
அத்தியாயம் – 18
மறுநாள் மதியம் 2:45.
உளவியல் துறை கட்டிடத்தின் வராந்தாவில் அமுதினி நின்று கொண்டிருந்தாள். ஆரவின் அறை சில அடிகள் தொலைவில் இருந்தது. அவள் ஆழ்ந்த மூச்சை எடுத்து, தன்னை தயார்படுத்திக் கொண்டாள்.
‘நான் வலிமையானவள்… நான் ரொம்ப புரொபஷனலா இருப்பேன்… இது வெறும் ரிசர்ச் சம்மந்தப்பட்ட மீட்டிங்… அவ்வளவுதான்…’ என்று பலமுறை தனக்குள் சொல்லிக் கொண்டாள்.
சுருதி அவளுக்கு முன்பு புலனத்தில் செய்தி அனுப்பி இருந்தாள்.
“ஆல் த பெஸ்ட் அமுது… இத உன்னால சக்சஸ் ஃபுல்லா பண்ண முடியும்…. ஸ்டே ஸ்ட்ராங்…”
அமுதினி தன் கடிகாரத்தை பார்க்க, 2:50 என்று காட்டியது. அவள் இன்னும் கொஞ்ச நேரம் காத்திருக்க வேண்டும். தாமதமாகவும் போகக்கூடாது, அதேசமயம் சீக்கிரமாகவும் போகக்கூடாது.
சரியாக 3 மணிக்கு, அவள் அவனது அறைக்கதவை தட்டினாள்.
“வாங்க,” உள்ளே ஆரவின் குரல்.
கதவைத் திறந்து அமுதினி உள்ளே நுழைந்தாள். அவள் இதயம் வேகமாக துடித்துக் கொண்டிருந்தது, ஆனால் அவள் முகத்தை நடுநிலையாக வைத்திருந்தாள்.
ஆரவ் தனது மேஜையில் அமர்ந்திருந்தான். இன்று அவன் சாதாரண உடையில் – வெள்ளைச் சட்டை, கருப்பு பேன்ட். அவர் மேலே பார்த்தான். ஒரு நொடிக்கும் குறைவான பொழுதில், அவனது கண்களில் ஏதோ மின்னி மறைந்தது அது குற்ற உணர்ச்சியா? இல்லை வருத்தமா? – ஆனால், அது கண்டு கொள்வதற்கு முன்னரே மறைந்துவிட்டது.
“உட்காருங்க அமுதினி…” என்றவனின் குரலில் எவ்வித மென்மையும் இல்லை.
அமுதினி எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தாள். அவளிடம் நோட்டுப் புத்தகமும் பேனாவும் இருந்தன. முழுக்க முழுக்க தொழில்முறை தோற்றம்.
ஆரவ் ஒரு கோப்பை எடுத்தான்.
“நான் டிரைட்டாவே சொல்றேன்… இது ஒரு சிக்ஸ்-மன்த் ரிசர்ச் ப்ராஜெக்ட்… நாம ட்ராமா சர்வைவர்ஸ் மத்தியில் வெவ்வேறு சிகிச்சை முறைகளின் செயல்திறனை ஒப்பிட போறோம்… EMDR, CBT, சோமாடிக் தெரபி – எல்லாம்…”
அந்த கோப்பை அவளிடம் நீட்டி, “இது ப்ராஜெக்ட் ப்ரொபோசல்… நீ இத முழுசும் படிச்சு, புரிஞ்சுக்கணும். இதுல உன் ரோல் – டேட்டா கலெக்ஷன், பங்கேற்பாளர் நேர்காணல்கள், ஆரம்ப பகுப்பாய்வு…”
அமுதினி கோப்பையை வாங்க கை நீட்டியதும், அவர்களின் விரல்கள் ஒரு நொடி தொட்டன. அவள் உடனடியாக பின்வாங்க, ஆரவும் வேகமாக தன் கையை விலக்கிக் கொண்டான்.
சங்கடமான அமைதி!
ஆரவ், “நீ ஒவ்வொரு வாரமும் என்கிட்ட ரிப்போர்ட் பண்ணுவ… எல்லா பங்கேற்பாளர்களும் நெறிமுறை வழிகாட்டுதல்களை ஃபாலோ பண்ணி ஜாயின் பண்ணுவாங்க… இது கொஞ்சம் ரகசியமா இருக்கணும்… கிளியரா?”
