
அத்தியாயம் 29
பரிதி அவனது அறையில் போய் இருக்க, நிரஞ்சனா பின்னால் பயந்தபடி சென்றாள்.
அவளைப் பார்த்துவிட்டு, கோவமாக “என்ன டி நெனச்சிட்டு இருக்க நீ.. என்னைப் பார்த்தா கேனயன் மாதிரி இருக்கா உனக்கு. அன்னைக்கு எவ்ளோ ஆசையா உங்கிட்ட என் காதலை சொன்னேன்.. ஆனால் அது ஏத்துக்க முடியாதுனு சொல்லிட்டு, வேற ஒருத்தரை விரும்புறேனு சொன்ன.. சரி ஓகே.. நீ விரும்புறல.. அப்போ வீட்டுல கல்யாண ஏற்பாடு பண்ணும் போது நீ சொல்லனுமா வேண்டாமா.. நீ யாரை விரும்புறேன்னு தெரிஞ்சா தான, அவன் கூட உன்ன சேர்த்து வைக்க முடியும்.
ஒன்னும் பேசாம கமுக்காம இருந்தா என்ன டி அர்த்தம். யாருனு சொல்ல தைரியம் இல்லாத நீ எல்லாம் எதுக்குடி லவ் பண்ற.. மனசுல ஒருத்தனை வச்சிக்கிட்டு, என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு வாய் கூசாம சொல்ற. இதுல உன் லவ் விஷயம் எனக்குத் தெரியும். தெரிஞ்சே நீ என்னை கட்டிக்க சம்மதம் சொல்ற பாரு.. ஏன் உன் லவர் என்ன ஆனான்.. ” என்று நக்கலாகக் கேட்க,
அவன் பேசிய பேச்சிலேயே தெரிந்து விட்டது. அவன் எந்த அளவுக்கு கோபமாக இருக்கிறான் என்று.
அவன் பேசிய பேச்சை எல்லாம் கேட்டு, கண்களை மூடித் திறந்து தன்னை சமன் செய்து கொண்டு, அவனை நேருக்கு நேராக பார்த்தவள், “பேசி முடிச்சிடீங்களா..” என்று சற்று அழுத்தமாகத் தான் கேட்டாள்.
அவளின் பேச்சு தோரணையே வித்தியாசமாக இருந்தது.
அவள் என்ன தான் பேசப் போகின்றாள் என்று அவளையே கூர்ந்து கவனித்தான்.
“ஆமா.. நான் லவ் பண்றேன் தான். இனிமேலும் லவ் பண்ணுவேன்..” என்று ஆணித் தரமாக அவள் கூற,
அவனுக்கோ கோவம் அளவுக்கு மீறி வந்தது.
“இவ்ளோ தைரியமா என்கிட்ட பேசுறவ, மத்தவங்க முன்னாடி சொல்ல வேண்டியது தானே..” என்றான் பற்களை கடித்தவாரு..
“ஹான்.. எனக்கு மத்தவங்க முன்னாடி சொல்றதுக்கு தைரியம் இல்லை..” என்றாள் நக்கலாக..
“என்ன டி.. நக்கலா..” என்று கேட்க,
“அப்படியே வச்சிக்கோங்க..” என்றாள்.
“நிரஞ்சனா.. என் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு. நான் உன்ன லவ் பண்ணேன்றதுகாக, நீ சம்மதம் சொன்னதும் உடனே உன்ன கல்யாணம் பண்ணிப்பேன்னு நெனச்சிறதா.. என் முன்னாடியே இனிமேலும் லவ் பண்ணுவேன்னு சொல்ற.. இதுக்கு பேரு என்னனு தெரியுமா.. நீ எப்படி வேணா இருந்துட்டு போ.. ஆனால் என்னால அப்படி இருக்க முடியாது.
