Loading

புயல் 22

 

நேரம் கடந்துக் கொண்டுதான் இருந்ததே தவிர, ருத்ரனிடம் எந்தவித மாற்றமும் இல்லை. அவன் உமாவின் மார்பின் மீது படுத்திருந்தான். கண் மூடி கிடந்தவனின் தலையினைக் கோதிவிட்டவள்

 

“என்னாச்சு?” மெதுவாய் கேட்டாள்.

 

“மனசுல ஒரு நிறைவு உமா. எப்படிச் சொல்லுறதுன்னு தெரியல. என்னால எவ்வளவோ நீ அனுபவிச்சுட்ட. அப்படியிருந்தும் நீ இவ்வளவு நம்பிக்கை வச்சுப் பேசுறப்போ? ம்ம் அதற்குப் பதில்” என்றவன் அமைதியாகி விட அவனது விழி நீர்தான் அவள் மார்பினை நனைத்து அவன் சொல்லாததை செயலிலேயே காட்டியிருந்தது.

 

அவர்களுக்கான நெருக்கம் கூடியிருக்க வீரா என்ன செய்ய வேண்டும் என்ற திட்டத்துடன் தனது சுற்றுலாவை முடித்துக் கொண்டு ஊருக்குள் வந்திறங்கினான். லட்சணா அம்மா வீட்டுக்குச் செல்ல ஆசைப்படவும் அவளை அங்கே விட்டுவிட்டு இவன் மட்டும் வீட்டிற்கு வந்தான்.

 

“எங்கம்மா அவன்?”

 

“அவன் இங்க இல்லைடா. மாமியார் வீட்டுக்கு விருந்து கொண்டாட போயிருக்கான். அவன் நடந்துக்கிறதே வித்தியாசமா இருக்கு. எப்பவும் அம்மான்னு மறுபேச்சு பேசாமல் போவான். இப்போ அவன் பொண்டாட்டி எவ்வளவு பேசுனாலும் அமைதியாவே இருக்கான். அவனுக்கு நாம பண்ணது எல்லாம் தெரிஞ்சுடுச்சோ?”

 

“நேத்துதான் அவன் பொண்டாட்டி கிட்ட பேசினேன். அவங்களுக்கு எதுவும் தெரியலை போல. அப்படித்தான் என்கிட்ட பேசுனாங்க. இனி எந்த தப்பும் பண்ண மாட்டேன்னு குழந்தை மேல சத்தியம் பண்ணியிருப்பான் போல. எனக்கென்னவோ அவனுக்கு நிச்சயமா பொண்ணு கூட தொடர்பு இருந்துருக்கும் போல. அதான் நாம அவ்வளவு பேசியும் அவன் மறுத்துப் பேசாமல் இருந்திருக்கான். இல்லைன்னா பொண்டாட்டிக்கிட்ட கூட உண்மையை மறைச்சுருப்பானா ம்மா. ஏதோ பெருசா ப்ளான் பண்ணுறான் ம்மா. அது என்னென்னு தெரியல. அதுக்குள்ள நான் சுதாரிப்பா இருந்துக்கணும்” வீரா பாட்டுக்கு கடகடவென்று பேச,

 

“என்னடா சொல்லுற? அப்போ அவன் தப்பு பண்ணலைங்கிறயா? ஒன்னும் புரியலை” என்றார் மணியம்மா. ஏனெனில் அவன் அப்படித்தானே பேசுகிறான்.

 

“இல்லை இல்லை தப்பு பண்ணியிருக்கான். கொஞ்சம் டென்ஷன்ல இருக்கேன். நான் அப்பறமா பேசுறேன் ம்மா. கொஞ்சம் யோசிக்கணும்.. என்றவாறு அவன் உள்ளே சென்றுவிட்டான்.

 

லட்சணாவுக்குத் தெரியாமத்தான் எல்லா வேலையும் பண்ணனும். ஆனால் என்ன பண்ணுறது‌ என்று அவன் யோசிக்க ஆரம்பித்தான்.