“யஸ் சார்…” அமுதினி மெதுவாகச் சொன்னாள்.
“நெக்ஸ்ட்…” ஆரவ் அவளை நேராகப் பார்த்தான்.
“இது முற்றிலும் தொழில்முறை ஏற்பாடு… நாம ஓரே ரிசர்ச்ல இருக்கோம்… நமக்குள்ள எந்த தனிப்பட்ட உரையாடல்களும் வேணாம்… யாருடைய எல்லைகளையும் மீறிட கூடாது… புரியுதா?” என்றான் அழுத்தமாக!
அமுதினிக்கு வலித்தது. அவன் வார்த்தைகள் கூர்மையான கத்திகள் போல இருந்தன. ஆனால் அவள் தன்னைத்தானே நிதானப்படுத்திக் கொண்டாள்.
“புரியுது சார்… நானும் அதையேதான் விரும்பறேன்…” என்றாள் பட்டென்று!
ஆரவின் கண்கள் ஒரு நொடி விரிந்தன. அவளுடைய பதிலை அவன் எதிர்பார்க்காதது போல் இருந்தது. ஆனால், அவன் உடனடியாக தன் முகத்தை உர்ரென்று மாற்றிக் கொண்டான்.
“குட்… நீ இந்த பைல்-ஐ இன்னைக்கு எடுத்துட்டு போ… நாளைக்கு மதியம் 2 மணிக்கு மறுபடியும் வா… நாம டீடெயிலா டைம்லைன் டிஸ்கஸ் பண்ணுவோம்…”
அமுதினி எழுந்து, “ஓகே சார்..” என்றுவிட்டு திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.
கதவின் கைப்பிடியை பிடித்திழுக்க, திடீரென்று, ஆரவின் குரல் அவளை நிறுத்தியது.
“அமுதினி…”
அவளும் திரும்பி, “சொல்லுங்க சார்?”
ஆரவ் தயங்க, ஏதோ சொல்ல நினைப்பது போல இருந்தது. அவனது கண்களில் மோதல் தெரிந்தது. ஆனால், அவன் தன்னை சட்டென்று கட்டுப்படுத்திக் கொண்டான்.
“ஒன்றும் இல்ல… நீ போகலாம்…”
அதில் அமுதினி பதிலேதும் பேசாமல் வெளியேறினாள்.
கதவுகள் மூடியது!
ஆரவ் தன் கைகளை தலையில் வைத்துக்கொண்டு அமர்ந்துவிட்டான்.
‘நான் என்ன பண்றேன்? அவளை என் ரிசர்ச்-ல் இன்வால்வ் பண்றது தப்பா? ஆனால், அவளோட வொர்க் எல்லாம் சூப்பர்… அவ இதுக்கு தகுதியான தான்… நான் என் தனிப்பட்ட காரணங்களுக்காக அவளோட கேரியரை அஃபெக்ட் பண்ணக்கூடாது…’
ஆனால், அவன் மனதிற்கு உண்மை என்னவென்று தெரிந்திருந்தது. தொழில்முறை சாக்குப்போக்குகள் காரணமாக அவளை அருகில் வைத்திருக்க விரும்பினான். அவளை முழுவதுமாக விலக்கி வைக்க அவனால் முடியவில்லை. அதற்காக தான் இப்படியொரு நாடகம்.
இதில் முழுதாய் பாதிக்கப்படப் போவது அமுதினி தான் என்பதை ஆரவ் அறிந்திருக்கவில்லை!
******
அன்று இரவு, அமுதினி தனது சிறிய வீட்டிலிருக்கும் இருக்கையில் அமர்ந்து திட்டக் கோப்பைப் படித்துக் கொண்டிருந்தாள். அவர்களின் ஆராய்ச்சி நன்கு வடிவமைக்கப்பட்டு, விரிவாக, தெளிவாக இருந்தது. ஆரவின் புத்திசாலித்தனம் தெளிவாகத் தெரிந்தது.
அப்போது கதவு தட்டும் ஓசை கேட்க, சுருதி தான் வந்திருந்தாள்.
“வா சுருதி…”
“என்ன ஆச்சு அமுது? ஆரவ் சார் மீட்டிங் எப்படி போச்சு?”
