Loading

ரகசியம் – 9 “ஷப்பாஆ மறுபடியும் ஆரம்பிச்சுடீங்களா.. நான் போறேன் வெளிய” என்று சலித்தபடி மது வெளியே வர அங்கு மதுரனும் அறிவமுதனும் நின்று கொண்டிருக்க மதுரிகாவைக் கேலியாக பார்த்தான் மதுரன்.

‘அயோ பார்குறானே பார்குறானே..’ என்று தயங்கியபடி நிற்க பின்பு அவனிடம் சென்றவள்,

“அது வந்து.. சாரி.. உன் பெயரைக் கேட்காம.. தப்பா புரிஞ்சி… சாரி” என்று வார்த்தைகளைக் கோர்க்க முடியாமல் இழுத்துக்கொண்டிருக்க அதில் அவனுக்கு சிரிப்பு தான் வந்தது..

“நான் தான் தெரியாம பண்ணேன்னு சொன்னேன்ல.. சரி எனக்கு தான் உன் பேரு தெரியாது.. உனக்கு தெரியும் தான.. அப்போ கால் பேசும்போதே தெளிவா சொல்ல வேண்டியது தானே.. உன் பேரு மதுரன்னு” என்று இவள் பாவமாக கேட்க அவனோ உதடுமடித்து சிரித்தபடி,

“உனக்கு என் பேரு தெரியாதுன்னு எனக்கு எப்படி தெரியும்..” என்று கேட்க அவளோ,

“ஆமால்ல.. மறுபடியும் சாரி” என்றிட அவனோ,

“உன் மொபைல் கொஞ்சம் குடேன்” என்று கேட்க அவளோ புரியாமல்,

“எதுக்கு” என்றிட அவனோ,

“கொடு.. சொல்றேன்.. லாக் எடுத்து கொடு” என்றிட அவளும் அவ்வாறு செய்ய அவளின் அலைபேசியில் வலையொளி (you tube) பக்கத்தில் குஷி படத்தைத் தேடி எடுத்தவன் அதில் விஜய் ஜோதிகாவிடம்,

“ஒண்ணு பண்றீங்களா.. ஒரு கேசட்ல தொளசண்ட் டைம்ஸ்.. ஐம் சாரி ஐம் சாரி ஐம் சாரின்னு ரெகார்ட் பண்ணி வச்சுக்கோங்க.. ஏன்னா அடிக்கடி உங்களுக்கு இந்த வோர்ட் தேவைப்படுது” என்று கூறும் உரையாடலை எடுத்து அவளிடம் நீட்ட அதனைப் பார்த்துவிட்டு கூச்சமாய் அவனை ஏறிட அவனோ எதுவும் கூறாமல் சிரித்தபடி மட்டும் நின்றான்.

“திட்டணும்னு தோணுச்சுனா திட்ட கூட செய்.. இப்படி கிண்டலா பார்க்காத” என்று குழந்தை முறைப்பது போன்று கூற அவனோ மீண்டும் உதடுமடித்து சிரித்து,

“சிரிப்பு காமிச்சுட்டு திட்டுன்னு சொன்னா நான் என்ன செய்ய” என்று கூற அவளோ,

“எனக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கும்.. அப்போ கவனிச்சுக்குறேன்” என்று கூறி தன் தாடையைத் தோளில் இடித்து திரும்பி நின்றுக் கொண்டாள்.

பின்னே வந்த மாறன் மற்றும் அன்பினியா மதுரிகாவைத் தேட அவளைக் கண்டுகொண்ட மாறன், மதுரன் மற்றும் மதுரிகாவிடம் செல்ல அன்பினியாவின் கண்கள் அறிவமுதனைக் குறுகுறுவென பார்த்தது. அதனைக் கண்ட அறிவு,

‘இவ எதுக்கு என்னைக் குறுகுறுன்னு பார்க்குறா’ என்று பயந்தபடி பார்க்க அவளோ இவனை நோக்கி வேகமாய் அடிகள் எடுத்து வைக்க இயற்கையிலேயே பெண்களைப் பார்த்தாள் பயப்படும் குணம் கொண்டவன் அவள் தன்னைத் தான் துரத்துகிறாள் என்றறிந்து அருகில் இருந்த வகுப்புக்குள் ஓட்டம் பிடிக்க அவனைத் தொடர்ந்து இனியாவும் வகுப்பினுள் சென்றாள். அங்கே அறிவு மற்றும் இனியாவைத் தவிர்த்து யாருமே இல்லை.

“மாட்டுனான் டா பம்பரக்கட்டை மண்டையா” என்ற ரீதியில் அறிவமுதனைப் பார்த்தபடி வகுப்பு கதவினை அடைக்க அவனுக்கோ வியர்த்து கொட்டியது.

“உனக்கு என்ன வேணும்.. இப்போ எதுக்கு கதவை சாத்தூர.. என்னை விட்டுடு..” என்று பயந்து பின்னே செல்ல அவளோ அவனைத் தான் நெருங்கி கொண்டிருந்தாள். இருவருக்கும் இடையில் சிறிய இடைவேளை மட்டுமே இருக்கும் பட்சத்தில் தன் தோள் பையைக் கழட்டியவன் அதனை இருவருக்கும் நடுவில் அரணாக வைத்து கண்களை மூடிக்கொள்ள அவளுக்கோ அவன் பாவனை சிரிப்பைத்தான் வரவைத்தது.

பிறகு அவன் பையின் ஜிப்பில் மாட்டித் தொங்கிக் கொண்டிருந்த தன் தங்க ப்ரேசிலேட்டை அதிலிருந்து அவள் எடுக்க அதனைப் பார்த்தவனுக்கு அப்பொழுது தான் மூச்சே வந்தது.

“ஆமா இது எப்படி என்னோட பேக்ல வந்துச்சு..” என்று அவன் யோசித்தபடி கூற அவளோ,

“நீ தான டா திருடிட்டு போன.. திருட்டுப்பயலே..” என்று அவள் வேண்டுமென்றே வம்பிழுக்க அவனோ,

“நான் திருடல.. சரி அப்படியே திருடுனவனா இருந்தா இப்படி கேர்லெசா ஜிப்ல தொங்க விட்டு வச்சுருப்பானா” என்று தன் பெயரிலுள்ள அறிவைப் பயன்படுத்தி கேட்க அவளோ,

“பாரேன் துரைக்கு அறிவை” என்று நக்கலாக கூற அவனோ,

“ஆமா அதனால தான் எனக்கு அறிவமுதன்னு பேரு வச்சுருக்காங்க” என்று கூறியவன் காலரைத் தூக்கிவிட,

“கொய்யால செய்றதையும் செஞ்சுட்டு இதுல உனக்கு கெத்து வேறயா.. திருட்டுப்பயலே” என்று கூறியவள் அவன் அறியாவண்ணம் தன் சிரிப்பை மறைத்து சாதாரணமாக முகத்தை வைக்க,

“சரி நீ என்னமோ நெனச்சுட்டு போ.. நான் திருடல அவ்ளோ தான்.. சரி இதை எடுக்க தான் சரி இதை எடுக்க தான் வந்தியா..” என்று கேட்க அவளோ,

“ஆமா நீ என்ன நெனச்ச.. ” என்று கேட்க அவனோ,

“இல்ல பொண்ணுங்கனாலே எனக்கு பயம்.. அதுவும் நான் ஒரு வயசு பையன் என்னை ஒரு வயசு பொண்ணு உள்ள தள்ளி கதவை சாத்துனா நீ என்னை ரேப் பண்ண போரியோன்னு பயம் வராதா” என்று குழந்தைபோல் கேட்க அவளோ,

“அய்யோடா இவர் பெரிய மன்மதன்.. இவரை ரேப் பண்ண வேற பண்றாங்க.. திருட்டுப்பயலுக்கு யோசனையைப் பாரு” என்று கூற அவனோ,

“ஹே நான் திருடலைன்னு சொல்றேன்ல” என்று இவன் லேசாக குரலை உயர்த்த,

“டேய் என்ன.. குரலை உசத்துற.. நீ என்னைப் பொறுத்தவரைத் திருடன் தான்.. இப்போ நீ ஒத்துக்கல.. வெளிய போய் பஞ்சாயத்து வச்சுக்கலாம்.. எப்படி வசதி” என்று திமிராக கேட்க அறிவோ,

‘சரியான ராங்கியா இருக்காளே.. இவ செஞ்சாலும் செய்வா’ என்று நினைத்தவன்,

“சரி நீ அப்படியே நெனச்சுக்கோ அன்பு.. அதான் உன் பொருள் உனக்கு கிடச்சுட்டுல இப்போ ஆளை விடு” என்றவன்,

“அது எப்படி என் பேக்ல வந்துச்சு” என்று யோசித்தபடி விட்டால் போதும் என்று முன்னே செல்ல அவன் அழைத்த அன்பு என்ற அழைப்பில் சிறிது தடுமாறித்தான் போனாள் அன்பினியா.