 

எந்தவொரு வழியும் இருப்பதாக அவனுக்குப் புலப்படவில்லை. இப்போதைக்கு அவனது குடும்பத்தில் பிரச்சனை செய்யலாம். ஆனால் ஏற்கனவே செய்ததற்கே முடிவு அவ்வளவு ஏற்புடையதாக இருக்கவில்லை. அதனால் வேறு வழியில் தான் முயல வேண்டும். அது என்ன? யோசித்துக் கொண்டே இருந்தான் வீரா.

 

வெளியே மணியம்மாவுக்கு இதெல்லாம் எங்கு சென்று முடியுமோ என்ற கவலை.

 

அவன் உழைப்பினை உறிஞ்சியே வாழ்ந்து பழகிவிட்டனர். அவன் இல்லையென்றால் தாக்குப் பிடிக்க முடியாது என்பது தான் உண்மை. ருத்ரன் நடந்துக் கொள்வதை எல்லாம் பார்க்கையில் அவருக்குமே அவன் ஏதோ முடிவு எடுத்துக் கொண்டு அதை செயல்படுத்துவதைப் போலிருந்தது.

 

இதோ இரண்டு நாட்களாக வீடு தங்கவில்லை என்பதே அதற்கு உதாரணம்.

 

“உமா! உனக்கு களைப்பா இருக்கா?”

 

“இல்லை ஏன் கேக்குற?”

 

“ஒரு இடத்துக்கு போகணும். காலையிலேயே வாந்தி எடுத்துட்டு இருந்தயா? அதான் கேக்குறேன்”

 

“ஒன்னும் பிரச்சனை இல்லை ருத்ரா. எங்க போறோம்?”

 

“என்னமோ சொல்லுவீங்களே.. ஆங் சர்ப்ரைஸ்” என்றான்.

 

“ஓஹ்.. சரி போகலாம்” இருவரும் கிளம்பினார்கள். இரண்டு நாளிலேயே அவளை இரண்டு கிலோ கூட வைத்திருப்பான் ருத்ரன். அந்தளவுக்கு தாங்கிக் கொண்டிருந்தான். அவளுக்கே அவன் செய்வதைக் கண்டு விழிகள் ஆச்சர்யத்தில் விரிந்த வண்ணமே இருந்தது.

 

இப்போ என்ன செய்யக் காத்திருக்கிறானோ என்ற எண்ணத்தில் அவள் உடன் வந்தாள்.

 

அவன் சென்று நின்றது ஒரு வீட்டின் முன்.

 

“இறங்கு தங்கம்”

 

“இங்க யாருடா இருக்காங்க..”

 

“இறங்கி வா. நான் சொல்லுறேன்” என்று சொல்லி அழைத்துச் சென்றான்.

 

வண்ணம் அடித்து இருந்த அந்த புதிய வீட்டினைக் காணும் போது அப்படியா என்ற கேள்வியோடு அவள் திரும்பி ருத்ரனைப் பார்த்தாள்.

 

“நம்ம வீடுதான்” என்றான் இவன்

 

“என்ன சொல்லுறீங்க? இதெப்படி?”

 

“எப்படின்னா நான் உழைச்சு வாங்குனதுடி”

 

“பிறகு வேறெப்படி வாங்குவாங்களாம்.. ?”

 

“தங்கம். இனி இங்கதான் நாம இருக்கப் போறோம்”

 

“நீ அம்மா புள்ளையாச்சே”

 

“ஏன் நீ அம்மா புள்ளை இல்லையா?”

 

“உன்னளவுக்கு இல்லைப்பா..”

 

“அவங்க கூட இருக்க வேண்டாம்னு நான் முடிவு பண்ணிட்டேன் தங்கம். எனக்கு என் குடும்பம் ரொம்ப முக்கியம். அடுத்த வாரம்  பால் காய்ச்சிடலாம்.. நான் அத்தை மாமாகிட்ட சொல்லிடுறேன்”

 

“அப்போ உங்க அம்மா அப்பா?”

