Loading

பிறை -14

 

 

காலையிலேயே அவர்களது வீடு பரபரப்பாக இருந்தது. பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி குவித்து விட்டார் மீனாட்சி. வருடம் வருடம் வரலட்சுமி விரதம் இருந்து அம்மனை வீட்டிற்கு அழைப்பது அவரது வழக்கம். இம்முறையும் அதை சிறப்பாக செய்ய வேண்டும் என்ற ஆசையில் அம்மனுக்கு பார்த்து பார்த்து தேவையான பொருட்களை எல்லாம் வாங்கி வந்தார்.

 

இந்த வருடமாவது வீட்டிற்கு மருமகள் வரவேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தார். அதுதான் அவரது முக்கியமான பிராத்தனையே.

 

” நான் என்ன மா ஹெல்ப் பண்ண.. ” பார்கவி அமைதியாக மீனாட்சி கொடுக்கும் வேலைகளை எல்லாம் செய்வதற்கு அமர.. மகளை மேலும் கீழுமாக பார்த்தவர்..

 

” என்ன தானா வேலை செய்ய வர.. என்ன விஷயம்”

 

” மா எப்பவுமே என்னைய தப்பாவே நினைக்கிறது. அம்மாக்கு முடியலைன்னு கூட மாட உதவி செய்ய வந்தா.. உங்களுக்கு மருமகள் வேற இல்ல.. அவங்க வர வரைக்கும் நான் தானே ” சலிக்க..

 

” அப்படி ஒன்னும் சலிக்சுக்கிட்டு எல்லாம் நீ பண்ண வேணாம்.. என் மருமகள் வந்து பார்த்து தருவா.. நீ எப்பவும் போல ரூம் குள்ள போய் கதவை அடைச்சுக்க.. ” மீனாட்சி கூறவும் தனது தந்தையை ஒரு பார்வை பார்க்க, அவரோ எப்போது போல பேப்பரை வைத்து முகத்தை மறைத்து கொண்டவர்.. பேப்பருக்கு பின்னே முதுகு குலுங்க சிரித்து வைத்தார்.

 

” அப்பா …. ” என மகளின் சத்தத்தில்..

 

” என்ன மா பாரு.. ”

 

” பாருங்க அம்மா பேசுறத ”

 

” நான் என்னைக்கும் என் மீனு பேச்சுக்கு மறு பேச்சு பேசுனது இல்ல மா.. அவ சொல்லுற மாதிரியே பண்ணு” என அந்தர் பல்டி அடித்த தகப்பனை முறைத்து கொண்டு எழுந்து சென்று விட்டாள். வேலை செய்து கொடுத்து நண்பர்களுடன் சினிமா செய்வதற்கு அனுமதி வாங்கலாம் என்ற அவளது எண்ணத்தில் மண் அள்ளிப் போட்டிருந்தார் மீனாட்சி.

 

” எப்படி எப்படி நீங்க பண்ண தப்பை மறைக்க.. இப்படி என்னைய விட்டு கொடுக்காம பேசுனா நான் மறந்துடுவேனா .. நீங்க பண்ணது இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கு ”

 

” சரி மீனு.. அதான் நான் சரண்டர் ஆகிட்டேன்ல ”

 

” எனக்கு தெரியாது.. பூஜைக்கு உங்க மகன் வரனும் ”

 

” அதுக்கு அவன் மனசு வைக்கனுமே ”

 

” ஏங்க நான் அவனை நம்பி நிறையா பிளான் பண்ணிருக்கேன் ”

 

” என்ன பிளான் டி ”

 

” வயசு பொண்ணுங்க வீட்ல இருக்குற என் பிரெண்ட் எல்லாத்தையும் இன்வைட் பண்ணிருக்கேன். அவங்க எல்லாரும் குடும்பத்தோடு கலந்துக்குவாங்க.. அப்படித்தான் வர சொல்லியிருக்கேன். அங்க வர பொண்ணுங்களை யாரவையது அவனுக்கு பிடிச்சா கூட நம்ம மேற்கொண்டு பேசலாம்” மனைவியின் செயலை பார்த்து தலையில் அடித்துக் கொண்டவர்..