அமுதினி வலுக்கட்டாயமாக புன்னகைத்து, “புரொபஷனலா போச்சு… அவர் கிளியரா சொல்லிட்டார் – எங்களுக்குள்ள வொர்க் மட்டும்தான்… பர்சனல் எதுவும் வேண்டாம்…”
“நீ எப்படி உணர்ற?”
அமுதினி பெருமூச்சு விட்டு, “நான்… என்னை ஸ்ட்ராங்-ஆ வெச்சிருக்கேன் சுருதி… ஆனா, உண்மையில்… அவரை பார்க்கும்போது கஷ்டமா இருந்துச்சு… அவர் என்னை பார்த்தப்போ, அவரோட கண்கள்ல ஒரு நொடி… கில்ட் இருந்துச்சு… ஆனா, அத உடனே மறைச்சுட்டார்…”
“அமுது, இது உனக்கு உணர்ச்சி ரீதியாக கஷ்டமா இருக்கும்… நீ இந்த ப்ராஜெக்ட்-ஐ தொடர விரும்புறியா?”
அமுதினி உறுதியாக தலையசைத்து, “ஆமா… நான் இதை பண்ணுவேன். இது என் கேரியருக்கு முக்கியம்… நான் என் எமோஷன்ஸ்-ஐ மேனேஜ் பண்ணிடுவேன்…”
சுருதி அவளை ஆதுரமாக தழுவி, “நீ ப்ரேவ் அமுது… ஆனா, எப்பவும் உன்னை நீயே பனீஷ் பண்ணிக்காத…” என்று அக்கறையுடன் சொன்னாள்.
******
அடுத்த சில வாரங்களில், அமுதினியும் ஆரவும் வழக்கமான சந்திப்புகளை நடத்தினர். அனைத்து சந்திப்புகளும் கண்டிப்பாக தொழில்முறை சார்ந்தவை. அவர்கள் ஆராய்ச்சியைப் பற்றி விவாதித்தனர், தரவுகளை பகுப்பாய்வு செய்தனர், பங்கேற்பாளர்களின் முன்னேற்றத்தைப் பற்றிப் பேசினர்.
ஆனால் அவர்களுக்கு இடையே எப்போதும் ஒரு பதற்றம் இருந்தது. அது ஒருபோதும் வெளியே சொல்லப்படாதது. ஒப்புக்கொள்ளப்படாதது.
ஒவ்வொரு சந்திப்பிலும், ஒவ்வொரு தற்செயலான தொடுதலிலும், ஒவ்வொரு கண் தொடர்புகளிலும் அந்த பதற்றம் இருந்தது.
அமுதினி வலிமையாக இருக்க முயன்றாள். ஆனால், ஆரவ் கிருஷ்ணாவை ஒவ்வொரு நாளும் பார்ப்பது, அவனுடன் வேலை செய்வது – அது அவளை உணர்ச்சி ரீதியாக சோர்வடையச் செய்தது. அவள் இரவில் தனியாக அழுவாள். ஆனால், மறுநாள் காலையில், அவள் மீண்டும் தனது தொழில்முறை முகமூடியை அணிந்து அவனுடன் சாதாரணமாக பேசுவாள்.
மறுபுறம், ஆரவும் மனதிற்குள் போராடிக் கொண்டிருந்தான். ஒவ்வொரு நாளும் அமுதினியைப் பார்ப்பது அவனுக்கு சித்திரவதை மற்றும் ஆறுதல் என்று பல்வேறு உணர்வுகளை கொடுத்தது.
அவள் வலிமையானவள், தொழில்முறை பண்பில் சிறந்து இருக்கிறாள் என்று அவன் பாராட்டினான். ஆனால், அதே நேரத்தில், அவன் அவளது அன்பிற்காக ஏங்கினான் – அவளுடைய அரவணைப்பு, அவளுடைய பாசம், அவளுடைய உண்மையான அக்கறை.
அவர்கள் இருவரும் ஆரவின் அறையில் ஒன்றாக இருந்தே வேலைப்பாடுகள் பார்த்தனர். ஆனால், இருவரின் உலகங்களும் வேறுபட்டன. தொழில்முறை எல்லைகள் அவர்களைப் பிரித்தன. ஆனால், அவர்களின் இதயங்கள்… அவர்கள் அமைதியாக ஒருவரையொருவர் தேடினர்.
எவ்வளவு காலம் அவர்கள் இப்படியே தொடர முடியும்? இந்த தொழில்முறை முகப்பு எப்போது விரிசல் அடையும்? உண்மையான உணர்ச்சிகள் எப்போது நிரம்பி வழியும்?