 

“அவங்ககிட்ட நான் சொல்லல. சொல்லப் போறதும் இல்ல. நம்ம கல்யாணத்துக்காக அத்தை மாமா கொடுத்த சீர். அப்பறம் நம்மளோட பொருட்கள் இதை எல்லாம் பால் காய்ச்சி முடிக்கவும் இங்க கொண்டு வந்துடலாம். வேற எதுவும் வேண்டும்னா சொல்லு வாங்கிடலாம்..”

 

“ஆமா நிறைய வேண்டும் ”

 

“நான்தான் நிறைய நிறைய கொடுத்துருக்கேனே”

 

“யூ..” முகம் சிவந்து சொல்ல எந்த வார்த்தையும் இன்றி அவள் நகர்ந்து வேடிக்கைப் பார்ப்பது போல் இருக்க, அவன் சொன்னதைச் சரியாகப் புரிந்துக் கொண்டாளே என்ற பார்வை அவனிடம் இருந்தது.

 

“வீடு நல்லா இருக்கு”

 

“இப்போ நீ பேச்சை மாத்திட்டே. எப்பவுமே மாத்திக்க முடியாதுல தங்கம்”

 

“நான் பேச்சை மாத்திடணும்னு நினைக்கைலையே ருத்ரா”

 

“ஓ இடப் பிரச்சனை.. புரிஞ்சிடுச்சு‌”

 

“அதை விடு. நாம மட்டும் பால் காய்ச்சுனால் அது பிரச்சனையாகாதா ருத்ரா” கவலையுடன் கேட்டாள்.

 

“ரொம்ப நல்லவளா இருக்காதடி”

 

“அது உன்னாலதான்டா எருமை”

 

திருதிருவென விழித்தவன் “இனி மேல் எனக்காகவும் இருக்காத டி” என்றான் அவள் கைப்பிடித்து.

 

“அதுக்கில்லை. என்ன இருந்தாலும் அவங்ககிட்ட சொல்லணும்ல”

 

“பால் காய்ச்சி நாம குடி வந்த பிறகு தெரிஞ்சுக்கட்டும்”

 

“பிரச்சனையாகும்ல ருத்ரா”

 

“அதுக்குத்தான் நான் காத்துட்டு இருக்கேன் உமா”

 

“இது சரியா வருமா”

 

“என் அம்மாவுக்கு என் மேல நிஜமாவே பாசம் இருந்திருந்தால் என்னை விட்டுத் தந்திருக்க மாட்டாங்க. இதுல இருந்தே தெரியல நான் எந்தவொரு இடத்துல அவங்க மனசுல இருக்கேன்னு. இதுவே உண்மை தெரிஞ்ச பின்னால வீராவை விட்டுக் கொடுத்துப் பேசுவாங்களா? மாட்டாங்க உமா. இது சில வீடுகள்ல நடக்குறதுதான். நானும் இதைப் பத்தி பெருசா கண்டுக்கல. ஆனால் ஒரு நொடி ருத்ரன் அப்படிப்பட்டவன் இல்லையேன்னு யோசிக்கலையே.. அவ்வளவு ஏன் உன்கிட்ட வந்து பேசியிருக்காங்க. ஆனால் என்கிட்ட ஒரு வார்த்தைகூட அதைப் பத்திக் கேட்கலை. அப்போ அவங்க என்ன நினைச்சு இருக்காங்கன்னு புரியுதா? நாம பிரியணும்னு தானே. இதுக்கு அவங்க கல்யாணத்துக்கு சம்மதம் சொல்ல முடியாதுன்னு சொல்லிட்டுப் போயிருக்கலாம்ல. நான் அப்பவே உன்னைக் கூட்டிட்டு தனியா வந்துருப்பேன். இவ்வளவு கஷ்டம் உனக்கிருந்துருக்காது”

