
பிறை -13
சற்று நேரத்தில் என்ன நடந்தது என்பதே அங்குள்ள யாருக்கும் புரியவில்லை. உள்ளங்கையில் இருந்து ரத்தம் சொட்ட சொட்ட.. கைகளை உதறியவன்.. ரௌத்திரம் பொங்க நின்று கொண்டிருந்தான் ஆதிதேவ் ஆருத்ரன்.
அவனை சுற்றி மூவரும் தரையில் வீழ்ந்து கிடந்தார்கள்.
” தப்பான இடத்துல கை வச்சுட்ட .. இதுக்கு ரொம்ப வருத்தப் படுவா.. ” என கீழே விழுந்தவன் முனங்கிக் கொண்டிருக்க.. இடுப்பில் கை வைத்து கொண்டு அவர்களை இளக்காரமாக பார்த்தவன்.. எட்டி அவனது வாயோடு ஒரு எத்து விட.. வாயில் இருந்து ரத்தம் கொட்டியது அவனுக்கு.
” சின்ன பசங்க சாப்பிடற ஐஸ்கிரீம்ல போய் கஞ்சா கலந்த உன்னைய கண்டம் துண்டமா வெட்டி போட்டுருக்கனும்.. ச்ச.. ” என காலை மண்ணில் எட்டி உதைத்தவன்.. ” என் வேலைனால தப்பிச்ச ” என காவலர்களுக்கு கண்ணை காட்டி விட.. அவர்கள் வந்து கீழே கிடந்தவர்களை இழுத்துக் கொண்டு ஜீப்பில் ஏற்றி கிளப்பி இருந்தார்கள்.
மூவரையும் புரட்டி எடுத்தவனை பார்த்தவளுக்கு எச்சில் விழுங்க கூட அத்தனை பயமாக இருந்தது.
சுஷ்மிதா பேசி விட்டு சென்றதும் யோசனையில் இருந்தவளுக்கு.. அவனது பிம்பம் கண் முன் தெரிய.. அவனது தோற்றத்தை ஆராய்ந்து கொண்டிருந்தவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது அவனது அதிரடி.
அருகில் இருந்த ஐஸ் வண்டிக்காரனை வெளுத்துக் கொண்டிருந்தான் ஆதிதேவ். திடீரென அவனை அடிக்கவும் அங்கு கூட்டம் கூடி விட.. அவனை அடிக்கவும் எங்கிருதோ இருவர் வேகமாக ஓடி வந்து அவனை தாக்க முயல.. மூவரை புயலாக சுழற்றி எடுத்தான் ஆதிதேவ்.
அவன் காக்கி உடையில் இல்லாததால்.. சிலருக்கு அவனை அடையாளம் தெரியவில்லை. தினமும் செய்தி பார்ப்பவர்களுக்கும், நாளிதழ் வாசிப்பவர்களுக்கும் அவனை பற்றி நன்றாக தெரியும். ஏதேனும் ஒரு சம்பவத்தை செய்து தினமும் செய்தியில் வந்து விடுவான்.
ஜீப்பில் ஏற்றியதும் தான், அவனை போலீஸ் என்றே சிலர் கண்டு கொண்டனர்.
” இந்த மாதிரி ஐஸ்கிரீம் எல்லாம் குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்குறதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசிச்சு வாங்கி கொடுங்க.. இங்க விக்கிற எல்லா பொருட்களையும் கலப்படம் இருக்குன்னு நான் சொல்லல.. ஆனால் கலப்படமே இல்லாத பொருள் இல்லைன்னு தான் சொல்லுறேன். கஞ்சாவை முழுசா ஒழிக்க உங்களோட ஆதரவும் எங்களுக்கு வேணும். சோ கோஆப்ரேட் பண்ணுங்க ” என அங்கிருந்து சென்றவன்.. வாயிலுக்கு சென்று சட்டென திரும்பி பார்க்க.. நொடியில் அங்காடிக்கு பின்னே மறைந்திருந்தாள் பிறைநிலா.
” உன் ஆளு செம்ம டி.. என்னமா பேசுறாரு.. பாரு எல்லாப் பொண்ணுங்களும் அவரை தான் பார்க்குறாங்க. இப்படி இருந்தா யாரு தான் பார்க்க மாட்டாங்க ” பெரும் மூச்சை விட்டவளை அனல் கக்கும் விழிகளுடன் பார்த்து வைத்தாள் பிறை.
” இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு என்னையவே பார்க்குற.. உண்மையை சொன்னேன் டி ”
” நீ ஒன்னும் கிழிக்க வேணாம்.. வா கிளம்பலாம் நேரம் ஆச்சு ” என அவளை இழுத்து கொண்டு செல்ல.. அவர்களோடு வீட்டு உபயோக பொருட்களை வாங்கிக் கொண்டு கிளம்பி இருந்தார் ரஞ்சனி.
