்பினான்.

“அபிக்காக அவன் வந்தான் தோணுது வேந்தா. அவன் ஒரு முறை கூட நீயும் வான்னு காவ்யாவை சொல்லவேயில்லை. அபி மட்டும் தான் அவன் குறி” என்றாள் பூ. காவ்யாவுக்கும், சாய்க்கும் நடந்த வாக்குவாதத்தை வைத்து கூறினாள்.

“அபி அவன் பக்கம் வந்துட்டா, காவ்யா தானா வந்திடுவான்னு அவனோட திட்டம்” என்ற பாரி, “காவ்யாவுக்கு அவனுங்களோட சீக்ரெட் ஏதோ தெரிந்திருக்கு” என்ற பாரிக்கு அது என்னவென்ற யோசனை.

*******************

அன்று காலை ஜாக்கிங் சென்ற பாரி கையில் பெரிய கட்டுடன் வீடு வந்தான்.

முதலில் கண்ட பரிதி, பாரி நடக்கவே சிரமப்படுவதை உணர்ந்து…

“என்னடா இது? எப்படி ஆச்சு?” எனக் கேட்டுக்கொண்டே அவனருகில் சென்று தம்பியை தாங்கிக்கொண்டான்.

பரிதியின் முகத்தில் அத்தனை பதற்றம்.

“பீச் பக்கம் ஜாக்கிங் போலான்னு போனேன் பரிதிண்ணா. கிளம்பும் போது பைக் ஸ்கிட் ஆகிட்டு” என்றான் பாரி.

“உண்மைய சொல்லு பாரி…?”

ஒற்றை கண்ணை அடித்து மற்றைய கண்ணை சிமிட்டிய பாரி… “ஜஸ்ட் டிராமா பரிதிண்ணா. அம் பெர்பெக்ட்லி நார்மல்” என்று சொல்லி பரிதியின் பிடியிலிருந்து விலகி தன்னுடைய வழக்கமான தோரணையான நடையில் நடந்து காண்பித்தான்.

“இதுவும் டூப் தான்” என்று கையை காண்பித்த பாரி, நன்கு அசைத்து காண்பிக்க,

அனைவரும் பாரியை சூழ்ந்து விட்டனர்.

ஆளாளுக்கு அவனின் நலன் விசாரித்திட… பூவின் கண்கள் கலங்கிவிட்டிருந்தது.

“ச்சூ… பூ” என்றவன், “நான் மெடிக்கல் லீவ் போட்டது உண்மையா இருக்காதுன்னு அந்த வேலுநாதனுக்கு சந்தேகம் போல… என்னை வீட்டுல உட்கார வைக்க நினைக்கிறான். அடிக்க ஆளுங்களை அனுப்பியிருந்தான். சும்மா நானும் நாலு அடி வாங்கிட்டு கை கால் உடைஞ்ச மாதிரி பிளே பண்ணியிருக்கேன். அவ்வளவு தான். சின்ன கீறல் கூட இல்லை” என்று அவன் சொன்னாலும் மற்றவர்களால் அதனை எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.

“முதலில் அந்த கட்டை அவிழ்த்து எறிடா! பார்த்ததும் பக்குன்னு ஆகிடுச்சு” என்று தில்லை ஆசுவாசம் கொள்ள…

“இதென்ன விளையாட்டு பாரி?” என்று இளா கடிந்து கொண்டாள்.

“நல்லவேளை பிள்ளைங்க சத்யா வீட்டில் இருக்காங்க. நீ வந்து நின்ன கோலத்துக்கு பார்த்திருந்தா, பயந்திருப்பாங்க” என்று பார்வதி அவனின் தலையிலே கொட்ட…

“இன்னும் நாலு கொட்டுங்க அத்தை” என்றாள் பூ.

“நீயென்னவோ என்னை அடிச்சதே இல்லைங்கிற மாதிரி, அம்மாவை அடிக்க சொல்ற?” என்று பாரி பூவை பார்வதியிடம் போட்டுக்கொடுக்க…

“அப்போ எல்லார் முன்னவும் அடிக்கவா?” எனக் கேட்டவள், “அத்தைகிட்ட எனக்கென்ன பயம். அவங்களும் என்னோட சேர்ந்து உன்னை ஓடவிட்ட கதையெல்லாம் மறந்துட்டியா?” என்றாள் பூ.

“சரி சரி அவன் என்னவோ பண்ணட்டும். நாம நம்ம வேலையை பார்ப்போம்” என்று பார்வதி சொல்ல மற்றவர்கள் கலைந்திட பரிதி தன் தம்பியின் அருகில் அமர்ந்தான்.