 

“இல்லை ருத்ரா. நீ அவங்ககிட்ட சொல்லு. பிரச்சனை வரணும். வரட்டும் பார்த்துக்கலாம். பிரச்சனையை எல்லாம் முடிச்சுட்டு நாம இங்க வந்துடலாம். இது நாம பயந்து வர்றது போல இருக்கு. தப்புப் பண்ணாத நாம ஏன் பயப்படணும்”

 

“அப்படிங்கிற. சொல்லிடலாம்”

 

“எப்போ சொல்லப் போற..?”

 

“இதோ இப்பவே..” என்றவன் போனினை எடுத்து அந்த வீட்டோடு சேர்த்து இருவரையும் புகைப்படம் எடுத்தான்.

 

“இதை ஸ்டேட்டஸ்ல போடணும். இங்கிலிஷ்ல எழுதிக் கொடு உமா”

 

“தமிழ்லயே போடுவோம்டா..இரு..”

 

“பட்டு லட்டுவுக்காக இந்த அப்பாவோட பரிசு.. இனி இதுதான் நம்ம வீடு.. தங்கத்துக்கு இந்த வீடு பிடிச்சதுல மாமாவுக்கு அவ்வளவு சந்தோஷம்”

 

ஸ்டேட்டஸ் வைத்தாகிவிட்டது.

 

இனி வரும் பூகம்பத்திற்காக ருத்ரன் காத்திருக்க அவள் அதைப் பற்றிய சின்ன நினைப்புக் கூட இல்லாமல் வீட்டை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

இனி எது வந்தாலும் ருத்ரன் சமாளித்துக் கொள்வான் என்ற நம்பிக்கையை இப்போதுதான் அவன் தந்திருக்கின்றானே.

 

மறுநாள் வீட்டின் கூடத்தில் அனைவரும் இருந்தார்கள்.

 

“சொந்த வீடு வாங்கியிருக்கேன்னு சொல்லக் கூட இல்லை” ருத்ரனின் அப்பா பேச்சை ஆரம்பிக்க “எல்லாருக்கும் தெரியணும்னு தானே ஸ்டேட்டஸ் எல்லாம் போட்டுருக்கேன்” என்றான்.

 

“ஒரு மரியாதைக்கு பெத்தவங்களை கூப்பிட்டு பேசணும்னு இல்லையா ருத்ரா”

 

“பெத்தவங்க பெத்தவங்க மாதிரி நடந்துக்கிட்டால் நான் சொல்லலாம். நீங்க முதலாளி மாதிரி நடந்துக்கிட்டால் நான் அதுக்கேத்த மாதிரிதான் நடந்துக்க முடியும்”

 

“என்னடா இது அப்பாகிட்ட போய் இப்படிப் பேசிட்டு இருக்க. என்ன பழக்கம் இது. யார் உன்னை இப்படியெல்லாம் பேசச் சொல்லி சொல்லித் தர்றது. அவதானே. அவ பேச்சைக் கேட்டு இப்படியெல்லாம் ஆடுறது சரியே இல்லை”

 

“பொண்டாட்டி பேச்சை என் அப்பா கேட்டதால தான் இப்போ இப்படி இருக்கார். அப்போ நானும் பொண்டாட்டி பேச்சைக் கேட்கணும்ல ம்மா. அதுதானே சரி. அவளுக்கு நீங்கதான்ம்மா எடுத்துக்காட்டே. இல்லையா தங்கம்”

 

“ஆமா ஆமா” என்றாள் அவளும் அதி வேகமாக.

 

“கடை இரண்டு பேருக்கும் பொது. அப்படி இருக்கும் போது நீ மட்டும் எப்படி லாபத்தை எடுத்து வீடு வாங்கலாம். அப்போ அந்த வீடும் பொதுதான்” வீரா எரிச்சலோடு கத்தினான்.