” சார் கொண்டு வந்த மூணு பேரையும் என்ன பண்ணலாம் ”
” இப்போதைக்கு எதுவும் பண்ண வேணாம்.. அவன் மேல கேஸ் போட்டா ஈசியா வெளிய வந்துடுவான்.. நம்ம ரெகுலரா வைக்கிற இடத்துல வைங்க.. ஸ்டேஷன்ல வேண்டாம் ” என தீவிரமாக சிந்தித்தான் ஆதி.
” இப்போவே அனுப்பி வைக்கிறேன் சார் ” என அவனது இடத்திற்கு அந்த மூவரும் இடமாற்றம் செய்தார்கள்.
” இது வெறும் கஞ்சா கேஸ் மட்டும் இல்ல.. அந்த எக்ஷிபிஷன்ல கொஞ்சம் பாதுகாப்பை கூடுதலா போடுங்க.. லாஸ்ட் டேட் எப்போ ”
” இன்னும் பத்து நாள் இருக்கு சார்.. அதுக்கு அப்பறம் தான் க்ளோஸ் பண்ணுவாங்க ”
” சோ அதுவரைக்கும் கொஞ்சம் செக்கியூரிடி கொடுங்க ” என அறைக்கு சென்று விட்டான்.
அறைக்குள் வந்தவனுக்கு நினைப்பெல்லாம் அவள் மீது தான். ஏனோ அவளை பார்த்தாலே அவள் மீதிருந்து விழிகளை பிரிக்க முடியாமல் திணறுகிறான். அதை அவன் உணர்ந்தாலும், அவன் மனம் ஏற்க மறுத்தது.
அவள் மீது காதலா என கேட்டால் , இல்லை என உடனே பதிலளிப்பான். ஆனால் ஏதோ ஒன்று.. அவளை பார்த்தால் அவளின்பால் அவனை ஈர்க்கிறது.
கண்களை மூடி சேரில் பின் வாக்கில் தலை சாய்த்திருந்தவன், நினைவுகளை மீட்டி எடுக்க.. பட்டு தாவணியில் தனது தாய் தந்தையிடம் அழகாக பேசிக் கொண்டிருந்தவள், தன்னை பார்த்ததும் ஓடியதை நினைத்ததும் அவனது இதழ்கள் மெலிதாக விரிந்தது.
அடுத்தடுத்து வேலைகள் வரிசை கட்டி நிற்க.. அவளது நினைவுகளை ஓரம் வைத்து விட்டு வேலையில் மூழ்கிப் போனான் ஆதி.
**
காலை ஐந்து மணிக்கெல்லாம் சாணம் கரைத்து அந்த விசாலமான வாசலை பெருக்கி இருந்தார் சிவகாமி. காலை கடன்களை முடித்துக் கொண்டு வந்த சிவானந்தம் வாசலில் உள்ள திண்ணையில் வந்து அமர.. வாசலை தெளித்துக் கொண்டிருந்தவர்.. அதை அப்படியே வைத்து விட்டு வீட்டிற்குள் சென்று அவருக்காக போட்டு வைத்திருந்த டீயை எடுத்து வந்து அவரது கையில் கொடுத்தார்.
பின் ஒன்பது புள்ளி ஒன்பது வரிசையில் அழகான சிக்கு கோலத்தை போட்டு முடித்தவர்.. நடுவில் மஞ்சளும் குங்குமமும் வைத்து விட்டு, நிமிர்ந்து நின்று கோலத்தை ஒரு முறை சரி பார்த்தவர்.. திருப்தியாக இருந்ததை அடுத்து, அப்படியே தோட்டத்திற்கு சென்றவர், மாட்டு தொழுவதை சுத்தம் செய்து, பால் கரந்து எடுத்து வந்து, பண்ணைகளுக்கு பிரித்து கொடுத்தவர்.. பின் இருக்கும் காய்கறிகளை வைத்து சமைக்க ஆரம்பித்தார்.
காலை உணவிற்கு இட்லியும் , முருங்கைக்காய் சாம்பார் வைத்து விட்டு, வேகமாக குளித்து விட்டு .. பூஜையறையில் விளக்கேற்றி இருந்தார்.
எப்போதும் குளியல் தான் முதல் வேலை. ஆனால் இன்றோ சற்று தாமதமாக எழுந்ததால் வேலைகளை முடித்து விட்டு குளித்தார்.
