
அத்தியாயம் – 16
அந்த வாகன நிறுத்துமிடம் சம்பவம் நடந்து இரண்டு வாரங்கள் கடந்துவிட்டன.
அமுதினி தன்னை முற்றிலுமாக மாற்றிக் கொண்டாள். அவள் ஆரவைப் பற்றி யோசிப்பதையே நிறுத்திவிட முடிவெடுத்தாள். ஆனால் அது சுலபமா? இல்லவே இல்லை!
ஒவ்வொரு நாளும் ஒரு போராட்டம். ஒவ்வொரு இரவும் ஒரு சவால். அவள் தூங்கச் செல்லும்போது, அவனது வார்த்தைகள் அவளை வேட்டையாடின.
‘நீ என்னை ஒரு ப்ராஜெக்ட் மாதிரி பார்க்குறே… என் முன்னாடி வராதே…’ அந்த வார்த்தைகள் அவளது மனதில் மீண்டும் மீண்டும் எதிரொலித்தன.
இரவு நேரங்களில், அவள் தன் தலையணையில் முகத்தை புதைத்து வாய்விட்டு கத்தி அழுதாள். அவளுக்கு ஆறுதல் சொல்லவும் அந்த வீட்டில் ஒருவரும் இல்லை!
‘நான் அவர் கிட்ட ரொம்ப எல்லை மீறி நடந்துகிட்டேனா? நான் அவருக்கு அவ்வளவு அழுத்தம் கொடுக்க கூடாதா? அவர் ஏன் அப்படியெல்லாம் பேசினாரு? அவரை ஒரு ப்ராஜெக்ட் போல பார்க்கிறேன்… அதான் தொல்லை பண்றேன்னு சொல்றாரு? ஆனால், நான் என் மனசாட்சிபடி அவர்மேல் உண்மையான பாசத்துடன் தான் பேச போனேன்… அவர் ரொம்ப மனவலியில் இருந்தார்… நான் அவருக்கு உதவி… அதுல இருந்து வெளியே கொண்டுவர விரும்பினேன். அது தப்பா?’ அவள் தனக்குள் பலமுறை கேள்வி கேட்டாள்.
அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் கத்திகள் போல அவளது இதயத்தை குத்தின. ஆனால் மூன்றாவது நாளிலிருந்து, அவள் ஒரு முடிவு எடுத்தாள்.
இனி அழுவதால் பயனில்லை என்று புரிந்தது. அவள் தன்னை முழுமையாக மாற்றிக்கொண்டாள் – அல்லது குறைந்தபட்சம் மாற்றிக்கொள்ள முயற்சித்தாள் எனலாம்.
அமுதினி ஆரவைப் பற்றி யோசிப்பதையே நிறுத்திவிட முடிவெடுத்தாள். அவன் முகம் அவள் நினைவுக்கு வரும்போதெல்லாம், அவள் அதை வலுக்கட்டாயமாகத் தள்ளிவிட்டாள். அவன் குரல் அவள் காதுகளில் எதிரொலிக்கும் போதெல்லாம், அவள் வேறு எதையாவது யோசிக்க முயன்றாள். அவள் படிப்பில் முழுமையாக கவனம் செலுத்தினாள்.
முதல் வாரம் மிகவும் கடினமாக இருந்தது. அவள் காலை ஆறு மணிக்கு எழுந்து இரவு பதினொரு மணி வரை படித்தாள். அவள் தனது ஆய்வறிக்கை முன்மொழிவைச் செம்மைப்படுத்தி, ஒவ்வொரு வாக்கியங்களையும் தெளிவாக படித்து மீண்டும் மீண்டும் திருத்தினாள். அவள் தனது பயிற்சிப் பணிகளை தீவிரமாக எடுத்துக் கொண்டாள். ஒவ்வொரு நேர்காணலையும் ஆழமாக செய்து முடித்தாள். அவள் கூடுதல் பணிகளைச் செய்து, சில தன்னார்வப் பணிகளிலும் சேர்ந்தாள், மேலும் கல்லூரியில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்றாள்.
அவள் தன்னைத்தானே சுறுசுறுப்பாக வைத்திருக்க முயன்றாள். ஏனென்றால், அவளுக்குத் தெரியும் – அவளுக்கு ஓய்வு நேரம் இருந்தால், அவளுடைய மனம் ஆராவைப் பற்றி அலைந்து திரியும். அவளுக்கு அதில் துளியும் விரும்பவில்லை. அது அவள் மனதிற்கு வலியைக் கொடுத்தது.
*******
சுருதி அவளது மாற்றத்தைக் கவனித்தாள். அவளுடைய நெருங்கிய தோழி ரொம்பவும் மாறிக்கொண்டிருந்தாள் – வெளியே வலிமையானவள், ஆனால் உள்ளே உடைந்து போகிறவள்.