வெளியில் மதுரன் மதுரிகா மற்றும் மாறன் மூவரும் இனியாவையும் அறிவையும் காணமல் தேடியபடி வகுப்பறை வாசலில் நிற்க அந்த நேரம் சரியாக அறிவு கதவைத் திறக்க அவனோடு சேர்ந்து இனியாவும் நிற்க அதைக் கண்டு மூவரும்,

“நீங்க ரெண்டு பேரும் கதவை மூடிட்டு உள்ள என்ன பண்ணிட்டு இருந்திங்க” என்று வாயைப்பிளந்து கேட்க அறிவோ,

“நான் இல்ல இவ தான்.. என்னைப் பிடிச்சு உள்ள தள்ளி கதவை சாத்திட்டா” என்று சாதாரணமாக கூற அவர்கள் மூவரும்,

“என்னது உள்ள தள்ளி கதவை சாத்திட்டாளா” என்று கோரஸாக கேட்க அவர்கள் என்ன அர்த்தத்தில் நினைத்து கேட்கிறார்கள் என்று புரிந்த இனியா,

“டேய் திருட்டுப்பயலே.. வாயை மூடுடா..” என்று கூறியவள் மது மற்றும் மாறனிடம்,

“என் பிரேஸ்லெட் ஒருத்தன்கிட்ட மாட்டிக்கிச்சுன்னு சொன்னேன்ல.. அது இவன்கிட்ட தான்.. அதை எடுக்க தான் இவன்கிட்ட போனேன்.. இவன் பயந்து உள்ள வந்துட்டான்.. எங்க தப்பிச்சு ஓடிருவானோன்னு கதவை சாத்துனேன்.. வேற ஒண்ணுமில்ல” என்று கூறிமுடிக்க மதுரனும் அறிவும் அவள் கூறுவது புரியாமல் முழிக்க இனியா இரண்டாவது முறையாக அந்த நீண்ட பிளாஷ்பேக்கைக் கூற ஆரம்பிக்க,

“எம்மா தாயே.. மறுபடியும் ஆரம்பிக்காத.. நானே ஷார்ட்டா சொல்லிடுறேன்” என்ற மது அவள் கூறியதை ரத்தினச் சுருக்கமாக கூறினாள். அதனைக் கேட்ட மதுரன்,

“அது சரி நீ தான் அவன் மூஞ்சையோ இல்ல என் மூஞ்சையோ பார்க்கலையே.. அப்பறம் எப்படி இவன்னு கண்டுபிடிச்ச” என்று கேட்க அவளோ,

“இதோ இவன் கன்றாவியான ஆரஞ்சு கலர் பேக்கைப் பார்த்து தான் கண்டுபிடிச்சேன்” என்று அறிவமுதனின் தோள் பையைச் சுட்டிக்காட்டி எப்பொழுதும் போல் கேலியாக கூற அறிவமுதன் முகம் வாடியபடி விறுவிறுவென நடந்து சென்றுவிட்டான். மது, மாறன் மற்றும் இனியா மூவரும் என்னாச்சு என்றபடி புரியாமல் பார்க்க காரணம் அறிந்த மதுரன்,

“ஹே காய்ஸ்.. ஒன்னுமில்ல.. ஹி வில் பி ஆல்ரைட்.. சி யு டுமாரோ” என்றபடி கூறி அறிவின் பின் செல்ல மாறானோ,

“சரி நாளைக்கு வந்து கேட்டுப்போம்.. இப்போ கிளம்புவோம்.. பாய் இனியா” என்றவன் மதுவை அழைத்து கொண்டு சென்றுவிட்டான்.

இங்கு இனியாவிற்கு அறிவமுதனின் வாடிய முகம் அவளை ஏதோ செய்ய கவலைத் தோய்ந்த முகத்தோடு அவளும் வீடு செல்லலானாள்.

 

ரகசியம் – 10

மாறனும் மதுரிகாவும் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர், “அம்மா”, “அத்தை” என்று கூச்சலிட்டபடி.

“வாங்க பசங்களா… முதல் நாள் காலேஜ் எப்படி போச்சு” என்று விஜயா கேட்க,

“இன்னைக்கு பெருசா எதுவும் இல்ல அத்தை.. இன்ட்ரோ மட்டும் தான் நடந்துச்சு.” என்றிட அவரோ,

“ஓ அப்படியா.. ஆமா புது பிரண்ட்ஸ் எல்லாம் கிடைச்சாச்சா” என்று கேட்க மாறனோ,

“அதெல்லாம் அன்னைக்கு அப்பிளிக்கேஷன் போடும் போதே ரெண்டு பேரை ஃபிரண்ட் பிடிச்சுட்டோம்.. இன்னைக்கு ஒருத்தி நல்ல இவளை மாதிரியே வந்து சேர்ந்துருக்கா” என்று கூற அவரோ,

“சரி டா.. போனோமா.. கத்துக்க வேண்டியதைக் கத்துக்கிட்டோமா.. வந்தோமான்னு இருக்கனும்.. சும்மா யார்கிட்டயும் சண்டைக்கு நின்னுட்டு வர கூடாது..” என்று அறிவுரைக் கூற மாறனோ,

“உங்க மருமக தான் கூடிய சீக்கிரம் ரௌடியா ஆயிடுவா போல” என்று மாறன் கூற மதுவோ,

“டேய் ஒழுங்கா ஏதாச்சும் சொல்லி சமாளிச்சுடு.. இல்லனா மவனே நீ செத்த” என மிரட்ட விஜயாவோ,

“ஏன்டா அப்படி சொல்ற.. மது என்ன செஞ்சா” என்று கேட்க அவனோ,

“ஹே என்னை அத்தான்னு சொல்லு டி.. இல்லனா அம்மாகிட்ட மாட்டி விட்ருவேன்” என்று கூற அவளோ,

“போடா நாயே.. அப்படியெல்ல்லாம் சொல்ல முடியாது” என்றிட அவனோ,

“அப்போ சரி நான் அம்மாகிட்ட சொல்றேன்” என்றவன், “ம்மா இவ என்ன செஞ்சா தெரியுமா..” என்று கேட்க அவளோ,

“டேய் அத்தான்.. காலேஜ் போய்ட்டு வந்து ரொம்ப டயர்டா இருப்ப.. போ பிரெஷ் ஆயிட்டு வா.. நாம டீவி பார்க்கலாம்” என்று பல்லைக்கடித்துக் கொண்டு முறைத்தபடி கூற அவனோ,

“ஒண்ணுமில்லமா சும்மா அவளைக் கலாய்ச்சேன்” என்றுவிட்டு மதுவின் காதில்,

“அந்த பயம் இருக்கட்டும்.. போனா போகுதேன்னு தப்பிக்கவிட்டேன்” என்று கூற அவளோ அவன் முடியைப் பிடித்து ஆட்டிவிட்டு,

“போடா கழுதை” என்று விட்டு அவன் சுதாரிப்பதற்குள் தன் அறைக்குள் சென்று கதவை சாத்திவிட்டாள். வழியில் ஆவென கத்தியவன்,

“அடியே.. எப்படியும் வெளிய தான வரணும் நீயு.. அப்போ கவனிச்சுக்குறேன்” என்று கத்தியபடி அவனது அறைக்கு சென்றுவிட்டான். நடப்பதை எல்லாம் கவனித்த விஜயாவோ,

“இதுங்க எப்போ தான் பக்குவமா நடந்துக்க போதுங்களோ” என்று புலம்பியபடி சமயலறைக்கு சென்றுவிட்டார்.