 

“ஓஹ் அப்படிங்களா தம்பி. தம்பிக்கு இன்னும் விபரமே தெரியல. கடை ஒன்னும் பொது இல்லை. அது முழுக்க முழுக்க என்னோட பேர்ல இருக்கு. அந்த கடையில என்னோட லாபத்தை நான் எடுத்துக்கிறதுல என்ன தப்பு?”

 

“அப்பா இவனென்ன பையித்தியமா? என்னென்னவோ உளறிட்டு இருக்கான். கடை அவனோட சொத்தா? இதெல்லாம் நீங்க கேட்க மாட்டீங்களா”

 

“அவனை படிக்க வச்சீங்க என்னை வைக்கல. அவனுக்கு செலவு ஆனது எல்லாம் இதுல எழுதியிருக்கேன். போதாகுறைக்கு அவன் பழகித் தொலைஞ்சதுக்கு அழுதது வேற. இதெல்லாம் போட்டால் லிஸ்ட் பெருசா போகும். அந்த காசைக் கணக்குப் பண்ணிப் பார்த்தால் நான் வாங்குன வீட்டோட மதிப்புலாம் கிட்டக் கூட வர முடியாது. இதெல்லாம் உங்களுக்கே நல்லாத் தெரியும்.

டேய் இங்க பாரு கடையில சும்மா வேடிக்கை பார்க்க உக்காந்தவனெல்லாம் கடைக்கு ஓனராகிட முடியாது. அது என்னோட கடை. இது அதுக்கான பத்திரம். எப்பவோ மாத்தியாச்சு..”

 

வீரா அப்படியே நிற்க மணியம்மா வேகமாக வந்து “ருத்ரா அவன் உன்னோட தம்பி. அவனுக்கு எதுவும் இல்லாமல் நீ பாட்டுக்கு மொத்தமா எடுத்துக்கிட்டால் இது என்ன நியாயம். நீங்க இரண்டு பேரும் ஒத்துமையா இருந்து அந்த கடையைப் பார்த்துப்பீங்கன்னு தானே நாங்க நினைச்சோம்” என்றார்.

 

“அது மட்டுமா நினைச்சீங்க. எவ்வளவு வேலை இருந்தாலும் அதை எல்லாத்தையும் ருத்ரனே பார்த்துக்குவான். அவன் இருக்கும் போது நாம கடைக்குப் போகணும்னு கூட அவசியமே இல்லை. வர்ற காசை வச்சு நல்லா ஊர்சுத்தி ஜாலியா இருக்கலாம்னு வேற நினைச்சீங்க இல்லையா அதையும் சொல்லுங்கம்மா” என்றான் சலிப்புடன்.

 

“ருத்ரா நீ இப்படிப் பேசுறவனே இல்லையே. நல்லவனா தான டா இருந்த”

 

“நல்லவன்தான்.‌ அதனால தான் என்கிட்ட இருந்து எல்லாத்தையும் உறிஞ்சியே வாழலாம்னு நினைச்சீங்கம்மா? அதையெல்லாம் நான் நினைச்சுப் பார்த்ததே இல்லை. நம்ம குடும்பம் தானேன்னு நினைச்சேன். ஆனால் நீங்க என் குடும்பத்தையே உடைக்கப் பார்த்துட்டீங்கள்ல”

 

“நீ தப்பு பண்ணே.. மகனாவே இருந்தாலும் அதை மறைச்சு வைக்க என்னால முடியாது”

 

“ஓஹோ.. அப்போ லட்சணாகிட்ட சொல்லுங்க. ஏன்னா தப்பு பண்ணது நா

ன் இல்லை. எவனை தலையில தூக்கி வச்சு ஆடுனீங்களோ அவன்தான்..” என்றவனின் வார்த்தையில் மணியம்மாளுக்கே மூச்சே நின்றுவிட்டது போலாகிவிட்டது.

 

புயல் தாக்கும்.

 

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 30

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
21
+1
1
+1
3

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்