நீ வேற ஒருத்தன நெனச்சுக்கிட்டு, என் கூட இருக்கறதை நான் எப்படி ஏத்துக்க முடியும். அந்த அளவுக்கு நான் மானம் கெட்டுப் போகல..” என்று ஆத்திரத்தில் வாய்க்கு வந்த படி பேச,
அவளோ சிலையாக அப்படியே நின்று இருந்தாள்.
அவனை நினைத்து தான் அவனிடமே விரும்புகிறேன் என்று சொன்னது இப்பொழுது எந்த அளவுக்கு வந்து விட்டது.
இப்படி எல்லாம் நடக்கும் என்று இவள் என்ன கனவா கண்டாள்.
முதலில் காதலை சொல்லிவிட்டு, பிறகு உறவு முறையைப் பற்றிக் கூறி அவளை வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என்று எண்ணி வந்தவனிடத்தில், காதலை ஏற்க மறுத்து, பின் அவர்களின் உறவு முறை என்னவென்று தெரிந்ததன் விளைவு தான் இதோ இப்பொழுது இவன் இப்படி எல்லாம் பேசிக் கொண்டிருக்கின்றான்.
அவனை குறை கூறி என்ன செய்ய முடியும்.
எல்லாவற்றிற்கும் காரணம் தான் தானே. அனுபவித்து தான் ஆக வேண்டும்.
கலங்கி இருந்த கண்களை துடைத்துக் கொண்டு, அவனிடம் “இப்போ நான் என்ன பண்ணனும்..” என்று கேட்க,
அவனோ, “ஒழுங்கா கல்யாணத்துக்கு சம்மதம் இல்லனு சொல்லு..” என்றான்.
“முடியாது..” என்றாள் ஒற்றை வார்த்தையில்.
“முடியாதா.. நிரஞ்சனா என்னோட பொறுமையை நீ ரொம்ப சோதிக்கிற..” என்றான் கோபத்தை அடக்கியபடி..
“நீங்க எவ்ளோ சொன்னாலும் என்னால கீழ போய் சம்மதம் இல்லனு சொல்ல முடியாது..” என்றாள் பிடிவாதமாக..
“என்னடி சொல்லிட்டே இருக்கேன்.. திரும்ப திரும்ப அதையே சொல்ற..” என்று ஆத்திரத்தில் அவளை அடிக்கப் போக,
அவன் அடிக்க வந்ததில் கண்ணை மூடிக் கொண்டு, ” ஏன் னா.. நான் விரும்புறது உங்களைத் தான்.. உங்கள மட்டும் தான்.. ” என்று அறை அதிரும் அளவுக்கு கத்தினாள்.
அவனோ அப்படியே கைகளை நிறுத்தி இருந்தான்.
தன் மேல் அடி எதுவும் படமால் இருந்ததை உணர்ந்து மெல்ல கண் திறந்துப் பார்க்க, அவனோ அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
“என்ன சொல்ற.” என்று அவன் குழப்பத்தில் கேட்க,
“முதல்ல நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுகிறேன். இப்போ நீங்க இப்படி பேசுறதுக்கு காரணம். நான் அன்னைக்கு சொன்ன பதில் தான். ஆனால் அது பொய் இல்லை. உண்மை. ” என்று கூறிட,
“என்ன உளறுற..புரியிற மாதிரி சொல்லு. ” என்று அவன் கேட்டிட,
“நான் ஒரு விஷயம் சொல்லுவேன். அதை நீங்க எப்படி எடுத்துப்பீங்கனு தெரியல..” அவள் தயக்கத்துடன் கூற,
“விஷயம் என்னனு முதல்ல சொல்லு..” என்றான் இன்னும் கோவம் தணியாமல்.