————————

அங்கே மதுரனோ அறிவோடு சேர்ந்து அவன் வீட்டிற்கு சென்றான். அறிவின் அன்னை லதா,

“வாப்பா மது.. எப்படி இருக்க.. இப்போலான் ஏன் வீட்டுக்கு வரதே இல்ல நீ” என்று கேட்க அவனோ தான் வாங்கி வந்த காய்கறிகள் மற்றும் பழங்களை அவரிடம் கொடுத்தபடி,

“நல்ல இருக்கேன் மா.. வரணும்னு நெனச்சுட்டே இருப்பேன் மா.. அப்புறம் ஏதாச்சு வேலை வந்துரும்” என்றான் அவரோ,

“இதெல்லாம் எதுக்கு பா வாங்கிட்டு வர.. எத்தனை தடவ சொல்றது.. நம்ம வீடு தானே இது” என்று அவர் கூற,

“அதான் மா நானும் சொல்றேன்.. நம்ம வீடு தானே.. அதான் வாங்கிட்டு வந்தேன்” என்றவன் அறிவின் தோளில் கைப்போட அதனைத் தட்டிவிட்டவன்,

“போடா நீ.. சொல்ல சொல்ல கேட்காம இதெல்லாம் வாங்கிட்டு” என்று கடுப்பாக கூற மதுரனோ,

“சரி நீ அதை விடு.. அந்த பொண்ணு ஏதோ தெரியாம கிண்டல் பண்ணிடுச்சு.. அவளுக்கு தெரியுமா இது உங்க அப்பா வாங்கி கொடுத்த பேக்னு.. அவகிட்ட ஏன் மூஞ்ச தூக்கிட்டு வந்த” என்று கேட்க அறிவோ,

“ஹே இல்ல டா அவ மேல கோவம் எல்லாம் இல்ல.. அங்கேயே இருந்தா எங்க என்னை மீறி அழுதுடுவேனோன்னு தான் வந்துட்டேன்.. எங்க அப்பா நியாபகமா எனக்கு இது மட்டும் தானே இருக்கு.. இதைப்பத்தி சொன்னதும் டக்குனு ஒரு மாதிரி ஆயிடுச்சு.. வேற ஏதும் இல்ல” என்று கூற மதுரனோ,

“சரி டா.. ஆனா அந்த பொண்ணு கில்ட்டா பீல் பண்ணிருக்கும்ல” என்று கேட்க அறிவும் அப்பொழுது தான் யோசித்தான்.

“ஆமால ச்ச.. அன்பு கஷ்ட பட்டுருப்பாளோ” என்று கூற மதுரனோ அவனை ஒரு மாதிரியாக பார்த்தான்.

“என்ன டா எல்லாரும் இனியான்னு கூப்பிட்டா சார் மட்டும் வித்தியாசமா அன்புன்னு கூப்புடுறீங்க..” என்று நக்கலாக கேட்க அவனோ,

“ஹே சீ.. அன்பினியாங்குற பேரை எப்படி கூப்பிட்டா என்ன டா.. அது சரி.. மதுரிகாவைப் பார்த்தா துரை மூஞ்சு சிரிச்சுக்கிட்டே இருக்கே என்ன விஷயம்.. நியாயப்படி அவ உன்னைத் திட்டுன திட்டுக்குலான் நீ அவளை ஜென்ம விரோதியா நெனச்சுருக்கணும்” என்று கூற அப்பொழுதும் மதுரன் சிரிக்க தான் செய்தான்.

“ஓ அவகிட்ட தான் சிரிக்குறன்னு பார்த்தா அவ பேரை சொன்னாலே சிரிக்குறியா.. ரைட்டுடா..” என்று கேட்க அதற்கு மதுரனோ,

“டேய் அறிவு… ” என்று இழுக்க அறிவு பேனா மற்றும் டைரியை எடுக்க அவனோ,

“சொல்றதுக்கு எதுவும் இல்லை.. அதை எடுத்த இடத்துலயே வச்சுரு” என்று கூறியபடி உணவருந்த சென்றான் மதுரன்.

‘பரதேசி.. உன்ன ஒரு தத்துவ மேதாவின்னு நெனச்சு டைரியை எடுத்தேன் பாத்தியா என்னை செருப்பாலயே அடிக்கணும் டா’ என்று தன் மனதில் புலம்பிய படி நிற்க உள்ளே சென்ற மதுரன் அவனின் மனக்குமுரலை யூகித்தவனாய்..

“வெளிய தான் டா இருக்கு.. சீக்கிரம் அடிச்சுட்டு சாப்பிட வா” என்றிட அவனுக்கோ எங்கு போய் முட்டிக் கொள்ளலாம் என்றிருந்தது. பிறகு சாப்பிட்டு முடித்து வந்த மதுரன் அறிவை அழைத்து,

“டேய் மச்சான்.. பால் சில நேரம் கேட்டு போய்டுது.. அந்த கேட்டு போன பாலை அயோ கேட்டுபோச்சேன்னு நெனச்சு சாக்கடைல ஊத்துறதும்… ஐ கேட்டுபோச்சேன்னு நெனச்சு அதை வச்சே ரசகுலா செஞ்சு சாப்பிட்டு சந்தோஷப்படுறதும் நம்ம கைல தான் டா இருக்கு” என்று கூற அறிவோ,

“எங்க அம்மா செஞ்ச ரசகுலால இப்படி ஒரு தத்துவமா பாரேன்.. ஆனா இப்போ எதுக்கு இதை சொல்ற நீ” என்று அறிவு கேட்க,

“எதுக்கு சிரிச்சிட்டே இருக்கன்னு கேட்டல அதுக்கு தான்.. எந்த ஒரு விஷயம் நடந்தாலும் அதுல நமக்கான நல்லதை மட்டும் யோசிச்சு சந்தோஷப்பட்டோம்னா வாழ்க்கை நிம்மதியா இருக்கும்” என்று கூறியவன்,

‘நல்லவேளை அவன் கேட்டது ஒன்னு நான் சொன்னது ஒன்னு.. கண்டுபிடிக்குறதுக்குள்ள எஸ்கேப் ஆயிடுவோம்’ என்று நினைத்தவன், “பாய் மச்சான்” என்று தன் இருசக்கர வாகனத்தில் ஏறி பறந்துவிட்டான்.

‘கொய்யால நீ மதுவைப் பார்த்து எதுக்கு சிரிக்குறன்னு கேட்டா.. நாய் எதையோ சொல்லி சமளிச்சுட்டு போது’ என்று கண்டுகொண்டவன் சிரித்தபடி வீட்டினுள் சென்றான்.

——————-

சோகமுகமாய் வீடு வந்து சேர்ந்தவளைக் கண்ட அவளின் தங்கை இமைவிழி,

“என்ன சுண்டலி சுருங்கி போய் வருது” என்று கேட்க அவளோ,

“அதெல்லாம் ஒன்னுமில்ல டி” என்று கூறியபடி உடைமாற்ற அறைக்குள் சென்றாள்.

அன்பினியா.. எப்பொழுதும் துறுதுறுவென்று வாய் ஓயாமல் பேசி கொண்டிருப்பவள். வெள்ளந்தியான குணம். மற்றவர்களை வம்பிளுத்து கலாய்த்து தள்ளினாலும் லேசாக கூட பிறர் முகம் வாட காண பொறுக்கதவள். இவளின் தங்கை இமைவிழி. பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள். இருவருக்குமிடையில் ஒரு வயது வித்தியாசமே. அதனால் உடன் படித்த தோழிகளைக் காட்டிலும் இவர்களுக்குள் நெருக்கம் அதிகம். இருவருமே தாயில்லாமல் தந்தை அரவணைப்பில் வளர்ந்த அப்பாவின் செல்ல இளவரசிகள்.

வந்ததும் காபி கேட்பாள் என்றறிந்த விழி தமக்கைக்காக தயாரித்துக் கொண்டிருந்தாள். உடைமாற்றிவிட்டு தொப்பென சோபாவில் அமர்ந்தவள் தொலைக்காட்சியை இயக்க அதில் சச்சின் படத்தில் உள்ள காட்சிகள் ஓடிக் கொண்டிருந்தன.

‘ஐ.. விஜய் படம்.. இதைப் பார்க்க ஆரம்பிச்சா நம்ம சோகமெல்லாம் பறந்து போய்டும்’ என்று நினைத்தவள் அதனைப் பார்த்து கொண்டிருந்தாள். தங்கை சூடான பில்டர் காபியை அவள் முன் நீட்ட அதன் மனத்தை உள்மூச்சி வரை சுவாசித்தவள் எதுவும் கூறாமல் வாங்கி பருகினாள். அவள் முகத்தில் சற்று முன் இருந்த வாட்டம் இப்பொழுது இல்லை என்று கவனித்த விழி,

‘நார்மல் ஆயிட்டா போல.. இப்போ என்னன்னு கேட்டுக்க வேணாம்’ என்று நினைத்துவிட்டு அவளும் படத்தைப் பார்க்கலானாள். அப்பொழுது அதில்,

“மத்தவங்கள வேதனைப் படுத்தாத எந்த சந்தோஷமும் தப்பில்ல.. மத்தவங்கள வேதனைப் படுத்துற ஒரு சின்ன ஸ்மைல் கூட தப்பு தான்” என்று நடிகர் விஜய் கூறும் வாசகம் வர அதனைக் கேட்ட இனியாவின் மனதில் மீண்டும் கலக்கம். எழுந்து சென்றவள் பால்கனியில் நின்றுகொண்டாள்.