சுருதி அவளது நிலையைக் கண்டு கவலைப்பட்டு, “அமுது, நீ சாப்பிடறதே இல்ல. நேத்து டின்னரை ஸ்கிப் பண்ணின, இன்றைக்கு பிரேக் ஃபாஸ்ட்-ஐ ஸ்கிப் பண்ணினே. இது உன் உடம்புக்கு நல்லது இல்ல…”
“எனக்கு பசிக்கல சுருதி,” அமுதினி மெல்லிய குரலில் சொன்னாள்.
“நீ ஓகேவா இல்லாத மாதிரி தெரியுது டி..”
“ஐம் ஆல்ரைட் சுருதி…” அமுதினி மடிக்கணினி திரையில் இருந்து பார்வையை அகற்றாமல் சொன்னாள். “நான் கொஞ்சம் பிஸி… ஃபைனல் இயரில் நிறைய வொர்க் இருக்கு… ப்ரீ டைம் இல்ல…”
“அமுது, என்னை பாருடி… நானும் ஃபைனல் இயர் தான் படிக்குறேன்..” சுருதி அந்த மடிக்கணினியை பிடுங்கி தூர வைத்தாள்.
“நீ எப்பவும் படிச்சிட்டே இருக்க… நீ கொஞ்சமும் ரெஸ்ட் எடுக்க மாட்டேங்கிற… நீ ஒழுங்காவும் சாப்பிடுறதில்ல… நீ என்னோட டைம் ஸ்பென்ட் பண்றதில்ல… நீ… நீ உன்னையே அழிச்சிட்டு இருக்க…”
அமுதினி பெருமூச்சு விட்டாள். அவள் கண்கள் சோர்வாக இருந்தன, முகம் வெளிறிப் போயிருந்தது.
“நான் என்னை அழிச்சிக்க மாட்டேன், சுருதி…. நான் என் கேரியரில் ஃபோகஸ் பண்றேன்… இது என் ஃபைனல் இயர்… நான் அதை வீணாக்க விரும்பல…”
“உன் கேரியரில் ஃபோகஸ் பண்றதுககும், உன்னை நீயே பனீஷ் பண்றதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு அமுது…” சுருதி மெதுவாகச் சொன்னாள்.
“ஆரவ் சார் செய்ததற்கு… நீ உன்னையே தண்டிப்பது போல இருக்கிறது…”
அமுதினியின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. ஆனால், அவள் அவற்றை விழ விடவில்லை.
“நான் என்னை பனீஷ் பண்ணல சுருதி… நான் யதார்த்தமா இருக்கேன்… ஆரவ் சார் கிளியரா சொல்லிட்டார் – அவருக்கு யாரும் வேண்டாம்… ரிலேஷன்ஷிப் வேண்டாம்… மொதல்ல, அவருக்கு நான் வேண்டாமாப் டி… நான் அதை அக்செப்ட் பண்ணிட்டேன்… அதை ரெஸ்பெக்ட் பண்றேன்… நான் என் வாழ்க்கையை எந்த தடங்கலும் இல்லாம தொடங்குறேன்…”
சுருதி அவள் கையை ஆறுதலாக பிடித்து, “நாம ஏதாவது ஒன்னை ஏற்றுக்கொள்வதற்கும் அதைச் செயல்படுத்துவதற்கும் வித்தியாசம் இருக்கு அமுது… நீ அக்செப்ட் பண்ணிட்ட சரி… ஆனா, நீ இன்னும் ப்ராசஸ் பண்ணல… உன்னோட வலியை, உன்னோட காயத்தை உனக்குள்ளயே வச்சிட்டு இருக்க… அது உன் உடம்புக்கு நல்லதில்ல…”
“நான் என்ன பண்றது சுருதி?” அமுதினி கேட்டாள், அவளது குரல் உடைந்திருந்தது.
“நான் ரொம்ப அழுதேன்… நான் என் அம்மா அப்பாவை தினமும் மிஸ் பண்றேன்… இப்போ ஆரவ் சாரையும் மிஸ் பண்றேன்… ஆனா, அவர் என்னை வேண்டாம்னு சொல்லிட்டார்… நான் அவரை ஃபோர்ஸ் பண்ண முடியாது… நான் என்னை மாத்திக்க ரொம்ப கஷ்டப்படறேன்… நான் என்ன பண்றது?” என்று சொல்லி அழுதாள்.