 

” இதுக்கெல்லாம் மயங்குறவன் இல்ல டி நீ பெத்தவன்.. மொத அவன் வரனும், அப்போதான் பார்க்கவே முடியும்..”

 

” எனக்கு தெரியுங்க நீங்க எப்படியும் அவனை பேசி வர வச்சிடுவீங்க..”

 

” உன் மகனை பத்தி தெரிஞ்சும் இப்படி என்னைய மாட்டி விட பார்க்குறியே ” பரிதாபமாக முழித்தார் திவாகர்.

 

” எனக்கு இத தவிர வேற வழி இல்லையே .. என் மகனுக்கு இந்த வருஷம் கல்யாணம் பண்ணியே ஆகனும்”

 

” கல்யாணம் நம்ம முடிவு பண்ணுறதுல இல்ல மீனு.. நம்ம பையனுக்கு எப்போ எப்பிடி நடக்கனும்னு இருக்கோ அப்படித்தான் நடக்கும் .. அதுனால நம்ம பொறுமையா இருப்போம். இன்னொன்னு ஆதி மனசுல என்ன இருக்குன்னு வேற தெரியல.. ”

 

” என்ன இருக்கு … அவன் மனசுல ஒன்னும் இல்ல. எனக்கு நல்லா தெரியும் ”

 

” அதை அவன் சொல்லட்டும் ”

 

” இன்னைக்கு வரட்டும் ”

 

” ஏன் கேட்க போறியோ ”

 

” கேட்டாத்தான் என்ன ”

 

” அம்புட்டு தைரியம் வந்துடுச்சா என் பொண்டாட்டிக்கு ”

 

” நான் பெத்த பிள்ளை தானே அவன்.. கேட்டா என்ன தப்பு ”

 

” தப்பு இல்ல மா.. தாராளமா கேட்கலாம் ” என மீண்டும் பேப்பரை வாசிக்க தொடங்கினார் திவாகர்.

 

மாலை ஆறு மணியை போல வீட்டிற்கு வந்தான் ஆதிதேவ்.

 

” என்னங்க இன்னைக்கு சீக்கிரமே வந்துட்டான் ” கணவரின் காதில் கிசு கிசுத்தார் மீனாட்சி.

 

” நல்லது தான் உனக்கு பேச டைம் இருக்கு. அதுனால அவனுக்கு டீயை போடு.. அவன் வரவும் பேசு ” என அவர் கழண்டு கொள்ள..

 

” இந்த பேப்பரை கொளுத்தி போட்டுட்டு தான் மறுவேலை ” என  அவரது கையில் இருக்கும் பேப்பரை கண் இமைக்கும் நேரத்தில் பறித்து கொண்டு அடுக்கலைக்கு சென்று விட்டார் மீனாட்சி.

 

சரியாக அவன் வருவதற்கும், மீனாட்சி டீயை கொண்டு வருவதற்கும் சரியாக இருக்க.. மகன் கையில் டீயை கொடுத்து விட்டு, கணவரை பார்க்க.. அவர் அப்போதும் பேப்பர் தான் படித்துக் கொண்டிருந்தார்.

 

வேகமாக அவர் அருகே சென்றவர்.. ” இப்போத்தானே பேப்பரை வாங்கிட்டு போனேன்.. இதென்ன..”

 

” நீ வாங்கிட்டு போனது..தினத்தந்தி.. என் கையில இருக்குறது தினமலர்.. அப்பறம் இன்னொரு ஐட்டம் ஒன்னு இருக்கு மாலை மலர் வேணுமா ” என்ற கணவனை வெட்டவா குத்தவா என்ற ரீதியில் பார்த்து வைத்தார் மீனாட்சி.

 

இருந்தாலும் காரியம் முக்கியம் அல்லவா .. மெதுவாக நகர்ந்து மகனிடம் சென்றவர்.. ” ஆதி ” என அழைக்க.. அவன் நிமிர்ந்து பார்த்ததும் மொத்த தைரியமும் வடிந்து போனது..