‘ச்ச.. நான் அப்படி செஞ்சுருக்க கூடாதோ.. ஆனா பெருசா நான் ஏதும் தப்பா சொல்லிடலயே.. அவனும் இதுக்காக எல்லாம் வருத்தப்படுற ஆள் மாதிரியும் தெரியல.. அப்றம் ஏன் வருத்தப்பட்டான்’ என்று யோசித்தபடி நிற்க தொலைக்காட்சியை அணைத்துவிட்டு இனியாவுடன் வந்து நின்றாள் இமைவிழி.

“ஹே விழி.. மனசு சரியில்ல டி” என்று சோகமாக இனியா கூற,

“அதான் உன் மூஞ்ச பார்த்தாலே தெரியுதே.. நீ சொல்ல வேற செய்யணுமா.. சொல்லு என்னாச்சு” என்றிட நடந்ததை எல்லாம் கூறினாள். எல்லாவற்றையும் கேட்ட விழி..

“அவங்க திருடலன்னு தெரிஞ்சும் நீ திருட்டுப்பயலேன்னு கூப்பிடுற.. அது அவங்களுக்கும் தெரியும்.. அதுக்கே கோபப்படாதவங்க.. ஜஸ்ட் அவர் பேக்க கன்ராவின்னு சொன்னதுக்கா கவலைப் பட போறாங்க..” என்று அவள் கேட்க,

“அதான் டி எனக்கும் டவுட்டு” என்று கூற,

“எனக்கென்னமோ இதுல வேற ஏதோ ரீசன் இருக்கும்னு தோணுது.. ஆனா அது என்ன ரீசனா இருந்தாலும் உன்கிட்ட நாளைக்கு பேசாம எல்லாம் இருக்க மாட்டாங்க.. கவலைப்படாத” என்று விழி கூற,

“எப்படி சொல்ற” என்று கேட்டாள் இனியா.

“நீ சொன்னதவச்சு பார்த்தா அப்படி ஒன்னும் கோபப்படுற கேரக்டரா தெரியல டி.. அதான்.. சரி அதை விடு.. வேற யாரெல்லாம் ஃபிரண்ட் பிடிச்ச” என்றிட

“ஹே ஆமாடி சொல்ல மறந்துட்டேன்.. என்னை மாதிரியே ஒருத்தி என்கிட்ட சிக்கிருக்கா பேரு மதுரிகா.. அவகிட்ட பல வருஷமா சிக்கின ஒருத்தன் இருக்கான் அவளோட மாமா பையன் இளமாறன்.. இப்போ என்கிட்டேயும் கலாய் வாங்கிட்டு கிடக்கான்.. அப்புறம் இந்த திருட்டுபய அறிவமுதன் அவனோட ஃபிரண்ட் மதுரன்.. இப்போதைக்கு இவங்க தான் தெரியும்” என்று கூற

“அடிப்பாவி எப்படி டி அதுக்குள்ள நாலு பேரை ஃபிரண்ட் பிடிச்ச” என்று வாய்பிளக்க,

“நம்மள மாதிரி வாயாடிங்களுக்கு.. இதெல்லாம் சர்வ சாதாரணம்.. உன்னை ஒருநாள் காலேஜுக்கு கூட்டிட்டு போய் இண்ட்ரோ கொடுக்கேன்” என்று கூறிக்கொண்டிருக்க அவர்களின் தந்தை ராமானுஜம் மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்திருந்தார். பின்பு அவருடன் சென்று சாப்பிடுகிறேன் பேர்வழி சகோதரிகள் இருவரும் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். ————————

வாழ்க்கைப் பயணம் ஒரு காட்டுப் பயணம் போன்றது. சில நேரம் அழகாக சில நேரம் பயமாக சில நேரம் ஆச்சர்யமாக சில நேரம் அதிசயமாக. அது யாருக்கு எப்பொழுது என்ன ரகசியங்கள் வைத்திருக்கிறது என்று விதிக்கு மட்டுமே வெளிச்சம். சில போராட்டங்கள் பல தடைகள் ஏகப்பட்ட விடாமுயற்சிகள் அவ்வபோது சக மனிதர்களிடமிருந்து கிட்டும் ஊக்கங்கள்.. சில மனித மிருகங்களினால் ஏற்படும் ஆபத்துக்கள், இவ்வாறு அனைத்தையும் கடந்து பொறுமையாய் பயணித்தால் மட்டுமே அனுபவங்கள் எனும் பொக்கிஷம் கிட்டும்.

நம் கதையின் நாயக நாயகிக்களுக்கும் அவர்களின் வாழ்க்கை என்னென்ன ரகசியம் வைத்திருக்கிறதோ போக போக பொறுத்திருந்து பார்ப்போம்..

 

ரகசியம் – 11

மறுநாள் காலையில் மீண்டும் அனைவரும் கல்லூரியில் சந்தித்தனர். மதுரனும் அறிவும் வர அவர்களுக்கு முன்னே அன்பினியா வந்து அறிவிடம் பேசுவதற்காக காத்துக்கொண்டிருந்தாள். அவளைப் பார்த்த இருவரும் சிநேகமாய் புன்னகைக்க அவளும் பதிலுக்கு சிரித்தாள்.

“என்ன அன்பு இவ்ளோ சீக்கிரம் வந்துட்ட” என்று அறிவு அவளிடம் கேட்க அவளோ,

“உங்கிட்ட பேச தான் சீக்கிரம் வந்தேன்” என்றாள் தயங்கியபடி. மதுரனோ,

“சரி நீங்க பேசிட்டு வாங்க நான் உள்ள போறேன்” என்றவன் உள்ளே சென்றுவிட அறிவு,

“சொல்லு அன்பு.. என்னாச்சு..” என்றிட அவளோ,

“இல்ல நேத்து நீ நான் கலாய்ச்சதுல ரொம்ப வருத்தப்பட்டு போனல.. நான் எப்பொழுதும் போல ஜாலியா தான் கலாய்ச்சேன்.. என் டைப்பே அப்படி தான்..” என்று விளக்கவர அவளைத் தடுத்த அறிவு,

“அட இன்னுமா நீ அதை நெனச்சுட்டு இருக்க.. நான் நேத்தே மறந்துட்டேன்.. இதுல உன்மேல தப்பில்ல.. என் அப்பா எனக்கு வாங்கி கொடுத்த பேக் அது.. அவரோட நியாபகமா அது மட்டும் தான் என்கிட்ட இருக்கு.. அது இருந்தா அவரே என்கூட இருக்க மாதிரி இருக்கும்.. அதனால தான் நேத்து எமோஷனல் ஆயிட்டேன்..” என்று கூற இனியாவோ,

“அப்போ உன் அப்பா…” என்று கேட்க முடியாமல் திணற அவனோ,

“இறந்துட்டாங்க அன்பு.. சரி அதைவிடு.. ஆக்சுவலி நான் தான் உன்கிட்ட சாரி சொல்லணும். என்ன எதுன்னு தெரியாம நம்மளால ஒருத்தன் வருத்தப்பட்டானேன்னு உனக்கு தான் ஒருமாதிரி இருந்திருக்கும்ல” என்று கூற அவளோ,

“ஆமா அதான் எப்போடா நாளைக்கு விடியும் காலேஜ் வரலாம் எப்போ சாரி கேட்கலாம்னு இருந்தேன்” என்றிட அவனோ,

“அட அன்பு.. இதுக்கு எதுக்கு இவ்ளோ நேரம் வெயிட் பண்ணனும்.. ஒரு கால் பண்ணி சாரி கேட்டா முடிஞ்சுது” என்று அவன் கூற அவளோ இவனை முறைத்தாள்.

‘கரெக்ட்டா தான கேட்டோம்.. அப்புறம் ஏன் முறைக்குறா’ என்று யோசித்தவன்,

“எதுக்கு முறைக்குற அன்பு” என்று லேசாக பயந்து கேட்க அவளோ,

“திருட்டுப்பயலே நம்பர் இல்லாம எப்படிடா கால் பண்றது.. மாங்கா” என்று திட்ட,

“ஈஈஈ ஆமால” என்றவன் அவன் அலைபேசியை எடுத்து அவளிடம் கொடுத்து,

“இதுல உன் நம்பர் டைப் பண்ணு” என்றிட அவளும் செய்ய பிறகு அதனை அன்பு என்று பதிவு செய்தவன் அவளுக்கும் ஒருமுறை அழைத்துவிட்டு துண்டித்தான்.

