Loading

விசை – 06

இரண்டு நாட்கள் ஓடியிருந்தது. அந்த வீட்டின் கலையே இழந்து போனதுபோல் உணர்ந்த வீராயிக்கும், இறைவிக்கும், சக்தி அவர்கள் வீட்டிலும் வாழ்விலும் எத்தனை ஆழமாய்க் கலந்திருக்கிறாள் என்பதைக் காட்சிப்படுத்தும் சான்றாய் அந்த இரண்டு நாட்கள் இருந்தது.

தன் மார்பில் முகம் புதைத்துக்கொண்டு, சுவாசத்தை அவள் அகத்தோடு கூறிக் கொண்டு படுத்திருக்கும் குழந்தையின் கன்னத்தை மிக மென்மையாய் வருடிக் கொடுத்தபடியே சாய்ந்து அமர்ந்திருந்தாள் இறைவி.

இரண்டு நாட்களாய் மருதாணி போடும் வேலைகளை ஒத்தி வைத்துவிட்டு, வீட்டிலிருந்தபடியே புகைப்படங்கள் வரையும் பணியை மட்டும் செய்துகொண்டிருந்தாள்.

வீராயி தான் பார்த்துக்கொள்வதாய்க் கூறியும் கூட அவளுக்கு மனது ஒப்பவில்லை. தான் இருந்து தன் மகளைப் பார்த்துக் கொள்வதைப்போல் ஆகுமா? என்ற உணர்வே தலைதூக்கியது.

அவள் எண்ணம் போல், சக்தியும் தொட்டதற்கெல்லாம் அன்னையைத்தான் தேடினாள்.

உணவு உண்ண, தண்ணீர் குடிக்க, மாத்திரை போட்டுக்கொள்ள என்று அனைத்திற்கும் இறைவி வேண்டுமாகப்பட்டாள் அவளுக்கு.

“எம்புள்ள ரெண்டு நாள்லயே இப்புடி சோர்ந்துபோச்சே அப்பத்தா” என்று வருத்தமாய் அவள் கூற,

“புள்ளையவிட ஒன்னையப் பாக்கத்தான்டி சகிக்கல. புள்ளைய எறக்கி வச்சுட்டுப் போயி மொகமாது கழுவிட்டு வா. காபி தண்ணி போட்டுத் தாரேன்” என்று வீராயி கூறினார்.

“அப்படிச் சொல்லுங்க ஆத்தா” என்று கூறியபடி மதி உள்ளே நுழைய,

அவளைப் பார்த்துச் சோபையாய் புன்னகைத்த இறைவி, “வா மதி” என்றாள்.

பின்னோடே முகிலும் நுழைய, “வாடா” என்று வரவேற்றவளைத் தொடர்ந்து, “ஏ மதி கண்ணு… எப்படித்தா இருக்க? பார்த்து எம்புட்டு நாளாயிடுச்சு? இளைச்சுப் போனகணக்கா இருக்கியே?” என்று வீராயி கேட்க,

முகில் இதழ் மடித்துச் சிரித்துக் கொண்டான்.

அவனை ஓரக்கண்ணால் தீப்பார்வை பார்த்தவள், “ஆமாம் தானே பாட்டி? நான் டயட் இருக்கேன்” என்று கூற,

“டயட்டா? என்னத்துக்கு கண்ணு அதெல்லாம்? நல்லாச் சாப்பிடுற வயசுல சாப்பிடாம டயட்டு, கயட்டுன்னுட்டு காலம் போன காலத்துலயா திங்க முடியும் சொல்லு? நல்லாச் சாப்பிட்டு உடம்பை வளர்த்துக்கோ” என்று கூறினார்.

தற்போது கட்டுப்படுத்த முடியாமல் வந்த சிரிப்பில் முகில் தன் வாயைக் கரம் கொண்டு பொத்திக் கொண்டு நிற்க,

“ஆத்தா மாமா என்னையக் கலாய்க்கிறாங்க பாருங்க” என்று மதி சிணுங்கினாள்.

“ஏண்டா புள்ளையக் கேலி பண்ற?” என்று கேட்ட வீராயி, “அவன் முறைப்பையன் தானே கண்ணு? அவனுக்கு இல்லாத உரிமையா? நீங்க செத்த ஒக்காருங்க. நான் போய் காபியாத்திக் கொண்டாறேன்” என்றுவிட்டுச் செல்ல,

பாட்டி சென்றதும் அவன் விலாவில் குத்தியவள், “எதுக்கு மாமா சிரிக்கிறீங்க?” என்று கேட்டாள்.