 

” அது டீ நல்லா இருக்கா ஆதி ” என கேட்டதும் … திவாகர் வந்த சிரிப்பை அடக்க முடியாமல் உதட்டை மடித்து சிரிப்பை கட்டுப் படுத்தினார்.

 

திடீரென மீனாட்சி வந்து கேட்ட கேள்வியில் குழம்பிப் போனவன்.. ” என்ன வேணும் மா ” என புருவத்தை சுருக்கி கேட்க..

 

எச்சில் விழுங்கியவர்.. ” வீட்ல பூஜை இருக்கு பா.. வர வெள்ளிக்கிழமை.. “என்றதும் அவன் பார்த்த பார்வைக்கு அர்த்தம் புரிந்தவர்..

 

” தெரியும் நீ இந்த மாதிரி பூஜைக்கு எல்லாம் வர மாட்ட தான். ஆனால் இந்த வருஷம் பண்ண போற பூஜை கொஞ்சம் முக்கியமான பூஜை. இதுல குடும்பத்துல இருக்குற எல்லாரும் கலந்துகிட்டு பண்ணா நல்லா இருக்குன்னு ஜோசியர் சொன்னாரு. அடுத்தடுத்து நல்லது நடக்கும்னு சொன்னாங்க. நீ வந்தா தானே குடும்பம் முழுமையாகும். நீ தானே தலை பிள்ளை ” என மூச்சை பிடித்து கொண்டு மீனாட்சி பேசி விட.. வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருந்தார் திவாகர்.

 

சற்றே யோசித்தவன்.. ” வெள்ளிக்கிழமை எனக்கு மீட்டிங் இருக்கு.. முடிச்சுட்டு சீக்கிரம் வர பார்க்குறேன் ” என்றதும் மீனாட்சிக்கு தலை கால் புரியவில்லை.

 

” நிஜமாவா ஆதி ” என மீனாட்சி மீண்டும் கேட்டதும்.. அவரை ஒரு பார்வை பார்த்தவன்..  சின்ன சிரிப்புடன் ” வரேன் மா ” என்றதும் இம்முறை திவாகரும் அதிர்ந்து போனார்.

 

டீயை குடித்து முடித்தவன்.. கப்பை சிங்கிள் போட்டு விட்டு மாடிக்கு சென்று விட.. மீனாட்சி ஆடிய ஆட்டத்திற்கு அளவில்லாமல் போனது.

 

” நானே பேசி என் மகன் கிட்ட சம்மதம் வாங்கிட்டேன்.. இது போதும்.. அவன் மட்டும் அந்த பூஜைல கலந்துக்கட்டும்.. அப்பறம் எல்லாம் நல்லாதாவே நடக்கும் ” என தெய்வத்தை வேண்டிக் கொண்டார் மீனாட்சி.

 

மனைவியின் ஆசை நிறைவேற வேண்டும் என மனதிற்குள் பிராதித்து கொண்டார் திவாகர்.

 

மாடிக்கு சென்றவன் வேலைகளை விடுத்து மெத்தையில் படுத்து கண் மூடிக் கொள்ள.. மூடிய விழிகளுக்குள் வந்து விழுந்தாள் பிறைநிலா.

 

அவள் பிரத்யோகமாக அணியும் பாவாடை தாவணியில் வந்தவளை மேலிருந்து கீழ் வரை பார்வையால் அளந்தான்  ஆதி.

 

சந்தன வண்ண பாவாடையும், அதே ரவிக்கையும் .. மேலே மெரூன் வண்ண தாவணி அணிந்திருந்தாள். காதுகளில் ஜிமிக்கி கூத்தாட, கைகளில் கண்ணாடி வளையல்கள் குலுங்க.. முகத்தில் சிறிதாக ஒப்பனைகள் ஜொலிக்க நின்று கொண்டிருந்தவளை ரசித்தவனுக்கு அருகில் சென்று பேச மனம் வரவில்லை.

