Loading

புயல் – நிறைவு

“நீங்க என்ன எதுவும் பேசாமல் இருக்கீங்க?” மணியம்மாள் கேட்கவும்,

“என்ன பேசணும்னு சொல்லு. ருத்ரன் வந்து பேசுனப்போ எனக்குமே வீராவை நினைச்சு ரொம்ப கஷ்டமா இருந்தது. வீரா இளைய பையன்ங்கிறதால பொறுப்பு கம்மியா இருக்குதுன்னு தான் நினைச்சேன். ஆனால் அவன் என்னை மாதிரி இருப்பான்னு நான் நினைக்கல. எனக்கு அறிவுரை சொல்லக் கூடத் தகுதி இல்லையே. அவன்கிட்ட பேசுனால் நீ மட்டும் ஒழுங்கான்னு கேட்டுடுவானோன்னு பயம் இருந்தது. அதான் ருத்ரன் சொன்ன போது சரின்னு சொன்னேன். இஷ்டம் போல காசு செலவழிச்சுப் பழகுனவன் இனி கொஞ்சம் பொறுப்பா இருப்பான்‌ அந்த நம்பிக்கை இருக்கு. அதெல்லாம் ருத்ரன் பார்த்துப்பான். நீ கொஞ்ச நாளைக்கு அவன்கிட்ட பேசாமல் அமைதியாய் இரு அதுவே போதும்” என்று சொல்ல இன்னும் மணியம்மாவால் வீரா வீட்டை விட்டுப் போனதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ருத்ரனைப் பற்றி சொன்ன போதுகூட அவன் ஒழுங்காக இருக்க வேண்டும் என்று தான் நினைத்தார். அந்த தவறை வீரா செய்திருக்கிறான் என்பது இப்போது மணியம்மாவை ஒடுங்கிப் போக வைத்திருந்தது.

வெள்ளி அன்று பால் காய்ச்சி வீட்டிற்குக் குடி வந்திருந்தார்கள். உமா கிச்சனுக்குள் இருக்க

வெளியே ஆத்விக் உடன் பேசியபடி நின்றிருந்தான்.

சாப்பிட்டு முடித்ததும் அவர்கள் அனைவரும் கிளம்பிவிட வீட்டினை ஒதுங்க வைத்துக் கொண்டிருந்தார்கள் ருத்ரனும் உமாவும்.

“அடியேய் போதும். நீ போய் கொஞ்ச நேரம் தூங்கு. காலையிலயும் வேகமாவே எந்திரிச்சுட்ட”

“பரவாயில்லை. தூக்கம் எல்லாம் வரலை”

“சொன்னா கேளுடி. சாப்பிட்டுத் தூங்கு. அப்பறம் நீ வேலை செய்”

“வயிறு நிறைச்சுடுச்சு”

“பட்டு லட்டுவுக்கு இதெல்லாம் காணாது. நீ ஒழுங்கா சாப்பிடு” என சாப்பாடு போட்டு வந்துக் கொடுத்தான்.அவள் சாப்பிட்டு முடித்த உடன் “போய் தூங்கு” என்றான்.

“தூங்க வைங்க ருத்ரா..”

“நான் வந்தால் தூங்க வைக்க மாட்டேனே. உனக்குப் பரவாயில்லையா?”

“தூக்கம் வரலைன்னு சொன்னதா தான் ஞாபகம்”

“தங்கம்” அழைத்துக் கொண்டே அவளது கன்னத்தில் அழுத்தமாய் பதிந்தது அவனது இதழ்கள்.

“நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்டி”

“நானும்”

“உன் முகத்தில அந்த சந்தோஷத்தைப் பார்த்ததால வந்த சந்தோஷம்தான்டி அது”

“தெரியும். அவ்ளோ பிடிக்குமா என்னை?”

“இப்படிக் கேட்டால் என்ன சொல்லுறது? பிடிக்காமலாடி உன் காலேஜ்க்கே வந்து நின்னேன்”

“அதான் ருத்ரா. எனக்கு ஆச்சர்யம். எப்படி நீ வந்த?”

“சதா என் நினைப்புல உறுத்திட்டே இருந்த. கண்ணை மூடினாலே நீ முகத்துல மஞ்சள் தடவுனதே ஞாபகத்துக்கு வந்து நிக்கும். அப்படியிருக்க நான் வராமல் எப்படி இருக்க முடியும்” பேசினாலும் அவனது இதழ்கள் அதற்கே உரித்தான வேலையைச் செய்துக் கொண்டிருந்தது.

வாழ்க்கை இப்போது மகிழ்ச்சிக்கு குறைவில்லாது சென்றுக் கொண்டிருந்தது.