சுருதி அவளை ஆதரவாக கட்டிப்பிடித்து,”நீ ரொம்ப தைரியசாலி அமுது… ஆனா, உன்னோட வலியை மறைக்காதே… நீ அழணும்னா அழுதிடு.. துக்கப்பட்டாலும் பரவாயில்ல… உன் உணர்வுகளை நீ உணரணும்… அதை அடக்கி வைக்க நினைக்காத… நீ உன்னை பாத்துக்கணும்… ஒழுங்கா சாப்பிடணும், கரெக்டா தூங்கணும், நீ உன் ஸ்டடிஸ்-ல ஃபோகஸ் பண்ணணும்… டைம் தான் எல்லாத்தையும் ஹீல் பண்ணும்… ஆனா, நீ உனக்கு அந்த டைம் கொடுக்கணும் அழுது…”
அமுதினி தோழியின் தோள்களில் சாய்ந்து சில நிமிடங்கள் அழுதாள். சில நிமிடங்கள். பிறகு அவள் தன்னை தேற்றிக்கொண்டு, “நான் அழுதுட்டேன் சுருதி… நிறைய அழுதுட்டேன்… இதுவே போதும்னு முடிவு பண்ணிட்டேன்… நான் என் வாழ்க்கையை ரொம்ப நல்லா வாழணும்… யாருக்காகவும் நான் வருத்தப்பட போறதில்ல… இனி, நான் என் உலகத்தை உருவாக்கி சந்தோஷமா வாழணும்…”
சுருதி கண்ணீருடன் சிரித்த, “அதுதான் நான் உன்கிட்ட இருந்து எதிர்ப்பார்க்கிறேன் அமுது… உன்னை நீயே அழிச்சிக்காம அதிலிருந்து வெளியே வந்து ஹேப்பியா வச்சிக்கோ…”
அமுதினி ஆமோதித்து, “நான் கண்டிப்பா ட்ரை பண்றேன்…” என்றாள் மென்னகையுடன்.
கல்லூரி வளாகத்தில், அமுதினி ஆரவை முற்றிலுமாகத் தவிர்த்தாள். அது ஒரு கலை வடிவமாக மாறியிருந்தது. அவனுடைய வகுப்பு அட்டவணையை அவள் மனப்பாடம் செய்திருந்தாள். அவனுடைய அலுவலக நேரங்கள் அவளுக்குத் தெரியும். அவன் வழக்கமாக எந்த இடங்களுக்கு செல்கிறான், எந்த கஃபேயில் காபி குடிப்பான், எந்த பார்க்கிங் இடத்தில் நிறுத்துகிறான் – எல்லாவற்றையும் அவள் கவனித்தாள்.
அவள் தனது வழியை தந்திரமாகத் திட்டமிட்டாள். அவன் எங்கே இருக்கிறான் என்பது அவளுக்குத் தெரியும், அந்த இடத்தை எல்லாம் தவிர்த்தாள். அவனை காரிடார்களில் பார்த்தால், அவள் உடனடியாகத் திரும்பி வேறு வழியில் சென்றாள். அவன் நூலகத்தில் இருந்தால், அவள் உள்ளே நுழையவதில்லை – அவன் வெளியேறும் வரை அவள் வெளியே காத்திருந்தாள்.
ஒரு முறை, உணவகத்தில், அமுதினி உணவுத் தட்டுடன் நடந்து கொண்டிருந்தபோது, ஆரவ் ஒரு மூலையில் உள்ள மேஜையில் தனியாக காகிதங்களை வரிசைப்படுத்திக் கொண்டிருந்ததைக் கண்டாள். அவள் இதயம் துடித்தது. அவள் கால்கள் உறைந்தன. அவள் திரும்பி, உணவைக் கூட சாப்பிடாமல் வெளியே சென்றுவிட்டாள்.
*******
ஆரவ் அவள் இல்லாததைக் கவனித்தாள். கடந்த இரண்டு வாரங்களாக அவளை கல்லூரி வளாகத்தில் அவன் பார்க்கவே இல்லை. முதலில், அது ஒரு தற்செயல் நிகழ்வு என்றுதான் அவன் நினைத்தான். ஆனால், அதன்பின் நன்றாக உணர்ந்தான். அவள் வேண்டுமென்றே அவனைத் தவிர்த்து வருகிறாள்.
அவனுக்கு நிம்மதி மற்றும் குற்ற உணர்வு இரண்டும் ஏற்பட்டது.
அமுதினியை எதிர்கொள்ள வேண்டிய அவசியமில்லை, அவள் முகத்தில் அவன் நிராகரிப்பைக் காண வேண்டிய அவசியமில்லை என்பதால் நிம்மதி ஏற்ப்பட்டது.
அவளை இந்த நிலைக்குக் கொண்டு வந்ததாலும், அவளுடைய வலிக்கு அவன்தான் காரணம் என்பதாலும் ஆரவுக்கு குற்றவுணர்வாக இருந்தது.