 

” செம அழகி டி நீ ” மனதிற்குள் சொல்லிக் கொண்டான்.. வெளியே கூறினால் கெத்து என்னாவது.

 

சற்று நேரத்திற்கு முன்பு அவளை பார்த்து விட்டு வந்த நினைவுகள் மனதிற்கு ஓடிக் கொண்டிருந்தது.

 

எப்போதும் போல அலுவலகம் விட்டு வெளியே வந்தவர்கள்.. மெதுவாக நடக்கத் தொடங்க.. அதில் பிறையின் விழிகள் மட்டும் அங்கும் இங்கும் அலைபாய்ந்து கொண்டிருந்தது.

 

” இந்தா ஆரம்பிச்சுட்டா டி.. வெளிய வந்தாலே ஏதோ அக்கியூஸ்ட் மாதிரி பிகேவ் பண்ணுறா டி ” சுஷ்மிதா புலம்ப.. கீதா சிரித்தாள்.

 

” ஏன் சொல்ல மாட்டீங்க.. உங்களை எல்லாம் அந்த மூஞ்சூறு ஒன்னும் சொல்லல… என்ன தானே டார்கட் பண்ணுறாரு.. ”

 

” ஓ செல்ல பெயர் வேற வச்சாச்சா ” சுஷ்மிதா ராகம் பாட.. அவளை முறைத்து வைத்தாள் பிறை.

 

” இதை பார்த்தா செல்ல பெயர் மாதிரியா டி இருக்கு ”

 

” உனக்கு அப்படித்தான் இருக்கும் போல.. டாம் அண்ட் ஜெர்ரி கப்பிளுக்கு இதெல்லாம் சகஜமப்பா ”

 

அமைதியாக வந்த பிறையிடம்.. ” உன்ன ரொம்ப டார்ச்சர் பண்ணுறாரா டி.. அப்படினா சொல்லு நான் மாமாகிட்ட பேசறேன் ”

 

” ஐயோ வேண்டாம் டி ” பதறி தடுத்தாள் பிறை.

 

” ஏன் டி”

 

” இல்ல டி அந்த அளவுக்கு எல்லாம் இல்ல.. ஜஸ்ட் வார்ன் பண்ணாரு.. அவ்வளவு தான்.. மத்தபடி… ” என சற்றே தயங்கியவள்.. “கமிஷனர் நல்லவர் தான் டி ” என்றதும் இரு பெண்களும் இடுப்பில் கைவைத்து கொண்டு பிறையை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்தனர்.

 

அவர்களை பார்த்து தலையில் தட்டிக் கொண்டவள்.. ” இப்போ எதுக்கு ரெண்டு பேரும் சிரிக்கிறீங்க ”

 

” கமிஷனர் ரொம்ப நல்லவரோ டி ” இருவரும் சேர்ந்து கேட்க.. திரு திருவென முழித்தவள்..

 

” ஐயோ போங்க டி ” என அவர்களது முகம் பார்க்காமல் நடையை கட்டி இருந்தாள் பிறைநிலா.

 

” ஓஹோ… அப்படி போகுதா டி கதை ” என இரு தோழிகளும் பின்னே விமர்சித்து கொண்டு வர.. வேக எட்டு வைத்து நடையை தீவிர படுத்தி இருந்தாள் பிறை. கமிஷனரின் இன்னொரு முகத்தை கூடிய விரைவில் அவள் பார்க்க போவதை அறியவில்லை.

 

இவர்கள் பேசியது எல்லாம் அருகில் இருந்த காருக்குள் இருந்த ஆதிக்கு தெளிவாக கேட்டது. பிறையை பற்றிய யோசனையில் வீடு வந்தவன்.. தற்போது கண்ணை மூடினாலும் அவள் பிம்பமே வந்து விழ.. புரியாமல் விழித்தான்.

 

காதல் என ஒத்துக் கொள்ளத்தான் மனம் வரவில்லை. மனம் வரும் போது மனதிற்கு பிடித்தவள் இருக்க வேண்டுமே..

 

சனா💗

 

Click on a star to rate it!

Rating 4 / 5. Vote count: 22

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
15
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்