“ஆ… ஆத்தீ…” என்று தேய்த்துக் கொண்டவன், “இரா… பாருடி! சும்மா இருக்கும்போதே இந்தக் குத்து குத்துறா. கட்டிகிட்டு ரூமுக்குள்ள எல்லாம் தனியா விட்டா என்னைக் கும்மி எடுத்துடுவா போலயே” என்க,

“உனக்கு தேவைதான்டா. உனக்கெதுக்கு அப்படிச் சிரிப்பு வருதாம்?” என்று கேட்டாள்.

“பின்ன? ஆத்தா பேச்சைக் கேட்டியா?” என்றவனுக்கு மீண்டும் சிரிப்பு வந்துவிட,

“இறைவி நான் முன்னைக்குக் கொஞ்சம் மெலிஞ்சுட்டேன் தானே?” என்று பாவம் போல் கேட்டாள்.

“அவன் கிடக்குறான் லூசு. நீ மெலிஞ்சுட்ட மதி” என்று இறைவி கூற,

எதையோ சாதித்த சந்தோஷத்தோடு புன்னகைத்தவள், அவனைப் பார்த்து முகவாயைத் தோளில் இடித்துக் கொண்டாள்.

அதில் அவளை ரசனையோடு பார்த்துச் சிரித்துக்கொண்டவன், இறைவி அருகே அமர்ந்து குழந்தையைத் தூக்க முற்பட, “என்கிட்டயே இருக்கட்டும்டா” என்றாள்.

“ரெண்டு நாளா இப்படியே உன்மேல தானே போட்டு வச்சிருக்க புள்ளைய? போய் மொகத்தைக் கழுவிட்டு வாடி” என்று முகில் கூற,

“இறைவி பாப்பாவை என்கிட்டக் கொடு. நீ போய்ப் ரெஃப்ரெஷ் ஆயிட்டு வா” என்று மதி கூறியபடியே குழந்தையைத் தூக்கினாள்.

சக்தி, “ம்ம்…” என்று முனகலுடன் லேசாய்ச் சிணுங்க, அதில் குழந்தையை மீண்டும் பிடித்துக் கொண்டவளைப் பார்த்து, ‘ப்ச்’ என்று முகில் முறைத்தான்.

அதில் முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு கரம் எடுத்தவள், எழுந்து குளியலறைக்குச் செல்ல, “பாவமாயிருக்கு மாமா” என்று மதி வருத்தமாய்க் கூறினாள்.

“சக்தின்னு வந்துட்டாலே இவ இப்படித்தான? என்ன இந்த முறை கொஞ்சம் ரொம்ப சோர்ந்துட்டா” என்று கூறிய முகில் குழந்தையின் தலையைக் கோதிக் கொடுத்தான்.

வீராயி அனைவருக்கும் கருப்பட்டிப் போட்ட காபியோடு வர, இறைவியும் வந்தமர்ந்தாள்.

அனைவரும் அமைதியாக அதைப் பருகி முடிக்க,

“காய்ச்சல் விட்டுடுச்சு. இப்ப வாந்தியெல்லாம் இல்ல தானே இறைவி?” என்று குழந்தையைப் பார்த்தபடி மதி கேட்க,

“அதெல்லாம் விட்டுடுச்சு மதி. ரொம்ப சோர்ந்துதான் இருக்கா” என்று வருத்தமாய்க் கூறினாள்.

“ம்ம்… நல்லாத் தூங்கி எழுந்தால் சரியாப் போயிடுவா இரா” என்று முகில் கூற,

“புரியுதுதான்டா. ஆனா இவளை இப்படி இவ்வளவு சோர்வாலாம் பார்த்ததே இல்லைல” எனும்போதே அவளுக்குக் கண்கள் கலங்கிப் போனது.

“ப்ச்… இரா” என்று முகில் அதட்ட, துப்பட்டாவில் தன் கண்ணீரை அழுந்தத் துடைத்துக்கொண்டு, “கஷ்டமாயிருக்குடா. என் புள்ளைய இப்படி எல்லாம் பார்த்ததே இல்லைல நானு?” என்றாள்.

“ஆத்தா இறைவி… புள்ளைன்னா உடம்புக்கு நாலு வந்து போகத்தான் அத்தா. அதுக்குப்போயி இப்படி வெசனப்படுவியா?” என்று வீராயி கூற,

“நல்லாச் சொல்லு ஆத்தா” என்று முகில் கூறினான்.