“நீங்க எங்க வீட்டுக்கு வர்றதுக்கு முன்னாடியே உங்கள எனக்குத் தெரியும்..” என்று அவள் கூற,
“எப்படி.. எங்கயும் வெளிய பார்த்து இருக்கியா என்னை.. பட் அதுக்கு வாய்ப்பு இல்லையே. நான் கிட்ட தட்ட மூணு மாசம் வீட்டுல தான் இருந்தேன். அப்புறம் எப்படி என்னை பார்த்து இருப்ப. அடிப்பட்ட அன்னைக்கு பார்த்ததை வச்சி சொல்றியா.. இல்லை அதுக்கு முன்னாடியே பார்த்து இருக்கியா என்னை..” என்று அவன் தனக்குள் எழும் சந்தேகங்களை கேள்வியாய் கேட்டிட,
அவளோ, “வெளிய எங்கயும் பாக்கல..” என்றதற்கு,
“பின்ன..” என்றான் யோசனையாக..
“அது.. என்னோட கனவுல..” என்றாள்.
“என்ன.. கனவுலயா..” என்று ஆச்சர்யமாகக் கேட்டான்.
“கொஞ்ச நாள் முன்னாடி எனக்கு ஒரு கனவு வர ஆரம்பிச்சது. அதுல வர்ற ஆண், அவரோட காதலை சொல்ற போலவும், அப்புறம் எனக்கு முத்தம் கொடுக்கிற போலவும் வந்தது. ஆரம்பத்துல இது போல ஏன் வருதுன்னு குழம்பி தவிச்சு போனேன். யார்னு தெரியாத ஒரு ஆண் கூட, இப்படி எல்லாம் கனவு வருதுனு தூக்கத்தை தான் தொலைச்சிட்டு இருந்தேன்.. கண்ணை மூடுனாவே அந்த கனவு தான் திரும்ப திரும்ப என் மைண்ட்ல வரும். அந்த ஆண் என் மேல ரொம்ப விருப்பமாகவும் ரொம்ப அக்கறையாவும் இருப்பாரு. ஒரு கட்டத்துல, நானும் அந்த கனவை ரசிக்க ஆரம்பிச்சிட்டேன். அந்த கனவுல வந்த நபரையும் என்னையே அறியாம விரும்ப ஆம்பிச்சிட்டேன்.” என்று அவள் கூறிக்கொண்டு இருக்க,
அவனோ என்ன தான் சொல்கிறாள் என்று கேட்டுக் கொண்டிருந்தான்.
“இப்படியே போய்ட்டு இருக்க, ஒரு நாள் காயத்ரி கிட்ட விசாரிச்சேன். அவங்க கம்பெனி முதலாளிக்கு எதுவும் ஆக்சிடண்ட் ஆச்சானு..” அவள் கூறிக்கொண்டு இருக்க,
அவன் இடை மறித்து, “நீ எதுக்கு கேட்ட??” என்றான் அவன்.
“உங்க பர்ஸ்ல இருந்த உங்க கம்பெனி கார்டு வச்சி தான் உங்க தம்பிக்கு போன் பண்ணேன். எனக்கு கம்பெனி நேம் நியாபகம் இல்லை. ஆனால் காஸ்மெடிக்ஸ்.. அது மட்டும் நியாபகம் இருந்தது. அதை வச்சி தான் கேட்டேன். அதுவும் என் செயின்காக..” என்றாள்.
“ஓ.. சரி.. மேல சொல்லு..” என்றிட,
“அதுக்கு அப்புறம் அவகிட்ட என்ன நடந்ததுன்னு எல்லாத்தையும் சொன்ன பிறகு தான், அவ உங்களையும் இனியனையும் பத்தி சொன்னா. சொல்லிட்டு உங்க போட்டோவை காமிச்சா. அப்போதான் எனக்கு தூக்கி வாரிப் போட்டுச்சு..” என்று அவள் நிறுத்த,
“ஏன் என்ன ஆச்சு. ” என்று அவன் கேட்க,
“என் கனவுல வந்த நபர் நீங்கதான். நான் அது என்னோட கற்பனைனு நெனச்சிட்டு இருந்தேன். கற்பனையில் பார்த்த ஒருத்தர் கண் முன்னாடி இருந்தா.. அது தான்.. எனக்கு ஒரு பக்கம் பயம். இன்னொரு பக்கம் பதட்டம். கண்ணை மூடுனா உங்க நியாபகம் தான். நான் யாருகிட்ட சொல்றது இதை. அதை தொடர்ந்து நீங்க வீட்டுக்கு வந்துட்டு போனதா பக்கத்து வீட்டு அக்கா வேற சொன்னாங்க. எனக்கு என்ன பண்றதுனே தெரியல. அதிர்ச்சிக்கு மேல அதிர்ச்சி. உங்களுக்கு போன் பண்ணி பேசவும் பயம். ரெண்டு நாள் வீட்டுல தான் இருந்தேன்.