“கோபம் போயிடுச்சா பரிதிண்ணா?”

பாரியின் கைகளை பிடித்து அழுத்தம் கொடுத்த பாரி, “என்ன பண்ணாலும் குடும்பத்தை மனசில் வைத்து பண்ணு பாரி. உன்னை சுத்தி தான் நாங்க இருக்கோம். ஒரு செக் உடம்பே நடுங்கிப்போச்சு. கவனம்” என்று அழுத்தம் கொடுத்த கைகளில் தட்டியவனாக சென்றுவிட்டான்.

“மிஸ் யூ பரிதிண்ணா!”

தன் முதுகை தீண்டிய பாரியின் வார்த்தைகளில் திரும்பிய பரிதி…

“நானும்” என்றிருந்தான்.

“அப்போ ஏன் இன்னும் உர்ருன்னு இருக்கீங்க? உங்களுக்கு எம்மேல கோபப்படத் தெரியுமா?” எனக் கேட்டான் பாரி.

“அதுதான் முடியமாட்டேங்குது” என்று சொல்லிய பரிதி கைகளை விரிக்க… சிறுவனாக ஓடிச்சென்று அண்ணனின் கைகளில் தஞ்சம் புகுந்திருந்தான் பாரி.

“இவனை தமிழ்நாட்டையே கையில் வைத்திருக்க போலீஸுன்னு சொன்னா எவனாவது நம்புவான்?” உணவு மேசையில் உணவு பாத்திரங்களை வைத்துக்கொண்டிருந்த பார்வதி சொல்ல… “எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் வீட்டுக்கு பிள்ளை தானே பாரு” என்று கூறினார் தில்லை.

பெற்றோருக்கு தங்கள் பிள்ளைகள் இருவரும் இந்த வயதிலும் அன்பும் அரவணைப்புமாக ஒற்றுமையுடன் இருப்பதில் அத்தனை சந்தோஷம்.

“நீங்களே கண்ணு வைக்காதீங்க அத்தை. தாய் கண்ணு தான் பொல்லாததுன்னு தங்கம் சொல்லும்” என்றாள் இளா.

“அதுக்குன்னு என் பசங்களை நான் பார்க்கக்கூடாதாக்கும். வேணுன்னா உன் புருஷனுக்கு நீ சுத்திப்போட்டுக்கோ” என்ற பார்வதியின் பேச்சில் இளாவும் தில்லையும் சிரித்துவிட்டனர்.

“கட்டிபிடிச்சிட்டு நின்னது போதும். சாப்பிட வாங்கடா!” பார்வதி அழைக்க, ரெபிரஷ் செய்து வருவதாக பாரி மேலே செல்ல… அலுவலகம் செல்ல கிளம்பியிருந்த பரிதி உணவு மேசைக்கு வந்தான்.

ஏதோ யோசனையோடே அவன் உணவு உட்கொள்ள… தில்லை என்னவென்று கேட்டார்.

“பாரியை வாட்ச் பண்ணிட்டே இரு தமிழ். அவனும், சத்யாவும் பெரிய பிளானில் இருக்கானுங்க. என்னால அமோஸ் விஷயத்தையே இத்தனை வருஷங்களாகியும் மறக்க முடியல” என்று கண்களை அழுந்த மூடி திறந்த பரிதி… “அவனை தனியா எங்கையும் அனுப்பிடாத!” என்றான்.

“பாரி லீவ் எடுத்திருக்கிறதே ஏதோ பெரிய கேஸ்காகத்தான் மாமா. அவன்கிட்ட போய் வெளிய போகாதன்னுலாம் சொல்ல முடியாது. கேட்கவும் மாட்டான்” என்ற தமிழுக்கு வெளியில் காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் உள்ளுக்குள் பாரியின் நலன் குறித்து பயம் இருக்கத்தான் செய்கிறது.

என்னதான் காக்கி உடையணிந்து காவல் பணியில் இருந்தாலும், பாரி இதுபோன்று உயிர் பணயம் வைத்து களத்தில் இறங்கும் போதெல்லாம் மூச்சினை பிடித்துக்கொண்டு தவிப்பாய் வலம் வருவாள்.

மீண்டும் அந்த தவிப்புகளும் பயங்களும் ஆரம்பித்துவிட்டன. என்று இந்த வழக்கினை முடிக்கின்றானோ அன்று தான் அவள் சீராவாள்.

“ரெண்டு பேரையும் இந்த வேலையை விட்டுத் தொலைங்கன்னா கேட்கிறதில்லை. அடிக்கடி வீட்டில் இருக்கவங்களை பயமுறுத்தி பார்க்கிறதே வேலையாப்போச்சு” என்று ஆதங்கமாகக் கூறினார் பார்வதி.