ஒரு பெருமூச்சு விட்டுத் தன்னைச் சமன் செய்தவள், “அவ ஓகே ஆயிட்டா நானும் ஓகே ஆயிடுவேன்” என்று கூற,

“நீ ஓகே ஆனா தான் அவ ஓகே ஆவா இரா. நீயே இப்படிச் சோர்ந்து இருந்தா அவளை எப்படித் தேத்துவ?” என்று கேட்டான்.

சில நிமிடம் அவளுக்குத் தேறுதல் சொல்லிய முகில், குழந்தை அசைந்து முழித்துக் கொள்ளவும் அவளைப் பார்த்தான்.

“முகி மாமா…” என்று மழலையாய் அழைத்தவள் அவனைக் கழுத்தோடு கட்டிக்கொள்ள, அவன் இதழ்கள் பூவாய் மலர அவள் உச்சியில் முத்தமிட்டு, “பாப்பா” என்றான்.

அவர்களது சம்பாஷணையை மதி ரசனையோடு பார்க்க, இறைவியும் சோகம் மறந்து மெல்லப் புன்னகைத்தாள்.

“முகி மாமா தர்ஷ் வரலையா?” என்று அவள் கேட்க,

“இல்லைடா கண்ணா. தர்ஷ் கிளாஸ் போயிருக்கான். பாப்பாவும் நல்லாத் தூங்கி எழுந்து சீக்கிரம் குணம் ஆயிட்டா தர்ஷ் கூடப் போகலாம்” என்று கூறினான்.

“நான் ஓகே ஆயிட்டேன் முகி மாமா. நாம கிளாஸ் போவோமா?” என்று அவள் கேட்க,

“வாண்டு… நல்லாத் தூங்கி சமத்தா சாப்பிட்டு மாத்திரையெல்லாம் போட்டுகிட்டா தான் ஃபுல் ஓகே. அப்பத்தான் கூட்டிட்டுப் போவோம்” என்று மதி கூறினாள்.

“நான் சமத்தா சாப்பிட்டு மாத்திரையெல்லாம் போட்டுக்குறேனே. அம்மாட்ட கேளுங்க” என்று கூறியவள் இறைவியைப் பார்க்க,

லேசான புன்னகையுடன், “ஆமாம் ஆமாம். என் செல்லம் சமத்தா எல்லாம் செஞ்சுக்குறா” என்றாள்.

சில நிமிடங்கள் குழந்தையுடன் பேசி நேரம் செலவழித்துவிட்டு இருவரும் புறப்பட ஆயத்தமாக, “இறைவி என் ஃபிரெண்டு தாரா உனக்குத் தெரியும் தானே?” என்று கேட்டாள்.

“ம்ம்… நினைவிருக்கு மதி. அன்னிக்குக் கூடத் துணிக்கடையில பார்த்தோமே” என்று இறைவி கூற,

“ம்ம்… அவளுக்கு நிச்சயதார்த்தம் வருது. அவளோட சேர்த்து அவ கசின்ஸ் எல்லாருக்கும் மெஹந்தி போடணும். வர மண்டேதான். உன்னால போக முடியுமா?” என்று கேட்டாள்.

நாட்காட்டியையும் தன் மகளையும் பார்த்துக் கொண்டவள், “ம்ம்… போறேன் மதி. போடுறேன்னு சொல்லிடு. என் பேமென்ட் அவங்களுக்குத் தெரியும் தானே?” என்று கேட்க,

“எல்லாம் நானே சொன்னேன். அவளுக்கு ஓகேதானாம். உன்கிட்ட கேட்டுட்டுச் சொல்லச் சொன்னா” என்றாள்.

“ஓகேடா. நான் போறேன். எனக்கு ஓகேதான்” என்று இறைவி கூற,

“சரிடா. நான் சொல்லிடுறேன்” என்று கூறினாள்.

சட்டென ஏதோ நினைவு பெற்றவளாய் மதியை அழைத்த இறைவி, “மதி எனக்கு ஒரு உதவி வேணுமே” என்றாள்.