சரி ஒரு முடிவோட உங்களுக்கு அழைச்சி பேசிறலாம்னு தான் அன்னைக்கு இருந்தேன். ஆனால் நீங்க நேருல வருவீங்கனு நெனச்சி பாக்கல.. அதுவும் என் கனவுல வர்றது போல கையில் பூங்கொத்தோட..
அதே போல பூங்கொத்தை என்கிட்ட நீட்டி, காதலை சொன்ன விதம். எல்லாமே நான் கனவுல கண்டது.
நீங்க சொன்ன உடனே நான் ஏத்துகிட்டா, அது வசதி வாய்ப்பை பார்த்து ஏத்துகிட்டாதா ஆகிரும். அங்க உங்கள நான் காதலிச்சிட்டு இருந்ததுக்கு அர்த்தமே இல்லாம போயிரும். அதுனால தான் நான் அப்படி சொன்னேன்.” என்று கூறி விட்டு, அவனைப் பார்க்க,
“யாரையும் விரும்புறியானு கேட்டதுக்கு ஏன் ஆமானு சொன்ன..” என்றதற்கு,
“நீங்க அன்னைக்கு தான் என் முன்னாடி வந்தீங்க. ஆனால் அதுக்கு முன்னாடி இருந்து உங்களோட உருவத்தை நான் நேசிட்டு இருந்து இருக்கேனே. அதுனால தான் ஆமானு சொன்னேன்.
அப்படி சொன்னால் திரும்ப என் பக்கம் நீங்க வர மாட்டேங்கனு தான் சொன்னேன்.
ஆனால் நானே எதிர் பார்க்காத திருப்பம், உங்களோட மாமா பொண்ணா நான் இருந்தது..
இப்போ இந்த மாதிரி ஒரு சூழ்நிலை வரும்னு சத்தியமா நான் எதிர்பார்க்கல.
நான் எப்படி சொல்ல முடியும். உங்கள தான் விரும்பிட்டு இருந்தேன்னு. இதை எல்லாம் சொன்னால் அவங்க நம்புவாங்களா.. இல்லை என்னால தான் வேற ஒருத்தரை கொண்டு வந்து காட்ட முடியுமா. அதான் எந்த பதிலும் சொல்லாம அமைதியா இருந்தேன்.
எனக்கு காதலை சொல்றதுக்கு தைரியம் இருக்கு. ஆனால் என்னோட காதலை சொன்னா, அதை நம்புற அளவுக்கு மனசுக்கு இருக்கானு தெரியல..
ஒரு வேளை உங்களை நான் பாக்கலனா கூட, கனவுலயே வாழ்ந்து இருப்பேன்.
உங்கள பார்த்த பிறகு எனக்கு அந்த கனவு கூட வரல..” என்று ஒரு வெற்றுப் புன்னகையுடன் அவள் அனைத்தையும் கூறி முடிக்க,
அவனோ அவளைத் தான் பார்த்து கொண்டிருந்தான்.
“இப்போ சொல்லுங்க.. இப்போ நான் என்ன பண்ணட்டும். ” என்றாள் கேள்வியாக..
அவனோ பதில் எதுவும் பேசாமல் அமைதியாக அங்கிருந்து சென்று விட்டான்.
செல்லும் அவனும் முதுகை வெறித்துப் பார்த்தவளுக்கு, கண்ணில் இருந்து நீர் தான் வழிந்தது.