‘ஆரம்பிச்சுட்டாங்க. இனி வேலையை விட சொல்லி ஒரு பிரசங்கமே நடத்துவாங்க’ என உள்ளுக்குள் கவுண்டர் கொடுத்த தமிழ், இளாவுக்கும், பரிதிக்கும் கண் காட்டிவிட்டு அங்கிருந்து கழண்டு கொண்டாள்.

“நல்லாவே எஸ்கேப் ஆக சொல்லிக்கொடுத்திருக்கான்” என்று பாரியை திட்டியவர், “நீ சொன்னா கேட்பான் பரிதி” என்றார் பார்வதி.

“யாரு நானு…” என்ற பரிதி, “பத்து வருஷத்துக்கு முன்னாடி தமிழ் சொல்லியே கேட்காதவன். நான் சொல்லி எங்கம்மா?” என்று கை கழுவச் சென்றுவிட்டான்.

“பார்த்திங்களா? தம்பிக்காரனுக்கு அவ்வளவு சப்போர்ட். அவனுக்கு பிடிச்சதை என்னால வேண்டான்னு சொல்ல முடியாதுன்னு நேரடியா சொல்லாம எப்படி சுத்தி வளைச்சு சொல்லிட்டு போறான் பாருங்க?” என்று கணவரிடம் தன் ஆதங்கத்தைக் காட்டினார்.

“எவ்வளவு பேசினாலும் அவங்க நிலையிலதான் அவங்க இருக்கப்போறங்க. தேவையில்லாம நீங்க ஏன் அத்தை உங்க எனர்ஜியை வேஸ்ட் பண்றீங்க?” என்று இளா பார்வதியை ஆற்றுப்படுத்தினாள்.

“ட்யூட்டி கிளம்பல நீ?”

ஸ்டேஷன் செல்ல கிளம்பியிருந்த தமிழ் அறைக்குள் வந்து உட்கார்ந்திருக்கவும், குளித்துவிட்டு வந்த பாரி காரணம் கேட்டான்.

வேகமாக எழுந்து சென்று அவனை கட்டிக்கொண்ட தமிழ், அமைதியாக இருக்க… அவளின் அணைப்பின் அழுத்தம் கூடிக்கொண்டே சென்றது.

‘எதையோ போட்டு மருகுறாள்’ என நினைத்த பாரி தன்னை அவளிடம் ஒப்புவித்து நின்றான்.

“எவ்ளோ சீக்கிரம் முடியுமோ இந்த கேஸ் முடிச்சிடு வேந்தா. பொய்யாவே இருந்தாலும் உன்னை கட்டோடு பார்த்ததும்…” என்றவள் அதற்கு மேல் சொல்ல முடியாது இறுக்கத்தை கூட்டினாள்.

“அவன் ஸ்டெப் வைக்காமல… என்னால மூவ் பண்ண முடியாது பூ. ஏதோ ரொம்ப பெரிய தப்பு செய்றானுங்க. சின்ன ஹிண்ட் கிடைச்சாலும் தூக்கிடலாம்” என்று சொடக்கிட்ட பாரியின் குரலில் அத்தனை தீவிரம்.

“எதுவுமே தெரியாம நீ இந்தளவுக்கு ரிஸ்க் எடுக்கமாட்டன்னு தெரியும். ஏதோ படபடப்பாவே இருக்கு” என்றவள் அவனின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு… “போயிட்டுவரேன்” என்று சென்றுவிட்டாள்.

“இன்னும் சீக்ரெட்டா டீல் பண்ணலாமோ?” சிந்திந்தவன் சத்யாவிற்கு அழைக்க அலைப்பேசி எடுத்த கணம் அவனே அழைத்திருந்தான்.

“பாரி வீட்டுக்குதான் வந்திட்டு இருக்கேன். செம லீட் கிடைச்சிருக்கு” என்றான்.

பாரியின் உடலும் மூளையும் அதீத சுறுசுறுப்பாகியது.

“அம் வெயிட்டிங் மேன்” என்ற பாரி “ஆரிஷ், சின்னு?” என்றான்.

“கிட்ஸ்லாம் தீம் பார்க் போறாங்க பாரி. நதியா, காவ்யா கூட்டிட்டு போறாங்க. இளா அண்ணியும், பரிதிண்ணாவும் டூ ஹவர்ஸில் ஜாயின் பண்ணிக்கிறோம் சொல்லியிருக்காங்க” என்ற சத்யா, அலைப்பேசியை வைத்திட, பாரி சாய்நாதனுக்கு எதிராக அந்த கொலை வழக்கில் திரட்டிய ஆதரங்களோடு வேலு நாதனுக்கு எதிராக எதிர்பாராமல் கிடைத்த ஆதாரங்களையும் எடுத்து வைத்து சத்யாவிற்காகக் காத்திருந்தான்.