ஆனால், அவனால் என்ன செய்ய முடியும்? அவனால் தன்னைத் தானே சரிசெய்து கொள்ள முடியவில்லை. அவனுடைய கடந்த கால நினைவுகள், அவனை வேட்டையாடிக் கொண்டிருந்தன.
அமுதினிக்கு அவள் பெற வேண்டிய அன்பு, நிலைத்தன்மை, முழுமை ஆகியவற்றைக் அவனால் கொடுக்க முடியாது என்பது ஆரவுக்கு தெரியும்.
‘நான் அவளுக்கு நல்லது மட்டும்தான் செய்தேன்,’ என்று அவன் தனக்குள் திரும்பத் திரும்பச் சொன்னான்.
‘அவளை காயப்படுத்துவதை விட இப்போது அவளை நிராகரிப்பது நல்லது. நான் அவளுக்கு நல்லது செய்தேன்…’ என்று எண்ணி திருப்தி படுத்திக் கொண்டான்.
ஆனால் அது ஏன் சரியாக உணரவில்லை?
**********
பேராசிரியர் சரண்யா இவர்களின் கண்ணாமூச்சி ஆட்டத்தை கவனித்தார். ஆசிரிய அறையில், ஆரவுடன் சாதாரணமாக உரையாடிக் கொண்டிருந்தபோது, அவர் அமுதினியைப் பற்றி குறிப்பிட்டு பேசினார்.
“ஆரவ், இந்த அமுதினி கொஞ்ச நாளா ரொம்ப டிப்ரஸ்ட்-ஆ இருப்பது போல தெரியுது… நீங்க அதை கவனிச்சிங்களா?” என்று கேட்கவும்,
ஆரவ் சங்கடமாக உணர்ந்து, “மேடம், நான்… சமீபத்தில் அவளை காலேஜ் கேம்பஸில் பார்ப்பதில்ல…”
சரண்யா அவனை கவனமாகப் பார்த்து, “ஆரவ், உங்களுக்கும் அமுதினிக்கும் இடையில் ஏதாவது பிரச்சனை போய்ட்டு இருக்கா?”
ஆரவ் தயங்கி, “மேடம்… அது… அது என் பர்சனல்…”
“புரியுது… நான் அதுல தலையிட விரும்பல ஆரவ்… ஆனா, அமுதினி என்னோட ஸ்டூடண்ட்… உன்னையும் நான் கேர் பண்றேன். நீங்க ரெண்டு பேரும் போராடிட்டு இருக்குற மாதிரி தெரியுது…”
ஆரவ் பெருமூச்சு விட்டு, “மேம், அது அமுதினி… அவள் என்கிட்ட ஃபீலிங்ஸ் டெவலப் பண்ணினா… நான் அவளை ரிஜெக்ட் பண்ணினேன்… நான் ரிலேஷன்ஷிப்-க்கு ரெடி இல்லன்னு சொல்லிட்டேன்… அதான் எனக்கு சரியானது-னு நான் நினைக்குறேன்… ஆனா… நான் அவளை கொஞ்சம் ஹர்ட் பண்ணிட்டேன்…”
சரண்யா தலையசைத்து, “நீ உன் வேலைக்கு ஹானஸ்ட்-,ஆ இருந்த ஆரவ்… அது சரிதான்… ஆனா, நீயும் அமுதினியும் புரொபஷனலா நிறைய பேசணும்… ஏன்னா, நீங்க ரெண்டு பேரும் ஒரே துறையில இருக்கீங்க…”
“எனக்குத் தெரியும் மேடம்… ஆனா, நான் அவளுக்கு ஸ்பேஸ் கொடுக்க நினைக்கறேன்… அவ குணமடைய நிறைய அவகாசம் தேவை…”
சரண்யா யோசித்து, “ஆரவ், நான் ஒன்னு சஜ்ஜெஸ்ட் பண்றேன்… நான் ஆமுதினியை என் கேபினுக்கு கூப்பிட்டுப் பேசி பார்க்கறேன்… நான் அவகிட்ட பேசினா, அவளுக்கு புரொபஷனல் கைடன்ஸ் கொடுப்பேன்… கவுன்சிலிங் சேவைகளைப் பயன்படுத்தச் சொல்லி, நான் அவளை என்கரேஜ் பண்றேன்…”
“அது… அது குட் ஐடியா மேடம்… ரொம்ப நன்றி…” என்று சொல்லி வேகமாக சென்று விட்டான் ஆரவ் கிருஷ்ணா.
மறுநாள் காலை, அமுதினிக்கு பேராசிரியர் சரண்யாவிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது.
“இன்று மதியம் 2 மணிக்கு என் கேபினுக்கு வா… உன்கிட்ட அவசரமாகப் பேச வேண்டும்.”
அமுதினி பதட்டத்துடன், அவருடைய கேபினுக்குச் சென்றாள்.
******
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
3
+1
+1