“என்ன இறைவி பெரிய வார்த்தையெல்லாம்… என்ன வேணும்னு சொல்லு” என்று மதி கூற,

“உன் ஃபிரெண்டு சர்கிள்ல பியூடிஷியன் கோர்ஸ் பண்ணவங்க யாரும் இருக்காங்களா? சைட் ஜாப்பா செய்ய நினைச்சுப் படிச்சவங்க, அல்லது ஹாபியா படிச்சவங்க இப்படி யாரும்? சும்மா போடத் தெரிஞ்ச ஆள் வேண்டாம். கோர்ஸ் படிச்சவங்களாச் சொல்றியா?” என்று இறைவி கேட்டாள்.

“என்கூடப் படிக்குறவங்க யாரும் அப்படி இல்லைடா. ஆனா என் கூடப் படிக்குற பையனோட தங்கை ஒருத்தி பிஸ்னஸ் டிபார்ட்மென்ட். அவ பியூடிஷியன் கோர்ஸ் படிச்சு கூடப் படிக்குறப் பிள்ளைகளுக்குப் போட்டு காலேஜ்லயே ஒரு ஷோலாம் விமன்ஸ் டேல நடந்தது. நான் எதுக்கும் தெளிவா விசாரிச்சுட்டு உனக்குத் தகவல் சொல்றேன்” என்று மதி கூற,

“ரெண்டு மூணு பேர் கிடைச்சாக்கூடச் சொல்லு. ஒருத்தர்தான் சொல்லணும்னு இல்லை” என்று இறைவி கூறினாள்.

“சரிடா” என்று கூறிய மதி, “நீயே படிக்கலாமே இறைவி… நீ ஆல்ரெடி மெஹந்தி ஆர்டிஸ்ட். இப்ப மேக்கப் ஆர்டிஸ்டுக்கும் கோர்ஸ் இருக்கு தானே? கவர்மென்டே ஆஃபர் பண்றாங்கடா. பியூடிஷியன் அண்ட் காஸ்மட்டாலஜிக்கு சர்டிபிகேட் கோர்ஸஸ் கவர்மென்ட்லேருந்தே ஆஃபர் பண்றாங்க. தனியா பியூட்டி பார்லர் வைப்பதற்காக அரசுச் சான்றிதழ் கூடக் கொடுக்குறாங்க. ஆனா இப்படி ஒன்னு இருக்குன்னு நிறைய பேருக்குத் தெரியுறது இல்லை. உனக்கு ஓகேன்னா நீ கூட ட்ரை பண்ணிப் பாரு” என்று கூற,

“ஓ… எனக்குமே இப்படி இருக்குன்னு தெரியாதுடா. ஆனா இப்ப என்னோட வர்க்கிங் டைம் இடிக்கும்… அதனால பார்த்துட்டு முடிவு செய்யுறேன்” என்று கூறினாள்.

“நானும் இதைத்தான் சொல்ல வந்தேன். சரி இறைவி… நான் விசாரிச்சு நாளைக்குள்ள உனக்குத் தகவல் சொல்றேன்” என்று மதி கூற,

“ஓகே மதி” என்று இறைவி கூறவும், மதியும் முகிலும் புறப்பட்டனர்.

இறைவியின் கண்களில் ஒரு ஒளி தோன்றியது. புதிதாக ஒன்றில் அடியெடுத்து வைக்கப்போகும் பிரகாசமோ?

அவளது நிகழ்ச்சி மேலாண்மை குழுவிற்கு எடுத்ததும் எதுவும் செய்துவிட இயலாது என்பதால் தான் தனக்குத் தெரிந்த சமையல் மற்றும் பரிமாறும் பணியில் ஈடுபடும் ஒரு குழுவைச் சிலபல நிகழ்வுகளுக்குப் பரிந்துரை செய்து வந்தாள். அதற்கு முன்னமே அவர்களைப் பற்றி நன்கு விசாரித்திருந்தவள், அந்தக் குழுவினரின் சேவை அவர்களை எத்தனை திருப்திப்படுத்தியது என்றும் கேட்டுத் தெரிந்துகொண்டிருந்தாள். அதன்படி தற்போது ஒப்பனைக் கலைஞர்கள் கிடைத்தால் அவர்களையும் சிலபல நிகழ்வுகளுக்குப் பரிந்துரை செய்து, அவர்களின் திறனையும், வாடிக்கையாளர்களின் நிறைகுறைகளையும் தெரிந்துகொண்டு முன்னேறலாம் என்று நினைத்திருந்தாள்.

தற்போது மதியிடம் பேசியவள் அவர்களைப் பற்றி நன்கு விசாரித்துவிட்டுப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று நினைத்துக்கொண்டு மகளைக் கவனிக்கச் சென்றாள்.