“இதான் என் நம்பர்..” என்றிட அவளோ ஏனோ வார்த்தைக்கு வார்த்தை அவன் கூறும் அன்பு என்ற அழைப்பில் தன்னைத் தொலைத்து மீட்டாள். பின்பு அவன் முன்னே தன் அலைபேசியை எடுத்தவள் அவன் எண்ணை திருட்டுப்பயலே என்று பதிவு செய்ய அவனோ,

“நான் தான் திருடலன்னு உனக்கே நல்ல தெரியும்.. அப்புறம் ஏன் அப்படி கூப்பிடுற.. வேற எப்படினாலும் கூப்பிடு இப்படி மட்டும் கூப்பிடாத ப்ளீஸ்” என்று பாவமாக கேட்க அவளோ,

“ஏன் உனக்கு பிடிக்கலையா” என்று கேட்க அவனோ ஆமாம் என்று கூறினால் அவ்வாறு கூப்பிட மாட்டாள் என்று நினைத்து ஆமாம் என்றிட அவளோ,

“அப்படியா உனக்கு இப்படி கூப்பிட்டா பிடிக்கலையா.. அப்போ சரி.. நான் அப்படி தான் கூப்பிடுவேன்.. திருட்டுப்பயலே திருட்டுப்பயலே திருட்டுப்பயலே” என்று கூறிவிட்டு அவள் வகுப்புக்குள் சென்றிட,

‘சரியான இம்சை’ என்று நினைத்தவன் சிரித்துக்கொண்டு மதுரனுடன் அமர்ந்தான்.

“என்ன டா மன்னிப்பு கேட்கும் படலம் எல்லாம் முடிஞ்சுதா” என்று மதுரன் கிண்டலாக கேட்க,

“எப்படி மச்சான் கரெக்ட்டா சொல்ற” என்று அறிவு கேட்க,

“அய்ய.. இது பெரிய சிதம்பர ரகசியம்.. போடா டேய்.. ஆமா மன்னிப்பு கேட்க இவ்ளோ நேரமா.. ” என்றிட அவனோ,

“அன்பு தான் டா சும்மா வம்பு இழுத்துட்டு இருந்தா” என்று லேசாய் முளைத்த புன்னகையுடன் கூற மதுரனோ,

“வம்பு இழுத்த மாதிரி தெரியலையே” என்று விடாமல் கலாய்க்க ஜன்னல் வழியாக மதுரிகாவும் மாறனும் வருவதைப் பார்த்த அறிவு,

“அது இருக்கட்டும்.. இனிமே நீ தான் சிரிச்சிட்டே இருக்க போற” என்று கூற,

“என்ன டா சொல்ற” என்று புரியாமல் கேட்டான் மதுரன்.

“அக்கட சூடு மகனே” என்று அவர்கள் வரும் திசையைக் காண்பிக்க அதனைக் கண்டவனின் இதழ்கள் அனிச்சையாக மலர்ந்தன. மாறனோ,

“ஹாய்” என்று அங்கிருந்தே கையசைக்க மதுரன் மற்றும் அறிவு இருவரும் ஹாய் என்றனர். பிறகு மது இனியா மாறன் முவரும் ஹாய் என்றபடி பேச ஆரம்பித்தனர்.

“ஹே பஜாரி.. நீ என்ன சீக்கிரம் வந்துட்ட” என்று மாறன் இனியாவிடம் கேட்க மதுவும்,

“அதானே அதுவும் இவ்ளோ சீக்கிரம்” என்று கேட்க இனியாவோ நடந்ததைக் கூறினாள். பிறகு மணியடிக்க வகுப்பு ஆரம்பமானது.

வகுப்பினுள் வேம்பு நுழைய மாணவர்கள் வணக்கம் கூறி அமர்ந்தனர்.

“மார்னிங் காய்ஸ்.. இன்னைக்கு நாம பார்க்க போறது செல்ப் க்ரூமிங்.. அதாவது நம்மள நாமளே எப்படி இன்னும் மேம்படுத்திக்குறதுன்னு பார்க்க போறோம். சினிமால நடிக்கணும்னு நெனைக்குறவங்க அழகா இருந்தா மட்டும் போதாது. அழகே இல்லனா கூட அவங்களோட ஆட்டிட்யூட், பர்சனாலிட்டி, மேனரிசம், இதெல்லாம் தான் ரொம்ப முக்கியம்.. உங்களுக்குள்ள எப்போவுமே காண்பிடண்ட் இருக்கனும்..

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும்…

அப்படின்னு பாரதியார் பெண்கள் எப்படி இருக்கணும்னு சொல்லிருக்கார். ஆனா நாம இதை ஆண் பெண் இருவருக்கும் எடுத்துக்கலாம்.

ஒரு ஆக்டரா உங்க மேனரிசம் இப்படி தான் இருக்கனும்.” என்று ஆரம்பித்தவர் அவ்வாறே சிலபல அறிவுரைகள் வழிகள் என கூறி முடித்தார். அனைவரும் மிகவும் ஆர்வமாய் கேட்டனர் அவர் கூறியதை.

“ஓகே காய்ஸ்.. நீங்க தினமும் கண்ணாடி முன்னாடி நின்னு உங்களோட மேனரிசம் எப்படி இருக்கணும்னு ப்ராக்டீஸ் பண்ணி கத்துக்கோங்க..இன்னைக்கு செஷன் முடிஞ்சுது.. யாருக்காச்சு ஏதாச்சும் டவுட் இருந்தா கேட்கலாம்” என்றவர் கேட்க சிலர் சில சந்தேகங்களைக் கேட்க அதைத் தீர்த்துவைத்தார். பிறகு,

“ஓகே பசங்களா.. அப்புறம் முக்கியமான விஷயம்.. இங்க நடக்குற க்ளாஸெஸ் எல்லாம் மத்த கோர்ஸ் மாதிரி கிடையாது.. இதோட மெத்தட் வேற.. நாம போக போக அதெல்லாம் தெரிஞ்சுக்கலாம்.. ஆனா அதுக்கு முன்னாடி நீங்க ஒவ்வொரு க்ரூப்பா சேர்த்துக்கணும்.. இங்க மொத்தம் முப்பது பேர் இருக்கீங்க ஆளுக்கு அஞ்சு அஞ்சு பேரா ஆறு க்ரூப் சேர்த்துக்கோங்க..” என்று கூறவும் அங்கே சலசலப்பு ஏற்பட,

“காம் டௌன் காய்ஸ்.. இங்க பாருங்க.. நம்ம கோர்ஸ் பொறுத்தவரை நமக்கு பீஸ் ஆப் மைண்ட் அண்ட் கம்போர்ட் ரொம்ப முக்கியம்.. அதனால உங்களுக்கு யார் கூட க்ரூப் சேர்ந்தா நல்ல சப்போர்ட் கிடைக்கும்னு நெனைக்குறீங்களோ அவங்க கூட தாராளமா சேர்த்துக்கலாம்” என்று கூறவும் மாறன் திரும்பி மதுரனைப் பார்க்க அவனும் இவர்களைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு மதுவிடமும் இனியாவிடமும்,

“நாம மதுரன் அறிவு கூட சேர்ந்துப்போம்” என்றிட மதுவும் இனியாவும் ஒப்புக்குள்ள மூவரும் எழுந்து மதுரன் மற்றும் அறிவு அமர்ந்திருக்கும் மேஜைக்கு சென்று,

“ஷேல் வி பீ அ க்ரூப்” என்று மாறன் கைநீட்ட மதுரனோ அதனை ஒப்புக்கொள்ளும்படி கைநீட்ட வர பிறகு,

“ஒரு நிமிஷம்.. க்ரூப்னா எல்லாருக்கும் சம்மதம் வேணுமே.. எல்லாருக்கும் ஒகேவா” என்று மதுரிகாவைப் பார்த்தபடி மதுரன் கேட்க மாறனோ,

“இப்போவே தெரிஞ்சுப்போம்.. யாருக்கெல்லாம் சம்மதமோ அவங்க எல்லாம் அவங்களோட கைய என் கை மேல வைங்க” என்றுவிட்டு கையைக் காண்பிக்க மாறனைத் தொடர்ந்து அறிவு கைவைக்க அறிவைத் தொடர்ந்து இனியா கைவைக்க அறிவும் இனியாவும் ஒருகணம் சிரித்துக் கொண்டனர். இனியாவைத் தொடர்ந்து கை வைத்த மதுரன்,