சிவகாமி செய்யும் வேலைகளை எல்லாம் தற்போது தான் நிதானமாக கவனிக்க ஆரம்பித்தார் சிவானந்தம். இத்தனை நாளும் அவள் எந்தனை மணிக்கு எழுவாள், எழுந்து என்ன செய்வாள், எந்நேரம் உணவு உண்பாள், எப்போது தூங்குவாள் என அறிந்திராத அவருக்கு.. பம்பரமாக சுழலும் தனது மனைவியை பார்க்க பார்க்க வியப்பாக தான் இருந்தது.
எத்தனை வேலைகளை இழுத்து போட்டு, சாதாரணமாக செய்து விடுகிறாள் என நினைத்துக் கொண்டார். அன்று ஏனோ மழை அடித்து ஊற்றிக் கொண்டிருந்தது.
வெளியே தலை காட்ட முடியாத அளவிற்கு பெய்த மழையால் .. சிவானந்தம் வயலுக்கு செல்லவில்லை. வீட்டிலேயே மனைவியின் அசைவுகளை பார்த்துக் கொண்டிருந்தார். பூஜை செய்ய போகும் நேரத்தில் அவரும் குளித்து உடைமாற்றி வந்தார்.
பூஜை அறையில் அரை மணி நேரமாக சில பாடல்களை பாடி, பூஜை செய்து.. நெற்றியில் குங்குமமும், மாங்கல்யத்திலும் சிறிது சந்தனமும் குங்குமமும் என இட்டு விட்டு.. கூடத்திற்கு வந்தவர்..
” உங்களுக்கு சாப்பாடு கொண்டு வரவாங்க ”
” ரெண்டு பேருமே சேர்ந்தே சாப்பிடலாம் சிவகாமி ” வியப்பும் , மகிழ்ச்சியும் பொங்க.. சரியென தலை அசைத்தவர்.. இருவருக்கும் தேவையான உணவுகளை கொண்டு வந்து வைத்தார்.
முதலில் அவருக்கு பரிமாறி விட்டு அமர… ” நீயும் சாப்பிடு சிவகாமி.. எனக்கு வேணும்னா நான் வச்சு சாப்பிட்டுக்கிறேன் ” என்றதும்.. வியப்பாக தலை அசைத்தார் சிவகாமி.
மகிழ்ச்சியில் இரு இட்லியை எடுத்து தட்டில் வைத்து அவர் உண்ண.. அதீத மகிழ்ச்சியில் உணவு தொண்டை குழியில் இருந்து இறங்க மறுத்தது.
சட்டென விக்கல் வந்து விட.. ” அட பார்த்து சாப்பிடக் கூடாதா .. என்ன மா நீ ” என அவரது தலையை தட்டி தண்ணீரை நீட்டிய கணவனை கலங்கிய விழிகளோடு பார்த்து வைத்தார் சிவகாமி.
” என்னாச்சு கண்ணெல்லாம் கலங்கிடுச்சு.. ரொம்ப ஏறிடுச்சா என்ன ” என தலையை தட்டி கொடுக்க..
” ஐயோ .. அதெல்லாம் இல்லைங்க.. கொஞ்சம் காரம் அதான் ” என சமாளித்தவரை பார்த்தவருக்கு சிரிப்பு தான் வந்தது.
” அது.. இன்னொரு இட்லி வைக்கவாங்க ”
” என்னமோ பேசனும்னு நினைக்கிற.. சொல்லு சிவகாமி ” மனைவியின் முகத்தை பார்த்து புரிந்து கொண்டார். ஆனால் இந்த புரிதல் ஏன் இத்தனை நாட்களாக இல்லை. அல்லது புரிந்தும் புரியாதது போல இருந்தாரா என பல சித்தனைகள்.
தற்போதைய நிமிடங்களை ரசிக்கவும், அனுபவிக்கவும் தவறவில்லை சிவகாமி.
” அது நம்ம அத்தையை பத்தி தான் ”
” அவங்களை பத்தி பேச என்ன இருக்கு ”
” இல்ல எத்தனை நாளைக்கு தான் அண்ணி வீட்ல இருப்பாங்க.. அவங்க சொல்லுற மாதிரி அவங்க வீட்டுக்காரரு விடனும்ல.. நம்ம மரியாதையா கூட்டிட்டு வரது தான் நல்லதுங்க ”
” நம்ம கூப்பிட்டா வர ஆளா அவங்க.. அவங்களுக்கே தெரியனும்.. சின்ன பசங்க மாதிரி சண்ட போட்டுட்டு போய் அங்க மக வீட்ல இருக்கலாமா.. விடு இன்னும் ரெண்டு நாள்ல மயிலே கொண்டு வந்து விடுவா.. அதுக்கு மேல அவ வச்சுக்க மாட்டா.. ஆயிரம் தான் சண்ட இருந்தாலும் நம்ம தான் பாக்கனும் சிவகாமி.. ”
கணவரையே விழி அகலாது பார்த்து வைத்தவர்.. ” அம்புட்டு பாசம் இருக்குறவுக எதுக்கு விட்டு வைக்கனும்.. போய் கூட்டிட்டு வர வேண்டியது தானே ..”