அங்கு தனது வீட்டில் அமர்ந்து வழக்கு சார்ந்த கோப்புகளைப் புரட்டிக் கொண்டிருந்தான் கற்குவேல் அய்யனார்.

போதைப்பொருள் விற்பனையில் இதுவரை அவன் விசாரணை நடத்தியதிலேயே ஐந்து கைமாறல் நடந்திருக்க, இன்னும் எத்தனை நபர்களிடம் கைமாறி அது விற்பனைக்கு வந்ததோ என்று நினைத்தே மலைத்துப் போனான்.

முந்தைய நாள் இரவுப் பணியில் இருந்தமையால் காலை அவன் வீட்டில் இருக்க, அவனது அன்னை காமாட்சியும் கோவிலுக்குச் சென்று வந்தார்.

உள்ளே நுழைந்ததும் மகனிடம் வந்தவர், கையில் கொண்டு வந்த விபூதியை அவன் நெற்றியில் இட்டுவிட, மெல்லிய புன்னகையுடன் நிமிர்ந்தவன், “உங்க மாரியாத்தாவ பார்த்துட்டு வந்தாச்சா?” என்று கேட்டான்.

“ஆச்சுடா” என்று புன்னகையாய்க் கூறியவர்,

“வீட்டுல இருக்குற நேரமும் கொஞ்சம்தான். அப்பயும் இதையே கட்டிக்கிட்டுத்தான் அழணுமா நீ?” என்று கேட்க,

“என் சோலியே இதுதானம்மா?” என்றான்.

“சீக்கிரத்துல உனக்கொரு கால்கட்டப் போட்டுட்டா இதச் சொல்லுவியான்னுதான் பாக்குறேனே” என்று அவர் சிரிக்க,

“இது நல்ல யோசனை அத்தை” என்று வெளியிலிருந்து குரல் கொடுத்தான் முகில் வண்ணன்.

இருவரும் வாயிலை நோக்க,

மதிவதனியுடன் புன்னகை மாறாது நின்றுகொண்டிருந்தவன் உள்ளே நுழைந்தான்.

“டேய் முகி” என்று உற்சாகமாய் எழுந்த கற்குவேல் அய்யனார் முகிலனை அணைத்துக்கொண்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்த,

“பெரியம்மா… பார்த்துக்கிடுங்க! இனிமே நம்ம வீட்டுக்கு நான் இவங்களோட வரவே மாட்டேன். அப்புறம் அண்ணே என்னையக் கவனிக்க மாட்றாங்களே” என்று கோபம் போல் மதி கூறினாள்.

அதில் புன்னகையோடு முகிலிடமிருந்து பிரிந்த அய்யனார் சிரித்தபடி கரம் நீட்டி அவளை அழைக்க,

சிறுபிள்ளையாய்ச் சென்று அவன் கைவளைவில் பொருந்திக் கொண்டாள்.

“எப்படிடா இருக்க? அப்பா எப்படி இருக்காங்க?” என்று மதியிடம் அவன் வினவ,

“ரெண்டு நாள் முன்ன பார்த்தப்போ எப்படி இருந்தேனோ அப்படித்தான் இருக்கேன் அண்ணா” என்று சிரித்தவள், “அப்பா நல்லாயிருக்காங்க. வேலை விஷயமா பக்கத்தூர் போயிருக்காங்க” என்றாள்.

“ம்ம்… ஐயாவை வேலைன்னு பத்திவிட்டுட்டு நீ இந்தத் தடிப்பயலோட ஊரைச் சுத்துறியாக்கும்?” என்று கேட்டபடி முகில் வயிற்றில் அய்யனார் குத்த,

“அய்யோ அத்தான்” என்று வயிற்றைத் தேய்த்துக்கொண்டவன், “ஆமாம் ஊரைச் சுத்திட்டாலும் அப்படியே ஆடி அழுத்திடுவா. நீங்க வேற ஏன் அத்தான். மேடாம் சரியான படிப்ஸ். இந்தா கார்ல வர்ற பத்து நிமிஷ கேப்ல கூட ஏதோ ஃபிரெண்டுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துட்டுத்தான் வந்தா” என்று பாவம் போல் கூறினான்.

“பாவம் புள்ள ரொம்பச் சோவமால்ல சொல்லுறான்” என்று காமாட்சி சிரிக்க,

“அதுதானேம்மா?” என்று சிரித்த அய்யனார், “ஒக்காருங்கடா” என்றான்.