பாரி குறுக்கும் நெடுக்குமாக பரபரப்போடு… சத்யா சொல்லப்போவது என்னவாக இருக்குமென்ற யோசனையோடு அறைக்குள்ளே நடந்து கொண்டிருக்க… கீழிருந்து பார்வதி அழைக்கும் குரல் கேட்டது.

என்னவென பாரி செல்ல… லீயும் தீபனும் வந்திருந்தனர். தீபனுக்கு அன்னை மட்டும் தான். அவரும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்திருக்க, இப்போது தீபனுக்கும் பாரியின் குடும்பம் தான் சொந்தம்.

“என்ன ரெண்டு பேரும் ஒண்ணா வந்திருக்கீங்க?” என்றபடி அவர்களுக்கு முன்வந்து அமர்ந்தான் பாரி.

லீ சொல்ல வர,

“இரு இரு… இனிப்பான செய்தி இனிப்போட” என்று வீட்டில் ஏற்கனவே செய்திருந்த குலாப் ஜாமுனை எடுத்துக்கொண்டு ஓடி வந்த பார்வதி, ஆளுக்கு ஒன்று தன் கையாலே ஊட்டிவிட்டு “இப்போ சொல்லு” என்றார்.

“என்ன குட் நியூஸ் தீபன்?” பாரி தன் அன்னை செய்யும் அலப்பறையில ஆர்வமாகவே கேட்டான்.

“குட் நியூஸ் தான் பாரி” என்று தீபன் அந்த “குட் நியூஸ்” என்பதில் அதீத அழுத்தம் கொடுத்திருக்க…

“வாவ்!” என்று உற்சாகமாக கத்தியிருந்தான் பாரி.

“எத்தனைமுறை கேட்டிருப்பேன். இன்னொன்னு பெத்து குடுங்கடான்னு. எம்பொண்ணு தான் என் ஆசையை நிறைவேத்தி வச்சிருக்காள்” என்று பார்வதி லீயை அணைத்து உச்சி நுகர்ந்தார்.

“ஹாஸ்பிடல் போனீங்களா?” தில்லை கேட்டிட,

“அங்கிருந்து தான் வர்றோம் மாமா!” என்று பதில் வழங்கினான் தீபன்.

“சரிப்பா… நீ பிள்ளைங்களையும் கூட்டிட்டு இங்க வந்திடு. தனியா அங்க வேண்டாம். ரெண்டு வாலுங்களையும் பார்த்துகிட்டு லீயையும் பார்த்துக்கணும். உனக்கு சிரமம். இங்கன்னா ஆள் மாத்தி ஆளிருப்போம்” என்று தீபனை மறுக்கவே விடாது கட்டளை போல் பேசியிருந்தார் பார்வதி.

“பசங்களும், லீயும் இருக்கட்டும் அத்தை. நான் தினமும் வந்து பார்த்துக்கிறேன்” என்றான் லீ.

“நீ தனியா என்ன பண்ணுவ. தூங்குறதுக்கு மட்டும் ஒரு இடமா. ஒழுங்கா இங்கவே இரு” என்று அவரின் அதட்டலில் தீபனின் தலை தானாக சம்மதமென ஆடியது.

நண்பர்கள் அனைவரும் விடயம் தெரிந்து ஓடி வந்துவிட்டனர்.

முதல் முறை லீக்கு ட்வின் என்பதால் இம்முறையுமா என்று நண்பர்கள் கேட்டிட, இல்லையென்றனர் லீயும், தீபனும். லீயின் உடல் நலனில் அக்கறை கொண்டவர்களும் நிறைவாக ஏற்றுக்கொண்டனர்.

“இனி ஆபிசெல்லாம் வர வேணாம் லீ. உன் வேலையையும் சேர்த்து சீனியர் பார்த்துப்பாங்க” என்று அவி சொல்ல…

“அல்ரெடி அவளோட வேலையெல்லாம் நான் தான்டா பார்க்குறேன்” என்றான் தீபன்.

எல்லாரும் ஒன்று கூடியிருக்க…

பாரியும், சத்யாவும் தனியாக கழண்டு கொண்டனர். அவர்களை கவனித்த பரிதிக்கு தானாக மனதில் படபடப்பு எழுந்தது.

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 35

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
22
+1
2
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்