“என்ன மிஸ் பண்டாரம்.. உங்களுக்கு எங்க கூட்டனில சேர விருப்பம் இல்லையோ..” என்று வம்பிழுக்க மாறனிடம்,

“என்ன மாறன்.. ஆரம்பத்துல இருந்தே எங்களுக்குள்ள முட்டிகிட்டதுனால ஒருவேளை உங்க மாமா பொண்ணு பயப்படுறாளோ” என்று அவளைச் சீண்டுவதற்காகவே கேட்க அவளோ,

“மிஸ்டர் போர்க்யுபைன் மண்ட.. இந்த மதுரிகாவுக்கு யாரைப் பத்தியும் பயம் கிடையாது.. எனக்கும் ஓகே தான்” என்றவள் மதுரனின் கரத்தின் மேல் தன் கரத்தை வைத்தாள். ஓர் ஐவரணி வெற்றிகரமாக உருவாக்கப்பட்டது…

“என்ன காய்ஸ் எல்லாரும் க்ரூப் சேர்ந்தச்சா.. ஓகே.. இனிமே உங்களுக்கு நடக்குற க்ளாஸ் எல்லாமே நீங்க உங்க க்ரூபோட தான் சேர்ந்து கத்துக்கணும்.. நெறய டாஸ்க்ஸ் அண்ட் எக்ஸாம்ஸ் எல்லாம் வைப்பாங்க.. அது எல்லாத்தையும் நீங்க உங்க க்ரூபோட சேர்ந்து கோ-ஆப்ரேட் பண்ணி தான் செய்யணும். ஒவ்வொரு க்ரூப்கும் ஒவ்வொரு பெயரை நீங்களே யோசிச்சு வைங்க.. நாளைக்கு நான் வந்து க்ரூப் நேம் கேட்டு ரிஜிஸ்டர் பண்ணிடுறேன்.. சீ யு டுமாரோ காய்ஸ்” என்று கூறியபடி வேம்பு சென்றுவிட மாணவர்கள் அனைவரும் தத்தம் குழு நண்பர்களோடு சேர்ந்து அமர்ந்தனர். அதன்படியே மாறன், மதுரிகா மற்றும் அன்பினியா மூவரும் மதுரன் மற்றும் அறிவமுதன் அமர்ந்திருக்கும் மேஜையின் முன் மேஜையில் அமர்ந்தனர். இனி அது தான் அவர்களின் இருக்கை என்றானது.

மூவரும் மதுரன் மற்றும் அறிவை நோக்கி மேஜையில் திரும்பி அமர மாறனோ,

“சரி நம்ம க்ரூப்புக்கு என்ன பெயர் வைக்கலாம்..” என்று கேட்க மதுரனோ,

“ஆளுக்கு பத்து நிமிஷம் டைம்.. அவங்கவங்களுக்கு தோணுற பெயரை யோசுச்சுவைங்க.. டைம் முடிஞ்சதும் அஞ்சு பேரோட பெயரையும் சேர்ந்து டிஸ்கஸ் பண்ணி எது வைக்கலாம்னு யோசிப்போம்” என்றிட அனைவருக்கும் அதுவே சரியெனப்பட யோசிக்க ஆரம்பித்தனர். பத்து நிமிட கால அவகாசமும் முடிய இனியாவோ,

“என்ன.. எல்லாரு யோசிச்சுடீங்களா.. ஒவ்வொருத்தரா அவங்க அவங்க யோசிச்சு வச்சத சொல்லுங் பாப்போம்” என்று கேட்க மீதி நால்வருமே,

“முதல்ல நீ சொல்லு” என்று கோரஸாக கூற அவளோ,

“நான் மாட்டேன் பா” என்றவள்,

“டேய் திருட்டு பயலே நீ சொல்றா” என்று அறிவைக் கூற அவனோ,

“முதல்ல மச்சான் சொல்லுவான்” என்று மதுரனைக் கோர்த்து விட அவனோ,

“மிஸ் பண்டாரம் நீ சொல்லு முதல்ல” என்றிட அவ அழைப்பில் முறைத்தவளோ,

“தைரியம் இருந்தா நீ சொல்லு மேன்.. எதுக்கு என்னைக் கோர்த்து விடுற.. நான் இப்போ சொல்ல மாட்டேன். கடைசியா தான் சொல்லுவேன்” என்றிட மாறனோ,

“என்ன இது யாருமே சொல்ல மாட்ரிங்க.. சரி முதல்ல நானே சொல்றேன்.. நான் சொன்ன அப்புறம் மதுரன் பாஸ் சொல்லணும்.. அப்புறம் அறிவு ப்ரோ சொல்லணும்.. அப்புறம் இனியா லாஸ்ட்டா மது.. ஓகேவா” என்று கேட்க இனியாவோ,

“ஹே சீ.. என்ன டா இது கன்றாவியா.. பாஸ்ஸு ப்ரொன்னு கூப்பிட்டுட்டு இருக்கீங்க.. ஒழுங்கா பேரை சொல்லி கூப்பிட்டு தொலைங்க இல்லனா பிரண்ட்ஸ் மாதிரி மச்சான் மாப்பிள்ளைன்னு கூப்பிட்டு தொலைங்க.. கேட்க நல்லவா இருக்கு” என்றிட மதுரிகாவோ,

“அதானே.. நானே சொல்லணும்னு நெனச்சேன்.. டேய் மாறா ஒழுங்கா மரியாதையா மூணு பெரும் பிரண்ட்ஸ் மாதிரி பிகேவ் பண்ணுங்க” என்று கூற ஆடவர்கள் மூவரும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துவிட்டு,

“உத்தரவு மகாராணிகளா” என்று கூற பெண்கள் இருவரும் கலகலவென சிரித்தனர். அப்பொழுது அறிவோ,

“ஆத்தா தயவு செஞ்சு சிரிக்காதிங்க ஆத்தா.. பையன கூட்டிட்டு போய் வேப்பிலை அடிக்கணும் போல இருக்கு” என்று கவுண்டமணி வசனத்தைப் பயந்தது போன்று முகத்தை வைத்து கூற மதுவும் இனியாவும் அவனை குனிய வைத்து முதுகில் கொத்துப்புரோட்டா போட தொடங்கினர். அதனைக் கண்டு மாறனும் மதுரனும் சிரிக்க பின் மதுரனோ,

“ஹே ஹே போதும் பா.. பாவம் அவன விடுங்க.. ஓகே ஜோக்ஸ் அபார்ட்.. நேம் செலெக்ஷன் ஸ்டார்ட் பண்ணுவோம்.. மாறன் நீ சொல்லுடா” என்றிட மாறன் கூறலானான்.

 

ரகசியம் – 12

ஐவரும் அவரவர் யோசித்த குழுப் பெயரைக் கூற ஆயத்தமாயிருந்தனர். முதலில் மாறன்,

“ஓகே பிரண்ட்ஸ் நான் யோசிச்சு வச்ச நேம்.. ‘ஃபைவ் ஸ்டார் க்ரூப்’.. ” என்று கூற அவனைத் தொடர்ந்து மதுரன்,

“ஓகே நான் யோசிச்ச பேரு.. ‘வீ ஃபைவ் (we 5)’..” என்று கூற அவனைத் தொடர்ந்து அறிவு,

“ஃபயர் ஆஃப் ஃபைவ்ஸ்” என்றிட அவனைத் தொடர்ந்து அன்பினியாவோ,

“நான் சொல்றேன்.. ஆனா யாரும் திட்ட கூடாது சரியா” என்று பாவமாக கேட்க மாறனோ,

“முதல்ல நீ சொல்லு.. அப்புறம் உன்ன திட்டுறதா வேணாமான்னு யோசிப்போம்” என்று கூற அவளோ,

“அது வந்து நாம ஒரே செட்டா இருக்க போறோமா இனிமே அதனால ‘செட் தோசை’ன்னு யோசிச்சேன்” என்றிட மற்றவர்கள் ஒருவரையொருவர் பார்த்துவிட்டு கோரஸாக “த்த்தூ” என்று துப்ப அவளோ சிறிதும் அசராமல்,