கவிதா இனி அண்ணன் தயவும் வேண்டும் என்பதால் அண்ணன் அண்ணியை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. எனவே பால் காய்ச்சியதற்கு வந்து விட்டாள். அதோடு உமாவிடமும் நட்பாக பேச முற்பட உமா உள்ளுள் பரவிய சிரிப்புடன் அதை அனுமதித்தாள்.

வீரா, மாமனார் கடையில் தான் இருந்தான். இத்தனை நாளும் இருந்ததற்கு மாறாக அவன் அத்தனை வேலை செய்ய ஆரம்பித்தான். லட்சணாவின் அப்பா கூட “மாப்பிள்ளையை இவ்வளவு வேலை வாங்குறது பாவமா இருக்கும்மா. அவர் கண்டிப்பா இனி தப்பான வழியில போக மாட்டாருன்னு தான் நினைக்கிறேன். அவரே கடையை பார்த்துக்கட்டுமே. அவர்கிட்ட சொல்லு ” என்றதற்கு

“இல்லைப்பா கஷ்டம்னா என்னன்னு தெரியணும். அப்போத்தான் அவன் நல்லபடியா இருப்பான். நீங்க இந்த விஷயத்துல கருணை எல்லாம் காட்டாதீங்க ப்ளீஸ். குடும்பத்தைக் கெடுக்கணும்னு நினைச்சது தப்புன்னு அவனுக்கு புரியணும்” என்று முடித்துக் கொண்டாள்.

நாட்கள் நகர்ந்தது.

கடையிலேயே பிஸியாக இருந்தவன் இன்று உமாவுக்கு செக்கப் என்பதை மறந்தே போனான்.

செக்கப் என்று முதல் நாளே சொல்லியிருக்க அவன் மறந்ததை எண்ணி கோபம் வந்த போதும் ஆத்விக்கை அழைத்துக் கொண்டு அவள் சரவணனிடம் சென்றாள்.

அந்த கேப்பில் ஆத்விக் வேகமாக மாமனுக்குப் போன் பண்ணினான்.

“சொல்லுடா”

“என்ன ரொம்ப வேலையா?”

“ம்ம் பங்ஷன் வீடு இரண்டு இருக்கு. அதுக்கான சரக்கு எடுத்து வச்சுட்டு இருக்கோம். சொல்லுடா”

“இன்னைக்கு அக்காவுக்கு செக்கப்”

“ப்ச் ஆமாடா.. மறந்தே போயிட்டேன். நேத்தே சொன்னா” பதட்டத்துடன் சொன்னான்.

“பதறாதீங்க. ஹாஸ்பிட்டல்ல நான் இருக்கோம். நான்தான் துணைக்கு வந்தேன்”

“இப்போ வந்தாலும் வர முடியாதுடா..”

“நான் பார்த்துக்கிறேன் மாமா. நீங்க வேலையைப் பாருங்க” அவன் பேசி முடிக்க

“என்னடா உன் மாமாகிட்ட செக்கப் இருக்குறதை ஞாபகப் படுத்தினயாக்கும்” என்றாள் இவள்.

“ஒரு சமூக சேவை”

“என்ன சொன்னாரு?”

“பிஸின்னு சொன்னாரு”

“சரி நீ வீட்டுல விட்டுட்டுக் கிளம்பு” என்று அவள் சொல்ல அவனும் கிளம்பிவிட்டான்.

அன்று அவன் வர தாமதமாகிவிட்டது. இவள் இரவு நேரச் சாப்பாடைச் சாப்பிட்டு விட்டு அவனுக்காக காத்திருந்தாள்.

“தங்கம்! சாப்பிட்டயா”

“சாப்பிட்டேன்.. நீ சாப்பிடு ருத்ரா!”

“தூங்கியிருக்க வேண்டியதுதானே”

“இருக்கட்டும் கொஞ்சம் பேச வேண்டியிருந்தது. அதான் உட்கார்ந்திருந்தேன்”

“சரவணன்கிட்ட போன் பண்ணி கேட்டுட்டேன். தங்கம் பட்டு லட்டு மூனு பேருமே நல்லா இருக்காங்களாம்..”

“நீ வருவேன்னு நினைச்சேன் ருத்ரா”

“வேலை அதிகம். அடுத்த தடவை கண்டிப்பா வர்றேன்”

“ம்ம்”

“கோபமா தங்கம்”

“இல்லை ஸ்கேன் பார்த்தாங்க. நீயும் கூட இருந்தால் நல்லா இருந்திருக்கும்ல”

“ஆமாடி அந்த ரிப்போர்ட் எங்க? குடு நான் பார்த்துட்டு தர்றேன்”

இரு உயிர்களை அவன் ரசனையுடன் பார்த்திருக்க போதும் என்று வாங்கிக் கொண்டாள்.