அது விரைவில் நடக்கப் போகிறது. ஏனென்றால், நீங்கள் உணர்ச்சிகளை எவ்வளவு அடக்கினாலும், அவை ஒரு நாள் வெடிக்கும். சக்தி வாய்ந்தது. தவிர்க்க முடியாதது.
விதி அதன் வேலையைத் தொடர்கிறது. மெதுவாக, வேதனையுடன், ஆனால் தவிர்க்க முடியாதது.
********
ஆராய்ச்சி திட்டம் ஆரம்பித்து, ஒரு மாதம் கடந்துவிட்டது.
இப்பொழுது ஆரவும் அமுதினியும் வாரத்திற்கு இரண்டு முறை சந்திப்புகளை நடத்தினர். எல்லா சந்திப்புகளும் முற்றிலும் தொழில்முறை சார்ந்தவை. தரவுகளைப் பற்றி விவாதிப்பது, பங்கேற்பாளர்களின் முன்னேற்றத்தை பகுப்பாய்வு செய்வது, அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் திட்டமிடுவது என்று மட்டுமே அதில் இருந்தது.
ஆனால், அவருக்கும் இடையே சொல்லப்படாத கனமான பதற்றம் எப்போதும் இருந்தது.
******
ஒரு வெள்ளிக்கிழமை மாலை, அவர்கள் ஒரு பங்கேற்பாளரின் வழக்கு கோப்பை மதிப்பாய்வு செய்து கொண்டிருந்தனர். அது ஒரு சிக்கலான வழக்கு – அதிர்ச்சியில் இருந்து தப்பியவர், கடுமையான PTSD, அவரது வாழ்வில் பல இழப்புகள். ஆரவ் அதனை உன்னிப்பாக படித்துக் கொண்டிருந்தான்.
“இந்த பர்சன் கொரோனா காலத்துல அவங்க ஃபேமிலி மெம்பர்ஸ்-ஐ இழந்திருக்காங்க… சரியான க்ளோஷர் இல்லாம, அவங்களோட வலியும் துக்கமும் சிக்கலாகி இருக்கு…”
அமுதினியும் கேட்டுக் கொண்டிருந்தாள். அவளது மனம் திடீரென்று தன் சொந்த நினைவுகளுக்குப் போனது.
அவளுடைய அம்மா அப்பா! அவர்களின் மரணங்கள்… அந்த வேதனையான நாட்கள் என்று எல்லாமே நினைவிற்கு வந்தது.
ஆரவ் தொடர்ந்து, “கோவிட் சமயத்துல நிறைய பேர், இறந்து போனவங்க முகத்தை கடைசியா ஒரு தடவை கூட பார்க்காம இருந்து, அவங்களோட இழப்பை அனுபவிச்சு இருக்காங்க… அப்பயெல்லாம் சரியான இறுதி சடங்கு கூட இல்லை… அந்த நேரத்தில் பலருக்கும் காம்ப்ளிக்கேட்டட்-ஆ இருந்திருக்கு… அதுல இருந்து முழுமையா வெளிவந்தவங்களை விரல் விட்டு எண்ணிடலாம்…” என்று சொல்லிக் கொண்டிருந்தான்.
அமுதினியின் கண்களில் கண்ணீர் வந்தது. அவள் அதை மறைக்க முயன்றாள். ஆனால், அவளையும் மீறி ஒரு துளி கன்னத்தில் வழிந்தது.
ஆரவ் அவளைப் பார்த்ததும், அதிர்ச்சியாகி, “அமுதினி… நீ அழுறியா?” என்று கேட்க,
அமுதினி வேகமாக தன் கண்ணீரைத் துடைத்தாள். “சாரி சார்… நான் ஓகேதான்… நீங்க கன்டினியூ பண்ணுங்க…”
ஆனால், ஆரவ் அந்த கோப்பை மூடிவிட்டு, அவளை கூர்ந்து பார்த்தான்.
“என்னாச்சு உனக்கு?”
“ஒன்னும் இல்ல சார்…”
“பொய் சொல்லாதே… இந்த கேஸ் உன்னை பர்சனலி அஃபெக்ட் பண்ணுதா?”
அமுதினி முதலில் தயங்கி, பின்னர் மெதுவாகத் தலையசைத்தாள்.