அனைவரும் அமர, “இருங்க நான் குடிக்க எதாவது எடுத்துட்டு வரேன்” என்ற காமாட்சியை அமர்த்தி,

“வர்றச்சயே மாமா எல்லாருக்குமாச் சேர்த்துப் பழ ஜூஸ் வாங்கிட்டுத்தான் வந்தாங்க. என்னமாது அந்த அடுப்பங்கரையிலயே உருட்டாதீங்க பெரியம்மா” என்று கூறியபடி வாங்கி வந்த பையோடு உள்ளே சென்றாள்.

“எதுக்குயா இதெல்லாம்? நானே போட மாட்டேனா?” என்று காமாட்சி கேட்க,

“போடுவீங்க அத்தை. உங்களை மட்டும் உள்ள அனுப்பி நோக விட்டுட்டு யாருட்டப் பேசிச் சிரிக்க நாங்க? ஒக்காருங்க. எல்லாருமா ஒட்டுக்கா உட்கார்ந்து குடிச்சுட்டே பேசுவோம்” என்றான்.

அய்யனார் அழகாய்ப் புன்னகைத்தபடி அவனை நோக்க, மதி பழச்சாறுடன் வந்தாள்.

ஆளுக்கொன்றாய் எடுத்துக்கொள்ளப்பட, “என்னடா ஏதும் வேலையா வந்தியோ?” என்று அய்யனார் கேட்டான்.

“சக்தி பாப்பாவப் பார்த்துட்டு வரப் போனோம் அண்ணா” என்று மதி கூற,

“அன்னிக்கு ஃபிரெண்டு பொண்ணுக்கு உடம்பு முடியலைன்னு சொன்னேன்ல அத்தான். ரெண்டு நாளாச்சுது எப்படியிருக்கான்னு பார்த்துட்டு வரப் போனோம். காலையில நீங்க வீட்ல இருக்குறதா வேற சொன்னீங்களே. அதான் பார்த்துட்டுப் போவோம்னு வந்தோம்” என்று முகில் கூறினான்.

“அட ஆமால்ல? இப்ப எப்படியிருக்காடா?” என்று அய்யனார் கேட்க,

“நானே போன் அடிச்சுக் கேட்க இருந்தேன்டா முகிலா. அந்தப் புள்ளையோட அம்மா அன்னிக்கு அழுத அழுகை கண்ணுக்குள்ளயே நிக்குது” என்று காமாட்சி வருத்தமாய்க் கூறினார்.

“அழுதாங்களா? ரொம்ப முடியலையாடா குழந்தைக்கு?” என்று அய்யனார் கேட்க,

“பாப்பாவுக்கு மீன் சேராது அத்தான். தெரியாமச் சாப்பிட்டுட்டா. அதுல வாந்தி, காய்ச்சல்னு ரொம்ப முடியாமப் போயிட்டா. இராவுக்கு அவ புள்ளைன்னா உசுரு. உடம்புக்கு ஒண்ணு வந்துட்டா அந்தப் புள்ளையவிட இவ தான் உட்கார்ந்து உட்கார்ந்து அழுவா” என்று முகில் கூறினான்.

“சின்னப் புள்ளைடா. அவளுக்கு என்ன விவரமிருக்கும் சொல்லு. அதான் பயப்படுறா பாவம்” என்று காமாட்சி கூற,

“இப்பக்கூட பாப்பா ஸ்கூல் போறேன்னு நிக்கிறா பெரிம்மா. இவ தான் ஒரே அழுகை. புள்ளையவிட இவ தான் சோர்ந்து இருக்கா. சாப்பிடலை, தூங்கலை. பாவமாயிருக்கு” என்று மதியும் வருத்தமாய்க் கூறினாள்.

காமாட்சிக்கு அவளைப் பற்றி விவரம் கேட்டுக்கொள்ள வேண்டும் என்று தோன்றாமல் இல்லை. புறணி பேசுவதற்கென்று இல்லை தான் என்றாலும் அவளைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் போல் தோன்றியது. ஆனால் மகனுக்கு இப்படி மற்றவர்களைப் பற்றி ஆராய்வதெல்லாம் பிடிக்காத செயல் என்பதால் அமைதியாக இருந்து கொண்டார்.

சில நிமிடங்கள் பேசிவிட்டு முகிலும் மதியும் புறப்பட, மீண்டும் தனது வேலையில் மூழ்கினான் அய்யனார்.

 

Click on a star to rate it!

Rating 4.3 / 5. Vote count: 22

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
15
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்