“இப்போ என்னடி கோபம்”

“ஒன்னு ஆத்விகூட கொஞ்சிட்டு இருக்கீங்க. இல்லையா பட்டு லட்டுன்னு பேசிட்டு இருக்கீங்க‌‌. தங்கம்லாம் கண்ணுக்கே தெரியலை போல”

“தங்கத்தைக் கொஞ்சலைன்னு தங்கம் ஃபீல் பண்ணுதா? அது தப்பாச்சே. உடனே கொஞ்சிடலாம்” என அவன் பாணியில் கொஞ்சத் தொடங்கினான்.

வளைகாப்பும் நல்லவிதமாக நடந்தது. உமாதான் எல்லாரையும் கூப்பிட்டே பண்ணிடலாம் என்று முடிவாக சொல்லியிருக்க அவனும் சரியென்று சொல்லியிருந்தான்.

நாளைக்கு குழந்தை பிறந்துவிடும் இன்று வந்து மருத்துவமனையில் சேர்ந்துக் கொள்ள மருத்துவர் அறிவுறுத்தியிருக்க ருத்ரன் அவளுக்குத் தேவையானதை எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்.

“ருத்ரா! பயமா இருக்கு” தயக்கத்துடன் சொன்னாள். அவள் முகமே ஒரே மாதிரி இருந்தது.

“எதுக்கு பயம் மாமன் இருக்கும் போது” ஆறுதல் படுத்தினான் அவன்.

“எனக்கு ஏதாவது ஆகிட்டால் என்னடா பண்ணுவ?”

“பையித்தியம். பேச்சுக்கு கூட அப்படியெல்லாம் சொல்லாத. அதெல்லாம் ஒன்னும் ஆகாது. பட்டு லட்டு நல்லபடியா பொறப்பாங்க. உனக்கும் எந்தவித பிரச்சனையும் வராது. நான் இருக்கேன் டி”

“பட்டு லட்டுகிட்ட நீ பேசுறயா?”

“பட்டு லட்டு அப்பா பேசுறேன் கேட்குதா.. நாளைக்கு அப்பா கையில இரண்டு பேரும் இருப்பீங்க. ஆனால் அதுக்கு முன்னாடி அம்மாவுக்கு பயமா இருக்காம். சிங்க குட்டிங்க இரண்டு பேரை சுமக்குற உங்க அம்மா பயப்படலாமா? அது தப்பில்லை. சோ அம்மாவுக்கு அதிகமா வலி தராமல் நீங்க இரண்டு பேரும் அப்பாகிட்ட சமத்தா வந்துடுவீங்களாம்” வயிற்றில் கைவைத்தபடி பேசிக் கொண்டிருந்தவன் பின் இதழ்களை ஒட்டி எடுத்தான்.

அவனது இதழ் முத்தம் பட்டு லட்டுவினை சிலிர்க்க வைத்திருக்க வேண்டும். அம்மாவினை உதைவிட்டது.

அது அவனது கைகளிலும் தெரிந்தது.

“பட்டு லட்டு சமத்தா இருப்பேன்னு சொல்லிட்டாங்க டி. நீ கவலைப்படாதே” என்று சொல்லி அவன் ஆறுதல் சொல்ல அவனது தோளில் சாய்ந்துக் கொண்டாள்.

அசௌகரியமாக இருந்தது அவளுக்கு.

“பெயின் வரும் போல இருக்கு..” அவளே சொல்லிக் கொண்டாள்.

“அப்போ ஹாஸ்பிட்டல் போயிடலாமா.. நான் போய் அத்தையை எழுப்பிக் கூட்டிட்டு வரவா?”

மறுநாள் செல்ல வேண்டும் என்பதால் ஆத்வியும் அம்மாவும் அங்குதான் தங்கியிருந்தார்கள்.

உடனே கிளம்பினார்கள்.

வண்டியில் வரும் வரை வலி வரவில்லை. ஹாஸ்பிட்டல் நெருங்கியதும் வலிக்க ஆரம்பித்தது உமாவிற்கு.

“உமா கொஞ்சம் பொறுத்துக்கோ” என அவளைத் தாங்கிக் கொண்டு உள்ளே வந்தான்.

அவளது கதறல் இவனுக்குக் கேட்டது. ருத்ரனுக்கு அதீத அவஸ்தை. ரொம்ப வலிக்குது போல.. அவன் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது.