ஆரவ் முன்னோக்கி சாய்ந்து அமர்ந்தான். அவன் குரல் அரிதிலும் அரிதாய் மென்மையாக இருந்தது.
“ஏன் அமுதினி?”
அமுதினி நன்கு சுவாசித்து, “சார், இந்த பர்சனோட எக்ஸ்பிரீயன்ஸ்… அது என்னோடது போல இருக்கு. நானும்… கொரோனா காலத்துல தான் என் அப்பா அம்மாவை இழந்தேன்…”
ஆரவுக்கு அதிர்ச்சி அடைந்து, அவளை வெறித்துப் பார்த்தான்.
“என்ன?”
அமுதினி மெதுவாக பேச ஆரம்பித்தாள்.
“2021… ரெண்டாவது அலை… முதல்ல என் அப்பாவுக்கு தொற்று… மருத்துவமனையில் இடம் கிடைக்கல… வீட்டிலேயே இருந்து, என்னை கிட்ட சேர்த்துக்காம, அம்மா மட்டுமே பார்த்துகிட்டாங்க… கடைசியில் அவர் போயிட்டார்… அதுக்கு அடுத்த ஒரு வாரத்துல, என் அம்மாவும் என்னைவிட்டு மொத்தமா போய்ட்டாங்க.. நான்… நான் இருபத்தியொரு வயசுல அனாதையா யார் துணையும் இல்லாம தனிச்சு நின்னேன்…”
ஆரவ் பேச முடியாமல் தவித்தான். அவன் முகம் வெளிறிப் போனது.
“அமுதினி…”
அமுதினி தொடர, அவள் குரலோ இப்பொழுதும் நடுங்கியது.
“எனக்கு அவங்க ப்ராப்பர் குட் பாய் கூட சொல்ல முடியல சார்… கடைசியில, ரெண்டு பேருமே என்கிட்ட ஒரு வார்த்தை கூட பேசாம, விட்டுட்டு போய்ட்டாங்க… அவங்களோட இறுதி சடங்கை கூட என்னால திருப்தியா செய்ய முடியல… என் அம்மா அப்பா என்னை விட்டு தூரமா போனாங்க, நான் அவங்களை கடைசியா தொட கூட முடியல… அந்த இழப்பு, வலி, வேதனை… அது இன்னமும் எனக்குள்ள அப்படியேதான் இருக்கு சார்…” என்று சொல்லி அழ ஆரம்பித்தாள்.
இந்த முறை, அவள் அதை மறைக்கவில்லை. நான்கு வருடங்களாக அடக்கி வைத்திருந்த துக்கம் வெளியே வந்தது.
ஆரவ் உடனே எழுந்து அவளிடம் வந்தான்.
அவன் ஒரு நொடி தயங்கியபடியே, அவளது தோளில் ஆறுதலாக கை வைத்து, “அமுதினி… ஐம் சாரி… எனக்கு எதுவும் தெரியாது…”
அமுதினி அவனை கண்ணீர் நிரம்பிய கண்களுடன் பார்த்து, “நான் யாரிடமும் இதை பத்தி அதிகம் பேச நினைச்சது இல்ல சார்… ஏன்னா, அது பெயின்ஃபுல்… பட், இன்னைக்கு, இந்த கேஸ்-ஐ பாத்தப்போ, எல்லாம் ஞாபகங்களும் திரும்ப வந்துச்சு… சாரி சார்… நான் ரொம்ப அழுதுட்டேன்…”
ஆரவ் அவளுக்கு எதிரே உட்கார்ந்தான். அவனது கைகள் இன்னும் அவளது தோள்களில் தான் இருந்தன.
“அமுதினி, நீ… நீ இத்தனையும் தனியா கடந்து வந்திருக்க… எனக்கு தெரியாது உன்னோட ஸ்ட்ரகல் பத்தி…”
அமுதினி சிறிது நிதானத்திற்கு வந்து, “அதனால தான் சார், நான் ட்ராமா கேரில் இன்ட்ரெஸ்ட் எடுத்தேன்… நான் என்னோட வாழ்க்கையில பல வலிகளை அனுபவிச்சிருக்கேன்… அதான் மத்தவங்களோட பெயினை என்னால உணர முடியுது… நான் அவங்களுக்கு உதவி பண்ண விரும்புறேன், ஏன்னா எனக்கு யாரும் இல்லாதப்போ, நான் எவ்வளவு தனிமையா உணர்ந்தேன்னு எனக்குத் தெரியும்… அவங்களுக்கு அந்த தனிமையை போக்கலாம்னு நினைச்சேன்…”
ஆரவின் கண்கள் மென்மையாகி, அவனது பாதுகாப்பு கவசத்தை உடைத்தது.