” கல்யாணம் ஆகி இத்தனை வருஷம் பேசாம இருந்தேன். இப்போதான் உனக்குன்னு ஒரு சண்டையே போட்டுருக்கேன். நானே போய் கூட்டியாந்தா அது சரியா வராது. அப்பறம் நம்ம அண்ணன் இப்படித்தான் என்ன சண்ட வந்தாலும் பொண்டாட்டிய விட்டு கொடுத்துடும்னு வந்துடும்.. அதுனால வரது வரட்டும்.. நீ இதை நினைச்சு விசன பட்டுட்டு இருக்காத.. பாப்பா பேசுச்சா ”
” ம்ம் பேசுனா.. நேத்து ஏதோ கடை வீதிக்கு போனாளாம்.. ஏதோ சாமான் வாங்குனதா சொன்னாங்க ”
” எனக்கு பிள்ளையை பத்தி தான் கவலை.. ஒரு வாரத்துல நல்ல படிய ஊரு பக்கம் வந்து சேரனும்.. அப்பறம் பக்கத்து ஊர்ல ஒரு பையனை பார்த்திருக்கேன்.. நல்ல குடும்பம் தான்.. இன்னும் கொஞ்சம் விசாரிக்க வேண்டியது இருக்கு. எல்லாம் நல்லா இருந்தா.. நல்லது கூடிய சீக்கிரம் நடக்கும் ” என சாப்பிட்டு முடித்து கை கழுவிய கணவனை இமை வெட்டாமல் பார்த்து வைத்தார் சிவகாமி.
திருமணம் ஆகி ஒரு நாளும் இப்படி அருகில் அமர்ந்து கணவனுக்கு பரிமாறியது இல்லை. அவரோடு ஒன்றாக உணவருந்தியது இல்லை.. இப்படி சாப்பிடும் போது மனம் விட்டு பேசியது இல்லை. ஏனோ இந்த ஒரு வாரமும் புதிதாக திருமணம் செய்த தம்பதிகளுக்கு வரும் ஆசை, ஆர்வம் என போட்டி போட்டு வந்தது.
மகள் வேறு ஊரில் இல்லாததால்.. கணவனை தங்கு தடையின்றி பார்க்கிறார் சிவகாமி.
” மதியத்துக்கு என்ன சமைக்கட்டும் ”
” நான் டவுனுக்கு தான் வேலை விஷயமா போறேன்.. மழைக்கு கோழி சாப்பிட்டா நல்லா இருக்கும்.. கடையில பிரியாணி வாங்கியாந்து தாரேன்.. நீ ஒன்னும் சமைக்க வேணாம்.. வீட்டை பூட்டிட்டு செத்த படுத்து எந்திரி ” என துண்டையும், குடையையும் எடுத்து கொண்டு வெளியே கிளம்பி இருந்தார் சிவானந்தம்.
கடையில் பிரியாணி வாங்கி வருவது இதுவே முதல் முறை. மகள் கேட்டால் கூட, கோழியை எடுத்துக் கொடுத்து வீட்டில் செய் என கூறி விடுவார்.. ஆனால் இன்று அவரது மாற்றம் அபாரமாக இருந்தது.
ஒருவேளை அகிலாண்டேஸ்வரி இல்லாமல் தனிக் குடித்தனம் இருந்திருந்தால் எப்போதோ சிவானந்தம் இப்படி ஆகி இருப்பாரோ என்னவோ.. அல்லாது அவரும் லெகுவான மாமியாராக இருந்திருக்கலாம். காலம் கடந்த சிந்தனை. இப்போதுதான் மனைவியின் மீது பார்வை படுகிறது.
இல்லதரசிக்கு தேவையான வார்த்தை.. கொஞ்சம் படுத்துக் கொள்ளும் படி கூறுவது. இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு கணவனின் வாய் மொழியாக கேட்டவருக்கு குதிக்காதது தான் குறை.
வேகமாக பூஜை அறைக்கு சென்று மகிழ்ச்சியை தெய்வங்களோடு பகிர்ந்து கொண்டவர்.. கணவர் கூறியது போல தலையணை எடுத்து போட்டு படுத்து விட்டார். ஆனால் உறக்கம் தான் தழுவவில்லை. அளவற்ற மகிழ்ச்சி அவரை தழுவியதே.. பின்பு எங்கு உறங்குவது ?
சனா💖