அழுதுக் கொண்டே அவன் இருக்க அதைக் கண்டு ஆத்வி அவனிடம் வந்தான்.

“என்ன மாமா இது இப்படி கண்ணை கசக்கிட்டு இருக்கீங்க”

அவன் எதுவும் பேசவே இல்லை.

“அக்காவுக்கு நல்லபடியா குழந்தைங்க பொறந்துடும். நீங்க கவலைப்படாதீங்க” ஆத்வி பேசினாலும் அவன் பதில் பேசும் மனநிலையில் இல்லை.

அவன் குழந்தைகள் அங்கு வருவதற்கு போராடிக் கொண்டிருக்க இவன் மனதளவில் தளர்ந்துப் போயிருந்தான்.

“இன்னும் கொஞ்சம் லேட்டாகும்னு சொல்லுறாங்க மாமா. நாம வேணும்னா வெளிய போயிட்டு வரலாமா? உங்களை இப்படிப் பார்க்க முடியல”

“இல்லை இங்கேயே இருக்கேன்” மறுத்துவிட்டான்.

அவனது பட்டு லட்டு அவனது பேச்சைக் கேட்காமல் அம்மாவினைக் கஷ்டப்படுத்தி ஒரு வழியாக்கி விட்டுதான் பிறந்தார்கள்.

“ஒரு பையன், ஒரு பொண்ணு” என்று வந்து கொடுக்க, இரண்டு பேரையும் கைகளில் ஏந்திக் கொண்டான்.

“மாம்ஸ் வாழ்த்துகள். ட்ரீட் வைங்க”

“உனக்கில்லாததா வச்சுடலாம். என் வாழ்க்கையே நிறைவானது மாதிரி ஒரு உணர்வு டா”

“இனிதான் உங்களுக்கு நிறைய கடமையும் பொறுப்பும் இருக்கு. ஆனால் உங்களுக்கு அது சொல்லவே தேவையில்லை. தம்பி தங்கச்சியையே அவ்வளவு சூப்பரா பார்த்துக்கிட்ட பெரிம மனுஷனாச்சே நீங்க” கலாய்த்தான் அவன்.

அவர்களைச் சொன்னதும் ருத்ரன் முறைத்துப் பார்த்தான்.

“என்ன முறைப்பு? உண்மையைத்தானே சொன்னேன்”

“தம்பி தங்கச்சி மட்டும் இல்லை மச்சினனையும் அவ்வளவு சூப்பரா பார்த்துக்கிட்ட ஆள்டா நான் இல்லைன்னு சொல்லுவியா..?” அவனது உதடுகள் குவிந்ததில் ஆத்வி உஷாராகி “உமாவைப் பார்க்கப் போகலாம் மாமா” என்றான்.

அவனது முகம் போன போக்கினைப் பார்த்துச் சிரித்தவனுக்கு அவனுக்கு முத்தமிட்டே ஆக வேண்டும் என்று தோன்றியது.

“அத்தை குழந்தைங்களை பிடிங்க” என்று அவர்களிடம் கொடுத்தவன் ஆத்வியைப் பார்த்தபடி நகர, “மாமா வேண்டாம்” என்று ஹாஸ்பிட்டல் வராண்டாவில் ஓடினான் அவன்.

“நில்லுடா. பிடிச்சேன்னு வை என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது”

“ஆத்தீ.. யோவ் உள்ள போய் பொண்டாட்டியைப் பார்த்துக் கொஞ்சுயா.. என்னை விடு” என ஓடியவனை ஹாஸ்பிட்டல் மொத்தமும் சிரிப்புடன் பார்த்திருந்தது. உள்ளே இவர்களின் அலப்பறையைக் கேட்டவாறு படுத்திருந்தவளுக்கும் சிரிப்பு வந்துவிட்டது.

காதலை காற்றோடு ஒப்பிட்டுச் சொல்லலாம். ருத்ரன் உமா வாழ்வில் தென்றலென அறிமுகமாக அந்த காற்று புயல் போல் சீற்றங் கொண்டு தாக்கி கொஞ்சம் அவர்களை பாடுபடுத்தியதென்னவோ உண்மைதான். ஆனாலும் தாக்குப்பிடித்து நின்றது அவர்களது பந்தம். இப்போது மீண்டும் தென்றலென மாறி இருக்கிறது. அவ்வப்போது புயலாகவும் மாறும்.

தாக்குப் பிடிப்பது ருத்ரன் உமாவின் சாமர்த்தியம். நிச்சயம் தாக்குப் பிடிப்பார்கள்.

சுபம்

Click on a star to rate it!

Rating 4.4 / 5. Vote count: 48

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
34
+1
2
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்