“நீ… நீ அற்புதமான பொண்ணு அமுதினி… இத்தனை பெயினை கடந்து, இன்னும் நீ பாசத்தோட மத்தவங்களுக்கு ஹெல்ப் பண்ண நினைக்கிற… நீ ரொம்ப அரிதானவ…” என்று மனதாரச் சொன்னான் ஆரவ் கிருஷ்ணா.
அமுதினி அவனை ஆழ்ந்து பார்த்தாள். முதல் முறையாக, ஆரவின் கண்களில் உண்மையான அரவணைப்பு தெரிந்தது. வெம்மை இல்லை, சுவர்கள் இல்லை. வெறும் மனிதாபிமானம் மட்டுமே இருந்தது.
“தேங்க் யூ சார்,” அவள் மெதுவாகச் சொன்னாள்.
ஆரவ் தட்டுத்தடுமாறி, “அமுதினி, நான்… நான் உன்னை கடுமையா ட்ரீட் பண்ணியிருக்கேன்… நான் உன்னை நிறைய ஹர்ட் பண்ணியிருக்கேன். இப்போ எனக்கு புரியுது… நீ என்னென்ன வலிகளை கடந்து வந்திருக்கன்னு… நான்… நான் ரியலி ஐம் சாரி…” என்று விட்டான்.
அவன் பேச்சில் அமுதினி அதிர்ச்சியடைந்தாள். ஆரவ் மன்னிப்பு கேட்கிறானா? அது சாத்தியமற்றது என்றுதான் அவள் நினைத்தாள். ஆனால் இங்கே, இப்பொழுது, அவன் உண்மையிலேயே அவளிடம் வருந்துகிறான்.
“சார், நீங்க சாரி சொல்ல வேண்டாம். நான் அண்டர்ஸ்டாண்ட் பண்ணிக்கிறேன்… நீங்களும்… நீங்களும் என்னை போல ஸ்ட்ரகல் பண்றீங்க… நான் பார்த்துட்டு தான் இருக்கேன்…”
ஆரவ் உறைந்து, “நீ என்னை பார்க்குறியா?” என்றான் புரியாமல்!
“ஆமா சார்… உங்க கண்கள்ல… உங்க தனிமை… உங்க வலி… நீங்க அதை மறைக்கிறீங்க, ஆனா, அது உங்க மனசுக்குள்ள இருக்கு… நானும் அதை அனுபவிச்சிருக்கேன் இல்லையா… அதான் என்னால ஃபீல் பண்ண முடியுது…” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்க,
ஆரவ் அப்படியே பின்வாங்கினான். அவன் சுவர்கள் மீண்டும் உயர ஆரம்பித்தன. இதுவரை இருந்த இளக்கம் மறைந்து இறுக்கம் கூடியது.
“அமுதினி, என்னைப் பற்றி—”
“சார், நீங்க பேச விரும்பலைன்னா, நான் ஃபோர்ஸ் பண்ண மாட்டேன். ஆனா நான் ஒண்ணு சொல்றேன் – நம்ம வலியை மத்தவங்க கிட்ட ஷேர் பண்ணுறது வீக்னெஸ் இல்ல… அது தைரியம்…”
ஆரவ் எதுவும் பேசவில்லை. அவன் தன் மேசைக்குச் சென்று உட்கார்ந்தான். ஆனால், அவன் தோரணை வித்தியாசமாக இருந்தது. மீண்டும் பழைய ஆரவ் வரவிருந்தான்.
அந்த அறையில் இருவருக்குமிடையே பலத்த அமைதி நிலவியது.
பிறகு, ஆரவ் மெதுவாக,
“அமுதினி, உன் பேரண்ட்ஸ்… அவங்க உன்ன ரொம்ப பெருமையா நினைப்பாங்க… நீ என்ன அச்சீவ் பண்ணியிருக்கன்னு… எப்படி உன் பெயினை கடந்து வந்திருக்கன்னு எல்லாமே அவங்களும் பார்த்துட்டே, உனக்கு துணையா, உன்னோடவே இருந்திருப்பாங்க…”
அமுதினிக்கு மீண்டும் கண்ணீர் வந்தது. ஆனால் இம்முறை, நிம்மதியால் வந்தன.