உதட்டில் ஒரு விரக்தியான புன்னகை.
“இதுக்குத்தான் நான் சொல்லல. சொன்னா யாரும் நம்ப மாட்டிங்கனு தான் நான் சொல்லாம இருந்தேன்..
ஏதோ நான் சூழ்நிலைக்கு ஏற்ற போல கதை சொல்றேன்னு தான் உங்க எல்லாருக்கும் தோணும்.” என்று அவளாக பேசியவள், பரிதியின் அறையில் இருந்து வெளியேறி அவளது அறையில் சென்று கதவை தாளிட்டுக் கொண்டாள்.
கதவிலேயே சாய்ந்து அழுதாள்.
சத்தம் போட்டு அழுதால் வெளியே கேட்டு விடுமோ என்று வாயை பொத்திக் கொண்டு அழுதாள் .
“எதுக்குப்பா .. எனக்கு இப்படி.. நான் கேட்டேனா இந்த வாழ்க்கை எல்லாம்.
நான் உங்க பொண்ணா நம்ம வீட்டுலயே இருந்து இருப்பேனே.
இப்போ என்ன ஆச்சு.. என் மனசுல இருக்குறவரே என்னை நம்பாம போறாரு.. நான் என்ன பண்றது. நான் நம்ம வீட்டுக்கே போயிருறேன் ப்பா.. இந்த வசதி, ஆடம்பரம் எனக்கு எதுவும் வேண்டாம். அவரே என்னை நம்பள. இனி யாருக்காக நான் இங்க இருக்கனும்..” என்று அழுது கொண்டே தன் உடைப் பெட்டியை எடுத்து அதில் தன் உடைகளை எடுத்து எடுக்க ஆரம்பித்தாள்.
அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்க, அவசரமாக முகத்தை கழுவி விட்டு, வந்து கதவைத் திறக்க, பரிதி தான் நின்று இருந்தான்.
பரிதியை அவள் அங்கு எதிர்பார்க்க இல்லை.
அவளைப் பார்த்தவுடன் கண்டு விட்டான். நிறையவே அழுது இருக்கின்றாள் என்று.
உள்ளே வந்து கதவை சாத்தியவன் அவளைப் பார்த்து, “நீ எப்பவும் தப்பு தப்பா தான் முடிவு எடுப்பியா??” என்றான்.
அவளோ அமைதியாக இருந்தாள்.
“எங்க புறப்பட்டுட்ட..” என்றான் பெட்டியில் அடுக்கி வைத்த அவள் உடைகளைப் பார்த்து..
அதற்கும் அமைதியாகத் தான் இருந்தாள்.
“சரி.. எதுக்கு இந்த முடிவு.. நீயா எல்லாமே முடிவு எடுத்துட்டு அப்புறம் நீதான் கஷ்டப் படுற. ” என்றதற்கு,
“என் கஷ்டம் என்னோட போகட்டும். ” என்றாள் எங்கோ பார்த்துக் கொண்டு.
“அப்போ போகணும்னு முடிவு பண்ணிட்ட.. அப்படித்தானே..” என்றான்.
“ம்ம்ம்ம்…” என்று மட்டும் கூறினாள்..
“சரி.. அப்போ இதையும் சேர்த்து எடுத்துட்டு போ..” என்றவன், அவள் அருகினில் வந்து அவள் என்னவென்று உணரும் முன்பே, அவள் முகத்தை நிமிர்த்தி இதழோடு இதழ் அணைத்தான்.
அவள் கண்கள் விரிய, அவன் கண்கள் மூடின..
அதே முத்தம். கனவினில் அவனிடம் இருந்து கிடைத்த அதே முத்தம் இப்பொழுது நனவில்..
அவள் கண்களில் இருந்து கண்ணீர் வர, அதன் சுவையையும் சேர்ந்து சுவைத்தான் ஆடவன்.
ஆழ்ந்த அழுத்தமான முத்தம்…
நித்தமும் வருவாள்..