“இட்ஸ் ஓகே” என்று தோளைக் குலுக்கினாள். பிறகு மாறனோ,

“ஹே மது.. நீயும் இவளை மாதிரி தான ஏதாவது யோசிச்சுருப்ப” என்றிட அவளோ,

“இல்ல நான் யோசிச்ச நேம்.. ‘எய்ம்ஸ் (AIMS)’..” என்று கூற மற்றவர்களோ புரியாமல் முழித்தனர். மதுரனோ,

“அதென்ன எய்ம்ஸ்.. அட்ராக்டிவா இல்லையே மிஸ் பண்டாரம்” என்று கூற அவளோ,

“முந்திரிக்கொட்டை மாதிரி முந்த கூடாது.. இதுக்கு பின்னாடி ஒரு விஷயம் இருக்கு” என்று கூற மாறனோ,

“ஏ பார் அப்பளம், ஐ பார் ஐஸ்க்ரீம், எம் பார் முட்டை பப்ஸ்.. அதானே” என்று சிரிக்க அவனோடு சேர்ந்து இனியாவும்,

“வா டி செல்லம் வா டி செல்லம்.. நீ தான் என் லைன்லயே டிராவல் ஆகுற” என்று அவள் மேல் கைப் போட அதனைத் தட்டிவிட்டு அனைவரையும் முறைத்தவள் அறிவிடம்,

“நீ மட்டும் ஏன் டா சும்மா இருக்க.. உன் பங்குக்கு நீ கலாய்க்க வேண்டி தான” என்று கேட்க அவனோ,

“இல்ல பரவாயில்ல இருக்கட்டும்.. அப்புறம் யாரு உன்கிட்ட வாங்கி கட்டிக்குறது” என்று வாய்க்குள்ளேயே கூற பிறகு,

“ஏன் டா ஒரு மனுஷி சொல்றத முழுசா கேட்டுத் தொலைங்களேன் டா” என்று கடுப்பாக கூற மதுரனோ,

“ஓகே ஓகே கூல்.. காய்ஸ் அவ சொல்றத தான் கொஞ்சம் பொறுமையா கேட்போமே.. நீ சொல்லு மது” என்று கூற அவளோ ஒரு பேப்பரையும் பேனாவையும் எடுத்தவள் கீழ்கண்டவாறு எழுதி காண்பித்தாள்.

A – Arivamudhan and Anbiniya

I – Ilamaaran

M – Madhuran and Madhurikaa

“மீதி இருக்குற அந்த ‘S’ எதுக்குன்னா நாம எல்லாருமே நம்மளோட எய்ம் காக அதாவது நம்மளோட குறிக்கோளுக்காக தான வந்துருக்கோம்.. சோ ப்ளூரல் (plural) ஃபார்ம்ல ‘எய்ம்ஸ்’.. எப்படி இருக்கு” என்று கூற அனைவரும் பேவென்று தான் பார்த்தனர். மதுரனோ,

“வாவ்.. மிஸ் பண்டாரம் உனக்குள்ள இவ்ளோ அறிவா” என்று அவளைப் பாராட்ட மாறனோ,

“இவ்ளோ நாள் எங்கடி வச்சிருந்த இதை” என்றபடி அவள் பின் மடையை பார்த்து எதையோ தேட,

“எதை டா” என்று மது கேட்க அதற்கு இனியாவோ,

“வேறென்ன மூளை தான்.. என்ன டா” என்று கூற மீண்டும் முறைத்தாள் மதுரிகா.

“இப்போ என்ன என்னை வச்சு செய்யணும்னு முடிவே பண்ணிடீங்க அப்படி தானே” என்று கேட்க அறிவோ அவளுக்கு ஆதரவாக,

“ஹே.. ஜோக்ஸ் அப்பார்ட்.. நிஜமா அவ யோசிச்ச விதம் அருமையா இருக்கு.. அதுக்காக கண்டிப்பா நாம அவளைப் பாராட்டியே ஆகணும்” என்றவன் கை நீட்ட,

“உனக்காவது புரிஞ்சுதே டா.. அதுவரை சந்தோஷம்” என்றவள் அவனிடம் கைக் குலுக்கினாள். பிறகு மாறனோ,

“சரி கோச்சுக்காத.. சும்மா கலாய்ச்சோம்.. நீ யோசிச்சது நல்லா இருக்கு” என்று கூறி ஆதரவாய் அணைக்க இனியாவும்,

“ஆமா மச்சி.. உன் அறிவைக் கண்டு நான் வியக்க” என்று அவளும் பாராட்ட மதுரனோ,

“சரி அப்போ மதுரிகா சொன்ன பெயரையே நாம ஃபிக்ஸ் பண்ணிக்கலாம்” என்றிட அனைவரும் ஆமோதித்தனர். அப்பொழுது இனியாவோ,

“சரி அப்போ நம்ம க்ரூப் ஃபார்ம் ஆனதை கொண்டாட வேண்டாமா.. நம்ம எல்லார்க்கும் இன்னைக்கு ட்ரீட்டு” என்றிட,

“சூப்பர்.. எங்க போலாம்” என்று மதுரிகாவும் ஆர்வமாய் கேட்க மாறனோ,

“எப்போ பார்த்தாலும் சோறு சோறுன்னு தான் யோசிப்பீங்களா டி” என்று வாரிவிட மற்ற இருவரும் சிரிக்க பிறகு அனைவரும் மதிய உணவிற்காக உணவகத்தை நோக்கி சென்றனர். பிறகு அனைவரும் மகிழ்ச்சியாக உண்டுவிட்டு அவரவர் வீடு சென்றனர்.

மறுநாள் அழகாய் விடிய அனைவரும் கல்லூரியில் சந்தித்தனர். வேம்பு வகுப்பினுள் வர வகுப்பு ஆரம்பமானது.

“குட் மார்னிங் காய்ஸ்.. எல்லாரும் அவங்க அவங்க க்ரூப்க்கு பெயர் யோசிச்சுட்டீங்களா..” என்று கேட்க மாணவர்கள் அனைவரும்,

“எஸ் சார்” என்று ஒருசேர கூறினர். பிறகு வேம்பு,

“சூப்பர்.. சரி ஒவ்வொரு க்ரூப்ல இருந்து ஒரு ஒரு ஆள் வந்து இந்த பேப்பர்ல அவங்க க்ரூப் மெம்பர் நெம்ஸும் அவங்க க்ரூபோட நேமும் எழுதிட்டு போங்க” என்றிட ஒவ்வொரு குழுவில் இருந்து ஒவ்வொருவர் வந்தனர். நம் எய்ம்ஸ் க்ரூப்பில் இருந்து மதுரன் சென்று எழுதிவிட்டு வந்தான். அனைவரும் எழுதி முடிக்க வேம்பு,

“ஓகே காய்ஸ்.. இப்போ ஒவ்வொரு க்ரூப் நேம் அண்ட் அந்த மெம்பேர்ஸ் நேம் நான் வாசிக்குறேன்.. அப்போ தான் மத்த க்ரூப்க்கு உங்க பெயர் தெரியும்” என்று ஒவ்வொரு பெயராக வாசிக்க ஆரம்பித்தார்.

“ராம், வைஷ்ணவி, ஜானு, ஹேமா, ரகு – ஃபைவ் ஸ்டார் க்ரூப்

விமல், விக்ரம், தேஜு, ஐஸ்வர்யா, சதீஸ் – வீ ஃபைவ்

இந்துஜா, நேத்ரா, சுரேஷ், சுகுமார், சுபிக்ஷா – ஃபைவ் ரோசஸ்

பிரஷாந்த், ஜேக்ளின், ஜோசப், மிதுலா, ரூபினா – ஃபைவ் ஃபயர்ஸ்

ரீனா, கீர்த்தனா, ஸ்டெப்பி, மாதவ், கிருஷ்ணா – எய்ம்ஸ்

அறிவமுதன், அன்பினியா, இளமாறன், மதுரன், மதுரிகா – எய்ம்ஸ்”

என்று வாசித்து முடிக்க கடைசி இரண்டு குழுக்களின் பெயர்கள் ஒரே போன்று இருக்க அவ்விரு குழுக்களும் ஒருவரையொருவர் புருவம் உயர்த்தி பார்த்துக்கொண்டனர். வேம்புவோ,

“என்ன பா நீங்க ரெண்டு பேரும் ஒரே பெயர் வச்சுருக்கீங்க.. ஒரே நேம்ல ரெண்டு க்ரூப் ரிஜிஸ்டர் பண்ண முடியாது.. யாராச்சும் ஒருத்தர் மாத்தி தான் ஆகணும்” என்று கூற எதிர் குழுவில் இருந்த மாதவ்,