“தேங்க் யூ சார்… என் ஆசையும் அதுதான் சார்…” என்று மென்மையான் நகைப்புடன் சொன்னாள் அமுதினி.
ஆரவ் அவளைப் பார்த்தான். ஒரு கணம், அவர்களுக்கு இடையே ஒரு அமைதியான புரிதல் நிலவியது.
ஒருகாலத்தில், இருவரும் காயமடைந்தனர். இருவரும் போராடினர். ஆனால், இப்போது, அவர்கள் தனியாக இல்லை. அவர்கள் ஒருவரையொருவர் அறிந்திருந்தனர்.
******
சந்திப்பு முடிந்து, அமுதினி வெளியேறும்போது, ஆரவ் அவளை மீண்டும் அழைத்தான்.
“அமுதினி…”
“எஸ் சார்?”
“நீ… நீ ரொம்ப ஸ்ட்ராங்… இதை எப்பவும் மறக்காத…”
அமுதினி புன்னகைத்து, “நீங்களும் தான் சார்..” எனக்கூறி வெளியேறினாள்.
ஆரவின் மனமோ, ‘அவள் இத்தனை பெயினை கடந்து வந்திருக்கா… ஆனாலும், அவள் கனிவானவள், பாசமானவள்… ஆனால், நான்… என் வலியால் கசப்பாகிட்டேன்.நான் கோபமாவே இருந்து எல்லோரையும் தள்ளி வைக்கிறேன்… பட், அமுதினி என்னை விட ரொம்ப ஸ்ட்ராங்…’ என்று பெருமையாக சொன்னது.
அன்று இரவு, ஆரவ்வால் தூங்க முடியவில்லை. அமுதினியின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் அவனை வேட்டையாடியது. அவளுடைய கண்ணீர், அவளுடைய வலி, அவளுடைய வலிமை – அனைத்தும் அவன் மனதில் ஓடியது.
அவன் ஒன்று மட்டும் உணர்ந்தான் – அமுதினி வெறும் மாணவி அல்ல. அவள் போராளி. அவனைப் போலவே அவளும் காயமடைந்தாள். ஆனால், அவள் குணமடைந்து கொண்டிருந்தாள். மேலும், அவள் மற்றவர்களுக்கும் உதவி செய்து கொண்டிருந்தாள்.
அவனால் ஏன் அதைச் செய்ய முடியவில்லை? அவன் ஏன் தன் வலியிலிருந்து வெளியே வராமல் சிக்கிக்கொண்டான்?
‘நானும் குணமடைய முடியுமா? அது சாத்தியமா?’ என்று முதல் முறையாக, ஆரவ் தன்னைத்தானே கேள்வி கேட்டுக்கொண்டான்.
ஆனால், பின்னர் அவனுக்கு குற்ற உணர்வும் சேர்ந்து வர, ‘இல்லை. நான் அதற்கு தகுதியானவன் இல்ல… நான் செய்த தவறுகளுக்கு, நான் இந்த வலியைத் தாங்கி தான் ஆகணும்…’ என்றும் நினைத்தான்.
ஆனால், அமுதினியின் வார்த்தைகள் அவனது மனதில் எதிரொலித்தது.
‘வலியை ஷேர் பண்ணுறது வீக்னெஸ் இல்ல… அது தைரியம் சார்…’
அவனுக்கு அந்த தைரியம் இருக்குமா? அவனால் தன் கோபச் சுவர்களை இறக்க முடியுமா? அவனால் குணமாக முயற்சிக்க முடியுமா?
இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் இன்று, ஒரு சிறிய மாற்றம் ஏற்பட்டது. ஆரவ் மற்றும் அமுதினி ஆழமான நிலையில் இணைந்தனர். தொழில்முறை எல்லைகள் இன்னும் இருந்தன, ஆனால் இப்போது, அவர்களுக்குள், ஒரு மனித தொடர்பு இருந்தது.
பகிரப்பட்ட வலி! பகிரப்பட்ட புரிதல்! குணப்படுத்துவதற்கான முதல் படி!
விதி அதன் வேலையை துவங்கி விட்டிருந்தது.
*******
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
13
+1
+1