“சார் நாங்க மாத்த முடியாது.. எங்களோட எய்ம்காக இங்க வந்துருக்கோம்.. அதை யோசிச்சு தான் இந்த நேம் வச்சோம்.. அதுமட்டுமில்ல நாங்க முதல்ல ரிஜிஸ்டர் பண்ணிருக்கோம்.. அதனால அவங்கள மாத்த சொல்லுங்க..” என்று கூற இங்கிருந்து இனியாவோ,

“அதெல்லாம் முடியாது சார்.. எங்க க்ரூப் மெம்பர்ஸ் பெயரோட முதல் எழுத்து வச்சு இந்த நேம் வச்சுருக்கோம்.. அதனால எங்களுக்கு தான் இந்த பெயர் கரேக்ட்டா இருக்கும்.. அதனால எங்களால மாத்த முடியாது” என்று மாதவை முறைத்தபடி கூற அதில் எரிச்சலுற்றவன்,

“ஹே என்ன முறைக்குற.. எங்கள பார்த்து காப்பி அடிச்சுட்டு எங்களையே முறைக்குரியா.. திமிரா பேசாம மூடிட்டு வேற பெயரை யோசிக்குற வழிய பாரு” என்று கூற மாறனோ,

“ஹே என்னடா.. யாரைப் பார்த்து காப்பி அடிச்சன்னு சொல்லிட்டு இருக்க.. உனக்கு அவ்ளோ தான் மரியாதை சொல்லிட்டேன்..” என்று எகிற அந்த குழுவில் இருந்த ரீனா,

“என்னடா மரியாதை.. நாங்க மாத்த முடியாது.. உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ” என்று கத்த இரு குழுக்களின் சண்டையைப் பார்த்த வேம்பு,

“ஸ்டாப்பிட் காய்ஸ்.. ஒரு க்ரூப் நேமுக்கு இவ்ளோ சண்டையா.. அதுவும் வந்த மூணாவது நாளுலயே இப்படி அடிச்சுக்கிட்டா.. இனிமே உங்களுக்குள்ள நடக்குற போட்டிய எப்படி ஹேண்டில் பண்ணுவீங்க” என்று கேட்டிட மதுரன் எழுந்து,

“சார் நோ ப்ராபிளம்.. நாங்களே எங்க க்ரூப் நேம் மாத்திக்குறோம்” என்று கூற வேம்புவோ,

“தட்ஸ் தி ஸ்பிரிட் மேன்.. இப்படி தான் விட்டு கொடுக்குற குணம் வரணும்..” என்று பாராட்ட மதுரிகாவோ,

“நாம எதுக்கு விட்டு கொடுக்கணும்.. அவங்க மாத்திக்கிட்டும்..” என்று கோபமாக கூற மதுரனோ,

“பரவாயில்ல விடு.. க்ரூப் நேம்ல என்ன இருக்கு” என்றவன் வேம்புவிடம்,

“நாங்க நேம் யோசிச்சி ஒரு டென் மினிட்ஸ்ல சொல்றோம் சார்” என்று கூற,

“டேக் யுவர் டைம் காய்ஸ்” என்று அமர்ந்தார். இங்கு மதுரனைத் தவிர்த்து அனைவருக்கும் கடுப்பு தான். அறிவு,

“மச்சான் அவன் நம்மள காப்பி அடிச்சோம்னு சொன்னான் டா.. இப்போ அதுக்கு ஆமான்னு சொல்ற மாதிரி நீ நேம் மாத்துறோம்னு சொல்லிட்டு வந்து நிக்கிற” என்று கேட்க மற்ற மூவரும் அறிவு கூறியதற்கு ஆமோதித்தனர். மதுரனோ,

“டேய் மச்சான்… ஆம்பூர் பிரியாணி உளுந்தூர்பேட்டைல இருக்குற நாய்க்கு தான் கிடைக்கணும்னு இருந்தா நாம என்ன செய்ய முடியும்” என்று கேட்க பட்டென நால்வரும் சிரித்துவிட்டனர். எது எது யாருக்கு கிடைக்கனுமோ அவங்களுக்கு தான் கிடைக்கும் என்ற அர்த்தத்தில் மதுரன் கூற இவன் கூறிய ஆம்பூர் பிரியாணி வசனத்தை அந்த குழுவில் இருந்த ரீனா கேட்டுவிட்டு,

“காய்ஸ் அந்த மதுரன் நம்மள நாய்னு சொல்றான்.. அவனை சும்மா விட கூடாது” என்று கூறி ஏற்றிவிட மாதவின் மனதில் மதுரன் மற்றும் அவனின் குழுவின் மேல் காரணமில்லா வஞ்சம் ஏற்பட்டது. சிறிது நேர குழு ஆலோசனைக்கு பிறகு மதுரனின் யோசனைப்படி பெயரும் திட்டமிடப்பட்டது.

“சார்.. க்ரூப் நேம் செலக்ட் பண்ணியாச்சு… ‘பாண்டவாஸ்’ க்ரூப்” என்றிட வேம்புவோ,

“நல்லா இருக்கே.. குட்.. ஆள் தி பெஸ்ட்” என்றிட நன்றி கூறி அமர்ந்தான் மதுரன்.

“சரி ஓகே காய்ஸ்.. ஏதோ சர்குலர் வந்துருக்குன்னு சொன்னாங்க.. என்னனு விசாரிச்சுட்டு உங்க க்ரூப் நேம்ஸ ரிஜிஸ்டர் பண்ணிட்டு வரேன்” என்று கூறிவிட்டு சென்றிட பாண்டவர்கள் குழு வழக்கம் போல் கதைப் பேச தொடங்கியது. ஆனால் மதுரிகா மட்டும் அமைதியாக இருக்க மதுரனோ,

“மிஸ் பண்டாரம்.. எதுக்கு இவ்ளோ டல்லா இருக்க” என்று கேட்க மாறனோ,

“வேற எதுக்கு.. அவளே எப்போயாச்சு தான் அறிவா யோசிப்பா..” என்று கூறிக்கொண்டிருக்க இடையில் புகுந்த அறிவோ,

“யு மீன் என்னை மாதிரி” என்று கேட்க இனியாவோ,

“அடச்சீ.. உனக்கே அந்த பெயரைத் தப்பா வச்சுட்டாங்களேன்னு வருத்தப்படுறேன்.. இதுல இது வேற” என்று அவனைக் கலாய்த்தவள் மாறனிடம்,

“நீ சொல்லு டா” என்க அவனும் தொடர்ந்தான்.

“அவளே எப்போயாச்சு தான் அறிவா யோசிப்பா.. அதுவும் இப்படி புட்டுகிச்சேன்னு வருத்தப்படுறா” என்று கூற மதுரிகாவும் ஆமென்றாள் பாவமாக. அதில் சிரித்த மதுரன்,

“விடு.. புளிக்குழம்பு செஞ்சி அது பிடிக்கலைன்னா அதுல முட்டைய உடைச்சு ஊத்தி முட்டைக்குழம்பாவும் ஆக்கிக்கலாம்.. மீன போட்டு மீன்குழம்பாவும் மாத்திக்கலாம்..” என்று கூற அறிவோ,

“என்ன மச்சான்.. இன்னைக்கு லன்ச் மீன் குழம்பா முட்டைக் குழம்பா” என்று கேட்க மதுரனோ,

“ஈஈஈ.. எது செய்யலாம்னு யோசிச்சுட்டு இருக்கேன்” என்று அசடு வழிந்தபடி கூற மற்ற மூவரும் புரியாமல் மதுரன் அறிவைப் பார்த்தனர். அறிவோ,

“டேய் மச்சான்.. பாவம் இவங்க மூணு பேரும்.. புரியுற மாதிரி சொல்லுடா” என்றிட அதில் சிரித்தவன்,

“அதாவது.. நம்ம யோசிச்சதையும் தாண்டி ஒரு விஷயம் நடக்குதுன்னா.. கண்டிப்பா அது நல்லதுக்கா தான் இருக்கும்.. அதை நமக்கு பிடிச்ச மாதிரி நாம மாத்திக்கலாம் அவ்ளோ தான்.. டோன்ட் வொரி” என்று தத்துவம் பேச அறிவோ,

“நோட் பண்ணுங்கப்பா நோட் பண்ணுங்கப்பா” என்றபடி தன் டைரியில் குறித்துக்கொண்டான். அவன் கூறிய விதத்தில் மதுரிகா சிரித்தே விட்டாள். பாண்டவர் குழு இவ்வாறு சிரித்து மகிழ அதனை எய்ம்ஸ் குழு வன்மமாய் நோக்கியது.

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
14
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்